மின் நூல்

Wednesday, December 14, 2011

பார்வை (பகுதி-16)

                      அத்தியாயம்--16
ன்னிக்கு விஸ்வநாதன்- தேவி தம்பதியினரின் திருமண நாளாம். அத்தனை பேரும் மரப்படிகள் தடதடக்க மாடிக்கு வந்திருந்தார்கள். "நீ சொல்லவே இல்லையே?" என்று தம்பியிடம் கேட்டேன்.

"இப்போ தானே அண்ணா எங்கள் கல்யாணத்தைப் பற்றியே சொன்னேன்.. பேச்சு சுவாரஸ்யத்திலே நல்ல நாள் கூட மறந்திடுத்து.." என்று இழுத்தான் விஸ்வநாதன்.

"டம்ளர்லே தேவி பாயசம் கொடுக்கறா... வாங்கிக்கோங்கோ.."ன்னு சுசீலா குரல் கேட்டது.

தம்பதியரை வாழ்த்தி விட்டு வாங்கிக் கொண்டேன். அவர்கள் திருமணத்து நாளன்று அங்குப் போயிருந்தது மகிழ்ச்சியாக இருந்தது. பாயசம் கொழகொழவென்று தித்திப்பாக இருந்தது. அதுவரை அப்படியான ஒரு பாயசத்தை நான் சாப்பிட்டதில்லை. அதனால் பொதுவாக, "சுசீலா, என்ன பாயசம் இது?.. நீ இதுவரை இப்படிப் பண்ணியதில்லையே?"ன்னு கேட்டேன்.

"தேவி.. என்ன பாயசம்னு நீதான் சொல்லேன்.." என்றாள் சுசீலா.

"கேரட் பாயசம், அண்ணா.." என்றாள் தேவி. "அண்ணி தான் எப்படிச் செய்யறதுன்னு சொல்லித் தங்காங்க.." என்று மழலை மிழற்றுகிற மாதிரி குரல் வந்தது.

விஸ்வநாதன் வீட்டிற்கு நாங்கள் முதல் தடவை சென்ற பொழுது நடந்த இதெல்லாம் இப்பொழுதும் என் நினைவில் பசுமையாக இருக்கு. இப்போக்கூட சுசீலா கொடுத்த கேரட் கீரைக் குடிச்சப்போ அந்த நிகழ்வு தான் நினைவுக்கு வந்தது. "ஓ.. நானும் மறந்து போய்ட்டேன், சுசீலா.. இன்றைக்கு ஜனவரி- இரண்டு இல்லையா?"ங்கறேன்.

"நினைவிருந்தால் சரி.." ங்கறா சுசீலா.

"மறக்கமுடியுமா?.. புதுவருஷம் பிறந்தாலே நினைவுக்கு வந்துடும். இந்த வருஷம் என்னாச்சுன்னு தெரியலே.. சுத்தமாக மறந்தே போயிட்டேன்.." ங்கறேன்..

"கேரட் கீரைக் குடிச்ச பின்னாடியாவது ஞாபகத்துக்கு வந்ததே.. "

"நாம முதல்தடவை விஸ்வநாதன் வீட்டிற்குப் போனப்போ, காரட் பாயசம் சாப்பிட்டோம் இல்லையா?.. ஸ்பெஷல் பாயசம் வைச்சத்துக்குக் காரணம் அன்னிக்கு அவங்க திருமண நாள்னு சொன்னது தான் இப்போ ஞாபகத்திற்கு வந்து, நீ கேரட் கீர் இன்னிக்கு பண்ணியிருக்கற ரகசியமும் தெரிஞ்சது.. கீர் அருமை."

"இன்னிக்கு சுவாமிக்கும் நைவேத்தியம் கேரட் கீர் தான்..."ன்னு சொன்ன சுசீலா, "வடை தட்டியிருக்கேன். உருளைக் கிழங்கு பொடிமாஸூம், பீன்ஸ் கரியும், வெள்ளரிக்காய் பச்சடியும் தொட்டுக்கப் பண்ணியிருக்கேன். முருங்கைக் காய் குழம்பு, பாகற்காய் பிட்லை, தக்காளி ரசம், இந்த கீர், தயிர்-- போதும் தானே! இருக்கவே இருக்கு மாவடு ஊறுகாய்.." என்றாள்.

"எதேஷ்ட்டம்.. சங்கரி கூட வர்றா இல்லையா?"

"ஆமாம். உங்க தம்பி, தேவி, தேவி அம்மா, சங்கரி அப்புறம் விவேகானந்தனையும் சேத்துக்கோங்கோ.. அஞ்சாச்சா? நாம ரெண்டு பேர்; ஏழு. எல்லாம் நெறையவே பண்ணியிருக்கேன். நல்ல நாளும் அதுவுமா தொட்டுக்கோ தொடைச்சிக்கோன்னு இருக்கக்கூடாது, பாருங்கள்."

"டாக்டர்?.."

"ஓ.. மறந்திட்டேன், பாத்தீங்களா.. சாந்தி கட்டாயம் வர்றேன்னு சொல்லியிருக்கா.. நான் விவேகானந்தன் கிட்டே பேசிட்டேன். சாந்திக்கிட்டேயும் ஜாடை மாடையா சொல்லியிருக்கேன். சாந்தி தான் இந்த மேட்டரை ஆரம்பிச்சு உங்க தம்பிக்குத் தெரியப்படுத்தற மாதிரி..."

"தெரியப்படுத்தற மாதிரின்னு நாம நினைக்கறோம். விஸ்வநாதனுக்கே தெரிஞ்சிருக்குமோ என்னவோ?"

"சொல்லியிருந்தா சங்கரிதான் சொல்லியிருக்கணும். பாவம்ன்னா, அந்தக் குழந்தை. யாரான்னும் பெரியவா அடிச்சுப் பேசி தன்னோட அப்பா-அம்மாகிட்டே விஷயத்தைச் சொல்ல மாட்டாளான்னு ஏங்கறது. நாம தான் முன்னின்று எல்லாத்தையும் நடத்தி வைக்கணும்.. எப்பவும் போல நீங்க பாட்டுக்கு சிவனேன்னு இனிமே இருக்கப்படாது. நம்ம பொண்ணு கல்யாணம், தெரிஞ்சதா?"ன்னு டீச்சர், தன் வகுப்பு மாணவனை அதட்டிக் கேக்கற மாதிரி கேக்கறா.

எனக்கு இப்பவே இந்த வீட்டிற்கு கல்யாணக்களை வந்த மாதிரி இருக்கு. தம்பி கல்யாணம் நடக்கறச்சே பக்கத்திலே இருந்து சந்தோஷப்பட முடியாம போயிடுத்து. சங்கரி கல்யாணத்தை தடபுடலா ஜமாய்ச்சிடணும்னு தீர்மானமா மனசிலே பட்றது.

"எல்லாரும் வந்திடப் போறா. வாசப்பக்கம் சோபாலே வந்து உக்காந்துக்கோங்கோ. அடுப்பங்கரைலே எனக்கு இன்னும் கொஞ்சம் வேலை பாக்க்கியிருக்கு.. எல்லாத்தையும் முடிச்சிட்டு மூஞ்சி அலம்பித் தொடைச்சிண்டு இதோ நானும் வந்திடறேன்.. வாங்கோ.."ன்னு என் கையைப் பிடிச்சுக் கூட்டிண்டு வாசப்பக்கம் வர்றா.

முந்தில்லாம் கறிக்கு இது, குழம்புக்கு இதுன்னு அலம்பி கிண்ணத்திலே போட்டு எடுத்து வைச்சிடுவா சுசீலா. எல்லாத்தையும் வாகா வைச்சிண்டு நறுக்கி வைக்கறது என் வேலை. இந்த காய்கறி நறுக்கற காரியத்திலே நான் மன்னன். பீன்ஸ் நறுக்கறச்சே பாக்கணும். ஒரு நார் பிசிறு எனக்கு இருக்கக்கூடாது; கத்தியாலே வாகா கீறீண்டு நுனிலேந்து அடிவரை நரம்பை அவ்வளவு ஜோரா எடுத்திடுவேன். பொடிப்பொடியா கிண்ணத்திலே நறுக்கிப் போட்டிருக்கற பீன்ஸைப் பாத்தா மாணிக்கப் பரல் மாதிரி இருக்கும். கேரட் கோசுமல்லின்னு வைச்சிக்கோங்கோ, தோலில்லாம் நைஸா சீவி, துருவல்லே துருவி, உப்பு போட்டு எலும்பிச்சை பிழிந்து, ரெண்டு கருவேப்பலையும் தூவி ஒரு கிண்ணத்திலே எடுத்து மூடி வைச்சிடுவேன். சாப்படறச்சே எலும்பிச்சை சாறு நன்னா இறங்கி பதமா இருக்கும்.

இருந்த கண்ணும் ஒண்ணுமில்லாமப் போச்சா; பாக்கப்போனா, இப்போலாம் எனக்கு ஒரு வேலையும் இல்லே. ஓடியாடி அலைஞ்சு திரிஞ்ச காலம்லாம் போயாச்சு; ஆனா, சுசீலாக்கு எல்லாம் நான் தான் செய்யற மாதிரி; ஒப்புக்கு நான் கூட இருக்கேன்னு பேர் பண்ணினால் போதும். எட்டூருக்கு எல்லாத்தையும் இழுத்துப் போட்டுண்டு பாத்துப் பாத்துச் செஞ்சு ஓகோன்னு முடிச்சிடுவா. பாக்கறத்துக்கு விலுவிலுன்னு தான் இருப்பா; விஷயம்ன்னு வந்திட்டா அந்த யானை பலம் அவளுக்கு எங்கிருந்து தான் வருமோ, தெரிலே.

பாவம். அவளும் என்ன சுகத்தைக் கண்டான்னு நெனைச்சுப்பாக்கறேன். ஸ்கூல் வாத்தியார் பொண்ணு. ஐவேஜூன்னு அப்படி ஒண்ணும் இல்லே. அவ அப்பாக்கு மணல்மேட்லே பிதுராஜ்ஜித சொத்துன்னு கொஞ்சம் நெலம் இருந்ததா கேள்விப் பட்டிருக்கேன். போக்கியத்திற்கு விட்டிருந்தார். அதிலேந்து உருப்படியா ஒண்ணும் வந்ததாத் தெரியலே. சுசீலாவோட தமக்கை கல்யாணம் குதிர்ந்தப்போ செலவுக்கு அதையும் அதைப் பாத்திண்டிருந்த குடியானவனுக்கே விலைபேசி 'நீயே வைச்சிக்கோ'ன்னு கொடுத்திட்டு அவன் கொடுத்ததை வாங்கிண்டார்ன்னு கேள்வி.

எல்லாம் சுசீலா சொல்லித் தான் தெரியும். அவளா நெனைச்சிண்டா இப்படி ஒண்ணு ரெண்டு சொல்லுவா. எல்லாம் கதை மாதிரி இருக்கும். கோர்வையா சொல்லுவா. எச்சில் கூட்டி இழுத்து இழுத்து சொல்ல ஆரம்பிச்சாள்னா, இன்னிக்குப் பூரா கேட்டுண்டு இருக்கலாம். ஆரம்பிக்கறத்தே ஒரு கதையைச் சொல்ற மாதிரி தான் ஆரம்பிப்பா; ஆனா சொல்ற போக்குலே அதுபாட்டுக்க ஒண்ணு மாத்தி ஒண்ணுன்னு எப்படி எப்படியெல்லாமோ கோத்திண்டு நீண்டு போகும்; லேசிலே முடியாது. பாதி சொல்லிண்டு இருக்கறச்சேயே திடீர்னு 'கைவேலை நிறைய அப்படியே கிடக்கு; பாக்கியை நாளைக்குச் சொல்றேன்'னு எழுந்திண்டுருவா.

ஒரு நாள் அவ கிட்டே கேட்டேன். "ஒவ்வொண்ணையும் இப்படி நேர்ல பாத்த மாதிரி சொல்றையே?.. எப்படி இப்படி அழகாச் சொல்ல கத்திண்டே?"ன்னேன்.

"சொல்றதுக்கு என்ன சாமர்த்தியம் வேண்டிருக்குங்கறேள்.. பாத்தலெல்லாம் ஞாபகத்லே அப்படி அப்படியே படிஞ்சு போய்ட்றது. மனசிலே படிஞ்சு இருக்கறது தானே?.. எங்கேயும் போயிடலையே?..அதை அதை அப்படியே பெயர்த்தெடுத்து சொல்றேன். இதிலென்ன அதிசயம் இருக்குன்னு பெரிசா சொல்றேள்?" ன்னா...

"பாத்தனுன்னா சரி; பாக்காததையும் பாத்த மாதிரியே சொல்றதுன்னா, அது எப்படி?.. அதான் எனக்கு யோசனையா இருக்கு."

"சும்மாவானும் என்னை வம்பிழுக்கச் சொல்லாதீங்கோ.. அப்படி பாக்காததை எதை நான் சொல்லிட்டேன்னு சொல்றேள்?"ன்னு முசுமுசுன்னு மூச்சுவிட்டுண்டு கேட்டாள்.

"நீ சொன்னதைத் தான் சொல்றேன்.. அதை நீ பாத்திருக்க முடியாதுன்னு நிச்சயமா எனக்குத் தெரியும்."

"எதை?"

"உங்க அப்பா-அம்மா கல்யாணத்தை.. சொல்லு. அதை நீ பாத்திருக்க முடியுமா?
எங்கப்பா-அம்மா கல்யாணம் உமையாள்புரத்லே அப்படி நடந்ததுன்னு முந்தாநாள் வர்ணிச்சுச் சொன்னையே! இப்போ, சொல்லு... "

"பாத்தாத் தான் சொல்ல முடியுமா?.. கேட்டாலும் நெனைவிலே பதிச்சிண்டு அப்படியே சொல்ல முடியும். தெரிஞ்சிக்கோங்கோ.." முதல்லே முகம், பின்னாடி மூக்கு நுனின்னு செவந்தது.

அவ சிணுங்கிக் கோப்படறப் பாத்தா எனக்கு குஷி பிறந்திடும்."பத்தையா, பத்தையா.. இப்போ மாத்தி சொல்றே, பார்த்தையா?"

"நான் ஒண்ணும் மாத்திச் சொல்லலே.. சிலது, நான் பாத்துத் தெரிஞ்சிண்டது; சிலது கேட்டுத் தெரிஞ்சிண்டது.. பாத்தாலும், கேட்டாலும் எல்லாமே அப்படி அப்படியே சித்திரம் வரைஞ்ச மாதிரி ஞாபகத்லே பதிஞ்சிடறது.. எங்கம்மா ஒரு நாள் கூடத்லே என்னை ஒக்காற வைச்சு தன் கல்யாண கலாட்டாக்களைப் பத்தி ஒண்ணு விடாம சிரிச்சிண்டே சொன்னா. அதெல்லாம் அப்படியே மனசிலே பதிஞ்சு போயிடுத்து.. அதைத் தான் உங்ககிட்டே சொன்னேன். நீங்க தான் வேணும்னு என்னை சீண்டிப் பாக்கறேள்.."

அழுதே விடுவாள் போலிருந்தது.. "சரி.. சரி.. இதுக்கெல்லாம் மூக்கைச் சிந்தாதே! பாக்கறது மட்டுமில்லே; கேக்கறதும் ஞாபகத்திலே பதிஞ்சிடும்னு என் ஞாபகத்திலே பதிச்சிக்கறேன்.." என்று சிரித்துக் கொண்டே சொன்னதும் தான் ஒருவழியாக சகஜ நிலைக்கு வந்தா..

ரொம்ப ரோஷக்காரி; அவ செய்யாதது எதுக்கானும் குத்தம் சாட்டி சொன்னாப் போதும், முகத்தை திருப்பிண்டு போயே போய்விடுவாள். ரெண்டு நாளான்னாலும் பேசமாட்டா. அப்புறம் தாஜால்லாம் பண்ணி, வழிக்குக் கொண்டு வர்றத்துக்குள்ளே உன்பாடு என்பாடுன்னு ஆயிடும். ஆனா, எனக்கு இந்தப் பார்வை போனத்துக்கு அப்புறம் அவளோட கோபம், ரோஷம் எல்லாம் எங்க போச்சுன்னே தெரியலே; போதாததுக்கு என் மேலே ரொம்ப கரிசனம் கூடிப்போச்சு. எந்த ஜென்மத்லே யாருக்கு யார் கடன் பட்டிருக்கோம்னு தெரியலே; எந்தக் கடனை நேர் செய்ய எங்களுக்குள் இந்த உறவு பூத்ததுன்னும் தெரியலே. இதுக்கெல்லாம் கைமாறா என்ன செய்யணும்னு தெரியலே. மத்தவங்க பார்வைக்கு வெறும் புருஷன்-பெண்டாட்டி தான். ஆனா என் மனசிலே தாயாய், தாதியாய், தெய்வமாய் எல்லாமுமாய்..

"சுவர் கடியாரத்லே மணி அடிச்சதே.. வழக்கமா எத்தனைன்னு எண்ணிச் சொல்லுவேளே? மணி என்னாச்சு தெரியுமா?"

"ஏதோ யோஜனை.. அது அடிச்சதுக் கூடக் கேக்கலே.."

"என்ன யோசனை? இன்னும் அவாள்ளாம் வரலேன்னா?.. பத்தாச்சு; இன்னும் சித்த நேரத்லே வந்திடுவான்னா.."

சுசிலா வாய்க்கு சர்க்கரை தான் போடணும். வாசல் காலிங் பெல் கிணுகிணுத்தது.


(இன்னும் வரும்)












25 comments:

Geetha Sambasivam said...

ரொம்ப ரோஷக்காரி; அவ செய்யாதது எதுக்கானும் குத்தம் சாட்டி சொன்னாப் போதும், முகத்தை திருப்பிண்டு போயே போய்விடுவாள். ரெண்டு நாளான்னாலும் பேசமாட்டா. அப்புறம் தாஜால்லாம் பண்ணி, வழிக்குக் கொண்டு வர்றத்துக்குள்ளே உன்பாடு என்பாடுன்னு ஆயிடும். ஆனா, எனக்கு இந்தப் பார்வை போனத்துக்கு அப்புறம் அவளோட கோபம், ரோஷம் எல்லாம் எங்க போச்சுன்னே தெரியலே; போதாததுக்கு என் மேலே ரொம்ப கரிசனம் கூடிப்போச்சு. எந்த ஜென்மத்லே யாருக்கு யார் கடன் பட்டிருக்கோம்னு தெரியலே; எந்தக் கடனை நேர் செய்ய எங்களுக்குள் இந்த உறவு பூத்ததுன்னும் தெரியலே. இதுக்கெல்லாம் கைமாறா என்ன செய்யணும்னு தெரியலே. மத்தவங்க பார்வைக்கு வெறும் புருஷன்-பெண்டாட்டி தான். ஆனா என் மனசிலே தாயாய், தாதியாய், தெய்வமாய் எல்லாமுமாய்..//

மனதைத் தொட்ட வரிகள். கல்யாணச் சாப்பாடுக்கு வெயிட்டிங். அங்கே என்ன திருப்பம் காத்திருக்கோ! :)))))

ஜீவி said...

@ கீதா சாம்பசிவம்

சுடச்சுட வந்த பின்னூட்ட ரசனைக்கு நன்றி, கீதாம்மா..

ஸ்ரீராம். said...

உருளைக் கிழங்கு பொடிமாஸ், பீன்ஸ் கரி, வெள்ளரி பச்சடி...
முருங்கைக்கைக் குழம்பு, பாகற்காய் பிட்லை, அடேங்கப்பா...! இந்தப் பதிவு சமையல் ஸ்பெஷலா...!
சுசீலாவின் ரோஷம் பற்றி சொல்வதற்கு ஏதோ காரணம் இருக்க வேண்டும் என்று யோசித்தேன். பார்வை போனபிறகு அதெல்லாம் போயே போச்சுன்னு படித்ததும் பொசுக்குன்னு போச்சு! !

இராஜராஜேஸ்வரி said...

பூ வனம் அழகாய் மணக்கிறது,..

Geetha Sambasivam said...

இன்னிக்கு இங்கே பாகற்காய் பிட்லை செய்யும்போது இந்தக் கதை நினைவில் வந்தது. உ.கி. கறியும்! :)))))

G.M Balasubramaniam said...

சில நேரம் ,சில கதைகள் படிக்கும்போது, மனம் லயிக்கக் காரணம், அடிமனசில் எங்கோ ஒரு மூலையில் ,சில வார்த்தைகள் ,நிகழ்வுகள் சில உணர்ச்சிகள் நாம் அனுபவித்ததாகவோ, அவற்றால் பாதிக்கப் பட்டதாகவோ இருக்கலாம். இதில் மனம் ஒத்த தம்பதியினரின் பேச்சும் உணர்வுகளும் என்னை ஈர்த்தது. ஏழெட்டு நாட்கள் தமிழில் எழுத முடியாத நிலை, ஆங்கிலத்தில் கருத்திட வேண்டி வந்தது. இருந்தாலும் தமிழில் எழுதுவது போலாகுமா.?

ஜீவி said...

@ ஸ்ரீராம்

இந்த 'பார்வை' தொடராய் வருவதற்கு எப்படி நீங்கள் காரணமாய் இருந்தீர்களோ, அப்படியே இந்த ஸ்பெஷல் சமையல் பத்திகள் எழுத நினைத்ததிற்கும் நீங்கள் தான் காரணம். கொஞ்சமே யோசித்துப் பார்த்தால், உங்களுக்கே புரிபட்டுப் போய்விடும்.

//சுசீலாவின் ரோஷம் பற்றி சொல்வதற்கு ஏதோ காரணம் இருக்க வேண்டும் என்று யோசித்தேன். பார்வை போனபிறகு அதெல்லாம் போயே போச்சுன்னு படித்ததும் பொசுக்குன்னு போச்சு! ! //

-- அதுவும் ஒரு 'பார்வை' அடிப்படையிலேயே, இல்லையா?..

தொடர் வருகைக்கு நன்றி, ஸ்ரீராம்!

ஸ்ரீராம். said...

//இந்த ஸ்பெஷல் சமையல் பத்திகள் எழுத நினைத்ததிற்கும் நீங்கள் தான் காரணம். கொஞ்சமே யோசித்துப் பார்த்தால், உங்களுக்கே புரிபட்டுப் போய்விடும்//

நன்றி. நீங்களே சொல்லி விடுங்களேன். எங்கள் ப்ளாக் 'நாக்கு நாலு முழம்' பதிவா?!!

அப்பாதுரை said...

இப்பத்தான் முதல் தடவையா படிக்கிறேன்.. (கீதா சாம்பசிவம் உபயம்)
மிக அருமையாக, கோர்வையாக எழுதியிருக்கிறீர்கள். பீன்ஸ் மாணிக்கப் பரல் நெஞ்சில் படிமமாய் நிற்கிறது :)
மிச்ச பதிவுகளைப் படிக்க ஆவலோடு இருக்கிறேன்.
வணக்கங்கள்.

அப்பாதுரை said...

உங்கள் ஆங்கிலம் பிரமாதமாக இருந்தது G.M Balasubramaniam ஐயா.

Shakthiprabha (Prabha Sridhar) said...

விருந்து தான் இந்தப் பதிவு. எங்கள் வீட்டில் நான் இன்று செய்ததும் பாகற்காய் பிட்லை.

குட்டி குட்டி சிணுங்கல் கோபம் சமாதானம் எல்லாவற்றிலும் காதல் ஊறியிருப்பது தான் வாழ்கையின் இனிமையே.

சிவகுமாரன் said...

தம்பதியினரின் அன்னியோன்யம் நெகிழ வைத்தது.
சமையலில் மனைவிக்கு உதவி செய்வது எனக்கும் பிடிக்கும்.

கோமதி அரசு said...

"நான் ஒண்ணும் மாத்திச் சொல்லலே.. சிலது, நான் பாத்துத் தெரிஞ்சிண்டது; சிலது கேட்டுத் தெரிஞ்சிண்டது.. பாத்தாலும், கேட்டாலும் எல்லாமே அப்படி அப்படியே சித்திரம் வரைஞ்ச மாதிரி ஞாபகத்லே பதிஞ்சிடறது.. எங்கம்மா ஒரு நாள் கூடத்லே என்னை ஒக்காற வைச்சு தன் கல்யாண கலாட்டாக்களைப் பத்தி ஒண்ணு விடாம சிரிச்சிண்டே சொன்னா. அதெல்லாம் அப்படியே மனசிலே பதிஞ்சு போயிடுத்து.. அதைத் தான் உங்ககிட்டே சொன்னேன்.//


ஆம் ,சிலது இப்படித்தான் அழியாத ஒவியங்களாய் மனதில் பதிந்து விடுகிறது.

ரொம்ப அருமையாய் சொல்லி விட்டீர்கள் சார்.

கோமதி அரசு said...

பொடிப்பொடியா கிண்ணத்திலே நறுக்கிப் போட்டிருக்கற பீன்ஸைப் பாத்தா மாணிக்கப் பரல் மாதிரி இருக்கும்//

அருமையான வர்ணனை.

பார்வை(பகுதி- 16) எல்லாமே மனதை கவர்ந்து விட்டது.

கணவன் மனைவி தெய்விக உறவை நன்றாக சொல்லி விட்டீர்கள்.

Geetha Sambasivam said...

அடுத்தது பார்வை 17 படிச்சேன்; ஆனால் பின்னூட்டப் பெட்டி திறக்கலை! :(

நான் எதிர்பார்த்த திருப்பம் வந்திருக்கு. ஓரளவுக்குப் புரியுது. ம்யூசிக் தெரபியா? சீக்கிரம் "பார்"க்க ஆரம்பிக்க வாழ்த்துகளுடன்

ஜீவி said...

@ கீதா சாம்பசிவம்

இப்ப கிடைக்கும் பாருங்க! உடனே படிச்சு உடனே கமண்ட்டியதற்கு நன்றி, நன்றி, நன்றி

ஜீவி said...

@ ஸ்ரீராம்

//நாக்கு நான்கு முழம்//

அதே! அதே!

ஜீவி said...

@ அப்பாத்துரை

வணக்கம், அப்பாத்துரை சார்!

கிண்ணத்தில் மணிமணியாய் நறுக்கிப் போட்டிருக்கும் பீன்ஸைப் பார்க்கும் போதெல்லாம், மாணிக்கப்பரல்கள் தான் நினைவில் பளீரிட்டுப் போகும்!

இதில் ஒரு வேடிக்கை பாருங்கள்! நிஜமான மாணிக்கப் பரல்களை இதுவரை பார்த்ததில்லை! பின் எப்படி நினைவில் பளிச்சிடுகிறது என்பது ஒருநாள் வெளிச்சமானது!

அந்த 'பரல்கள்' என்னும் வார்த்தையின் விவரம் தான்! இளங்கோ அடிகள் எடுத்தோதி மூளைச் செல்களில் செதுக்கலாகிய வண்ணக்கோலம்! 'பரல்கள்' என்ற வார்த்தை எதிர்ப்பட்டாலே எனக்கு--கண்ணகி, கோப்பெருந்தேவி, இந்த இருவரின் காற்சிலம்புகள், யாருடையது முத்து- யாருடையது மாணிக்கப்பரல்கள் என்ற விஷயத் தெறிப்புகள் என்று அந்த ஒற்றை வார்த்தை தரும் 'பரல்கள்' தொடர்பான செய்திகள் நீண்டு கொண்டே போகும்! தொடர்ந்து "யானோ அரசன்; யானே கள்வன்!" என்று பிரகடனப்படுத்திய பாண்டியன் நெடுஞ்செழியன்!

இப்படி சிந்தனையை மீட்டும் 'ஒற்றை வார்த்தை'கள் நிறைய இருக்கின்றன. அப்படியான அந்த வார்த்தைகள் தான், 'என்னை எடுத்தாளு; எடுத்தாளு' என்று நினைவில் 'பளிச்,பளிச்'சென்று பளிச்சிட்டுப் போகின்றன, போலும்!

தங்கள் வருகைக்கும், பகிர்தலுக்கும் மிக்க நன்றி சார்!

ஜீவி said...

@ இராஜராஜேஸ்வரி

வனம் என்றாலே அழகு தான்!

அதே போல பூ என்றாலே மணம் தான்!

பூவனம் மணக்கக் கேட்பானேன்?..

சமீபத்திய உங்கள் பதிவொன்றில் ஒரு மலர்க் காடையே உலா விட்ட உங்களுக்கு தெரியாதா, என்ன?

தங்கள் ரசனைக்கு மிக்க நன்றிங்க.

ஜீவி said...

@ கீதா சாம்பசிவம் (2)

அப்படியா?.. ரொம்ப சந்தோஷம்!

பிட்ளை மாதிரி, 'ரசவாங்கி' என்று குறிப்பிட நினைத்தவன், ரசத்தோடேயே நிறுத்திக் கொண்டேன். எல்லாத்துக்கும் ஏதாவது மனசிலே அப்பப்ப ஒரு எதிர்க் காரணம் கிளைத்து, பலது நினைப்போடையேப் போய்விடுகிறது!

மீள் வருகைக்கு நன்றி.

ஜீவி said...

@ G.M. Balasubramaniam

கரெக்ட்! பின்னாடி அப்பாத்துரை சாருடனான எனது பகிர்வில், அந்த 'பரல்கள்' வார்த்தை படுத்திய பாட்டைப் பாருங்கள்.

சில நினைவை விட்டு அழிவதில்லை; 'இளமையில் கற்றவை'களுக்கு இந்த மாதிரி அழியாத மவுசும் ஜாஸ்தி!

உங்கள் ஆங்கில சரளத்தை அப்பாதுரை சார் பாராட்டியிருக்கிறார்; பார்த்தீர்களா?..

பாச மலர் / Paasa Malar said...

சமையல் சிறுகுறிப்புகள் / வர்ணனை அழகு....

பார்வையற்ற நிலையில் இன்னும் இறுகுகின்ற தாம்பத்யம் ...இன்னும் அழகு...

ஜீவி said...

@ சிவகுமாரன்

'அப்பா பேப்பர் படிக்கிறார்; அம்மா சமைக்கிறாள்; தம்பி
விளையாடுகிறான்; அக்கா வீட்டை சுத்தம் செய்கிறாள்'-- என்று ஆரம்ப பள்ளி பாடக்கல்வியிலிருந்தே நாம் பழக்கப்படுத்தப் பட்டு இருக்கிறோம். அதனால் தான் சிலர் மட்டுமே இந்த மாதிரியான காரியங்களைச் செய்யும் பொழுது அது வித்தியாசமாகப் படுகிறது. எத்தனை ஆண்கள் தாங்கள் சாப்பிட்ட தட்டை எடுத்து கழுவி வைக்கிறார்கள் என்பதே கேள்விக்குறி.

தங்கள் பகிர்தலுக்கு நன்றி, சிவகுமாரன்!

ஜீவி said...

@ பாசமலர்

தாங்கள் அவற்றைக் குறிப்பிட்டுச் சொல்லியிருக்கும் விதமும் அழகு!

தொடர்ந்த வருகைக்கு நன்றி, பாசமலர்!

dondu(#11168674346665545885) said...

க்ரோனலாஜிக்கலா தாவிட்டீங்க போலிருக்கே. முந்தைய பகுதியில் அண்ணன் தம்பியின் மீள்சந்திப்பு பற்றித்தான் பேச்சு. அப்போது யாரோ மாடிக்கு ஏறிவரும் சத்தம் கேட்கிறது.

ஆனால் இங்கோ வேறு வரவு அல்லவா தெரிகிறது? என் புரிதலில் தவறா, அல்லது?

அன்புடன்,
டோண்டு ராகவன்

Related Posts with Thumbnails