மின் நூல்

Tuesday, December 22, 2009

ஆத்மாவைத் தேடி....23 இரண்டாம் பாகம்

ஆன்மீகத்தின் அடுத்த கட்டத்தை நோக்கி....

23. சர்வைவர் சமோவா...

முதலில் அந்தப் பெண் தான் தமயந்தியின் அருகில் வந்து, "நீங்கள் தமிழ்நாடு தானே?.. உங்களை எங்கையோ பார்த்த மாதிரி இருக்கே?" என்று உரிமையுடன் அவள் கை பற்றினாள்.

பற்றிய அவள் கையை வலுக்கட்டாயமாக விடுவித்துக் கொள்ளத் தயங்கி, லேசாக நெளிந்தாள் தமா. "ஆமாம், தமிழ்நாடு தான்.. திருச்சி பக்கம் அரியலூர்.. நீங்கள்?"

"நான் கோயம்புத்தூர். ஆர்.எஸ்.புரம்" எனறவள், அதற்குள் கிரிஜாவும் அவர்கள் அருகில் வந்துவிட, அவளைப்பார்த்து "இவங்க உங்க தங்கையா?" என்றாள்.

"ஆமாம், தங்கையேதான். ஆனால் மாமா பெண்" என்று சொல்லிச் சிரித்தாள் தமயந்தி.

அந்தப் பெண்ணும் சிரித்து விட்டு, கிரிஜாவைப் பாத்து "நீங்களும் இவங்க மாதிரியே அழகா இருக்கீங்க" என்றாள்.

"நீங்க மட்டும் என்னவாம்?.." என்று கிரிஜா அவள் பங்குக்கு சொல்ல,அந்த நிமிஷமே பெண்கள் மூவரும் கலகலப்பாகி விட்டனர்.

"எல்லாம் சரி.. உங்கள் பெயரை இன்னும் எங்களுக்குச் சொல்லலியே?" என்றாள் தமா.

"மாதுரி" என்று சொல்லி விட்டு லேசாக வெள்ளைப் பற்கள் தெரிய அவள் சிரித்தாள். அவள் சிரித்த அந்த ஒருவினாடிப் பொழுதில் இடதுபக்க வரிசையில் அவளுக்கு ஒரு தெத்துப்பல் இருப்பதைக் கண்டு பிடித்து விட்டாள் கிரிஜா. உடனே அந்தத் தெத்துப்பல்லும் சிரிக்கும் பொழுது இவளுக்கு அழகாகத்தான் இருக்கிறது என்று நினைத்துக் கொண்டாள்.

தங்கள் கணவன்மார்களை இருவரும் மாதுரிக்கு அறிமுகப்படுத்தி வைத்தனர். மாதுரியும் தன்கணவன் சுரேஷைக்கூப்பிட்டு அவர்களுக்கு அறிமுகப்படுத்தி வைத்தாள்.இன்னொருவர் அவள் அண்ணன் என்றும் கூட இருந்த பெரியவர் தனது பெரியப்பா என்றும் சொன்னாள். மாதுரியும் அவள் கணவனும் கொலம்பியாவில் பணியாற்றுவதாகவும், அண்ணனும், பெரியப்பாவும் இந்தியாவிலிருந்து டூரிஸ்டாக வந்திருப்பவர்கள் என்று சொன்னாள். "இலையுதிர் பருவகால சுற்றுலாவாக இந்தப் பகுதிக்கு எல்லோரும் வந்திருக்கோம்" என்று மாதுரி சொன்ன போது, "நாங்களும் அதே!" என்றாள் கிரிஜா.தூரத்தில் இருந்து பார்க்க மாதுரி வயதானவள் மாதிரித் தோற்றமளித்தாலும் நெருக்கத்தில் பார்க்கையில் அப்படி ஒன்றும் அவளுக்கு வயசாகி விடவில்லையென்று த்மயந்திக்குத் தோன்றிற்று.

சுத்தமாக நீள இருந்த மரபெஞ்ச்சைப் பார்த்ததும், அதைக்காட்டி,"இப்படி உட்கார்ந்து ஸ்நாக்ஸ் சாப்பிடலாமா?" என்றாள் மாதுரி.

கிரிஜா தமாவைப் பார்க்க, "ஓ..எஸ்.." என்றபடி தமா காருக்குச் சென்று டிக்கி திறந்து ஒரு தூக்குக் கூடையை எடுத்து வந்தாள். அதற்குள் தமாவின் ஆறு வயதுப் பையன் மணிவண்ணனுடன் நெருக்க்மாகி விட்டாள் மாதுரி..அவளது கணவன் விடியோ கேம் மாதிரி ஒரு பார்ஸலை காரிலிருந்து எடுத்து வந்து அவனுக்குப் பிரஸெண்ட் பண்ணியிருந்தார். பிரகாஷ், மாதுரியின் கணவர் சுரேஷூடனும், குமாருடனும் சுவாரஸ்யமாக ஏதோ பேசிக்கொண்டு மரபெஞ்ச்சுக்கு வந்தனர்.. அவள் பெரியப்பா--அந்தப் பெரியவர்--ரிஷிக்கு ஏதோ விளையாட்டுக் காட்டிக் கொண்டிருந்தார்.

தூக்குக் கூடையைத் திறந்தபடியே, "ஒண்ணு சொன்னா ஆச்சரியப்
படுவீங்க.. நானும் கிரிஜாவும் இன்னிக்கு அதிகாலையிலேயே உங்களைப் பார்த்து விட்டோம்!" என்றாள் தமா.

பளீரென்று வெட்டிய மின்னல் மாதிரி மாதுரியின் முகத்தில் ஒரு வியப்பு ரேகை வெட்டி விட்டுப் போனது. "அப்படியா?" என்று திகைத்தவள் "எங்கே பார்த்தீர்கள்?" என்று கேட்ட படியே, மெக்-டொனால்டின் ப்ரென்ச் ஃப்ரைஸ் பொட்டலத்தை எல்லோரும் சாப்பிடுவதற்கு வாகாகப் பிரித்து வைத்தாள்.

"எங்கே தெரியுமா?" என்று கிரிஜா அதற்குள் சொல்லாமல்
"சஸ்பென்ஸ்.." என்று சிரித்தபடி உருளைக்கிழக்கு குச்சி ஃப்ரைஸ் ஒன்றை எடுத்து வாயில் போட்டுக் கொண்டாள். போட்டுக் கொண்ட அது, இன்னொன்று கேட்டு உமிழ்நீரைச் சுரக்கச் செய்தது.

"பாவம்டி.. சொல்லிடலாம்.. அவங்க திகைச்சுப் போயிட்டாங்க.." என்று ஃபாயில்ஸ் கவர் போட்டுச் சுற்றியிருந்த சாப்பாட்டுப் பொட்டலத்தைப் பிரித்தாள் தமா.. "வெரைட்டியா சித்ரா அன்னம் தயாரித்துக் கொண்டு வந்தோம்.. உங்க டேஸ்ட்டுக்கு எப்படியிருக்கும்னு தெரியலே!" என்றவள், "இந்த தேங்காச்சாதம் எப்படியிருக்கு, சொல்லுங்க.." என்ற்படி, எல்லாருக்கும் கொண்டு வந்திருந்த தேங்காய்சாதத்தைக் கரண்டியில் எடுத்துப் பரிமாறினாள். கிரிஜா ஸ்பூன்களை எடுத்துப் பரப்பி வைத்தாள்.

"ப்ளீஸ்.. எங்கே எங்களைப் பாத்தீங்கன்னு சொல்லிடுங்க... என்னாலே இந்த சஸ்பென்ஸ எல்லாம் தாங்க முடியாது!" என்று மாதுரியின் கணவர், குமார் பக்கம் சிப்ஸ் பாக்கெட்டை நகர்த்தினார்.

"இன்னிக்கு அதிகாலைலே மேகக்கூட்டம் பாக்கலாம்னு எங்க காபின் ஸிடஅவுட்லேந்து பாக்கறச்சே, பக்கத்துப் பள்ளத்தாக்குப் பாதைலே நீங்கள்ளாம் நடந்து போயிண்டிருந்தீங்க!"

"நாங்களா?" என்று யோசனையுடன் இழுத்த மாதுரியின் அண்ணன், "கரெக்ட்.. அதிகாலைலே ஜாக்கெட் போட்டுண்டு வாக்கிங் கிளம்பிட்டோம்; எல்லாரும் கிளம்பினோம் என்றாலும் ஒரு வேலையா நான் உடனே எங்க கேபினுக்குத் திரும்பிட்டேன்" என்றார்.

"அப்போ நீங்க போட்டிண்டிருந்த ஜாக்கெட்டின் நிறம் நீலம் தானே?" என்று ஆவலுடன் கேட்டாள் கிரிஜா.

"வாவ்! எப்படி இப்படி கரெக்டா சொல்றீங்க?.."

"எங்க காபின்லேந்து தான் அந்தப் பாதையெல்லாம் கிளியரா தெரியுதே?.. இன்ஃபாக்ட் உங்களையெல்லாம் நாங்க பாத்திட்டு பெரிய ரகளையே ஆயிடுத்து," என்று சொல்லிச் சிரித்தாள் கிரிஜா.

"ரகளையா?.. ஓ, என்ன சொல்றீங்க?..." என்றார் மாதுரியின் கணவர் சுரேஷ்.

"சீ.. சும்மா இரு; உனக்கு எப்பவும் இப்படி தமாஷ் தான்!" என்று அவளை அடக்கி விட்டு அவர்கள் பக்கம் திரும்பி, "ஒண்ணுமில்லீங்க.. புடவை காஸ்ட்யூமோட இவங்களைப் பாத்துட்டோமா, உடனே இந்தியர்கள்னு தெரிஞ்சிடுத்து.. அடுத்தாப்பலே எந்த மாநிலத்தைச் சேர்ந்தவ்ங்கன்னு எங்களுக்குள்ளே விவாதம். கடைசிலே ஜெயித்தது என்னவோ கிரிஜாதான்.. அவதான் தமிழ்நாட்டைச் சேர்ந்தவங்க தான் இவங்கன்னு கரெக்டா சொன்னா!" என்றாள் தமா.


"ஓ.. ஒண்டர்புல்!" என்று சொல்லிவிட்டு தெற்றுப்பல் தெரிய சிரித்தாள் மாதுரி..

"இப்போ நீங்களும் அவரும் சுவாரஸ்யமா ஏதோ டிஸ்கஸ் பண்ணிகிட்டு வந்தீங்களே?.. " சுரேஷைக் காட்டி கணவனிடம் கேட்டாள் தமயந்தி. "என்னன்னு தெரிஞ்சா எங்களுக்குத் தெரிஞ்சதை நாங்களும் சொல்வோம்லே!"

புளியோதரையை ஒரு ஸ்பூன் வாயில் போட்டுக்கொண்டே, "ஓ.. அதையாக் கேக்கறே?" என்று சிரித்தான் குமார். சிரித்த சிரிப்பில் அவனுக்குப் புரையேறி விட்டது..

"என்னங்க நீங்க, அவரைப் போட்டு.." என்று உதவிக்கு வந்தார் சுரேஷ். "இங்கே டி.வி.லே ஒளிபரப்பாகுற விளையாட்டுப் போட்டி 'சர்வைவர் சமோவா' ப் பத்தித் தான் பேசிகிட்டு வந்தோம்.. கடைசிலே ரஸல் தான் ஜெயிப்பார்ங்கறது உங்க கணவரோட கட்சி.."

"இல்லே.. ஷாம்போ தான் ஜெயிப்பாங்க, பாருங்க.." என்றாள் கிரிஜா. "ஏதாவது நடந்து ஷாம்போ ஜெயிக்க நிறைய சான்ஸ் இருக்கு!"

"இல்லே.. பிரட் தான்" என்றாள் தமயந்தி, தயிர் சாத பொட்டலத்தைப் பிரித்துக் கொண்டே.

"நீங்க என்ன சொன்னீங்க?" மாதுரி தன் கணவனைப் பார்த்துக் கேட்க, "என்னோட ஓட்டும் ரஸலுக்குத் தான்.. இதுலே குமாருக்கும் எனக்கும் ஒரே கருத்து தான்" என்றார் அவர்.

"அப்போ, பிரகாஷ் கருத்து என்னவோ?"

"இதுலே சொல்றத்துக்கு ஒண்ணுமில்லே; ஆட்டத்திலே நட்டாலி, மிக் எல்லாம் இருக்காங்க.. கடைசிலே மிஞ்சற் மூணு பேர்லே, என்ன விநோதம் வேணுமானாலும் ந்டந்து யார் வேணா ஜெயிக்கலாம்.. ஏன்னா, இந்த ஜூரிங்க என்ன செய்வாங்கன்னு யாரும் சொல்ல முடியாது.." என்றான் பிரகாஷ்.

"ஆளாளுக்கு ஒருத்தரைச் சொன்னா எப்படி? க்டைசிலே ஜெயிக்கப் போறது யாருங்கறது ஒன் மில்லியன் டாலர் க்வெஸ்டின் இல்லையா?" என்றார் மாதுரியின் பெரியப்பா.

"ஓ..ஓ... பெரியப்பா கூட இதப் பார்க்கறா?.. " என்று கிரிஜா கைகொட்டிச் சிரிக்க,

"பெரியப்பா என்ன, மணிவண்ணனைக் கேட்டால் கூடச் சொல்லுவான்" என்று பிரகாஷ் சொல்ல அவர்கள் சிரித்த சிரிப்பைப் பார்த்து அப்பொழுது தான் ஒரு டிரக்கில் வந்து இறங்கிய ஒரு அமெரிக்க குடும்பம, என்னவோ ஏதோ என்று இவர்கள் பக்கம் திரும்பிப் பார்த்தது.

சாப்பிட்டு முடிந்ததும், வேஸ்ட்டையெல்லாம் திரட்டி பக்கத்திலிருந்த டிராஷில் போட்டு விட்டு வந்தனர். காபினிலிருந்து கிளம்பும் பொழுது தான் ரிஷிக்கு கிரிஜா பருப்பு சாதம் ஊட்டி யிருந்தாள். அதனால் இப்போது ஜூஸ் பாட்டிலை பையிலிருந்து எடுத்துக் கொடுத்தாள். அவன் பாப்-டார்ட் வேண்டுமென்றான். "உன்னோட கார் ஸீட்டில் இருக்கு; அப்புறம் எடுத்துக் கொடுக்கிறேன்" என்றாள். குழந்தைக்கு என்ன புரிந்ததோ, சமர்த்தாக போதுமென்று ஜூஸ் பாட்டிலேயே ஆழ்ந்து விட்டது.

மாதுரி குடும்பம் அதிகாலையிலேயே கிளம்பி முடிந்த வரை எல்லா இடங்களையும் பார்த்து விட்டு இப்பொழுது கேபினுக்குத் திரும்பிக் கொண்டிருக்கிறார்களாம்.. இவர்கள் இப்பொழுது தான் மலைப் பாதையின் மேல் நோக்கிச் செல்வதால், இந்த இடத்திலிலேயே விடைபெற்றுக் கொண்டனர்.

வருந்தி வருந்தி மாதுரி கூப்பிட்டதினால் முடியாது என்று சொல்ல முடியவில்லை. "நாளைக்கு உங்களிடத்திற்கு வருகிறோம்" என்று தமா அவள் காபின் எண் வாங்கிக் கொண்டாள்.

"ஒன்பது மணிக்கு வந்து விடுங்கள்.. ஒன்றாகவே சேர்ந்து சாப்பிட்டு விடலாம்" என்றாள் மாதுரி.

"சரி.." என்று தமா சொல்லி விட்டாளே தவிர, நாளை என்ன செய்வது என்பது தீர்மானிக்க முடியாமல் இருந்தது.. முதலில் அப்பாவுடன் தில்லிக்குப் பேசி நடந்ததை எல்லாம் சொல்ல வேண்டும் என்கிற எண்ணமே அவள் மனசு பூராவும் ஆக்கிரமித்துக் கொண்டிருந்தது.

(தேடல் தொடரும்)














2 comments:

Shakthiprabha (Prabha Sridhar) said...

"நான் போகின்ற பாதையெல்லாம் உன் பூமுகம் காணுகின்றேன்"

அன்பு விசித்திரமானது :D

ஜீவி said...

Shakthiprabha said..

//அன்பு விசித்திரமானது:D //

இந்த அன்பு சமாச்சாரமே இப்படித்தான்;அதுவே விசித்திரமாக இருப்பது மட்டுமின்றி, எல்லாவற்றையும் விசித்திரமாகத் தோன்றவும் வைக்கும். மாயையோ?..

அன்பை விட்டு விட்டு வேறு எதுவும் கொள்வரோ என்றுதான்தோன்றுகிறது..
இந்தத் தொடரின் விசேஷம் அதுதான்!
கதைப் பகுதியில், அறுக்க முடியாத பந்தமாக அன்பு கோலோச்சும். இன்னொரு பகுதியில். 'ஆத்ம தரிசனம்' தேடி...

தொடர்ந்து வருவதற்கு நன்றி.

Related Posts with Thumbnails