ஆன்மீகத்தின் அடுத்த கட்டத்தை நோக்கி....
32. பேப்பர் பையன் கதை
ஊஞ்சல் பலகை நன்கு இழைக்கப்பட்டு மழமழவென்றிருந்தது. லேசாக அசைக்கையில், 'நான் இருக்கேன்'னு கிரீச்சிடாமல் பலகையோடு பூட்டிய சங்கிலி மெளனமாக அசங்கி, பராமரிப்பின் நேர்த்தியைச் சொன்னது.
காலை ஊன்றி அமர்ந்திருக்கும் பலகையை கொஞ்சம் பின் தள்ளி உந்தி விசைக்கொடுத்து அழுத்திக் காலை எடுக்கையில் லேசாகப் பின்னே போய், அதே வேகத்தில் மேலும் கீழும் போனால் தான் அது ஊஞ்சல். நிலையாக பிணைத்திருக்கும் சங்கிலியில் தொங்கியபடிக் கிடந்தால் வெறும் தொங்கு பலகைதான். அவ்வப்போதுள்ள நிலைமைகளுக்கேற்ப உச்சம் போயும் தாழ்ந்தும் உணர்வுகளை வெளிப்படுத்தும் உறவுகளும் ஊஞ்சலைப் போன்றதே என்று சிவராமன் நினைத்துக் கொண்டார்.
மாலுவின் அப்பா சுந்தரேசனும், கிருஷ்ணமூர்த்தியின் அம்மா ஜானகியும் அண்ணன்-தங்கைகள். இவர்களின் மூத்த அக்கா பார்வதியின் பிள்ளைதான், கிருஷ்ணமூர்த்தியின் அண்ணா வைத்தீஸ்வரன். அண்ணா என்றால் ஒன்று விட்ட அண்ணா. சுந்தரேசனின் பெரிய பெண் சீதாலஷ்மிதான் கிருஷ்ண மூர்த்தியின் மன்னி. எல்லாம் ஒன்றுக்குள் ஒன்றான சம்பந்தம். அதனால் உறவு விட்டுப் போகாமல் மாமா-மாமா பெண்-மச்சினன் என்று கெட்டிப்பட்டிருந்தது.
மாலுவின் கணவர் சிவராமன் மட்டும் வெளி குடும்பத்தவர். பெரியவர்கள் யாரும் இப்போது உயிரோடு இல்லாமையால் அவர் தான் இந்த இரண்டு குடும்பத்திற்கும் இப்போதைக்குப் பெரியவர்.
சிவராமனுக்கு சொந்த ஊர் சேலம். சேலம் அம்மாப்பேட்டை. அவர் குடும்பத்தில் அப்பா- அப்பாவுக்கு அப்பா என்று வழிவழியாக தலைமுறையில் ஒருத்தர் எப்படியோ வைதீகராய் அமைந்துபோவது விசேஷம்.
சிவராமன் படிப்பில் படுசுட்டி. ஸ்கூல் பைனல் வரை முதல் ரேங்கைத் தவற விட்டதில்லை. எக்ஸ்ட்ராகரிகுலர் ஆக்ட்டிவிடீஸ் வேறே-- பேச்சுப்போட்டி, கவிதைப்போட்டி,நாடகம் என்று-- எக்கச்சக்கம். தான் படித்த பாரதி வித்தியாலயா பள்ளியின் பதாகையைத் தாழவிட்டுவிடாமல் மாவட்டம் பூராவும் தூக்கிப் பிடித்தவன்.
சிவராமன் எஸ்.எஸ்.எல்.ஸி. முடித்ததும், "என்னடா செய்யப்போறே?.. பி.எஸ்ஸி., படிக்கறையா?" என்றார் அப்பா ராமசுப்பு. இதோடு பையனின் படிப்பு முடங்கிப் போய்விடக்கூடாதென்ற தவிப்பு அவருக்கு.
"நேத்திக்கு சாயரட்சை ராஜகணபதி கோயிலுக்குப் போயிருந்தேன், அப்பா" என்று நேரடியாக அப்பாவை நிமிர்ந்து பார்க்காமல் தலை கவிழ்த்துச் சொன்னான் பிள்ளை.
"சொல்லு. வழக்கமா போறது தானே"
"பிள்ளையாரைக் கும்பிட்டு இதுக்கு மேலே என்ன செய்யறதுன்னு ஒரு வழிகாட்டப்பான்னு வேண்டிண்டேன்."
"ம்."
"விபூதி இட்டுண்டு வெளிலே வந்தா, பக்கத்து 'கலைவாணி நியூஸ் மார்ட்'லே ஒரு போர்ட் மாட்டியிருந்தா."
"ம்." பையன் என்ன சொல்லப் போகிறான் என்கிற ஆவல் அவருக்கிருந்தது.
"காலம்பற வீடு வீடா பேப்பர் போடற பையன் வேணுமாம். முதல் அக்கிரஹாரம், மேட்டுத்தெரு, டவுன் ஸ்டேஷன் பக்கம், இரண்டாவது அக்கிரஹாரம்ன்னு அம்பது-அறுபது வீடு தேறுமாம். கொஞ்சம் வார,மாச சஞ்சிகைகளையும் சேர்த்துப் போடணும். மாசம் முப்பது ரூபா தருவாராம். சரியாப்பா."
"சரியான்னு இப்படி மொட்டையாக் கேட்டா?.. நான் சொல்றது இருக்கட்டும். நீ என்ன நெனைக்கறே?" என்று பையனை நேரடியாகக் கேட்டார் ராமசுப்பு.
"காலம்பற அஞ்சு மணிக்கு ஆரம்பிச்சா, ஆறு ஆறரைக்கு முடிஞ்சிடும்ப்பா. செய்யலாம்னு நெனைக்கறேன்."
"படிக்கற வயசிலே, 'வேலை'ங்கறது கொடுமைப்பா. அப்புறம் புத்தி அப்படியே போயிடும். உன்னை மேலே மேலே படிக்கவைச்சு ஆபிஸரா பாக்கணும்ங்கறது என்னோட ஆசை."
"----------------"
"சுகவனேஸ்வரர் கோயில்லே புஷ்பப்பல்லக்கு இல்லையோ?.. சுவாமி கும்பிட ஜெயராம மாமா வந்திருந்தார். காலேஜ் அட்மிஷனுக்கு அப்ளிகேஷன் கொடுக்கறளாம். வாங்கிப் போடச்சொன்னார்."
"நேத்திக்கு மத்தியானம் அதான்'பா வேலை. போய் வாங்கிண்டு வந்திட்டேன்"என்று மேஜை இழுப்பறையைத் திறந்து பையன் காலேஜ் அட்மிஷன் அப்ளிகேஷன் பாரம்காட்ட தந்தையின் முகம் மலர்ந்தது.
"படவாப் பயலே--" என்று சந்தோஷம் வந்தால் வழக்கமாய்ச் சொல்லும் வார்த்தையைச் சொல்லிச் சிரித்தார். "பின்னே எதுக்கு இந்த பேப்பர் போடற வேலையெல்லாம்?"
"டைப்ரைட்டிங், ஷார்ட் ஹேண்ட், புக்கீப்பிங் இதெல்லாம் தெரிஞ்சிருந்தா எல்லாத்துக்கும் கைகொடுக்கும்'பா.. அதெல்லாம் படிக்கத்தான் இது."
பையனின் சூட்டிகை தந்தைக்குப் பிடித்திருந்தது. இருந்தாலும் நாலு பக்கம் கவனம் போனால், முக்கியமான படிப்பு பாதிக்குமோ என்கிற பயமும் கூடவே இருந்தது.
"என்னப்பா--"
"இல்லே, எல்லாத்லேயும் தலை கொடுக்க ஒன்னாலே முடியுமான்னு யோசிக்கறேன்."
"முடியும், அப்பா.. மேல்நாட்லேலாம் அப்படித்தானாம். படிக்கறச்சேயே ஒழிஞ்ச நேரத்லே ஏதாவது வேலை செய்வாளாம்.. படிச்சேன்."
"செய்யறது நல்லது தான்; ஒரு பொறுப்பு வரும்ங்கறது சரிதான். ஆனா ஒன்னாலே முடியுமா? அதை நீதான் சொல்லணும். என்ன சொல்றே?"
"முடியும், அப்பா."
"சரி. செய்.." என்று அனுமதி அப்பா வழங்கினார். "படிப்பு தான் முக்கியம். அதுக்கு குந்தகம் இல்லாம் வச்சுக்கோ. அப்படி அதுக்கு இடைஞ்சல்னா பேசாம எல்லாத்தையும் விட்டுடணும். தெரிஞ்சதா?"
"சரி, அப்பா."
ராமசுப்பு சாஸ்திரிகளுக்கு பையனைப் பார்க்கப் பாவமாக இருந்தது. நாலரை மணிக்கு அலாரம் வைத்து எழுந்தானானால், முகம் கழுவி உடைமாற்றிக் கொள்வதற்குள்,அவனோடையே எழுந்திருக்கும் அவன் அம்மா சிவகாமி, டிகாஷன் இறக்கி ஒரு கப் காப்பியோடு ரெடியாகி விடுவாள்.
சைக்கிளைத் தள்ளிக்கொண்டு கிளம்பினானால், திரும்புகிற வரையில் அந்த காப்பி தாங்கும். ஆறு மணிக்கு சாஸ்திரிகள் சந்தியாவந்தனம் பண்ணிக் கொண்டிருக்கையில் சரியாகத் திரும்பி விடுவான். அத்திப்பூத்தாற்போல் என்றாவது பேப்பர் வேன் டிலே ஆகி விட்டதென்றால், காலேஜ் கிளம்புவதற்குள் சிவராமன் அந்த தாமதத்தையும் சரிபண்ணிக் கொண்டு விடுவான்.
ராஜகணபதி கோயிலுக்கும், வில்வாத்ரி பவன் ஹோட்டலுக்கும் நடுவே இருக்கும் சிமிண்டு பாவிய தரையில் தான் வேன்களிலிருந்து இறக்கி வைத்த பேப்பர்கட்டுகள் மலையாகக் குவிந்து கிடக்கும். சிவராமன் வந்துவிட்டால், பேப்பர்கட்டுகளைப் பிரித்து அடுக்கும் அத்தனை பேருக்கும் டீம் லீடர் வந்துவிட்டமாதிரி குஷி! பரபரவென்று செயல்படும் சிவராமனின் வேகம் அந்தக் குழுவினரிடையே பிரச்சித்தி பெற்றது.
ஆங்கில, தமிழ் தினசரிகளைத் தனியே பிரித்துக் கொண்டார்களானால், ஒரு தினசரிக்கு இரண்டு பேர். பக்கம் பார்த்து சேர்ப்பது, தனிப் பண்டிலாக வரும் சப்ளிமெண்டுகளை தனியாகப் ஒவ்வொரு பேப்பரிலும் நுழைப்பது என்று வேலை பெண்டு வாங்கும். அரைமணி நேரத்தில் அவ்வளவையும் நேர்பண்ணி சைக்கிள் கேரியரில் தன்னதைத் தூக்கி வைத்துக் கட்டி கிளம்பிவிடுவான் சிவராமன். முக்கிய செய்திகள் ஏதாவது இருந்தால், அடுக்கும் பொழுதே மேலோட்டமாகப் பார்த்துவிடுவான். மொத்தத்தில் இந்த வேலை சிவரமனுக்கு ரொம்பவும் பிடித்திருந்தது; மனசுக்கு சந்தோஷமாகவும் இருந்தது.
"என்ன அப்படியே உட்கார்ந்திட்டேள்?..குளிக்கலையா?" என்று மாலினியின் குரல் அருகே கேட்டதும் தான் தலையைக் குலுக்கிக்கொண்டு நனவுலகுக்கு வந்தார் சிவராமன்.
"ம்.. என்ன கேட்டே?"
"சரிதான் போங்கோ... பாத்ரூம் காலியா இருக்கு. குளிக்கப் போகலையான்னு கேட்டேன்" என்றாள் மாலினி.
"இதோ--" என்று சிவராமன் எழுந்திருக்கையில், "அத்திம்பேர்! ஒரு டோஸ் காப்பி சாப்பிடறேளா?.. புதுசா டிகாஷன் இறக்கியிருக்கேன்" என்றபடியே வந்தாள் ராதை.
"பேஷா--" என்று எழுந்த சிவராமன் மீண்டும் உஞ்சலிலேயே அமர்ந்தார்.
(தேடல் தொடரும்)
8 comments:
சுவாரஸ்யமா இருக்கு. ஆனா அத்தியாயம் மாத்தி போட்டிருக்கீங்களோன்னு ஒரு சந்தேகம் இருக்கு சரிதானா.....
கிருத்திகா said...
//சுவாரஸ்யமா இருக்கு. ஆனா அத்தியாயம் மாத்தி போட்டிருக்கீங்களோன்னு ஒரு சந்தேகம் இருக்கு சரிதானா.....//
இல்லை. ஒரு சின்ன மாறுதல். அவ்வளவுதான்.
சதஸூக்கான பேப்பர்கள் சமர்ப்பிக்கும் அறிஞர்களின் கருத்துக் குவியலகள் ஒரு அத்தியாயம் என்றால் அடுத்த அத்தியாயம் தொடரும் கதைப் பகுதியும் அதற்கடுத்து சதஸூக்கான கருத்துக்கள் என்று இனி வரும்.
உதாரணமாக 30-வது அத்தியாயத்தின் தொடர்ச்சி 32-லும், 31-ம் அத்தியாயத்தின் தொடர்ச்சி 33-லும் வரும். இதனால் தொய்வடையாமல்
தொடர்ச்சியான போக்கு மேலும் சுவாரஸ்யத்தைக் கூட்டும் என்பதால் இந்த ஏற்பாடு.
தொடர்ந்து தொடர்வதற்கு மிக்க நன்றி, கிருத்திகா!
ம்.. அப்புறம்?
ஜீவி,
இதையும் படித்தேன்.(தி.ஜா/லா.சா.ரா/எஸ்.வி.வி ஞாபகம் வந்தது) சில பழைய சிறு கதைகளையும் படித்தேன்.எழுத்து நன்றாக இருக்கிறது.ஓட்டமும்(flow)
நன்றாக இருக்கிறது.உத்திகள் கொஞ்சம் நவீனப் படுத்தலாம்.
//விதம் விதமாகக் கதை சொல்லும் பாணிக்கும், எழுத்து நடைக்கும் முக்கியத்துவம் கொடுக்கும் அத்தனை எழுத்தாளர்களையும் பிடிக்கும்//
என் வலைப் பூக்கு வந்து என் (லேட்டஸ்ட் கதை: “சலூன்”,
”கங்கை சொம்பு” மற்றும் சில கதை
படித்து என் நடையைப் பற்றி வாழ்த்தலாம் அல்லது சாத்தலாம்.
நன்றி சார்.
கவிநயா said...
ம்.. அப்புறம்?//
சுவாரஸ்யமாக இருக்கிறது என்பதை
'ம்..அப்புறம்' என்று இரண்டே வார்த்தைகளில் அடக்கி விட்டீர்கள்,
போலும். தொடர்ச்சியை வந்து படித்து விடுங்கள், கவிநயா!
நீண்ட இடைவெளிக்கு வருந்துகிறேன்.
கே.ரவிஷங்கர் said...
ஜீவி,
இதையும் படித்தேன்.(தி.ஜா/லா.சா.ரா/எஸ்.வி.வி ஞாபகம் வந்தது) சில பழைய சிறு கதைகளையும் படித்தேன்.எழுத்து நன்றாக இருக்கிறது.ஓட்டமும்(flow)
நன்றாக இருக்கிறது.உத்திகள் கொஞ்சம் நவீனப் படுத்தலாம்.
//விதம் விதமாகக் கதை சொல்லும் பாணிக்கும், எழுத்து நடைக்கும் முக்கியத்துவம் கொடுக்கும் அத்தனை எழுத்தாளர்களையும் பிடிக்கும்//
என் வலைப் பூக்கு வந்து என் (லேட்டஸ்ட் கதை: “சலூன்”,
”கங்கை சொம்பு” மற்றும் சில கதை
படித்து என் நடையைப் பற்றி வாழ்த்தலாம் அல்லது சாத்தலாம்.
நன்றி சார்.//
வாருங்கள், ரவி!
தங்கள் முதல் வருகைக்கும், கருத்துக்களுக்கும் மிக்க நன்றி.
தமிழ் எழுத்துலகின் ஜாம்பவான்களைப் பற்றிக் குறிப்பிட்டிருக்கிறீர்கள். ஒவ்வொருவரும் வெவ்வேறு வகையான எழுத்துக்களுக்குச் சொந்தக்காரர்கள். ஆயினும், இவர்களின் எழுத்துக்களில் இருந்த ஒரே ஒன்றுமை--இவர்களின் எழுத்துக்களில் ஜீவன் இருந்தது.
இவர்கள் மாதிரியான தமிழ் எழுத்துலகில் சாதித்த இன்னும் நிறைய படைப்பாளிகளைப் பற்றி எனது 'எழுத்தாளர்கள்' பகுதியில் எழுதவிருக்கிறேன். இந்த 'ஆத்மாவைத் தேடி' தொடர் முடிந்த பிறகு தான் மற்றவற்றில் கவனம் செலுத்த வேண்டும்.
நீங்கள் குறிப்பிட்டிருந்தவற்றைப் படிக்கிறேன். நிச்சயம் அவை பற்றி எழுதுகிறேன். படைப்புக்களின் நிறைவுகள் பற்றி மட்டுமே எழுதி பழக்கப்பட்டவன் ஆதலால், விமரிசன நோக்கில் எதையும் எழுத நான் தயங்குவதுண்டு. எழுத்தின் செழுமை என்பது எழுதுபவர்கள் எழுதி எழுதி தொடர்ந்த பயிற்சியின் அடிப்படையில் கைவரப் பெறவேண்டிய ஒன்று. எழுத எழுத திருப்தி ஏற்படாது. திருப்தி ஏற்பட்டுவிட்டால் எழுதுபவன் எழுதுவதை நிறுத்திக் கொள்ளலாம். அப்படி நிறுத்திக் கொண்டவர்களும் உண்டு.
எந்தக் கலைப்படைப்பும் படைப்பவனின் ஆத்ம உணர்வுகளின் வெளிப்பாடே என்பதால் இது 'கூடும்-கூடாது' என்கிற விமரிசனங்களுக்கு அப்பாற்பட்டவையே. அதற்காக எதையுமே விமர்சிக்கக் கூடாது என்றும் இல்லை. ஒரு கலைப்படைப்பைக் குறித்த நல்ல விமரிசனம் என்பது, அதை விட மேலான ஒரு படைப்பைப் படைத்துக் காட்டுவதே. இது சிற்பம், ஓவியம், கதை, கவிதை என்று அத்தனை லலித கலைகளுக்கும் பொருந்தும்.
அடிக்கடி வாருங்கள். நிறைய எழுதுங்கள், ரவி!
//அவ்வப்போதுள்ள நிலைமைகளுக்கேற்ப உச்சம் போயும் தாழ்ந்தும் உணர்வுகளை வெளிப்படுத்தும் உறவுகளும் ஊஞ்சலைப் போன்றதே என்று சிவராமன் நினைத்துக் கொண்டார்.//
அழகாய் எழுதியிருக்கீங்க. உறவு மட்டுமல்ல, உச்சியும் தாழவும் செல்வது நம் மனமும் அதன் உணர்வுகளும் கூடத்தானே. Highs and lows of mind fluctuations.
ராஜகணபதி கோவில் சுகவனேஸ்வரர் கோவில் எல்லாம் என்னை சிறுவயதிற்கு இட்டுச்சென்றது. எங்கள் அம்மாவின் ஊர் சேலம். விடுமுறையின் போது சேலம் சென்ற நினைவுகள் இன்னும் நிறைந்திருக்கிறது.
தொடருங்கள்
Shakthiprabha said...
//அவ்வப்போதுள்ள நிலைமைகளுக்கேற்ப உச்சம் போயும் தாழ்ந்தும் உணர்வுகளை வெளிப்படுத்தும் உறவுகளும் ஊஞ்சலைப் போன்றதே என்று சிவராமன் நினைத்துக் கொண்டார்.//
//அழகாய் எழுதியிருக்கீங்க. உறவு மட்டுமல்ல, உச்சியும் தாழவும் செல்வது நம் மனமும் அதன் உணர்வுகளும் கூடத்தானே. Highs and lows of mind fluctuations.//
உள்மன சலனத்தின்--வாட்டத்தால் சுருங்கிய, அல்லது மகிழ்ச்சியால் மலர்ந்த-- வெளிப்பாடு தானே உணர்வுகள்?.. மனத்தின் உறவல்லாத உணர்வுகள் சாத்தியமில்லை என்று நினைக்கிறேன்.
உணர்வற்ற எந்த செயலும் மணமற்ற
காகிதப்பூ போலவும் தோன்றுகிறது.
நல்ல உணர்வுகளைச் சுட்டுப் பொசுக்குவது போல தண்டனை மனிதனுக்கு வேறு எதுவுமில்லை.
//ராஜகணபதி கோவில் சுகவனேஸ்வரர் கோவில் எல்லாம் என்னை சிறுவயதிற்கு இட்டுச்சென்றது. எங்கள் அம்மாவின் ஊர் சேலம். விடுமுறையின் போது சேலம் சென்ற நினைவுகள் இன்னும் நிறைந்திருக்கிறது.
தொடருங்கள்//
அப்படியா?.. ரொம்ப சந்தோஷம்!
'அம்மாவின் ஊர்' என்கிற் உரிமைக்கும் உற்சாகத்திற்கும் இருக்கும் மதிப்பே தனிதான்!
சேலம்!-- நினைவுகளை நினைத்துப் பார்த்தாலே அந்த ஊர் மாம்பழம் மாதிரி தித்திக்கிறது! ஒவ்வொன்றாகப் பகிர்ந்து கொள்ள வேண்டும்.
Post a Comment