அத்தியாயம்--8
வாழ்க்கையில் தான் எத்தனை விஷயங்கள் நமக்குத் தெரியாமல் இருக்கின்றன? ஒவ்வொரு விஷயமும் அதுவே ஒரு புது அனுபவமாய் தெரியவரும் பொழுது ஆச்சரியமாய் இருக்கிறது. இத்தனை வயது வளர்ந்து விட்டோம், இப்போத் தானே இதுபற்றி தெரியறதுன்னு சில சமயம் அதெல்லாம் தெரியவர்ற போது வெக்கமாக் கூட இருக்கு. அப்படி ஒண்ணு தெரிய வர்றத்தையே இன்னும் இது போலத் தெரியாதது எத்தனை இருக்கோன்னு மலைப்பும் ஏற்படறது. எல்லாத்தையும் தெரிஞ்சிக்க முடியாதுங்கறது உண்மைதான். அதுக்கேத்த சந்தர்ப்பம் வரும் போது தான் எதுபத்தியும் தெரிஞ்சிக்க முடியதுங்கறதும் தெரியறது..
வாழ்க்கையில் தான் எத்தனை விஷயங்கள் நமக்குத் தெரியாமல் இருக்கின்றன? ஒவ்வொரு விஷயமும் அதுவே ஒரு புது அனுபவமாய் தெரியவரும் பொழுது ஆச்சரியமாய் இருக்கிறது. இத்தனை வயது வளர்ந்து விட்டோம், இப்போத் தானே இதுபற்றி தெரியறதுன்னு சில சமயம் அதெல்லாம் தெரியவர்ற போது வெக்கமாக் கூட இருக்கு. அப்படி ஒண்ணு தெரிய வர்றத்தையே இன்னும் இது போலத் தெரியாதது எத்தனை இருக்கோன்னு மலைப்பும் ஏற்படறது. எல்லாத்தையும் தெரிஞ்சிக்க முடியாதுங்கறது உண்மைதான். அதுக்கேத்த சந்தர்ப்பம் வரும் போது தான் எதுபத்தியும் தெரிஞ்சிக்க முடியதுங்கறதும் தெரியறது..
'பிரெய்லி' எழுத்துக்களை பத்திக் கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனா, அப்படி அந்த எழுத்துக்களை தடவித் தடவி வாசிக்கக் கத்துக்க வேண்டிவரும்ன்னு நெனைச்சுக் கூடப்பார்த்ததில்லை. பாரதி பிரெய்லி முறை என்று சொன்னார்கள். நம் தேசக்கவி பாரதியார் பெயரைக் கேட்டவுடன் மனத்தில் இதைக் கற்றுத் தேர்வது என்று உறுதி தன்னாலே வந்தது. மொத்தம் ஆறு புள்ளிகள். ஒரு வரிசைக்கு இரண்டாக மொத்தம் மூன்று வரிசைக்கு ஆறு புள்ளிகள். ஆரம்பத்தில் கஷ்டமாகத் தான் இருந்தது. கை வரிசையை விட்டு அடிக்கடி விலகியது. 'முதல் நாள் இந்தளவுக்கு எழுத்துக்களைச் சரியாகச் சொன்னது ஆச்சரியம் தான்' என்று கற்றுக் கொடுத்த ஆசிரியை சொன்ன பொழுது கற்றுக்கொள்வதில் ஆர்வம் அதிகமாயிற்று. ஒரே வாரத்தில் தமிழ் எழுத்துக்களை வேகமாகப் படிக்கிற அளவுக்கு மனசில் படிந்து விட்டது.
'இமைகள் மருத்துவமனை'யின் அடுத்த கட்டிடம் தான் பிரெய்லி பள்ளி என்று சுசீலா சொன்னாள். இதுவும் பெரிய கட்டிடம் தான் என்று அவள் மூலமாகத் தெரிந்தது. நிறையப்பேராம்; வகுப்பு வகுப்பா பிரிச்சிருக்காங்களாம். எல்லாம் சுசீலா சொல்லித் தெரிந்தது தான். தொட்டுப்பாத்துத் தெரிஞ்சிக்கிறது தவிர பார்த்துத் தெரிஞ்சிக்கறது அத்தனையும் சுசீலா பார்த்துத் தெரிஞ்சிண்டு எனக்குச் சொல்றது தான். என் கண்களே இப்போ அவள் தானே. அவள் மூலமாத் தான் இப்போல்லாம் பாக்காமயே தெரிஞ்சிக்கறதுன்னு ஆயிடுச்சு. சுசீலா எதையும் எப்பவும் மேலோட்டமாத் தான் பார்ப்பா; அதான் அவ வழக்கம். இப்போ எனக்குச் சொல்லணும்ங்கறத்துக்காக எனக்கும் சேர்த்து எல்லாத்தையும் கொஞ்சம் ஆழமாப் பாத்து விவரமா சொல்றா. அப்படி அவ சொல்றது நான் பாத்துத் தெரிஞ்சிக்கற மாதிரியே திருப்தியா இருக்கு. நேரடியா எதையும் நான் பாக்கலையே தவிர, நானே எல்லாத்தையும் பாத்துப் புரிஞ்சிக்கற மாதிரி என் பார்வை சுசீலாக்கு வந்தாச்சு. கண்ணதாசன் சொன்னாரே, 'நீ காணும் பொருள் யாவும் நானாக வேண்டும்' என்று; அதுபோல.
டாக்டர் சாந்தி ரொம்ப நல்லவங்க. அவங்க சம்பந்தப்பட்ட அந்த சங்கீதப் பள்ளிலேயே சுசீலாக்கும் ஒரு வேலை போட்டுத் தந்திட்டாங்க. சின்ன வயசில் தொடர்ச்சியா ஒரு நாள் தப்பாம கிளாஸுக்குப் போய் சங்கீதம் கத்துக்கிட்டது இப்போ உதவியா இருக்கு. என்னை பிரெயில் கிளாஸ்லே விட்டுட்டு, ஆஸ்பத்திரி வண்டிலேயே சங்கீத கிளாஸூக்கு சுசீலா போயிடுவா. மத்தியான சாப்பாடு எனக்கு இங்கே மெஸ்ஸிலேயே. என்னைப் போல நிறையப் பேர் சாப்படற பெரிய மெஸ்ஸூ! இப்போலாம் யார் உதவியும் இல்லாம தனியாச் சாப்பிடக்கூடப் பழகிண்டுட்டேன்.
சுசீலா அங்கேயே சாப்பிட்டுப்பா. அங்கே வகுப்பெல்லாம் முடிஞ்சு அவள் பிரெயில் கிளாஸுக்கு வர சாயந்திரம் ஆயிடும். அவள் வந்ததும், ஆசுபத்திரி வண்டிலேயே வீட்டிற்கு வந்திடுவோம். வீடு?.. 'சாந்தி நிலையத்திற்கு பக்கத்திலேயே தான்.எல்லா ஏற்பாடுகளையும் பாத்துப் பாத்து செளகரியமா செஞ்சி கொடுத்திருக்கறது சாந்தி டாக்டர் தான். சின்ன வயசில் சுசீலாவோட பழகின பழக்கத்தை அவங்க எதையும் மறக்கலே.. இப்போ அவங்க இருக்கிற இந்த வசதியான நிலைமைலேயும் அப்படியே இருக்கறது ரொம்ப அதிசயம்.
விளையாட்டு போல நாங்கள் சென்னை வந்து ஒன்றரை வருடத்திற்கு மேலாகி விட்டது. திருவையாறு வீடு, இருந்த கொஞ்ச நிலம் எல்லாத்தையும் வித்து இங்கேயே செட்டில் ஆயிட்டோம். எனக்கும் பிரெயில் பள்ளிலேயே வேலை. புதுசா அட்மிஷன் ஆகிறவர்களுக்கு பிரெயில் எழுத்துக்கள் மூலமா படிக்கக் கற்றுக் கொடுக்கிற வேலை. அதைத்தவிர ஆசுபத்திரி வளாகத்திலேயே தியாகராஜர் பெயரில் சின்னதா ஒரு சங்கீதக் குழுவை அமைச்சிருந்தேன். பாட, பாட்டுக் கற்றுக்கொள்ள, பாட பயிற்சி கொடுக்க என்று ரொம்பப்பேர் சந்தோஷத்தோட முன் வந்தாங்க. பார்வை பறிகொடுத்தவர்களுக்கு இந்த சங்கீத வகுப்புகள் அவர்களின் இழப்புணர்ச்சியை இட்டு நிரப்புவதாக இருந்தது. கற்பனா வளம் பெருகி மனோலயம் ஆக்கபூர்வமாக மீட்டப்பட்டது. இந்த மருத்துவமனை இதோட சம்பந்தப்பட்ட அத்தனை பேருக்கும் மனச்சாந்தி கொடுக்கற இடமா மாறி வந்தது.
இங்கே எங்கிட்டே பிரெயில் கத்துக்கற மாணவர்களில் (!) ஒருத்தர் பேர் விஸ்வநாதன். என்னை விடப் பெரியவர். அவர் பெரியவர் என்கிறதாலேயே தம்பியா நினைக்கத் தோணாது. இருந்தாலும் அவர் பெயரைச் சொல்லிக் கூப்பிடும் பொழுது மனசு கனக்கும். எந்தக் குறையும் இல்லாம எங்கிருந்தாலும் கால்-கை விளங்க அவன் நல்லா இருக்கட்டும்னு நினைச்சிப்பேன். நல்ல வேளை எல்லாருக்கும் நினைப்புன்னு ஒண்ணு இருக்கு. அதுமட்டும் இல்லேனா, அத்தனை பேரும் அம்போ; வேண்டிய மனுஷா கூட இல்லாட்டியும், அவங்களைப் பத்தின நினைப்பு, அவங்களாகவே நம்ம கூட இருக்கிற மாதிரி உணர்விலே படறது. மனுஷா மட்டுமில்லை, பழகின இடங்கள் கூட மனுஷா மாதிரியே ஒரு உறவோட மனசிலே எங்கையோ பதுங்கி இருக்கு. திடுதிப்புன்னு நெனைப்புக்கு வந்திட்டாப் போதும். அங்கே போக மாட்டோமான்னு தோணும். எங்க போய் என்னத்தைச் செய்யப் போறோம்னு எதார்த்த நிலை மனசிலே உறைச்சு ஆளையே அடிச்சுப் போட்டிடும். உடனே அந்த அடியை சமனப்படுத்தற மாதிரி 'போனாப் போறது, அடுத்த ஜென்மத்திலே பாத்துக்கலாம்'னு சில நேரங்கள்லே என்னையே சமாதானப் படுத்திப்பேன். சிரிக்கத்தான் வேணும்; எல்லாமே பேத்தல்!
பேத்தல்னாலும் இதுக்கெல்லாம் ஏதோ சக்தி இருக்கிற மாதிரி தான் இருக்கு. ஏன்னா, வேலையில்லாத சில பொழுதுகளில் சும்மா வெறிச்சிண்டு நான் உக்காந்திருக்கச்சே, ஏதேதோ நினைச்சிக்கறதெல்லாம், 'நடப்பா நிகழுமா என்ன?' ன்னு நெனைச்சிண்ட நெனைப்புக்கு முதல் அடி கிடைச்சது. ஏதோ என்னோட அஜாக்கிரதையாலே அந்த விபத்து நடந்தது; அதுக்கு எங்க தொழிற்சாலை முதலாளி என்ன செய்வார், பாவம்! மாசம் தப்பாம அஞ்சாயிரம் ஆசுபத்திரிக்கு பணம் அனுப்பிச்சிண்டிருந்தார். மாசம் பொறந்தா இரண்டு தேதிக்குள்ளே கரெக்டா அவர்கிட்டேயிருந்து செக் வந்திடும்னு டாக்டரம்மா சொல்லுவாங்க. எனக்கும் ஒரு வேலைன்னு கிடைச்சாச்சு; சுசிலாவும் வேலைக்குப் போறதாலே, 'ரொம்ப நன்றி, செக் இனிமே அனுப்ப வேண்டாம்'னு சுசிலாவை விட்டு அவருக்கு லெட்டர் போடச் சொன்னேன். லெட்டர் போய்ச் சேர்ந்தததோ இல்லையோன்னு நெனைக்க ஆரம்பிச்ச நெனைப்பு, எங்க முதலாளியைப் பத்தின நெனைப்பா நீண்டு, பாவம் அவர், சூது வாது தெரியாத எவ்வளவு தங்கமான மனுஷர்னு நெனைச்சிண்டிருக்கிறச்சேயே, நல்ல மத்தியான வேளை, முதலாளியே நேர்லே வந்திட்டார்ன்னு கேள்விப்பட்டு பதறிப் போயிட்டேன்.. சென்னைலே நினைச்ச நெனைப்போட சக்தி வேகம் திருவையாறு போய்த் தொட்டிருக்கு. சாந்தி டாக்டரும் ஊரிலே இல்லே. என்னோட கூட வேலை செய்யற ஒருத்தர் சுசீலாவுக்கு போன் போட்டு பிரெயில் பள்ளிக்கு அவளை வரவழைச்சார்! ஒரு ரெண்டு மணி நேரம் எங்களோட இருந்து, மனசார நிறைய பகிர்ந்திண்டு போனார். நாங்க ரெண்டு பேரும் நல்லபடி வாழ்க்கைலே எங்களுக்கு ஏத்த மாதிரி செட்டில் ஆகிட்டது குறிச்சு அவருக்கு ரொம்ப திருப்தி. போகறச்சே, பிரெயில் பள்ளி வளர்ச்சிக்கு ஒரு பெரிய தொகைக்கு செக் கொடுத்திட்டுப் போனார். என்ன சொல்றது, சொல்லுங்கோ.. இந்த மாதிரி நல்ல மனசு கொண்டவங்க இருக்கறதாலே தான் மழை பெய்யறது போலிருக்கு.
அவர் வந்து எங்களைப் பாத்திட்டுப் போனது தீவிரமான நெனைப்பா என்னுள் பத்திண்டிடுச்சு. டாக்டர் சாந்தி கிட்டே இந்த நினைப்புகளைப் பற்றி நான் யோசிச்சு வைச்சிருந்ததையெல்லாம் கொட்டின போது, அவரும் 'டெலிபதி'ன்னு இதுவரை எனக்குத் தெரிஞ்சிராத சில தகவல்களைச் சொன்னார். அதெல்லாம் கேட்டபோது எனக்கு ஆச்சரியமான ஆச்சரியம்! வெளிப்புலனுக்குத் தட்டுப்படாத நிறைய விஷயங்கள் இந்த பிரபஞ்ச மர்மங்களில் பொதிந்திருப்பதாக எனக்குப்பட்டது.
தினம் ஒரு தடவையாவது அதிகாலை தியானத்திற்குப் பிறகு என் தம்பி விஸ்வநாதனை பற்றி அவன் எங்கள் கூட இருந்த காலங்களில் நடந்ததையெல்லாம் பற்றி தீவிரமாக நினைத்துக் கொள்ள வேண்டும் என்று மனத்தில் சூளூரைத்துக் கொண்டேன்.
அப்படியான நினைப்பு உளப்பூர்வமாக என்னில் நிகழ்ந்ததும், விரைவில் என்னைத் தேடி அவன் வந்து விடுவான் என்று மனசில் சந்தோஷம் பூத்தது.
(இன்னும் வரும்)
15 comments:
கண்ணதாசன் சொன்னாரே, 'நீ காணும் பொருள் யாவும் நானாக வேண்டும்' என்று; அதுபோல.
வேதனையாகத்தான் இருக்கிறது. என்றாலும் கதாநாயகரின் மன உறுதி பிரமிக்க வைக்கிறது. அதைப் பார்க்கையில் நானெல்லாம் எவ்வளவு சிறியவள், ஒண்ணுமே இல்லை என்ற உணர்ச்சியும் ஏற்படுகிறது.
தினம் ஒரு தடவையாவது அதிகாலை தியானத்திற்குப் பிறகு என் தம்பி விஸ்வநாதனை பற்றி அவன் எங்கள் கூட இருந்த காலங்களில் நடந்ததையெல்லாம் பற்றி தீவிரமாக நினைத்துக் கொள்ள வேண்டும் என்று மனத்தில் சூளூரைத்துக் கொண்டேன்//
உண்மையாகவே இவை பலித்த நிகழ்ச்சிகள்னு சொல்ல ஆரம்பிச்சால் அதுவே தொடர்கதையாயிடும். தியானத்தின் சக்தி அதுவும் அதிகாலையிலே உட்கார்ந்தால் தனியாகத் தான் தெரியும்.
//; வேண்டிய மனுஷா கூட இல்லாட்டியும், அவங்களைப் பத்தின நினைப்பு, அவங்களாகவே நம்ம கூட இருக்கிற மாதிரி உணர்விலே படறது. மனுஷா மட்டுமில்லை, பழகின இடங்கள் கூட மனுஷா மாதிரியே ஒரு உறவோட மனசிலே எங்கையோ பதுங்கி இருக்கு. திடுதிப்புன்னு நெனைப்புக்கு வந்திட்டாப் போதும். அங்கே போக மாட்டோமான்னு தோணும். எங்க போய் என்னத்தைச் செய்யப் போறோம்னு எதார்த்த நிலை மனசிலே உறைச்சு ஆளையே அடிச்சுப் போட்டிடும். உடனே அந்த அடியை சமனப்படுத்தற மாதிரி 'போனாப் போறது, அடுத்த ஜென்மத்திலே பாத்துக்கலாம்'னு சில நேரங்கள்லே என்னையே சமாதானப் படுத்திப்பேன். சிரிக்கத்தான் வேணும்; எல்லாமே பேத்தல்!//
இந்த வரிகளையும், கண்ணதாசன் பாடல் வரிகளையும் மிகவும் ரசித்தேன்.தொடருங்கள், ஐயா. vgk
//; வேண்டிய மனுஷா கூட இல்லாட்டியும், அவங்களைப் பத்தின நினைப்பு, அவங்களாகவே நம்ம கூட இருக்கிற மாதிரி உணர்விலே படறது. மனுஷா மட்டுமில்லை, பழகின இடங்கள் கூட மனுஷா மாதிரியே ஒரு உறவோட மனசிலே எங்கையோ பதுங்கி இருக்கு. திடுதிப்புன்னு நெனைப்புக்கு வந்திட்டாப் போதும். அங்கே போக மாட்டோமான்னு தோணும். எங்க போய் என்னத்தைச் செய்யப் போறோம்னு எதார்த்த நிலை மனசிலே உறைச்சு ஆளையே அடிச்சுப் போட்டிடும். உடனே அந்த அடியை சமனப்படுத்தற மாதிரி 'போனாப் போறது, அடுத்த ஜென்மத்திலே பாத்துக்கலாம்'னு சில நேரங்கள்லே என்னையே சமாதானப் படுத்திப்பேன். சிரிக்கத்தான் வேணும்; எல்லாமே பேத்தல்!//
இந்தப்பகுதியையும், கண்ணதாசனின் பாடல் வரிகளையும் மிகவும் ரசித்தேன். தொடருங்கள் ஐயா.vgk
ப்ரெயில் பற்றின சில விவரங்கள் தெரிய வந்தது. படிக்கப் புத்தகங்கள் நிறைய கிடைக்குமா.?கதையில் வரும் எல்லோரும் நல்லவர்களாக சித்தரிக்கப்படுவது, கதாசிரியரின் குணாதிசயங்களுக்கு எடுத்துக் காட்டோ.?தொடருகிறேன்.
@ கீதா சாம்பசிவம்
//நானெல்லாம்... ஏற்படுகிறது.//
உங்கள் உறுதி அபாரமானது. படித்து பிரமித்தது.
தொடர் வருகைக்கும் எண்ணங்களை பகிர்ந்து கொள்வதற்கும் மிக்க நன்றி, கீதாம்மா.
முதல் பாராவில் சொல்லப்படும் கருத்துகள் என் மனதிலும் அப்படியே ஓடும். சந்தர்ப்பம் வரும்போதுதான் தெரிஞ்சிக்க முடியும் என்பதே ஒரு மலைப்பாகக் கூட இருக்கும்.
சாந்தி நிலையம். திரைப்படமாக இந்தப் பெயரைப் பார்க்கும்போதே மனதில் பிடித்துப் போன பெயர்! பார்வை போகிறா மாதிரி நினைவும் போனால் என்ன ஆவது என்ற சிந்தனை சிந்தனையைத் தூண்டியது. அந்த பாத்திரத்தின் உள்ளே புகுந்து எல்லா உணர்வுகளையும் அலசியிருக்கிறீர்கள். இந்தக் குறிப்பிட்ட எண்ணம் எனக்கும் அவ்வப்போது வரும். அதுவும் நெருங்கிய நட்பு, சொந்தங்களின் மறைவைக் கேட்கும்போது!
முதலாளி பற்றிய குறிப்புகள் நிறைவையும் நெகிழ்வையும் தந்தன.
எண்ணங்களைத் தொடர்ந்து முதலாளி வந்ததைப் படித்தபோது என் மனதில் தோன்றிய டெலிபதி பற்றி தொடர்ந்த வரிகளில் குறிப்பிட்டுள்ளீர்கள். உடம்பின் கோடிக் கணக்கான நியூரான்கள் போல மனதிற்கு சைக்கான்கள் (psychon) உண்டு என்று படித்ததும் ஆழ் மனதில் நாம் நினைக்கும் நினைவுகள் அலைவரிசை ஒத்துப் போகும் தருணத்தில் உயிரோடு இருக்கும் இருவர் கூட பரஸ்பரம் உருவமாகப் பார்த்துக் கொள்ள முடியும் என்றும் படித்திருக்கிறேன்.
@ வை. கோ.
கோபு சார்! வருகைக்கும் ரசனைக்கும் நன்றி.
@ G.M.B.
பிரெயில் கல்வி பற்றி நிறையச் சொல்ல வேண்டும். கூகுளிட்டுப் பாருங்கள். அரியதாகவும், அதிகமாகவும் தகவல்கள் கிடைக்கலாம்.
அப்படி என்று இல்லை. இப்பொழுதெல்லாம் இப்படியே எழுதுவது பழக்கமாகி விட்டது.
இணையத்தில் எழுதுவதால், பொறுப்பு கூடியிருக்கிறது. பத்திரிகை எழுத்துக்கு ஒரு வார காலமே உயிர். அதற்கு முன்னாலேயே குப்பைக்குப் போய்விடும். இணைய எழுத்துக்கள் அப்படி இல்லையே! நமக்குப் பின்னாலும் நம்மைச் சொல்லிக் கொண்டு கல்வெட்டு போல சாசுவதமாக இருக்கும். அதனால், அநாவசியங்களைத் தவிர்க்கிறேன். 'பூவன'த்தை ஒருமுறை சுற்றிப் பாருங்கள். இதுவரை எழுதிய 240-க்கும் மேற்பட்ட பதிவுகள் அத்தனை யும் திட்டமிட்டு, தேர்ந்தெடுத்து எழுதியது போலிருக்கும். 'இது நன்றாக இல்லை' என்று எதையும் ஒதுக்க முடியாது. படிக்க ஆரம்பித்தால், சுவாரஸ்யமாகப் படித்துக் கொண்டே இருக்கலாம். நிறைய எழுதுவதை விட நிறைவாக எழுத வேண்டும் என்று அதிக கவனம் செலுத்துவதால் இது சாத்தியப்பட்டிரு க்கிறது.
தங்கள் வருகைக்கும், விசாரிப்புகளு- க்கும் மிக்க நன்றி.
@ ஸ்ரீராம்
வாருங்கள், ஸ்ரீராம்! வழக்கம் போல சிந்தனையைக் கிளரும் பகிர்தல்!
போனஜென்ம நினைவுகள் அடுத்த ஜென்மத்திற்கும் தொடருவதாக 'மதுமதி' போன்ற திரைப்படங்கள் நம் சிந்தனைகளைக் கிளறிவிட்டிருக்கின்றன.
அது போனஜென்மம் என்று அடித்துச் சொல்ல முடியாதபடி, சில நிகழ்வுகள் எப்பொழுது நடந்தன என்று அறுதியிட்டுச் சொல்லமுடியாத படிக்கும் நம் நினைவுகளில் தடம் பதித்திருக்கின்றன. நினைவுகளின் சிரஞ்சீவித்தன்மை இப்படியாக இருக்கையில், நினைவுகள் தாம் நம்மை வழிநடத்துகின்றனவோ என்கிற நியாயமான கேள்வியும் எழுகின்றன. இதையே தங்கள் உள்ளுணர்வாகக் கொண்டவர்களும் உண்டு.
உண்மையில் சொல்லப்போனால், இரண்டே அத்தியாயங்களோடு புரட்சிகரமாக இந்தக் கதையை முடிப்பதாக இருந்தேன். 'பார்வை' கண்ணால் பார்க்கும் பார்வையைத் தாண்டி, மற்றைய பார்வைகளையும் தொட்டுச்செல்லும் போலிருக்கிறது' என்கிற உங்கள் பின்னூட்டம் தான் மேலும் தொடர்வதற்கான உத்வேகத்தையே கொடுத்தது.
ஸோ, கிரடிட் கோஸ் டு யூ ஒன்லி!
அதற்கு வழக்கமாகச் சொல்லும் நன்றியைத் தாண்டியதான மிக்க நன்றி, ஸ்ரீராம்!
இந்த அத்தியாயத்தை நெகிழ்ந்து ரசிச்சேன். நன்றி.
@ ஸ்ரீராம்
//ஆழ் மனதில் நாம் நினைக்கும் நினைவுகள் அலைவரிசை ஒத்துப் போகும் தருணத்தில் உயிரோடு இருக்கும் இருவர் கூட பரஸ்பரம் உருவமாகப் பார்த்துக் கொள்ள முடியும் என்றும் படித்திருக்கிறேன்.//
இந்தப் பார்வையும் சரியே. நம் நினைவுகள் ஒன்ற வேண்டும். அவ்வளவு தான். அவ்வளவு தான் என்று சாதாரணமாகவும் சொல்லி விடமுடியாது. ஆரம்பத்தில் சிலருக்கு சாதாரணமாக இருப்பது மற்றையோருக்கு அசாதாரணமாகத் தெரியலாம். எல்லாவற்றிற்கும் பயிற்சி வேண்டும். மனதை ஒன்ற வைத்தல் தான் ஆரம்பப்படி.
@ Sakthipriabha
சொன்னதற்கு நன்றி.
தொடராக எழுத நான் காரணமானேன் என்று நீங்கள் சொல்லியிருப்பது மகிழ்ச்சியை ஏற்படுத்துகிறது. உங்கள் பெருந்தன்மைக்கும் அன்புக்கும் நன்றி.என்னை கெள்ரவப்படுத்தியிருக்கிரீர்கள். மிக்க நன்றி.
Post a Comment