25. மீண்டும் கிரெளஞ்ச பட்சிகள்
சகோதரி பூங்குழலி தொடர்ந்து பேசலுற்றார்:
"இவ்வளவும் சரி. அடிப்படையான கேள்வி ஒன்று இருக்கிறது. உடம்பு, மனம், புத்தி, புலன்கள் என்று வரிசைகட்டி நிற்கும் இவற்றைச் செயல்படுத்துவது பிராணன் என்றால், அந்தப் பிராணனைச் செயல்படுத்துவது யார்?.. யாரால் இவையெல்லாம் இயங்குகின்றன?..
"'கேனோபநிஷ'த்தில் இந்த கேள்வி எழுப்பப்பட்டு, பதிலையும் புரிய வைக்கிறது.
"'கேன' என்றால், 'எதனால்' என்று அர்த்தம். இந்த உபநிஷதம் சாமவேதத்தின் ஒன்பதாவது பகுதியைச் சேர்ந்தது.
"ச்ரோத்ரஸ்ய ச்ரோத்ரம் மனஸோ மனோ யத்
வாசோ ஹ வாசம் ஸ் உப்ராணஸ்ய ப்ராண:
சக்ஷூஷச்சக்ஷூரதிமுச்ய தீரா:
ப்ரேத்யாஸ்மால்லோகாதம்ருதா பவந்தி"
"பிராணனைச் செயல்படுத்துவது முதற்கொண்டு எல்லாவற்றிற்கும் காரணமாக இருப்பது ஆத்மா'-- என்று இந்த மந்திரத்தில் தெளிவாகச் சொல்லப்பட்டிருக்கிறது.
"அம்மாடி!.. ஒரு வழியாக நேரடியான பதில் இப்பொழுது கிடைத்து விட்டது. அதற்குப் பிறகு என்னவென்று பார்ப்போம்.
"வெளிப்படத் தெரியும் புற உலகில் காண்பனவற்றை அறிவதற்காக அமைந்தவை புற உறுப்புகள். அதனால் புற உறுப்புகளால் அகத்திலுள்ளதை அறிய முடியாதாம்... ரொம்ப சரி.. வேறு எப்படித்தான் பார்ப்பதாம்?.. அல்லது உணர்வதாம்?.
"'நாம் அறிந்தவைகளுக்கெல்லாம் மேலானது அது; அறியாதவைகளுக்கும் உயர்வானது; ஆதலால் அதுபற்றி அறியோம். எங்களுக்கு இதுபற்றிச் சொன்னவர்கள், இப்படித்தான் சொன்னார்கள்' என்கிறது அடுத்த மந்திரம்..
ஆஹா, ஞானம் சித்தி பெற்ற தவ சிரேஷ்டரான முனிவர், தனக்கு ஞானம் சித்தி பெற்றிருந்தாலும் எவ்வளவு அடக்கமாகக் கூறுகிறார் என்று ஆச்சரியப்படுகிற நேரத்தில், ' இது-அது' என்று ஒவ்வொன்றையும் சுட்டி, 'ஓகோ, அதுதான் இதுவாக்கும்' என்று அறிந்து கொள்கிற மாதிரி, ஆத்மாவை அறிய முடியாது' என்று நமது ஜாக்கிரதை உணர்வைக் கூட்டுகிறார்.
"அடுத்தடுத்த மந்திரங்களைப் பார்த்தால், புரிபடுகிறது மட்டுமல்ல, எவ்வளவு அழகாகச் சொல்லியிருக்கிறார்கள் என்று வியந்தும் போகிறோம்.
"எதைச் சொல்லால் சொல்லித் தெரிய வைக்க முடியாதோ, எதனால் சொல்ல முடிகிறதோ, அதுவே ஆத்மா!
"எதை மனசால் அறிந்து கொள்ள முடியாதோ, எதனால் மனம் அறிந்து கொள்ள முடிகிறதோ, அதுவே ஆத்மா!
"எதை விழிகளால் தரிசிக்க முடியாதோ, எதனால் விழிகளால் பார்க்க முடிகிறதோ, அதுவே ஆத்மா!
"எதை காதுகளால் கேட்க முடியாதோ, எதனால் காதுகள் கேட்கும் சக்தியை பெற்றிருக்கிறதோ, அதுவே ஆத்மா!
"எதை மூச்சினால் சுவாசிக்க முடியாதோ, எதனால் மூச்சு சுவாசம் பெற்றிருக்கிறதோ, அதுவே ஆத்மா!
"ஆக, எதனால் சொல்லித் தெரியவைக்க முடிகிறதோ, எதனால் மனதுக்கு அறியும் சக்தி கிடைத்திருக்கிறதோ, எதனால் பார்க்க, கேட்க, சுவாசிக்க முடிகிறதோ அதுவே தான் ஆத்மா என்றால்---ஓ, ப்ரம்ம சொரூபமே ஆத்மாவா?
"நாதன் உள்ளிருக்கையில், தேடித் தேடித் தினம் தினம் எங்கெல்லாம் திரிந்து அலைகின்றோம்?..
"ஓம்..நமசிவாய--- போற்றி, போற்றி!
நின் மலர்த்தாள் போற்றி, போற்றி!"
விழிகளை மூடித் திறக்கையில் 'குபுக்'கென்று வெளிப்பட்டு, லேசாய், கோடாய்
கன்னங்களில் வழிந்த நீரைச் சடாரென்று துடைத்துக் கொண்டு, மேலும் பேச முடியாது, தழுதழுத்தக் குரலில் தலை தாழ்த்தி, "நன்றி..நமஸ்காரம்.." என்று இரண்டே வார்த்தைகளைச் சொல்லிவிட்டு மேடை விட்டு இறங்கினார் சகோதரி பூங்குழலி.
சபையே நிசப்தத்தில் உணர்ச்சி மிகுந்து ஆழ்ந்த மோனத் தவத்தில் இருந்தது. அந்த அமைதியை கலைத்தது போல கணகணவென்று மணி சப்தம் கேட்டது. அதைத் தொடர்ந்து, "டணார், டணார்' என்று ஆலயமணி ஓசை பூங்குழலியின் பேச்சை ஆமோதித்தது.
மகாதேவ் நிவாஸின் சிவன் கோயிலின் சாயரட்சை பூஜையின் தொடக்க அறிகுறியான அந்த மணியோசையைக் கேட்டதும் எல்லோர் முகமும் அர்த்தபுஷ்டியுடன் மலர்ந்தன.
கிருஷ்ணமூர்த்தி வேகமாக மேடையேறி, உணர்வு கொப்பளிக்கும் வார்த்தைகளால் பேராசிரியை பூங்குழலிக்கு நன்றி சொன்னார்.
அதைத் தொடர்ந்து மனோகர்ஜியும், கிருஷ்ணமூர்த்தியும் கோயிலை நோக்கி முன்செல்ல அனைவரும் அவர்களைத் தொடர்ந்தனர். அவர்களை சந்தோஷத்துடன் வரவேற்பதே போன்று மண்டபத்தின் நடு ஸ்தூபி அருகே அந்த இரண்டு கிரெளஞ்ச பட்சிகளும் சிறகடித்து அமர்ந்திருந்தன.
அவற்றைப் பார்த்ததும் மனோகர்ஜி எல்லை மீறிய சந்தோஷத்தில் கைதட்டி மகிழ்ந்தார்.
(தேடல் தொடரும்)
16 comments:
ம்ம்ம்ம்ம்..! கதை நன்றாக போய் கொண்டு இருக்கிறது. :-)
திவா said...
//ம்ம்ம்ம்ம்..! கதை நன்றாக போய் கொண்டு இருக்கிறது. :-)//
இதுவரை படிக்கவில்லையென்றால், ஆரம்பத்திலிருந்தே ஒரு தடவை படித்து விடுங்கள்.. அப்பத்தான், போக்கு புரியும்.
மிக்க நன்றி, சார்!
ஐயா, ஆரம்பத்திலேந்து வரிசையா படிச்சுட்டுதான் பின்னூட்டமே போட ஆரம்பிச்சேன்! நன்றி.
உடலை விட்டு ஆத்மா வெளியேறும்போது பதினோறு வாசல்களில் ஏதாவது ஒன்றின் வழியாக வெளியேறுகிறது என்று கூறுகிறார்கள். அப்படியென்றால், ஒரு உயிர் உருவாகும்போது, இன்னும் சொல்ல போனால், விந்து கருமுட்டைக்குள் நுழையும்போது எப்படி ஆத்மா அதற்குள் நுழைகிறது? விஞ்ஞானபூர்வமாக ஆராய்ந்தால் கரு உருவாகும்போது இந்த பதினோறு வாசல்களில் ஒன்று கூட உருவாகி இருக்காது அல்லவா? அந்த ஆத்மா இல்லையென்றால் அது வெறும் சதைப்பிண்டம் தானே? இதை பற்றி உபநிஷதுக்களில் ஏதாவது உள்ளதா என்று கூறுங்களேன்.
expat,
ஆம் சாந்தோக்கியத்தில் விரிவாக இருக்கிறது. ஓவர் டு ஜீவி.
திவா said...
//ஆரம்பத்திலேந்து வரிசையா படிச்சுட்டுதான் பின்னூட்டமே போட ஆரம்பிச்சேன்! நன்றி.//
அப்படியா?.. அப்ப ரொம்ப சந்தோஷம்.
நன்றி.
Expatguru said...
//உடலை விட்டு ஆத்மா வெளியேறும்போது பதினோறு வாசல்களில் ஏதாவது ஒன்றின் வழியாக வெளியேறுகிறது என்று கூறுகிறார்கள். அப்படியென்றால், ஒரு உயிர் உருவாகும்போது, இன்னும் சொல்ல போனால், விந்து கருமுட்டைக்குள் நுழையும்போது எப்படி ஆத்மா அதற்குள் நுழைகிறது? விஞ்ஞானபூர்வமாக ஆராய்ந்தால் கரு உருவாகும்போது இந்த பதினோறு வாசல்களில் ஒன்று கூட உருவாகி இருக்காது அல்லவா? அந்த ஆத்மா இல்லையென்றால் அது வெறும் சதைப்பிண்டம் தானே? இதை பற்றி உபநிஷதுக்களில் ஏதாவது உள்ளதா என்று கூறுங்களேன்.//
தாயின் உடலுக்குள் தந்தையின் உயிர் கருவாக. இதில் உணர்வு சக்தியாக கடவுள் உச்சந்தலையிலுள்ள 'பிரம்ம ரந்திரம்' வாசல் வழியாக நுழைகிறார் என்கிறது ஐதரேய உபநிஷதம். இதுபற்றி முன்பே குறிப்பிட்டிருக்கிறது.
இதயத்தின் நாடிகளில் ஒன்று, உச்சந் தலையைப் பிளந்து கொண்டு செல்வதாக கட உபநிஷதம் கூறுகிறது.
தாயின் வயிற்றில் கரு உண்டானதும் முதலில் உருவாகும் உறுப்பு இதயம் என்று உடற்கூறு விஞ்ஞானம் சொல்கிறது.
ஆண் தனது சக்தியின் மூலமாக மீண்டும் தன்னைப் பிறப்பித்துக் கொள்கிறான் என்பதும், இதுவே அவனது முதல் பிறப்பு என்பதும் உபநிஷது வாக்கு.
தொடர்புச் செய்தி:பிறந்த குழந்தைக்கு சில மாதங்கள் வரை உச்சந்தலையில் சின்ன ஒரு பள்ளம் மாதிரி சதை மூடி இருக்கும். கவனித்திருக்கிறீர்களா?..
திவா said...
expat,
//ஆம் சாந்தோக்கியத்தில் விரிவாக இருக்கிறது. ஓவர் டு ஜீவி.//
சாந்தோக்கிய உபநிஷதம் கைவசம் இல்லை. படித்ததும் இல்லை. முடிந்தால் தாங்கள் இது பற்றி சிறுகுறிப்பு தரமுடியுமா?..
மிக்க நன்றி.
that would be part 5 chapter 10
same thing is better seen here http://www.bharatadesam.com/spiritual/upanishads/chandogya_upanishad_2.php
திவா சார்!
இணைய அறிமுகங்களுக்கு மிக்க நன்றி.
பொறுமையாகப் படித்து நிறையப் புரிந்து கொள்ள வேண்டும்.
எதை அறிந்துகொள்ள முடியாதோ... எதால் அறிந்துகொள்கிறோமோ என்று கூறுவதன் மூலம், நமக்கு மிகவும் அண்மையே போன்ற உணர்வையும், இத்துனை அருகிருந்தும் (நமக்குள்ளிருந்தும்) அறிந்து கொள்ள முடியாத பேதையாயிருக்கிறோமே என்ற ஆற்றாமையையும் தருகிறது ஜீவி இந்தப்பகுதி. ஆனால் ஏதோ ஒன்று நம்பிக்கையூட்டும் வண்ணமாகவும் இருக்கிறது.. அது எது என்பதை போகப்போக புரிந்துகொள்ளமுடியும் என்று நினைக்கிறேன்....
கிருத்திகா said...
//எதை அறிந்துகொள்ள முடியாதோ... எதால் அறிந்துகொள்கிறோமோ என்று கூறுவதன் மூலம், நமக்கு மிகவும் அண்மையே போன்ற உணர்வையும், இத்துனை அருகிருந்தும் (நமக்குள்ளிருந்தும்) அறிந்து கொள்ள முடியாத பேதையாயிருக்கிறோமே என்ற ஆற்றாமையையும் தருகிறது ஜீவி இந்தப்பகுதி. ஆனால் ஏதோ ஒன்று நம்பிக்கையூட்டும் வண்ணமாகவும் இருக்கிறது.. அது எது என்பதை போகப்போக புரிந்துகொள்ளமுடியும் என்று நினைக்கிறேன்....//
வாசிப்பெல்லாம், வாழ்க்கையை வாழ்வாங்கு வாழ, வழி காட்டுவதற்கு தான்!
அனுபவப்பட்டு அறிவதற்கு கிடைத்த அருமையான சாதனமும் நமது வாழ்க்கை ஒன்றுதான்!
இதுபற்றிய ஒரு ருக்வேத ஸ்லோகத்தைப் பின்னொரு பதிவில் எழுதுகிறேன். ஓ! எத்தனை நூற்றாண்டுகளுக்கு முன்னால், இன்றைக்கும் பொருந்துகிற மாதிரி இப்படி ஒரு கருத்து-- என்று நான் வியந்து மகிழ்ந்த ஸ்லோகம்!
தாமதமானாலும், விட்டு விடாமல் தொடர்ந்த வருகைக்கு மிக்க நன்றி.
சில சொந்த வேலைகள் மற்றும் அலுவலகத்தில் ஒரு புதிய ஒப்பந்தத்தின் சோதனை வேலைகளும் தொடர்ந்து வருவதால் இணைய நேரம் பெரும்பாலும் மிகவும் அரிதாகவே உள்ளது இன்னும் ஒரு வாரத்தில் சரியாகிவிடும் அதுவரை விட்டதைப்பிடுக்கும் வேலைதான். :)
கிருத்திகா said...
//சில சொந்த வேலைகள் மற்றும் அலுவலகத்தில் ஒரு புதிய ஒப்பந்தத்தின் சோதனை வேலைகளும் தொடர்ந்து வருவதால் இணைய நேரம் பெரும்பாலும் மிகவும் அரிதாகவே உள்ளது இன்னும் ஒரு வாரத்தில் சரியாகிவிடும் அதுவரை விட்டதைப்பிடுக்கும் வேலைதான். :)//
அப்படியா?.. அதான் முக்கியம்.
பொறுப்புகள் கூடக்கூட சொந்த பலம் கூடும். வாழ்த்துக்கள்.
என்ன சொல்வது?
சொல்லத்தான் என்ன இருக்கிறது?!
Again kenopanishad says
"He who comprehends the para-brahman as both known and not-known comprehends it right"
மூழ்க மூழ்க புரியாத கோணங்களின் புரிந்துகொள்ளும் முயற்சியே உபநிஷதுக்கள். கதை வடிவில் அழகாய் சொல்லியிருக்கிறீர்கள்.
உயிர் என்பது 8ஆம் மாதமே கருவுக்குள் செல்கிறது என்று படித்த நியாபகம். சாந்தோக்கிய உபநிஷத் படித்ததில்லை. சுட்டி இட்டதற்கு நன்றி. படித்துப்பார்க்கிறேன்.
உங்கள் வலைப்பதிவை நான் தொடர எண்ணுகிறேன். ( I wanna follow ur blog, if that isn't a problem for you)
நன்றி. மிக்க நன்றி. :
Shakthiprabha said...
//என்ன சொல்வது?
சொல்லத்தான் என்ன இருக்கிறது?!
Again kenopanishad says
"He who comprehends the para-brahman as both known and not-known comprehends it right"
மூழ்க மூழ்க புரியாத கோணங்களின் புரிந்துகொள்ளும் முயற்சியே உபநிஷதுக்கள். கதை வடிவில் அழகாய் சொல்லியிருக்கிறீர்கள்.
உயிர் என்பது 8ஆம் மாதமே கருவுக்குள் செல்கிறது என்று படித்த நியாபகம். சாந்தோக்கிய உபநிஷத் படித்ததில்லை. சுட்டி இட்டதற்கு நன்றி. படித்துப்பார்க்கிறேன்.
உங்கள் வலைப்பதிவை நான் தொடர எண்ணுகிறேன். ( I wanna follow ur blog, if that isn't a problem for you)
நன்றி. மிக்க நன்றி. ://
சரியாகத் தான் சொல்லியிருக்கிறீர்கள்.
தெரிந்தோ தெரியாமலோ கதை உரு கொடுத்து விட்டதினால், ரொம்ப விரிவாகச் செல்லவில்லை..
அறிமுகம் கிடைத்தவர்கள், மேலும் தேடுவார்கள் என்பதும் ஒரு நம்பிக்கை.
சாந்தோக்கிய உபநிஷதை நானும் படித்ததில்லை. திவா அவர்கள் தந்த சுட்டி அது: அவருக்கு நாம் நன்றி சொல்வோம்.
தாராளமாய் தொடருங்கள்; மிகவும்
மகிழ்ச்சியே.
தொடரும் வருகைக்கு மிக்க நன்றி.
Post a Comment