Friday, February 27, 2009

ஆத்மாவைத் தேடி....35

ஆன்மீகத்தின் அடுத்த கட்டத்தை நோக்கி.....

35. காற்றுக்கென்ன வேலி?

அந்தக் காலை அமர்வின் போது உடற்கூறு இயல் அறிஞர் உலகநாதன் வெகு உற்சாகமாக இருந்தார். 'பளிச்'சென்றிருந்த கதர் உடைகள் அவருக்கு மிகவும் பொருத்தமாக இருந்தன. அரங்கில் அமர்ந்திருந்தவர்களை தீர்க்கமாக ஒரு சுற்று பார்த்து விட்டு தனது உரையைத் தொடர்ந்தார் அவர்.

"இரண்டு கண்களைப் போலவே இரண்டு நுரையீரல்கள் நமக்கு. மார்புக் கூட்டுக்குள் பக்கத்திற்கு ஒன்றாக இடது பக்கமும், வலது பக்கமும் தேன்கூடு தோற்றத்தில் அமைந்திருக்கின்றன. இவற்றிற்கு நடுவே கிளைத்தண்டு மாதிரி மூச்சுக்குழல். நாலாவது மார்பு முள்ளெலும்பு பகுதியில் இந்த மூச்சுக்குழலும் இரு கிளைகளாகப்பிரிகிறது. இடதை விட வலது பக்க கிளைக்குழல் சற்று குட்டையாகவும் அகலமாகவும் இருக்கும்.

"ஒவ்வொரு நுரையீரலிலும் கோடிக்கணக்கான குட்டி குட்டி பலூன் போன்ற காற்று நுண்ணறைகள் உண்டு. இவை எந்நேரமும் சுருங்கி விரிந்து கொண்டிருக்கும். இவற்றை இரத்த தந்துகிகள் சூழ்ந்துள்ளன; இதய தமனிகளோடும், சிரைகளோடும் இவற்றிற்கு இணைப்பு உண்டு. நுரையீரல்களைச் சுற்றி டிரேசிங் பேப்பர் மாதிரி புளூரா என்னும் உரை உண்டு. இந்த புளூராவின் உட்பக்கம் நுரையீரல்களை ஒட்டியும், வெளிப்புறம் மார்பின் உட்பக்கமும், உதரவிதானத்தோடும் பொருந்தி உள்ளது.

"ஓக்கே. இப்பொழுது வெளிக்காற்று உள்ளே போய் ஏகப்பட்ட மாற்றங்கள் அடைந்து வெளிவரும் அதிசயத்தைப் பார்க்கலாம்.

"மூக்கின் வழியாக உள்ளே செல்லும் வெளிக்காற்று, நுரையீரலில் காற்று நுண்ணறைகளை நிரப்புகிறது. கரியமிலவாயு நிறைந்த அசுத்த இரத்தம் நுரையீரல்களை சூழ்ந்துள்ள இரத்த தந்துகிகளில் ஓடிக்கொண்டிருக்கும். அதனால் கார்பன்-டை-ஆக்ஸைடும், நீராவியும் காற்று நுண்ணறைச் சுவரை ஊடுருவி அவற்றுள் நுழையும். நுழையும் அசுத்தக்காற்று அந்த இடத்தை ஆக்கிரமிக்க, ஏற்கனவே நுரையீரல் நுண்ணறைகளில் சிறைப்படுத்தப் பட்ட வெளிக்காற்றிலுள்ள ஆக்ஸிஜன் அங்கிருந்து தப்பி தந்துகிகளை அடைகிறது. இரத்தத்தில் தங்கியிருக்கும் ஹிமோகுளோபின், ஆக்ஸிஜனை இழுத்து இரத்தத்தில் சேர்த்துக்கொள்ளும். இப்பொழுது வெளிசுவாசம் ஏற்பட, காற்று நுண்ணறையில் சிறைப்பட்டிருக்கும் கார்பன்-டை-ஆக்ஸைடு கலந்த காற்று மூக்குப்பகுதிக்கு வந்து வெளியேறிவிடும். மாற்றி மாற்றி உட்சுவாசமும் வெளிசுவாசமும் நடைபெறுவதால், இரத்தத்தில் ஒருபக்கம் ஆக்ஸிஜன் சேர, மறுபக்கம் கார்பன்-டை-ஆக்ஸைடு வெளியேற்றப்படுகிறது.

"மேலோட்டமாகப் பார்க்கும் பொழுது இந்த சுவாச சமாச்சாரம் சாதாரணமான ஒரு நிகழ்ச்சியாகத் தான் தெரியும். பல விஷயங்கள் வெகு சாதாரணமாகத் தோற்றமளிப்பதாலேயே அவற்றின் அசாதாரணத் தன்மையை அறிய முடியாத மயக்கம் ஏற்படுகிறது. நம்மைக் கேட்டுக் கொள்ளாமல் தூங்குகிறோமோ, விழித்துக் கொண்டிருக்கிறோமோ, ஏதாவதொரு வேலையில் முழுக்கவனத்தையும் செலுத்தி முனைப்பாக புற உலகை மறந்து ஈடுபட்டிருக்கிறோமோ எதைப்பற்றியும் சட்டைசெய்யாமல் தொடர்ந்து சுவாசம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

"சுவாசம் என்பது மெயின் சுவிட்ச் மாதிரி. இது ஆஃப் ஆனால், ஆட்டம் குளோஸ். சட்சட்டென்று கதவு மூடுகிற மாதிரி, மூளையில் ஆரம்பித்து கணுக்கால் வரை ஒவ்வொரு உறுப்பும் தன் வேலையை நிறுத்திக் கொண்டு விடும். ஆக எல்லா உணர்வுகளின் உயிர் நிலையும் இந்த சுவாசம் தான்; சரியாகச் சொல்ல வேண்டுமென்றால், இரத்தத்துடன் கலக்கும் இந்த ஆக்ஸிஜன் தான். அதனால் தான், வெளி பூராவும் வியாபித்திருக்கும் பரம்பொருளின் அம்சமாக உள்ளுக்குள் நீக்கமற நிறைந்திருக்கும் இந்த ஆக்ஸிஜன் தான், நாம் தேடும் ஆத்மாவோ என்று கூட எனக்குத் தோன்றுகிறது" என்று சொல்லி லேசாகச் சிரித்தார் உலகநாதன்.

அவர் சொல்வதின் தாத்பரியத்தைப் புரிந்து கொண்டு சபையே அமைதியில் அவரை உன்னிப்பாகப் பார்த்தது.

இந்த நேர்த்தில் தான் கணிமப்பொருள் ஆராய்ச்சியாளர் சுந்திரமூர்த்தி எழுந்திருந்தார். எழுந்திருந்தவர் மிக பவ்யமாக, "குறுக்கிடலுக்கு மன்னிக்கவும். எனக்கு ஒருசந்தேகம்--" என்றார்.

"தாராளமாகச் சொல்லுங்கள்" என்று இரு கைகளையும் பரக்க விரித்தார் உலகநாதன்.

"நம்மைச் சுற்றிலும் காற்று, காற்று, காற்றுதான்! எங்கும் நீக்கமற நிறைந்திருக்கும் பொருள் காற்று தான். நம்மைத் திக்குமுக்காட வைக்கும் அளவுக்கு காற்றுதான். வெளிக்காற்று வேகத்துடன் உள் நுழைந்தால் அத்தனை உயிர்களின் நுரையீரல்களுமே வெடித்து விடும் அளவுக்கு காற்று தான். இதில் தேவையான கொஞ்சூண்டுஅளவான காற்று-- இந்த அளவு கூட ஆளுக்கு ஆள் மாறுபடும் இல்லையா-- எப்படி நம்மை சிரமப்படுத்தாமல், நிலைகுலைய வைக்காமல் சுவாசமாக உள்நுழைகிறது என்பதை அறிந்து கொள்ள ஆசை. இன்னொன்று.. நம்பர் டூ. வெற்றுவெளியில், காற்று அடைக்கப்படாத ஒரு பலூனை நீட்டிப்பிடித்தால் கூட அதன் உள்ளே தானே காற்று நிரம்பாது இல்லையா?.. அது எப்படி எந்த பிரயாசையோ, பிரயத்தனமோ இல்லாமல் சுவாசம் மட்டும் நிகழ்ந்து, காற்று உட்சென்று, நுரையீரல் காற்று நுண்ணறைகளை நிரப்புகிறது என்று தெரிந்து கொள்ள ஆசை" என்றார் சுந்திரமூர்த்தி.

"நல்ல கேள்விகள். ஒரு தேர்ந்த நுணுக்கமான் படைப்பின், படைப்பாளியின் பெருமையைச் சொல்லும் சாகசங்கள் இவை" என்று தொடர்ந்து பேச தொண்டையைக்கனைத்துக் கொண்டார் உலகநாதன்.

இறைவன் இருக்கின்றார்

நீரில் வாழும் மீன்கள் நிலத்திற்கு வந்தால் சுவாசிக்கத் திணறி இறந்து விடுகின்றன. நீரில் இருக்கையில் நீரில் கரைந்திருக்கும் ஆக்ஸிஜனை செவுள்கள் மூலம் சுவாசித்து இரத்தக்குழாய்களில் தேக்கி, பிரித்து, சேகரித்து உயிர் வாழ்கின்றன. நீரில் கரைந்திருப்பதை விட தரைக்காற்றில் ஐந்து மடங்கு ஆக்ஸிஜன் அதிகம் இருந்தும்அவற்றால் சுவாசிக்க முடியாது.
ஆனால் தரையில் யானையும் மனிதனும் ஒரே அளவு கனபரிமாணமுள்ள காற்றை சுவாசிக்க முடிகிறது. ஒட்டுமொத்தக் காற்றை உள்ளிழுக்கும், வெளிவிடும் திறன் வேண்டுமானால் வேறுபடலாம்.

இன்னொரு விஷயம். பலத்த வெளிமூச்சுக்குப் பின் கூட நுரையீரல்களில் சிறிதளவு காற்று தேங்கியிருக்கும்.

கர்ப்பத்தில் இருக்கும் சிசுவுக்கு நுரையீரல் மூலம் சுவாசித்தல் இல்லையாதலால், அதன் நுரையீரலில் காற்று இருக்காது. சிசுவைத் தாயிடமிருந்து பிரித்தவுடனே, வெளியுலகுக்கு வந்த அந்த நொடியே அது சுவாசிக்கத் தொடங்குகிறது. வெளிக்காற்றும், அந்த சீதோஷ்ண நிலையும், காற்றின் உட்புகலையும் அனுபவித்துத் தான், அந்தத் தாக்கத்தினால் பிறந்த குழந்தை வீல்வீலென்று கத்தி அழுகிறது. குழந்தையின் கத்தல் கேட்டு சம்பந்தப்பட்ட அத்தனை பேருக்கும் சந்தோஷம். பிறந்த குழந்தை அழவில்லை என்றால் தான் ஏதாவது கோளாறு இருக்கிறது என்று அர்த்தம்.

(தேடல் தொடரும்)

12 comments:

அன்புடன். said...

இறைவன் எங்கே?

கவிநயா said...

//பல விஷயங்கள் வெகு சாதாரணமாகத் தோற்றமளிப்பதாலேயே அவற்றின் அசாதாரணத் தன்மையை அறிய முடியாத மயக்கம் ஏற்படுகிறது.//

அழகாச் சொன்னீங்க. சாதாரணமாகவே, தன் பாட்டுக்கு நடக்கற பல விஷயங்கள்ல, ஏதாச்சும் பிரச்சனைன்னு வந்து அதனுடைய தொடர் இயக்கம் பாதிக்கப்பட்டாலொழிய நாம அது பத்தி சிந்திக்கறதில்லை.

ஜீவி said...

அன்புடன். said...

//இறைவன் எங்கே?//

இது கூட சாதாரணமாகத் தெரியும்
மிக அசாதாரணமானக் கேள்விதான்; அதரபழசானதும் கூட. எத்தனையோ
ஆயிரமாயிரம் ஆண்டுகளுக்குப் பின்னும் பதில் தெரியாத கேள்வி.

கண்ணுக்குள் நின்றாலும், கண்ணுக்குத் தெரியவில்லையே தவிர
இறைவனின் அருகாமையை, கருணையை மனசால் உணர முடிகிறது. அவரவர் உணர வேண்டியவன் அவன் என்கிறதே இறுதி பதிலாகத் தெரிகிறது.


ஆனால் இறை அம்சம் என்பது அப்படியல்ல.
அன்பு, ஆதரவு, பரிவு, பாசம் எளியோருக்குத் துணை என்று மனுஷத்தன்மை பெற்ற சக
மானிடரின் செயல்களில் அவனைக் கண்டு களிக்க முடிகிறது. இதில் ஆத்தீக - நாத்திக பேதமில்லை என்பது தான் இதன் சிறப்பு.

வருகைக்கும் வினாவுக்கும் மிக்க நன்றி, அன்புடன்!

Anonymous said...

சுவாசம் இல்லையென்றால் உயிர் இல்லை. ஆனால் உடலுக்குள் இந்த சுவாசத்தை உள்ளே இழுப்பதற்கு இரத்த ஓட்டம் தேவைப்படுகிறது. இரத்தத்தை ஓட செய்வது இதயத்தின் வேலை. கருவில் இருக்கும் குழந்தையின் இதயம் கூட தாய் கர்ப்பமான மூன்றாவது மாதத்திலிருந்து வேலை செய்ய ஆரம்பித்து விடுகிறது. ஆக, இதயம் வேலை செய்வதை நிறுத்திவிட்டால், இரத்த ஓட்டம் கிடையாது, அதனால் வெளியே உள்ள காற்றும் உள்ளே வர முடியாது.

ஆனால் இந்த இதயம் முதன்முதலில் எப்படி தனது வேலையை செய்ய ஆரம்பிக்கிறது? இதயம் துடிப்பதற்கு முன்பு கருவில் இருப்பது வெறும் சதைப்பிண்டம் தானே. அந்த சதைப்பிண்டத்துக்குள் 'உயிர்' என்ற பொருள் நுழைந்து இதயத்துடிப்பை எப்படி ஆரம்பிக்கிறது? அந்த உயிர்தான் ஆத்மாவா? அந்த ஆத்மாதான் கடவுளா?

ஜீவி said...

கவிநயா said...
//பல விஷயங்கள் வெகு சாதாரணமாகத் தோற்றமளிப்பதாலேயே அவற்றின் அசாதாரணத் தன்மையை அறிய முடியாத மயக்கம் ஏற்படுகிறது.//

//அழகாச் சொன்னீங்க. சாதாரணமாகவே, தன் பாட்டுக்கு நடக்கற பல விஷயங்கள்ல, ஏதாச்சும் பிரச்சனைன்னு வந்து அதனுடைய தொடர் இயக்கம் பாதிக்கப்பட்டாலொழிய நாம அது பத்தி சிந்திக்கறதில்லை.//

சரியே. ஒருவருக்கு அசாதாரணமாய் இருப்பது இன்னொருவருக்கு சாதாரணமாய் இருப்பதும் உண்டு.
வாழ்க்கையில் ஒன்றை எதிர்கொள்ளலும், சுய ஈடுபாட்டுடன் கூடிய பிரச்னைத் தீர்வும், பழக்கமும் பல அசாதாரணங்களை சாதாரணங்களாக்கி விடும்.

ஆனால் சில அசாதாரணங்கள் மனிதகுலத்திற்கே புரிபடாமல் இருக்கின்றன. அவற்றை அலட்சியம் செய்யாமல், take for granted என்றும் எடுத்துக் கொள்ளாமல், உரிய மரியாதையுடன் கூடிய அணுகல் முக்கியம் என்றும் நினைக்கிறேன்.

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி, கவிநயா!

ஜீவி said...

madrasthamizhan said...
//சுவாசம் இல்லையென்றால் உயிர் இல்லை. ஆனால் உடலுக்குள் இந்த சுவாசத்தை உள்ளே இழுப்பதற்கு இரத்த ஓட்டம் தேவைப்படுகிறது. இரத்தத்தை ஓட செய்வது இதயத்தின் வேலை. கருவில் இருக்கும் குழந்தையின் இதயம் கூட தாய் கர்ப்பமான மூன்றாவது மாதத்திலிருந்து வேலை செய்ய ஆரம்பித்து விடுகிறது. ஆக, இதயம் வேலை செய்வதை நிறுத்திவிட்டால், இரத்த ஓட்டம் கிடையாது, அதனால் வெளியே உள்ள காற்றும் உள்ளே வர முடியாது.//

வெளிக்காற்று எப்படி சுவாசமாக உள்சென்று வெளிவருகிறது என்பதை அடுத்த பகுதியில் உயிரியல் அறிஞர் உலகநாதன் சொல்லவிருக்கிறார்.
அதற்கு இடையில் நாம் சில சம்பந்தப்பட்டவைகளை தொட்டுச் செல்லலாம்.

இரத்தம் என்பது ஒரு திரவமே. சொல்லப்போனால், மற்ற உடற்திசுக்களைப் போல இரத்தமும் ஒரு செல் கூட்டமே.

கருத்தரித்த இரு மாதங்களிலேயே இதயம் மெதுவாகத் துடிக்கும் என்பதும் உண்மையே. கருவின்
உட்புற செல்கள்தாம் சிசுவிற்கு தோற்றத்தையும் உயிரையும் தரும்
பகுதிகளாகப் பிரிகின்றன. ஒரு பகுதி இதயம் என்றால் அதேசமயத்தில் இன்னொரு பகுதி வயிறு, குடல், நுரையீரல் என்று உருவாகின்றன.

உட்புற செல்கள் இந்த காரியத்தைச் செய்தால், வெளிப்புற செல்கள் தாயின்
கருப்பை ரத்தக் குழாய்களோடு பிணைந்து பாலம் அமைக்கின்றன. சிசுவிற்கான உணவு, ஆக்ஸிஜன் கூட பிளெஸெண்டா மூலம் தான் பயணிகிறது. சுத்த ரத்தம் சிசுவிற்கு சிரை வழியே போகும்; அசுத்த ரத்தம் தமனிகள் வழியே பிளஸெண்டாவுக்கு
வந்து சேரும்.

உயிரியல் அறிஞர் உலகநாதன் உயிர் வாழ ஆக்ஸிஜனின முக்கியத்துவம் கருதி அதுதான் ஆத்மாவோ என்று அதிசயிக்கிறார்.

'வெட்டவெளியதன்றி மற்று வேறு தெயவம் இல்லையே' என்று சிவவாக்கியர் சொல்லவில்லையா? அந்த வெட்டவெளியின் உள்ளடக்கத்தில் ஒன்று தானே இந்தப் பிராணவாயு?.. பிராணனைத் தாங்கி நிற்கும் வாயு! என்ன அழகான காரணப் பெயரைத் தந்திருக்கிறார்கள் என்று அதிசயக்க வேண்டியிருக்கிறது. உயிர்க்காற்றாகிய மூச்சுக்காற்றே பத்தாகத் தம்மைப் பகுத்துக் கொண்டு உடலுக்குள்ளே செயல்பட்டு உயிரியக்கத்தை நடத்துவதாக சித்த விஞ்ஞானம் கூறுகிறது. வரும் பகுதிகளில் எல்லாவற்றையும் பார்த்து விடலாம்.

வருகைக்கும், யோசனையை கிளர்த்தச் செய்யும் வினாக்களுக்கும்
அன்பார்ந்த நன்றி மெட்ராஸ் தமிழரே!
விரைவில் புதிதாக தாங்கள் புகுந்திருக்கும் வீட்டிற்கு விஜயம் செய்கிறேன். மிக்க நன்றி.
தொடர்ந்து வாருங்கள்..

குமரன் (Kumaran) said...

ஆன்மிகத்துடன் சேர்ந்து அறிவியலும் கற்கும் வகுப்பு இங்கே நடைபெறுகிறது. :-)

ஜீவி said...

குமரன் (Kumaran) said...
//ஆன்மிகத்துடன் சேர்ந்து அறிவியலும் கற்கும் வகுப்பு இங்கே நடைபெறுகிறது. :-)//

தொடரும் வருகைக்கும், உணர்வதை பதிந்தமைக்கும் மிக்க நன்றி, குமரன்!
தங்கள் தொடரையும் படித்து வருகிறேன் என்கிற சேதியையும் சொல்லிக் கொள்ள விழைகிறேன்.

கிருத்திகா said...

ஆம் இந்த காற்று செய்யும் அற்புதங்கள் ஆயிரம் தான். நம் எண்ண ஓட்டத்தையே மாற்றும் அளவிற்கு சக்தி வாய்ந்தது இந்த காற்று செய்யும் உள்ளே வெளியே விளையாட்டுதான். மிகப்பெரும் சந்தோஷம் என்னவென்றால் திரு.சுந்தரமூர்த்தி மாதிரியே எனக்கும் கேள்விகள் எழுவதுண்டு.. அதற்கான பதில்களை காண்கையில் மிகவும் சந்தோஷம்...

ஜீவி said...

கிருத்திகா said...
//ஆம் இந்த காற்று செய்யும் அற்புதங்கள் ஆயிரம் தான். நம் எண்ண ஓட்டத்தையே மாற்றும் அளவிற்கு சக்தி வாய்ந்தது இந்த காற்று செய்யும் உள்ளே வெளியே விளையாட்டுதான். மிகப்பெரும் சந்தோஷம் என்னவென்றால் திரு.சுந்தரமூர்த்தி மாதிரியே எனக்கும் கேள்விகள் எழுவதுண்டு.. அதற்கான பதில்களை காண்கையில் மிகவும் சந்தோஷம்...//

வாருங்கள், கிருத்திகா!
வருகைக்கும் எண்ணப் பரிமாறல்களுக்கும் மிகவும் சந்தோஷம்.
தொடர்ந்து வாருங்கள்.

Shakthiprabha said...

//////////'வெட்டவெளியதன்றி மற்று வேறு தெயவம் இல்லையே' என்று சிவவாக்கியர் சொல்லவில்லையா? அந்த வெட்டவெளியின் உள்ளடக்கத்தில் ஒன்று தானே இந்தப் பிராணவாயு?.. பிராணனைத் தாங்கி நிற்கும் வாயு! என்ன அழகான காரணப் பெயரைத் தந்திருக்கிறார்கள் என்று அதிசயக்க வேண்டியிருக்கிறது.////////////

vacuum என்று கூறப்படும், காற்று இல்லாத வெற்றிடத்திலும் கூட நிறைந்திருக்கிறதே அந்த பரப்பிரம்மம்.
நீங்கள் சொல்லியதைப் போல், ஒவ்வொரு தனி மனிதனும், தனக்குள் புகுந்து தெளிய வேண்டியது தான் ஒரே வழி. 'கண்டவர் விண்டிலர்'.

////பல விஷயங்கள் வெகு சாதாரணமாகத் தோற்றமளிப்பதாலேயே அவற்றின் அசாதாரணத் தன்மையை அறிய முடியாத மயக்கம் ஏற்படுகிறது.//

எல்லா நிலைக்கும், செயலுக்கும், பொருளுக்கும் பொருந்தும் அழகான பொன்மொழி :bow:

ஜீவி said...

Shakthiprabha said...

vacuum என்று கூறப்படும், காற்று இல்லாத வெற்றிடத்திலும் கூட நிறைந்திருக்கிறதே அந்த பரப்பிரம்மம்.
நீங்கள் சொல்லியதைப் போல், ஒவ்வொரு தனி மனிதனும், தனக்குள் புகுந்து தெளிய வேண்டியது தான் ஒரே வழி. 'கண்டவர் விண்டிலர்'.

////பல விஷயங்கள் வெகு சாதாரணமாகத் தோற்றமளிப்பதாலேயே அவற்றின் அசாதாரணத் தன்மையை அறிய முடியாத மயக்கம் ஏற்படுகிறது.//

//எல்லா நிலைக்கும், செயலுக்கும், பொருளுக்கும் பொருந்தும் அழகான பொன்மொழி :bow://

நீங்கள் சொல்வது தான் சரி.

அதுவே அதுவாக இருக்கும் பொழுது
'நிறைந்திருக்கிறது' 'வெற்றிடம்' போன்ற வார்த்தைகளெல்லாம்
நமக்கு பேச்சு வழக்கில் புரிவதற்காகச் சொல்கிறோம் என்று தான் நினைக்கிறேன்.

வருகைக்கும், மேலான சிந்தனைகளுக்கு வழிநடத்தும் பின்னூட்டத்திற்கும் மிக்க நன்றி, சக்திபிரபா!

Related Posts with Thumbnails