மின் நூல்

Friday, December 30, 2011

பார்வை (பகுதி-19)


                     அத்தியாயம்--19
ன்னிக்குக் காலைலே படுக்கைலேந்து எழுந்துக்கறச்சேயே மனசுக்கு ரொம்ப புத்துணர்ச்சியா இருக்கு..  வழக்கமா முன்னேல்லாம் கண் பார்வை இருக்கறச்சே, உள்ளங்கை ரெண்டையும் தேய்ச்சு,, பின்னாடி அதைப் பாத்துத் தான் விழிக்கறது வழக்கம்.  பிற்பாடு பார்வை போனதுக்கு அப்புறம் கொஞ்ச நாட்கள் வெறுமனே உள்ளங்கைகளை ஒண்ணோடு ஒண்ணு தேய்க்கறதை மட்டும் செஞ்சிண்டு மனசில் உள்ளங்கைகளைப் பார்க்கறதா பிரமையை மட்டும் பதிச்சிண்டிருந்தேன். நாளாவட்டத்திலே அந்தப் பழக்கமும் கொஞ்சம் கொஞ்சமாக இல்லாது போனது..

இன்னிக்கு என்னவோ எழுந்திருக்கறச்சேயே அந்தப் பழக்கம் நினைவுக்கு வந்து உள்ளங்கை இரண்டையும் தேய்ச்சிண்டு, அதை கண் ஒத்திப் பாக்க முடியாட்டா லும், சீக்கிரத்தில் முன்னே மாதிரியே பாக்கற சக்தியைக் கொடு தாயேன்னு தெய்வத்தை வேண்டிண்டேன்.   இன்னைலேந்து ஆரம்பிக்கற இந்த புதுமாதிரியான சிகித்சை வெற்றிகரமா முடிஞ்சு எனக்கு பார்வை பழையபடி வந்திடும்ன்னு அசாத்திய நம்பிக்கை மனசில் அதுவாகவே துளிர்விட்டது.  பாஸிட்டிவாக அந்த நம்பிக்கையைக் கெட்டியாப் பிடிச்சிக்கணும்னு உறுதி பிறந்ததும் என்னைக்கும் இல்லாத உற்சாகம் மனசில் பொங்கி வழியறது...

காலைக் கடன்கள் முடிச்சு பல் தேய்த்து முகத்தைத் துண்டால் துடைசிண்டிருக்கறச்சே, "காப்பி கொண்டு வரட்டுமா?"ன்னு சுசீலா கேட்டது,  கேட்கிறது..

"கொண்டு வாயேன்.. அவங்கள்லாம் எழுந்தாச்சா?"

"அவா மாடிலே தூங்கப்போனா.  சித்த நேரத்துக்கு மின்னாடி குழாய் சத்தம் மட்டும் கேட்டது.  உங்க தம்பி எழுந்திட்டார் போலிருக்கு.  இப்போத் தான் கலந்தேன். உங்களுக்குக் கொண்டு வர்றேன்."

"தம்பியும் வந்திடட்டுமேன்னு பாக்கறேன்."

"கலந்திட்டேன்.  ஆறிடப் போறது. அவா கீழே இறங்கி வந்ததும், புதுசா கலந்து தர்றேன். டிகாஷன் இறங்கிண்டிருக்கு."

"சரி.."

சித்த நேரத்தில் வந்தவ,  விரித்த என் கையில்லே காப்பி டம்ளரைக் கொடுக்கிறாள். ஒரு மடக்கு உள்ளே போனதுமே, தேவாமிர்தம் போலிருக்கு..

"ராத்திரி போன்லே சாந்தி பேசினான்னா"

"அப்படியா?.. என்ன சொன்னா? புது வைத்தியத்தைப் பத்தியா?"

"இல்லேன்னா.  விவேகானந்தனைப் பத்தி."

"ஓ. வெரிகுட்.."ன்னு திடீர்னு ஏற்பட்ட உற்சாகத்தில் எனக்கே வியப்பா இருக்கு.. "டாக்டரம்மா விவேகானந்தனைப் பார்த்தாங்களாமா?"

"ஆமான்னா..  இங்கேயிருந்து சாந்தி கிளம்பினதுமே நேரே விவேகானந்தன் வீட்டுக்குத் தான் போயிருக்கா.  நல்லவேளை, அவனும் வீட்லே இருந்திருக் கான்."

"அங்கங்கே நிறுத்தாமா சொல்லு.."

"அப்படிச் சொல்லித் தான் எனக்கு பழக்கம்.  அதைத் தெரிஞ்சே வேறே மாதிரி சொல்லுன்னா, எப்படிச் சொல்றது,  சொல்லுங்கோ."

"சரி. அதுக்காக சிணுங்காதே.  உன் வழிலேயே சொல்லு."

"இவ்வளவு வயசாச்சே தவிர நம்மளுக்கும் பல விஷயம் தெரிலேன்னா."

"என்ன தெரியாம போயிடுச்சுன்னு சொல்லு."

"சின்னஞ்சிறுசுகள் ரெண்டும் எப்படா இந்த கல்யாணப் பேச்சு ஆரம்பிச்சு அடுத்தாப்பலே நடக்க வேண்டியதெல்லாம் நடக்கும்ன்னுட்டு காத்திண்டிருக்கறது உண்மை தான்...  அந்த பரபரப்புக்கு நடுவேயும் இந்தப் பையன் கொஞ்சம் கூட பதட்டப் படாம முறையா எல்லாம் நடக்கணும்ங்கற திலே எவ்வளவு அக்கரையா இருக்காங்கறது தான் எனக்கு ஆச்சரியமா இருக்கு."

"எதுக்குத் தான் நீ ஆச்சரியப்படலே, இதுக்கு ஆச்சரியப்படாம இருக்கறதுக்கு!
அவனுக்கு குடும்ப பாசம் ஜாஸ்தி.  எதுவும் முறைப்படி நடக்கணும்னு தான் விரும்புவான்னு எனக்குத் தெரியும்."

"தெரிஞ்சு என்ன பிரயோஜனம்? அவனுக்கும் அவனைப் பெத்த அப்பா அம்மா இருக்கா, அவா கிட்டே பேசி அவா சொல்றதையும் கேட்டுண்டு அவங்க ஒப்புதலோட அதுக்கு மேலே உங்க தம்பி கிட்டே விஷயத்தை ஆரம்பிக்கணும்னு கொஞ்சமாவது நீங்களோ நானோ நெனைச்சுப் பாத்தோமா? சொல்லுங்கோ.."

சுசீலா கேக்கறது நியாயம் தான்.  விஷயம் நடக்கணும்ங்கற வேகம் பலதை யோசிச்சுப் பாக்க வைக்காம புத்தியை பல நேரங்கள்லே மழுங்கடிச்சிடுது. "சுசீலா, ஒப்புத்துக்கறேன்.  நமக்குன்னு எதுவும் இல்லாம போயிட்டதனாலே, இந்த அனுபவமெல்லாம் புதுசாப் போயிட்டது. தப்பு என் மேலே தான். மேற்கொண்டு என்ன நடந்தது, டாக்டர் அம்மா என்ன சொன்னாங்கங்கன்னு நீ சொன்னேன்னா புண்ணியமாப் போகும்.."

"அதைத் தானே சொல்ல வந்தேன்.  நீங்க வேறே குறுக்கே குறுக்கே ஏதாவது சொன்னா, எனக்கும் அவ சொன்னதெல்லாம் மறந்து போயிடும். கொஞ்சம் இருங்கோ. டிகாஷன் எறங்கிடுத்தான்னு பாத்திட்டு வந்திடறேன்."

"நடந்ததை சொல்லிட்டு அதைப் பாக்கப் போகக்கூடாதா?"

"தோ வந்திட்டேன்.." என்று போனவள் தான்.  ஆளையே காணோம்.

ஹாலில் தம்பியோட குரல் கேக்கறது. எழுந்திட்டான் போலும்.

"அண்ணி.. ரொம்ப நாளாச்சு இப்படி வாகா காப்பி குடிச்சு.."ன்னு அவன் சொன்னது கேட்டதும் தான், அவனுக்கும் காப்பி கலந்து கொடுத்து விட்டாள்னு  தெரியறது.  பாவம். ஒண்ணு மாத்தி ஒண்ணுன்னு அவளும் எத்தனையைத் தான் சமாளிப்பாள்ன்னு எனக்கும் அவளை நெனைச்சு இரக்கமா இருக்கு..

இருந்தாலும் சட்டுபுட்டுன்னு அவளும் டாக்டர் சாந்தி போன் பண்ணிச் சொன்னனதைச் சொல்லிட்டுப் போயிருக்கலாம்னு தான் திருப்பித் திருப்பி மனசு நெனைக்கிறது.  சுசீலா சொன்னதிலேந்து, அடுத்த வேலை விவேகானந்தனோட அப்பாக்கு அவரோட பையன் சம்பந்தமாய் நம்ம புரோப்பசலை வைக்க வேண்டியது தான்னு தோண்றது.  பெண்ணுக்குப் பெரியப்பா நான்;  இந்த கல்யாணத்தைப் பொறுத்த மட்டில் இங்கேயும் அங்கேயும் ரெண்டு பக்கமும் பேசி அடுத்த கட்டத்திற்கு நகர்த்த வேண்டியது என்னோட பொறுப்புன்னு மனசார நெனைக்கறேன். அதுக்காக அடுத்தது அடுத்ததுன்னு நெறைய வேலைகள் பாக்கி இருக்கு..

டாக்டர் சாந்தி ரொம்பவும் இண்ட்லிஜெண்ட்.  அடுத்தாப்லே அவங்க என்ன செஞ்சிருக்காங்க்ன்னு தெரிலே.  போன்லே சுசீலாகிட்டே சொல்லியிருக்கலாம்.
அதையாவது இவள் சொல்லிட்டுப் போயிருந்தா, மேற்கொண்டு என்ன செய்யணும்னு முடிவெடுக்கலாம்னா, அதுவும் சொல்லாம போயிட்டாளே..' ன்னு நெனைச்சிண்டிருக்கறச்சேயே..

"என்னண்ணா, எழுந்தாச்சா?"ன்னு கேட்டுண்டே விஸ்வநாதன் ரூமுக்குள் நுழையறான்.

"வாப்பா.. எழுந்து காப்பியெல்லாம் கூட ஆச்சு."

"அப்படியா?.. ஃபைன்.  மணி ஏழாறது.  பத்துக்கெல்லாம் எல்லாரும் வந்திடுவா.
அதுக்குள்ளே நாம எல்லாரும் ரெடியாகணும் இல்லையா?"ன்னு அவன் கேட்கிற பொழுது தான், இன்னிக்கு எனக்கு ஆரம்பிக்கப்போற புது வைத்தியம் நினைப்பிலேயே இவன் இருக்கான்னு தெரியறது.  எனக்கும் இப்போத் தான் அதுவும் நினைப்புக்கு வர்றது.

நல்ல வேடிக்கை..  இவன் பெண்ணோட எதிர்கால நலனைப் பத்தி நான் யோசிச்சிண்டிருக்கேன்.  இவன் என்னடான்னா, என்னோட நலனைப் பத்தியே சிந்தனைலே இருக்கான்!    

எதுக்கு எது முந்தின்னு தெரிலே.  எல்லாம் முக்கியம் தான்.  ரெண்டையும் போட்டுக் குழப்பிக்காம ரெண்டுலேயும் முழு கவனத்தைப் பதிக்கணும்னு நெனைச்சிக்கறேன்.

இப்பவே சங்கரி கல்யாணம் பத்தி நாங்க நினைச்சிருக்கறதை இவனிடம் சொல்லிடலாமான்னு நெனைக்கிறேன்.  நான் சொன்னா இவன் அதுக்கு மறுப்பு ஒண்ணும் சொல்லப் போறதில்லை.  அவன் மறுப்பு சொல்றத்துக்கும் எது ஒண்ணும் இருக்கறதா எனக்குத் தெரிலே.   அவனைப் பொருத்தமட்டில் நான் எது சொன்னாலும் சரிதான்.  இவன் என்ன சொல்றான்னு தெரிஞ்சிண்டு, அதுக்கு அப்புறம் விவேகானந்தன் அப்பாவை அப்ரோச் பண்ணறதும் நல்லது தான்.
எக்குத் தப்பா பேச்சு வார்த்தைலே எதாச்சும் மாறிப் போனாக் கூட, சொந்த தம்பிக்கு சமாதானம் சொல்றது சுலபம்.  எல்லாம் நினைப்பாவே இருக்கறது ரொம்ப தப்பு.  அடுத்த கட்டத்திற்கு மூவ் ஆனால் தான், அதுக்கு அடுத்த கட்டத்திற்கு அதை நகர்த்தலாம்.  எத்தனை கட்டம் தாண்டணுமோ, அதுவும் தெரிலே.  இப்போதைக்கு தம்பி கிட்டே லேசா கோடி காட்டி, ஆரம்பிச்சு வைக்கலாம்னு நான் நெனைச்சிண்டிருக்கறச்சே,  வாசல் காலிங்பெல் கணகணக்கிறது.

புரொபசர் பத்து மணிக்கு வர்றதாச் சொல்லியிருந்தாலும், டாக்டர் சாந்தி கொஞ்சம் முன்னாடியே வந்திட்டாங்க போல இருக்கு.  அவங்க குரல் தான் உற்சாகமா கேக்கறது.

ஏன் அப்படி முன்னாடி வந்தாங்கன்னு பின்னாடி தான் தெரிஞ்சது.  தெரிஞ்சது அது மட்டுமில்லே, ஒவ்வொரு விஷயத்தையும் நான் எவ்வளவு மேலோட்டமா பாக்கறேங்கறதும் எல்லாத்தையும் எங்கிட்டே அவங்க சொல்லறப்போத் தான் தெரியறது..


(இன்னும் வரும்)




   

17 comments:

கோமதி அரசு said...

இன்னிக்கு என்னவோ எழுந்திருக்கறச்சேயே அந்தப் பழக்கம் நினைவுக்கு வந்து உள்ளங்கை இரண்டையும் தேய்ச்சிண்டு, அதை கண் ஒத்திப் பாக்க முடியாட்டா லும், சீக்கிரத்தில் முன்னே மாதிரியே பாக்கற சக்தியைக் கொடு தாயேன்னு தெய்வத்தை வேண்டிண்டேன். இன்னைலேந்து ஆரம்பிக்கற இந்த புதுமாதிரியான சிகித்சை வெற்றிகரமா முடிஞ்சு எனக்கு பார்வை பழையபடி வந்திடும்ன்னு அசாத்திய நம்பிக்கை மனசில் அதுவாகவே துளிர்விட்டது. பாஸிட்டிவாக அந்த நம்பிக்கையைக் கெட்டியாப் பிடிச்சிக்கணும்னு உறுதி பிறந்ததும் என்னைக்கும் இல்லாத உற்சாகம் மனசில் பொங்கி வழியறது...//

எனக்கும் அந்த நம்பிக்கை வந்து விட்டது.

கண்பார்வை வந்து விடும் என்ற அசாத்திய நம்பிக்கை வந்து விட்டது என்கிறார்.இந்த நம்பிக்கை தான் வெளிச்சத்தை நோக்கி அவரை வழி நடத்தி செல்லப் போகிறது.

தன் தம்பி மகளின் திருமணத்தை தன் கண்களால் பார்த்து மகிழ போகிறார்.

அண்ணனுக்கு தன் தம்பி மகள் நினைப்பு, தம்பிக்கோ தன் அண்ணனின் கண்பார்வைக்கு சிகிட்சை தொடங்கும் நாள் என்று நினைவு என்ன ஒரு அன்பு!.

டாக்டர் ஒரு அன்பு சுரங்கம்.

கண்பார்வை கிடைக்கட்டும் கண் ஒரத்தில் அன்பு பூக்கள் பூக்கட்டும்.

Rathnavel Natarajan said...

நல்ல பதிவு.
வாழ்த்துகள்.

Geetha Sambasivam said...

அநியாயத்துக்கு சஸ்பென்ஸ்; எதிர்பார்த்த கோணத்தை விட்டுச் சற்றே விலகிச் செல்கிறதோ? :))))) படைப்பவரின் விருப்பம் தான் இல்லையா? ஆனால் சில சமயம் கதாபாத்திரங்கள் எழுதுபவரின் மனதை ஆக்கிரமித்துக் கொண்டு ஆட்டிவைக்கும். இங்கே இப்படித்தானோ? அல்லது ஆசிரியர் ஆட்டி வைக்கிறாரா? கதாசிரியர்களும் கிட்டத்தட்ட பிரம்மா தான். தங்கள் கதாபாததிரங்களின் விதியை எதிர்காலத்தை நிர்ணயிப்பதால்! :)))))

தொடருங்கள். காத்திருக்கேன்.

ஸ்ரீராம். said...

//இன்னிக்கு என்னவோ எழுந்திருக்கறச்சேயே அந்தப் பழக்கம் நினைவுக்கு வந்து உள்ளங்கை இரண்டையும் தேய்ச்சிண்டு, அதை கண் ஒத்திப் பாக்க முடியாட்டா லும், சீக்கிரத்தில் முன்னே மாதிரியே பாக்கற சக்தியைக் கொடு தாயேன்னு தெய்வத்தை வேண்டிண்டேன்//

இப்படி பாசிட்டிவ் எண்ணம் வரவழைத்திருப்பதே ப்ரொபசர் மற்றும் டாக்டரின் வெற்றி இல்லையா...!
தம்பியிடம் திருமணச் செய்தி பற்றிப் பேச அண்ணா அவசரப் படறாரோ.... !

”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி said...

ஸார்..ப்ரமாதம்! அங்கங்கே லா.சா.ரா.
எட்டிப் பர்ர்க்கிறார் போலவே இருக்கு!

அன்புடன்,

ஆர்.ஆர்.ஆர்.
http://aaranyanivasrramamurthy.blogspot.com/2011/12/blog-post_20.html

சிவகுமாரன் said...

ஆர்வமாய் இருக்கிறேன். அடுத்தது என்ன நடக்கும் என்பதில் .

நான் அடிக்கடி வலைப்பக்கம் வர முடியாமல் போவதினால் , உடனடியாய் படித்து பின்னூட்டம் இட முடிவதில்லை. மன்னிக்கவும்

கோமதி அரசு said...

ஜீவி சார், உங்களுக்கும் உங்கள் குடும்த்தாருக்கும் என் இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்.

திருக்கயிலாய யாத்திரை நான்காம் பதிவு எழுதி விட்டேன்.

நேரம் கிடைக்கும் போது படித்து கருத்து சொல்லுங்கள் சார்.
அன்புடன்
கோமதி அரசு.
தனி மடல்.

ஜீவி said...

@ கோமதி அரசு

நல்லவர்களின் நம்பிக்கை எஞ்ஞான்றும் வீண் போவதில்லை. அதற்கு இறைவன் அருள் என்றும் உண்டு.

மனம் ஒன்றிய தங்கள் வாசிப்புக்கு நன்றி.

ஜீவி said...

@ Rathnavel

தங்கள் வருகைக்கு நன்றி. அடுத்த பின்னூட்டத்தில் தங்கள் மனத்தில் படுவதைச் சொல்ல வேண்டுகிறேன்.
அது மற்றவர்களுடனான ஒரு பகிர்தலாக வெளிப்பட்டால் பலருக்கும் பயன் படும் தானே?..

ஜீவி said...

@ கீதா சாம்பசிவம்

போகும் ஊர் எதுவென்று தீர்மானித்தாயிற்று. பாதி வழியில் பிரியும் கிளைப்பாதையின் வழியாகப் போனாலும் அந்த ஊருக்குப் போகலாம் என்று சொன்னார்கள். இப்போதைக்கு கிளைப்பாதையில் பயணம்.

ஆனால், ஒரு தயார் நிலைக்காக இப்போதே ஒன்று சொல்லி விட வேண்டும். ஊர் போய்ச் சேர்ந்ததும் தான் உண்மையான கதையே ஆரம்பிக்கப் போவதாக இப்பொழுது தோன்றுகிறது.

அந்தக் கதை மிகமிக சுவாரஸ்யமானது. இதுவரை யாருமே எழுதாத ஒரு புதுமாதிரியாக அதைச் சொல்ல வேண்டும் என்று நினைக்கிறேன்.

தொடர்ந்து வாசித்துத் தங்கள் கருத்துக்களைச் சொல்ல வேண்டுகிறேன்.

ரசனையினூடான தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.

ஜீவி said...

@ ஸ்ரீராம்

பெரியவருக்கு பார்வை கிடைக்க அந்தப் பெரியவரையும் சாமர்த்தியமாக உள்ளடக்கிக் கொண்டு ஒரு டீமே வேலை செய்ய ஆரம்பித்து விட்டது. நடு ஆற்றில் தத்தளிப்பது போலான நிலையில் படகைச் செலுத்த அவர்களுக்குக் கிடைத்த துடுப்பு தான் விவேகானந்தன்-சங்கரி திருமணம்.

இதற்கு மூளை, டாக்டர் சாந்தி.
உண்மையில் ஜெர்மனி கான்ஃபிரன்ஸில் புரொபசர் ஆற்றிய உரை தான் அவரை உற்சாகப்படுத்தி
புரொபசருடன் சேர்ந்து இந்தமாதிரியான ஒரு திட்டமிடலுக்குக் காரணமாயிற்று.

//தம்பியிடம் திருமணச் செய்தி பற்றிப் பேச அண்ணா அவசரப் படறாரோ..//

ரெண்டு முனை, கிழக்கு மேற்காக. ஒரு முனை இவரின் தம்பி-- இன்னொரு முனை விவேகானந்தனின் அப்பா. இருவரில் யாரிடமாவது ஆரம்பித்துத் தானே ஆகவேண்டும்?.. அந்தப் பெரியவருக்கு தனக்குப் பார்வை கிடைப்பதை விட, இந்தக் கல்யாணம் தன் ஏற்பாட்டில் நடக்க வேண்டும் என்பது முக்கியமாகி விட்டது. அதற்காகத் தான் துடியாகத் துடிக்கிறார். அதனால் தான் பொத்திப் பொத்தி மனசுக்குள் வைத்துக் கொள்ளாமல் தம்பியிடம் விஷயத்தைச் சொல்லி விடலாமா என்று தவியாய்த் தவிக்கிறார்.

ஆனால், எது நடந்தாலும் சரி, டாக்டர் சாந்தி எல்லாவற்றையும் சமாளித்து விடுவார். அவர் போட்டிருப்பது மாஸ்டர் ப்ளான்.

இந்தக் கதையை ஆரம்பித்து வைத்தது போலவே தொடர்ந்து வருவதற்கும் நன்றி. அதுசரி, போன அத்தியாயம் படித்தீர்களா?..

G.M Balasubramaniam said...

சில நேரங்களில் சொல்ல நினைப்பது சொல்ல முடியாமல் தடங்கல்கள் வருவதும் , கேட்க நினைப்பவரின் ஆர்வம் அதனால் இன்னும் கூடுவதும் , மனித மனத்தின் இயல்பு அழகாக கையாளப் பட்டுள்ளது. போன பதிவின் பின்னூட்டத்துக்கு மனதில் தோன்றுவதை எழுதுகிறவன் என்று என்னைக் குறிப்பிட்டிருக்கிறீர்கள். கதையின் கரு உங்களுடையது. எழுதுவது நீங்கள். ரசிக்கப் பட வேண்டும் என்றுதான் எழுதுவீர்கள். கதாபாத்திரங்கள் எல்லோரையும் நல்லவர்களாக சித்தரிப்பது உங்கள் இயல்பு என்று புரிந்து கொண்டுள்ளேன். இதன்படி கதையும் சுபம் என்று பாசிடிவ்வாகத் தான் முடியும் என்று நம்புகிறேன்.

ஜீவி said...

ஆர்.ஆர். ராமமூர்த்தி

லா.ச.ரா?.. அவர் பாணி, வேறல்லவோ?அவரது வார்த்தைப் பிரயோகங்களே, பற்றிக் கொள்ளும் தன்மை படைத்தது அல்லவோ? குத்துவிளக்கின் தீச்சுடரில், லேசாக தண்ணீர் பட்டுத் தெரித்த மாதிரி சடசடக்கும் சொற்கள் கொண்டதல்லவோ?

ரொம்ப பாந்தமாக தன்னிலை மனவெழுச்சிகளைச் சொல்வதினால் அவர் நினைவு வந்து விட்டதுவோ?

அந்த 'ப்ரமாதத்'திற்கு மிக்க நன்றி, ஆர்.ஆர்.ஆர்!..

அமரர் லால்குடி சப்தரிஷி ராமாமிர்தம் பற்றி எனது இந்த வலைபூவின் 'எழுத்தாளர்' பகுதியில்
எழுதியிருக்கிறேன். அருள்கூர்ந்து அதைப் படித்துத் தங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ள வேண்டுகிறேன். உங்கள் பகிர்தல் கண்டு லா.ச.ரா.பற்றி அந்த இடத்தில் நாம் நிறைய பகிர்ந்து கொள்ள அது ஒரு வாய்ப்பாக அமையும்.

என்னுடைய 'ரீடரி'லேயே நீங்கள் இருக்கிறீர்கள். பார்த்து படித்துக் கொண்டுமிருக்கிறேன். அதுசரி,
நீங்கள் ஏன் பதிவுகளுக்கு வரும் பின்னூட்டங்களுக்கு உங்கள் கருத்தைச் சொல்லி பதிலளிப்பதில்லை?.. அப்படியான பகிர்தல், கருத்துக்களைப் பகிர்ந்து கொள்வதற்கு ஒரு வாய்ப்பாக அமையுமே?..

அடிக்கடி வாருங்கள், ஆர்.ஆர்.ஆர்!..

ஜீவி said...

@ சிவகுமாரன்

நான் அறிவேன், தோழரே! ஒத்த மனங்கள், அடுத்ததைக் காட்டும் பளிங்கு போல் எடுத்துக் காட்டி விடும், அல்லவா?..

தங்கள் ஆர்வத்திற்கு நன்றி.

ஜீவி said...

@ G.M. Balasubramanaiam

வாழ்க்கையில் எதிர்பாராமல் ஏற்படும் இடர்கள்; எதிர்பார்ப்பதும் நிறைவேறாத ஏமாற்றங்கள்; எதற்கு இது நேர்ந்தது என்று திகைக்கும் அளவுக்கு திக்குமுக்காடல்கள்; சாண் ஏறினால் முழம் சறுக்கும் இடிபாடுகள்-- இத்தனையுமே 'வில்லன்'களாக அமையும் போது, வாழ்க்கையை அச்சாகப் பிரதிபலிக்கும் கதைகளுக்கு தனியாக மனித உருவில் வேறு ஒரு வில்லன் தேவை தானா என்கிற எண்ணமே இப்படியான கதைகள் உருவாவதற்குக் காரணம்.

நமது நல்ல உள்ளமும், செயல்பாடுகளும், வாழ்க்கையில் நம்மைச் சாய்க்க நினைக்கும் அத்தகைய வில்லங்களோடு சமர் புரியட்டும் என்கிற எண்ணத்திலேயே நல்லவர்களான கதாபாத்திரங்களும், நல்லவர்கள் வாழ்வார்கள் என்கிற சிந்தனை விதைப்பும் இயல்பாகவே நடைபெறுவதாக நினைக்கிறேன்.

சிங்கம் சிங்கத்தைச் சாய்க்காது;
புலி புலியோடு பொருந்தாது.
மனிதரில் மட்டும் ஏன் இப்படி?..
ஒட்டுமொத்த மனிதகுல மேன்மைக்காக எல்லாமும் திசை திரும்பினால், எவ்வளவு அழகாக இருக்கும்?..

இது என்ன உட்டோப்பியாவா?.. அப்படி இருக்காது என்பதே என் எண்ணம்.

நீங்கள் எடுத்துக் காட்டியுள்ள இடம் எழுதும் போதே நானும் ரசித்த இடம். உங்கள் யூகமும் சரிதான்.
இருப்பினும் அந்த முடிவை நோக்கி நகர்த்துவது, இந்தக் கதையாகவும் போகப் போகிறது!

தொடர்ந்து வந்து தங்கள் கருத்துக்களைச் சொல்வதற்கு மிக்க நன்றி, ஜிஎம்பி சார்!

பாச மலர் / Paasa Malar said...

பார்வை கிடைக்கப்போகிறதோ இல்லையோ..பார்வை இல்லை என்ற குறை முழுவதுமாக நீங்கிவிடப் போகிறது என்று தோன்றுகிறது..இதுவும் பாஸிடிவ் எண்ணம்தானே...ஏன் எனக்கு இப்படித் தோன்றுகிறது என்று புரியவில்லை...

விவேகானந்தன் கல்யாணமும் எதிர்பார்த்தபடி நடக்கப் போகிறதா இல்லையா...கடைசி வரிகள் இந்தச் சந்தேகத்தை ஏற்படுத்துகின்றன...

தம்பி ஒத்துக்கொள்ளப் போவதில்லையோ...

சிகிச்சை எப்படி இருக்கும்...

காத்திருப்போம்....

ஜீவி said...

@ பாசமலர்

ஆமாம், பார்வை கிடைப்பதும், தன்னைப் பொருத்தமட்டில் பார்வை கிடைத்து விட்ட மாதிரி பாவனை கொள்வதும் -- இரண்டுமே பாஸிட்டிவ் எண்ணம் தான். ஆனால், அப்படி அவர் பாவனை கொண்டு விடாதபடிக்கு, டாக்டர் சாந்தியால் செலுத்தப்படுகிறார்.சங்கரியின் கல்யாணம் ஒரு தூண்டில்; அதில் சிக்கிக்கொண்டு மீள முடியாமல் தவிக்கிறார். பாவனை கொள்ளும் தளர்வு கூட இந்த எண்ணத்தினால் மீண்டும் தன்னைப் புதுப்பித்துக் கொண்டு, பார்வை கிடைத்தேயாக வேண்டும் என்கிற உறுதிக்கு அவரை உந்தித் தள்ளுகிறது. இது பற்றி அவர் கொள்ளும் நம்பிக்கை அவருள் எஃபக்டிவ்வாக செயலாற்றத் துவங்கி விட்டது.

சங்கரி-விவேகானந்தனின் கல்யாணமும், அவருக்குப் பார்வை கிடைப்பதும் எப்படியோ முடிச்சு போடப்பட்டு விட்டது. இந்த சமயத்தில், அவர்கள் கல்யாணம் நடக்கவில்லை எனில், பார்வை கிடைத்தும் பயனில்லை என்கிற முடிவுக்கே அவர் வருவார். யாராலும் அந்தக் கல்யாணத்திற்காக தடை ஏற்படுகிறது என்பதை அவர் உணர்ந்தால், அடுத்த வினாடியே பார்வை கிடைப்பதற்கான தன்முயற்சியை அவர் கைகழுவி விடுவார். தனக்குப் பார்வை கிடைக்காவிட்டாலும் பரவாயில்லை, அவர்கள் கல்யாணம் நடக்க வேண்டுமென்று அவர் எண்ண முனையாமல் தடுக்க, பார்வை கிடைத்து கல்யாணத்தை கண்ணால் கண்டு மகிழுவதற்கான ஆசை விதை அவர் உள்ளத்தில் ஊன்றப்படுகிறது.

என்னதான் இருந்தாலும் நடக்க வேண்டியது என்று ஒன்று இருக்கிறாதல்லவா?.. அது என்னவென்று போகப்போக பார்ப்போம்.

காத்திருப்பதற்கு நன்றி, பாசமலர்!

Related Posts with Thumbnails