ஆன்மீகத்தின் அடுத்த கட்டத்தை நோக்கி.....
31. உயிராகிய மூளை
உடற்கூறு அறிஞர் உலகநாதன் ஆஜானுபாகுவாக உயரமாக இருந்தார். மயில்க்கண் கதர் வேஷ்டியும், மஞ்சள்நிற கதர் ஜிப்பாவும் தரித்திருந்தார். உதடுகளில் நிரந்தரமான புன்னகையொன்று குடிகொண்டிருந்தது.
அவர் மேடைக்கு வரும் பொழுது அரங்கே நிறைந்திருந்தது. அவர் குழுவினர் முன்வரிசையில் அமர்ந்திருந்தனர். பெரியவர் கிருஷ்ணமூர்த்தி மேடையேறி பேராசிரியர் உலகநாதனை அறிமுகப்படுத்தி வைத்ததும் கூட்டத்தின் எதிர்பார்ப்பு இன்னும் கூடியது.
"சகோதர, சகோதரிகளே" என்று ஆரம்பித்த உலகநாதனின் குரல் அவரது தோற்றத்திற்கு நேர்மாறாக மென்மையாக இருந்தது.
"இன்று தான் உடற்கூறு இயலின் முதல் அமர்வு. எட்டுபேர் கொண்ட எங்கள் குழுவினர் தயாரித்திருக்கும் இந்த உரையை நான் வாசித்தளிப்பதில் பெருமைப்படுகிறேன். சகோதரி நிவேதிதா அவர்களும் அவரைத் தொடர்ந்து சகோதரி பூங்குழலி அவர்களும் மிக அருமையாக தங்கள் குழுவின் ஆற்றல் மிக்க உரையை அளித்தார்கள். அவர் சமர்ப்பித்த உபநிஷதுகளின் பொக்கிஷக் கருத்துக்களை தொடர்ந்து தான் இன்றைய விஞ்ஞான பார்வையாக எங்கள் உரையைத் தொடர வேண்டும். அது தான் முறை.
"இருந்தாலும், உடற்கூறு என்று பார்க்கும் பொழுது உயிரினங்களின் உடலினுள் உள்ளேயும் வெளியேயும் இருக்கும் உடல் உறுப்புகளைக் குறிப்பனவாகவே அவை உள்ளன. அதைச் சரியாகச் சொல்ல வேண்டுமானால், உடலினுள்ளும், வெளியேயும் நமது கண்ணுக்குப்
புலப்படும் உறுப்புகளைப் பற்றிய அறிவாகவே உடற்கூறு இயல் இருக்கின்றது.
"அதனால் விஞ்ஞான நோக்குடன் ஆன இந்த உரையைத் தயாரிக்கும் பொழுது நமது வசதிக்காக இரண்டாகப் பிரித்துக் கொண்டோம். ஒரு பகுதி, கண்ணுக்குப் புலப்படும் ஆத்மாவைத் தேடும் இந்தத் தேடலுக்கு நெருங்கிய சம்பந்தம் கொண்டிருக்கும் மூச்சு மண்டலம், நரம்பு மண்டலம், சருமம் போன்றவற்றை ஒரு பகுதியாகவும், கண்ணுக்குப் புலப்படாத மனம், புத்தி, பிராணன் போன்ற அவை தொடர்பானவற்றை இரண்டாவது பகுதியாகவும் பிரித்துக் கொண்டோம்.
'இப்பொழுதே சொல்லி விடுகிறேன். முதல் பகுதியைப் பற்றியதான எங்கள் உரையாக எங்கள் சமர்ப்பித்தல் இருக்கும். இரண்டாவது பகுதியைப் பற்றி இன்னொரு குழு சொல்வார்கள்.
"அப்புறம் இன்னொரு விஷயம். நான் நீண்ட இந்த உரையைப் படித்துக் கொண்டு போகும் பொழுது, எந்த இடத்திலாவது அது தொடர்பாக உங்களுக்கு ஏதாவது ஐயப்பாடு இருந்தால் அருள்கூர்ந்து அதைக் குறிப்பிட்டுச் சொல்வீர்களே ஆனால், நான் அறிந்த அளவு தங்களுக்கு விளக்கம் அளிக்க ஏதுவாக இருக்கும். இந்த உரையாற்றலும் ஒரு கலந்துரையாடல் மாதிரி அமைந்து நமது விவாதத்திற்கு சிறப்புக் கூட்டும். இடையே இடையே டிட்பிட்ஸ் மாதிரி இந்த உடல் என்னும் இறைவன் தந்த செல்வத்தின் ஈடு இணையற்ற சிறப்பு பற்றி 'இறைவன் இருக்கின்றார்' என்கிற தலைப்பில் அவ்வப்போது என் மனத்தில் படுவதைச் சொல்கிறேன். அந்த செய்திகள் அது தொடர்பாக மேலும் நீங்கள் தகவல் சேகரிக்கவும், வியந்து மகிழவும் வாய்ப்பாக அமையும். சென்ற முறை மாதிரி அல்லாததான இந்த மாற்றத்தை நீங்கள் வரவேற்பீர்கள் என்று நம்புகிறேன்.
"'சிரசே பிரதானம்' என்பது ரொம்ப காலமாக நாம் சொல்ற ஒரு வார்த்தைத் தொடர். உடலின் ஒவ்வொரு அமைப்பும், நகம் உட்பட முக்கியமானது தான். இருந்தாலும் மிக மிக சிக்கலான அமைப்பு கொண்ட தலை பாகத்தின் சிறப்பை அடிக்கோடிட்டுச் சொல்ல இந்த வழக்கு மொழி வந்திருக்கலாம்.
"தலையின் எலும்புப் பகுதியைத்தான் கபாலம் என்கிறோம். இந்த கபாலக் குழிக்குள் மூளை பலத்த பாதுகாப்புடன் உள்ளது. தலைத் தோலுக்குக் கீழே சதை கிடையாது. பெரைடல், டெம்பொரல் என்று இரண்டுஜோடி, நெற்றிஎலும்பு, எத்மாண்டு என்று ஒன்று, பின் மண்டைக்கு ஒன்று, ஸ்டீபைய்டு என்று அங்கங்கே எலும்புப் பிடிமானம் என்று இந்தப் பகுதியில் பாதுகாப்புக்கு குறைச்சலில்லை. போதாக்குறைக்கு சில கபால எலும்புகளில் காற்றுக்குழிகள் வேறு உண்டு. நிமிர்த்தி வைத்திருக்கும் காலிப்ளவர் போலிருக்கும் மூளையைச் சுற்றி இரு மெலிதான படலங்களுக்கு இடைப்பட்ட பிரதேசத்தில் ஒரு திரவத்தின் தேக்கம் உண்டு. இது போதும்; இந்த சமயத்தில் அத்தனையும் வேண்டாம்.
"பெருமூளை, நடு மூளை, சிறு மூளை, முகுளம் இதெல்லாம் தெரிந்தவை தாம். அதனால் அவை பற்றிய நீண்ட விவரங்களும் இப்போது வேண்டாம். மூளையின் புறப்பகுதி சாம்பல் நிறத்தில் இருக்கும். இந்தக் கலருக்குக் காரணம், அங்கு படிந்திருக்கும் நியூரான்கள். உட்பகுதி நிறம் வெண்மை.
இன்னொன்று. உடலின் எந்தப் பகுதியில் காயம் ஏற்பட்டாலும் உணர்வு நரம்புகளின் மூலமாக மூளைக்குச் செலுத்தப்பட்டு அந்த வலியின் வேதனையை மூளை உணரும். ஆனால் மூளையைச் சுரண்டினால் கூட அதற்கு உணர்விருக்காது. மூளை அறுவை சிகித்சை என்றால், வலியை மறக்கடிக்க ஊசி போடத் தேவையில்லை என்பது ஒரு சுவாரஸ்யமான விஷயம்.
அனுபவம் என்கிறதைப் பற்றி நிறையச் சொன்னார்கள். செயல்பட்டதின் விவர நிகழ்ச்சிதான், அந்த உணர்வு தான் அனுபவம் என்று சொல்லலாமா?..
இந்த மாதிரியானதும், இது போன்ற நினைவுச் சங்கிலி சமாச்சாரங்களின்
சேகரிப்பு கிடங்கு தான் மூளையின் 'ஹிப்போகேம்பஸ்' பகுதி. மிக அற்புதமான பிரதேசம்.
என்னைக் கேட்டால், மனிதனின் உயிரே அவனது மூளைதான் என்பேன். அறிவுத் திறனோடு அமைந்த சிக்கலான 'சர்க்யூட்' அமைப்பு அது. தேர்ந்த கைவினைஞனால் இழைஇழையாக நரம்பு நார்களால் பின்னப்பட்ட அற்புதம்! அவ்வளவு தான் சொல்ல முடியும்.
உடம்பிலுள்ள மற்றப் பகுதிகளில் உள்ள செல்கள் உயிர்ப்பை இழப்பின், தங்களைத் தாங்களே புதிப்பித்துக் கொள்ளும் திறன் கொண்டவை; ஆனால் மூளை செல்கள் சேதம் அடைந்தால் அடைந்தது தான். அதனால் கோடிக்கணக்கான செல்களைக் கொண்டு உயிர்ப்புடன் இருக்கும் மூளைக்கு கொஞ்சம் அதிகப்படியான ஆக்ஸிஜனும் ஊட்டச்சத்தும் தேவை.
தொடர்ந்த பயிற்சிகளின் மூலம் மூளையை நன்கு பழக்கப்படுத்திக் கொண்டு ஆற்றல் மிக்க தாக ஆக்க முடியும்.
இறைவன் இருக்கின்றார்: விஞ்ஞான, துப்பறியும் உலகைச் சார்ந்தவர்களுக்கு, அவர்கள் எத்தனை தடவை மனசால் கைகுலுக்கி நன்றி சொன்னாலும், சர் பிரான்ஸிஸ் கால்டனின் கண்டுபிடிப்புக்கு தகுந்த மரியாதை செய்த திருப்தி ஏற்படாது. அப்படி கால்டன் என்னதான் கண்டுபிடித்து விட்டார்?..
உலக மக்களில் ஒருவரின் கைரேகையைப் போலவே இன்னொருவரின் கைரேகை இருக்காது என்று கண்டுபிடித்து நிரூபித்துக் காட்டியவர் கால்டன் தான். 'எந்த இரு கைரேகைகளும் ஒரே மாதிரியானவை அல்ல' என்கிற கடவுளின் ஏற்பாடு, துப்பறியும் துறைக்குக் கிடைத்த வரப்பிரசாதம்.
தந்தையின் காது மடலின் ரோம அடர்த்தி, மகனுக்கும் அதுவே. அப்பாவுக்கு கிளிமூக்கு, பையனுக்கும் டிட்டோ. அம்மாவின் உதட்டு வளைவே பையனுக்கும். இதெல்லாம் சகஜம்.
ஆனால்... ஆனால்?.. கோடானுகோடியான இந்த உலக ஜனத்தொகையில் கைகளில் அமைந்துள்ள ரேகைகள் மட்டும் ஒருத்தருக்கொருத்தர் வித்தியாசப்படும். ஆறு அங்குலத்திற்கும் குறைவான உள்ளங்கை பிரதேசத்தில், ஒன்று போல் இன்னொன்று இல்லாமல் வித்தியாசப்படுத்தி இப்படியோர் கோட்டுச் சித்திரத்தை வரைதல் எப்படி சாத்தியமாயிற்று என்பது தான் புரியாத புதிர். இது உங்களின் மேலதிக யோசனைகளுக்காக.
(தேடல் தொடரும்)
12 comments:
இனிய பொங்கல் மற்றும் புத்தாண்டு வாழ்த்துகள்
திகழ்மிளிர் said...
//இனிய பொங்கல் மற்றும் புத்தாண்டு வாழ்த்துகள்//
வாருங்கள், திகழ்மிளிர்!
தங்களுக்கும் இனிய பொங்கல் வாழ்த்துக்கள். மிக்க நன்றி.
அரிய செய்திகளை அறியத் தந்தமைக்கு நன்றிகள் ஐயா. ஒவ்வொன்றையும் நினைத்துப் பார்த்தால் பிரமிப்புதான் மிஞ்சுகின்றது.
பொங்கல் நல்வாழ்த்துகள்.
கவிநயா said...
//அரிய செய்திகளை அறியத் தந்தமைக்கு நன்றிகள் ஐயா. ஒவ்வொன்றையும் நினைத்துப் பார்த்தால் பிரமிப்புதான் மிஞ்சுகின்றது.
பொங்கல் நல்வாழ்த்துகள்.//
மிக்க நன்றி.
எல்லோருக்கும் எங்கள் பொங்கல் வாழ்த்துக்கள், கவிநயா!
மிக சுவாரஸ்யமாக தொடர் சென்று கொண்டிருக்கிறது. ஒரு மனிதனுக்கு 'மூளைச்சாவு' ஏற்பட்டால் கூட உடலில் இன்னும் உயிர் (ஆத்மா?) இருக்கிறது. ஆனால் சில சமயம் இதய மாற்று அறுவை சிகிச்சையின் போது இதயத்தின் வேலைகளை சில மணி நேரம் இயந்திரம் (heart lung machine) செய்கிறது. அப்போது அந்த ஆத்மா உடலில் எங்கே தான் இருக்கிறது?
Expatguru said...
//மிக சுவாரஸ்யமாக தொடர் சென்று கொண்டிருக்கிறது. ஒரு மனிதனுக்கு 'மூளைச்சாவு' ஏற்பட்டால் கூட உடலில் இன்னும் உயிர் (ஆத்மா?) இருக்கிறது. ஆனால் சில சமயம் இதய மாற்று அறுவை சிகிச்சையின் போது இதயத்தின் வேலைகளை சில மணி நேரம் இயந்திரம் (heart lung machine) செய்கிறது. அப்போது அந்த ஆத்மா உடலில் எங்கே தான் இருக்கிறது?//
சுவாரஸ்யமான ரசனைக்கு மிகவும்
நன்றி, குரு!
'இந்த ஆத்மா உடலில் எங்கே தான் இருக்கிறது?'-- இது தானே உங்கள்
கேள்வி?.. கொஞ்சம் பொறுங்கள்..
உயிரியல் அறிஞர், மனவியல் பேராசிரியர்கள், உபநிஷதுகளைப் பற்றி உரையாற்ற இருக்கிறவர்கள் என்று இவர்களில் யாராவது சொல்லாமலாப் போய் விடப்போகிறார்கள்?...
அருள் கூர்ந்து கொஞ்சம் பொறுங்கள்..
பல விஷயங்களை..விஞ்ஞான ரீதியாக விபரமாக விளக்கியிருக்கிறீர்கள்..
உதாரணத்துக்கு..
//ஆனால் மூளையைச் சுரண்டினால் கூட அதற்கு உணர்விருக்காது. மூளை அறுவை சிகித்சை என்றால், வலியை மறக்கடிக்க ஊசி போடத் தேவையில்லை என்பது ஒரு சுவாரஸ்யமான விஷயம்.//
உண்மையிலேயே சுவாரஸ்யமான விஷயம்தான்..
பாச மலர் said...
//பல விஷயங்களை..விஞ்ஞான ரீதியாக விபரமாக விளக்கியிருக்கிறீர்கள்..//
வருகைக்கும் பாராட்டுக்கும் மிக்க நன்றி, பாசமலர்!
உடற்கூறில் சுவாரஸ்யமான விஷயங்கள் நிறைய இருக்கின்றன.
தொடர்ந்து பலவற்றைச் சொல்ல முயற்சிக்கிறேன்.
"உலக மக்களில் ஒருவரின் கைரேகையைப் போலவே இன்னொருவரின் கைரேகை இருக்காது என்று கண்டுபிடித்து நிரூபித்துக் காட்டியவர் கால்டன் தான். 'எந்த இரு கைரேகைகளும் ஒரே மாதிரியானவை அல்ல' என்கிற கடவுளின் ஏற்பாடு, துப்பறியும் துறைக்குக் கிடைத்த வரப்பிரசாதம்." ஏற்கனவே அறிந்த செய்திதான் ஆனாலும் சொல்லியிருக்கும் விதம் ஒரு மெல்லிய அதிர்வையும் வியப்பையும் ஏற்படுத்துகிறது.
கிருத்திகா said...
'எந்த இரு கைரேகைகளும் ஒரே மாதிரியானவை அல்ல' என்கிற கடவுளின் ஏற்பாடு, துப்பறியும் துறைக்குக் கிடைத்த வரப்பிரசாதம்."
//ஏற்கனவே அறிந்த செய்திதான் ஆனாலும் சொல்லியிருக்கும் விதம் ஒரு மெல்லிய அதிர்வையும் வியப்பையும் ஏற்படுத்துகிறது.//
அறிந்த செய்திகள் கூட அந்தந்த அதற்கேற்பவான சந்தர்ப்பங்களில்
மீண்டும் நினைவுகளில் மீட்டிப் பார்ப்பது சில நேரங்களில் சில விஷய சேகரிப்புகளினால் புதிதான கருத்துக்களைக் கொடுப்பதுண்டு.
சாதாரணமாக நினைக்கும் சில செய்திகள் அசாதாரணமாகிப்போவதும் உண்டு.
இந்த தகவல் இரண்டாவது வகை.
நினைக்க நினைக்க இந்த ரேகை சமாச்சாரம் எனக்கு இன்னும் வியப்பாகத்தான் இருக்கிறது.
அடுத்த நொடியில் பிறக்கும் ஒரு குழந்தைக்குக் கூட ரேகையில் முந்தைய படிமம் இல்லாத ஒரு சின்ன வேறுபாடு! அந்த கையளவே ஆன அரை அடிக்கும் குறைவான பிரதேசத்தில் எப்படி இந்த மாறுதலைக் கொண்டு வரமுடியும் என்று நினைத்துப் பார்க்க பார்க்க
வியப்பாகத் தான் இருக்கிறது.
எந்த கணக்குக்கும் சிக்காத அதிசயம் இது!
உணர்வு பூர்வமான பகிர்தலுக்கு நன்றி, கிருத்திகா!
தெரியாத நிறைய விஷயங்கள் தெரிந்துகொள்ள ஏதுவாய் இருக்கிறது கட்டுரை. 'மிகுந்த நன்றி' என்னும் சொற்கள் போதாது.
////உயிரியல் அறிஞர், மனவியல் பேராசிரியர்கள், உபநிஷதுகளைப் பற்றி உரையாற்ற இருக்கிறவர்கள் என்று இவர்களில் யாராவது சொல்லாமலாப் போய் விடப்போகிறார்கள்?... ///
காத்திருக்கிறேன்.
////உயிரியல் அறிஞர், மனவியல் பேராசிரியர்கள், உபநிஷதுகளைப் பற்றி உரையாற்ற இருக்கிறவர்கள் என்று இவர்களில் யாராவது சொல்லாமலாப் போய் விடப்போகிறார்கள்?... ///
//காத்திருக்கிறேன்.//
காத்திருத்தலுக்கு மிக்க நன்றி.
விரைவாகச் செல்ல வேண்டுமென்று நினைத்தாலும் நிதானமாகச் செல்ல வேண்டியிருக்கிறது.
தொடர்ந்த வருகைக்கும், பின்னூட்ட பரிமாறல்களுக்கும் கூடுதலான நன்றி.
Post a Comment