மின் நூல்

Thursday, November 10, 2011

பார்வை (பகுதி-9)

                     அத்தியாயம்--9

டாக்டர் சாந்தி தான் டிரைவர் சீட்டில். பின்னால் நானும் சுசீலாவும்.

நடுநடுவே டாக்டர் பேசிக்கொண்டு வந்தாலும், கார் செல்லும் வேகத்தில் பாதி காதில் விழலே. சுசீலா தான் பதில் சொல்லிக் கொண்டு வந்தாள். சுசீலா, டாக்டருக்கு பக்கத்திலேயே முன் சீட்டிலேயே உட்கார்ந்திருக்கலாம். நானும் அதைத்தான் சொன்னேன். டாக்டர் தான் வேண்டாம் என்று சொல்லிவிட்டார்கள். எனக்கு ஏதாவது தேவைப்பட்டால் உடனே அதை கவனிப்பதற்கு வாகாக சுசீலா பின் சீட்டில் என்னுடன் அமர்ந்து கொள்வதே செளகரியமாக இருக்கும் என்று சொல்லி விட்டார்கள்.

டாக்டர் எது சொன்னாலும் அதற்கு வெளிப்படையா தெரியற காரணத்தைத் தாண்டி அதை விட முக்கியமானதா உள்ளார்ந்து வேறே ஏதாவது இருக்கும். இது இந்த நாலு வருஷப் பழக்கத்திலே நான் தெரிஞ்சிண்ட ஒண்ணு. அதனாலே பல விஷயங்கள்லே அவர் சொல்ற மாதிரியே இருக்கட்டும்னு நினைத்துக் கொள்வேன்.

அன்றைக்கு திடுதிப்புனு "நானும் சுசீலாவும் உங்க தம்பி விஸ்வநாதனைப் பாக்கப் போறோம். நீங்களும் வர்றீங்களா?"ன்னு டாக்டர் சாந்தி கேட்டப்போ திகைச்சுப் போயிட்டேன்.

அவர் சொன்னதை மனசில் கொஞ்சம் மீண்டும் ஓட்டிப் பார்த்து, "நல்ல கேள்வி கேட்டீங்க.. நான் வராமலையா?.. அதுக்குத் தானே இத்தனை நாளாக் காத்திருக்கேன்" என்றேன். 'எந்த தலைபோற காரியமா இருந்தாலும் பதட்டப்படக் கூடாது. அது உங்கள் உடல் நலனுக்கு ஆகாது..'ன்னு டாக்டர் படிச்சுப் படிச்சுச் சொல்லியிருந்தது பாடமா மனசில் தீர்க்கமா படிஞ்சிருந்தது. அதனாலே அவர் கேட்டதற்கு அப்படி அமைதியா பதில் சொல்லிவிட்டு, "நிஜமாவா சொல்றீங்க.. என் தம்பி எங்கே இருக்கான்? அவன் இருக்கற இடம் தெரிஞ்சிடுத்தா?" என்று கேட்டேன்.

"இந்த ஊர்லே தான் இருக்கார். நல்லா வசதி இருந்தும், நல்லவராக இருக்கிறார். அதான் முக்கியம்.. வயலின்லே அவர் ஒரு சாதனையாளர், தெரியுமோ?.." என்று சொல்லி நிறுத்தினார். மேற்கொண்டு அவரே சொல்லட்டும் என்று பேசாமலிருந்தேன்.

"எல்லாத்தையும் சொல்லிடறேன். ஆனா, அதுக்கு முன்னாடி என்னையும் சுசீலாவையும் நீங்க மன்னிக்கணும்" என்றார்.

"என்ன டாக்டர்! பெரிய பெரிய வார்த்தையெல்லாம் சொல்றீங்க?.. மனசளவிலே நான் ரொம்பவும் குன்றிப் போயிருந்தவன். எனக்குள்ளே தன்னம்பிக்கை விதையை விதைச்சு ஆளாக்கினவங்க நீங்க.. நீங்க போய் என்கிட்டே இப்படியெல்லாம் பேசலாமா?"

"இல்லே. அதெல்லாம் என் தொழில் தர்மம். ஒரு பேஷண்ட்டுக்கு என்னலாம் ட்ரீட்மெண்ட்ன்னு செய்யணுமோ அதெல்லாம் செஞ்சேன். அப்படிலாம் செய்யணும்னு எனக்கு விதிக்கப்பட்டிருக்கு. அவ்வளவு தான். இது உங்க தனிப்பட்ட சொந்த விஷயம். அது எனக்குத் தெரியவந்தும், ஒரு வார காலமா அதை உங்க கிட்டே மறைச்சிட்டேன். ஆனா, அது கூட..."

நான் ஒண்ணும் பேசலே. டாக்டரே தொடர்ந்தார்: "ஆனா அது கூட உங்கள் உடல் நலன் கருதித் தான். மெதுவா கொஞ்சம் கொஞ்சமா சொல்லலாம்ன்னு தீர்மானிச்சேன்" என்றார்.

"எல்லாம் தெய்வ அனுக்கிரகம் டாக்டர். எனக்கு எது நல்லதுன்னு உங்களுக்கு நன்னாத் தெரியும். அதனாலே நீங்க எது செஞ்சாலும் சரி. சொல்லுங்க.."

"எஸ். எதையும், குறிப்பா உங்க மனசைப் பாதிக்கற எதையும் இப்படி ஒரு தயார் நிலைக்கு நீங்க வந்ததும் தான் சொல்லணும். அதுக்குத் தான் காத்திருந்தேன்" என்றவர், "உங்க தம்பியை நானும் சுசீலாவும் பார்த்துப் பேசினோம். எப்போ தெரியுமா?.. போன வாரம் தான். சுசீலாவின் மேற்பார்வைலே இருக்கற மியூசிக் க்ளாஸ்லே ஒரு விழாவுக்கு ஏற்பாடு செஞ்சிருந்தோம் இல்லையா? அப்போத் தான்."

"அந்த விழாவுக்குத் தான் என்னையும் கூட்டிக்கிட்டுப் போயிருந்தீர்களே?"

"நீங்க வந்ததுக்கு முதல் நாள். மெயின் விழாவுக்கு முதல் நாள் ஒரு ரிகர்சல் மாதிரி வைத்திருந்தோம். எனக்கு வயலின் மேதை விஸ்வநாதனைத் தெரியும். ஆனா அவர் தான் உங்க தம்பி விஸ்வநாதன்னு தெரியாது; அது தெரியாமலேயே விழா அழைப்பிதழை அவருக்கும் அழைச்சிருந்தோம். அடுத்த நாள் அவர் மும்பாய் போக இருந்ததால், இன்னிக்கு வரட்டுமான்னு போன் போட்டுக் கேட்டு விட்டு வந்தார். ரிகர்சல் ஹாலுக்குள் நுழைந்ததும், சுசீலாவைப் பார்த்து திகைச்சுப் போயிட்டார். "அண்ணி.."ன்னு பாசத்தை அடக்க முடியாம தடுமாறினார். நட்ட நடு ஹாலில் நாலு பேருக்கு முன்னாலேயே காலில் விழுந்து நமஸ்கரித்தார்" என்றார்.

அதைக் கேட்டதும் எனக்குப் பெருமை பிடிபடவில்லை.. "டாக்டர், அவன் ரொம்ப.. என்ன சொல்றது.. ரொம்ப பிரமாதமானவன், டாக்டர்" என்று பெருமிதத்துடன் சொன்னேன்.

"ஆமாம். ஹி இஸ் ஜெம்! எல்லாக் கதையும் கேட்டு விக்கித்துப் போயிட்டார். ரிகர்சல் ஹாலில் இருக்கவே இருப்புக் கொள்ளவில்லை அவருக்கு. உடனே உங்களைப் பார்க்க வேண்டுமென்று துடியாச் துடிச்சார். எங்களுடன் வந்து இதே இடத்தில் உங்களைப் பார்த்ததும் தான் ஒரு நிலைக்கு வந்தார். உடனே உங்களையும் சுசீலாவையும் தன்னுடன் அழைத்துப் போக விரும்பினார்.
ஆனால், நான் தான் இப்போ வேண்டாம். நானே பக்குவமாக எல்லாவற்றையும் சொல்லி அவரைக் கூட்டி வருகிறேன், என்றேன். சுசீலாவிடமும் இதுபற்றி எதுவும் உங்களிடம் சொல்லக் கூடாதுன்னு ஒரு எச்சரிக்கை மாதிரி சொல்லி வைத்திருந்தேன். எல்லாம் ஒரு காரணத்திற்காகத் தான் என்றாலும், உங்கள் தனிப்பட்ட விஷயத்தில் கொஞ்சம் அளவுக்கதிகமாகவே தலையிட்டு விட்டதற்குத் தான் மன்னிப்பு கேட்டேன்," என்று டாக்டர் சொன்ன போது, எனக்கு என்ன சொல்வது என்று தெரியவில்லை.

"என் தம்பியை எனக்குக் காட்டி என் வாழ்க்கையின் மிகப்பெரிய பரிசு ஒன்றை எனக்கு அளித்திருக்கிறீர்கள், டாக்டர்!" என்றேன் உணர்ச்சி வயப்பட்டு.

"நோ.. டோண்ட் ஃபீல் டூ மச்.. பதட்டம் போலத் தான் இப்படியெல்லாம் ஃபீல் பண்ணறதும். வாழ்க்கைலே எல்லாம் தான் இருக்கும்" என்றவர், "வாங்க, உங்க தம்பி வீட்டிற்குப் போகலாம்" என்றார்.

"இதெற்கெல்லாம் உங்களுக்கு கைமாறாக என்ன செய்யப் போகிறேனோ, தெரியவில்லை.. வெறும் நன்றி மட்டும் தான்னா மனசு கேக்கலை" என்று சொன்னதற்கு டாக்டர் சிரித்தார்.

"என்ன சிரிக்கிறீர்கள்?.. சும்மாவானும் அப்பப்போ இப்படி உபசார வார்த்தை போலச் சொல்கிறேனே, என்றா?"

"நோ, அங்கிள்!" என்று சொன்னவர், "அங்கிள்! நாம ரெண்டு பேருமே கடவுள் நம்பிக்கை உள்ளவர்கள், இல்லையா?" என்று புதுசாகக் கேட்பது போல ஒரு கேள்வியைக் கேட்டார்.

"அதிலென்ன சந்தேகம்?"

"சந்தேகம்னு இல்லே. இதுக்கு அடுத்தாப்பலே அதுன்னு ஒரு ஆர்டரா ஒவ்வொண்ணும் நடக்கறது யாராலேன்னு நம்ம ரெண்டு பேருக்குமே தெரியும், இல்லையா?" என்றார்.

"அவன் ஆட்டுவிக்கிறான், நாம் ஆடுகிறோம்.. அதைத் தானே சொல்ல வருகிறீர்கள்?" என்று நான் சொல்லி முடிப்பதற்குள், "அப்படி இருக்கறச்சே,நாம ரெண்டு பேரும் ஒருத்தருக்கொருத்தர் நன்றி சொல்லிக்கறது தான் புரியலை; என் போர்ஷன் இது; உங்கள் போர்ஷன் அது'ன்னு கொடுத்த போர்ஷனை ஒழுங்கா செஞ்சிட்டுப் போவோம்" என்றார் டாக்டர்.

"ஆனா எதற்காக இதெல்லாம்னுட்டுத் தான் தெரியலை!" என்றேன்.

"எதுக்காகவேனும் இருக்கட்டும். காரணம் பெரிசில்லை. இந்த ஆட்டம் தான் வாழ்க்கைன்னு எடுத்திண்டு போவோமே.. இன்னைக்கு இந்த சீன்; நாளைக்கு என்ன சீனோ? ஒழுங்கா ஆடிட்டு அவன் கொடுக்கற பரிசை ஏத்துப்போம்; என்ன சொல்றீங்க?" என்று டாக்டர் என்னையே மடக்கினார்.

"நான் என்ன சொல்றது, டாக்டர்?" என்று அப்பாவியாகக் கேட்டேன்... "தம்பியைப் பாக்கலாம்னுட்டுக் கூப்பிட்டீங்க.. அடுத்தப்பலே வர்றது அந்த சீன் தானே, டாக்டர்.. போலாமா, சுசீலா!" என்று சுசீலாவைக் கூப்பிட்டேன்.

"இதோ.." என்று என் கண்ணான துணைவி ஓடிவந்து என் கைப்பற்றினாள்.

அங்கே தான் போய்க் கொண்டிருந்தோம்.


(இன்னும் வரும்)






11 comments:

Geetha Sambasivam said...

அட?? கதை இப்படிப் போகிறதா?

உண்மை! ஆட்டுவித்தால் ஆடாதவர் யாரே! :)

ADMIN said...

திருப்பங்கள் எங்கள் விருப்பங்கள்.. தொடருங்கள் உங்கள் கதையை!!

G.M Balasubramaniam said...

ஒரு சந்தேகம் எழுகிறது ஜீவி. தம்பி விஸ்வநாதன் ஏன் அண்ணனைத் தேடி வரவில்லை.? கதையில் அவரைப்பற்றி குறிப்பிட்ட எதையாவது நான் கவனிக்காமல் விட்டு விட்டேனா,?

கோமதி அரசு said...

அவன் ஆட்டுவிக்கிறான், நாம் ஆடுகிறோம்.. அதைத் தானே சொல்ல வருகிறீர்கள்?" என்று நான் சொல்லி முடிப்பதற்குள், "அப்படி இருக்கறச்சே,நாம ரெண்டு பேரும் ஒருத்தருக்கொருத்தர் நன்றி சொல்லிக்கறது தான் புரியலை; என் போர்ஷன் இது; உங்கள் போர்ஷன் அது'ன்னு கொடுத்த போர்ஷனை ஒழுங்கா செஞ்சிட்டுப் போவோம்" என்றார் டாக்டர்.//

அவர் ஆட்டி வைக்கிறார் நாம் ஆடுகிறோம்.

ஆம் உண்மை அவர் அவர் பாத்திரங்களை சரிவர செய்து விட்டுப் போக வேண்டும்.

தம்பி கிடைத்தது மகிழ்ச்சி.

Shakthiprabha (Prabha Sridhar) said...

//இன்னைக்கு இந்த சீன்; நாளைக்கு என்ன சீனோ? ஒழுங்கா ஆடிட்டு அவன் கொடுக்கற பரிசை ஏத்துப்போம்; என்ன சொல்றீங்க?" //

ரசித்தேன்..

ஜீவி said...

@ கீதா சாம்பசிவம்

கண்ணுக்குத் தெரிகிற பொம்மலாட்டம் எல்லோருக்கும் தெரியும். இது கண்ணுக்குத் தெரியாத பொம்மலாட்டம்.
நம் மனம் தான் அந்த ஆட்டலுக்கு உட்படுத்தும் கயிறு.

தொடர் வருகைக்கு நன்றி, கீதாம்மா.

ஜீவி said...

@ தங்கம்பழனி

வருகைக்கும் தங்கள் கருத்தை சொன்னமைக்கும் மிக்க நன்றி, தங்கம்பழனி.

தங்கள் தளத்திற்கு வரவேண்டும். விரைவில் வருகிறேன்.

ஜீவி said...

@ G.M. Balasubramaniam

அவர் வந்திருந்தார். நீங்கள் தான் பார்க்க வில்லை. (அதாவது படிக்கவில்லை போலும்)

தொடர் வாசிப்பிற்கு நன்றி.

ஜீவி said...

@ கோமதி அரசு

வருகைக்கும் தொடர்ந்து படித்து வருவதற்கும் நன்றிம்மா.

ஜீவி said...

@ Sakthiprabha

இதில் ஒரு வேடிக்கை பாருங்கள். என்னதான் ஆட்படிந்து ஆடும் ஆட்டம் எனினும், நம் தேர்வுக்கும் அவன் வழிபண்ணிக் கொடுத்து டெஸ்ட் செய்கிறான். தீயவைகளைக் கண்டால் ஒதுங்கத் தோன்றுகிறது. இப்படியான ஒதுங்கலும் அவன் ஏற்பாடே ஆயினும், நாம் தான் அவற்றைப் புறக்கணிக்கிற மாதிரி ஒரு தோற்ற மயக்கத்தையும் தருகிறான். செயல் படுகின்ற நல்லன, அல்லாதனக்கேற்றவாறு பலாபலங்கள் என்கிற தெளிவு பிறக்கும் பொழுது இயல்பாகவே நேர்வழியில் செல்ல உந்தப்படுகிறோம். அந்த உந்துதலுக்கான வாய்ப்பையும் தருபவனும் அவனே. அந்த வாய்ப்பு கிடைப்பதும், கிடைக்காததும் அதற்கு முந்தையதான நம் செயல்பாடுகளின் தன்மை பொருத்து அமைகிறது.

வருகைக்கு நன்றி.

ஜீவி said...

@ ஸ்ரீராம்

//வேகமான அடுத்த கட்டம்! //

வேண்டிய இடத்தில் வேகமெடுத்து,
நிறுத்தி நிதானிக்க வேண்டிய இடங்களில் நிதானித்து.. ஆக மொத்தம் அடைய வேண்டிய இடத்தை அடைய வேண்டும். சிலரின் சில மன உணர்வுகளை வெளிப்படுத்தினால் தான் இந்தக் கதை சோபிக்கும் என்பது புரிந்து பார்வையைப் பதிந்து கொண்டிருக் கிறேன். பார்க்கலாம்.

தொடர் வருகைக்கு நன்றி.

Related Posts with Thumbnails