மின் நூல்

Saturday, January 28, 2012

பார்வை (பகுதி-23)

                     அத்தியாயம்--23

ரு வினாடி தான்.  இத்தனை நேரம் படித்த அந்த 'பார்வை' நெடுங்கதை, காட்சி காட்சியாக மனத்தில் பதிந்துப் படர,  லஷ்மணன் இதழ்க் கடையில் புன்முறுவல் தவழ்ந்தது.

"எதற்காக இந்த முறுவலோ?" என்றாள் ஊர்மிளா.

"ஒரு அப்ரிசியேஷன் தான்.  அந்தக் கதையை மனசில் ஓட்டிப் பார்த்தப்போ சில பகுதிகள் மறக்க முடியாம நினைவுக்கு வந்தது.. வார்த்தைக்கு கொஞ்சமும் வேலையில்லாம, மனசுக்குள்ளேயே அந்த பாராட்டு மலர்ந்தது, இல்லையா?.. அப்படி எனக்குள்ளேயே ரசிச்சது தான் என்னை அறியாமலேயே புன்முறுவலா வெளிப்பட்டிருக்கு போல இருக்கு. அது சரி, ஒண்ணு கேக்கறேன். மறைக்காம சொல்லணும். இந்தக் கதைலே உனக்கு ரொம்ப பிடிச்ச அம்சம் எதுன்னு நீ நினைக்கறே?" என்று குறுகுறுப்புடன் அவளைப் பார்த்தபடி லஷ்மணன் கேட்டான். அந்தக் கேள்விக்கான அவளது பதிலை ஒருவித எதிர்பார்ப்புடன் அவன் விரும்புகிறான் என்பதை மறைக்க முடியாமல் அவன் முகம் வெளிப்படுத்தியது..

"ரொம்ப பிடிச்சதா?.." என்று ஒரு வினாடி யோசித்தாள் ஊர்மிளா. இருந்தாலும் உடனடியா அவன் கேட்டதற்கு பதில் சொல்வதைத் தவிர்த்து, "அதை அப்புறமாச் சொல்றேனே!...  அதுக்கு முன்னாடி இந்தக் கதைலே என்னைக் கவர்ந்த ஒண்ணைச் சொல்லியே ஆகணும்"ன்னு அதை அவனிடம் உடனே சொல்றத்துக்கு அவசரப்படுகிற தோரணையில் ஊர்மிளா பரபரத்தாள்.

'அவளுக்குத் தான் நினைக்கிறதை உடனே சொல்லியாகணும்.  அப்படிச் சொல்லலேன்னா,   அது பற்றிச் சொல்ல வந்தது அவளுக்கு மறந்து    போய்விடும்'ங்கறதைத் தெரிந்து கொண்டே, அப்படியான ஒரு குறைபாட்டை தவிர்க்க அவளுக்கு பயிற்சி கொடுக்க வேண்டும் என்கிற உத்தேசத்தில், "ஒரு விஷயம் நம்மைக் கவர்வதால் தானே அது பிடிச்சுப் போறது? அப்படி அந்த விஷயம் நம்மைக் கவர்வதும், அதனாலேயே அது பிடிச்சுப் போறத்துக்கும் வித்தியாசம் இருக்குன்னு நெனைக்கறே?.." என்று லஷ்மணன் தெரியாது மாதிரிக் கேட்டான்.

அவனுக்கு என்ன பதில் சொல்வது என்று ஊர்மிளா ஒரு வினாடி யோசித்தாள். கவர்வதற்கும், பிடிச்சுப் போறதுக்கும் இருக்கும் நூலிழை வித்தியாசத்தை அவள் உணர்ந்தாள். இருந்தாலும் இந்த சொல் ஆராய்ச்சியில் இப்பொழுது இறங்கினால், தான் சொல்லவந்தது வேறு திசையில் போய்விடுமே என்கிற கவலையில் "நான் சொல்ல வந்தது என்னன்னா.." என்று இழுத்தாள்.

"சரி. சொல்லு.." என்று திடுதிப்பென்று லஷ்மணன் வழிவிடுவான் என்று ஊர்மிளா கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை. அந்த எதிர்ப்பார்பின்மையின் ஊடேயே கொஞ்ச நேரத்திற்கு முன்னால் அவன் தன்னிடம் என்ன கேட்டான் என்பதை மனத்தில் நினைவு படுத்திக் கொண்டு அதை அவனிடமே நிச்சயப்படுத்திக் கொள்கிற தோரணையில், "இந்தக் கதையில் எனக்கு ரொம்ப பிடிச்ச அம்சத்தைத் தானே கேட்டீங்க?"என்று அவனிடமே கேட்கற மாதிரி கேட்டாள்.

"ஆமாம்.." என்றான் அவன்.

"ஆரம்பத்திலேந்து கடைசி வரை இந்தக் கதையை ரெண்டு தடவை படிச்சிட்டேன்.  அந்தப் பார்வை பறிபோனவருக்கு பெயர்ன்னு ஒண்ணைக் கொடுக்காமலேயே கடைசிவரை எழுதினவர் சமாளிச்சிருக்கிறார் இல்லையா, அதான் என்னை ரொம்ப கவர்ந்தது. இதைச் செக் பண்ணறத்துக்காகவே ரெண்டாம் தடவையும் இந்தக் கதையைப் படிச்சேன்னா, பாத்துக்கோங்க"

பகபகவென்று சிரித்தான் லஷ்மணன்."என்ன சொல்றே? பேர்லே அப்படி என்ன இருக்கு?.. பேர்ன்னு ஒண்ணை அவருக்கு வைக்காதது, உன்னைக் கவர்ந்ததா?..  நீ என்ன சொல்ல வர்றேன்னு புரியலையே?.."

"எஸ். புரியும்படியா சொல்றேன்.  அந்தப் பார்வையற்றவரோட நினைவிலேயே இந்தக் கதை முழுக்கச் சொல்லப்படறதாலே,  அவருக்குன்னு ஒரு பெயரை இட்டிருந்தால், எழுதறவருக்கு ரொம்ப சுலபமாப் போயிருக்கும்.  மற்றவர்கள் அவரை விளிக்கற நேரத்திலெல்லாம், இவர் பெயரைச் சொல்லிக் கூப்பிடுகிற மாதிரிச் செய்திருந்தால், எழுதவருக்கு ஈஸி.  ஆனா, தெரிஞ்சிண்டே அந்த ஈஸியைத் தவிர்த்து, கடைசி வரை அவருக்குன்னு பேர் ஒண்ணைக் கொடுக்காம, ஏதோ அப்படித்தான் எழுதணும்ங்கற ஒரு சவாலை ஏத்திண்ட மாதிரி சமாளிச்சிருக்காரே, அதுக்காக அவர் பட்டிருக்கிற சிரமம் தான் என்னை ரொம்பக் கவர்ந்தது" என்று நிறுத்தாமல் படபடப்பாகச் சொன்னாள் ஊர்மிளா.

"நீ சொல்றது கூடச் சரிதான்.. அதான் அந்த டாக்டர் சாந்தி கூட அங்கிள்ன்னு இவரைக் கூப்பிடற மாதிரி குறிப்பிட்டு அந்த சமயங்களிலும் அவர் பெயரைக் குறிப்பிடாம தவிர்த்திருக்கிறார்.  எழுதினவர் எதுக்காக இப்படியெல்லாம் மெனக்கிட்டிருக்கார்ன்னு தான் தெரிலே."

"சில பேருக்கு இப்படில்லாம் ஒரு ஆசை! புதுமாதிரி எழுதணும்ங்கற முயற்சி தான். வேறு என்னத்தைச் சொல்றது?"

லஷ்மணன் சிரித்தான். "மத்தவங்கள்லேந்து தன்னை வித்தியாசப்படுத்திக் காட்ட இந்த எழுதவறங்க இப்படித் தங்களை சிரமப்படுத்திக்கறது உண்டு தான். இருந்தாலும் அந்த இன்னொரு விஷயத்தை சொன்னா இந்த சிரமமெல்லாம் ஒண்ணுமில்லேன்னு சொல்லலாம்."

"நீங்க தான் ஒண்ணுமில்லாததையும் பெரிசு படுத்தறதிலே கில்லாடி ஆச்சே!  சொல்லுங்க.."

"என்னைப் பாத்தா உனக்கு அப்படி ஆகிப்போச்சா?.. அப்ப ஆளை விடு.  கதையைப் படிச்சோமா போனோமான்னு இல்லாம, நீ தானே என்னை வம்புக்கு இழுத்தே."

"ச்சும்மாச் சொன்னா, அதுக்கெல்லாம் இப்படிக் கோவிச்சிக்கறதா?.. ப்ளீஸ்.. சொல்லுங்க.."

"அடடா! என்னக் கெஞ்சல்?.. ஆதாயம் இல்லாம இப்படி சடார்னு நீ இறங்கி வர மாட்டியே.. என்ன விஷயம், ஊர்மிளா?"

"ஆதாயம்னா புருஷன் பெண்டாட்டிக்குக் கூடத் தனித்தனியாவா?..  எந்த ஆதாயத்தை நான் மட்டும்னு தனியா இதுவரை அனுபவிச்சிருக்கேன்.  விரலை மடக்குங்க, பாக்கலாம்.."

"மடக்கிடலாம்.  ஆனா, ஆண்டவன் பத்து விரல் தானே கொடுத்திருக்கான்னு யோசிக்கிறேன்."

"ஒகோ.. பத்து முடிஞ்சதும்   மறுபடியும் ஒண்ணு ரெண்டுன்னு மடக்கிக்கலாம்.   நீங்க கவலையேப் பட வேண்டாம்.  நான் கணக்கு வைச்சிக்கறேன்.."

"வைச்சிப்பேன்னு நம்பிக்கை இருக்கு, ஊர்மிளை!  இருந்தாலும் இப்ப வேணாம்னு பாக்கறேன். ஏன்னா.."

"பாத்தீங்களா, ரூட் மாத்தறீங்களே!  விஷயத்துக்கு வாங்க..  உங்களுக்குப் பிடிச்ச அந்த இன்னொரு விஷயம் என்ன?"

"என்ன ஆதாயம்ன்னு நீ சொன்னா சொல்றேன்."

"சரி. சொல்லித் தொலைக்கறேன்.  பரீட்சைக்கு இன்னும் பதினைஞ்சு நாள் தான் இருக்கு.  அதாவது தெரியுமில்லையா?"

"அடடா! உன்னோட ஜர்னலிசப் படிப்பு பத்திச் சொல்றையா?"

"அதே! வர்ற வெள்ளிக்கு அடுத்த வெள்ளி பரீட்சை.  ஒரு பேப்பர்,  ஸ்டோரி அனலைசிங் பத்தி..  முழுசா அம்பது மார்க்! ஏதாவது ஒரு கதையை எடுத்திண்டு,  அக்கு வேறா ஆணி வேறா கழட்டிப் போட்டு அலசணும்..  அந்தக் கதை ஏதாவது பத்திரிகைலே பிரசுரமாகியிருக்கணும்.  அது ஒண்ணு தான் கண்டிஷன். அந்த அலசலுக்கு இந்தக் கதையை எடுத்துக்கப் போறேன்.  அதான் விஷயம். நீங்களும் உங்க பார்வைலே நாலு சமாச்சாரம் எடுத்துச் சொன்னா என் வேலை ஈஸியாப் போயிடும் இல்லையா? அதுக்குத் தான் கேட்டேன்."

"ஓகோன்னானாம்.  கஷ்டப்பட்டு நான் சொல்றது.. நீங்க அதை நோகாம எழுதிட்டு மார்க்கைத் தட்டிண்டு போர்றது..  இதெல்லாம் எந்த ஊர் நியாயம்மா?"

"இந்த பரீட்சை பாஸ் செஞ்சா இப்பப் பாக்கற வேலைலே ரெண்டு இன்ங்கிரிமெண்ட் போட்டுத் தருவாங்க.. பெண்டாட்டி சம்பாதிச்சிண்டு வர்றதும் குடும்பச் செலவுக்குத் தானே போர்றது.. அது எந்த ஊர் நியாயமோ அந்த ஊர் நியாயம் தான் நான் கேக்கறதும்.."

படபடவென்று கை தட்டினான் லஷ்மணன். "சும்மா வெளையாட்டுக்குக் கேட்டா என்ன சீறு சீர்றே?.. ஒக்கே..  ரெடியா?.. குறிச்சிக்க.. இப்ப சொல்றேன். இந்தக் கதையை எழுதின போக்கிலே பிரமாதமா எனக்குத் தெரியறா விஷயம் என்ன தெரியுமா?"

"சொல்லுங்க.. தெரிஞ்சிக்கறேன்..." என்று அவன் சொல்லப் போவதைக் கேட்கத் தயாரானாள் ஊர்மிளா.


(இன்னும் வரும்)





14 comments:

கோமதி அரசு said...

அந்தப் பார்வை பறிபோனவருக்கு பெயர்ன்னு ஒண்ணைக் கொடுக்காமலேயே கடைசிவரை எழுதினவர் சமாளிச்சிருக்கிறார் இல்லையா, அதான் என்னை ரொம்ப கவர்ந்தது. இதைச் செக் பண்ணறத்துக்காகவே ரெண்டாம் தடவையும் இந்தக் கதையைப் படிச்சேன்னா, பாத்துக்கோங்க"//

நானும் இரண்டு முறை படித்து இருக்கிறேன் அவர் பெயரை படிக்க விட்டு போய் விட்டொதோ என்று ஆனால் அவர் பெயரை குறிப்பிடவே இல்லை.
பெயரில் என்ன இருக்கிறது!

அவர் சொல்லும் விஷயம் தான் முக்கியம். இக் கதையில் அவர் அன்பானவர்.

கோமதி அரசு said...

இந்தக் கதையை எழுதின போக்கிலே பிரமாதமா எனக்குத் தெரியறா விஷயம் என்ன தெரியுமா?"//

லட்சுமணன் என்ன சொல்ல போகிறார் அறிய ஆவல்.

Geetha Sambasivam said...

அடடா, என்ன சஸ்பென்ஸ்!:)))) நல்லாவே கொண்டு போறீங்க. உத்திகள் எல்லாமும் அருமை.

யு.எஸ். வந்திருக்கிற விஷயத்தையும் தெரிந்து கொண்டேன். நல்வரவு.

ஸ்ரீராம். said...

லக்ஷ்மணன்-ஊர்மிளை.....என்ன பெயர்ப் பொருத்தம்....! ஆனாலும் நாகரீகத்துக்கு ஊர்மிளா என்றாவது இருந்திருக்கலாமோ என்று தோன்றியது!

கவனிக்கப் படாத சில விசேஷ விஷயங்களை கதையில் வரும் பாத்திரங்கள் மூலமாகவே சொல்வதும் சிறப்பு.

கவர்ந்த இரண்டாவது விஷயம் என்ன என்று சஸ்பென்ஸ் வைத்திருக்கிறீர்கள்...யாராவது யூகிக்கிறார்களா பார்ப்போம் என்று...நானும் அதே மாதிரி எதிர்பார்த்து பின்னூட்டங்களில் தேடினேன்! நான் நினைப்பதுகளில் ஒன்றுதானா என்று நீங்கள் எழுதியபின் 'செக்' செய்து கொள்வேன்!

கோமதி அரசு said...

"அவசரமில்லே. உங்க தம்பி அவரோட பேமலி மெம்பர்ஸோட இதுபத்தி டிஸ்கஸ் பண்ணட்டும்.."என்று டாக்டர் சொல்லறச்சேயே எனக்கு 'அவரோட பேமலி மெம்பர்ஸ்'ன்னு அவங்க சொன்னது 'சொரேல்' ன்னு இருக்கு.. தம்பியை இன்னொரு குடும்பத்தைச் சேர்ந்தவன்னு தனியாப் பிரிச்சுப் பாக்க முடியலே. அப்படி நினைக்கறதே மனசுக்கு சங்கடமா இருக்கு. இருந்தாலும் அடுத்த நிமிஷமே, அது தான் உண்மைங்கற யதார்த்ததின் சூடு சுரீர்ன்னு சுடறது.//

இதை படிக்கும் போதே அண்ணன் எவ்வளவு அன்பானவர் என் தெரியும்.
தன் தம்பியின் பிரிவே அவர் கண் பார்வையை இழக்க செய்து இருக்கும்.

தம்பி திரும்பி வந்தவுடன் அவர் மகிழ்ச்சியே அவர் கண் பார்வையை திருப்பி கொண்டு வந்து விட்டது.

அன்பு ததும்பும் கண்களால் அவர் தன் குடும்பத்தைப் பார்பதே இக் கதையின் சிறப்பு என நினைக்கிறேன்.

அன்பு தான் ஜீவ மொழி!
அன்பே சிவம்.

G.M Balasubramaniam said...

நான் யூகித்தவரை எழுதியவருக்கு இதிலுள்ள நிறை குறைகளை அசை போட அலச, இது ஒரு வாய்ப்பு. எல்லோரையும் நல்லவர்களாக சித்தரிப்பது ஆசிரியரின் ப்ளஸ் என்றால் அதுவே அவரது மைனஸுமாகும். யதார்த்தம் குறைகிறதோ என்று நான் நினைத்த துண்டு.கதை முடியட்டும் . பின் மொத்தமாக விமரிசிக்கலாம்.

பாச மலர் / Paasa Malar said...

கதையைப் போலவே லக்ஷ்மணன் தம்பதியர் உரையாடலும் சுவாரசியம்....பெயர் வரவே இல்லை என்று தோன்றவே இல்லை பாருங்கள்...

வித்தியாசமான உத்திகளுக்குச் சிறப்புப் பாராட்டுகள்...

ஜீவி said...

@ கோமதி அரசு

//அன்பு ததும்பும் கண்களால் அவர் தன் குடும்பத்தைப் பார்பதே இக் கதையின் சிறப்பு என நினைக்கிறேன்.//

அதை விட உங்கள் ரசனை தான் சிறப்பு. நல்ல விஷயங்களை எடுத்து ரசிக்கும் பொழுது தன்னாலே அவை சிறப்படைந்து நம்மையும் சிறக்கச் செய்கிறது.

//அன்பு தான் ஜீவ மொழி!
அன்பே சிவம். //

சத்தியமான வார்த்தைகள்.

ஜீவி said...

@ கீதா சாம்பசிவம்

தங்கள் பாராட்டிற்கும், நல்வரவுக்கும் நன்றி, கீதாம்மா.

சென்ற தடவை வந்திருந்த பொழுது அதிக நேரம் பதிவுகள் இடுவதில்லேயே கவனம் கொண்டிருந்தேன். இந்தத் தடவை அப்படி இருக்கக்கூடாதென்று எண்ணி இருக்கிறேன். :}}

ஜீவி said...

@ ஸ்ரீராம்

நீங்கள் சொல்லியிருப்பது சரிதான். அதைப் போலவே பெயர் மாற்றங்களைச் செய்து விட்டேன். நன்றி.

நீங்கள் செக் செய்தவுடன் சொல்லி விடுங்கள்.இதுவே இருந்தால் சரி. நீங்கள் இதுவல்லாது வேறொன்றை ரசித்திருந்தால், அது என்னவென்று எனக்கும் தெரியும் பாருங்கள்!

ஜீவி said...

@ ஜிஎம்பி

இதுவரை நிறைவாக பின்னூட்டங்களிலேயே பகிர்ந்து கொண்டு விட்டார்கள் என்றே கொள்கிறேன். இதை,
இனித் தொடரப்போகின்ற கதைக்கான சேர்க்கை ஒட்டு என்றும் கொள்ளலாம்.

மைனஸ்களையும் பிளஸ்களாக மாற்றும் முயற்சி கூடக்கூட மைனஸ்கள் பெரும்பாலும் அருகியே போய்விடும். 'கொள்வார் இல்லை ஆதலால் கொடுப்பாரும் இல்லை' என்கிற கம்பன் வாக்கு மாதிரி.

யதார்த்தம் என்பது மாற்றத்திற்குட்பட்டது.
காலத்திற்கு காலம் மாறுபாடு கொண்டது. அதனால் நல்ல மாற்றங்களுக்கான ஈடுபாடே முக்கியமாகிப் போகிறது.

தங்கள் கருத்துக்களுக்கு நன்றி ஜிஎம்பி சார்!

ஜீவி said...

//பெயர் வரவில்லை என்று தோன்றவே இல்லை, பாருங்கள்..//

இந்த வரியை மிகவும் ரசித்தேன். ஆழ்ந்த பாராட்டு. மிக்க நன்றி, பாசமலர்!

Shakthiprabha (Prabha Sridhar) said...

கதையை பார்வையற்ற பெயரற்ற அந்த கதாநாயகன் மனசு பேசியதாகவே சொல்லப்பட்டது தான் எனக்கு ரொம்ம்ம்ம்ம்ப பிடித்தது.

லக்ஷ்மணன் என்ன சொல்ல போறார்ன்னு நானும் கேக்க ஆவலா இருக்கேன்.

ஜீவி said...

@ Shakthiprabha

மனசின் குரலுக்கு என்றைக்குமே மகத்துவம் ஜாஸ்தி தான்.

தொடர்வதற்கு நன்றி, ஷக்தி!

Related Posts with Thumbnails