மின் நூல்

Sunday, March 4, 2012

பார்வை (பகுதி-31)

"நீங்க பேசிண்டே இருங்க.. இதோ வந்திட்டேன்" என்று உள்பக்கம் போனாள் வித்யா.  கெளதமும் அவள் பின்னாலேயே எழுந்து போனான்.  'ஸ்கூல் விட்டு வரும் குழந்தைக்கு ஏதாவது கொடுக்க வேண்டுமில்லையா; அதற்காகத்தான் வித்யா உள்ளே போகிறாள்' என்று நினைத்து ஊர்மிளா கொஞ்ச நேரம் ரிஷியும், லஷ்மணனும் பேசிக் கொண்டிருப்பதைப் பார்த்துக் கொண்டிருந்தாள். சிறிது நேரமாகியும் வித்யா வராததைப் பார்த்து, எழுந்து அவளும் உள்பக்கம் சென்றாள்.

உள்ளே போனால், கெளதம் டம்ளரில் எதையோ குடித்துக் கொண்டிருக்க வித்யா கேஸ் அடுப்பில் ஏற்றிய வாணலியில் எதையோக் கிளறிக் கொண்டிருந்தாள்.

"என்ன வித்யா.. என்ன செஞ்சிக்கிட்டிருக்கீங்க?" என்று அவள் குரல் கேட்டு திரும்பிப் பார்த்த வித்யா "ஒண்ணுமில்லே.. குழம்பு மாவு உப்புமா.. உங்களுக்குப் பிடிக்கும் இல்லையா?"

"உப்புமானு எடுத்திண்டா அதான் என் பேவரிட்! அது போகட்டும்.. எதற்கு உங்களுக்கு சிரமம்?"

"சிரமம்லாம் ஒண்ணுமில்லே.  டிபன் நேரம். எதானும் சாப்பிடலாமேனுட்டு தான். கெளதம்க்கு போர்ன்விடா கலக்கிக் கொடுத்தேன்.  புளியைக் கரைச்சு, மாவு போட்டு மின்னாடியே பிசைஞ்சு வைச்சிருந்தேன்.  அதான் வாணலியை ஏத்தியாச்சு.. அஞ்சே நிமிஷத்லே ரெடியாயிடும்.."

அவளுக்கு மிக அருகே வந்து, வாணலியைப் பார்த்து "சின்ன சின்ன கோலிக்குண்டு மாதிரி ஜோரா வந்திடுத்தே.. வாசனை வேறே மூக்கைத் துளைக்கிறது.." என்று சப்புக் கொட்டினாள்.

"அடிப்பிடிச்சாக் கூட எனக்கு சரிதான்.  அதுவும் டேஸ்ட்டா இருக்கும்" என்று லேசாக உப்புமாவைக் கிளறினாள் வித்யா. "டிகாஷன் இறக்கி வைச்சிருக்கேன். சாப்பிட்டானதும் காப்பி போட்டுக்கலாம் இல்லையா?" என்றாள்.

"டிபன் சாப்பிட்ட வாய்க்கு சூடா சாப்பிட்டாத்தான் நன்னா இருக்கும்" என்று பக்கத்து ஸ்டாண்டில் இருந்து பீங்கான் தட்டுகளை எடுத்தாள் ஊர்மிளா. "கெளதம்க்கு? அவனும் சாப்பிடுவான்ல்யோ?"

"அவனுக்கு தனியா கிண்ணத்லே கொடுத்திக்கலாம்" என்ற வித்யா, பிளேட்டில் உப்புமாவை பகிர்ந்து போட்டுக் கொண்டே, "அப்புறம் என்ன ஆச்சு?.. பாதிலேயே விட்டுப் போச்சே.. எழுத்தாள குணம்னா என்னனுட்டு சொன்னாங்களா?" என்றாள்.

"நீங்க வரட்டும்னு தான் காத்திருக்கேன்.  போய் வைச்சிக்கலாம் அந்தக் கச்சேரியை" என்ற ஊர்மிளா, "கெளதம், குடிச்சிட்டையா?" என்று கேட்டு அவனிடமிருந்து டம்ளரை வாங்கி ஸிங்க் குழாயில் அலம்பி டிரேயில் வைத்தாள்.  டர்க்கி டவலால் அவன் வாய் துடைத்து விட்டு, "எந்தக் கிளாஸ் படிக்கிறே?" என்றாள்.

"மூணாவது."

"குட்! இப்போ என்ன ஸ்கூல் விட்டு வந்தையா?"

"இல்லே.. குரூப் ஸ்டடி.. சனிக்கிழமை நோ ஸ்கூல்"

அவளுக்கு ஆச்சரியமாக இருந்தது. மூற்றாவது படிக்கும் சிறுவன் குரூப் ஸ்டடின்னு சொன்னதைக் கேட்டு. நிமிர்ந்து வித்யாவைப் பார்த்தாள்.

"பக்கத்து வீட்டு மாடிலே குரூப் ஸ்டடின்னு ஒரு கூட்டமே கூடும்.  இவங்களை பாத்துக்கறத்துக்குன்னு இந்த ஸ்டோர்லே வீட்டுக்கு ஒருத்தர்ன்னு ஒவ்வொரு வாரமும் போய்டுவோம்.  எனக்கு அடுத்த வாரம். ஒண்ணுலேந்து அஞ்சாவது வகுப்பு வரை தான்.  ஒவ்வொரு வகுப்புக்கும் நாலைஞ்சு பேர் தேறும். அவங்களே கலந்து படிச்சிப்பாங்க.. அவங்க அடிச்சிக்காம கொள்ளாம-- நாம சும்மா மேற்பார்வை தான். ஹாலுக்கு போலாமா?"

"ஓ.." என்ற ஊர்மிளா அவளும் இரண்டு ப்ளேட்டுகளை எடுத்துக் கொண்டாள்.

"தொட்டுக்க மாங்கா தொக்கும், சக்கரையும் எடுத்திக்கறேன். அது போதுமில்லையா?" என்றாள் வித்யா.

"எதேஷ்டம்.." என்று ஹாலுக்கு வந்தாள் ஊர்மிளா.

"நான் அதற்கு கேரண்டி.."என்று எதற்கோ லஷ்மணன், ரிஷிக்கு காரண்டி கொடுத்துக் கொண்டிருந்தான். இவர்கள் வந்ததும் அவர்கள் பேச்சு நின்றது.

"இரண்டு எழுத்தாளர்களும் சேந்தாச்சு.  எதுக்குத் திட்டம் போடுறீங்களோ, தெரிலே!" என்று ஊர்மிளா ஆரம்பித்து வைத்தாள்.

பிளேட்டில் இருப்பதைப் பார்த்து விட்டு, "அடிசக்கை! குழம்பு மாவு உப்புமாவா?" என்றான் ரிஷி.

"இல்லே. அரிசி மாவு உப்புமா.." என்றாள் வித்யா.

"இதானே வேண்டாங்கறது? புளி உப்புமான்னு சொன்னாலும் சரி, எல்லாம்  ஒண்ணு தான்.. எனக்கு தெரியாதா என்ன?" என்றான் ரிஷி.

"சும்மாக்காச்சும்ங்க.. இப்படி ஆக்ரோஷத்தோட ஆரம்பிச்சு வைச்சாத் தானே சுறுசுறுப்பா அந்த மெயின் விஷயத்துக்கு வருவீங்க.."

ஒரு விள்ளல் உப்புமாவை எடுத்து சக்கரையில் தொட்டு வாயில் போட்டுக் கொண்டான் லஷ்மணன். "எந்த மெயின் விஷயத்துக்கு?"

"அதான்.  'எழுத்தாளர் குணம்'ன்னு ரிஷி ஆரம்பிச்சு வைச்சார்ல்யா?.. அதுக்குள்ளே இப்படி மறந்திட்டா எப்படி?"

 "சும்மா சந்தேகத்துக்குக் கேட்டேன். வாசகர் குணம்ன்னு ஊர்மிளா சொன்னாங்களே.. எழுத்தாளர் குணம்ன்னு ஏதாச்சும் இருக்கானுட்டு, கேட்டேன்.  அதுக்காக என்னைப் பிடிச்சிக்கிட்டா எப்படி?" என்று அப்பாவியாய்க் கேட்டான் ரிஷி.

"நீங்களும் எழுத்தாளர் தானே? நீங்களே கேட்டா எப்படிங்கறேன்.."என்றாள் வித்யா.

"இப்போத் தானே ஒரு கதை பிரசுரமாயிருக்கு.  அதுக்குள்ளாற என்னைக் கேட்டா எப்படி?.. ஒரு ஃபுல் ஃபிளெட்ஜ்டு எழுத்தாளர் ஆனதும்.."

"அந்தக் கதை இங்கே வேண்டாம்" என்றாள் அதற்குள் அரைத் தட்டு உப்புமாவை காலி பண்ணியிருந்த ஊர்மிளா.  "இந்த பத்திரிகைகாரங்க முத்திரை குத்தினாத்தான் எழுத்தாளர்ன்னு உண்டா என்ன?.. இந்த ஒரு கதை பிரசுரமாகறத்துக்கு முன்னாடி எத்தனை கதை எழுதியிருப்பீங்க?..  அதையெல்லாம் கணக்கிலே எடுத்துக்க வேண்டாமா?"

"நிறைய எழுதியிருக்கேன். நிறைய பத்திரிகைகளுக்கு அனுப்பியும் இருக்கேன். அத்தனையும் சுவத்லே அடிச்ச பந்து மாதிரி திரும்பி வந்தது தான் மிச்சம்" என்ற ரிஷி தொக்கு பாட்டிலை தன் பக்கம் நகர்த்திக் கொண்டான்.

"எழுத்தாளர்ங்கற அங்கீகாரத்துக்கு அது ஒண்ணு போதும்.  பிரசுரமான ஒத்தைக் கதையே ஓகோன்னு அமைஞ்சு போச்சு. இனி பிரசுரமாகப் போறதுக்கெல்லாம் இதான் அச்சாரம்..  இப்போ சொல்லுங்க." என்றாள் ஊர்மிளா விடாமல்.

"அதெப்படி அத்தனை நிச்சயமா சொல்றீங்க, இனி அனுப்பறதெல்லாம் பிரசுரமாகும்னு?.."

"அதான் பத்திரிகை குணமே.." என்று சொன்ன ஊர்மிளா சிரித்தே விட்டாள்.

"போச்சுடா.. பத்திரிகை குணம்னும் ஒண்ணு இருக்கா?" என்று வியந்தாள் வித்யா..

"அதை அப்புறம் வைச்சிக்கலாம்.  இப்போ முதல்லே எழுத்தாளர் குணம். அதை மிஸ்டர் ரிஷி ஆரம்பிச்சு வைப்பார்.." என்று உரத்த குரலில் அறிவித்தாள் ஊர்மிளா.


(இன்னும் வரும்)






























14 comments:

geethasmbsvm6 said...

ம்ம்ம்ம்ம் சூடா உப்புமா சாப்பிடறதிலேயே போயிடுத்து இந்த அத்தியாயம். பலருக்கும் தெரியாத இந்த உப்புமாவை அறிமுகம் செய்திருக்கீங்க. செய்முறையும் என்னோட சமைக்கலாம் வாங்க பதிவிலே கொடுத்திருக்கேன்னு நினைக்கிறேன். :)))))

ஜீவி said...

@ கீதா சாம்பசிவம்

ஆமாம். அதைத் தான் நானும் அடிக்கடி சொல்றது. எதையும் நீங்க விட்டு வைக்கலேங்கறது தான் உங்களோட சிறப்பு. பதியறத்துக்கு முன்னாடியே அதைப் பார்த்தும் விட்டேன். அதற்கப்புறம் தான் புளி உப்புமான்னு சேர்த்திண்டேன். எங்கம்மா குழம்பு மாவு உப்புமான்னு சொல்வாங்க. வேறே உப்புமாக்களோட சேர்த்துக் குழப்பிக்காம இருக்க, சின்ன கோலிக் குண்டு மாதிரின்னு வார்த்தையைச் சேர்த்திண்டேன். அது தான் இந்த உப்புமாவோட ஸ்பெஷாலிட்டியே, இல்லையா"..

குழம்பு, ரசம் மாதிரி போயிடாம இருக்கறத்துக்காக கொஞ்சம் அரிசி மாவை எடுத்து தாளிச்சு கொட்டறதுக்கு முன்னாடி கட்டக் கடைசிலே கரைச்சு ஊத்துவாங்க, இல்லையா?.. அதனாலே அந்த அரிசி மாவுக்கு, குழம்பு மாவுன்னே பேராயிடுத்து, போலிருக்கு.

அந்த எழுத்தாள குணம் விஷயத்தைத் தனியா எடுத்து ஆலாபனை பண்ணனும்ங்கறத்துக்காக இந்த அத்தியாயம் இப்படியே போயிடுத்து.
சில விஷயங்களை விவாதிக்கறத்துக் காகவே எழுதற கதை இதுனாலே, கண்ட்னியூட்டிக்காகவும் ஒரு கதைத் தோற்றத்திற்காகவும் இந்த அத்தியாயம் இப்படியே போயிடுத்து.

பகிர்தலுக்கு மிக்க நன்றி.

பாச மலர் / Paasa Malar said...

பேஷ்...பேஷ்...நல்ல சமையல் குறிப்பு...கோலிக்குண்டு பக்குவம் வரை விடாமல் எழுதியிருக்கிறீர்கள்...கீதாவின் குறிப்பைப் படித்துவிட்டுச் செய்து பார்க்க வேண்டும்...

அடுத்த அத்தியாயத்தில் வரும் குணவகைப்பாட்டுக்காய் காத்திருப்போம்...

ஸ்ரீராம். said...

அரிசி மாவு புளி உப்புமா அல்லது புளி அரிசி மாவு உப்புமா என்று நாங்கள் சொல்லுவோம். எப்படிச் சொன்னால் என்ன, ருசிதான்...தொட்டுக் கொள்ள எதுவுமே வேண்டாம் இதற்கு...!

ஒரு கதை பிரசுரமாகி விட்டால் என்பதை விட, அந்த எழுத்தாளர் கொஞ்சம் பிரபலமாகி விட்டால் அப்புறம் நிராகரிக்கப் பட்ட முந்தைய கதைகளே கூட பிரசுரத்துக்கு ஏற்றுக் கொள்ளப் படும் என்பது பத்திரிகைகள் குணம்தான்.பார்க்கும், கேட்கும் ஏன், கேள்விப்படும் எல்லா விஷயங்களையும் எழுத்தாக்குவது எழுத்தாள குணம். சொல்வது பாதி, ஊகிக்க வைப்பது பாதி...சில சமயம் எழுத்தாளர் கூட யோசிக்காத ஒரு பக்கத்தைத் தொட்டுக் காட்டுவது வாசக குணம்!

ஜீவி said...

@ பாசமலர்

கீதாம்மா குறிப்பு ஈஸியா இருக்கு. செஞ்சு பார்த்திட்டு சொல்லுங்க.

அடுத்த அத்தியாயம் விரைவில்.

ஜீவி said...

@ஸ்ரீராம்

தொட்டுக் கொள்கிறோமா இல்லையோ, எந்த டிபனுக்கும் பக்கத்தில் ஏதாவது ஒன்று வேண்டியிருக்கு. தொட்டுண்டு ஒரு வாய், தொட்டுக்காம ஒரு வாய்ன்னு ஒண்ணையே ரெண்டுவித ருசியில் உள்ளே தள்ளலாம்.

நீங்கள் அடுத்து சொல்லியிருப்பவைக்குள் இன்னும் பல விஷயங்கள் பதுங்கி இருக்கின்றன. இந்தக் கதை அவற்றை அடக்கிய கேப்ஸ்யூலாகப் போகிறது. பார்க்கலாம்.

பகிர்வுக்கு நன்றி,ஸ்ரீராம்!

கோமதி அரசு said...

குழம்பு மாவு உப்புமா..//

செய்து பார்க்கும் ஆவலை தூண்டி விட்டது, உங்கள் உப்புமா விளக்கம்.
ரிஷி, ஊர்மிளாவின் ஆவலும் இது மிகவும் நன்றாக இருக்கும் என தெரிகிறது.

கீதா மேடம் கொடுத்து இருக்கும் குறிப்பைப் பார்த்து செய்து பார்க்கிறேன்.

கோமதி அரசு said...

"பக்கத்து வீட்டு மாடிலே குரூப் ஸ்டடின்னு ஒரு கூட்டமே கூடும். இவங்களை பாத்துக்கறத்துக்குன்னு இந்த ஸ்டோர்லே வீட்டுக்கு ஒருத்தர்ன்னு ஒவ்வொரு வாரமும் போய்டுவோம். எனக்கு அடுத்த வாரம். ஒண்ணுலேந்து அஞ்சாவது வகுப்பு வரை தான். ஒவ்வொரு வகுப்புக்கும் நாலைஞ்சு பேர் தேறும். அவங்களே கலந்து படிச்சிப்பாங்க.. அவங்க அடிச்சிக்காம கொள்ளாம-- நாம சும்மா மேற்பார்வை தான். //

இது நல்ல யோசனையாய் இருக்கே!

தினம் உள்ள வீட்டுப்பாடங்களை முடித்துக் கோள்ளலாம்.
கலந்து படிப்பது அப்படியே மேல் வகுப்புகளுக்கும் தொடர்ந்தால் நல்லது.

ஸாதிகா said...

தங்களை இன்றைய வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளேன்.பார்வை இட்டு மேலான கருத்தினைக்கூறுங்கள்.

G.M Balasubramaniam said...

வாசகன், எழுத்தாளன் இருவரும் வேறு வேறு நபர்களாக இருந்தால், குணங்களும் வேறு வேறாக இருக்கும். எழுத்தாளன் சொல்ல வருவது வாசகனுக்குப் புரியும்.இருவரும் ஒரே நபராயிருந்தால் புரிதலும் வேறு மாதிரி இருக்கும். எழுத்தாளன் சொல்ல வருவது காணாமல் போய், அவன் எண்ணாத பரிமாணங்களில் எல்லாம் புரிந்து கொண்டு ஒரு சடுகுடு ஆட்டமே நடக்க வாய்ப்புண்டு. தொடரைத் தொடர்கிறேன்.

ஜீவி said...

தங்கள் அன்புக்கு மிக்க நன்றி, ஸாதிகா. தங்கள் வாசிப்பனுபவம் மலைக்க வைக்கிறது. தொடர்ந்து வருகை தாருங்கள்.

மிக்க அன்புடன்,
ஜீவி

ஜீவி said...

@ கோமதி அரசு

தங்கள் குழந்தைகளுக்கான பள்ளிப் படிப்பு சம்பந்தப்பட்ட விஷயங்களில்
இப்பொழுதுதெல்லாம் பெற்றோர்களு க்கு நிறைய ஆர்வம் கூடியிருக்கிறது. பள்ளி இறுதி வகுப்பு தேர்வு முடிந்தவுடனே IIT JEE, AIEEE, AIMEE, TOEFL போன்ற தேர்வுகளுக்கு படிப்பு சம்பந்தமான தயாரிப்பு வேலைகளில் மாணவர்கள் இறங்கி விடுகிறார்கள். அவர்களின் எதிர்கால வாழ்க்கையை நிர்ணயிப்பதில் முன் எப்போதும் இல்லாத அளவுக்கு சமீபகாலங்களில் பெற்றோர்களின் பங்களிப்பு கூடியிருக்கிறது என்று தான் சொல்ல வேண்டும்.

இது அது என்றில்லாமல் எது பற்றியும் இந்த நாவலில் நிறைய விஷயங்களைப் பகிர்ந்து கொள்ளலாம் என்றிருக்கிறேன்.

தொடர்ந்து படித்து கருத்துக்களைச் சொல்வதற்கு நன்றி.

ஜீவி said...

@ GMB

வாங்க, ஜிஎம்பீ ஸார்!

அடுத்த பதிவிலேயே இந்த பின்னூட்டத்திற்கான விளக்கங்கள் இருப்பதாய் நீங்கள் புரிந்து கொண்டிருப்பதால், இந்தளவில் போதும்.

எனக்கென்னவோ உங்களது இந்தப் பின்னூட்டம், ஜோதிடர்கள் திருமணப் பொருத்தத்திற்காக சொல்லக் கூடிய கருத்துக்களை நினைவு படுத்தியது
என்பதைச் சொல்ல வேண்டும்.

கருத்துக்களுக்கு நன்றி.

Shakthiprabha (Prabha Sridhar) said...

ரொம்ப நாளாச்சு...மறந்தும் போச்சு...நாளைக்கு புளிமா(குழம்புமா) உப்மா பண்ணியே ஆகணும்!!!!

பத்திரிகை குணம் எழுத்தாள குணம் என்னன்னு பார்த்தே ஆகணும்.

Related Posts with Thumbnails