ஆன்மிகத்தின் அடுத்த கட்டத்தை நோக்கி....
4. தூங்குகையில்....
பிரச்ன உபநிஷத்தில் சூரியன் பேரன் கார்க்கியன் கேட்ட கேள்விகளுக்கு பிப்பலாத முனிவர் தூக்கம் பற்றிச் சொன்னவற்றைப் பற்றி தேவதேவன் விவரித்ததைத் தொகுத்துச் சொல்வதற்காக அவர் குழுவைச் சேர்ந்த சந்திரமோகன் முன்வந்தார்.
நெடுநெடுவென்று இருந்தார் சந்திரமோகன். தீர்க்கமான பார்வையுடன் இதழோரங்களில் எந்நேரமும் சிரிக்கும் புன்னகையுடனே மைக்கைப் பற்றினார். "அயர்சியடைஞ்ச உடல் உறுப்புகள் களைப்பு நீங்கறத்துக்கு எடுத்துக்கற ஓய்வுதான் தூக்கம்ன்னு பொதுவா நாம நெனைக்கிறோம். அதனாலத் தான் மனுஷனுக்குத் தூக்கங்கறது அத்யாவசியமான ஒண்ணுன்னும், அது இறைவன் நமக்குத் தந்த கொடைன்னும் நம்மிடையே கருத்துக்கள் உண்டு. ரொம்ப நேரம் தூங்கின ஒரு தூக்கத்திற்குப் பின்னாடி களைப்பு நீங்கி இயல்பா ஏற்படற உற்சாகமும் இந்தக் கருத்துக்கு வலு சேக்கறது.."
திண்ணையில் பக்கத்தில் அமர்ந்து சிநேக பாவத்துடன் பேசுகிற சொந்தத்தில் இருந்தது சந்திரமோகனின் குரல். "மனுஷன் விழிச்சிருக்கற நேரத்லே அவனோட அவயவங்கள் அத்தனைக்கும் வேலை இருக்கு.. ஒரு நொடிக்கும் குறைஞ்ச நேரத்லே ஒரு விஷயத்லே கவனம் செலுத்தறதுக்குக் கூட வெளிப்பார்வைக்குத் தெரிஞ்ச தெரியாத உடல் உறுப்புகளோட, அதோட அத்தனை நரம்பு சார்பு மையங்களும் அந்த செய்யற செயலோட செயல்பாட்டோட சம்பந்தப்பட்டுப் போய்டறது. நாள் பூராவும் ஈடுபடற வேலைங்களைப் பத்திச் சொல்லவே வேண்டாம்.
"அப்படி உழைச்சுக் களைப்பதற்கு ஓய்வு இன்றியமையாத தேவை தான். அந்த அடிப்படைத் தேவையை கணக்கில் கொண்டு, மனிதனுக்கு இறைவன் அளித்த தூக்கமும் ஒரு வரப்பிரசாதம் தான். இருந்தாலும், அந்த அடித்துப் போட்ட மாதிரியான ஆழ்ந்த தூக்கத்திலும், சில நேரங்கள்லே கனவு காண்றோம். அந்த கனவுலே நனவுலே நடக்கற மாதிரியே காட்சிகள் தத்ரூபமா அமையறது ஆச்சரியமாத் தான் இருக்கு. நாமே அந்த காட்சிகளில் ஒரு பாத்திரமா பங்கு கொள்கிற மாதிரி, அதை நாமே பார்த்து ரசிக்கிற மாதிரி அல்லது பதறுகிற மாதிரி.. விழிச்சுப் பாக்கறச்சே தான், இத்தனை நேரம் கண்ட காட்சியெல்லாம் நிஜமா நடந்தது இல்லைன்னு தெரியறது. நாம நன்னா தூங்கிண்டிருக்கறச்சேயே, அந்தத் தூக்கத்திலேயே அந்த கனவுக் காட்சிகள்லே நாம எப்படி சம்பந்தப்பட்டுப் போனோம்னு தெரியலே. நம்ம கையப் பிடிச்சு இழுத்திண்டு போய் நம்மையும் அந்தக் காட்சிகளோட சம்பந்தப்படுத்தினது யார்னு தெரிலே. நாமோ தூங்கறோம்; நாமே பங்கு கொள்ற மாதிரியான அச்சு அசலான காட்சிகளை நாமே பாக்கறோம்னா இது என்ன கண்கட்டு வித்தைன்னு தெரிலே. இல்லே, நம்மை மெஸ்மரிஸம் பண்ணின மாதிரி அலைக்கழிச்சிட்டு உண்மைலே இந்தக் கனவையெல்லாம் ரசிப்பது நாம் அல்லாத வேறு யாரோவாங்க்கற சந்தேகம் கூட அப்பப்போ ஏற்படறது..
"எஸ். இப்படியான ஒரு சந்தேகம் தான் அந்த கார்க்கியனுக்கு அன்னிக்கு ஏற்பட்டது. அதனால தான் 'மனிதன் அயர்ந்து தூங்கறச்சே, அந்தத் தூக்கத்தோட ஆக்கிரமிப்லே அகப்பட்டுண்டு தூங்கறவை எவை-எவை, அந்த ஆக்கிரமிப்லேந்து விடுபட்டு விழிச்சிண்டிருக்கறவை எவை- எவை, அந்தஆக்கிரமிப்பில்லே அகப்பட்டிண்டுகறச்சேயே கனவு காண்பது யார், தூங்கறவனா இல்லை, வேறு யாரோவான்னு கேட்கிறான். கனவுகாண்ற அந்த தேவன் யார்னுங்கறதுதான் அவனோட கேள்வி.
"அதுக்கு பிப்பலாத முனிவர் சொல்றார். "தூங்கறச்சே தூங்கறவனோட புலன்கள் அத்தனையும் அவனோட மனசிலே ஒடுங்கறதாகவும், பிராண அக்னி மட்டும் அந்த நேரத்தில்லே விழிச்சிண்டிருக்குன்னு பதிலளிக்கிறார். பிராணனைப் பற்றி நாமோ முன்னாடியே விவரமா பாத்திட்டோம். அப்போ பாத்ததையெல்லாம் இப்போ இந்த சமாச்சாரங்களோட இணைச்சுப் பார்த்துக்கலாம்.. இதே நேரத்தில்லே ஒண்ணைச் சொல்லணும்.. கனவு காண்கிறவன் யார்னு கார்க்கியன் கேட்ட கேள்வி ரொம்பவும் அர்த்தம் நிறைஞ்சதாத் தெரியறது. அதற்கான பதிலை தெரிஞ்சிக்கறதிலே உங்களைப் போலவே நானும் ரொம்பவும் ஆவலோடக் காத்திருக்கேன்" என்று சொல்லிவிட்டு அமர்ந்தார் சந்திரமோகன்.
சந்திரமோகனின் தொகுப்புரை கேட்டு தேவதேவன் புன்முறுவல் பூத்தார். "தொகுப்புரை என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும். சொன்னதையெல்லாம் தொகுத்துச் சொல்லி சொல்லாததையும் தொகுத்துச் சொல்றச்சே மேற்கொண்டு தொடரும் பொழுது விட்டுப் போனதையெல்லாம் தொட்டுச் சொல்ல நினைவில் கொள்ள முடிகிறது.. தொகுப்புரைக்கு மிக்க நன்றி, சந்திரமோகன்" என்று சொல்லி விட்டு, "நல்லது. இதுவரைக்கும் சொன்னவற்றில் எந்த ஐயமும் இல்லை அல்லவா?" என்று கேட்டு அவையைச் சுற்றிப் பார்த்து விட்டுத் தொடர்ந்தார்.
அவை மிகுந்த ஆர்வத்துடன் அமர்ந்திருந்தது. அந்த ஆர்வம் சலசலப்பில்லாத அந்த அமைதியில் தெளிவாகத் தெரிந்தது. "இப்பொழுது மேற்கொண்டு பார்ப்போம்" என்று தொடர்ந்தார் தேவதேவன். "ஒன்று நன்றாகத் தெரிகிறது. புலன்கள் மனத்தில் ஒடுங்குவதால் தான் தூக்கம் ஏற்படுகிறது என்று நன்றாகத் தெரிகிறது. . தூக்கத்தின் ஆட்படுதலுக்கு உள்ளாகாமல் பிராண அக்னி விழித்திருப்பதாக முனிவர் வாக்கிலிருந்து தெரிகிறது. கனவுகளைக் காண்பவர் யார் என்று பிப்பலாத முனிவரிடம் கார்க்கியன் கேட்டதற்கு அவர் சொன்ன பதிலைப் பார்ப்பதற்கு முன்னால், முனிவர் சொன்ன அந்த மூன்று வார்த்தைகளைப் பற்றிப் பார்த்து விடுவோம். அசோகன் கேட்டார்லியா, அதைப் பத்தி தான். முனிவர் சொன்ன கார்ஹபத்யம், அன்வாஹார்யபசனம், ஆஹவனியம் என்கிற சொற்கள் எல்லாம் என்னன்னு பார்த்தா அவையெல்லாம் யாகச் சொற்கள் என்று தெரிகிறது.. . யாகம் செய்யும் பொழுது புழங்கும் அதற்கானச் சொற்களைச் சொல்லி, தூங்குகையில் தூங்கும் உடலில் வாயுக்கள் எப்படிச் செயல்படுகின்றன எப்பதை விளக்குகிறார் முனிவர். உடலில் செயல்படும் வாயுக்களைப் பற்றி இதற்கு முன்னாலேயே பார்த்துவிட்டபடியால், அவைபற்றி இப்பொழுது வேண்டாம். என்னன்ன வாயுக்கள் என்பதை நினைவில் மட்டும் கொள்ளுங்கள்.
"கிரகஸ்தன் செய்யும் யாகங்களில் முக்கியமான ஒன்று அக்னிஹோத்ரம் என்னும் யாகம். இந்த யாகத்தை செய்விப்பவர் அமர்ந்திருக்கும் இடத்திற்கு பின்புறம் ஒரு குண்டத்தில் அக்னி எரிந்து கொண்டிருக்கும். இதுவே கார்ஹபத்ய அக்னி என்று அழைக்கப்படுகிறது. மனிதன் தூங்குகையில் உடலின் உள்ளே செயல்படும் அபான வாயுக்கு இந்த கார்ஹபத்ய அக்னியை எடுத்துச் சொல்லி அதுமாதிரி என்கிறார்.
"யாகத்தை செய்விப்பவருக்கு வலது பக்கத்தில் அரைவட்ட வடிவில் குண்டத்தில் எரியும் அக்னிக்குப் பெயர் அன்வாஹார்யபசனம். இந்த அக்னியைப் போல வியானன் என்று சொல்கிறார்..
"யாகத்தை செய்விப்பவருக்கு முன்னால் சதுரவடிவில் எரியும் குண்டத்து அக்னிக்குப் பெயர் ஆஹவனீயம். கார்ஹபத்யத்திலிருந்து எடுக்கப்பட்டு அக்னியாய் வளர்க்கப்படுவது இது. தூக்கத்தில் பிராணன், அபானனிலிருந்து பிரிந்தெழுந்து செயல்படுவதால், கார்ஹபத்ய அக்னி அபானனுக்கும், ஆஹவனீயம் பிராணனுக்கும் உவமைபடுத்தி அவைமாதிரி என்று சொல்கிறார்..
"யதுச்ஸ்வாஸ நி:ச்வாஸெள ஏதாவாஹூதீ ஸமம் நயதீதி ஸ ஸமான: மனோ ஹ வாவ யஜமான இஷ்ட்டஃபலமேவ உதான: ஸ ஏனம் யஜமானம் அஹரஹர் ப்ரஹ்ம கமயதி "
"உள்மூச்சு, வெளிமூச்சு இந்த இரண்டும் யாகத்தின் இரண்டு ஆஹூதிகள். இந்த இரண்டையும் கண்காணித்து சமமாக இயக்கச் செய்வது சமானன். மனமே எல்லாவற்றிற்கும் தலைவன். வாழ்க்கையாகிய இந்த யாகத்தினை நடத்துகையில் வேண்டும் பலன் இறைவனை நெருங்குதல். உதானனே கூட இருந்து அனுதினமும் இறைவனிடம் சேர்ப்பிப்பதால் அதுவே நாடிய பலன்.
"நாம் உறங்குகையில் உடலில் செயல்படும் வாயுக்களைப் பற்றி அக்னிஹோத்தர யாகத்தை உதாரணம் காட்டி பிப்பலாத முனிவர் கார்கியனுக்கு விளக்குகிறார். ஒவ்வொரு காலத்திலும் எதெது எல்லோருக்கும் தெரிந்ததாக இருக்கிறதோ அந்தந்த தெரிந்ததைக் கொண்டு தெரியாததை தெரியப்படுத்துவது வழக்கமாதலால், தெரிந்த யாக உபாசனைகளைக் கொண்டு தெரியாத-- மனிதன் தூங்குகையில் உடலில் செயல்படும் வாயுக்களின் தன்மை பற்றி-- முனிவர் கூறினார்.
"அடுத்து கார்க்கியன் கேட்ட கேள்வியான கனவு காணும் அந்த தேவன் யார் என்னும் ஐயத்திற்கு பிப்பலாத முனிவர் சொன்ன விளக்கங்களைப் பார்ப்போம்" என்றார்.
(தேடல் தொடரும்)
7 comments:
. ///நாம நன்னா தூங்கிண்டிருக்கறச்சேயே, அந்தத் தூக்கத்திலேயே அந்த கனவுக் காட்சிகள்லே நாம எப்படி சம்பந்தப்பட்டுப் போனோம்னு தெரியலே. நம்ம கையப் பிடிச்சு இழுத்திண்டு போய் நம்மையும் அந்தக் காட்சிகளோட சம்பந்தப்படுத்தினது யார்னு தெரிலே. நாமோ தூங்கறோம்; நாமே பங்கு கொள்ற மாதிரியான அச்சு அசலான காட்சிகளை நாமே பாக்கறோம்னா இது என்ன கண்கட்டு வித்தைன்னு தெரிலே//
எனக்குள்ளே ரொம்ப நாளா கேட்டிட்டு இருக்கிற கேள்வி. ரொம்ப தத்துவ விசாரமா இருக்கிறதுனால பொறுமையா படிச்சிட்டு இருக்கேன் ஜீவி சார்.
@ சிவகுமாரன்
போகப்போக எல்லா விஷயங்களையும் அலசிப் பார்க்கலாம். இந்தத் தேடலில் நான் உணர்வதைச் சொல்லிக் கொண்டு வருகிறேன். உங்களுக்கென்று ஏதாவது விளக்கம் கிடைக்கையில் பகிர்ந்து கொள்ளத் தவறாதீர்கள். அப்படிப்பட்ட பகிர்தல்கள் எதையும் மேலோட்டமாகப் பார்க்க விடாமல், தீட்சண்யமாக உற்று நோக்க வழி கோலும். அவை நம் சிந்தனையை வளப்படுத்தும்.
தங்கள் வருகைக்கும் பகிர்ந்தலுக்கும் நன்றி. தொடர்ந்து வாருங்கள்.
//அப்படி உழைச்சுக் களைப்பதற்கு ஓய்வு இன்றியமையாத தேவை தான். அந்த அடிப்படைத் தேவையை கணக்கில் கொண்டு, மனிதனுக்கு இறைவன் அளித்த தூக்கமும் ஒரு வரப்பிரசாதம் தான்.//
நிச்சியமாய் வரப்பிரசாதம் தான். பாய் விரித்து தூங்குபவனும் வாய் விரித்து தூங்குகிறான், பஞ்சணையில் நான் படுத்தும் நெஞ்சிலே அமைதி இல்லை என்று புலம்பும் நெஞ்சங்கள் எத்தனை.
உழைத்து களைத்து அடித்து போட்டது போல் தூக்கம் சிலருக்கு, உண்ட களைப்பில் தூக்கம் சிலருக்கு.
//அந்த கனவுலே நனவுலே நடக்கற மாதிரியே காட்சிகள் தத்ரூபமா அமையறது ஆச்சரியமாத் தான் இருக்கு. நாமே அந்த காட்சிகளில் ஒரு பாத்திரமா பங்கு கொள்கிற மாதிரி, அதை நாமே பார்த்து ரசிக்கிற மாதிரி அல்லது பதறுகிற மாதிரி.. விழிச்சுப் பாக்கறச்சே தான், இத்தனை நேரம் கண்ட காட்சியெல்லாம் நிஜமா நடந்தது இல்லைன்னு தெரியறது. நாம நன்னா தூங்கிண்டிருக்கறச்சேயே, அந்தத் தூக்கத்திலேயே அந்த கனவுக் காட்சிகள்லே நாம எப்படி சம்பந்தப்பட்டுப் போனோம்னு தெரியலே. நம்ம கையப் பிடிச்சு இழுத்திண்டு போய் நம்மையும் அந்தக் காட்சிகளோட சம்பந்தப்படுத்தினது யார்னு தெரிலே. நாமோ தூங்கறோம்; நாமே பங்கு கொள்ற மாதிரியான அச்சு அசலான காட்சிகளை நாமே பாக்கறோம்னா இது என்ன கண்கட்டு வித்தைன்னு தெரிலே. இல்லே, நம்மை மெஸ்மரிஸம் பண்ணின மாதிரி அலைக்கழிச்சிட்டு உண்மைலே இந்தக் கனவையெல்லாம் ரசிப்பது நாம் அல்லாத வேறு யாரோவாங்க்கற சந்தேகம் கூட அப்பப்போ ஏற்படறது..//
எனக்கும் உணர்வு ஏற்பட்டு இருக்கிறது.
நம் பெரியோர்கள் நீ ஏதாவது நினைத்துக் கொண்டு படுத்து இருப்பாய் அது தான் கனவு என்பார்கள்.
விஞ்ஞானிகள் ஆழ்மனதின் வெளிப்பாடே கனவு என்பார்கள்.
ஆத்மாவைத் தேடி நல்லா இருக்கிறது.
@ கோமதி அரசு
உடல் இயக்கத்தின் ஒவ்வொரு அம்சமும் வியக்கக் கூடிய ஒன்று.
அந்த வியப்பு வெறும் ஆச்சரியமாகப் போய்விடாமல், இந்தக் கொடையை நமக்களித்த இறைவனை நெஞ்சில் இருத்திக் கொண்டாடத்தான் ஒவ்வொரு நொடியும் நினைக்கத் தோன்றுகிறது. அந்தக் கொண்டாட்டம் தான் இறைபக்தியாக மலருகிறது.
உயர் அறிவு இறை நெறிக்கு இட்டுச் செல்லும்.
தங்கள் தொடர்வருகைக்கு மிக்க நன்றி.
நன்றி நன்றி...தூங்கும் பொழுது ஏற்படும் ஐயங்கள் எனக்கு நிறைய உண்டு. தெளிவு பிறக்க இறைவனை வேண்டி தொடருகிறேன்.
@ Sakthiprabha
வாருங்கள், ஷக்தி! தொடர்வதற்கு நன்றி.
Post a Comment