மின் நூல்

Wednesday, May 13, 2009

ஆத்மாவைத் தேடி....43

ஆன்மிகத்தின் அடுத்த கட்டத்தை நோக்கி.....


43. உடலுக்குள் மனத்தை வைத்து யார் தைத்தது?..


ன்னிப்பாகக் கவனிக்கையில் மனவியல் என்கிற இந்த சாத்திரத்தில் பேராசிரியர் மேகநாதன் கொண்டிருக்கிற ஈடுபாடு வெளிப்படையாகத் தெரிந்தது. கண்களின் இமைப்பகுதி பாதி மூடிய நிலையில், மிகுந்த இரசிப்புடன் கூடிய வெளிப்பாடாய் ஆற்றோட்டமான சொற்கோவைகளாய் அவர் நினைப்பதை சுவாரஸ்யத்துடன் சொல்லிக் கொண்டு வந்தார்.

"என் உள்மனம் சொல்கிறது-- இது நிச்சயம் நடக்கும், பாரு!" என்று சிலர் சொல்லக் கேட்டிருப்பீர்கள். 'உளமனம் என்று ஒன்று இருக்கா, அது பேசுமா, சொல்லுமா, சொல்கிற மாதிரி நடக்குமா என்று நமக்கு ஆச்சரியமாக இருக்கும்.

அவர் சொன்ன மாதிரி நடக்கவும் நடக்கும். காக்கை உட்கார பனம் பழம் விழுந்த கதை இல்லை. நிஜமாலுமே நடக்கும். அவர் சொன்ன மாதிரியே நடந்தது கண்டு நமக்கு வியப்பாக இருக்கும்.

"நடக்கும்ன்னு சொன்னேன்லே.. நடந்திடுச்சி, பாரு."

"எப்படிடா?.."

"அதான் நடந்திருச்சில்லே.. பின்னே என்ன?"

"எப்படின்னு சொல்லேன்."

"எப்படின்னு எனக்கேத் தெரியாது. சில நேரங்கள்லே இப்படித் தான் நடக்கும் பாரேன்னு தோண்றது.. தோண்ற மாதிரியே நடந்திடவும் செய்யறது..அதான் ஆச்சரியமா இருக்கு."

நமக்கும் அவர் சொல்றதைப் பார்த்து ஆச்சரியமா இருக்கும். எப்படின்னு அவர் வாயைப்பிடுங்கி தெரிஞ்சிக்காம இருக்க நம்மாலே முடியாது.


"ஒருகால் ப்ளூக்கோ?" என்று ஓரக்கண்களால் பார்த்தபடி உண்மையை வரவழைக்க ஆத்திரப்படுத்துவோம்.

"'ப்ளூக்'னு இதை அசிங்கப்படுத்த விரும்பலே.. மனசுக்குள்ளே நினைப்பா ஏற்பட்டு, 'இப்படித்தான் நடக்கும்'னு யாரோ சொல்ற மாதிரி இருந்தது."

"யாரோவா?.. யாரோன்னா?"

"கடவுள்னு வைச்சுக்கோயேன்... தெய்வத்தின் குரல்னு வைச்சுக்கோயேன்."

"என்னவோ கடவுள் வந்து உங்கிடே சொல்ற ரேஞ்சுக்கு போயிட்டே?.. அருள்வாக்கா?"

"எப்படிவாணா வைச்சுக்கோயேன். எப்படின்னு எனக்குச் சொல்லத்தெரியலே.. சும்மா எப்படி எப்படின்னு தொணப்பினா எப்படி?"

"தெரிஞ்சிக்கத்தான் கேட்டேன்."

"நானே பலதைச் சொல்றதில்லே.. இன்னொருத்தருக்கு நல்லதுன்னாத்தான் சொல்றது."

"வருத்தப்படாதே.. மன்னிச்சிக்கோ." அவர் மனசைக் காயப்படுத்திட்டோமோன்னு நமக்கும் வருத்தமா போயிடும்.

"பொதுவா நல்லவர்கள், எந்தப் பலனையும் எதிர்ப்பார்த்து எதையும் செய்யத் தெரியாதவர்கள், சொல் பொறுக்கமாட்டார்கள். எளிதில் உணர்ச்சி வசப்பட்டு விடுவார்கள். அப்படிப்பட்டவர்கள், நினைப்பது சொல்வது நடக்கும் என்பதும் உண்மைதான்" என்று சொன்ன மேகநாதன், பக்கத்தில் செம்பில் வைத்திருந்த நீரைக் கொஞ்சம் அருந்தி விட்டு மேலும் தொடர்ந்து பேசலானார்:

"நல்ல சிந்தனைகள், நல்ல செயல்கள், நல்லவற்றை நாடும் பழக்க வழக்கங்கள் என்று வாழ்க்கையை அமைத்துக் கொண்டு உள்மனத்திற்கு வளப்பம் ஏற்படுத்தலாம். உள்மனத்தின் ஆரோக்கியம், வெளிப்புற ஆரோக்கியத்தையும் அறுதியிட்டு நிச்சயப்படுத்தும் என்பது இன்னொரு உண்மை. மனத்தின் ஆரோக்கியமே, தேஜஸ்ஸாக வெளிப்பட்டு வெளி உடலின் ஆரோக்கியமாக செயல்படும் கிரியாஊக்கி வித்தை இது.

"பாலபருவம், வாலிபம், வயோதிகம் என்று துள்ளலிலிருந்து தளர்வது வரை புற உடலுக்கு பல நிலைகள் உண்டு. அதே போல வெளிப்பார்வைக்குத் தெரியும் உடலின் உள்ளே சிறைப்பட்டிருக்கும் உடல் உறுப்புகளுக்கும் தொடர்ந்த இயக்கத்தின் காரணமாகத் தளர்வும் சிதைவும் உண்டு. இந்தத் தளர்வும், சிதைவும் இயற்கையானது; இயல்பனது; விஞ்ஞான பூர்வமானது. யாராலும் மறுக்க முடியாதது.

"உடல், உடலின் உள்ளே உள்ள உறுப்புகள், அவற்றின் இயக்கம், சீர்கேடானால் சரிப்படுத்துவது எப்படிங்கற இவற்றைப் பற்றியதான அறிவு--- இவ்வளவுதான் உடற்கூறு விஞ்ஞானம். இதையே இன்னொரு விதத்தில் சொல்வதானால், புலன்களுக்குத் தட்டுப்படும் எதுபற்றியும் ஆராய்ந்து, அப்படிப்பட்ட ஆராய்ச்சிகளின் விளைவாக அறிவால் அறியப்படும் உண்மைகளே விஞ்ஞானம் என்று சொல்லலாம்.

"இந்த எல்லைக்குள் வராத எது பற்றிய அறிவும் விஞ்ஞானமல்ல. அதாவது விஞ்ஞான எல்லைகள் என்று நாம் இப்பொழுது தீர்மானித்திருக்கும் எல்லைக்குள் வ ராத எதையும் விஞ்ஞான அளவுகோல்களைத் தூக்கிக்கொண்டு தீர்மானித்து விடமுடியாது.

"'இந்த நிமிடம் வரை' 'இதுவரைத் தெரிந்த உண்மைகளின்படி' என்றெல்லாம் காலத்தை சம்பந்தப்படுத்தி சொல்வது விஞ்ஞானத்தின் இயல்பு. அதுபடிப் பார்த்தால் விஞ்ஞானத்தின் எல்லைக் கோடுகள் கூட நாளாவட்டத்தில் விஸ்தாரமாகிப் புலன்களுக்குப் புலப்படாத எத்தனையோ அமானுஷ்ய நிகழ்வுகள் கூட விஞ்ஞான கண்டுபிடிப்புகள் ஆகலாம். ஆக, விஞ்ஞான சோதனைகளுக்கு உட்படாததெல்லாம், உட்படுத்தப்படாததெல்லாம், உட்படுத்த 'இன்றைக்கு' இயலாததெல்லாம் உண்மை இல்லை என்று ஆகிவிடாது.

"பரபரப்பு, கோபம், ஆத்திரம், வெறுப்பு, வேகம், விரக்தி, அதீத ஆசை, அர்த்தமற்ற ஆவல்--- போன்ற ஆசாபாச உணர்வுகளுக்கெல்லாம் நேரடி சம்பந்தப்பட்ட உறுப்புகள் உடலின் உள்ளே கிடையாது. அதாவது குறிப்பிட்ட எந்த உறுப்புக்கும் ஆரோக்கியம் அளித்தால் அல்லது அறுவை சிகித்சை செய்தால், இந்த வேண்டாத உணர்வுகளைச் சரிப்படுத்தலாம், இல்லை சமனப்படுத்தலாம் என்பதற்கும் வழியில்லை. ஆனால் இத்தகைய ஆட்டிப்படைக்கும் உணர்வுகள் பல நேரங்களில் உடல்நலத்திற்கு ஊறு விளைவிக்கும் என்று மட்டும் உடற்கூறு விஞ்ஞான சாத்திரம் சொல்கிறது.

"அதாவது இதைச் சரியாகச் சொல்ல வேண்டுமானால், 'உணர்வுகள் உண்டு; ஆனால் அதற்கான கட்டுப்பாட்டு உறுப்புகள் இல்லை' என்கிற நிலை. இல்லாத விஷயங்களுக்கு வைத்தியம் இல்லை என்று சுலபமாக மருத்துவ விஞ்ஞானம் கைவிரித்து விடலாம்.

பொறிவாயில் ஐந்தவித்தான் பொய்தீர் ஒழுக்க
நெறி நின்றார் நீடுவாழ்வார்.


--- என்று நமது வள்ளுவப் பேராசான் உணர்வுகளை ஒழுங்குபடுத்த ஒப்பற்ற மருந்து சொல்கிறார்.

"பொதுவாக மருந்தின் இயல்பு கசப்பாயினும், இனிப்புச்சுவை மேலோட்டமாகத் தடவியிருப்பினும், கசப்பொழிந்த தித்திக்கும் இனிப்பான இன்னொரு இனிப்பு மருந்தைச் சொல்கிறார் அப்பர் சுவாமிகள்.

"பெரும் புலர் காலை மூழ்கிப் பித்தர்க்கு பத்தர் ஆகி
அரும்பொடு மலர்கள் கொண்டாங்கு ஆர்வத்தை உள்ளே வைத்து
விரும்பிநல் விளக்குத் தூபம் விதியினால் இடவல் லார்க்குக்
கரும்பினிற் கட்டி போல்வார் கடவூர் வீரட்டனாரே.
"


திருநாவுக்கரசரின் கற்கண்டு வாசகங்களைச் சொல்லிவிட்டு அவையைச் சுற்றி நெடுகப் பார்வையை வீசினார் மேகநாதன்.

அன்று பிரதோஷம்.

சாயரட்ஷை பூஜைக்கு சிவன் கோயிலில் ஏற்பாடுகள் நடந்து கொண்டிருந்தன. அப்படியே அத்தனை பேரும் பூஜைக்குச் செல்ல வேண்டியிருப்பதால் இன்றைக்கு இந்த அளவில் முடித்துக் கொள்ளலாமோ என்கிற எண்ணாத்தில் மேகநாதன் கைக்கடியாரத்தை லேசாக நோட்டமிட்டு விட்டு கிருஷ்ணமூர்த்தியைப் பார்க்க குறிப்பறிந்து கிருஷ்ணமூர்த்தியும் 'சரி'யென்று தலையசைத்தார். அனைவரும் கோயிலுக்குச் செல்ல வேண்டும் என்பதை நினைவுறுத்தி மனவியல் அறிஞர் மேகநாதன் அன்றைய உரையை முடித்த அதே நேரத்தில்----

கிருஷ்ணமூர்த்தியைத் தேடி அந்த செய்தி வந்தது.

மஹாதேவ் நிவாஸின் வெளிப்புற பாதுகாவலர்களில் ஒருவர் வந்து பவ்வியமாகக் குனிந்து கிருஷ்ணமூர்த்தியிடம் சொன்னார்: "சார்.. உங்கள் உறவினர்கள் இருவர் உங்களைத் தேடி வந்திருக்கிறார்கள். வெளிப்புற வராண்டாவில் அவர்களை அமர வைத்திருக்கிறேன் ."

'ஓ... மாலுவும், சிவராமனும் வந்து விட்டார்களா?' என்று தனக்குள் சொல்லிக் கொண்டவரின் முகம் மலர்ந்தது. " வெளிவராண்டா தானே?.. இதோ, நானே வருகிறேன்.." என்று கிருஷ்ணமூர்த்தி அவருடன் வாசல்பக்கம் விரைந்தார்.

(தேடல் தொடரும்)




(முதல் பாகம் முற்றும்)


















9 comments:

கபீரன்பன் said...

மிகவும் நுணுக்கமான செய்திகள்.

//'உணர்வுகள் உண்டு; ஆனால் அதற்கான கட்டுப்பாட்டு உறுப்புகள் இல்லை' என்கிற நிலை ...//

மிகவும் சரி. premonition என்னும் (உள்)உணர்வு கூட மனம் தெளிந்து இருக்கும் நிலையில் தான் வெளிப்படுகிறது. மனக்குழப்பமான நேரத்தில் அது பிடிபடுவதில்லை. ஆனாலும் அதை மனதின் வெளிப்பாடு என்று சொல்லமுடியாது. அதற்கும் அப்பாற்பட்டதொன்று.

//விஞ்ஞானத்தின் எல்லைக் கோடுகள் கூட நாளாவட்டத்தில் விஸ்தாரமாகிப் புலன்களுக்குப் புலப்படாத எத்தனையோ அமானுஷ்ய நிகழ்வுகள் கூட விஞ்ஞான கண்டுபிடிப்புகள் ஆகலாம் //

விஞ்ஞானிகளே கூட மறுக்க முடியாத உண்மை இது. மெய்ஞானமும் விஞ்ஞானமும் தொடுவானம் போல. எங்கோ சந்திப்பவன போல் தோன்றும். விஞ்ஞானி அதை துரத்துமளவும் அது எட்டிச் சென்று கொண்டே இருக்கும்.

சிந்திக்கப் பல கருத்துகள் தரும் நல்ல பதிவு. மிக்க நன்றி

jeevagv said...

ஆகா, முதல் பாகம் இனிதே நிறைவுற்றிருக்கிறது. இத்தனை விஷயங்களை கதையோடு காரணமாய் கோர்த்துச் சொல்லும் பாங்கிற்கு மிக்க நன்றிகள்!

ஜீவி said...

கபீரன்பன் said...

மிகவும் நுணுக்கமான செய்திகள்.

//'உணர்வுகள் உண்டு; ஆனால் அதற்கான கட்டுப்பாட்டு உறுப்புகள் இல்லை' என்கிற நிலை ...//

//மிகவும் சரி. premonition என்னும் (உள்)உணர்வு கூட மனம் தெளிந்து இருக்கும் நிலையில் தான் வெளிப்படுகிறது. மனக்குழப்பமான நேரத்தில் அது பிடிபடுவதில்லை. ஆனாலும் அதை மனதின் வெளிப்பாடு என்று சொல்லமுடியாது. அதற்கும் அப்பாற்பட்டதொன்று.//

வாருங்கள், கபீரன்ப!
நீங்கள் சொல்லியிருப்பதை இரண்டு பகுதிகளாகப் பிரித்துக் கொள்ளலாம்.

ஒருவரின் புத்தி, மனத்தின் மேல் ஆளுகை செலுத்தி, இதுகாறும் தான்
அறிந்தவைகளின், பட்டுத்துய்த்த அனுபவங்களின் அடிப்படையில் அறிவு பூர்வமாக ஆராய்ந்து மனதை வழிந்டத்திச் சென்று, அதன் அடிப்படையில் தீர்வாக 'இப்படித்தான் நடக்கும்' என்று கணக்குப்போட்டு முடிவுக்கு வந்து விடையாகத் தெளிவு பெறுவது என்று ஒன்று. புத்தியும் மனமும் தீட்சண்யமாக இருப்போருக்கு பெரும்பாலும் நினைப்பவை 'இவ்வாறாக' நடந்து விடுவதுண்டு. புத்தி-மனம் என்கிற இந்த இரண்டின் சம்பந்தம் இந்த 'தீர்வில்' இருப்பதால் இந்த இரண்டும் தெளிந்த நிலையில் தான் இது வெளிப்படும். மனக்குழப்பமான் சூழ்நிலை மேலும் குழப்பத்தை ஏற்படுத்தி தெளிவைத் தடுக்கும். இது ஒருநிலை. இதை நீங்களே சொல்லி விட்டீர்கள். இது (உள்) உணர்வா என்கிறது மட்டும் யோசிக்க வேண்டிய ஒன்று.
அடுத்தது, மனத்தின் வெளிப்பாடு இல்லாத, அதற்கும் அப்பாற்பட்ட
வேறொரு நிலை என்கிற முடிவுக்கு
வரின், அந்த 'Super Power' என்ன என்பது தான் ஆயிரம் பொன் கேள்வி.

சிந்தனையை கிளர்த்தும் உங்கள் பின்னூட்டத்திற்கு மிக்க நன்றி, கபீரன்ப!

ஜீவி said...

கபீரன்பன் said...

//விஞ்ஞானத்தின் எல்லைக் கோடுகள் கூட நாளாவட்டத்தில் விஸ்தாரமாகிப் புலன்களுக்குப் புலப்படாத எத்தனையோ அமானுஷ்ய நிகழ்வுகள் கூட விஞ்ஞான கண்டுபிடிப்புகள் ஆகலாம் //

விஞ்ஞானிகளே கூட மறுக்க முடியாத உண்மை இது. மெய்ஞானமும் விஞ்ஞானமும் தொடுவானம் போல. எங்கோ சந்திப்பவன போல் தோன்றும். விஞ்ஞானி அதை துரத்துமளவும் அது எட்டிச் சென்று கொண்டே இருக்கும்.

மிக அற்புதமாக வர்ணித்திருக்கிறிர்கள். மிகவும் ரசித்தேன். மிக்க நன்றி.

ஜீவி said...

ஜீவா (Jeeva Venkataraman) said...

//ஆகா, முதல் பாகம் இனிதே நிறைவுற்றிருக்கிறது. இத்தனை விஷயங்களை கதையோடு காரணமாய் கோர்த்துச் சொல்லும் பாங்கிற்கு மிக்க நன்றிகள்!//

ஓ! 'ஆத்மபோதம்--தமிழில்' நிறைவுற்றுவிட்டதல்லவா?.. நிறைவாக விளக்கங்களுடன் கூடிய பதிவாக அது இருந்தது. இந்தத் தொடர் எழுத முயன்றதற்கு ஒருவகையில் அது முன்னோடியாக இருந்ததும் உண்மை.
அதற்கு நன்றி சொல்ல வேண்டும்.

பாகம் பாகமாகப் பிரித்திருப்பது படிப்போரின் வசதிக்காகத்தான். 'மீள் பார்வை' பார்ப்போருக்கு சுலபமாக இருக்கும் என்பதற்கான ஏற்பாடே.

அங்கங்கே கதைப்பகுதிகளையும் மனத்தில் பொருத்திப் பார்த்துக் கொள்வது குறித்து மகிழ்ச்சி.
தொடர்ந்து கூட வருவது மேலும் நடக்க சந்தோஷம் அளிக்கிறது.
மிக்க நன்றி.

திவாண்ணா said...

//அதாவது குறிப்பிட்ட எந்த உறுப்புக்கும் ஆரோக்கியம் அளித்தால் அல்லது அறுவை சிகித்சை செய்தால், இந்த வேண்டாத உணர்வுகளைச் சரிப்படுத்தலாம், இல்லை சமனப்படுத்தலாம் என்பதற்கும் வழியில்லை.//

this is true only to some extent.
pl read on limbic system and frontal lobotomy.

Kavinaya said...

//"நல்ல சிந்தனைகள், நல்ல செயல்கள், நல்லவற்றை நாடும் பழக்க வழக்கங்கள் என்று வாழ்க்கையை அமைத்துக் கொண்டு உள்மனத்திற்கு வளப்பம் ஏற்படுத்தலாம். உள்மனத்தின் ஆரோக்கியம், வெளிப்புற ஆரோக்கியத்தையும் அறுதியிட்டு நிச்சயப்படுத்தும் என்பது இன்னொரு உண்மை. மனத்தின் ஆரோக்கியமே, தேஜஸ்ஸாக வெளிப்பட்டு வெளி உடலின் ஆரோக்கியமாக செயல்படும் கிரியாஊக்கி வித்தை இது.//

உண்மை. அழகா சொன்னீங்க.

ஜீவி said...

திவா said...
//அதாவது குறிப்பிட்ட எந்த உறுப்புக்கும் ஆரோக்கியம் அளித்தால் அல்லது அறுவை சிகித்சை செய்தால், இந்த வேண்டாத உணர்வுகளைச் சரிப்படுத்தலாம், இல்லை சமனப்படுத்தலாம் என்பதற்கும் வழியில்லை.//

//this is true only to some extent.
pl read on limbic system and frontal lobotomy.//

வாருங்கள், திவா சார்!
நிறையச் சொல்ல வேண்டியிருக்கிறது.
எளிமையாக சலிப்புத்தட்டாமல் சொல்ல
வேண்டும் என்கிற அக்கரை எல்லாவற்றையும் மீறி இருக்கிறது. அதனால் சிலவற்றைத் தவிர்க்க வேண்டியிருப்பினும், வேண்டிய இடங்களீல் சொல்ல வேண்டியதை விரவிச் சொன்னால் அந்த ஆயாசத்தைத் தவிர்க்கலாம் என்கிற எண்ணமும் இருக்கிறது. அதனால் ஒவ்வொன்றாகச் சொல்கிறேன்.

இந்தப் பதிவு சிறப்பாக அமைய வேண்டும் என்று தாங்கள் கொண்டுள்ள அக்கறைக்கு மிக்க நன்றி.

ஜீவி said...

கவிநயா said...
// மனத்தின் ஆரோக்கியமே, தேஜஸ்ஸாக வெளிப்பட்டு வெளி உடலின் ஆரோக்கியமாக செயல்படும் கிரியாஊக்கி வித்தை இது.//

//உண்மை. அழகா சொன்னீங்க.//

தொடர்ந்த வருகைக்கும் ரசிப்பிற்கும் மிக்க நன்றி, கவிநயா!

Related Posts with Thumbnails