மின் நூல்

Sunday, July 5, 2009

ஆத்மாவைத் தேடி....6 இரண்டாம் பாகம்

ஆன்மீகத்தின் அடுத்த கட்டத்தை நோக்கி.....


6. படபடத்தப் புறாக்கள்

சிவராமனும், மாலுவும் பார்த்துக் கொண்டிருக்கையிலேயே தாங்கள் விளையாடித் திரிந்த அழகை அவர்கள் பார்க்க வேண்டித்தான் அங்கு வந்து அவர்களை எழுப்பி காணச்செய்து அவர்கள் பார்த்துக் களித்ததும் தங்கள் வேலை முடிந்த மாதிரி அந்த ஜோடிப்புறாக்கள் இவ்ர்கள் கண்முன்னாலேயே பறந்து பறந்து காணாமல் போயின.

தாங்க முடியாத சோகத்தில் தொய்ந்து போன மாலுவைக் காணப் பரிதாபமாக இருந்தது, சிவராமனுக்கு.

"இத்தனை நேரமும் இங்கே விளையாடித் திரிந்து நான் பார்த்ததும் பறந்து போயிடுத்தேன்னா.." என்று வேதனையில் விக்கித்து நின்றாள் மாலு.

"என்ன மாலு, நீ என்ன குழந்தையா? பறவைகளின் இயல்பு பறப்பது. அவை எழும்பி வானில் பறக்க முடியாமலிருந்தால் தான் நாம் பரிதாபப்பட வேண்டும்... அவை குஷியாகப் பறப்பது கண்டு நாம் சந்தோஷிக்க வேண்டாமா?.." என்று அவளைத் தேற்றினார் சிவராமன்.

தலை நிமிர்ந்து அவரைப் பார்த்தாள் மாலு. அந்த அரையிருட்டிலும் அவள் விழிகளிலிருந்து வெளிவந்த நீர் கோடிட்டு கன்னப்பிரதேசத்தில் பளபளத்தது.
"ஆமான்னா.. நீங்க சொல்றது ரொம்ப சரி. பறவைகள் பறந்து திரிவது குழந்தைகள் ஓடி விளையாடற மாதிரிதான். ஆனால் என் மனசில் இவை வெறும் பறவைகளாகப் படலே."

சிவராமன் திடுக்கிட்டார். மாலு எதைச் சொன்னாலும் யோசித்து ஸ்பஷ்டமாகச் சொல்லும் பழக்கம் உள்ளவள். ஆதலால் இவள் உளறலாக எதையும் சொல்ல மாட்டாள் என்கிற உணர்வும் அவருக்கு இருந்தது.

எதுவும் பேசாமல் அவர் பார்த்துக் கொண்டிருக்கையில், மாலுவே தொடர்ந்தாள்: "கொள்ளை அழகுன்னா; கிருஷ்ண விக்கிரகம் மாதிரி ரெண்டு குழந்தைகள். தாழ்வாரத்திலேயே தவழ்ந்திண்டு வந்ததுகள், முத்தத்து மறப்பிலே மறைச்சிண்டு என்னைப் பாக்கறதுகள். எந்த முத்தம்ங்கறேள்?.. நம்ம ஜானகியோட அரியலூராத்து முத்தம்"

சிவராமன் சுவாரஸ்யமாக 'உம்' போட்டார்.

"ரெண்டு குழந்தைகளும் கொழுகொழுன்னு என்னமா இருந்ததுங்கறேள்?.. அசல் அந்த பாலகிருஷ்ணனே தான்! முத்தத்து மறப்பிலே, மயிலிறகு செருகின கிரீட அலங்காரத்தோட, நம்ப பெங்களூர் ஆத்து ஹால்லே ரவிவர்மாவோட 'ஆர்ட்'டை பிரேம் போட்டு மாட்டியிருப்போமே, அந்த மாதிரின்னா. அச்சு அசலா ஸ்வாமியே ஒண்ணுக்கு ரெண்டா குழந்தைகளா வந்த மாதிரி இருந்ததுன்னா..."

"ஓ----"

"அதுகளைத் தூக்கிக் கொஞ்சணும்ங்கற தவிப்பை என்னாலே அடக்க முடியலே. ரெண்டு அடிதான் வைச்சிருப்பேன்...'படபட'ன்னு சிறகடிச்சு ரெண்டும் புறாக்களாகி முத்தத்து மற்ப்பிலேந்து பறந்து போச்சு.. எங்கே குழந்தைகளைக் காணோம்ன்னு தேடறேன். எங்கே போச்சுன்னு தவியா தவிச்சு----பட்டுன்னு விழிப்பு வந்திடுத்துன்னா.. எல்லாம் கனவான்னு நம்பமுடியாம் பாத்தா, நீங்க ஜன்னல் பக்கத்லே நின்னுண்டிருக்கேள். என்னன்னு எழுந்து வந்தா, நான் கனவுலே பாத்த அந்தப் புறாங்களேதான்னா..
நிஜத்திலேயும் மாமரக் கிளைலே குலாவிண்டிருக்குகள்.. எது கனவு, எது நிஜம்ன்னு எனக்கு விளங்கலேயேன்னா..."


சிவராமன் மாலுவை ஆசுவாசப்படுத்தினார். "நீ கனவு கண்டதும் நிஜம். கனவில் கண்டதை நிஜத்தில் பார்த்ததும் நிஜம்" என்று சொல்லிவிட்டு, ஸ்விட்ச் தட்டி பெரிய சுவர் கடியாரத்தில் மணிபார்த்தார். "பாரு மணி நாலரை ஆச்சு. அஞ்சு மணிக்கு ரெடியா இருக்கச் சொல்லி கிருஷ்ணா சொல்லியிருக்கான். வாக்கிங் போக நீ ரெடியாகு" என்று தலையணையைத் தட்டி அடுக்கி வைத்தார்.

அவர்கள் தயாராவதற்குத் தான் காத்திருந்தது போல அழைப்பு மணி கிணுகிணுத்தது.

(தேடல் தொடரும்)

6 comments:

Kavinaya said...

//பறவைகளின் இயல்பு பறப்பது. அவை எழும்பி வானில் பறக்க முடியாமலிருந்தால் தான் நாம் பரிதாபப்பட வேண்டும்...//

ரொம்ப அழகா சொன்னீங்க!

திவாண்ணா said...

எது நிஜம்? ஜென் துறவியான நான் பட்டாம் பூச்சியாக இருப்பதாக கனவு கண்டதா? இல்லை பட்டாம்பூச்சியான நான் ஜென் துறவியாக இருப்பதாக கனவு காண்பதா?

ஜீவி said...

கவிநயா said...
//பறவைகளின் இயல்பு பறப்பது. அவை எழும்பி வானில் பறக்க முடியாமலிருந்தால் தான் நாம் பரிதாபப்பட வேண்டும்...//

//ரொம்ப அழகா சொன்னீங்க!//

கவிஞரின் மனசு அல்லவா?

அந்த பரிதாபத் துடிப்பு உணர்ந்து தான், ரொம்ப இயல்பாக 'அழகு' புரிப்பட்டிருக்கிறது.

ஜீவி said...

திவா said...

//எது நிஜம்? ஜென் துறவியான நான் பட்டாம் பூச்சியாக இருப்பதாக கனவு கண்டதா? இல்லை பட்டாம்பூச்சியான நான் ஜென் துறவியாக இருப்பதாக கனவு காண்பதா?..//

ஹி..ஹி... ஒண்டர்புல்!

கிருத்திகா ஸ்ரீதர் said...

ஆஹா மாலுவுக்கு வரப்போகும் சேதியென்ன....

ஜீவி said...

கிருத்திகா said...
//ஆஹா மாலுவுக்கு வரப்போகும் சேதியென்ன....//

நினைவில் தட்டுப்பட்டதும் உடனே சொல்லி விடுகிறேன். விசாரிப்புக்கு நன்றி, கிருத்திகா!

Related Posts with Thumbnails