மின் நூல்

Sunday, January 6, 2008

மன ஓசை


படுக்கையில் படுத்திருக்கையில்
தெளிவாய்க் கேட்டது
வெளியுலக உயிர்ப்புப் பிரதிநிதியாய்
டிக்டிக் கடியார ஓசை
உன்னிப்பாய்க் கவனிக்கையில்
உணரமுடிந்தது மின்விசிறி
சுழற்சி ஓசை
தெருவில் கிறீச்சிடும் வண்டியொலி
காற்றில் மிதந்து காதில் படிந்தது
ஜன்னல் சல்லாத்துணி மோதலில்
சன்ன படபடப்பாய் காற்றின் கீதம்

உந்தி விரிந்து சுருங்குகையில்
உள்மூச்சு வெளிமூச்சு கூட
உணரமுடிந்தது; ஆழ்ந்து இப்போது
உன்னிப்பாய் கவனித்தேன்
இதயஒலி கேட்கிறதா என்று
இல்லை என்பதே பதிலாயிற்று
மார்பில் கைவைத்து பார்க்கையில்
மனசில் உணரமுடிந்தது துடிப்பை
தன்னில் தானாய் என்னில் அதுவாய்
என்னுள் கலந்துபோன உயிரின் ஓசை
பிரயத்தனப்பட்டால் தான் உணர்வாய்
புரிகிறது என்னும் உண்மை புரிந்தது
என்னில் உறங்கும் உள்ளொளியும்
நான் எனும் சுயம் ஒழித்து
தன்னில் கரைந்தால் தான்
தட்டுப்படும் போலிருக்கு.

11 comments:

ஜீவி said...

சோதனை ஓட்டம்

பாச மலர் / Paasa Malar said...

மன ஓசை துல்லியமாய் உள்ளது..பாராட்டுகள்

cheena (சீனா) said...

தத்துவம் அருமை. மனதின் ஓசை நம்மைப் படுத்தும் பாடு. கவிதை நன்றாக வந்திருக்கிறது

கபீரன்பன் said...

அழகாக வெளிப்பட்டுள்ள உணர்வுகள்.
//என்னுள் கலந்துபோன உயிரின் ஓசை
பிரயத்தனப்பட்டால் தான் உணர்வாய்
புரிகிறது என்னும் உண்மை புரிந்தது
என்னில் உறங்கும் உள்ளொளியும்
நான் எனும் சுயம் ஒழித்து
தன்னில் கரைந்தால் தான்
தட்டுப்படும் போலிருக்கு.//

தலைப்பு உயிரின் ஓசை என்றிருந்திருக்க வேண்டுமோ ?

”கரைந்தால்தான் தட்டுப்படும் ” இது முரண் தொடைக்கு உதாரணமா? பிரமாதமான வார்த்தை கோவை

Anonymous said...

"தன்னில் கரைதல்" - வரிகள் அருமை.
சொற்சுவையும், பொருட்சுவையும் ரசித்தேன்!

ஜீவி said...

அழகாக வெளிப்பட்டுள்ள உணர்வுகள்.
//என்னுள் கலந்துபோன உயிரின் ஓசை
பிரயத்தனப்பட்டால் தான் உணர்வாய்
புரிகிறது என்னும் உண்மை புரிந்தது
என்னில் உறங்கும் உள்ளொளியும்
நான் எனும் சுயம் ஒழித்து
தன்னில் கரைந்தால் தான்
தட்டுப்படும் போலிருக்கு.//

தலைப்பு உயிரின் ஓசை என்றிருந்திருக்க வேண்டுமோ ?//

உயிரின் ஓசை= இதயஒலி;'லப்டப்'.
சாதாரண முயற்சியில், நெஞ்சில் கைவைத்துப் பார்க்கும் புறச்செய்கையாலேயே ஓசை புரிபட்டது.
உள்ளொளி= 'நான்' என்னும் சுயம் ஒழித்து, தன்னில் உறைந்திருக்கும் ஜோதியைக் காணத் தன்னில் கரைதல்.
உள்ளுக்குள் உள் புதைந்து, மனப்பயிற்சிகளால் மனத்தால் உணர வேண்டியிருப்பதாலும்,'அனுபவிப்பு'
சம்பந்தப் பட்டிருப்பதாலும்
மன ஓசை என்று தலைப்பிட்டேன்.
சரிதானே?..

ஜீவி said...

//”கரைந்தால்தான் தட்டுப்படும் ” இது முரண் தொடைக்கு உதாரணமா? பிரமாதமான வார்த்தை கோவை//
கரைதலும், தட்டுப்படுதலும் முரணான சொற்கள் என்று கொண்டு சொல்கிறீர்களா?..தெரியவில்லை.
உங்கள் வருகைக்கும் பாராட்டுகளுக்கும் மிக்க நன்றி கபீரன்பன்!

ஜீவி said...

ராமச்சந்திர சர்மா said
//"தன்னில் கரைதல்" - வரிகள் அருமை.
சொற்சுவையும், பொருட்சுவையும் ரசித்தேன்!//

ஆழ்ந்து அனுபவித்து ரசித்தமைக்கு மிக்க நன்றி, நண்பரே! அடிக்கடி வந்து விமர்சிக்க வேண்டுகிறேன்.

ஜீவி said...

பாச மலர் said...
//மன ஓசை துல்லியமாய் உள்ளது..பாராட்டுகள்//
கணிப்பிற்கும், பாராட்டுக்கும் நன்றி பாசமலர்.

ஜீவி said...

cheena (சீனா) said...
தத்துவம் அருமை. மனதின் ஓசை நம்மைப் படுத்தும் பாடு. கவிதை நன்றாக வந்திருக்கிறது

சீனா, தங்கள் ரசனைக்கும்,புரிதலுக்கும், பாராட்டுகளுக்கும் மிக்க நன்றி

தி.தமிழ் இளங்கோ said...

மன ஓசை உள்ளுக்குள்ளேயே ஒலிப்பது. உங்கள் மன ஓசையை இன்றுமுதல், கோயில் மணியை தொட்டு ஒலிக்கச் செய்வது போல்,இனி தொடர்ந்து கேட்கப் போகிறேன். நன்றி.

Related Posts with Thumbnails