திருத்தேரைக் காண வாருங்களேன்
திருவாரூர் ஐயன் திருக்கோலம்
நேரில் காண வாருங்களேன்
(திருத்தேரைக்)
தொடுப்பு
அசைந்தாடி அசைந்தாடி ஐயன்
திசைதோறும் திருவிளையாடல் காட்டி
திரிபுரம் எரித்த விரிசடை திருவிடங்கன்
தரிசனம் காண வாருங்களேன்....
குறுஞ்சிரிப்பு தவழும் கூத்தனின் முகமோ
கொள்ளை அழகு; அவன் தோளழகு அதைக்
கொண்டாடிக் களிக்க ஓடி வாருங்களேன்
கமலாலயம்; அன்னை கமலாம்பிகை
தவக்கோல மாட்சி; ஞானலோகக் காட்சி
காண வாருங்களேன் கண்பெற்றப் பேற்றை
கண்டு களிக்க வாருங்களேன்
கவலைகளும் நோய்களும் காணாமல் போகும்
புவனமாளும் தியாகேசன் முகதரிசனம்
(திருத்தேரைக்)
முடிப்பு
பட்டு பீதாம்பரம் பளீரிடும் வைர அலங்காரம்
பஞ்சமுக முரசும் பாரி நாகஸ்வரமும்
கொண்டாடிக் களிக்க கோலாகலம் காண
(திருத்தேரைக்)
7 comments:
சக்கரைப் பந்தலில் தேன் மழை பொழிந்தது போல ஆழித்தெருதன் கவிதை.
நன்றி
வாழ்க வளமுடன்
வாருங்கள், கைலாஷி,
ஆழித்தேர்!..அருமையாக குறிப்பிட்டிருக்கிறீர்கள்..அப்பர் பெருமானால் ஆழித்தேர் என்று அழைக்கப்பட்ட திருவாரூர் தேர் அலங்காரம் செய்தவுடன் 115 உயரத்துடன் 400 டன் எடையுடன் கம்பீரமாகக் காட்சிதரும். திருவாரூர் தேர் அழகு, திருவிடைமருதூர் தெரு அழகு, வேதாரண்யம் விளக்கழகு என்று சொல்வார்கள் என்று ஒரு புத்தகத்தில் படித்தேன்.
தங்கள் வருகைக்கு மிக்க நன்றி.
தேர் போல அழகாக உருண்டோடும் அழகிய கவிதை. வாழ்த்துக்கள் ஜீவி !
சதங்கா (Sathanga) said...
//தேர் போல அழகாக உருண்டோடும் அழகிய கவிதை. வாழ்த்துக்கள் ஜீவி !//
கவிஞரின் வாழ்த்துக்கள்...
நன்றி, சதங்கா!
இன்று திருவாரூர் தேர் கண்டு தரிசிக்க வாருங்கள்!
//காண வாருங்களேன்
கண்பெற்றப் பேற்றை
கண்டு களிக்க வாருங்களேன்//
ஆகா, சொற்சிலம்பம் அருமை!
ஜீவா (Jeeva Venkataraman) said...
//காண வாருங்களேன்
கண்பெற்றப் பேற்றை
கண்டு களிக்க வாருங்களேன்//
ஆகா, சொற்சிலம்பம் அருமை!//
வாருங்கள், ஜீவா!
சொற்சிலம்பம்! அடடா..அடடாவோ!..இதுவும் ஓர் அருமையான வார்த்தைப் பிரயோகம் தான்! சொற்களை சிலம்பம் போல் வீசிப் புரட்டி விளையாடுவது. சொற்களின் பிரயோகம் பிடிக்கு வந்துவிட்டால், விளையாட வேண்டியது தானே!..விளையாடக் களம் அமைத்துக் கொடுக்கும், அழகுத் தமிழின் அகண்ட, பரந்த, ஆழ்ந்த மொழி வளமையைச் சொல்லுங்கள்!..
"காண வாருங்களேன்..கண் பெற்றப் பேற்றைக் கண்டு களிக்க வாருங்களேன்.." ஏதோ சக்தி வழிநடத்த எழுதி முடித்த பிறகு நானும் ரசித்த வரிகள் இவை!
'காட்சிகளைக் காணும் உறுப்பு கண்கள்; அந்தக் கண்களே தாம் கண்ட காட்சியினால் தாம் அடைந்த பேற்றைக் 'கண்டு' களித்தல்.."
என்றால், ஆமாம், நீங்கள் குறிப்பிட்டிருக்கிற மாதிரி சொற்சிலம்பம் தான்!
வருகைக்கும் ஆழ்ந்த ரசனைக்கும் நன்றியும் பாராட்டுகளும், ஜீவா!
Post a Comment