ஆன்மீகத்தின் அடுத்த கட்டத்தை நோக்கி....
9. அம்மையப்பா.. உந்தன் அன்பை நினைந்தே..
கதவைத் திறந்தால் ராம்பிரபு நின்றிருந்தான்.
"ஜி! காலை வணக்கம்!" என்று ஆங்கிலத்தில் சொன்னான். பொடிக்கலர் பேண்ட்டும், அதற்கேற்ற மாதிரியான டிஷர்ட்டும் அணிந்திருந்தான்.
"மார்னிங்--வாப்பா, ராம்பிரபு!" என்று அழைத்து அவன் உள்ளே நுழைய வசதியாக வாசற்கதவை விரியத் திறந்தார் கிருஷ்ணமூர்த்தி..
"சார்! இன்னும் 'போர்டிங்' பக்கம் போகலை?" என்றான்.
"இல்லே.. இப்போத்தான் காலைப் பணியெல்லாம் முடிஞ்சது.. இனித்தான் கிளம்பணும்" என்றார் கிருஷ்ணமூர்த்தி.
ஒருநாள் பூராவும் சுற்றினாலும், பங்களா முழுசும் பார்த்து முடிக்க முடியாதது மாதிரி பெரிசாக இருந்தது. முதல்நாள் ராம்பிரபு வழிகாட்ட குத்து மதிப்பாக சில இடங்களைமட்டும் பார்த்து வைத்துக் கொண்டிருந்தார் கிருஷ்ணமூர்த்தி. அவற்றில் ஒன்று போர்டிங் ஹால். வலதுபக்கம் போகும் நீண்ட வராந்தாவின் கோடியில் திரும்பினால் எதிர்த்தாற்பல இருந்தது. விஸ்தாரமான இடம். எதிரும் புதிருமாக ஒரே நேரத்தில் நூறு பேருக்கு மேல் அமர்ந்து சாப்பிடுகிற மாதிரியான இடம். சமையல் செய்வது, பரிமாறுவது என்று ஏழெட்டுபேர் தேறும் போலிருந்தது.. அந்தப்பக்கம் போனாலே, "என்ன சாப்பிடுகிறீர்கள்" என்று விசாரிக்கிற பரிவு.
"என்ன, சார்?.. என்ன யோசிக்கிறீங்க?" என்றான் ராம்பிரபு. இந்த இரண்டுநாள் பழக்கத்தில் கிருஷ்ணமூர்த்தியுடன் மிகவும் அந்நியோன்யமாகியிருந்தான் அவன்.
"ஒன்றுமில்லை, பிரபு! எங்கேயோ பிறந்து, எங்கெங்கேயோ வளர்ந்து, ஊர் ஊராத் திரிந்து, அவன் பெருமையைக் கதை கதையா சொல்லிண்டு வந்தேன்... எத்தனை நாள்தான் அப்படிப்போகும்?.. கதையின் நாயகனைப் பாக்கணும்னு ஆசை தோணாதா, என்ன?.. ஒருநாள் திடீர்னு அந்த ஆசையும் தோணித்து; தோணின உடனே செயல்படுத்தமுடியலே.. சாதாரணக்கயிறா?.. சரியான தாம்புக்கயிரான்னா போட்டு கட்டியிருக்கு.. உறவுகளோட கட்டை அவ்வளவு சுலபமா பிரிச்சிண்டு வர முடியலே.. இப்பவும் ஏதோ சுற்றுப்பயணம் வந்த மாதிரிதான் இருக்கே தவிர, உறவுங்களை முழுசாக் கத்திரிச்சிண்டு வந்திட்டேன்னு தோணலே.. கொஞ்சமே மனக்கதவைத் திறந்தா, போதும்! அத்தனைபேரும் அங்கங்கே உட்கார்ந்திருக்கா.. 'எப்படி டூர்?.. நன்னா அனுபவிக்கறேளா?'ன்னு கையாட்டி விசாரிக்கறா.. எல்லாரும் சந்தோஷமா இருக்கா.. நான் தான் பித்துப் பிடிச்சவன்மாதிரி... எல்லாரையும் பிரிஞ்சு வந்து..." வார்த்தைகளை முடிக்க முடியாமல், கடைசி வார்த்தையை உச்சரிக்கையில் கிருஷ்ணமூர்த்தி குரல் சன்னமாகி, தழுதழுத்து... கன்னக் கதுப்பில் வழியத் தயாராய் இரண்டு நீர்த்துளிகள்..
"என்ன, சார்? என்ன?" என்று நாற்காலியிலிருந்து நழுவ இருந்தவரைத் தாங்கிப் பிடித்தான் பிரபு. " என்ன சார்.. என்ன ஆச்சு?" என்று பதறியவனை ஆசுவாசப் படுத்தினார்,கிருஷ்ணமூர்த்தி.
"ஒண்ணுமில்லை, பிரபு.. ஒண்ணுமில்லே--ஒண்ணுமேயில்லை.." என்று தலையைக் குலுக்கியவரைப் பார்க்கப் பரிதாபமாக இருந்தது, பிரபுவுக்கு.
"ஒண்ணுமில்லே, பிரபு! கொஞ்சம் உணர்ச்சிவசப்பட்டுட்டேன். இருபத்தஞ்சு வயசிலே எனக்குக் கல்யாணம்.. இப்போ அறுபத்தஞ்சு.. நாற்பது வருஷ பந்தம்.. நானூறுகோடி வருஷப் பிணைப்பாத் தெரியறது.. எங்கே போறேள்?'ன்னு கனவுலே கூட கையைப் பிடிச்சு இழுக்கறது.. இந்த அர்ஜூனுக்கு குழந்தைலே பாய்லே படுத்தே பழக்கம்இல்லே; என் மார்தான் அவனுக்குப் பாய், படுக்கை எல்லாம்... மல்லாக்க படுத்திண்டு மார்லே போட்டு தட்டினாத்தான் அவனுக்குத் தூக்கம் வரும்! குழந்தை முழிச்சிண்டுவானோன்னு அசங்காம படுத்திருப்பேன்.. குழந்தை தூங்கினது புரிஞ்சதும், அசங்காம அவன் முழிச்சிக்காம ஜாக்கிரதையா எடுத்து, பக்கத்லே படுக்க வைச்சுப்பேன்; தூங்கறத்தேயும் என்னோட அங்கவஸ்திரப் பிடியை விடாம, குழந்தை கைலேயே பிடிச்சிண்டிருக்கும்.. சின்ன கைக்குழந்தைக்குத் தெரியறது, எனக்குத் தெரியலையே?.. அத்தனை பிடியையும் அறுத்திண்டு தானே வந்திருக்கேன்?" என்று மலங்க மலங்க விழித்துக் கலங்கினார் கிருஷ்ணமூர்த்தி.
"எல்லா அப்பாங்களும் இப்படித்தானா ஸார்.. ஆனா, என்னை மாதிரியான புள்ளைங்க தான்___" என்று அவர் கைகளைப் பிடித்துக் கொண்டு குலுங்கினான் பிரபு.
திடுக்கிட்டு விட்டார் கிருஷ்ணமூர்த்தி. "என்னப்பா, பிரபு?.. இதோ பார்.. ஏன் அழறே?.. இதோ பார்___"என்று அவனை அணைத்து முதுகு தடவினார். பிரபு இடத்தில் அர்ஜூன் அவர் மனத்தில் இருந்தான். "அர்ஜூன்! ஏன் அழறே?"என்று குனிந்திருந்த அவன் மோவாய் மலர்த்தி அவர் கேட்டபோழுது அவர் மனசு வெட்டவெளியாய் வெளிப்பட்டது.
"ஸார்.. என்ன சொன்னீங்க?" என்று நிமிர்ந்தான் பிரபு.
"வாஸ்தவம்பா.. அர்ஜூன்னு சொன்னேன்.. அனிச்சையாய் என் உள்ளிருந்து வந்த அழைப்பு அது... உன் வயசுதான் அவனுக்கும்... நீயும் அவனும் எனக்கு ஒன்றே" என்று பிரகடனம் பண்ணுகிற மாதிரி கிருஷ்ணமூர்த்தி வாயிலிருந்து ஸ்பஷ்டமாக சொற்கள் வெளிப்பட்டன.
அவர் சொன்னதைக் கேட்டு பிரவுவின் கண்கள் கலங்கின.
'என்ன வந்தது, இவனுக்கு?.. இந்த இருபத்திரண்டு வயசுக் குழந்தையின் மனசை முதலில் லேசாக்க வேண்டுமென்கிற நினைப்பு ஒரு தந்தையின் செயலாய் அவர் உள்ளத்தில் பீரிட்டது. பிரபுவின் கன்னம் வழிந்த நீரைத் துடைத்து விட்டார் அவர். "அழாதே... ஆம்பளைங்க அழக்கூடாது. சொல்லு.. எங்கிட்ட சொல்லு.. எதுனாலும் சொல்லு.." என்றுஅவன் தோள்பட்டைகளைப் பிடித்துத் தேற்றினார் கிருஷ்ணமூர்த்தி.
அம்பு எய்ய முனைந்த வேடனடியிலிருத்து தப்பி, சிபி சக்கரவர்த்தியிடம் அடைக்கலமானப் புறாவின் நிலையில் படபடப்புடன் இருந்தான் அவன்.
அவர் பிடியில் தளர்ந்து தன்னையே ஒப்படைத்து விட்ட விசுவாசம் அவனிடம் இருந்தது.
"சரி... பிரபு.. இப்போ நீ ஓ.கே.தானே?.. அது போதும்.. வேணும்னா அப்புறம் சொல்லு.." என்று அவன் தோளில் தட்டிக் கொடுத்தார்.
"பெத்த பிள்ளை மீது அப்பாக்கள்லாம் வைச்சிருக்கற பாசத்தை நீங்க சொன்னப்போ.. அதை நீங்க சொல்றச்சே.. எனக்கு மனசு தாங்கலே.. அந்த சுகம் எனக்குத் தெரியாததாலே துக்கமா வந்து நெஞ்சடைத்திடுத்து.. அதான்.. அதான்.." என்று திக்கினான் பிரபு.
"ஓ___" என்று அவன் தலை தடவி ஆசுவாசப்படுத்தினார் கிருஷ்ணமூர்த்தி.
ஒரு நிமிஷம் அவர் நெற்றி நிமிர்ந்து பார்த்து, சடாரென்று தலைகவிழ்த்து, "எனக்கு அப்பா இல்லே, சார்!" என்றான் பிரபு.. ஒரு வினாடி மெளனத்தைத் தாண்டி," அவர் செத்துப் போகறச்சே மூணு வயசாம் எனக்கு.. அம்மா சொல்லித்தான் தெரியும்" என்று விக்கலூடே தொடர்ந்தான் "ரோட்லே, பஸ்லே, கடைலே, ஸ்கூல்லேன்னு நா சின்னப் பையனா இருக்கறச்சே எந்த அப்பாவைப் பாத்தாலும், அப்பா பாசத்துக்கு ஏங்கி எனக்கு துக்கம்பொத்துண்டு வரும்.. கஷடப்பட்டு அடக்கிப்பேன். எங்கப்பாவை நான் பாத்த நினைவே இல்லே.." என்று கேவினான் பிரபு.
கிருஷ்ணமூர்த்தி அவன் கைபிடித்துத் தன் கைக்குள் வைத்துக் கொண்டார். "கவலைப்படாதே, பிரபு!.. எனக்குக்கூட எங்கப்பா என்னோட ஒரு வயசிலேயே காலமாயிட்டார். அந்தக் காலத்லே இப்போ மாதிரி போட்டோல்லாம் அதிகமா எடுக்க மாட்டா.. எங்கப்பா இப்படியிருப்பார்னு தெரிஞ்சிக்க வீட்லே ஒரு போட்டோ கூட இல்லே.. அதுனாலே என்னப்பா?.. வீட்லே எத்தனை சாமி படம் இருக்கு.. நம்மோடையே இருக்கற இறைவன் தான் நம்மோட அப்பா.. அம்மா எல்லாம். பனிபடர்ந்த இமயமலைலே அம்மையும், அப்பனும் எப்படி 'ஜம்'னு உட்கார்ந்திருக்காங்க.. அந்தப் படம் பாத்திருக்கையா நீ?.. எப்பவும் நம்ம அப்பாவும் அம்மாவும் நம்மையெல்லாம் கவனிச்சிண்டு.. காப்பாத்திண்டு இருக்கறச்சே,நமக்கென்ன கவலை?.. பீ சீர்! எங்கே, சிரி!.." என்று அவர் சொல்ல ஒரு குழந்தை போலச் சிரித்தான் பிரபு.
"குட்!" என்று அவனைத் தட்டிக் கொடுத்தார் கிருஷ்ணமூர்த்தி.
மூத்த வயதில் மகன் அருகில் இல்லாத தந்தையும், இளம் வயதில் தந்தை இல்லாத மகனுமாய் உணர்வுப் பிழம்பான அந்தச் சூழ்நிலையில்...
இன்னொரு ஆத்மாவை பாசத்துடன் தரிசித்த புல்லரிப்பு கிருஷ்ணமூர்த்திக்கு ஏற்பட்டது.
(தேடல் தொடரும்)
10 comments:
//உணர்வுப் பிழம்பான அந்தச் சூழ்நிலையில்...//
அந்தப் பிழம்பு படிக்கையில் என்னையும் பற்றிக் கொண்டது.
கவிநயா said...
//உணர்வுப் பிழம்பான அந்தச் சூழ்நிலையில்...//
அந்தப் பிழம்பு படிக்கையில் என்னையும் பற்றிக் கொண்டது.//
ஓ.. தவறாது கூட வரும் வருகைக்கும், உணர்வுகளுக்கும்
மிக்க நன்றி, கவிநயா!
ஆன்மாவின் மொழி அன்புதானோ? மிகவும் அழகாக போய்க்கொண்டிருக்கிறது இந்த தொடர். அதை நீங்கள் சொல்லும் நடை அதை விட பிரமாதம். அடுத்த பதிவுகளுக்காக ஆவலுடன் காத்திருக்கிறேன்.
Expatguru said...
..ஆன்மாவின் மொழி அன்புதானோ? மிகவும் அழகாக போய்க்கொண்டிருக்கிறது இந்த தொடர். அதை நீங்கள் சொல்லும் நடை அதை விட பிரமாதம். அடுத்த பதிவுகளுக்காக ஆவலுடன் காத்திருக்கிறேன்.//
வாருங்கள், குரு!
விரைவில் ஆத்மாவைப் பற்றி
துளி அளவாவது புரிந்து கொள்ள
முயற்சிக்கலாம்..
வழக்கம் போல கூட இருந்து தங்கள் கருத்துக்களைச் சொல்லி சிறப்பு செய்யுங்கள், நண்பரே!
"வீட்லே எத்தனை சாமி படம் இருக்கு.. நம்மோடையே இருக்கற இறைவன் தான் நம்மோட அப்பா.. அம்மா எல்லாம். பனிபடர்ந்த இமயமலைலே அம்மையும், அப்பனும் எப்படி 'ஜம்'னு உட்கார்ந்திருக்காங்க.."
ஆஹா என்ன அருமையான வார்த்தைகள்...அம்மையே அப்பா ஒப்பிலா மணியே...என்பதன் எளிமையான் பிரயோகம்....யோசித்துப்பார்க்கும் போது உறவுகளோடு இன்னும் நெருக்கமாக உணரமுடிகிறது....
நன்றி ஜீவி...
கிருத்திகா said...
//"வீட்லே எத்தனை சாமி படம் இருக்கு.. நம்மோடையே இருக்கற இறைவன் தான் நம்மோட அப்பா.. அம்மா எல்லாம். பனிபடர்ந்த இமயமலைலே அம்மையும், அப்பனும் எப்படி 'ஜம்'னு உட்கார்ந்திருக்காங்க.."
ஆஹா என்ன அருமையான வார்த்தைகள்...அம்மையே அப்பா ஒப்பிலா மணியே...என்பதன் எளிமையான் பிரயோகம்....யோசித்துப்பார்க்கும் போது உறவுகளோடு இன்னும் நெருக்கமாக உணரமுடிகிறது....
நன்றி ஜீவி...//
சரியான உணர்வு.
பிரபஞ்சம் பூராவும் நிறைந்திருக்கும்
பூர்ணத்தின் கூறுகளைப் புரிந்து கொண்டு அன்பு செய்யத் தலைப்படும் பொழுது தன்னுள் பூர்ணத்துவம் நிலைபெறும்.
இந்த வாழ்க்கைக்காகத் தான் பிறப்பெடுத்திருக்கிறோம் என்று புரிந்து போகும்.
தொடர்வோம், வாருங்கள்..
//பனிபடர்ந்த இமயமலைலே அம்மையும், அப்பனும் எப்படி 'ஜம்'னு உட்கார்ந்திருக்காங்க.. அந்தப் படம் பாத்திருக்கையா நீ?.. எப்பவும் நம்ம அப்பாவும் அம்மாவும் நம்மையெல்லாம் கவனிச்சிண்டு.. காப்பாத்திண்டு இருக்கறச்சே,நமக்கென்ன கவலை?.. பீ சீர்! எங்கே, சிரி!.." என்று அவர் சொல்ல ஒரு குழந்தை போலச் சிரித்தான் பிரபு.//
மிகவுன் சத்யமான வார்த்தைகள், சர்வேஸ்வரனும் சர்வேஸ்வரியும், திருக்கயிலையில் இவ்வாறுதான் அமர்ந்து நம்மை காக்கின்றனர்.
அருமையாக செல்கின்றது தொடர், வாழ்த்துக்கள்.
Kailashi said...
//பனிபடர்ந்த இமயமலைலே அம்மையும், அப்பனும் எப்படி 'ஜம்'னு உட்கார்ந்திருக்காங்க.. அந்தப் படம் பாத்திருக்கையா நீ?.. எப்பவும் நம்ம அப்பாவும் அம்மாவும் நம்மையெல்லாம் கவனிச்சிண்டு.. காப்பாத்திண்டு இருக்கறச்சே,நமக்கென்ன கவலை?.. பீ சீர்! எங்கே, சிரி!.." என்று அவர் சொல்ல ஒரு குழந்தை போலச் சிரித்தான் பிரபு.//
//மிகவுன் சத்யமான வார்த்தைகள், சர்வேஸ்வரனும் சர்வேஸ்வரியும், திருக்கயிலையில் இவ்வாறுதான் அமர்ந்து நம்மை காக்கின்றனர்.
அருமையாக செல்கின்றது தொடர், வாழ்த்துக்கள்.//
ஆஹா, தாங்கள் திருகையிலை புனிதப்பயணம் மேற்கொண்டு கைலாயநாதனை தரிசித்துப் புண்ணியம் பெறும் பேறு பெற்றவர் அல்லவா?..
இந்தத் தொடருக்குத் தங்கள் உணர்வுகளைப் பதிந்தமை என்
பாக்கியம். சிவ-சக்தியின் அருளால்
தொடர் தொடர்கிறது.
கருத்துக்களுக்கு மிக்க நன்றி.
ஜீவி
//உறவுங்களை முழுசாக் கத்திரிச்சிண்டு வந்திட்டேன்னு தோணலே.. கொஞ்சமே மனக்கதவைத் திறந்தா, போதும்! அத்தனைபேரும் அங்கங்கே உட்கார்ந்திருக்கா.. 'எப்படி டூர்?.. நன்னா அனுபவிக்கறேளா?'ன்னு கையாட்டி விசாரிக்கறா.. //
இந்த பாசப்பிணைப்புகளை அறுத்தெறிதல் என்பது அத்தனை சுலபமான விஷயமா :(
நிச்சலனமான மனம், அதையும் தாண்டி தாமரை இலைத் தண்ணீர் போன்ற பிணைப்பு இருக்கவேண்டும் எல்லோரிடமும்... எளிதில் வந்து விடுவதில்லை :(
Shakthiprabha said...
//உறவுங்களை முழுசாக் கத்திரிச்சிண்டு வந்திட்டேன்னு தோணலே.. கொஞ்சமே மனக்கதவைத் திறந்தா, போதும்! அத்தனைபேரும் அங்கங்கே உட்கார்ந்திருக்கா.. 'எப்படி டூர்?.. நன்னா அனுபவிக்கறேளா?'ன்னு கையாட்டி விசாரிக்கறா.. //
இந்த பாசப்பிணைப்புகளை அறுத்தெறிதல் என்பது அத்தனை சுலபமான விஷயமா :(
நிச்சலனமான மனம், அதையும் தாண்டி தாமரை இலைத் தண்ணீர் போன்ற பிணைப்பு இருக்கவேண்டும் எல்லோரிடமும்... எளிதில் வந்து விடுவதில்லை :(//
வாருங்கள், சக்தி பிரபா!
தங்கள் முதல் வருகை நல்வரவாகுக.
வரிசையாக தொடரின் பிடித்த இடங்களுக்கு தொடர் பின்னூட்டமிட்டுத் திகைக்க வைத்து விட்டீர்கள்!
எதையும் அறுத்தெரிதல் சாத்தியமில்லை; அறுத்தெரிதலும் முக்கியமல்ல. இறைவனின் விருப்பமும் அதுவல்ல.
அதனால் தான் பெரியவர் கிருஷ்ண
மூர்த்திக்கு அவ்வளவு தடுமாற்றம்.
தொடரும் வருகைக்கு மிக்க நன்றி.
Post a Comment