மின் நூல்

Sunday, October 30, 2011

பார்வை (பகுதி-6)

                    அத்தியாயம்--6

டாக்டர் சாந்தி அமெரிக்கா போய்த் திரும்புவதற்குள் தேவையான அத்தனை டெஸ்ட்டுகளையும் எடுத்து ரெடியாக வைத்திருந்தார்கள். சாந்தியும் அமெரிக்காவில் இது விஷயத்தில் பிரபல மருத்துவர்களை கலந்தாலோசித்து இருப்பார் என்று தெரிந்தது. அவர் இந்தியா திரும்பிய அடுத்த நாளே எனக்கான தீவிர சிகித்சைகள் ஆரம்பமாகி விட்டன. உள்ளூர் வெளி ஆசுபத்திரிகளிலிருந்து வேறே நாலைந்து பிரபல சர்ஜன்கள் வந்திருப்பதாக சுசீலா சொன்னாள்.

எனக்கு நீரிழிவு நோய் இல்லாதது நல்லதாகப் போயிற்று. சாந்தியே வியக்கும் மனஉறுதியும் சேர்ந்து கொள்ள எல்லாவிதமான சிகித்சைகளுக்கும் என்னை உட்படுத்திக் கொள்வதில் சிரமம் இல்லாது போயிற்று. நல்ல தெரிந்த மருத்துவர், சிறப்பான மருத்துவமனை, நல்ல சிகித்சைகள் என்று அமைந்ததில் என் உள்ளத்திற்கு எந்த பாதிப்பும் இல்லாமல் போயிற்று. இதனால் பார்வை இல்லையே தவிர மற்றபடி ஆரோக்கியமான சூழ்நிலையில் உடல் வளப்பம் கூடியது.

சுசீலா என்னிடம் சாந்தி பற்றிச் சொல்கையில் பாவமாக இருக்கும். 'சாந்திக்கு எந்நேரமும் உங்கள் குறையைப் பற்றியே நினைப்பு தாங்க. ராத்திரி பகல் வித்தியாசம் பார்க்காம நிறைய மெடிகல் ஜர்னல்கள் படிப்பதாகவும் இதற்கு ஏதாவது தீர்வு கண்டு விடத் துடிப்பதாகவும்' சொல்வாள்.

இரு மாத சிகித்சைக்குப் பின் ஒருநாள் நானே சாந்தியிடம் நேரடியாகக் கேட்டு விட்டேன். "டாக்டர்! எனக்காக இவ்வளவு கஷ்டப்படுகிறீர்களே?.. உங்களுக்கும் எவ்வளவு சிரமம்?.."

"அங்கிள்! இதுவே என் தொழில் இல்லையா?.. அதனாலே, சிரமம் என்று கிஞ்சித்தும் இல்லை; ஆயிரத்தில் ஒருவருக்குத் தான் இந்தளவுக்கு பார்வை நரம்புகள் சேதமடையும். அதில் நீங்கள் ஒருவராகப் போய் விட்டீர்கள். அதான் என் வருத்தம். எப்படியாவது உங்கள் குறையை நிவர்த்தி செய்து விடவேண்டுமென்று பார்க்கிறேன். அதான்.."

"ரொம்ப சரி. ஆனா இப்போ என் நிலைமை என்ன தெரியுமா, டாக்டர்?"

"சொல்லுங்க.." என்று சொன்ன சாந்தியின் குரலில் ஆர்வம் நிறைய இருப்பதாக எனக்குப் பட்டது.

எச்சில் கூட்டித் தொண்டையை ஈரப்படுத்திக் கொண்டு தொடர்ந்தேன். "எனக்கு அதை குறையாக உணராத மனசு வந்து விட்டது, டாக்டர்!" என்று அழுத்தம் திருத்தமாகச் சொன்னேன்.

"என்ன, அங்கிள், சொல்றீங்க.. எனக்குப் புரியலே."

"புரியற மாதிரி சொல்ல முயற்சிக்கிறேன், டாக்டர்! நான் சொல்றது குழந்தைத் தனமா இருந்தாலும், அது என் உணர்வுகள்னும், என் பார்வைக்காக இவ்வளவு சிரமப்படற உங்ககிட்டே அதைச் சொல்லாம, வேறு யாருகிட்டே சொல்லியாகணும் னும் எனக்குத் தோண்றதாலே, ரொம்ப யோசனைக்குப் பிறகு இன்னிக்கு சொல்லணும்னு தீர்மானிச்சிட்டேன்.." என்று நான் சொன்னபோது, "ஓ..எஸ்.. வெல்கம்! சொலுங்க, அங்கிள்" என்று டாக்டர் சாந்தி என்னை உற்சாகப்படுத்துகிற மாதிரி சொன்னார்.

அவர் கொடுத்த உற்சாகத்தில் தொடர்ந்தேன். "டாக்டர்! ஆரம்பத்தில கண் பார்வை போன போது ஐயோன்னு இருந்தது வாஸ்தவம் தான். இனிமேல் இந்த உலகத்தில் ஒண்ணையுமே நான் பாக்க முடியாதாங்கற இயலாமையை உணர்ந்த நேரத்தில் அந்த எண்ணம் இருந்தது உண்மை தான்." என்று சொன்னவன் மேற்கொண்டு தொடரக் கொஞ்சம் தயங்கினேன்.

சுசீலா, டாக்டர் இரண்டு பேருமே ஏதும் பேசாமல் நான் சொல்வதைக் கேட்டுக் கொண்டிருந்தார்கள்.

"ஆனா, நாளாக நாளாக, குறிப்பா உங்க ட்ரீட்மெண்ட் ஆரம்பிச்சதும் அது கொடுத்த சக்தியோ என்னவோ தெரியலே.. கொஞ்சம் கொஞ்சமா என் மனநிலை மாறிட்டது. சொல்லப்போனா, பார்வைங்கறது இல்லைங்கறதை சகஜமா, அது ஒரு குறையா நினைக்காத மனப்பாங்கு வந்திட்டது. நான் சொல்ல நினைக்கறதை சரியாச் சொல்லலைன்னு நெனைக்கிறேன்."

"ஏங்க! மனத்தளர்ச்சி அடையாதீங்க.. சாந்தி உங்களுக்காக ரொம்ப கஷ்டப்படறா.
பார்வை கிடைச்சிடும் நம்பறா.." என்றாள் சுசீலா.

"கிடைக்காட்டாலும் பரவாயில்லைங்கறத்துக்காகச் சொல்ல வர்றேன்"ன்னு நான் சொன்ன போது,

"என்ன சொல்றீங்க?" என்று கேட்ட சுசீலாவின் குரலில் தடுமாற்றம் இருந்தது.

"டாக்டர்.. மனசார ஒண்ணு சொல்றேன். நான் சொல்லப் போறது உங்க ட்ரீட்மெண்டின் சிறப்பில் எந்தக் குறையும் நான் கண்டுட்டதா நீங்க நினைக்கக் கூடாது.. அப்படினா சொல்றேன்."

"அப்படி ஏதாவது நினைச்சா உங்களுக்கும் எனக்கும் எந்த விமோசனமும் இந்தப் பிறவிலே கிடையாது. பாவம், அவ அவ்வளவு கஷ்டப்படறா.." என்று அழுதே விட்ட குன்றிய குரலில் சுசீலா தடுமாற,

"ஓ.கே. அதான் நானும் சொல்ல வந்தேன். டாக்டர் சாந்தியின் சாந்தி நிலையம் ஆஸ்பத்திரிக்கு வந்ததும் எனக்குப் பார்வை கிடைச்சிருச்சின்னு சொல்ல வந்தேன்." என்றேன்.

"என்னங்க சொல்றீங்க?.." என்று திகைத்துப் போன குரல் சுசீலாவிடமிருந்து வெளிப்பட்டது.

" இப்போ என்னாலே தெளிவாச் சொல்ல முடியும்னு நெனைக்கிறேன்.." என்று சொன்னவன் நிறைய பேசுவதற்கு தயாரானேன். "டாக்டர்! நீங்க மருத்துவ சாத்திரம் படிச்சவர். அதுவும் மனித உடல் அமைப்பில் கண்ங்கறதை ஸ்பெஷலா எடுத்திண்டு அந்தத் துறைலே நிறைய ஆராய்ச்சிகள் செஞ்சவர். நிறைய நோயாளிங்களுக்கு சிகித்சை செஞ்சு இழந்து போன அவங்க பார்வையை மீட்டுக் கொடுத்தவர். இவ்வளவு தெரிஞ்ச உங்க கிட்டே இந்த சப்ஜெக்ட்லே ஞானசூன்யமான நா சொல்றது தத்துபித்தான உளறலா இருந்தாலும் பொறுத்திண்டு கேட்டுக்க கேட்டுக்கறேன்"ன்று நா சொன்னப்போ, "நோ..நோ.."ன்னு அவசர்மா குறுக்கிட்டார் சாந்தி டாக்டர். "அங்கிள்! நீங்க என்ன நெனைக்கிறீங்களோ, அதைத் தாராளமாச் சொல்லலாம். மருத்துவத் துறைலே பேஷண்ட்டுகளோட ரிப்போர்ட் தான் மிக முக்கியம். பயாலஜிகல் ரிப்போர்ட்களோடு அவங்க சொல்றதை இணைச்சுத் தான் நாங்க எந்த முடிவுக்கும் வர்றோம். என்ன, ரொம்ப நோயாளிகளுக்கு தங்கள் அவஸ்தையை அவங்களாலேயே சரியாச் சொல்லத் தெரியலே. அதனாலே, சில சந்தர்ப்பங்கள்லே அதுனாலே இதுவோன்னு குருட்டாம் போக்கில் சில முடிவுகளுக்கு நாங்க வர்ற வேண்டியிருக்கு.." என்று சொன்னவர், திடீரென்று, "சாரி.. 'குருட்டாம் போக்கு'ன்னு நா அந்த வார்த்தையை உபயோகிச்சிருக்கக் கூடாது. அதுவும் கண் டாக்டரான நான் அந்த வார்த்தையைச் சொல்லியிருக்கக் கூடாது. அதுக்காக மன்னிப்புக் கேட்டுக்கறேன்" என்று சொன்ன போது அவரது மனிதாபிமானத்தில் மிகவும் நெகிழ்ந்து போய்விட்டேன்.

"அதுனாலே இந்த சமயத்திலே நீங்க என்ன உணர்றீங்களோ அதைத் தாராளமாச் சொல்லலாம்.. அது மேற்கொண்டு செய்யற ட்ரீட்மெண்டுக்கும் ரொம்பவும் உதவியா இருக்கும்" என்று டாக்டர் சாந்தி கொடுத்த லைசன்ஸில் மேற்கொண்டு துணிவோடு பேசத் துணிந்தேன். "டாக்டர்! கண்ங்கறது எதையும் பாத்து பிரதிபலிக்கிற ஆடின்னு தான் நெனைக்கிறேன். அப்படி பிரதிபலிக்கிற பிம்பம் இன்னதுன்னு பார்வைநரம்புகளின் உதவியோட மூளைக்குத் தெரிஞ்சு.." என்று சொல்ல ஆரம்பித்தவன் மேற்கொண்டு சொல்ல லேசாகத் தயங்கவே, "சொல்லுங்க.. அங்கிள்!" என்று டாக்டர் சாந்தி என்னை மேலே பேசத்தூண்டினார்.

அந்த உற்சாகத்தில் தொடர்ந்தேன். "எனக்கேற்பட்டிருக்கிற கோளாறு-- பார்வை நரம்பு கள் அதன் சக்தியை இழந்திடிச்சு, இல்லையா?.. அதனாலே மேற்கொண்டு காரியம் நடக்கலே. அவ்வளவு தானே?.. பார்வை நரம்புகள் செய்யற அந்தக் காரியத்தை என்னோட தொடு உணர்ச்சியால் பத்து பிரசெண்டாவது செய்யமுடியும், இல்லையா? அந்த பத்தை நாப்பது அம்பதுன்னு நாளாவட்டத்லே நான் உயர்த்திக்க முடியும் இல்லையா?" என்றவன் நான் உணர்வதை வார்த்தைகளில் எப்படி விவரித்தால் அது சரியாக இருக்கும் என்று யோசித்துத் தொடர்ந்தேன்..

"டாக்டர்! பிறவிலேயே பார்வை இல்லாம இருந்தாக்கூட அது பெரிசாத் தெரிஞ்சிருக்காது. ஒண்ணைப் பாத்திட்டு ரசிச்சிட்டு அந்த பாக்கியம் கிடைக்கறதுக்கு காரணமா இருந்த அந்த ஒண்ணு போயிட்டதுன்னா அது சோகமாத் தான் இருக்கும்ங்கறது எனக்குத் தெரியறது.. இராமாயணத்லே கம்பர் கூட இதைப் பத்திச் சொல்லியிருப்பார். இராமனை, விஸ்வாமித்திர முனிவர் காட்டுக்குக் கூட்டிப் போறேன்'ன்னு சொன்னப்போ, அவன் கொண்ட புத்திர சோகத்தை 'கண்ணிலான் பெற்று இழந்தாற்போல்'ன்னு சொல்லியிருப்பார். அவர் சொன்னதையே வைச்சு மேற்கொண்டு நான் யோசிச்சேன்.. பிறவிலேயே எனக்கு கண் போகலே. பாதிலே தான் இப்படி ஆயிடிச்சு. இந்த உலகத்தை இத்தனை நாள் பார்த்த பார்வை நினைவுகளா என் ஞாபகத்தில் தேங்கியிருக்கு.. அதோட வாசனை நித்யமா நெறைஞ்சிருக்கு. அந்த நம்பிக்கைலே சொல்றேன்.. அப்படி பார்வை எனக்குக் கிடைக்காமப் போயிட்டாலும் பரவாயில்லை; நான் சமாளிச்சிப்பேன்" என்று நான் நினைச்சதை ஒருவழியா சொல்லி முடிச்சேன்.

ஒரு வினாடி டாக்டரிடமிருந்தும் சுசீலாவிடமிருந்தும் பதிலே இல்லை. ஏதாவது தப்பாக, டாக்டரின் மனசை வாட்டுகிற மாதிரி பேசி விட்டேனோ என்று எனக்குத் தடுமாற்றமாக இருந்தது. இன்னொரு பக்கம் நான் நினைப்பதை சொல்லாமலும் இருந்திருக்கக் கூடாதென்று பட்டது.

அந்த சமயத்தில், "அங்கிள்!..." என்று குழைவாகக் கூப்பிட்ட டாக்டரின் குரல், ஆகப் பெரிய சக்தியாக என்னில் நம்பிக்கை ஜோதியை ஏற்றியது.


(இன்னும் வரும்)

15 comments:

Geetha Sambasivam said...

புதிய பார்வை.

G.M Balasubramaniam said...

பார்வை இல்லையே என்று சுய பச்சாதாபத்தினால் வாடுபவர்கள் நிறைய இருக்கலாம் இல்லாமலேயே வாழமுடியும் என்று குறையைப் பெரிது படுத்தாமல் எண்ணுவது உங்கள் கதாபாத்திரம் பிரதிபலிப்பது எல்லாம் சாலையில் ஒரு கோலுடன் தனியே நடந்துபோகும் பார்வையற்றவர்களிடம் கண்டு வியந்திருக்கிறேன். அப்படித் தோன்றக் காரணம் ,அப்படி எண்ணத் தோற்றுவிப்பது எதுவோ.? தொடருகிறேன்.

ADMIN said...

நல்லதொரு அருமையான தொடராக இருக்கும் போல.. நான் இந்த தொடரை மட்டுமே படித்தேன். ஒரு அருமையான திரைப்பட பாங்கில் விறுவிறுப்பாக செல்கிறது.

மற்ற தொடர்களையும் படிக்கவேண்டும் என்ற எண்ணத்தை ஏற்படுத்தியிருக்கிறது. பகிர்வுக்கு நன்றி!

ஸ்ரீராம். said...

இப்படி ஒருவர் யோசிப்பாரா என்று எண்ணுகிறேன். இப்படி யோசிக்க வேறு எதாவது காரணம் இருக்குமோ என்று எண்ணுகிறேன். கிடைக்காது அல்லது வாய்ப்புக் குறைவு என்றானபின் சிகிச்சை செய்யும் மருத்துவர் - அதுவும் நெருங்கிய நட்பு வகையிலான - மனம் கோணக் கூடாதே என்று சிந்திக்கத் தொடங்கி தன் மனதுக்கு தானே ஆறுதல் தேடிக் கொள்ளத் தொடங்கி கிடைத்த எண்ணமா என்றும் யோசிக்கிறேன். ஆக, யோசித்து, யோசித்து 'பார்வை' இன்னும் எந்தெந்த திசையில் செல்லப் போகிறது என்று பார்த்துக் கொண்டிருக்கிறேன்!

ஜீவி said...

ஸ்ரீராம்,

'எங்கள் பிளாக்' ரீடரில் படிக்கக் கிடைக்கவில்லையே.. அதுவும் ரொம்ப நாளாக. உங்கள் வருகைக்காகக் காத்துக் கிடந்தேன்.

'FeedBurner could not deliver' என்று வருகிறது.

தங்கள் பின்னூட்டத்திற்கான பதிலுக்குப் பின்னால் வருகிறேன்.

ஜீவி said...

@ கீதா சாம்பசிவம்

புதியது எனினும் புரியக் கூடிய பார்வை தான்.

தொடர் வருகைக்கு நன்றி.

ஜீவி said...

@ G.M. Balasubramaiam

கதையின் மூலமாகவே சொல்ல முடிகிறதா என்று பார்க்கிறேன்.

தொடர்வதற்கு நன்றி ஐயா.

ஜீவி said...

@ தங்கம்பழனி

முதல் வருகைக்கும் வாசிப்பிற்கும் நன்றி, தங்கம்பழனி!

பின் தொடர்தலுக்கும் நன்றி. அங்கு வந்து சொல்கிறேன்.

ஜீவி said...

@ ஸ்ரீராம்

மனம் தான் எல்லாத்துக்கும் காரணம். மன வகைப்பாடுகளின் ரகசியங்களைப் புரிந்து கொண்டு விட்டால், கதைகளிலாவது எல்லா மனப்பாங்குகளிலும் வாழ்ந்து பார்க்கலாம்.

இன்றைய நினைப்பு நாளையில்லை.
அவ்வப்போது எழுதுவதால் நாளையத் தொடர்தல் என்னாகும் என்றும் தெரியவில்லை. உங்களைப்போலவே நானும் ஒரு பார்வையாளன் தான்.

வருகைக்கும் அர்த்தமுள்ள யூகங்களைப் பதிந்தமைக்கும் மிக்க நன்றி, ஸ்ரீராம்!

வை.கோபாலகிருஷ்ணன் said...

//"டாக்டர்! பிறவிலேயே பார்வை இல்லாம இருந்தாக்கூட அது பெரிசாத் தெரிஞ்சிருக்காது. ஒண்ணைப் பாத்திட்டு ரசிச்சிட்டு அந்த பாக்கியம் கிடைக்கறதுக்கு காரணமா இருந்த அந்த ஒண்ணு போயிட்டதுன்னா அது சோகமாத் தான் இருக்கும்ங்கறது எனக்குத் தெரியறது..//

இந்தத்தொடர் மிகவும் அருமையாகவே, பார்வையில் ஒரு புதிய பார்வையுடன் செல்கிறது.

வாழ்த்துக்கள். அன்புடன் vgk

கோமதி அரசு said...

டாக்டர்! பிறவிலேயே பார்வை இல்லாம இருந்தாக்கூட அது பெரிசாத் தெரிஞ்சிருக்காது. ஒண்ணைப் பாத்திட்டு ரசிச்சிட்டு அந்த பாக்கியம் கிடைக்கறதுக்கு காரணமா இருந்த அந்த ஒண்ணு போயிட்டதுன்னா அது சோகமாத் தான் இருக்கும்ங்கறது எனக்குத் தெரியறது.. இராமாயணத்லே கம்பர் கூட இதைப் பத்திச் சொல்லியிருப்பார். இராமனை, விஸ்வாமித்திர முனிவர் காட்டுக்குக் கூட்டிப் போறேன்'ன்னு சொன்னப்போ, அவன் கொண்ட புத்திர சோகத்தை 'கண்ணிலான் பெற்று இழந்தாற்போல்'ன்னு சொல்லியிருப்பார். அவர் சொன்னதையே வைச்சு மேற்கொண்டு நான் யோசிச்சேன்.. பிறவிலேயே எனக்கு கண் போகலே. பாதிலே தான் இப்படி ஆயிடிச்சு. இந்த உலகத்தை இத்தனை நாள் பார்த்த பார்வை நினைவுகளா என் ஞாபகத்தில் தேங்கியிருக்கு.. அதோட வாசனை நித்யமா நெறைஞ்சிருக்கு. அந்த நம்பிக்கைலே சொல்றேன்.. அப்படி பார்வை எனக்குக் கிடைக்காமப் போயிட்டாலும் பரவாயில்லை; நான் சமாளிச்சிப்பேன்" என்று நான் நினைச்சதை ஒருவழியா சொல்லி முடிச்சேன்.//

பழைய நினைவுகளில் வாழ்ந்து விடுவேன் என்று சொல்ல எப்படிப் பட்ட மனம் வேண்டும்!

நான் சமாளிச்சிப்பேன் என்று சொல்ல நல்ல பக்குவபட்ட மனம் வேண்டும்.

எந்த உடல் குறையும் இல்லாத மனிதர்கள் இல்லாத வியாதிகளை கற்பனையாக நினைத்துக் கொண்டு தினம் தன்னையும் வருத்தி கொண்டு தன்னை சார்ந்தவர்களையும் வதைத்துக் கொண்டு
இருக்கிறார்கள்.


பார்வை அற்புதமாய் இருக்கிறது.

இராஜராஜேஸ்வரி said...

அந்த சமயத்தில், "அங்கிள்!..." என்று குழைவாகக் கூப்பிட்ட டாக்டரின் குரல், ஆகப் பெரிய சக்தியாக என்னில் நம்பிக்கை ஜோதியை ஏற்றியது.


நகக்கண் இருபது
அகக்கண் ஒன்று இருக்கிறதே{
முகக்கன் இரண்டு செயல்ற்றதால்
நிதர்சனத்தை ஏற்று வாழப் பழகிவிட்டார்

புதிய பார்வை .. புதிய பாதை!!

அருமையான் கதைப் பகிர்வுக்குப் பாராட்டுக்கள்.

ஜீவி said...

@ கோமதி அரசு

வருகைக்கும் கதை பற்றிய உங்கள் கருத்திற்கும் மிக்க நன்றி, கோமதிம்மா.

ஜீவி said...

@ இராஜராஜேஸ்வரி

தொடர் வருமைக்கும் கதை பற்றி தாங்கள் உணர்வதைப் பதிவதற்கும் மிக்க நன்றிங்க.

ஜீவி said...

@ வை,கோ.

தங்கள் மனம் நிறைந்த வாழ்த்துக்களுக்கு நன்றி, வை.கோ. சார்!

Related Posts with Thumbnails