மின் நூல்

Monday, December 1, 2008

ஆத்மாவைத் தேடி....21

ஆன்மீகத்தின் அடுத்த கட்டத்தை நோக்கி....


21. நிழல் காட்டிய ஒளி


சகோதரி நிவேதிதா தொடர்ந்து பேசலானார்:

"இந்த பிராணன், உயிர்க்காற்று தான் பிரதானமாக இருந்து கொண்டு தானே அபானன், சமானன், வியானன், உதானன் என்று வேறு வேறு பெயர்களில் வேறு வேறு செயல்களில் ஈடுபடுகிறதாம். பார்ப்பதும், கேட்பதும், பேசுவதும் பிராணன் கொடுக்கும் சக்தியாலே தான்.

"'சித்த வைத்தியம்' தலைப்பில் பேசவிருக்கும் வைத்தியநாதன் அவர்கள் இந்த பிராணனைப் பற்றி விவரமாகப் பேசுவதாகச் சொல்லியிருக்கிறார். ஆகவே இது பற்றிமேலோட்டமாக நான் சொல்ல நினைக்கிறேன்.

இறைவன் பிரபஞ்சத்தைத் தோற்றுவித்த பொழுதே, பிராணசக்தியும், அந்த பிரபஞ்சத் தோற்றத்துடனேயே ஓர் அம்சமாகத் தோன்றிவிட்டது. ஆக, வெளியெங்கணும் இந்தப் பிராணன் வியாபித்திருக்கிறது.

"பூரிதி வை ப்ராண: புவ இத்யபான: ஸூவரிதி வ்யான: மஹ இத்யன்னம் அன்னேன வாவ ஸர்வே ப்ராணா மஹீயந்தே"
--என்று யஜூர்வேதம் சார்ந்த தைத்திரீய உபநிஷதில் சொல்லப் பட்டிருக்கிறது.

.இயக்க சக்திக்கு காரணமான பிராணன் உட்கொள்ளும் உணவினால் தான் இயங்குகிறது என்று சொல்கிறது. அதாவது உட்கொள்ளும் உணவே, உடல்இயக்கத்திற்கு சக்தியளித்து பிராணனை நிலைபெறச் செய்கிறது என்று அர்த்தம். ஆதலால் உண்ணும் உணவு தெய்வீகமானது. பிறருக்கு உபசரித்து உணவிடுதலும் தெய்வீகமான செயல். உடல் உழைப்புக்கேற்பவும், ஏற்கும் அளவும் அளவோடு சாப்பிட்டு அதையே அமுதமாக பாவிக்கவும் வேண்டியிருப்பதால், அது மருந்து போன்றதும் கூட.

"ஊர்த்வம் ப்ராணமுன்னயதி அபானம் ப்ரத்யகஸ்யதி மத்யே வாமனமாஸீனம் விச்வே தேவா உபாஸதே"
--என்று கட உபநிஷதம் சொல்கிறது. கடர் என்னும் முனிவர் இதை அருளியதால், அவர் பெயர் கொண்டு அழைக்கப்படும் இதுவும் யஜூர்வேதம் சார்ந்த உபநிஷதம் தான்.

"உடம்பின் நடுவில் ஜீவன் உள்ளது. இந்த ஜீவன் தான் பிராணனை மேலேயும், அபானனை கீழேயும் செலுத்துகின்றது. அவயவங்கள் அத்தனையும் ஜீவனையே சார்ந்து இருக்கின்றன".

பிராணனுக்கு அடுத்து ஜீவன்.

"ஓ! இந்த ஜீவன் தான் உயிர் போலிருக்கிறது!

"புரிவது போலிருக்கிறது; ஒவ்வொன்றாகப் பார்க்கலாம்.


"நமது செயல்பாடுகளை இரண்டாகப் பிரிக்கலாம்; உடல், மனம் என்று.
இந்த இரண்டு செயல்பாட்டிற்கும், இரண்டும் சேர்ந்த செயல்பாட்டிற்கும் சக்தி அளிப்பது பிராணனே. இதையே இன்னொரு விதத்திலும் சொல்லலாம். பிராண சக்தியை உடலும், மனமும் தமது தனித்தனி செயல்பாட்டுக்கும், சேர்ந்த செயல்பாட்டிற்கும் உபயோகப்படுத்திக் கொள்கின்றன என்று. அந்தப் பிராணன் இல்லையென்றால் எதுவும் லபிக்காதென்று, உடலும், மனமும் தங்கள் செயல்பாட்டிற்கு பிராணசக்தியையே சார்ந்து இருக்கின்றன.


"மனம் ஓர் அரூப 'வஸ்து'. சரியாகச் சொல்ல வேண்டுமானால், ஓர் அபூர்வ 'வஸ்து'. ஒரு நொடியில் ஓராயிரம் எண்ணங்களை எழுதியும் அழித்தும் அலைமோதவிடும் அபூர்வ படைப்பு. அனுபவங்கள், அபிலாஷைகள், பரிவு, பாசம் என்று ஏகப்பட்ட வலைகளை தனக்குத்தானே சுற்றிக்கொண்டாலும் துடிதுடிப்பான ஒன்று அது.. நினைத்ததை நிறைவேற்றத் துடிக்கும் இதற்குக் கிடைத்த இயங்கு பொருளே உடல்..... மனம், உடல் இந்த இரண்டையும் உருவாக்கியதும் பிராணன் தான்; அவற்றை இயக்குவதும் அதுவே.

.
"ஆத்மன ஏஷ ப்ராணோ ஜாயதே; யதைஷா புருஷே சாயா ஏதஸ்மின் ஏததாததம் மனோக்ருதேனாயாதி அஸ்மின் சரீரே"
--என்று அதர்வண வேதத்து பிரச்ன உபநிஷதம் கூறுகிறது.


"இந்த இடத்தில் ஒன்றைச் சொல்ல வேண்டும்.


"ஆதமாவும், பிராணனும் மனிதனும் அவனது நிழலும் போல என்று சொல்லப்பட்டிருக்கிறது. ஆத்மாவின் நிழலே பிராணன் என்றால், ஆத்மா?.. கிட்டதட்ட நெருங்கி வந்து விட்டது போல் தோன்றுகிறது; ஆனால் தட்டுப்படவில்லை. தொடர்ந்து தேடுவோம்.


"பிராணசக்தி இருப்பதால் உடலுக்கும் மனத்திற்கும் இயக்கம் இருக்கிறது. அது இல்லையேல் எதுவும் இல்லை. ரொம்ப சரி.


"ஒரு பொருளின் மீது வெளிச்சம் பட்டால், ஒரு நாணயத்தின் இன்னொரு பக்கமாக, வெளிச்சம் படாத பகுதிதான் நிழலாக நீள்கிறது; நிழல் இருப்பின் வெளிச்சம் இன்னொரு பக்கம் என்பது நிச்சயம். அப்படிப்பட்ட நிச்சயமான ஒன்றாய்த்தான்--- பிராணனும், அதன் இயக்கமான பிராணசக்தியும் இருக்கையில், ஆத்மாவும் இருக்கிறது என்பதை அனுமானித்துக் கொள்ளலாம். ஒளியான ஆத்மா இருப்பதை, பிராணனான நிழல் இருப்பதின் மூலமாகவும், பிராணன் இருப்பதை அதன் சக்தி இயக்கமான உடலியக்கம் இருப்பதின் மூலமாகவும் தெரிந்து கொள்ளலாம். உடல், மனம் இயக்கம் இல்லையா, பிராணன் இல்லை; பிராணன் இல்லையெனில், ஆத்மாவும் இல்லை என்பதே மறுதலைப் பாடம்.


"உடல், மன இயக்கம் இருக்கையில் இந்த சகலமும் இருக்கின்றன என்பது புறப்புலன்களுக்கு தட்டுப்படாத பார்வை. வெளிப்புலன்களுக்குத் தட்டுப் படாததாலேயே, அவை இல்லை என்றும் அர்த்தம் இல்லை. உள்நோக்கி செலுத்திய தீட்சண்ய உணர்வின் மூலம் அவை தட்டுப்பட்டவர்கள் இருக்கிறார்கள். ஆக, அவை தட்டுப்படாததற்குக்காரணம், அகவயப்பார்வை இன்மையே".

அந்த அவையே ஒட்டு மொத்த ஈடுபாட்டுடன், சங்கீத அலைபோல் அந்த ஹால் முழுக்க நிறைந்திருந்த நிவேதாவின் பேச்சொலியில் கட்டுண்டு கிடந்தது.
(தேடல் தொடரும்)

18 comments:

கிருத்திகா ஸ்ரீதர் said...

"ஆதமாவும், பிராணனும் மனிதனும் அவனது நிழலும் போல என்று சொல்லப்பட்டிருக்கிறது. ஆத்மாவின் நிழலே பிராணன் என்றால், ஆத்மா?."

பிரணான் இருக்கறதால நம்மால ஆத்மாவை ஒரு புறப்பொருளா புரிஞ்சுக்க முடியறது அதே சமயம் அதுதான் ஆதாரம் இல்லை. ஆத்மாக்கு பிராணன் அடிப்படை இல்லை. என் புரிதல் சரிதானே

ஜீவி said...

ஆத்மாவிற்கும் பிராணனுக்கும் உள்ள தொடர்பு, மனிதனுக்கும் அவனது நிழலுக்கும் போல என்கிறது, இந்த மந்திரம்.
தெரிந்ததைக் கொண்டு, தெரியாததை யூகிக்க செய்த முயற்சி இது. மனிதன் - நிழல் தெரியும். தெரிந்த இதை தெரியாத ஆத்மா-பிராணனுடன் சேர்த்துப் பார்த்த சுயதேடலே வார்த்தைகளாக வெளிப்பட்டிருக்கிறது. அவ்வளவுதான்.
இது மனதின் யோசிப்பு என்பதால், யோசிப்பில் வெளிப்புலன் சம்பந்தப்படவில்லை. ஆனால், வெளிப்புலனாகிய கண்களால் கண்ட 'மனிதன் - நிழல்' சம்பந்தம் ஒன்றே, வெளிப்புலன் சம்பந்தப்பட்டது.
பிராணனிற்கும் ஆதமாவிற்கும் சம்பந்தமிருக்கிறது. பிராணன் இறைவனிடமிருந்து பெற்றது. இறைவனே ஆத்மா எனக்கொண்டால், பிராணன் ஆத்மாவிலிருந்து தோன்றியதாகக் கொள்ளலாம். ஆக,
இயங்கும் உடலில் பிராணன் இருக்கிறதென்றால், பிராணனும் இருக்கிறது.
அதையேத் திருப்பிப் போட்டு, பிராணன் இருப்பதால்--ஆத்மா இருப்பதாகக் கொண்டோம்.
இப்போதைக்கு இது. போகப்போக என்னவாகப் போகிறதோ, தெரியவில்லை.
நீங்களும் யோசியுங்கள். வேறுபட்டுத் தோன்றினால், சொல்லுங்கள்.
அப்படியும் யோசித்துப் பார்ப்போம்.

கேள்விகள் கிளம்பக் கிளம்ப, உள்ளம் இன்னும் தீவிரமாகத் தேடத் துவங்கும்.
வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி, கிருத்திகா!

ஜீவி said...

'அதையே திருப்பிப் போட்டு, பிராணன் இருப்பதால், ஆத்மா இருப்பதாகக் கொண்டோம்' என்று திருத்திப் படித்துக் கொள்ள வேண்டுகிறேன்.

இராகி said...

edhu aadhmaa? intha keLviyai ennidamum, ungkaLidamum dhoRRuvippadhu manam... adhaRkaana vidaidhaan aadhmaa... enpadhu ennudaiya karudhdhu...
sila vishayangkalukku kaNNukku dherintha, naam pazakiya onRai vaidhdhudhaan viLakka mudiyum... adhe poladhaan aadhmaa enpadhaiyum appadiye dhaan viLakka mudiyum. aayiram dhaamarai malarvadhu pola enRaar pudhdhar... aanaal paarvai dheriyaadhavanukku aayiram dhaamaraiyai eppadi koNdu puriya vaippadhu...
aadhmaaviRkum piraananukkum neradi dhodarpu iruppadhaaka enakku dheriyavillai... naanum enakkuL payaNidhdhu koNdirukkiRen... ennaidh dhedi koNdirukiRen.. aayirakkaNakkaana keLvikaLudan padhil aLikka yaarum illaamal..
aanaal piraaNanukkum manadhiRkum dhodarpu uNdu... medhuvaaka aaznthu suvaasikkum podhu manamum medhuvaaka, lesaaka iruppadhai uNara mudiyum.. kopadhdhudan irukkum podhu adhe mikavum ushNamaaka iruppadhaiyum uNaralaam. . edhaiyaavadhu sinthidhdhu koNdirukkum podhu muchai nirudhdhinaal manamum adhanudan ninru pokum...
aadhmaa enpadhu paRRi enakku dheriyaadhu.. adhai dherinthu koLLavum virumpavillai... naan aadhmaa enpadhu enakku dheriyum... aanaal manam kadantha nilaikku pokaveNdum... maname illadha nilai.. sinthikka edhuvum illaamal ippodhu intha nimidadhdhil, nodiyil vaaznthu parungkaL.. ungkaLaal mudikiRadha... mudinthal enakku padhil aLiyungkaL....
ungkaLudaiya dhalaippu aadhmaavai dhedi nanraaka irukkiRadhu...
aanaal ungkaLudaiya vaardhdhaikaLin pirayokam mikavum kadinamaaka uLLadhu... eLimaippadudhdhalaame...
adudhdha padhivil santhippom

கபீரன்பன் said...

//பிரணான் இருக்கறதால நம்மால ஆத்மாவை ஒரு புறப்பொருளா புரிஞ்சுக்க முடியறது அதே சமயம் அதுதான் ஆதாரம் இல்லை. ஆத்மாக்கு பிராணன் அடிப்படை இல்லை. என் புரிதல் சரிதானே //

உடல், ஆத்மா மற்றும் பிராணன் இணைந்த இயக்கம் கொஞ்சம் மனக் குழப்பத்தை தருவதுதான். நான் புரிந்து கொண்ட வகையை சொல்கிறேன். சரி அல்லது தவறு என்பதை உங்கள் முடிவுக்கு விட்டு விடுகிறேன்.

உடல் -செல்போன் ; ஆத்மா-ஸிம் கார்டு ; பிராணன் - இவற்றை இயக்கும் மின்காந்த சக்தி (பாட்டரி). கர்ம பதிவுகள் ஆத்மாவின் மூலம் அடுத்த உடலுக்கு கொண்டு செல்லப்படுகிறது.அதில் சேமிக்கப்பட்டிருக்கும் சங்கேதங்களால் ஸிம்-கார்டுக்கு எந்த பாதிப்பும் இல்லாதது போல் ஆத்மாவும் வினைப் பதிவுகளால் பாதிக்கப்படுவதில்லை. அடிப்படையில் பிராணசக்தி இல்லாவிட்டால் இயக்கம் எதுவும் இல்லை.

திவாண்ணா said...

//தட்டுப்படாததற்குக்காரணம், அகவயப்பார்வை இன்மையே//

இதுதான் ஆச்சரியமான விஷயம்! ஏன் பிரம்மமாக எதையும் பார்க்க முடியலை? பார்க்கத் தெரியலை, அதனாலதான்.

Kavinaya said...

//பிராணன் இல்லையெனில், ஆத்மாவும் இல்லை என்பதே மறுதலைப் பாடம்.//

ஐயா, ஆத்மா என்பது உயிருக்கும் உணர்வுக்கும் அப்பாற்பட்டது, அழிவில்லாதது என்ற புரிதலில் இருந்தேன்; நீங்கள் சொல்வது வேறு மாதிரி இருக்கிறதே...

//வெளிப்புலன்களுக்குத் தட்டுப் படாததாலேயே, அவை இல்லை என்றும் அர்த்தம் இல்லை. உள்நோக்கி செலுத்திய தீட்சண்ய உணர்வின் மூலம் அவை தட்டுப்பட்டவர்கள் இருக்கிறார்கள். ஆக, அவை தட்டுப்படாததற்குக்காரணம், அகவயப்பார்வை இன்மையே".//

நன்றாகச் சொன்னீர்கள். மிக்க நன்றி.

Expatguru said...

ஆத்மாவும் மனமும் வெவ்வேறான‌ ஒன்று என்று நினைக்கிறேன். உதாரணத்துக்கு, ஒரு மனிதன் மூளைச்சாவு அடைந்துள்ளான் என்று எடுத்துக்கொள்வோம். அவனுடைய பிற அங்க உறுப்புகள் இயங்கி கொண்டுதான் இருக்கின்றன. இவற்றை இயக்குவது பிராணன் தான். பிராணன் உடலில் இருந்து பிரிந்து விட்டால் அனைத்து இயக்கமும் நின்று விடுமே. ஆனால் மூளைச்சாவு அடைந்த இந்த நிலையில் அந்த மனிதனால் எதையுமே சிந்திக்க முடியாது. அது போலவே, நமது மனதினுள் ஒவ்வொறு நிமிடமும் எழும்பும் கேள்விகளும் பேச்சும் (மனசாட்சி?)மூளைச்சாவு அடைந்த பின் நின்றுவிடும் என்றே தோன்றுகிறது. அதனால் ஆத்மாவும் மனமும் இரு வேறு துறுவங்கள் அல்லவா?

இந்த ஆத்மா உடலில் எங்கே இருக்கிறது என்பது தான் அடுத்த கேள்வி. பாம்பு போல சுருட்டி கொண்டு இருக்கிறது, அதை குண்டலினி யோகம் செய்து மேலே எழுப்ப வேண்டும் என்று யோகிகள் கூறுவார்கள். ஆனால், ஒரு சாதாரண மனிதனுக்கு இவை எல்லாம் புரியாத புதிர். நமது உடலுக்குள் எங்கோ ஆத்மா இருக்கிறது. ஆனால் எங்கே என்பதற்கு தான் விடை தெரியவில்லை. இறைவன் நிர்ணயித்த வேளையில் இந்த உடலில் இருந்து ஆத்மா வெளியேறி விடுகிறது என்பது நிதர்சனம். ஒரு வேளை இறைவன் தான் இந்த ஆத்மாவோ?

மிக அருமையான பதிவு இது, ஜீவி அவர்களே. சில சம்ஸ்கிருத வார்த்தைகளுக்கு அர்த்தம் புரியவில்லை. அவற்றை எளிய தமிழில் கூறினால் என்னை போன்ற கத்துக்குட்டிகளுக்கு உதவியாக இருக்கும்.

ஜீவி said...

இராகி said...
//ungkaLudaiya dhalaippu aadhmaavai dhedi nanraaka irukkiRadhu...
aanaal ungkaLudaiya vaardhdhaikaLin pirayokam mikavum kadinamaaka uLLadhu... eLimaippadudhdhalaame...
adudhdha padhivil santhippom//

நீண்ட பின்னூட்டத்திற்கு மிக்க நன்றி, ஐயா!
தங்கள் பதிவுகளை இத்தனை நாட்கள் படிக்கத் தவறியமைக்கு வருந்துகிறேன். இனி தொடர்ந்து படித்து கருத்துக்களைப் பரிமாறிக் கொள்வேன்.
முடிந்த வரை எளிமையாக எழுத முயற்சிக்கிறேன்.
மிக்க நன்றி.

jeevagv said...

நல்ல தேடல்களை கிளறி விடும் பதிவுக்கு நன்றிகள்!

ஜீவி said...

கபீரன்பன் said...
//பிரணான் இருக்கறதால நம்மால ஆத்மாவை ஒரு புறப்பொருளா புரிஞ்சுக்க முடியறது அதே சமயம் அதுதான் ஆதாரம் இல்லை. ஆத்மாக்கு பிராணன் அடிப்படை இல்லை. என் புரிதல் சரிதானே //

உடல், ஆத்மா மற்றும் பிராணன் இணைந்த இயக்கம் கொஞ்சம் மனக் குழப்பத்தை தருவதுதான். நான் புரிந்து கொண்ட வகையை சொல்கிறேன். சரி அல்லது தவறு என்பதை உங்கள் முடிவுக்கு விட்டு விடுகிறேன்.

உடல் -செல்போன் ; ஆத்மா-ஸிம் கார்டு ; பிராணன் - இவற்றை இயக்கும் மின்காந்த சக்தி (பாட்டரி). கர்ம பதிவுகள் ஆத்மாவின் மூலம் அடுத்த உடலுக்கு கொண்டு செல்லப்படுகிறது.அதில் சேமிக்கப்பட்டிருக்கும் சங்கேதங்களால் ஸிம்-கார்டுக்கு எந்த பாதிப்பும் இல்லாதது போல் ஆத்மாவும் வினைப் பதிவுகளால் பாதிக்கப்படுவதில்லை. அடிப்படையில் பிராணசக்தி இல்லாவிட்டால் இயக்கம் எதுவும் இல்லை.//


ஆஹா! காலத்திற்கேற்ற வர்ணனை.
வருகின்ற பதிவுகளில், புரிகிற அளவில் இன்னும் கொஞ்சம் ஆழமாகப் பார்க்கலாம்.
மிக்க நன்றி, கபிரன்ப!

ஜீவி said...

கவிநயா said...
//பிராணன் இல்லையெனில், ஆத்மாவும் இல்லை என்பதே மறுதலைப் பாடம்.//

//ஐயா, ஆத்மா என்பது உயிருக்கும் உணர்வுக்கும் அப்பாற்பட்டது, அழிவில்லாதது என்ற புரிதலில் இருந்தேன்; நீங்கள் சொல்வது வேறு மாதிரி இருக்கிறதே...//

நீங்கள் கொண்டிருக்கும் கருத்தே சரி.
அதற்குப் பிறகு ஆத்மா விட்டு விலகி விடும் என்கிற அர்த்தத்தில் சொல்லியிருக்கிறேன்.
தொடர்ந்த வாசிப்பிற்கும், தொடரும் பின்னூட்டங்களுக்கும் மிக்க நன்றி, கவிநயா!

ஜீவி said...

திவா said...
//தட்டுப்படாததற்குக்காரணம், அகவயப்பார்வை இன்மையே//

இதுதான் ஆச்சரியமான விஷயம்! ஏன் பிரம்மமாக எதையும் பார்க்க முடியலை? பார்க்கத் தெரியலை, அதனாலதான்.

"கண்டவர் விண்டிலர்;
விண்டவர் கண்டிலர்" -- என்னும் வழக்கு மொழி வந்ததும், இதனால் தானோ?..
வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி, திவா சார்!

கிருத்திகா ஸ்ரீதர் said...

"உடல் -செல்போன் ; ஆத்மா-ஸிம் கார்டு ; பிராணன் - இவற்றை இயக்கும் மின்காந்த சக்தி (பாட்டரி). கர்ம பதிவுகள் ஆத்மாவின் மூலம் அடுத்த உடலுக்கு கொண்டு செல்லப்படுகிறது.அதில் சேமிக்கப்பட்டிருக்கும் சங்கேதங்களால் ஸிம்-கார்டுக்கு எந்த பாதிப்பும் இல்லாதது போல் ஆத்மாவும் வினைப் பதிவுகளால் பாதிக்கப்படுவதில்லை. அடிப்படையில் பிராணசக்தி இல்லாவிட்டால் இயக்கம் எதுவும் இல்லை. "

நல்ல பொருத்தமான விளக்கம். ஆனால் நாம் வினையின் பதிவுகள் தானே கர்மாவாகி ஆத்மாவை அலைக்கழிக்கவோ அமைதியாக்கவோ செய்கிறது... "ஆத்மாவும் வினைப் பதிவுகளால் பாதிக்கப்படுவதில்லை. " அப்போது இதை எவ்வாறு விளக்கிக்கொள்வது...

ஜீவி said...

Expatguru said...
//மிக அருமையான பதிவு இது, ஜீவி அவர்களே. சில சம்ஸ்கிருத வார்த்தைகளுக்கு அர்த்தம் புரியவில்லை. அவற்றை எளிய தமிழில் கூறினால் //

தொடர்ந்த தேடலில் பல தெளிவுகள் பிறக்கும் என்று தெரிகிறது.

அந்தந்த சமஸ்கிருத மந்திரங்களுக்கு
கருத்து விளக்கமாக அந்த மந்திரச் சொற்றொடர்களைத் தொடர்ந்து வரும் செய்திகளில் அவற்றின் கருத்து வருகிற மாதிரி செய்திருக்கிறேன். இந்தப் பதிவைக் கதை மாதிரியான ரூபத்தில் எழுதுவதால், வார்த்தைகளைப் போட்டு நேரடியான அர்த்தம் சொன்னால், கட்டுரைகளாகத் தோற்றமளிக்கும் என்பதால் இந்த முறை. இனி, முடிந்த வரை அந்தக் குறையையும் வேறு வழிகளில் சரிபடுத்தி விடுகிறேன்.
கருத்துக்களைப் பதிந்தமைக்கு மிக்க நன்றி, குரு!

ஜீவி said...

ஜீவா (Jeeva Venkataraman) said...
//நல்ல தேடல்களை கிளறி விடும் பதிவுக்கு நன்றிகள்!//

படித்தவர் பகிர்ந்து கொள்வதற்கு நானும் நன்றி சொல்ல வேண்டும்.
மிக்க நன்றி.

ஜீவி said...

கிருத்திகா said...
"உடல் -செல்போன் ; ஆத்மா-ஸிம் கார்டு ; பிராணன் - இவற்றை இயக்கும் மின்காந்த சக்தி (பாட்டரி). கர்ம பதிவுகள் ஆத்மாவின் மூலம் அடுத்த உடலுக்கு கொண்டு செல்லப்படுகிறது.அதில் சேமிக்கப்பட்டிருக்கும் சங்கேதங்களால் ஸிம்-கார்டுக்கு எந்த பாதிப்பும் இல்லாதது போல் ஆத்மாவும் வினைப் பதிவுகளால் பாதிக்கப்படுவதில்லை. அடிப்படையில் பிராணசக்தி இல்லாவிட்டால் இயக்கம் எதுவும் இல்லை. "

நல்ல பொருத்தமான விளக்கம். ஆனால் நாம் வினையின் பதிவுகள் தானே கர்மாவாகி ஆத்மாவை அலைக்கழிக்கவோ அமைதியாக்கவோ செய்கிறது... "ஆத்மாவும் வினைப் பதிவுகளால் பாதிக்கப்படுவதில்லை. " அப்போது இதை எவ்வாறு விளக்கிக்கொள்வது...//

இதுபற்றி தேடாமலே எதுவும் சொல்ல முடியவில்லை.
நீங்களும் தான் கூட வருகிறீர்களே?
தேடிச் சொல்லலாம்.
மிக்க நன்றி, கிருத்திகா!

கபீரன்பன் said...

//...வினையின் பதிவுகள் தானே கர்மாவாகி ஆத்மாவை அலைக்கழிக்கவோ அமைதியாக்கவோ செய்கிறது //

ஆத்மா என்பது ஒரு தளம், support matrix. அது எதையும் அனுபவிப்பதில்லை என்கின்றனர். தன்னை உடலுடன் அடையாளப் படுத்திக்கொள்ளும் மனம் செய்யும் மாயையே இன்பமும் துன்பமும் என்பர்.

மேடையில், உருக்கமான நடிப்பில் ஐக்கியமாகி கதாபாத்திரத்தினோடு பார்வையாளர்கள் அழத் தொடங்கினாலும், நடிகருக்குத் தெரியும் தன் நிஜ சொரூபம் அதுவல்ல என்பது.

பார்வையாளர்களின் தற்காலிக அறியாமை போன்றதே மனதின் நிலைமையும். பழம் வினைகளின் தொடர்ச்சியாக ஏதோ நாடகம் அரங்கேறிக் கொண்டிருக்கும். ஞானம் வந்தபின் ஆத்மாவில் தொடர்ந்து மனதை நிறுத்தமுடிகிறவனுக்கு அதனால் உள் பாதிப்பு கிடையாது.

ஆகையால்தான் மனதைத் தாண்டிச் செல்ல முடிந்த ஞானிகளுக்கு இன்பம் துன்பம் எதுவும் இல்லை என்கின்றனர்.

செல் போனுக்கு ஏது மனம் என்று கேட்டுடாதீங்க !அதை வெறும் பிராண சக்தியின் பங்கு என்ன என்பதை புரிந்து கொள்ளச் சொன்னேன். கம்பி வழியாக வரும் மின்சக்தி பாட்டரியில் சேமிக்கப்பட்டு செல்போன் இயக்கத்திற்கு பயன் படுவது போல காற்றின் வழியே வரும் பிராண சக்தி உடலில் இரத்தத்தின் மூலம் திசுக்களில் சேமிக்கப் பட்டு உடலின் பல்வகையான இயக்கத்திற்கு பயன் படுகிறது

Related Posts with Thumbnails