மின் நூல்

Monday, March 12, 2012

பார்வை (பகுதி-33)

"கெளதம்! டிரேட் விளையாட்டுக்கு வர்றையாடா?" என்று கேட்டுக் கொண்டு உள் பக்கம் ஒரு சிறுவன் வந்தான்.  உடனே கெளதம் தன் அம்மாவிடம் அனுமதி வாங்கிக் கொண்டு அந்த சிறுவன் பின்னாடியே ஓடினான்.

அவன் போவதையேப் பார்த்துக் கொண்டிருந்து விட்டு, பார்வைக்குப் பையன் மறைந்ததும், திரும்பி "எனக்குக் கூட இந்த டிரேட் விளையாட்டு ரொம்ப பிடிக்கும்.  நீங்க விளையாடியிருக்கிறீர்களா, ஊர்மிளா?" என்றாள் திவ்யா.

"ஓ.. சின்னப் பெண்ணாய் இருந்தப்போ, ஒரு தடவை மும்பை போனப்போ, சாரி அப்போல்லாம் பம்பாய் தான், அம்மா இந்த விளையாட்டு அட்டை ஒண்ணு வாங்கிக் கொடுத்தாங்க.  அதுலே, ஒர்லி, போரிவலி, டோம்பிவலி, ஜூஹூ, அந்தேரின்னு இடங்களின் பெயர்கள் போட்டிருக்குமா?.  பாங்கில் லோன் வாங்கி அந்த இடங்களை வாங்கி விற்று செம விளையாட்டு அது.  இப்போ கூட டிரேட் அட்டை முன்னாடி உக்காந்திண்டு விளையாட மாட்டோமான்னு இருக்கு.." என்றாள் ஊர்மிளா.

"போயும் போயும் அவளைக் கேட்டீங்க, பாருங்க! விட்டால் அந்த பக்கத்து வீட்டுக்கே போய் கொஞ்ச நேரம் விளையாடிட்டு வரட்டுமான்னு கேட்பாள்" என்றான் லஷ்மணன்.

"அந்த பக்கத்து வீட்லேருந்து வாங்கின பத்திரிகைலே தான் இப்போச் சொன்னீங்களே, அந்தக் கதையைப் படிச்சேன்..  கதை பேரு கூட... ம்..      ஞாபகம் வந்திடுத்து-- 'அந்த மூணு பழம்'! நல்ல தலைப்பில்லே!" என்று கேட்டு குழந்தை போல் கைகொட்டிச் சிரித்தாள் வித்யா. கதைகள் படிப்பதில் தான் இந்த வித்யாவிற்கு எவ்வளவு சந்தோஷம் என்று நினைத்துக் கொண்டான் லஷ்மணன்.

"ஒரு கதை விடமாட்டியே?" என்று மனைவியைப் பாராட்டுகிற மாதிரிப் பார்த்தான் ரிஷி.

"ஊக்கும்.."என்று சிணுங்கினாள் வித்யா.  "'திலகம்' பத்திரிகைலே வந்தது.  நீங்க தான் அந்தப் பத்திரிகையெல்லாம் தொடமாட்டீங்களே! அப்போ எப்படித் தெரியும்?" என்றவள், லஷ்மணனைப் பார்த்து, "இவருக்குன்னு சில பத்திரிகைகள் இருக்கு.  பலது கடைலே விக்காது; போஸ்ட்டிலேயே வந்திடும். இருபத்தைச்சு முப்பது பக்கத்துக்கு இருக்கும்.  முதல் அட்டை பின் பக்கத்லேந்து கடைசி அட்டை பின்பக்கம் வரை ஒரே எழுத்து தான்!  மருந்துக்கு ஒரு படம் போடமாட்டாங்களே! தமிழ்தாங்க, ஆனா படிச்சா என் புத்திலே ஒண்ணும் படியாது..  அதையெல்லாம் புரிஞ்சிக்கற அளவுக்கு எனக்கு விஷய ஞானம் இல்லைங்கறது தான் விஷயம்! என்ன செய்யச் சொல்றீங்க?.. நமக்கு 'திலகம்' மாதிரி, இந்த மாதிரி பத்திரிகைங்க தான்.. அந்த 'திலக'த்திலே நீங்க கூட தொடர்கதை எழுதறீங்களே, 'பாலைவனச் சோலை'ன்னு-- எனக்கு ரொம்ப பிடிக்கும்.. எனக்கு மட்டும் இல்லே, இந்த ஸ்டோரே ஒவ்வொரு வாரமும் அந்தக் கதையைப் படிக்க ஏங்கிண்டு இருக்கும்!  ஏன், அபராஜிதன் சார்!  அந்த மாதிரி பத்திரிகைங்கள்ல இவரை எழுதச் சொல்லக் கூடாதா?" என்று கேட்டாள்.

அவள் சொல்வதைக் கேட்டு சடாரென்று லஷ்மணனும், ரிஷியும் ஒருவரை ஒருவர் பார்த்து அவர்களுக்கு மட்டுமே புரிந்த ஒன்றைப் பரிமாறிக் கொள்கிற மாதிரி சிரித்துக் கொண்டனர்.

வித்யா சொல்வதைக் கேட்டுப் பொறுக்க வில்லை ஊர்மிளாவுக்கு."வித்யா! உங்க வீட்டுக்காரரும் எவ்வளவு நல்லா எழுதறார்?.. அவரோட 'பார்வை' கதை எங்க ரெண்டு பேருக்குமே ரொம்பப் பிடிச்ச ஒண்ணு. அதுகூட பிரபல பத்திரிகை தீபாவளி மலர்லே தானே வந்தது.. ஏன், நீங்க அதைப் படிக்கலையா?"

"படிக்காம இருப்பேனா?.. படிச்சேங்க.. ஆனா அத்தி பூத்த மாதிரி எப்பவோ ஒண்ணுன்னா, வாராவாரம் வர்ற மாதிரி இருந்தாத் தானே, இந்த ஸ்டோர்லேயே சொல்லிக்கற மாதிரி எனக்கும் பெருமை?.. 'இந்த அத்தியாயத்தை இப்படி முடிச்சிட்டாரே, அடுத்த வாரம் என்னவாகும்'ன்னு ஒவ்வொருத்தியும் என்னை வந்து கேட்க வேண்டாமா?.. ஊர்மிளா! தப்பா எடுத்திங்காதீங்க.. உங்க ப்ரண்ட்ஸ்லாம், அபராஜிதன் ஸார் எழுதற கதைங்களப் பத்தி உங்க கிட்டே விசாரிப்பாங்களா?" என்று ஆவலோடு கேட்டாள்.

"விசாரிப்பாங்க.. ஆனா, அடுத்த வாரம் என்ன வரும்ன்னு கேக்க மாட்டாங்க..  அதெல்லாம் அந்தந்த பத்திரிகை ரகசியம்ங்கறது பெரும்பாலும் என்னோட ஃப்ரண்ட்ஸூங்க எல்லாருக்கும் தெரியும்.  அப்படியே அவங்க கேட்டாலும் எனக்குச் சொல்லத் தெரியாது.  ஏன்னா, எங்க வீட்லே அவருண்டு அவர் கதைகள் உண்டுன்னு அவருக்கு மட்டுமே தெரிஞ்ச சமாச்சாரமா அது இருக்கும்.  நான் அதிலேலாம் தலையிடறது இல்லே. நாலோ, அஞ்சோ தொடர்கதை எழுதறார்; அதெல்லாம் ரெண்டு மூணு வாரத்துக்கு அப்புறம் எப்படிப் போகும்னு அவருக்கே தெரியாதுங்கறது மட்டும் எனக்குத் தெரியும்.." என்று சொல்லிச் சிரித்தாள்.

"அதென்ன கணக்கு, ரெண்டு மூணு வாரம்?.."

"அடுத்தாப்லே அடுத்தாப்லே வர்ற ரெண்டு வாரத்துக்கான மேட்டர் பிரிண்ட்டுக்குப் போயிடும்.. அந்த ரெண்டு வாரத்துக்கு அடுத்தாப்லே எப்படிப் போகணும்ங்கறதைத் தான் இப்பவே யோசிக்கணும்.  அதனாலே அப்படி.." என்றாள் ஊர்மிளா.    

"அப்படியா சங்கதி! அது என்னவோ தெரிலே, இதெல்லாம் கேக்கக் கேக்க சுவாரஸ்யமாகத் தான் இருக்கு.."என்று அவள் சொன்ன பொழுது, அந்தக் குரலில் ஒரு ஆற்றாமை வெளிப்பட்டு, இதே சுவாரஸ்யத்துடன் தன்னிடம் யாராவது கேட்க மாட்டார்களா, அதற்கு இப்பொழுது ஊர்மிளா தெரிந்து வைத்திருக்கிற மாதிரியான தகவல்களைத் தான் சொல்ல மாட்டோமா என்கிற ஆதங்கம் இருப்பதாகத் தோன்றியது.

"அப்படி நாலைஞ்சு தொடர்கதை எழுதுறீங்கன்னா.. எத்தனை கேரக்டர்கள்? ஒண்ணுக்கு ஒண்ணு மாறிப்போயிடாதா?.. அவங்க பேரையெல்லாம் எப்படி ஞாபகம் வைச்சிப்பீங்க?.." என்று லஷ்மணனைப் பார்த்தாள் வித்யா.

"ஒரு நாவலை எழுத ஆரம்பிச்சதுமே, அதிலே வர்ற கேரக்டர்களையெல்லாம் ஒரு சார்ட் போட்டு ஃபேமலி ட்ரீ மாதிரி எழுதிண்டு என் மேஜைக்கு பக்கத்லே மாட்டிடுவேன். எழுதறத்தே அப்பப்போ பார்த்துக்கறதும் உண்டு.  ஒரு அத்தியாயம் எழுதி முடிச்சவுடனேயே பேர் எதானும் மாறிடுத்தான்னு சரிபார்த்துக்கறதும் உண்டு.  சில அவசர நேரங்கள்லே, எல்லாம் சரியா இருக்கானு இவளையும் செக் பண்ணக் கேட்டுக்கறதுண்டு."

"எல்லாம் எழுதி முடிச்சு பத்திரிகை ஆபிஸுக்குப் போஸ்ட் பண்ணிடுவீங்களாக்கும்?"

"முன்னாடிலாம் பத்திரிகை ஆபிஸ்லேந்து ஆள் வந்து வாங்கிண்டு போவாங்க.  இப்போலாம் கம்ப்யூட்டரில் எழுதி, அதிலேந்தே பிடிஃப் ஃபைலா பத்திரிகை ஆபிஸுக்கு அனுப்பிச்சிடறது தான்."

"அப்படியா?" என்று கேட்டுக் கொண்டாள் வித்யா.  எதற்கு இவள் இவ்வளவு விவரமாக எல்லாவற்றையும் கேட்டுக் கொள்கிறாள் என்று ஊர்மிளாவிற்கு ஆச்சரியமாக இருந்தது.  தனக்காகத் தான் அத்தனை விஷயங்களையும் இவள் சேகரித்துக் கொள்கிறாள் என்று ரிஷிக்குத் தோன்றியது.

"இது என்ன வித்யா?.. அவரை ஏதோ பேட்டி காண்றது மாதிரி கேள்வி மேலே கேள்வி கேட்டுண்டு போறே? சலிச்சிக்கப் போறாரு" என்று சிரித்தான் ரிஷி.

"சேச்சே.. நிச்சயமா இல்லை.."என்று சடாரென்று சொன்னான் லஷ்மணன். "எனக்கு இது புது அனுபவம்.. இதுக்கு முன்னாடி இந்த மாதிரியான கேள்விகளை என்னிடம் யாரும் கேட்டதில்லே. அதனாலே இன்ட்ரஸ்டிங்கா இருக்கு. அதனால் ஒண்ணுமில்லை. அவங்க விருப்பப்பட்டதைக் கேட்கட்டும்.." என்றான்.

"எனக்கு என்னன்னா, தப்பா நெனைக்க மாட்டீங்களே, ஊர்மிளா?.." என்று தான் கேட்க வந்ததை முழுசும் கேட்காம தன்னைப் பார்த்த வித்யாவின் குழந்தை முகத்தைப் பார்த்ததும் அவளுக்கு நெருங்கி உட்கார்ந்து "எதுக்குத் தயங்கறீங்க?.. சொல்லுங்க வித்யா.."என்று ஊர்மிளா ஆதரவுடன் அவள் தோளைத் தொட்டாள்.

"அவர்கிட்டே இல்லே.. இந்தக் கேள்வி மட்டும் உங்க கிட்டே தான்.."என்ற வித்யா, "ஊர்மிளா!  அபராஜிதன் ஸார் எழுதறதையெல்லாம் நீங்களும் படிக்காம இருக்க மாட்டீங்க.. அதுவும் அவர் எழுதற 'காந்தளூர் சாலை' யைப் படிக்கறச்சே, ஒவ்வொரு வாரமும் அடுத்த வாரம் என்ன வருமோன்னு எதிர்பார்க்கிற மாதிரி தான் முடிப்பார்.  அந்த மாதிரி எதிர்ப்பார்ப்பு உங்களுக்கு இருக்காதா?.. ஐ மீன், அவர் கதை பத்திரிகை வெளிவர்றத்துக்கு முன்னாடி கம்ப்யூட்டரில் அவர் பதிஞ்சு வைச்சிருக்கறதைப் பார்க்கணும்னு.." என்று தயங்கித் தயங்கி அவள் கேட்ட பொழுது, "இதைக் கேக்கறத்துக்கா இவ்வளவு பீடிகை போட்டீங்க?.." என்று ஊர்மிளா வித்யாவின் முகத்தைப் பார்த்தாள்.  எந்த கல்மிஷமும் தெரியாத அந்த முகத்தைப் பார்த்ததும், தன்னை விட பெரியவளாக இவள் இருந்தாலும், எவ்வளவு சின்னக் குழந்தை போல மனசை வைத்துக் கொண்டிருக்கிறாள் என்று வியந்து போனாள்..

"நானா இதுவரைப் பார்த்ததில்லை.  ஆனா சில சமயம் அவரே பார்க்கச் சொல்வார். ஏதாவது கரெக்ஷன் தேவையாங்கறத்துக்காக. அது கூட கதை சம்பந்தப்பட்டு இல்லை; சொல்லப் போனா ஒரு ஃப்ரூப் ரீடிங் மாதிரி.."என்று முன் நெற்றியில் வந்து விழுந்த குழல் கற்றைகளை ஒதுக்கிக் கொண்டாள் ஊர்மிளா.

"இந்த சமயத்தில் நான் படிச்சது ஒண்ணு ஞாபகத்துக்கு வர்றது.." என்றான் ரிஷி.  "எழுத்தாளர் அகிலனுக்கும் அவர் எழுத்துக்கும் இருந்த உறவே தனின்னு சொல்வாங்க..   தனி அறைலே உக்காந்து, புறச்சூழ்நிலைகள்லேந்து தனியாத் தன்னைக் கத்தரிச்சிண்டு ஒரு தவம் மாதிரி எழுதுவாராம்..  அவரது எழுத்து அவ்வளவு ஆத்மார்த்தம் அவருக்கு. பத்திரிகைக்கு அனுப்பறச்சே தான், தளர்ந்து தன்னோட எழுத்து தங்கிட்டேயிருந்து பிரிஞ்சு போறதா அவர் உணர்ற அப்படிப்பட்ட ஒரு ஆத்மார்த்தம் அது. அப்படித் தான் எழுதினதை பத்திரிகைலே அவரா பகிரங்கப்படுத்தறதுக்கு முன்னாடி யாரும் அதைப் படிச்சிடக்கூடாதுங்கறதிலே அகிலன் ரொம்ப உறுதியா இருப்பாராம். அவங்க குடும்ப உறுப்பினர்கள் கூட இதுக்கு விதி விலக்கில்லை.  'பாவை விளக்கு' தொடர்கதை 'கல்கி'லே வெளிவந்த காலம்.  நீங்கள்லாம் கூட 'பாவைவிளக்கை'ப் படிச்சிருப்பீங்க. கதையோட இறுதிப் பகுதிலே அந்த உமாவை அகிலன் சாகடிச்சிடுவாரோன்னு லட்சக்கணக்கான வாசகர்கள் பதறிப் போயிட்டாங்க.  அப்படி அகிலன் செஞ்சிடக்கூடாதுன்னு வந்த ஆயிரக்கணக் கான கடிதங்களையும் தந்திகளையும் பார்த்து கல்கி பத்திரிகைக்காரங்க மலைச்சுப் போயிட்டாங்க.  இங்கே அகிலன் வீட்லேயும் அத்தனை பேரும் அதே மாதிரி தவிச்சுப் போயிட்டாங்க.  உமாவை என்ன செய்யப் போறாரோன்னு பதைபதைப்பு.  அகிலன் கிட்டே அதைப்பத்திப் பேசவும் முடியாம, அவர் எழுதி வைச்சிருக்கறதைப் பாக்கவும் முடியாம.."

"நான் கூட இதைப் பத்திப் படிச்சிருக்கேன்.." என்ற ஊர்மிளா, "எங்க பதிப்பக முதலாளி பெரியவருக்கு அகிலன் ஸ்மரணை தான் எப்பவும். அவர் மேலே அத்தனை ப்ரியம்.." என்றாள்.

"ஓ.." என்று ஓவல் சைஸ்ஸூக்கு முகம் மாறி அதிசயத்தாள் வித்யா. "இத்தனை நேரம் இதைச் சொல்லவே இல்லையே, ஊர்மிளா! நீங்க வேலைக்குப் போறீங்களா.. அதுவும் பதிப்பகத்தில் வேலைன்னா.. கொடுத்து வைச்சவங்க தான்" என்றாள்.

"எந்தப் பதிப்பகம், ஊர்மிளா?" என்றான் ரிஷி.

"கிரீம்ஸ் ரோட்லே இருக்கே.  குகன் பிரசுரம்ன்னு..."

"அப்படியா?.." என்று ஆச்சரியப்பட்டான் ரிஷி. " என்னோட மாமா கூட அந்த பதிப்பகத்லே தான் வேலை செய்றார்."

"அவர் பேர்?" என்று திகைப்புடன் கேட்டாள் ஊர்மிளா.

"சுந்தரவதனன்.." என்றான் ரிஷி.


(இன்னும் வரும்)

















14 comments:

இராஜராஜேஸ்வரி said...

"ஒரு நாவலை எழுத ஆரம்பிச்சதுமே, அதிலே வர்ற கேரக்டர்களையெல்லாம் ஒரு சார்ட் போட்டு ஃபேமலி ட்ரீ மாதிரி எழுதிண்டு என் மேஜைக்கு பக்கத்லே மாட்டிடுவேன். எழுதறத்தே அப்பப்போ பார்த்துக்கறதும் உண்டு. ஒரு அத்தியாயம் எழுதி முடிச்சவுடனேயே பேர் எதானும் மாறிடுத்தான்னு சரிபார்த்துக்கறதும் உண்டு. சில அவசர நேரங்கள்லே, எல்லாம் சரியா இருக்கானு இவளையும் செக் பண்ணக் கேட்டுக்கறதுண்டு."

அழகான பூவனம்...

பாச மலர் / Paasa Malar said...

எழுத்தாளர் மனநிலையைத் தாண்டி, அவர்களின் மனைவிகளின், குடும்பத்தாரின் எதிர்பார்ப்பு என்று வெகு இயல்பாக மேற்பார்வைக்குத் தோன்றினாலும்...அந்த மனங்களின் தவிப்பையும் சிந்தித்து வெளிப்படுத்த வேண்டும் என்று எத்தனை பேர் சிந்திப்பார்களோ தெரியவில்லை..

இந்தப் பல கோணச் சிந்தனை உங்கள் எழுத்துகளின் பலத்துக்கு இன்னும் ஓர் ஆதாரம்...

நாவலுக்கான பெயர் சார்ட்....நல்ல டிப்ஸ்...

அகிலன் பற்றிய செய்தி ..விவரித்த விதம் நறுக் நறுக்..

சுந்தரவதனன் என்னென்ன செய்திகள் கொண்டு வருவார்...
காத்திருப்போம்..

G.M Balasubramaniam said...

எழுத்தாளனுக்கு தன் எழுத்து எந்த விதத்தில் வரவேற்கப் படுகிறது, என்று அறிந்து கொள்ள ஆர்வமுள்ள ஆனால் அதிகம் விமரிசிக்காத மனைவியோ உறவோ ( வித்யா மாதிரி என்று சொல்லலாமா.?) இருந்தால் எழுத்து நன்றாகப் பரிமளிக்கும் வாய்ப்பு உண்டு.

ஸ்ரீராம். said...

திலகம் பத்திரிக்கை என்பது குங்குமம் பத்திரிகியைக் குறிக்கிறதா...

//"ஒரு கதை விடமாட்டியே?" என்று மனைவியைப் பாராட்டுகிற மாதிரிப் பார்த்தான் ரிஷி.//

என்னைப் பொறுத்துச் சொல்வதானால் இப்போதெல்லாம் பத்திரிகைகளில் சிறுகதைகள் படிப்பது குறைந்து விட்டது. ஒன்று பார்த்த உடனேயே படிக்கத் தூண்டுவதாய் இருக்க வேண்டும் அல்லது பெயர் தெரிந்த எழுத்தாளர்களாய் இருக்க வேண்டும். அப்போதுதான் படிக்கத் தோன்றுகிறது!! :))

எழுத்தாளர் அகிலன் பற்றிய தகவல் எனக்குப் புதிது.

ஜீவி said...

@ இராஜராஜேஸ்வரி

ரசனைக்கு நன்றிங்க.

ஜீவி said...

@ பாசமலர்

உண்மையான எழுத்தாளர்களுக்கும், அவர்கள் எழுத்துக்கும் உள்ள உறவே தனி. அவரின் சிந்தனையாய் அவரே அவற்றில் வெளிப்படுவதால், அவருண்டு அவர் எழுத்துண்டு என்கிற நிலையே. எழுத்துக்கு உயிருண்டு என்று சொல்கிறார்களே, அதனால் தான் அது; கதாபாத்திரங்களும் உயிரோடு உலவுவது போலவான பிரமை ஏற்படுவதும் அதனால் தான். அதனால் தான் அவருக்கென்று அமைந்த வாசகர்கள் அவற்றை நேசிக்கவும் செய்கிறார்கள்.

காத்திருப்பதற்கு நன்றி, பாசமலர்.

ஜீவி said...

@ ஸ்ரீராம்.

'திலகம்'? நீங்கள் யூகிப்பது போல் இல்லை, ஸ்ரீராம். ஒரு பத்திரிகைக்காக தேர்வு செய்த பெயர் அது.

//என்னைப் பொறுத்துச் சொல்வதானால் இப்போதெல்லாம் பத்திரிகைகளில் சிறுகதைகள் படிப்பது குறைந்து விட்டது//

அப்படியா?.. அப்படியானால், இந்த நாவல் உங்களுக்கு சுவையாகத் தான் இருக்கும்!

பகிர்தலுக்கு நன்றி, ஸ்ரீராம்!

ஜீவி said...

@ ஜிஎம்பீ

இதைத்தான் சென்ற அத்தியாய பின்னூட்டத்தில் சில அனுகூலங்களும், சில பிரதிகூலங்களும் உண்டு என்று சொன்னீர்களா, ஜிஎம்பீ சார்? :))

கோமதி அரசு said...

உமாவை அகிலன் சாகடிச்சிடுவாரோன்னு லட்சக்கணக்கான வாசகர்கள் பதறிப் போயிட்டாங்க. அப்படி அகிலன் செஞ்சிடக்கூடாதுன்னு வந்த ஆயிரக்கணக் கான கடிதங்களையும் தந்திகளையும் பார்த்து கல்கி பத்திரிகைக்காரங்க மலைச்சுப் போயிட்டாங்க. இங்கே அகிலன் வீட்லேயும் அத்தனை பேரும் அதே மாதிரி தவிச்சுப் போயிட்டாங்க. உமாவை என்ன செய்யப் போறாரோன்னு பதைபதைப்பு. அகிலன் கிட்டே அதைப்பத்திப் பேசவும் முடியாம, அவர் எழுதி வைச்சிருக்கறதைப் பாக்கவும் முடியாம.."//

நான் இரண்டு மூன்று வருடங்களுக்கு முன் பாவைவிளக்கு சினிமாப்பார்த்தேன் அதில் உமாவை சாகடிச்சிடுவார்களே!

இவ்வளவு பேர் கேட்டுக் கொண்டும் அகிலன் மாற்றவில்லையா முடிவை.
சினிமாவிற்காக இந்த முடிவா?
அல்லது கல்கியில் வெளி வந்த கதையிலும் இந்த முடிவுதானா அறிய ஆவல்.

கோமதி அரசு said...

"சுந்தரவதனன்.." என்றான் ரிஷி.//

அந்த பெரியவர் ரிஷியிம் மாமாவா!
ஆவலை தூண்டும் விதமாக கதையை முடித்து இருப்பது அருமை.

ஜீவி said...

@ கோமதி அரசு

'கல்கி'யில் வந்த தொடர்கதையிலும் இந்த முடிவு தான். கதைக்காக அகிலன் கொண்டிருந்த முடிவு தான் கதையின் முடிவு இல்லையா?.. மற்றபடி மற்ற தகவல்கள், ஒரு காலத்தில் பத்திரிகைகளில் வரும் கதைகளை வாசகர்கள் எந்த அளவுக்கு ஒன்றி படித்தார்கள் என்பதை நிதர்சனமாகத் தெரிந்து கொள்வதற் காகத் தான். இந்த நாவலின் உள்ளார்ந்த எண்ணமும் அந்தப் பொற்காலத்தை மீட்டு எடுப்பதற்காகத்தான்.

சுந்தர வதனன்?.. நினைவிருக்கிறாரா? குகன் பிரசுரத்தில்,ஃபாரின் லாங்குவேஜ்
செக்ஷனின் பணி புரிபவர். பகுதி-26ல் அவரைப் பற்றி குறிப்பு இருக்கிறது.
தங்கள் தகவலுக்காக.

தொடர்ந்து வாசித்து வருவது பற்றி மகிழ்ச்சி. இந்த பகுதியின்'எழுத்தாளர்'
பிரிவு சார்ந்த அத்தனை எழுத்தாளர்கள் பற்றியும் தொடர்ந்து ஒரே மூச்சில் தாங்கள் படித்து, உடனே உடனே பின்னூட்டமும் இட்டு அமர்க்களப் படுத்தி விட்டீர்களே! பொறுமையாக எல்லாரையும் பற்றிப் படித்தது, இந்தத் தொடரைத் தொடர்வதற்கு ரொம்பவும் துணையாக இருக்கும். அவர்களில் பலர் பற்றி இந்தத் தொடரிலும் வரும் அத்தியாயங்களில் பேசப் போகிறோம்.
அந்தப் பொற்காலத்தின் நாயகர்கள் இல்லையா, அவர்கள்?..

மிக்க நன்றி, கோமதிம்மா.

Geetha Sambasivam said...

எழுத்தாளர்கள் அனைவரும் உயிர்பெற்று உலாவப் போகின்றார்களா? சரிதான். சுந்தரவதனம் என்ன சொல்லப் போகிறாரோ! ஆனால் இங்கே ரிஷிக்கு உறவு என்பது வட்டம் சுழல்வதைத் தான் காட்டுகிறது.

மற்றபடி நாவல் எழுதக் கொடுத்திருக்கும் உபயோகமான தகவல்கள் அனைவருக்கும் பயன்படும். தொய்வில்லாமல் கொண்டு செல்கிறீர்கள். நல்ல உழைப்பு. ஆழ்ந்த சிந்தனை.

ஜீவி said...

@ கீதா சாம்பசிவம்

தொடர்ந்து வந்து எண்ணத்தைப் பகிர்ந்து கொள்வதற்கு நன்றி, கீதாம்மா.

Shakthiprabha (Prabha Sridhar) said...

thodargiren.......
akilan avargaLai patriya seidhi romba inimai

Related Posts with Thumbnails