மின் நூல்

Thursday, June 25, 2009

ஆத்மாவைத் தேடி....5 இரண்டாம் பாகம்

ஆன்மீகத்தின் அடுத்த கட்டத்தை நோக்கி.....

5. தொடரும் உறவுகள்

சாயந்திர கோயில் தரிசனம், இரவு சாப்பாடு என்று எல்லாவற்றையும் முடித்துக் கொண்டு மாடிப்படிகளேறி அறைக்கு வருகையில் மணி எட்டுக்கு மேலாகி விட்டது.

"கிருஷ்ணா! உனக்கு எப்படி என்னோட நன்றியைச் சொல்றதுன்னு தெரியலே.." என்று நெகிழ்ந்தபடி கதவு திறந்தார், சிவராமன்.

"என்ன அத்திம்பேர்! பெரிய பெரிய வார்த்தையெலாம் சொல்றேள்.."

"பின்னே?.. நாங்க அடைஞ்ச அனுபவமும், சந்தோஷமும் அளவிட முடியாதது.. அதுக்கு, 'நன்றி'ன்னு கூடச்சொல்லலேன்னா எப்படிப்பா?.. மெத்தப் படிச்ச இந்த மனுஷாளோட பழகிக்களிக்கற ஒரு பாக்கியமும், சந்தோஷமும் உன்னால் தானே எங்களூக்குக் கிடைச்சது?.. நீ கூப்பிடலேன்னா, இங்கே இவ்வளவு நடக்கறதெல்லாம் எங்களுக்கு எங்கே தெரிஞ்சிருக்கப் போறது?.. ஓ, கிரேட்!" என்று பிரமித்தார் சிவராமன்.

எல்லோரும் வசதியாக அமர்ந்து கொள்ள வாகாக நாற்காலிகளை இழுத்துப் போட்டு ஃபேனைச் சுழல விட்டாள், மாலு. "கிருஷ்ணா! நடக்கறது ஒவ்வொண்ணையும் பார்த்தா என்ன சொல்றதுன்னே, தெரியலே! நீயும் ஊர்லே இல்லையா?.. சும்மா ஒரு வாரம் அவாளுக்குப் பேச்சுத் தொணாயா இருந்திட்டு வராலாம்னு தான் அரியலூர் போயிருந்தோம். அப்புறம் காசிக்குப் போயிட்டு வரலாம்னுதான் பிளான். இதுக்கு நடுவே 'இங்கே வந்துட்டுப் போங்கோ'ன்னு நீ கூப்பிட்டே இல்லையோ?.. எங்க 'பிளான்'லே ஒரு சின்ன மாறுதலாத்தான் இது இருக்கும்னு இங்கே வந்தோம்'பா.. நாங்க எதிர்பாக்கவே இல்லே.. என்ன ஒரு ஏற்பாடு, என்ன ஒரு டிஸ்கஷன்ஸ்.. இதுவே இப்படின்னா
வெளிதேசத்து மனுஷாள்ளாம் வரப்போற அந்த சதஸ் எப்படி இருக்கும்னு இப்ப நெனைச்சுப்பாக்க, அதுவே ஒரு 'த்ரில்'லா இருக்கு!.. இப்படி மகா வித்வான்கள் மத்திலே சரிசமமா உக்காந்துக்கப் புண்ணியம் செஞ்சிருக்கணும்... அந்த சிவன் கோயிலுக்குப் போனா, பிறவி பூரா அங்கேயே இருந்திண்டு, நந்தவனத்துப் பூத்தொடுத்து மாலைமாலையா பெருமானுக்குப் சூட்டி, போய்ச்சேர்ற மிச்ச காலத்தை இங்கேயே கழிச்சிடலாமான்னு தோண்றது.. அடடா!.. அந்த மனோகர்ஜிக்குத் தான் எவ்வளவு நல்ல மனசு! இத்தனை பணம்,காசு, தோட்டம், தொறவு இருந்தும், எல்லாருக்கும் வேண்டியது வழங்கி தாசனுதாசனாய் சேவை செய்யணும்னு ஒரு குணம்!... என்னவோப்பா.. பெரியவா செஞ்ச புண்ணியம் தான்.. இந்த சொர்க்கத்திலே தங்கியிருக்கற பாக்கியம் எங்களுக்கு கிடைச்சிருக்கு.." என்று அதற்கு மேல் பேசமுடியாமல் தடுமாறினாள்.

"மாலு, நீ இப்படி சொல்றே.. மனோகர்ஜி என்ன நினைக்கறார், தெரியுமா?"

"என்ன நினைக்கிறார்?.."

"பிறருக்கு சேவை செய்யறத்துக்காக அமர்த்தப்பட்ட ஆள் தானென்றும், அத்தனையும் இறைவன் கருணை, அவனோட ஏற்பாடுன்னும் நினைக்கறார்."

"ஓ!.. அப்படி அவர் நினைகறத்துக்கு பெரிய உள்ளம் வேண்டும்; தவ சிரேஷ்டர் களால் தான் இப்படியெல்லாம் பேசவும் செய்யவும் முடியும்."

"சந்தேகமில்லாம!.. சில நேரங்கள்லே அவரோட செயல்களுக்குப் பின்னாலே மகத்தான சக்தி ஒண்ணு இருந்திண்டு அவரை ஆட்டுவிக்கறதோங்கற மாதிரி ஒரு பிரமை கூட எனக்கு ஏற்பட்டது உண்டு."

"அது பிரதட்சய உண்மையாக் கூட இருக்கலாம்" என்றார் சிவராமன்.

"நானும் கூட அப்படித்தான் நினைக்கறேன், அத்திம்பேர்! மனித யத்தனத்தால செய்ய முடியாத பல செயற்கரிய செயல்கள் அவர் மூலமா நடந்திண்டிருப்பதை இங்கே வந்த சில நாட்கள்லே நா தெரிஞ்சிண்டேன்.. அப்படித் தெரியத் தெரிய, அவர் செயல்படுவதின் மூலம் பிறரையும் செயல்பட வைக்கும் ஒரு மகத்தான சக்திக்கு நம்மையும் ஆட்படுத்திக் கொண்ட மகிழ்ச்சி பல நேரங்கள்லே என்னையும் ஆட்கொண்டதுண்டு."

சிவராமன் பதில் பேசாமல் கிருஷ்ணமூர்த்தியையே பார்த்துக் கொண்டிருந்தார்.

"அப்படி நான் சந்தோஷப்பட்ட நேரங்கள் பல உண்டு. முன்னேப் பின்னே பழக்கமில்லாத, 'யப்பா.. இது நாம்மாலே நிச்சயமாய் முடியாது'ன்னு நினைக்கிற பல காரியங்கள், வெகுசாதாரணமா முடிஞ்சிடும்.. அப்படிச் சுளுவா முடிந்ததே பல நேரத்லே மலைப்பா இருக்கும்.. 'நாமா இதைச் செய்தோம்'ங்கற ஆரம்பகால அசட்டு மலைப்பு போய், பின்னாடி பிரக்ஞை வந்தது. அந்தக்காரியம் நடக்க லவலேசமும் நாம காரணம் இல்லே, நம்மாலே நடக்கலை அதுங்கற உணர்வு நெஞ்சில் துளிர்க்கவே பலகாலம் பிடிச்சது அப்படி துளிர்விட்ட 'நம்மாலே எதுவும் நடக்கறதில்லே'ங்கற அந்த நினைப்பு இப்போ நிலையா தீபம் போல நெஞ்சிலே சுடர்விட்டிண்டிருக்கு."

'கிருஷ்ணாவா இப்படிப் பேசுகிறான்' என்று மலைப்புடன் மாலு கிருஷ்ணாவையே வைத்த விழி எடுக்காமல் பார்த்துக் கொண்டிருக்க, "இப்போ நீ சொன்னையே, இதெல்லாம் மிக சத்தியமான வார்த்தைகள்" என்றார் சிவராமன்.

அவர் சொன்னதை ஆமோதிப்பது போல வெளிப்புற இருட்டுப் பிரதேசத்தி லிருந்து மணியோசை எழுந்த மாதிரி இருந்தது.

"காலம்பற அஞ்சு மணிக்குள்ளே எழுந்திடப் பாருங்கோ.. வாக்கிங் போயிட்டு வர சரியாயிருக்கும்.." என்றபடி கிருஷ்ணமூர்த்தி எழுந்திருந்தார்.

கதவைத் தாளிட்டுப் படுத்த்து தான் தெரியும். அடித்துப் போட்ட மாதிரி ஆழ்ந்த உறக்கம். நாள் பூராவுமான அலைச்சலும், புது அனுபவங்களும் அசத்திவிட்டன.

நடுராத்திரியா, அல்லது அதைத் தாண்டிய விடியல் நேரமா என்றுத் தெரியவில்லை.

எங்கேயோ, எதையோ எலி பிறாண்டுகிற மாதிரியான ஓசையில் சிவராமனுக்கு விழிப்பு வந்தது. தூக்கக் கலக்கத்தில் தலை நிமிர்த்திப் பார்த்தார்.

பக்கத்தில் சன்னமாக எழுந்த குறட்டை ஒலியுடன் ஒன்றி மாலு அயர்ந்து தூங்குவது தெரிந்தது.

ஒரு வினாடி நேரம் தான். தூக்கிய தலை மீண்டும் தலையணையில் அழுந்தி சிவராமனை அசத்தியது.

மறுபடியும் எதனால் விழிப்பு வந்தது என்றுத் தெரியவில்லை. 'படபட'வென்று சிறகடிக்கும் ஒலி தெளிவாகக் கேட்டது.

மாலு புரண்டு படுத்தாள். அதற்கு மேல் தூங்கும் உணர்வில்லை, சிவ ராமனுக்கு. எழுந்திருக்கும் மனசும் இல்லாமலிருந்தது.

இப்பொழுது மீண்டும் 'படபட'. வெளியிலிருந்து தான் ஓசை எழுந்தது தெளிவாகக் கேட்டது.

மெல்ல படுக்கையை விட்டு எழுந்தார். சபதமிடாமல், ஜன்னல் பக்கம் சென்று என்னவென்று வெளியே பார்த்தார். பிரமித்தார்.

புலர்ந்தும் புலராத அந்த அரையிருட்டில் பக்கத்து மாமரக் கிளையில் இரண்டு புறாக்கள் ஒன்றுக்கொன்று விரட்டி விளையாடிக் கொண்டிருப்பது தெளிவாகத் தெரிந்தது.

அவருக்கு இருப்பு கொள்ளவில்லை. அரியலூரில் அறிந்த தகவல் திகைப்பூட்டியது.

மாலுவை எழுப்பலாமா என்கிற எண்ணத்தை அவர் தவிர்த்த பொழுது, மாலுவே எழுந்திருந்து அவர் பக்கத்தில் வந்து நின்றாள்.

அவர் சொல்வதற்கு முன்னாலேயே வெளியே பார்த்த மாலுவுக்கு ஒரே ஆச்சரியம். "தெய்வமே---" என்று முகம் மகிழ்ச்சியில் பூரித்தது. "அரியலூரில் நாம் பார்த்த அதே புறாக்கள் தான்னா.. 'விரட்டிட்டேனே, போயிடுத்தே'ன்னு தவிச்சிண்டிருந்தேன்.. அம்மாடி.. குழந்தைகள் என்னைத் தேடிண்டு இங்கேயே வந்திடுத்தன்னா..." என்று நிலைகொள்ளாமல் தவித்து மகிழ்ந்து போனாள்.

சிவராமனும் தன் உணர்வும் அதே மாதிரி இருந்ததில் திகைத்துப் போய் நின்றார்.

(தேடல் தொடரும்)

4 comments:

Kavinaya said...

//"ஓ!.. அப்படி அவர் நினைகறத்துக்கு பெரிய உள்ளம் வேண்டும்; தவ சிரேஷ்டர் களால் தான் இப்படியெல்லாம் பேசவும் செய்யவும் முடியும்."//

ஆமாம், எல்லாம் நம்மால்தான் நடக்கிறது என்ற நினைப்பு இல்லாமல் இருப்பது சாதாரண விஷயமில்லை.

ஜீவி said...

கவிநயா said...

//ஆமாம், எல்லாம் நம்மால்தான் நடக்கிறது என்ற நினைப்பு இல்லாமல் இருப்பது சாதாரண விஷயமில்லை//

ஒரு விஷயம் சரிவர மனதிற்கு திருப்தியாக நடப்பதற்கு பல காரணிகள் இருக்கின்றன. அதுவும் 'நடந்தது வெற்றிகரமாக' எனில், மனுஷனுள் அந்த கொக்கரிப்பு ஏற்படுத்தும் மதர்ப்பு எக்கச்சக்கம்.
ஒரு விஷயம் பூர்ணமாக திருப்தியாக நடைபெற ஏற்பட்ட வாய்ப்புகளை உணருகின்ற உள்ளம் இருந்தால் போதும், 'எதுவும் நம் மட்டிலுமில்லை' என்கிற உண்மையை தரிசிக்கலாம். பிறகு எதுவும் நம்மாலல்ல என்கிற உணர்வும், ஞானமும் சித்திக்கும் என்று பெரியோர்கள் சொல்கிறார்கள்.

நெடுநாட்கள் கழித்த வருகைக்கு நன்றி, கவிநயா!

கோமதி அரசு said...

//'நம்மாலே எதுவும் நடக்கறதில்லே'ங்கற அந்த நினைப்பு இப்போ நிலையா தீபம் போல நெஞ்சிலே சுடர்விட்டிண்டிருக்கு."//

ஆம்,எல்லாம் அவன் செயல்.

ஜீவி said...

@ கோமதி அரசு

வருக்கைக்கும் பகிர்தலுக்கும் நன்றி.

Related Posts with Thumbnails