Friday, August 28, 2009

விமரிசனக்கலையும் கதையின் கதையும்

ப்பொழுதெல்லாம் விமரிசனம் என்பது குறித்து நாம் நிறையவே பேசுகிறோம்.. சாதாரணமாக ஒன்றைப் பற்றியதான 'அபிப்ராயம்' மாதிரியான கருத்தைச் சொல்லுதல் என்கிற நிலைமாறி, இப்பொழுது விமரிசனம் என்பதே ஒரு துறையாகவும் உருக்கொண்டிருக்கிறது.

சொல்லப் போனால், விமரிசனம்என்பது ஒரு கலை. எல்லாக் கலைகளுக்கும் படைப்பாக்கம் என்பது எப்படி அடிப்படை அம்சமாக இருக்கிறதோ, அதே போன்றதான படைப்பின் நேர்த்தியும்,அழகும் விமரிசனத்திற்கும் தேவை.

என்றைக்கு விமரிசனத்தை ஒரு கலையாக ஏற்றுக்கொண்டு விட்டோமோ, அன்றைக்கே விமர்சகனும், எல்லாக் கலைஞர்களைப் போல ஒரு கலைஞன் தான்; அவன் ஒரு கலைஞனாக இருப்பதால் தான் எந்தக் கலைப்படைப்பையும் அவனால் நேசிக்க முடிகிறது.. ரசிக்க முடிகிறது.. இந்த நேசித்ததில், ரசித்தலின் விளைவான வெளிபாடு தான், அந்த ரசிப்பு குறித்தான அனுபவப் பகிர்வாகத்தான் அது குறித்தான அவனது விமரிசனமே முகிழ்க்கும்.

அதனால் தான் பலசமயங்களில் கலைப்படைப்புகளைப் பற்றி, கலைஞர்களல்லாத வெறும் பண்டிதர்கள் பேசும் பொழுது, அது குரங்கு கைப் பூமாலையாகிப் போகிறது. எல்லாக் கலைகளும் 'துறை'களாகிப் போனதின் விபரீதம் இது. அழகுணர்ச்சியும், அடிப்படை புரிதலில் விளைவான புளகாங்கிதமும் வற்றிப்போனதின் விளைவு இது. அதனால் தான் அத்தன்மைத்தான விமர்சன ஆர்ப்பாட்டங்களெல்லாம்,வெற்று உரைகளாக, வெறும் விவரக்குறிப்புகளாக இருக்கும். கலைஞனின் நெஞ்சத்து ஓலங்களை, மகிழ்ச்சியின் சாரல்களைத் தரிசிக்க வக்கில்லாத போக்கு இது. போகட்டும்..

மனசார ஒப்புக்கொள்ள வேண்டுமானால், படைப்புகள் குறித்தான விமரிசனம் என்பதே பிற்காலத்துச் சமாச்சாரம் தான்; அப்பட்டமான மேற்கத்திய சரக்கு.

சின்னக் குழந்தையின் தத்தித் தத்தி நடக்கும் தளர் நடைபோல தமிழில் சிறுகதைகளின் தோற்றமும், புதின வடிவங்களும் முகிழ்க்கத் தொடங்கிய பொழுது, அவற்றைப் பற்றிய விமரிசனக் கருத்துக்களாய் அபிப்ராயங்களும் வெளிப்பட்டன.

தமிழில் ஒரு காலத்தில் இந்த விமரிசனக்கலை கொடிகட்டிப் பறந்தது. இலக்கியமும்,விமரிசனமும் கை கோர்த்து இரட்டைக் குழந்தைகளாய் பவனி வந்தன. ஒன்றின் வளர்ச்சி இன்னொன்றையும் சார்ந்திருந்தது. க.நா.சு., 'எழுத்து' சி.சு.செல்லப்பா, சொல்லியே ஆக வேண்டிய விமரிசனக் கலைஞன் வெங்கட் சாமிநாதன், கனகசபாபதி, வல்லிக்கண்ணன், தி.க.சி., என்று வரிசைபடுத்திச் சொல்லலாம். இந்த வரிசை எந்தத் தரவரிசையுமல்ல.. இதில் வெங்கட்சாமிநாதனின் விமரிசனம் பற்றி, விமரிசனத்தைக் கலையாகச் செய்த-- இலக்கியம், இசை, சிற்பம், ஓவியம், தெருக்கூத்து என்று சகல மட்டத்திற்கும் தூக்கிச்சென்ற-- அந்தக் கலைஞன் பற்றி தனியே எழுதியாக வேண்டும்.

கலாபூர்வமான படைப்புகளையெல்லாம் இப்பொழுது பார்க்கமுடியவில்லை. ஓரிரண்டு பேர் அழுக்குகளிலிருந்து மேலெழும்பி தலைதூக்கி இனம் கண்டு கொள்ளப்பட்டாலும், அவர்களும் 'காற்றுள்ள போதே தூற்றிக்கொள்'என்கிற கதையாய் திரையுலகு பக்கம் திரும்பி விட்டனர். சிலர் அங்கேயும் குப்பை கொட்ட முடியாமல், 'இதற்குத்தானா ஆசைப்பட்டேன்' என்று குமைந்து சோர்ந்து விட்டனர்.

தமிழ்கூறும் நல்லுலகில், கலைவளர்ச்சி சகல துறைகளிலும் வரட்சியாய்ப் போய் நெடுங் காலமாகிவிட்டது. நிஜங்கள் போய் நிழல்கள் நர்த்தனமிடும் காலம் இது. அது ஒரு கனாக்காலம்; நெஞ்சத்து உணர்வுகள் கலைரூபங்களாய் படைத்த காலம் போய், சம்பவங்களைப் புனையும் காலமாகிப் போய்விட்டது! இலக்கியத்தின் பெயரும் புனைவிலக்கியமாம்!

'கல்கி'யில் வெளிவந்த அகிலனின் 'பாவை விளக்கு' நாவலில் வரும் ஒரு கதாபாத்திரத்தின் பெயர், உமா. உருக்கமாகப் படைக்கப்பட்ட உமாவின் மேல் 'பாவை விளக்கு'படித்த வாசகர்கள் உயிரையே வைத்திருந்தனர். கதையின் இறுதிப்பகுதிகளில், 'உமா'வை அகிலன் சாகடித்து விடுவாரோ என்று கலங்கி, வாசகர்கள் அனுப்பி வைத்திருந்த நூற்றுக்கணக்கான தந்திகளும், ஆயிரக்கணக்கான தபால்களும் 'கல்கி' காரியாலயத்தை அதிரச்செய்தன. 'உமாவைக் கொன்று விடாதீர்கள்' என்று அவை அகிலனை மன்றாடின.

'கதை படிக்கிறோம்' என்ற எண்ணத்தையே மறக்கச் செய்த எழுத்தாளர்கள் வலம் வந்த காலம் அது; எழுத்தாளனுக்கும் எழுத்தை நேசித்த வாசகனுக்கும் பொற்காலம் அது! இப்பொழுது எழுத்தாளனுக்குப் பெயர், கதைசொல்லியாம்!

அன்று 'பேசும்படம்' 'குண்டூசி' பின்னால், பாலு சகோதரர்களின் 'கலை' சந்தாமாமா பிரசுரத்தின் 'பொம்மை' என்று சினிமாவுக்கே ஆன சினிமாப் பத்திரிகைகள் நான்கே உண்டு. இன்றோ,தமிழ்கூறும் நல்லுலகில் வெளிவரும் அத்தனை வெகுஜனப் பத்திரிகைகளும் சினிமாப் பத்திரிகைகளே! விளம்பரம் போக, மீதம் இருக்கும் அரை,கால் இண்டு இடுக்குகளில் போனால் போகிறதென்று 'ஒரு நிமிடக் கதைகளும்', 'ஒருவரிக் கதை'களும் பிரசுரமாகிக் கொண்டிருக்கின்றன.

எப்படி இருந்த தமிழ்க் கதையுலகம் என்று எண்ணிப் பார்க்காமலிருக்க முடியவில்லை.

24 comments:

கிருஷ்ணமூர்த்தி said...

ஒரே வரியில் சொல்ல வேண்டுமென்றால்,

"இதுவும் கடந்து போகும்!"

ஜீவி said...

@ கிருஷ்ணமூர்த்தி

"காலங்கள் மாறும்"--இது சயின்ஸ் விதிதான்! இருந்தாலும் இப்பொழுதும் ராமராஜ்யத்தைப் பற்றி சொல்லிக் கொண்டிருக்கிறோம், இல்லையா?

கிருஷ்ணமூர்த்தி said...

காலங்கள் மாறும் என்ற முழுமையான மாற்றத்தைச் சொல்வதில்லை இது-just a passing phase or passing cloud ஒரு நிலையில் இருந்து இன்னொரு திசைக்கு நகருகிற மாற்றத்தின் இடைப்பட்ட பகுதியாகப் பாருங்களேன்!

எந்தக் காலத்திலுமே கூட கலைஞனை, தகுதிக்குமேல் தூக்கி வைத்துக் கொண்டாடினதும் உண்டு, கண்டுகொள்ளாமல் விட்டதும் உண்டு.ஜனங்கள் வெற்று ஆரவாரங்களில், ஒரு கலைஞனைத் தூக்கி நிறுத்தினார்கள், மற்றொருவனைத் தரையில் தேய்த்தார்கள்.

இத்தனையையும் மிஞ்சி நிற்பதில்தான் உண்மையான கலைஞனின் வெற்றி இருக்கிறது.அப்படிப்பட்ட கலைஞனைப் பிரித்து அடையாளம் கண்டுசொல்வதில் தான், நல்ல விமரிசகனின் வெற்றியுமே இருக்கிறது என்று எனக்குத் தோன்றுகிறது.

நினைவில் நின்ற ஒரு பொற்காலத்தைப் பற்றி ஆதங்கத்தோடு சொல்லியிருக்கிறீர்கள்.எவ்வளவு அழகான கனவாக இருந்தால் தான் என்ன? ஒரு நேரம், கலைந்து போக வேண்டியது தான் இல்லையா? அப்படி கலைந்துபோவது கூட, அதைவிட இன்னொரு அழகிய கனவைப் படைப்பதற்காகத் தான்!

என்றோ ஒருநாள் மறுபடியும் ஒரு அழகிய கனவு வரும்!

குமரன் (Kumaran) said...

இப்ப எல்லாம் வாரத்துக்கு ஒரு முறையாவது வெ.சா. எழுத்தை 'மின் தமிழ்' குழுமத்தில் படிக்க முடிகிறது. படிச்சா கொஞ்சம் பயமாத் தான் இருக்கு. :-)

ஜீவி said...

குமரன் (Kumaran) said...

//இப்ப எல்லாம் வாரத்துக்கு ஒரு முறையாவது வெ.சா. எழுத்தை 'மின் தமிழ்' குழுமத்தில் படிக்க முடிகிறது.
படிச்சா கொஞ்சம் பயமாத் தான் இருக்கு. :-)//

அப்படியா,குமரன்! சிரமம் பார்க்காமல் சுட்டி தரமுடியுமா?..
தகவலுக்கு நன்றி, குமரன்!

ஜீவி said...

//எவ்வளவு அழகான கனவாக இருந்தால் தான் என்ன? ஒரு நேரம், கலைந்து போக வேண்டியது தான் இல்லையா? அப்படி கலைந்துபோவது கூட, அதைவிட இன்னொரு அழகிய கனவைப் படைப்பதற்காகத் தான்!

என்றோ ஒருநாள் மறுபடியும் ஒரு அழகிய கனவு வரும்!//

ஆஹா.. எவ்வளவு கவித்துவமான வரிகள்?.. இப்படி நிறைய நீங்கள் எழுத வேண்டும் என்று ஆசை..

குமரன் (Kumaran) said...

http://groups.google.com/group/mintamil

Please search in this group. You might join this group. You will definitely enjoy the discussions there.

குமரன் (Kumaran) said...
This comment has been removed by a blog administrator.
கிருஷ்ணமூர்த்தி said...

/சிரமம் பார்க்காமல் சுட்டி தரமுடியுமா?../

என்னுடைய பதிவு
தமிழ் மணமும், தமிழ் மரபு அறக்கட்டளையின் மரபுப் பெருநாளும்!

இதிலேயே மின்தமிழ் வலைக் குழுமத்தையும், அதை முன்னின்று நடத்தும் தமிழ்மரபு அறக்கட்டளையைப் பற்றியும் இணைப்புச் சுட்டிகளோடு விவரம் இருக்கிறது.

சென்னையில் தானே இருக்கிறீர்கள்?
நாளை பிற்பகல் இரண்டுமணிக்கு, மயிலாப்பூர் கற்பகாம்பாள் நகர் கே என் ஷண்முகசுந்தரம் அரங்கத்தில், தமிழ்மரபு அறக்கட்டளையின் எட்டாவது ஆண்டு நிறைவு விழா நடக்கிறது. முடிந்தால் ஒரு எட்டு, நேரே போய்ப்பாருங்களேன்!

எனக்கு அந்த வாய்ப்பு இல்லை:-((

ஜீவி said...

குமரன் (Kumaran) said...

//http://groups.google.com/group/mintamil

Please search in this group. You might join this group. You will definitely enjoy the discussions there.//

மிக்க நன்றி, குமரன்!

ஜீவி said...

@ கிருஷ்ணமூர்த்தி

தாங்கள் அளித்துள்ள தகவல்களுக்கும் மிக்க நன்றி.

ஜீவி said...

@ குமரன்,

சுமார் இருபது ஆண்டுகளுக்கு முன்
வெ.சா.வின் இலக்கிய விமர்சனங்களை நிறையப் படித்திருக்கிறேன். பல நினைவில் இருக்கின்றன. சிலவற்றை புத்தகங்களின் மூலமாகவும் திரட்டலாம்.
சில கருத்துக்களில் அவருடன் முரண்பாடு இருந்தாலும்,சிற்பம், நாடகம், ஓவியம், பழைமையான கலைகள் இவற்றில் அவர் கொண்டிருந்த ஈடுபாடு படிப்போரைக் கவரும். அந்த அர்த்தத்தில் தான் அவரைப் பற்றிக் குறிப்பிட்டிருந்தேன். இரண்டாவதாகக் கொடுத்திருந்த தகவல் இலக்கிய சம்பந்தமில்லாததால் நீக்கிட நேரிட்டது. தங்கள் தகவலுக்காக.

மிக்க அன்புடன்,
ஜீவி

குமரன் (Kumaran) said...

நன்றி ஐயா. நானும் அந்தக் கட்டுரையை இன்னும் படிக்கவில்லை. பெயரைப் பார்த்தவுடன் சுட்டியைத் தந்துவிட்டேன்.

ஜீவி said...

@ குமரன்

பேராசான் வள்ளுவப் பெருந்தகை தான் நினைவுக்கு வருகிறார்.. 'எப்பொருள் யார் யார்...'

கிருஷ்ணமூர்த்தி said...

அகிலனை விட நா.பா.வின் குறிஞ்சிமலர் பூரணியை இன்று நினைக்கும் போதும் , பொன்விலங்கு மோகினியை நினைக்கும்போதும் கண்கள் பனிக்கத் தான் செய்கின்றன.

அதே சமயம், ஜெகசிற்பியன் இவர்களைவிட ஜனரஞ்சகமாக, யதார்த்தத்தைக் கண்முன்னே நிறுத்திய அதிசயத்தை வியந்த அளவுக்கு foreced tragedy ஆகக் கதையை முடிக்கும் விதம், இந்த மனிதன் தன் அடிமனதில் இருந்த ஏதோ காதல் தோல்விக்குப் பழி தீர்த்துக் கொள்கிற மாதிரி, அத்தனை கதையிலும் யாரோ ஒருத்தர் காதல் தோற்பதை சொல்கிறாரோ என்ற சந்தேகத்துடன், கண்ணீருடன் கோபப்பட்டதுமே உண்டு.

கதை சொல்லி! வார்த்தை நன்றாகத் தானே இருக்கிறது? உங்களுக்குப் பிடிக்கவில்லையா?

Shakthiprabha said...

காலத்தின் பரிமாணங்கள் எல்லாத் திசைகளிலும் துறைகளிலு தன்னை வெளிப்படுத்திருக்கிறது. அதன் போக்கில் ஏற்றுக்கொள்வதைத் தவிர வேறு வழி ஏதும் இருப்பதாய் தெரியவில்லை.

ஜீவி said...

கிருஷ்ணமூர்த்தி said...

//கதை சொல்லி! வார்த்தை நன்றாகத் தானே இருக்கிறது? உங்களுக்குப் பிடிக்கவில்லையா?//

கதை சொல்லி! ஏதோ குறிசொல்லி மாதிரி ஒரு வார்த்தை அமைப்பு. 'சொல்லுதல் என்பது வாய்மூலம் நடைபெறும் செயல். அது பேச்சாளியின் காரியம். சத்திரபதி சிவாஜி குழந்தையாய் இருந்த பொழுது, தனது குழந்தைக்கு புராணகதைகளைச் சொன்ன ஜிஜிபாய், கதைசொல்லிக்கு ஒரு நல்ல உதாரணம். நமது பாட்டிமார்களும் நல்ல கதைசொல்லிகளே.

ஆனால் எழுத்தாளன் என்பது வேறு ஜாதி! அறிவில் நீந்தி, மனசில் தேக்கி, ஆற்றோட்டமாய் வடிகால் கிடைத்த மாதிரி கையின் வழியாய் காகிதத்தில் எழுத்துக்களாய் தன் மனவோட்டங்களை பதிவாக்குகிற வேலை இங்கு நடக்கிறது. வாய்மூடி மெளனியாய், எந்தக்குறுக்கீடும் அற்ற ஒரு மோனநிலையில் எழுதுவோனின் சிந்தனை எழுத்து என்னும் வேறு வடிவம் கொண்டதாய்.. அவ்வளவே..

எழுத்தை 'ராஜபரிபாலனம்' செய்கிற மாதிரி எழுத்தை ஆள்பவன் எழுத்தாளன். அவனின் சிந்தனைகள் எழுத்துக்களாய் அவன் வசப்பட்டு, எழுத்துக்களின் மீதான பரிபாலனம் அங்கு நடைபெறுகிறது. இது எழுத்தாளனின் ஆத்ம பரிமாறல்.

எதுவும்இல்லையென்றாலும்,'எழுதி'க்கு 'சொல்லி' எப்படி பொருத்தமாகும்?..

நீங்களே சொல்லுங்கள்.

ஜீவி said...

@ கிருஷ்ணமுர்த்தி

அகிலன் அகிலன் தான்; ஜெகசிற்பியன் ஜெகசிற்பியன் தான்!

வறியோரின் வாழ்க்கையைப் பற்றி எத்தனையோ பேர் எழுதியிருந்தாலும், ஜெகசிற்பியனின் எழுத்துக்கள் தனிரகம். வெகுஜன பத்திரிகைகளிலும் சுதந்திரமாக அட்டகாசமாய்
படம் பிடித்துக் காட்டியவர். இவரைப் பற்றி எனது எழுத்தாளர்கள் பகுதியில் தனிப் பதிவே எழுதியிருக்கிறேனே?...
பார்த்தீர்களா?..

'சொல்கிறாரோ' என்று நீங்கள் சம்சயத்திருப்பதை நியாயப்படுத்துவதே போலவேயான எழுத்துக்கள் அவரது. அரு.ராமநாதனின் 'காதல்' பத்திரிகையில் ஜெ.சி.யும் நானும் நிறைய எழுதியிருக்கிறோம்.
நா.பா.வைப் பற்றிய எனது பதிவையும் படித்துப் பாருங்கள்.

கிருஷ்ணமூர்த்தி said...

அகிலன் அகிலன் தான்! அதே மாதிரி நான் நான் தான், நீங்கள் நீங்கள் தான் இல்லையா?

ஜெகசிற்பியனைப் பற்றிய உங்கள் பதிவில் ஏற்கெனெவே என்னுடைய பதில் இருக்கிறது, தவிர டோண்டு சார் பதிவிலுமே கூட, இந்த விஷயமாகப் பகிர்ந்து கொண்டிருக்கிறேன்.

எழுத்தாளன்-கதை சொல்லி, இந்த இரண்டு வார்த்தைகளில் மிகப் பெரிய வித்தியாசம் இல்லை. நீங்கள், வெளிப்படுத்தும் விதம், ஊடகம் இதில் உள்ள வித்தியாசத்தை வைத்துக் கொண்டு, இரண்டும் வித்தியாசமான ரகம் என்று சொல்ல வருகிறீர்களோ?

பேச்சு, எழுத்து, ஆற்றங்கரை, அல்லது வீட்டுத் திண்ணையில் உட்கார்ந்துகொண்டு குழந்தைகளுக்குச் சொல்கிற கதை, இப்படி எதுவானாலும், சொல்லப் படுகிற ஒரு விஷயம்-அது எப்படிச் சொல்லப் படுகிறது இந்த இரண்டே அளவீடுகளுக்குள் அடங்கி விடும்போது கதை சொல்லி, எழுத்தாளர், கூத்துக் கட்டுகிறவர், உபன்யாசம் செய்கிறவர், இப்படி எல்லா வகை தொகைககுமே கூட அடங்கி விடுவதாகத் தான் எனக்குத் தோன்றுகிறது.


ஒரு கருத்தை வலிமையாக எடுத்து வைக்கிற ஆளுமை சிந்தனையில் இருக்கிறது, அதை வெளிப்படுத்தும் சாதனம், காகிதமா, கூத்தா, நாடகமா, கதை சொல்வதிலா என்ற கேள்வியே எனக்கு இப்போது கூட எழவில்லை.

ஜீவி said...

@ சக்தி பிரபா!

எதுவும் நீடித்த நீடிப்பு இல்லை. எவர் சிந்தனையிலோ எதுவோ தோன்றி, ஒன்று அறிமுகமாகும் பொழுதே அதன் அனுபவிப்பின் திகட்டல் வரை தீரும் வரை அதன் ஆயுசு ஆகிப்போகிறது.
அதன் தேவையான பயன்பாடுதான் அந்த அறிமுகத்திற்கு அல்பாயுசா இல்லை ஆயுசு கெட்டியா என்று தீர்மானிக்கிறது. எப்படி இருந்தாலும் ஒரு குறிப்பிட்ட காலம் வரை தான் என்பது மனித உயிர் போன்றே தீர்மானமான ஒன்று.

அதைத் தொடர்ந்து அதன் அப்பட்ட நீட்சியாகவோ, அல்லது வேறு விதமாகவோ வேறொன்று அறிமுகம்.
இப்படி துறை தோறும் துறை தோறும்.
இப்படிப் போய்க்கொண்டே இருக்கையில், நம் அனுபவிப்பில் அற்புதமாக இருந்தவற்றை இந்த மாற்றங்களூடனேயே கூட நினைத்துப் பார்க்கிறோம். (அந்தக் காலத்தில் வானொலிப் பெட்டி என்று வீடுதோறும் இருக்கும். அதில் கேட்ட அற்புதமான இலங்கை வானொலி நிகழ்ச்சிகள்;
அன்பர் மயில்வாகனனின் நிகழ்ச்சி தயாரிப்புகள்.. இன்றைய FM களுக்கு இடையேயும் இப்படிப்பட்ட நினைவு)
இன்றைய வெற்றிகளைச் சாப்பிட இன்னொன்று காத்திருக்கு என்பது
ஏற்றுக்கொள்ளக் கூடிய உண்மையாயினும், 'எங்கள் தாத்தா காலத்தில் இருந்த தாழம்பூ கொடை தெரியுமா' என்று நினைத்து, ஆனந்தித்து, மனசு நினைவில் மயக்கி ஆழ்ந்து...

கிருத்திகா said...

"தமிழில் ஒரு காலத்தில் இந்த விமரிசனக்கலை கொடிகட்டிப் பறந்தது. இலக்கியமும்,விமரிசனமும் கை கோர்த்து இரட்டைக் குழந்தைகளாய் பவனி வந்தன.------------- மட்டத்திற்கும் தூக்கிச்சென்ற-- அந்தக் கலைஞன் பற்றி தனியே எழுதியாக வேண்டும்." மறுக்க முடியாத உண்மை.

ஆனால் அதே சமயம் தற்போதைய இலக்கிய உலகு குறித்த பார்வையைப்பற்றி நாம் விரிவாக பேசமுற்படவேண்டுமென்றே தோன்றுகிறது. வளர்ந்து செல்லும் மரம் செடி கொடிகளுக்கு ஒரு அடிப்படை உருவும் அமைப்பும் உண்டே தவிர இதுதானென்று சொல்லமுடியாது அதுபோல இலக்கியமும் பல்வேறு பரிணாமங்களைக்கொண்டு செல்வது தான் முறை வளர்ச்சிக்கான வழியும் கூட. இதிலும் சாதக பாதகங்கள் இல்லாமலில்லை ஆனாலும் ஒட்டுமொத்தமாய் ஒதுக்கித்தள்ளத்தக்கதில்லை என்பதே என் எண்ணம். விரிவாய் மீண்டும் எழுத முயற்சிக்கிறேன்...

ஜீவி said...

கிருத்திகா said...

//ஆனால் அதே சமயம் தற்போதைய இலக்கிய உலகு குறித்த பார்வையைப்பற்றி நாம் விரிவாக பேசமுற்படவேண்டுமென்றே தோன்றுகிறது.//

ஆம்.. நிச்சயம் பேசப்பட வேண்டும்..
அதில் இருவேறு கருத்துகளுக்கு இடமே இல்லை. நீங்கள் செய்யுங்கள்.. நானும் கலந்து கொள்கிறேன்.

Anonymous said...

What a great web log. I spend hours on the net reading blogs, about tons of various subjects. I have to first of all give praise to whoever created your theme and second of all to you for writing what i can only describe as an fabulous article. I honestly believe there is a skill to writing articles that only very few posses and honestly you got it. The combining of demonstrative and upper-class content is by all odds super rare with the astronomic amount of blogs on the cyberspace.

ஜீவி said...

@ Anonymous

தங்கள் ரசனைக்கும் மனம் நிறைந்த பாராட்டிற்கும் மிக்க நன்றி. இந்த
அங்கீகாரம் மேலும் மேலும் நிறைய எழுதுவதற்கான ஆக்கத் திறமையையும் ஊக்கத்தையும் நிச்சயம் எனக்குத் தரும்.
தங்கள் அன்பிற்கும், அந்த அன்பையும் சீர்தூக்கிய விமரிசனத்தையும் வெளிப் படுத்தையமைக்கும் மிக்க நன்றி.

Related Posts with Thumbnails