ஆன்மிகத்தின் அடுத்த கட்டத்தை நோக்கி....
"உங்கள் அப்பா அம்மா அரியலூரில் தானே இருப்பதாகச் சொன்னே?" என்று கிரிஜா பக்கம் திரும்பி மாதுரி கேட்ட பொழுது கிரிஜா "ஆமாம், மாதுரி" என்று தலையசைத்தாள். "அம்மா, அண்ணா, மன்னி எல்லோரும் அரியலூரில். அப்பா மட்டும் டெல்லி போயிருக்கார்!" என்றாள்.
"அப்பாக்கு டெல்லிலே வேலையோ?" என்றாள் மாதுரி, பறங்கிக்காய் கூட்டை கொஞ்சம் எடுத்து தட்டில் போட்டுக் கொண்டபடி. கூட்டு தித்தித்து வழியாமல் நாக்குக்கு இதமாக இருந்தது.
"வேலைன்னு இல்லே. அப்பா உபந்யாசம் பண்ணுவா. டெல்லிலே ஒரு பெரிய சதஸ் நடக்கப்போறது. அதுலே கலந்துக்க கூப்பிட்டிருக்கா. அதுக்காகப் போயிருக்கார்" என்று கிரிஜா சொல்லிக்கொண்டிருக்கையில் ஆச்சரியத்துடன் திரும்பி அவள் பக்கம் பார்த்தார் மாதுரியின் பெரியப்பா.
"ஓக்ரா கறி தூள்.. தக்காளி ரஸம் தனியா ஒரு கப்லே வேணும்" என்றான் குமார்.
"சதஸ்ஸா.. அதுலேலாம் கலந்துக்கணும்னா பெரிய பண்டிதராத்தான் உங்கப்பா இருப்பார்.. எல்லாம் பூர்வ ஜென்மப் புண்ணியம்" என்றார் பெரியப்பா. அவரே ஒரு நிமிடம் தாமதித்து, "காஞ்சிபுரத்திலே பெரியவர் அவர் காலத்லே ஒரு சதஸ் ஏற்பாடு பண்ணியிருந்தார், பார்! எங்கேயிருந்தெல்லாமோ எத்தனை பண்டிதர்கள் வந்திருந்தார்கள் என்கறே?.. சில்ப சாஸ்திரம் பற்றி விவாதம் நடந்த அன்னிக்கு அதைப் பாக்கப் போய் அசந்து போயிட்டேன்.. அவ்வளவு நன்னா இருந்தது" என்றார்.
"சதஸ்னா என்ன பெரிப்பா?" என்றாள் மாதுரி, பச்சடி பாத்திரத்தை கிரிஜா பக்கம் நகர்த்தியபடி.
"மாநாடு மாதிரின்னு வைச்சுக்கோயேன். சாஸ்திர விற்பன்னர்களெல்லாம் கலந்திண்டு பெரிய அளவிலே விவாதம் நடத்துவார்கள். ஒவ்வொரு துறைலேயும் பண்டிதர்கள் கலந்திண்டு சந்தேகங்களை நிவர்த்தி செஞ்சிண்டு, விவாதிச்சு கருத்துக்களை நிறுவுவார்கள். விஷயம் தெரிஞ்சவங்களுக்கு இதிலெல்லாம் கலந்திண்டு விவாதிகறதைக் கேக்கறதே கொண்டாட்டம் தான்! மோர்க் குழம்பிலே என்ன, சேப்பங்கிழங்கா போட்டிருக்கே?"
"ஆமாம் பெரிப்பா.. மாவா வெந்திருக்கு.. போட்டுக்கோங்கோ."
"எங்கப்பாவும் அம்மாவும் இப்போ அங்கே தான் இருக்கா. கிருஷ்ணா மாமா-- அதான், கிரிஜா அப்பாவைப் பார்க்கப் போய் அவர் கூடவே அங்கே தங்கிட்டா. அம்மா சொன்னா. அங்கேயிருந்து வரவே மனசு வர்றலியாம்; அவ்வளவு நன்னா இருக்காம்.." என்று தமா சொன்ன போது அவள் பக்கம் திரும்பி அவள் முகம் பார்த்த மாதுரிக்கு திரும்பியும் தன் அம்மா ஞாபகம் வந்துவிட்டது. அதே நினைவில் "அப்படியாம்மா?.." என்று கேட்டாள். ஒரு நொடியில் தான் சொன்னதை உணர்ந்து, "அப்படியா, தமா?" என்று திருத்திச் சொன்னாள்.
அதற்குள் அவள் தடுமாறியதைப் புரிந்து, "ரொம்ப மரியாதையெல்லாம் வேண்டாம். தமான்னே என்னைக் கூப்பிடலாம்" என்றாள்.
"ஓ! வெல்! அதுக்கில்லே தமா! ;உன்னைப் பாக்கறச்சே என்னென்னவோ நினைவெல்லாம் மனசிலே முட்டி மோதறது.." என்று மாதுரி சொன்ன போது "தனக்கும் அப்படித்தான் இருக்கிறது" என்று சொல்ல நினைத்தாள் தமயந்தி. ஆனால் ஏனோ சடாரென்று இப்பொழுது அதைச் சொல்லத் தோன்றவில்லை.
ஆனால் மாதுரிக்கு சட்டென்று நினைப்பதைச் சொல்ல முடியாமல் தான் தடுமாறுவதற்குக் காரணம் என்னவென்று இப்பொழுது லேசாகப் புரிகிற மாதிரி இருந்தது. தன் மனசின் அடி ஆழத்தில் லேசான சலனம் இது பற்றி இருப்பது தெளிவாகத் தெளிந்தது. தன் அம்மாவின் மேல் அவள் வைத்திருந்த அதீத பாசமும் அன்பும் தன் அம்மா மாதிரியே அரசுபுரசலான தோற்றம் கொண்ட யாரைப்பார்த்தாலும் நம் அம்மா மாதிரி இருக்கிறார்களே என்று நினைக்கத் தோன்றுகிறதோ என்கிற ஐயமும் அவளுக்கு இருந்தது. அதற்காக அப்படி நினைக்காமல் இருக்கவும் முடியவில்லை அவளால். வெளித் தோற்றத்தைத் தாண்டி தமயந்தியைப் பார்க்கும் பொழுதே கரகரவென்று நெஞ்சில் சுரக்கும் ஒரு அன்பை அவளால் உணர முடிந்தது. இந்த உணர்வு கூட பொய் என்று அவளால் விட்டேத்தியாக ஒதுக்க முடியவில்லை. இன்னொரு பக்கம், 'மனசில் வைத்துக் கொண்டு ஏன் புழுங்குகிறாய், சொல்லித் தொலை' என்று யாரோ கழுத்தைப் பிடித்து நெட்டித் தள்ளுவதைப் போன்ற உணர்வு ஏற்பட்டது.
அந்த வேகத்தில் சொன்னாள். "அப்படியாம்மான்னு உன்னைப் பார்த்து நான் கேட்டது வார்த்தை வழுவிச் சொல்லலே. ரொம்ப இயல்பா உணர்ந்து அனிச்சையாய் நான் அப்படி உன்னைக் கூப்பிட்டது தான் ஆச்சரியம்"என்று சொன்ன மாதுரி ஒரு நிமிடம் நிறுத்தி,"இப்போ சொல்லிடறேன், தமா!" என்று தமாவைக் கூர்மையாகப் பார்த்து விட்டு பெரியப்பா பக்கம் திரும்பினாள். சாப்பிடுவதை ஒரு நிமிடம் நிறுத்தி எல்லோரும் மாதுரியையே பார்த்தனர்.
"பெரிப்பா.. தமாவைப் பாருங்க.. யார் மாதிரி இருக்கான்னு சொல்லுங்க, பார்ப்போம்.."
பெரியப்பா இப்பொழுது தான் முதல் முறை பார்ப்பது போல் தமயந்தியை உற்றுப் பார்த்தார். "கண்ணாடியை சரியாப் போட்டுண்டு பாருங்க பெரியப்பா" என்று கிண்டலடித்தான் குமார்.
"ஓக்கே.. பாத்தாச்சு.. சொல்லிடட்டுமா.."
"சொல்லுங்க..பெரிப்பா.." என்று அவசரப்படுத்தினாள் மாதுரி.
அத்தனைபேரின் பார்வையும் தன் பக்கம் திரும்பியிருந்தது லேசான குறுகுறுப்பைக் கொடுத்தது தமாவுக்கு.
"நம்ம சுகுணா மாதிரி தானே இருக்கா?" என்று பெரியப்பா சொன்ன போது மாதுரியின் அண்ணனுக்கு இத்தனை நேரம் தன் மனத்தில் நிழலாடிய ஏதோ ஒன்று நிஜமாகப் பளிச்சென்று புரிந்த மாதிரி இருந்தது.
மாதுரிக்கு தான் என்ன நினைத்து இத்தனை நேரம் குழம்பிக் கொண்டிருந்தாளோ அதையே சரியென்று இன்னொருவர் டிக் அடித்த சந்தோஷம். அந்த சந்தோஷம் இனம்புரியாத பூரிப்பாக உருவெடுத்து கையிலிருந்த ஸ்பூனைத் தட்டில் போட்டு விட்டு கெட்டியாக தமாவின் கைகளை வாஞ்சையுடன் இறுகப் பற்றிக் கொண்டாள்.
திடீரென்று அங்கே பீறிட்ட அன்பில் நனைந்த சிலிர்ப்பில், 'சுகுணாவா? எந்த சுகுணா? தனக்கு தெரியாத பெயராய் இருக்கிறதே' என்று யோசனையில் ஆழ்ந்தாள் தமா.
(தேடல் தொடரும்)
8 comments:
//இப்படி நிறைய இருந்ததுகள்.
கூட்டு தித்தித்து வழியாமல் நாக்குக்கு இதமாக இருந்தது.
///
இயல்பான நடை. ரசித்தேன். தொடருங்கள்.
arumaiyaana narration! saralamaa irunthathu... usually romba slow-vaa thamizh padikkara enakku, intha write-up konjam vegaththa koduththathu pola thoniththu!
really good read...
//'சுகுணாவா? எந்த சுகுணா? தனக்கு தெரியாத பெயராய் இருக்கிறதே' என்று யோசனையில் ஆழ்ந்தாள் தமா.//
நாங்களும் அந்த சுகுணா யார் என்ற
யோசனையில் இருக்கிறோம்.
கதை அருமையாய் இருக்கிறது.
@ Shakthiprabha
நன்றி. தொடர்ந்து வாருங்கள்.
@ Matangi Mawley
நன்றி. படிக்கும் விஷயத்தில் இருக்கும் ஈடுபாடும் காரணமாக இருக்கலாம். தங்கள் ரசனைக்கு நன்றி. தொடர்ந்து வாருங்கள்.
@ கோமதி அரசு
தமயந்திக்குத் தான் தெரியாதே தவிர
நமக்குத் தான் சுகுணா யார் என்று தெரியுமே!
நன்றி. தொடர்ந்து வருகை தாருங்கள்.
தொடர்கிறேன்...
@ ஸ்ரீராம்
நன்றி, ஸ்ரீராம். ஒரே வார்த்தையானாலும் மிகுந்த சந்தோஷத்தைக் கொடுத்தது.
Post a Comment