ஆன்மீகத்தின் அடுத்த கட்டத்தை நோக்கி....
23. ஆனந்த உடம்பு
சகோதரி பூங்குழலி உற்சாகமாகப் பேசத் தொடங்கினார். அவரது உற்சாகம் அனைவருக்கும் தொற்றிக் கொண்டது, எல்லோரும் மிகுந்த ஆர்வத்துடன் அவர் பேச்சை செவிமடுத்து அவ்வப்போது குறிப்புகள் எடுத்துக் கொண்டதிலிருந்து தெரிந்தது.
"புற உலகில் பார்க்கும், படிக்கும், புதிதாகத் தெரிந்து கொள்ளும் விஷயங்களுக்கேற்ப புத்தி தன்னைத் தானே உருவாக்கிக் கொள்ளும். முதலில் எதுபற்றியாவது கொண்ட எண்ணம் தவறாகத் தெரிந்தாலும், பாம்பு சட்டையைக் களைகிற மாதிரி களைந்து புதுசாக உணர்ந்த கருத்துக்கேற்ப தன்னை மாற்றிக்கொள்ளும். இப்படிச் செய்வதுஆரோக்கியமான ஒன்று. இது புதுப்புது சிந்தனைகளுக்கேற்ப தன்னை புதுவார்ப்புகளாய் செழுமைபடுத்திக் கொள்ளும் புத்திக்கு அழகு. மாற்றிக்கொள்ள மாட்டேன் என்று வீம்புத்தனமாய் அடம் பிடிக்கும் புத்தி நாளாவட்டத்தில் நடைமுறை உலக மாற்றங்களுக்குத் தாக்குப் பிடிக்காமல் முடங்கிப் போகும். செய்யும் செயல்களில் தோல்விகள் மிகுந்து தொய்ந்து போக நேரிடும்.
"மனதுக்கு என்றால், புத்தி செயல்படுத்தத் துடிக்கும் எதையும் உணர்வுகள் அடிப்படையில் உரசிப்பார்க்க முனையும். கற்பனை வலை பின்னும். சரிப்பட்டு வரவில்லை என்றால் , புத்தியை சந்தேகப்படுத்தத் தயங்காது. இந்த தயக்கம், புத்தியின் செயல்படுத்தும் வேகத்தைக் குறைக்கும். சந்தேகம் பொய்ந்துப் போகின், புத்தியால் தாங்கிக்கொள்ள முடியாது. மனத்தை மட்டந்தட்ட முயலும். இரண்டும் இரண்டு பக்கம் முகத்தைத் திருப்பிக் கொள்ளும். ஆரோக்கியமான வளர்ச்சிகள் தடைப்பட்டுப் போகும்.
"ஆனால், இதில் ஒரு விசேஷம் என்னவென்றால், புத்தியோ மனமோ இரண்டுமே தாம் பெற்ற அனுபவங்களின் அடிப்படையில் தாம் செயல்படும் என்பது ஓர் அடிப்படைஉண்மை. மேலோட்டமாகப் பார்க்கையில் இரண்டுக்கும் அனுபவம் என்பது ஒன்றாகத் தானே இருக்கும் என்று தோன்றும். ஒரு விஷயத்தில் மனதில் அலசி, அந்தக்காரியம் வெற்றி பெற்றதென்றால், அது மனசுக்குக் கிடைத்த வெற்றியாக மனிதன் எண்ணத் தலைப்படுவான். அதைத் தொடர்ந்து, சடாரென்று உடனே எந்தக் காரியத்திலும் ஈடுபடாமல், யோசித்து, யோசித்து தாமதித்து நடவடிக்கைகள் எடுப்பான். யாராவது சொல்லி, எதையாவது படித்து, யதார்த்த உண்மைகளைக் கணக்கில் எடுத்துக் கொண்டு கணக்குப் போட்டு சட்டுபுட்டென்று காரியம் வெற்றியடைந்தால், அதை புத்தி கொடுத்த வெற்றியாக மனிதன் எடுத்துக் கொள்வான். அந்த முறை தோல்வியடையும் வரை, அந்த முறையையே தொடர்வான். இது அமாவாசை, பெளர்ணமி மாதிரி மாறி மாறி நடவடிக்கை.
"இப்படி மாறி மாறி இல்லாமல் தொடர்ந்த வெற்றிக்கு, புத்தியும் மனதும் ஒன்றிற்கொன்று முரண்டு பிடிக்காமல், இரண்டு மாடுகளையும் ஒருசேர வண்டியில் பூட்டி சவாரி செய்வதை சாத்தியப்படுத்த வேண்டும். புத்தியையும், மனதையும் ஒருசேர ஒரே சிந்தனையில் மையப்படுத்துவது தான் அது.
"இதையே இன்னொரு பாஷையில் சொல்வதென்றால், புத்தியையும் மனசையும் ஒன்றிற்கொன்று விஞ்சாமல் பார்த்துக் கொள்வது தான்.
"புத்தியையும் மனதையும் கணவன் -மனைவி என்று கொண்டால், ஒன்றிற்கொன்று காதல் வயப்பட வேண்டும்; பிற்பாடு, இரண்டும் ஒன்றிற்கொன்று வசப்பட்டுப் போகும்.
"இதை செயல்படுத்த ஒரு சுலபமான வழி இருக்கிறது.
"நமது அனுபவங்களை நல்லனவையாக அமைத்துக் கொண்டால் போதும்; இந்த இரட்டை மாட்டு வண்டி சவாரி சாத்தியப்பட்டுப் போகும்.
"செயல்களே அனுபவத்தை ஏற்படுத்துமாகையால், நல்ல எண்ணங்கள், நல்ல நண்பர்கள், நல்ல பழக்க வழக்கங்கள், மமதை கொள்ளாமமை, பிறர் சொல்லும் நல்லனவற்றைக் காதுகொடுத்துக் கேட்டல், பிறரை வெறுத்தல் இன்மை, சுறுசுறுப்பு, பயன் கருதாத செயலூக்கம், வறுமையிலும் செம்மை என்று வாழ்க்கையை அமைத்துக் கொண்டால் போதும். ரொம்ப சுலபத்தில், ஒரு பெரும் கூட்டத்தின் மத்தியில் நாம் அடையாளம் காணப்பெற்று, நல்லனவை நடக்கத் துவங்கும். கவனத்தில் கொள்ளவும்: நமது காத்திருப்பு, நல்லதொரு தொடக்கத்தின் துவக்கத்திற்குத் தான். அது துவங்க வேண்டியதற்கு தான்; பிறகு நல்லவை நடப்பது தொடருவதை தக்க வைத்துக் கொள்வது தான், நாளுக்கு நாள் நமது வேலையாகிப் போகும். எது எப்படி இப்படி நம்மைக் குன்றின்மீது ஏற்றி கொண்டாடச் செய்தது என்பது நமக்கே வியப்பாகிப் போகும்.
"புத்தியும் மனமும் கூடிக் குலாவும் மகிழ்ச்சியில், நல்லனவற்றைத் தேடிப்போக வேண்டாம்; நல்லனவையே நம்மைத் தேடி வரும்; அப்புறம் வாழ்க்கை பூராவும் வசந்தம் தான். 'வெற்றி மீது வெற்றி வந்து உன்னைச் சேரும்; அதை வாங்கிக் கொடுத்தப் பெருமை எல்லாம் எம்மைச் சேரும்' என்று புத்தியும் மனசும் ஒருசேரக் களிக்கும். அவை களித்தால் நமக்குக் கொண்டாட்டம்; இரண்டும் முரண்டு பட்டால் தான் நமக்குத் திண்டாட்டம்.
"ஆனால், புத்தியையும், மனதையும் ஒன்றிற்கொன்று வசப்படுத்துவது லேசுப்பட்ட காரியம் இல்லை.
"அப்படி வசப்படுத்தி மட்டும் விட்டால், இன்பத்தைத் தலையாகவும், மகிழ்ச்சியை வலது பக்கமாகவும்,. சந்தோஷத்தை இடது பக்கமாகவும் கொண்ட ஆனந்த உடம்பு பெறலாம்.
"உள்ளத்தில் குடிகொண்ட இறைவனுக்கு மனசாலும், புத்தியாலும் புஷ்பாஞ்சலி செலுத்தலாம்.
"எப்படி?
"த்வமேவ மாதா ச்சபிதா த்வமேவ
த்வமேவ பந்து ச்சஸகா த்வமேவ
த்வமேவ வித்யா த்ரவினம் த்வமேவ
த்வமேவ சர்வம் மமதேவ தேவ!"
-- நீங்கள் தான் அன்னையாகவும், தந்தையாகவும்,
சொந்தமாகவும், நண்பனாகவும்,
கல்வியாகவும், செல்வமாகவும்
எங்களுக்கு இருக்கிறீர்கள்!
ஹே! தேவனுக்கெல்லாம் தேவனே!
நீதான் எனக்கு எல்லாமுமாகி இருக்கிறாய்!
(தேடல் தொடரும்)
10 comments:
//...இது அமாவாசை, பெளர்ணமி மாதிரி மாறி மாறி நடவடிக்கை //
மனம் மற்றும் புத்தி செயல்பாடு பற்றிய நல்ல உருவகம். இதையும் தாண்டி உள்ளுணர்வு பல சமயங்களில் ஒரு புது மார்க்கத்தை காட்டுவதுண்டு.
// இரண்டு மாடுகளையும் ஒருசேர வண்டியில் பூட்டி சவாரி செய்வதை சாத்தியப்படுத்த வேண்டும். //
இதில் உள்ளுணர்வு ’வண்டிக்காரன்’ அல்லது இறைவன் குரல் என்று வைத்துக்கொண்டால் கடிவாளத்தை அவனிடம் கொடுத்து விட்டு மனிதன் கவலை யின்றி பயணம் செய்யலாம்.
பூங்குழலியின் விளக்கங்கள் யாவருக்கும் பிடிக்கும் என்று நம்பலாம். மேலும் தொடரட்டும்..நன்றி
ஐயா. இந்தக் கருத்துகள் ஏதேனும் ஒரு உபநிடதத்தில் வரும் கருத்தா? அதில் வரும் உபாசனை முறையா? மனோமய, விஞ்ஞானமய கோசங்களுக்கு அடுத்து இருக்கு ஆனந்தமய கோசத்தைப் பற்றி சொல்வது போல் தோன்றுகிறது. சரி தானா?
கபீரன்பன் said...
//...இது அமாவாசை, பெளர்ணமி மாதிரி மாறி மாறி நடவடிக்கை //
மனம் மற்றும் புத்தி செயல்பாடு பற்றிய நல்ல உருவகம். இதையும் தாண்டி உள்ளுணர்வு பல சமயங்களில் ஒரு புது மார்க்கத்தை காட்டுவதுண்டு.
// இரண்டு மாடுகளையும் ஒருசேர வண்டியில் பூட்டி சவாரி செய்வதை சாத்தியப்படுத்த வேண்டும். //
இதில் உள்ளுணர்வு ’வண்டிக்காரன்’ அல்லது இறைவன் குரல் என்று வைத்துக்கொண்டால் கடிவாளத்தை அவனிடம் கொடுத்து விட்டு மனிதன் கவலை யின்றி பயணம் செய்யலாம்.
பூங்குழலியின் விளக்கங்கள் யாவருக்கும் பிடிக்கும் என்று நம்பலாம். மேலும் தொடரட்டும்..நன்றி//
ஆமாம், கபீரன்ப!
தாங்கள் சொல்வது மிகவும் சரியே.
சிலசமயங்களில், உள்ளுணர்வு காட்டும் புதுமார்க்கத்தை நானும் உணர்ந்திருக்கிறேன். அவை எனது வேறு சில கதைகளிலும், ஏன், இந்தத் தொடரிலும் கூட வெளிப்பட்டிருக்கிறது.
ஒரு சுகப்பயணத்திற்கு வழிகாட்டியிருக்கிறீர்கள்.
வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி, கபீரன்ப!
குமரன் (Kumaran) said...
// இந்தக் கருத்துகள் ஏதேனும் ஒரு உபநிடதத்தில் வரும் கருத்தா? அதில் வரும் உபாசனை முறையா? மனோமய, விஞ்ஞானமய கோசங்களுக்கு அடுத்து இருக்கு ஆனந்தமய கோசத்தைப் பற்றி சொல்வது போல் தோன்றுகிறது. சரி தானா?//
இந்தக் கருத்துக்கள் அப்படியே உபநிஷத்துக் கருத்துக்கள் இல்லை. உபநிஷத்துக் கருத்துக்களை மட்டுமே இந்தத் தொடரில் எழுதவும் இல்லை.
முடிந்த வரை, உபநிஷத்துச் செய்திகள் வருமிடங்களிலெல்லாம் அங்கங்கே மேற்கோள் காட்டியிருக்கிறேன். ஒரு நல்ல மனிதனாக உருவாவதற்கான நடைமுறை சாத்தியப்பாட்டை,பல நீதிநூல்களிலிருந்து திரட்டித் தந்திருக்கிறேன். அதுவும் ஆனந்த உடம்பு பெருவதற்கான வழி என்று நினைத்ததினால், அதில் கொண்டு போய்ச் சேர்த்திருக்கிறேன். அவ்வளவே. ஒரு சுயதேடலின் பல்வேறு திசை நோக்கிய திரிதல் தான் இந்தத் தொடர். கதை ரூபத்தில் அமைக்க வேண்டிய கட்டாயம், அங்கங்கே கதை சொல்லும் உருவ அமைப்பைக் காப்பாற்ற வேண்டியிருக்கிறது.
அதை பல இடங்களில் தவிர்க்க முடியாமல் மீறியும் இருக்கிறேன்.
இந்தக் கதை--அல்லது இந்தத் தொடர்-- முடிகையில் எல்லாம் தெளிவாகப் புரிந்து விடும்.
ஆழ்ந்த வாசிப்பிற்கும், கருத்துக்கும், புரியச் சொல்ல ஒரு வாய்ப்பேற்படுத்தித் தந்தமைக்கும்
மிக்க நன்றி, குமரன்.,
மனசு உணர்வின்பாற்பட்டது; புத்தி அறிவின்பாற்பட்டது. இரண்டும் கைகோர்த்துச் செல்லுதல் கடினமான காரியம்தான்.
//"நமது அனுபவங்களை நல்லனவையாக அமைத்துக் கொண்டால் போதும்; இந்த இரட்டை மாட்டு வண்டி சவாரி சாத்தியப்பட்டுப் போகும்.//
நன்றாகச் சொல்லியிருக்கிறீர்கள் ஐயா. நன்றி.
//இதில் உள்ளுணர்வு ’வண்டிக்காரன்’ அல்லது இறைவன் குரல் என்று வைத்துக்கொண்டால் கடிவாளத்தை அவனிடம் கொடுத்து விட்டு மனிதன் கவலை யின்றி பயணம் செய்யலாம்.//
கபீரன்பன் அவர்களுக்கும் நன்றி.
கவிநயா said...
மனசு உணர்வின்பாற்பட்டது; புத்தி அறிவின்பாற்பட்டது. இரண்டும் கைகோர்த்துச் செல்லுதல் கடினமான காரியம்தான்.
//"நமது அனுபவங்களை நல்லனவையாக அமைத்துக் கொண்டால் போதும்; இந்த இரட்டை மாட்டு வண்டி சவாரி சாத்தியப்பட்டுப் போகும்.//
நன்றாகச் சொல்லியிருக்கிறீர்கள் ஐயா. நன்றி.
//இதில் உள்ளுணர்வு ’வண்டிக்காரன்’ அல்லது இறைவன் குரல் என்று வைத்துக்கொண்டால் கடிவாளத்தை அவனிடம் கொடுத்து விட்டு மனிதன் கவலை யின்றி பயணம் செய்யலாம்.//
கபீரன்பன் அவர்களுக்கும் நன்றி.
உங்கள் புரிதலுக்கும் தொடர்ந்த வருகைக்கும் மிக்க நன்றி, கவிநயா!
புத்தி மனம் பற்றிய வேறுபாட்டை கத்திமுனையில் நடப்பது போல் மிகவும் தெளிவாகவும் எளிமையாகவும் விளக்கியுள்ளீர்கள்... நன்றி...
கிருத்திகா said...
//புத்தி மனம் பற்றிய வேறுபாட்டை கத்திமுனையில் நடப்பது போல் மிகவும் தெளிவாகவும் எளிமையாகவும் விளக்கியுள்ளீர்கள்//
வாங்க, கிருத்திகா!
எங்கே காணோமேன்னு பார்த்தேன்.
சுயதேடல் அல்லவா?.. பரிசோதனைச்
சாலையில் உட்கார்ந்த மாதிரியான அனுபவம் தான். ஆனால், சொந்த வெளிப்பாட்டின் சுகமே தனி தான்.
அதே அலைவரிசையில் இன்னொருவரும் அதை அனுபவிக்கும் பொழுது அடையும் மகிழ்ச்சி இரட்டிப்பாகக் கூடுகிறது.
தவற விடாமல் தொடர்ந்து வந்து தரும் ஊக்கத்திற்கு மிக்க நன்றி.
//நல்ல எண்ணங்கள், நல்ல நண்பர்கள், நல்ல பழக்க வழக்கங்கள், மமதை கொள்ளாமமை, பிறர் சொல்லும் நல்லனவற்றைக் காதுகொடுத்துக் கேட்டல், பிறரை வெறுத்தல் இன்மை, சுறுசுறுப்பு, பயன் கருதாத செயலூக்கம், வறுமையிலும் செம்மை என்று வாழ்க்கையை அமைத்துக் கொண்டால் போதும்.//
இந்த foundation தானே...மிகக் கடினம் :) பெரிய ஞானியும் வசமிழந்து போகிறான்.
@ Sakthiprabha
ஆமாம், அடித்தளத்திற்கு தான் சுமக்க வேண்டியவற்றைத் தாங்கும் சுமைதாங்கியாகச் செயல்பட வேண்டியிருப்பதால், அதற்கு அந்த உறுதிப்பாடு வேண்டியிருக்கிறது. அப்படியான ஒரு வல்லமையோடு அதை உருவாக்கி விட்டால் எந்த இன்னல்களுக்கும் இடிபாடுகளுக்கும் தாங்கும்.
Post a Comment