உஷா ஊஞ்சலில் உட்கார்ந்து கொண்டு, ஏதோ வார இதழைப் புரட்டிக் கொண்டிருப்பது உள்ளே நுழைந்த பொழுதே வித்யாவிற்குத் தெரிந்தது.
வித்யாவைப் பார்த்ததும், "வா வித்யா" என்று முகம் மலர்ந்து உஷா எழுந்து வந்தாள். "உனக்குத் தான் சொல்லணும்ன்னு நினைச்சிண்டிருந்தேன். நீயே வந்திட்டே!" என்று அவள் சொன்ன பொழுது வித்யாவிற்கு வியப்பாக இருந்தது.
"காலம்பற வேலையெல்லாம் முடிஞ்சதா? அவசரம் ஒண்ணும் இல்லையே.." என்று உஷாவை சோபாவில் உட்காரச் சொல்லி தானும் அவள் பக்கத்தில் அமர்ந்து கொண்டாள். "இப்போத்தான் இவரும் ஆபீசுக்குக் கிளம்பினார்... காலை 'வாக்கிங்' போறத்தேயே புஸ்தகத்தை வாங்கிண்டு வந்திட்டார். புரட்டிப் பாக்கக் கூட நேரமில்லை.. இப்பத்தான் ஒழிஞ்சது. அதுசரி, நீ சொல்லவே இல்லையே?.. இந்த வார 'செந்தாமரை'யில் விஜி கதை வந்திருக்கே, பாத்தியா, இல்லையா?" என்று உஷா சொன்னதும் வித்யாவிற்கு சட்டென்று என்னவோ மாதிரி இருந்தது.
ஒரு வினாடிக்குள் ஓராயிரம் எண்ணங்கள் அவள் மன சமுத்திரத்தில் அலை அலையாய் வீசி அடித்தன. 'விஜி! விஜி!.. இனிமே லட்சோப லட்சம் பேருக்கு விஜி தான்! இத்தனை நாள் தனக்கும் தன் பிள்ளைக்கும் மட்டுமே சொந்தமா இருந்த ஒருத்தனின் தோளில் இனிமே நாலு லட்சம் பேர் உரிமையோடு கை போட்டுக் கொள்ளப் போகிறார்கள்!' என்று நினைத்த அடுத்த வினாடியே புருஷன் மேல் ஆத்திரம் ஆத்திரமாக அவளுக்கு வந்தது. 'இவரும் சுத்த மோசம்; 'செந்தாமரை'யில் கதை வந்திருக்குன்னு முன் கூட்டியே ஒரு வார்த்தை எனக்குச் சொல்லியிருக்கலாம், இல்லையா? 'பாத்தையா, உஷா! இவர் கதை செந்தாமரையில் வந்திருக்கு, பார்' என்று நான் அவளுக்குச் சொல்வதை விட்டு, இந்த உஷா, என் புருஷன் எழுதியதைப் பற்றி எனக்குச் சொல்கிற நிலமையா' என்று ஆற்றாமையாக இருந்தது. அத்தனை உணர்வையும் மறைத்துக் கொண்டு, "ஆமாம், கதை வரும்ன்னு சொல்லிண்டு இருந்தார்!இன்னிக்கு வெள்ளிக்கிழமை தானே?.. அதுக்குள்ளே 'செந்தாமரை' வந்திடுத்தா?" என்றாள்.
"நீ எந்த உலகத்லே இருக்கே! வெள்ளி தானே 'செந்தாமரை' வரும்! அது கூட மறந்திடுத்தா?" என்று உஷா கேட்ட போது 'இது கூடத் தெரியாமல் அசட்டுப் பிசட்டென்று உளறுகிறேனே' என்று தன் மீதே அவளுக்கு ஆத்திரம் வந்தது. அந்த ஆத்திரம் புருஷன் மேல் பரிதாபமாய் சொரிந்தது. 'பாவம்.. அவருக்கே 'செந்தாமரை' இந்த இதழில் கதை வந்திருக்குன்னு தெரியுமோ, தெரியாதோ' என்று நினைத்துக் கொண்டாள். இந்தப் பத்திரிகைக்காரங்களைச் சொல்லணும்.. கதை எழுதறவங்களுக்கு இதையெல்லாம் முன்னாடியே தெரியப்படுத்தறது இல்லையா, எழுதினவருக்குக் கூட இன்னொருத்தர் சொல்லியா தன் கதை இதுலே வந்திருக்குன்னு தெரியணும்!.. ஆனாலும் ரொம்பவும் தான் ஆடறாங்க' என்று மனத்திற்குள் பொருமிக் கொண்டாள்.
"என்ன வித்யா! என்ன யோசனை?.. உன்னவர் கதை பத்திரிகைலே வந்திருக்குன்னதும் எதுக்கு வந்தேன்னே மறந்து போச்சா?" என்றாள்.
அவள் அப்படிச் சொன்னதும் தான் வித்யாவிற்கு சகஜ நிலமை வந்தாற் போலிருந்தது. உண்மையிலேயே எதுக்காக உஷா வீட்டிற்கு வந்தோம்ங்கறது நினைவுக்கு வந்து, "ஒரு முக்கியமான விஷயம் சொல்ல வந்தேன்" என்று வித்யா விஷயத்தைச் சொன்னாள். உஷாவுக்கு ஏகப்பட்ட குஷி. "எழுத்துப் பட்டறை பத்தி சொன்னதற்கு ரொம்ப தேங்க்ஸ், வித்யா" என்றாள். "நிச்சயமா வர்றேன். எனக்கும் இந்த மாதிரி ஒரு ஃபோரத்லே கலந்துக்கணும்ன்னு ரொம்ப நாளா ஆசை. ஒரு ஆட்டோ பிடிச்சுப் போயிடலாம். அஞ்சரைக்குக் கிளம்பினா சரியா இருக்குமா?"
"ஆறுக்கு அங்கே இருக்கணுமாம். கெளதம் ஸ்கூல்லேந்து வந்ததும் அவனுக்கும் வாய்க்கு ஏதானும் கொடுத்து கூட்டிண்டு வந்திடறேன்."
"கெளதம் என்னத்துக்கு?.. அவன் தான் இங்கே விளையாடிண்டு இருக்கட்டுமே. அஞ்சுக்கெல்லாம் இவரும் வந்திடுவார். ஏதாவது படிச்சிண்டு இருக்கட்டும்."
"என்னமோ தெரிலே. அவனையும் கூட்டிண்டு வான்னு சொன்னார்."
"எழுத்தாளர் தன் பையனையும் எழுத்தாளர் ஆக்கப் போறாரோ என்னவோ?" என்று உஷா சொன்ன போது அவள் அப்படிச் சொன்னது வித்யாவிற்குப் பிடித்திருந்தது. லேசாக புன்முறுவல் மட்டும் செய்தாள். 'அம்மாக்காரி அதற்கு முன் எழுத்தாளர் ஆகப் போகிறாளாக்கும்!' என்று மனசில் நினைத்ததை மட்டும் ஏனோ அவள் உஷாவிடம் சொல்ல வில்லை.
"இவ்வளவு படிக்கறையே, உஷா! உனக்கும் கதையெல்லாம் எழுதணும்ன்னு தோணினது இல்லையா?" என்று தான் எழுத நினைப்பது போல் இவள் ஏன் நினைப்பதில்லை என்கிற சந்தேகத்தில் வித்யா கேட்டாள்.
"இது வரை தோணினது இல்லே. இனிமேயும் அப்படித் தோணாதுன்னு தான் நினைக்கிறேன்.." என்றாள் உஷா. "கதைன்னு இல்லே. பொதுவா நம்மைச் சுத்தி நடக்கற நிறைய விஷயங்களைத் தெரிஞ்சிக்கணும்ன்னு பள்ளிக்கூடம் போன காலத்திலேயே எனக்கு ரொம்ப ஆசை. அப்போலாம் ஸ்கூல் ப்ளே கிரவுண்ட்லே ஒன்பது மணிக்கு வகுப்பு வகுப்பா வரிசையா நின்னு ப்ரேயர் முடிஞ்சி அப்புறம் தான் வரிசை வரிசையா கிளாஸ் ரூமுக்குப் போவோம். ப்ரேயருக்கு அப்புறம் அன்னிக்கு முக்கிய செய்திகள் சிலதை யாராவது படிக்கறது வழக்கம். அப்படிப் படிக்கறத்துக்காக வீட்லே வாங்கற நியூஸ் பேப்பர்லேந்து செய்திகளைச் சேகரிக்க ஆரம்பிச்சேன். நான் நன்னா இந்தக் காரியத்தைச் செஞ்சதாலே, தினமும் மைக் முன்னாடி நின்னு அன்றைய முக்கிய செய்திகளைப் படிக்கறது நானேன்னு ஆச்சு. செய்தித் தாள்களை படிக்க ஆரம்பிச்ச பழக்கம், வார மாச இதழ்களுக்குத் தாவினது. முதல் அட்டைலேந்து கடைசி அட்டை வரை பிரிண்ட் ஆன எதையும் படிக்காம இருந்ததில்லை. வார இதழ்கள்லே வர்ற விளம்பரங்களை எத்தனை பேர் படிப்பாங்கன்னு நினைக்கறே, வித்யா?.. நான் அதையெல்லாம் கூட படிக்காம விடமாட்டேன்."
"உஷா! நீ ரொம்ப வித்தியாசமானவ தான். விளம்பரம் இருக்கற பக்கத்தைப் பார்த்தவுடனே அந்தப் பக்கத்தை திருப்பிடறதான் என் வழக்கம் கூட. நீ அதையெல்லாம் கூடப் படிப்பேன்னு சொல்றது ஆச்சரியமா இருக்கு.. இனிமே என்னன்ன விளம்பரம்லாம் வாரப் பத்திரிகைலே வர்றதுன்னு நானும் படிச்சுப் பாத்துட்டு அந்த அனுபவம் எப்படி இருக்குன்னு உனக்குச் சொல்றேன்... "
"ஒரு வேடிக்கை தெரியுமா, வித்யா?.. இந்த விளம்பரங்களை அச்சடிக்க ஆரம்பிச்ச வேலைதான் நாம இன்னிக்குப் பாக்கற இந்த பத்திரிகைகளா ஆச்சுன்னு சொல்லுவாங்க.. பிட் நோட்டீஸ் மாதிரி அச்சடிச்சுக் கொடுத்தா பல பேர் பாத்துட்டு கசக்கிப் போட்டுடறாங்களாம். அப்படிக் கொடுக்கறத்துக்கு சரியா ரெஸ்பான்ஸ் இல்லைன்னு தெரிஞ்சதும், இலவசமா இல்லாம ஜனங்க காசு கொடுத்து வாங்கினா அதுக்கு அவங்க மத்திலே ஒரு மதிப்பு இருக்கும்னு நினைச்சாங்க. வெறும் விளம்பரங்களை அச்சடிச்சுத் தந்தா யாரு காசு கொடுத்து வாங்குவாங்க, சொல்லு.. மாட்டாங்க இல்லையா?.. அதுக்காக ஒண்ணு செஞ்சாங்களாம். ஜனங்க காசு கொடுத்து வாங்கி படிக்கற மாதிரி அவங்களுக்கு ஆர்வமுள்ள விஷயங்களைச் சேகரிச்சு அச்சடிச்சு அதுக்கு நடுவே இந்த விளம்பரங்களையும் சேர்த்துக் கொடுத்தா, படிக்கறவங்க தாங்க படிக்கற விஷயங்களோட இதையும் சேர்த்துப் படிப்பாங்கங்கன்னு நெனைச்சு செஞ்சதோட வளர்ச்சி தான் இப்படி வார, மாசப் பத்திரிகைகளா உருமாறிடுத்து!"
"அப்படியும் விளம்பரங்களைப் படிக்காமத் தள்ளிண்டு போர்ற என்னை மாதிரி ஆளுங்க இருப்பாங்க, இல்லியா?"
"எஸ்.. இருப்பாங்க தான். அதுக்காகத் தான் இப்பல்லாம், விளம்பரம்ன்னு தெரியாம படிக்கற மேட்டரோடையே விளம்பரத்தையும் சேர்த்துக் கொடுக்கணும்ன்னு படிக்கறவங்க மனசிலே பதிய வைக்கிற முயற்சிலே இறங்கியிருக்காங்க.. ஜனங்களுக்கு நம்ம ப்ராடெக்ட் தெரிஞ்சிட்டாப் போதும், அவங்க வாங்கிடுவாங்கங்கறது அவங்க எண்ணம். அதான் தங்களோட பொருளை எப்படியானும் தெரிய வைக்கணும்ன்னு அவங்க நினைக்கிறாங்க.."
புத்தகங்களைப் படிச்சோம் போனோம் என்றில்லாமல் இந்த உஷா என்னலாம் விஷயங்கள் தெரிஞ்சு வைத்திருக்கிறாள் என்று வித்யாவுக்கு வியப்பாக இருந்தது.
அவள் மனத்தில் ஓடிய எண்ணத்தைப் படிச்சாற் போல "இந்த வார, மாசப் பத்திரிகைகளை விழுந்து விழுந்து நான் படிக்கறதைப் பார்த்து, இந்த சமாச்சாரமெல்லாம் இவர் சொல்லித் தான் எனக்குத் தெரியும்" என்று உஷா தன் புருஷன் விஷய ஞானத்தை சிலாக்கிக்கற மாதிரி சொன்னாள்.
"அப்போ அவரும் இதெல்லாம் நிறையப் படிப்பார் போலிருக்கு.."
"நன்னா சொன்னே போ.. இத்தனை புஸ்தகம் வாங்கறோமே?.. ஒண்ணைக் கூட புரட்டிப் பார்த்ததில்லே.. அதுவும் கதைன்னா கட்டோடு பிடிக்காது. நிதர்சனமாத்தான் எத்தனையோ இருக்கே. அது என்ன, கற்பனையா ஜோடிச்சு இவங்க வேறே எழுதறதும்பார். நிஜத்தை நேசிக்கறவர். அதனாலே வாழ்க்கையை நிஜமா எதிர்கொள்ளணும்பார். கற்பனை முடங்கிப் போக வைக்குமாம். நிஜம் நிஜமாவே சக்தி கொடுக்குமாம். "
"இதென்ன பாலிசி?.. நினைக்கற எல்லாத்தையுமா நிஜமாக்கிட முடியும்?"
"அதைத் தான் அவரும் சொல்றார். நிஜமாக்க முடியாததையெல்லாம் ஏன் நினைக்கணும்பார்! நிஜமாக்க முடியாததெல்லாம் தான் ஏக்கமா கற்பனையாகறதுங்கறது அவரோட கட்சி."
"கற்பனைங்கறது நிஜ நடவடிக்கைக்கான ப்ரீ ப்ளான் இல்லையா?"
"இல்லையாம். நிஜத்தை நிஜமாய் எதிர்கொள்ளும் பொழுது தான் இறைவன் கொடுத்திருக்கிற அந்த எதிர்ப்பு சக்தி நம்ம உடம்பிலே செயல்படுமாம். அதே மாதிரி சந்தோஷமான நிஜம், உடம்புக்கு ஊட்டச்சக்தியை வாரி வழங்குமாம். எப்படிப்பட்ட கற்பனையும் நிஜத்தின் கால்தூசு கூடப் பெறாது என்பார்."
"இப்படிப்பட்டவர், எனக்கு ஆச்சரியமான்னா இருக்கு, இன்னைக்குக் கூட 'செந்தாமரை'யை அவர் தான் வாங்கிண்டு வந்ததா சொன்னே?"
"தான் படிக்கறத்துக்கா வாங்கினார்?.. எனக்குன்னா வாங்கிண்டு வந்தார்."
"அதான். இப்படிப்பட்டவர் அதெல்லாம் வாங்கறது வேஸ்ட்ன்னு நினைக்க மாட்டாரோ? அதான் கேட்டேன்."
உஷா தலையைக் கோதிக்கொண்டே சிரித்தாள். "சின்ன வயசிலிருந்தே நான் ஒரு புஸ்தகப் பைத்தியம்ங்கறதாலே எந்த புஸ்தகத்தை எங்கே பார்த்தாலும் தவறாம வாங்கிண்டு வந்திடுவார். இந்த வாரப் பத்திரிகை இன்ன கிழமைலே வரும்ன்னு என்னை விட அவருக்கு நன்னாத் தெரியும்! இவ்வளவு ஏன்?.. அவருக்கு ஐஸ்கிரீம்ன்னா பிடிக்காது; உடம்புக்கு ஒத்துக்காது. ஆனா, நாங்க ரெண்டு பேரும் வெளிலே போனோம்ன்னா, எனக்கு ஐஸ்கிரீம் வாங்கித் தராம இருக்க மாட்டார். 'இன்னும் பத்து கடை தாண்டி, அருண் ஐஸ்கிரீம் கிடைக்கும்' சாப்பிட்டுப் போகலாம்பார்'. நான் ஆசைப்பட்டு சாப்பிட்டா அவரும் சாப்பிட்ட மாதிரி. அதான் அப்படிப் பன்மைலே சொல்றாரோன்னு நான் நெனைச்சிப்பேன்."
"அச்சா! ரொம்ப இன்ட்ரஸ்ட்டிங் பர்ஸனாய் இருப்பார் போலிருக்கே." என்று சொல்லும் பொழுதே தான் எழுதப்போகும் முதல் கதைக்கான கரு கிடைத்த சந்தோஷம் வித்யாவின் முகத்தில் தெரிந்தது.
"ஒரு நாளைக்கு நீயே பேசிப்பார். பேசினது இன்ட்ரஸ்ட்டிங்கா இருந்ததா இல்லையான்னு சொல்லு.."
"நிச்சயம். நிறைய கதை கிடைக்கும் போலிருக்கு. எழுத்துப் பட்டரைக்குப் போய்ட்டு வந்த பின்னாடி ஒரு நாளைக்கு வைச்சிக்கலாம்."
"கதையா?.. என்ன சொல்றே?"
"விஜி எழுதறக்கு மேட்டர் கிடைக்கும் இல்லையா?.. அதைச் சொன்னேன்" என்று சொல்லி விட்டு வித்யா சுவர் கடிகாரத்தில் மணி பார்த்தாள். "காலம்பற தோசை ஆச்சு.. இனிமேத்தான் சாப்டணும். நடுவிலே காப்பிப்பொடி வாங்கிண்டு வந்திடலாமான்னு பாக்கறேன். எப்பவும் டப்பாலே கொஞ்சம் இருக்கறச்சேயே ஞாபகம் வந்திடும். ஏதோ மறந்தாச்சு. சுத்தமா இல்லே" என்று வித்யா சொன்ன போது "எனக்குக்கூட ரெண்டு மூணு மளிகை சாமான் வாங்கணும். போயிட்டு வந்திடலாம்" என்று உஷா எழுந்திருந்தாள்.
அதற்குள் வீட்டிற்குப் போய் ஒரு பையும், பர்ஸையும் எடுத்துக் கொண்டு கதைவை சாத்தி பூட்டி விட்டு வந்தாள் வித்யா.
அவர்கள் வசித்த ஸ்டோரின் நுழைவு வாசல் பக்கம் உள்ளடங்கி அந்தந்த வீட்டு நம்பர் போட்டு அத்தனை வீட்டிற்கும் சின்ன சின்ன பெட்டியாய் போஸ்ட் பாக்ஸ் இருந்தது. அந்தப் பக்கம் போய் தங்களுக்கு ஏதாவது தபால் இருக்கிறதா என்று பார்க்க 'Z' என்று போட்டிருந்த பெட்டியைத் திறந்தாள் வித்யா. பெட்டியில் கத்தை தபால்கள் இருந்தன. அந்தத் தபால்களின் ஊடே 'செந்தாமரை' பத்திரிகையும் உரையிட்டு இருந்தது, அவள் முகத்தில் சந்தோஷத்தைப் பூசியது. மேலாகப் பார்க்கையிலேயே இரண்டு மூன்று பத்திரிகைகளிலிருந்து தபால்களும் வந்திருப்பது தெரிந்தது.
அவற்றை எடுத்துக் கொண்டு வந்தவள், 'செந்தாமரை' பத்திரிகையை மட்டும் எடுத்து உஷாவிடம் காட்டினாள்.
"பரவாயில்லையே! காசு கொடுத்து வாங்க வேண்டியதில்லை. அவங்களே அனுப்பிச்சிட்டாங்களே" என்று உஷா சொன்னதும், கதை எழுதவறங்களுக்கு இது கூட செய்யலேனா, எப்படி?" என்று வக்கணையாக அவளுக்கு பதில் சொன்னாள் வித்யா. இப்படியெல்லாம் 'கெத்'தாகப் பேசும் வழக்கமெல்லாம் வித்யாவிற்குக் கிடையாது. இப்பொழுது புதுசாக இதெல்லாம் வந்து எப்படி ஒட்டிக் கொண்டதென்று தெரியவில்லை.
"அப்போ கதை எழுதினதுக்கு சன்மானம்?"
"தனியா வரும்" என்றாள் வித்யா..
"மணியாடரா?.."
"இல்லே. செக்.. 'மெஜாட்டியோ'வுக்கு செக் தான் வந்தது.. இதுக்கும் அப்படித்தான்னு நினைக்கிறேன்.
"எவ்வளவு?.." என்று கேட்க நினைத்த உஷா ஏனோ கேட்கவில்லை. பத்திரிகைகளைப் பற்றித் தெரிந்து கொள்ளும் ஆர்வம், கொஞ்சம் பர்ஸனலாகப் போய்விடக்கூடாது என்கிற உணர்வு கேட்கவிடாமல் அவளைத் தடுத்தது.
அதற்குள் அவர்கள் வாசல் மெயின் கேட் தாண்டி தெருப்பக்கம் வந்து விட்டார்கள்.
நாலு தப்படி கூட நடந்திருக்க மாட்டார்கள். "அடிசக்கை!.. வித்யா.. அதோ பாத்தையா?"-- எதிர்ப்பக்கம் சுவரில் பெரிசு பெரிசாக ஒட்டியிருந்த வால்போஸ்டர்களைக் காட்டினாள் உஷா.
அதைப் பார்த்த வித்யாவின் பாதாதி கேசம் ஒரு சிலிர்ப்பு சிலிர்த்து அடங்கியது. வால் போஸ்டரில், அந்தப் பிரபலப் பத்திரிகையின் பெயர் போட்டு, கொட்டை கொட்டை எழுத்துக்களில்,
விஜி எழுதும்
காதல் தேசம்
தொடர் கதை-- விரைவில் ஆரம்பம்
--என்று போட்டிருந்தது.
(இன்னும் வரும்)
16 comments:
இந்தப் போஸ்டர் அடிச்சிருக்குனு சொன்னதைப் படிச்சதும் அந்தக் காலத்தில் லக்ஷ்மி அம்மா வோட காஞ்சனையின் கனவுக்கு விளம்பரம் செய்ததைப்பத்திப் பத்திரிகைகளில் படிச்சது நினைவில் வந்தது.
உஷாவின் கணவரின் காரக்டர் நல்லா இன்டரஸ்டிங்கா இருக்கு. தொடர்ந்து காத்திருக்கேன்.
முன்பெல்லாம் எழுத்தாளர்களின் கதை வெளியாகப் போவதை முன்கூட்டி சொன்னதாகத்தானே ஞாபகம்...இல்லையா?
எங்கள் வீட்டிலும் இரண்டு பேர் பற்றிச் சொல்ல வேண்டும். ஒருவர் அட்டை டு அட்டை விளம்பரம் உட்பட படித்து விடுவார். அதுவும் மிக வேகமாக. பயங்கர ஞாபக சக்தி அவருக்கு. எந்தப் பக்கத்தில் எந்த விளம்பரம் என்று கூடச் சொல்வார். இரண்டாமவரின் மனைவி புத்தகப் பைத்தியம். ஆனால் இவர் புத்தகமெல்லாம் வாங்கித் தர மாட்டார். இவரும் ஓரளவு புத்தகங்கள் படிப்பார்தான். ஆனால் இவரும் இவர்கள் மகனும் அம்மாவைக் கிண்டல் செய்வதோடு முடிந்தவரை புத்தகங்கள் அவர் கண்ணில் படாதவாறு பார்த்துக் கொள்வார்கள்! மனைவி சேர்த்து வைத்திருந்த ஒரு பெண்கள் புத்தகத் தொடுப்பி அவர் பார்க்காத நேரம் இவர்கள் எடுத்து காணாமல் அடித்தது தனிக் கதை!
புத்தகத் தொகுப்பை என்று படிக்கவும்....ஸாரி பிழையாகி விட்டது!
முதலாய் வந்த பத்திகளில் வித்யாவின் கணவன் பற்றிய மனரீதியான ஓட்டங்கள் உலகளாவிய உளவியல்...
கணவன் மீது சட்டென்ரு கோபம், அதை அடுத்தவர் முன் சமாளிப்பது, பின் மீண்டும் கணவனுக்காகப் பரிதாபப்படுவது...இயல்போ இயல்பாய் வந்திருக்கிறது ஓர் அட்சரமும் பிசகாமல்..
பிட் நோட்டீசுகள் பத்திரிகையான கதையும் சுவாரசியமான தகவல்தான்...
வித்யா, உஷா என்று பலரையும் எழுத்தாளராகப் போகிறார்கள்... நன்று..நன்று..
அச்சா! ரொம்ப இன்ட்ரஸ்ட்டிங் பர்ஸனாய் இருப்பார் போலிருக்கே." என்று சொல்லும் பொழுதே தான் எழுதப்போகும் முதல் கதைக்கான கரு கிடைத்த சந்தோஷம் வித்யாவின் முகத்தில் தெரிந்தது.
ஆஹா கதைக்கான கரு தேடி வந்த விதம் ரசிக்கிறது..
//அதைப் பார்த்த வித்யாவின் பாதாதி கேசம் ஒரு சிலிர்ப்பு சிலிர்த்து அடங்கியது. வால் போஸ்டரில், அந்தப் பிரபலப் பத்திரிகையின் பெயர் போட்டு, கொட்டை கொட்டை எழுத்துக்களில்,
விஜி எழுதும்
காதல் தேசம்
தொடர் கதை-- விரைவில் ஆரம்பம்
--என்று போட்டிருந்தது.//
இதைப்படித்த எனக்கே ஓர் சிலிர்பு ஏற்பட்டது. அவர்களுக்கு ஏற்பட்டதில் ஆச்சர்யம் இல்லை தான்.
பார்வையை அழகாகக் கொண்டு செல்கிறீர்கள், ஐயா.
முழுவதுமாகப் படிக்க வேண்டும் என்று நினைத்துள்ளேன்.
பிராப்தம் எப்படியோ பார்ப்போம்.
@ Geetha Samabasivam
'காஞ்சனையின் கனவு' கூட கனவாக ஞாபகம் வருகிறது.
போஸ்டர் விஷயத்திற்கு அவ்வளவு காலம் முன்னாடிப் போக வேண்டாம்.
சமீப காலங்களில் கூடத் தான். அடுத்தாற் போல் ஸ்ரீராமுக்கும் இதே ஞாபகம்.
நேர்- எதிர் என்று அலசும் பொழுது உஷாவின் கணவர் கிடைத்தார். அவரை இன்னும் நெருங்கிப் பார்க்க வேண்டும். எங்கே போய்விடப் போகிறார்?.. பார்த்து விடலாம்.
@ ஸ்ரீராம்
அதென்ன, முன்பெல்லாம்?..
சுஜாதா, சமீபகால உதாரணம் தானே?.. தொடர்ந்து இன்னும் சிலர் கூட என்று ஞாபகம்.
முதலாமவர் கொடுத்த காசுக்கு வஞ்சனை இல்லாமல் சகலத்தையும்.
'எந்தப் பக்கத்தில் எந்த விளம்பரம்' ங்கற அளவுக்குன்னா, ஏதாவது பொருள் பற்றிய விவரம் தெரிய வேண்டும் என்கிற அவசரத்தில் அவர் தான் ஞாபகத்துக்கு வருவார் என்று சொல்லுங்கள்.
இரண்டாமவர் சமாச்சாரம் அநியாயம்.
மனைவி கணவனைப் பற்றியோ, கணவன் மனைவியைப் பற்றியோ அல்லது காதலன் காதலி பற்றியோ அல்லால் காதலி காதலன் பற்றியோ கவிதை எழுதுவதை விட, ஒருவருக்கொருவர் இதுபோன்ற சின்னச் சின்ன விஷயங்களில் குறைப்பட வைக்காமல் கவனமாக இருந்தார்கள் என்றால்.. என்றால்?.. உங்களுக்கே தெரிந்தது, தான்!
@ பாசமலர்
மனம் ஒரு புதிரான விஷயம். ஒரு நேரத்தில் இருப்பது போலக் கூட இன்னொரு நேரத்தில் இருப்பதில்லை.
இந்த லட்சணத்தில், நவீன உலகின் செளகரியங்களும் கண்டுபிடிப்புகளும் கூடக் கூட பலது புதுபுதுசாய்த் தோன்றினாலும் கூட இத்தகைய ஓட்டங்களுக்கான ஆதாரசுருதியாய்
சில வகைகள் உண்டு. அந்த வகைகள் தாம், அடிப்படையாய் இருந்து கொண்டு பல்வேறு கோணத்திலும் கிளை பரப்புகின்றன.
உன்னிப்பான வாசிப்பு அனுபவம் இப்பொழுதெல்லாம் அரிதாகிக் கொண்டு வருகிறது. ரசித்துப் படித்தமைக்கு நன்றி.
லஷ்மணனின் டீமிற்கு நிறைய எழுதுவோர் தேவை. இவர்கள் இருவரும் என்னவென்று இதுவரை தெரியவில்லை.
தொடர்ந்த வாசிப்புக்கு நன்றி.
@ இராஜராஜேஸ்வரி
'பார்க்கும் இடமெல்லாம் நந்தலாலா!' என்ற மாதிரி, கதை எழுதுவோருக்கு
எதையெடுத்தாலும் கதை ஆக்கலாமா என்று தோன்றும். அந்த ஆக்குதல் தான் அவரவர் சாமர்த்தியத்தைப் பொறுத்து அமைகிறது.
வருகைக்கு மிக்க நன்றி.
@ வை. கோபாலகிருஷ்ணன்
கதைன்னு ஒண்ணும் பெரிசாய் இல்லை; எப்பொழுது வேணா, எங்கே வேணா தொடங்கித் தொடர்ந்து படிக்கலாம்.
எழுத்து, எழுத்தாளர், வாசகர்,பதிப்பகம், பத்திரிகைகள் என்று ஒரு பெரிய வட்டம் போட்டு தட்டாமாலை சுற்றிக் கொண்டிருக்கிறது. 'தடக்'கென்று எங்காவது ஓரிடத்தில் ஆட்டம் நின்று விடலாம்.
தங்களுடைய ரசனைக்கு நன்றி. தொடர்ந்து வந்து தங்கள் அனுபவங்களையும் சொல்லி கலந்து
கொள்ள வேண்டுகிறேன்.
மிக்க நன்றி, கோபால்ஜி!
இந்த வார 'செந்தாமரை'யில் விஜி கதை வந்திருக்கே, பாத்தியா, இல்லையா?" என்று உஷா சொன்னதும் வித்யாவிற்கு சட்டென்று என்னவோ மாதிரி இருந்தது.//
நிச்சியம் வித்யாவிற்கு அது வருத்தமாய் தான் இருந்து இருக்கும்.
முதல் அட்டைலேந்து கடைசி அட்டை வரை பிரிண்ட் ஆன எதையும் படிக்காம இருந்ததில்லை. வார இதழ்கள்லே வர்ற விளம்பரங்களை எத்தனை பேர் படிப்பாங்கன்னு நினைக்கறே, வித்யா?.. நான் அதையெல்லாம் கூட படிக்காம விடமாட்டேன்."//
உஷா மாதிரி எனக்கும் ஒரு புத்தகத்தை எடுத்துக் கொண்டால் எல்லாவற்றையும் படிக்க வேண்டும்.
"அச்சா! ரொம்ப இன்ட்ரஸ்ட்டிங் பர்ஸனாய் இருப்பார் போலிருக்கே." என்று சொல்லும் பொழுதே தான் எழுதப்போகும் முதல் கதைக்கான கரு கிடைத்த சந்தோஷம் வித்யாவின் முகத்தில் தெரிந்தது.//
உஷா இண்ட்ரஸ்ட்டிங் பர்ஸனாய் தான் இருக்கிறார்.
வித்யாவிற்கு கதை எழுத கரு கிடைத்து விட்டது.
கதை எழுத ஆரம்பித்தவுடன் எல்லாவற்றையும் (காப்பிபொடி தீர்ந்தது தெரியவில்லை) மறந்து கதை கரு தேடும் உள்ளம் வந்து விட்டது வித்யாவிற்கு.
//அம்மாக்காரி அதற்கு முன் எழுத்தாளர் ஆகப் போகிறாளாக்கும்!'//
வித்யாவின் கதை எப்போது?
@ கோமதி அரசு
வித்யாவுக்கு எழுத ஆசை தான். ஆனால் அதற்கு முன்னால் ஆயிரம் யோசிக்க வேண்டியிருக்கிறது. அவள் நினைப்பதெல்லாம் கூட நியாயமாய்த் தான் படுகிறது.
'பெண் மனம்' இல்லையா?.. நாலையும் யோசித்து தீர்க்கமாகத் தான் முடிவெடுக்கும். அப்படி எடுத்துவிட்டால் யார் என்ன சொன்னாலும் கேட்காது. நினைத்தது நிறைவேறும் வரை 'பசி நோக்கார், கண் துஞ்சார்' என்ற கதை தான்.
அதனால் அவராக முடிவெடுக்கும் வரை காத்திருப்போம்.
மிக்க நன்றி, கோமதிம்மா.
எந்த இதழில் கதை வெளியாகுமென்று முன்கூட்டியே எழுத்தாளர்களிடம் ஏன் சொல்வதில்லை என்று நானும் அடிக்கடி நினைத்திருக்கிறேன்.
பெருமையை வெளிக்கொணறும் பொறாமை உணர்வை அழகாகச் சொல்லியிருக்கிறீர்கள்.
"நிஜத்தை நேசிக்கிறவர்" வரிகள் சுவாரசியம். கற்பனைக்கும் நிஜத்துக்கும் இடையே இருக்கும் மாய வரம்பை மிகச் சுலபமாகத் தாண்டிப் போகும் ரசிகர்கள்/வாசகர்களைப் பற்றிப் படித்திருக்கிறேன். (இப்பவும் என்னால் நம்பமுடியவில்லை - ஜெயசித்ரா பிரபலமாக இருந்த போது குமுதம் பத்திரிகையில் இந்த வரம்பைப் புரிந்து கொள்ளாத ரசிகர்கள் பற்றி அளித்திருந்த 'அறிவார்ந்த' பேட்டி மிகச் சுவாரசியமாக இருந்தது.)
(போஸ்டர் அடித்து பல்லாக்குத் தூக்காத குறையாக விளம்பரம் செய்தது சுஜாதாவுக்கு மட்டும் தான் என்று நினைக்கிறேன்.)
@ அப்பாதுரை
வாருங்கள் அப்பாஜி! முதல் இரண்டு வரிகள் உணர்ந்து சொன்ன மாதிரி இருக்கிறது. பத்திரிகை உலக விசித்திரங்களில் இதுவும் ஒன்று.
பாலகுமாரனுக்கும் அப்படியான விளம்பரம் உண்டு. வாசக அன்பர்கள் நிறைய உள்ள எழுத்தாளர்களுக்கு என்றைக்குமே மரியாதை அதிகம் தான். அவர்களது வாசகர்கள் மனத்தில் தவற விட்டுவிடாமல் பதிக்க வேண்டும்.அதனால்தான் இதெல்லாம். பத்திரிகைகளைப் பொறுத்தமட்டில்
'எப்பாடுபட்டேனும் விற்பனையைக் கூட்ட வேண்டும்' என்கிற தாரக மந்திரம் ஒன்று தான்!
மாயமான் மாதிரி மாயவரம்பு! நல்ல சொல்லாட்சி! ரசித்தேன்.
நல்ல ஆரம்பம்...விஜிக்கு :)
நமக்கும் நம் வீட்டு உறவிரின் வெற்றி போல மகிழ்ச்சி மிகுகிறது.
Post a Comment