மின் நூல்

Wednesday, June 6, 2012

பார்வை (பகுதி-48)

நுழைவுப் பகுதியில் 'வருங்காலமே வருக!' என்று எழுதியிருந்ததைப் பார்த்த உஷா, வித்யாவிடம் அதைக் காட்டி,"நல்லா இருக்குல்லே" என்றாள்.  அதை அங்கீகரித்த பாவனையில் வித்யாவின் உதடுகள் புன்னகையில் மலர்ந்தன.  உள் ஹாலின் நடுமத்தியில் அமர்ந்திருந்தவர்களுக்கு பின் வரிசையில் காலியாகக் கிடந்த நாற்காலிகளில் இவர்களும் அமர்ந்தனர்.

எப்பொழுது ஆரம்பித்ததோ தெரியவில்லை.  இவர்கள் அங்கு போனபோது பாதியில் கலந்து கொண்ட உணர்வு இருந்தது. நேற்றைய கூட்டத்தை விட இன்றையக் கூட்டம் வித்தியாசப்பட்டு இருந்த மாதிரி தெரிந்தது.  கிட்டத்தட்ட நாற்பது பேர் தேறும்.  நட்ட நடுவில் லஷ்மணன் அமர்ந்திருக்க அவரைச் சுற்றி மற்றவர்கள் அரைவட்டமாக நாற்காலி போட்டு அமர்ந்திருந்தனர்.  ஏதோ கல்யாணங்களில் கிடைத்த நேரத்தில் நெருக்கமானவர்கள் நெருங்கி உட்கார்ந்து பேசிக் கொண்டிருப்பார்களே, அந்தக் காட்சி போல இருந்தது.  நெருங்கிய உள் வட்டக் கூட்டம் போல ஏற்பாடு பண்ணியிருப்பார்களோ என்கிற எண்ணத்தில் அவர்களோடு சேர்ந்து தாங்களும் அங்கே அமரலாமா என்பதே வித்யாவிற்கு யோசனையாகப் போய்விட்டது.  லேசாக எழுந்திருக்கப் போன அவளை உஷா விரல்கள் பற்றி அமர்த்தி வைத்தாள். ஊர்மிளாவும் எங்கு அமர்ந்திருக்கிறாள் என்றுத் தெரியவில்லை.  கூட்டம் முடிந்து அவளைப் பார்க்கும் பொழுது, பெரியசாமி கொடுத்திருந்த ஜாதகத்தை எல்லா விவரமும் சொல்லி அவளிடம் கொடுப்பது தான் உசிதமாக இருக்கும் என்று வித்யாவிற்குத் தோன்றியது.

லஷ்மணன் சொன்ன பொழுது வாசலில் பார்த்த வருங்கால வரவேற்பில் பொதிந்திருந்த அர்த்தத்தின் மகிமை இன்னும் கூடியது. "சென்ற தலைமுறை எழுத்தாளர்களின் எழுத்துச் சிறப்பை உரமாகக் கொண்டு, இந்த தலைமுறை வாழ்க்கை பிரச்னைகளை அலசிப் பார்ப்போம். நாம் வரவேற்றுத் தான் வருங்காலம் வரவேண்டுமென்பதில்லை. ஆனால் சென்ற தலைமுறைச் சிறப்பை மறக்காத பலம் கிடைத்திருக்கே, அதான் அந்த வரவேற்பின் சிறப்பு. அந்த சிறப்பு கொடுக்கிற தெம்பில் வருங்காலத்தை வரவேற்போம்" என்று லஷ்மணன் சொன்னது அங்கு அமர்ந்திருந்தவர்களிடையே உற்சாகத்தைக் கொடுத்தது அவர்களின் மகிழ்ச்சி ஆரவாரத்தில் வெளிப்படத் தெரிந்தது.

"புதுசாகத் தெரிகிற எந்தப் புதுசும் எந்த அந்தரத்திலிருந்தும் தனியாக முளைத்து விடுவதில்லை.  எல்லாவற்றிற்கும் ஒரு ஆதி உண்டு; எல்லாமே ஒன்றைத் தொட்டு ஒன்று தான்;  அவற்றின் நீட்சி தான்; பழைய எச்சத்தின் வளர்ச்சி தான்.  எழுத்துக்கும் அதே தான்.  சென்ற தலைமுறை போட்டுக் கொடுத்த பாதை கூட அதற்கு முந்தைய தலைமுறை போட்ட பாதையின் விரிவு தான்.. புறநானூற்றில் கதைக்கான செய்திகளைப் பார்க்கிறோம். ஐம்பெருங்காப்பியங்களில், பிற்கால பிரபந்தங்களில் காணாத கதையா?  இந்த நீண்ட பாதையில் காலப்போக்கில் பழுதடைவதை செப்பனிட்டுக் கொண்டு மேலே போகிறோம்; அதுவே நாம் செய்யக்கூடியது.   எல்லா மாற்றங்களும் இயல்பான ஒன்று.  அப்படிக் காலத்தின் புதுக்கருக்கலில் எழுத்தில் விளைந்த இந்தக் காலத்து மாற்றங்களோடு ஒப்பிட்டு பழசு எதையும் மறப்பதற்கில்லை. மறப்பதிற்கில்லை மட்டுமில்லை; 'சொள்ளை; சொத்தை' என்று குறைத்துப் பேசுவதற்கும் எதுவுமில்லை. அது அது அந்தந்த காலத்துக் கண்ணாடி. அதனால் சென்ற தலைமுறை எழுத்தாளர்கள் நடந்து வந்த பாதையை திரும்பிப் பார்த்து அந்தப் பெருமையில் சன்னதம் கொண்டு மேலும் செல்வோம்.." என்று லஷ்மணன் சொன்னது 'இனிச் செய்வதென்ன?' என்பதைப் பிரகடனப்படுத்துவது போல இருந்தது.

"சிறுகதை, நீண்ட கதைகளின் சிறப்புகள் மங்கித் தெரியும் காலம் இது. அந்தந்த காலத்தில் நம் முன்னோர்கள் ஏற்றி வைத்திருக்கும் தீபத்தின் திரியை நிமிண்டி அணைந்து போய் விடாமல் காக்கும் கடமை நமக்குண்டு.." என்ற லஷ்மணன், அங்கு கூடியிருக்கும் இளம் எழுத்தாளர்களை இந்த சத்தியவேள்வியில் பங்கு கொள்ள அழைத்தான்.

"ரிஷி எழுதிய 'பார்வை' கதையைப் படித்த பின் எனக்கேற்பட்ட அனுபவம் ஒன்றை உங்களுடன் பகிர்ந்து கொள்ள ஆசைப்படுகிறேன்" என்று தொடர்ந்தான் லஷ்மணன். "போன மாதம் தொலைக்காட்சியில் 'என்றென்றும் ராஜா' என்று ஒரு நிகழ்ச்சி பார்த்தேன்.  அந்த நிகழ்ச்சி பொது அரங்கில் நடைபெற்ற பொழுது நேரில் கலந்து கொள்ளும் வாய்ப்பு எனக்கு கிடைக்கவில்லை.  ஆனால் நடந்த நிகழ்ச்சியைத் தொலைக்காட்சியில் பார்த்த பொழுது அசந்து போய் விட்டேன்.  இசைஞானி இசை அமைத்த தேர்ந்தெடுத்த ஒவ்வொரு பாடலாகப் பாடிக் கொண்டு வரும் பொழுது பின்னணி சாகசமாய் வயலின், புல்லாங்குழல், நாதஸ்வரம், வீணை, ஷெனாய் இன்னும் நிறைய வாத்தியங்கள் என்று.. அந்த வாத்யங்களிலிருந்து அந்தந்த கலைஞர்களின் ஆத்ம ஞானம் வெள்ளமாகப் பீறிட்டமாதிரி எனக்குத் தோன்றியது. எவ்வளவு கற்பனை, எவ்வளவு குழைவு, எழுந்து தாழ்ந்த அந்த இசை லாஹரியில் என்னையே பறிகொடுத்தேன்.  இசைக்கலைஞர்கள் இல்லாமலும் அவர்கள் தங்கள் ஞானத்தை வெளிப்படுத்தும் வாத்தியங்கள் இல்லாமலும் ஆத்மார்த்த இசையை அனுபவிக்க முடியும் என்று தோன்றவில்லை" என்றவன் தொடர்ந்தான்.

"'பார்வை' கதையில் வந்த 'மிஷினா, மனிதனா' என்கிற கேள்வி எழுந்த சூழலை நினைவில் கொள்ளுங்கள். நாதஸ்வரம் என்னும் வாத்யத்தையே எடுத்துக் கொள்ளுங்களேன்.   இப்பொழுதெல்லாம் கோயில்களிலும், திருமணம் போன்ற குடும்ப விழாக்களிலும் தான் நாதஸ்வர இசையையே அனுபவிக்க முடிகிறது.  காலப்போக்கில் இங்கெல்லாம் கூட இதற்கு இடமில்லை என்கிற நிலமை ஏற்படுகிறது என்று வைத்துக் கொள்ளுங்கள், பிற்பாடு நாதஸ்வரம் என்றால் என்னவென்றே வரும் தலைமுறைக்குத் தெரியாமல் போய் விடும்.  இங்கொன்றும் அங்கொன்றுமாக இதழ்களில் வரும் சிறுகதை, தொடர்கதைகளுக்கும் இந்த நிலை ஏற்பட்டுவிடக் கூடாதென்பது தான் நமது ஆதங்கம்" என்று லஷ்மணன் சொன்ன பொழுது "இவற்றை எல்லாம் படிப்பவர் இருந்தால் தானே, அவைகளுக்கும் முக்கியத்துவம் கொடுத்து இதழ்களில் பிரசுரிப்பார்கள்?"  என்று ஒருவர் கேட்டார்.

"அதற்குத் தான் வருகிறேன்.." என்று லஷ்மணன் தொடர்ந்தான். "'செந்தாமரை' இதழில் இப்பொழுது ஏற்பட்டிருக்கும் மாறுதலைப் பார்த்திருப்பீர்கள். அந்த இதழின் இரண்டு பாரங்களை நிறைக்கும் வேலையை என்னிடம் கொடுத்திருக்கிறார்கள்.  அந்த முப்பத்திரண்டு பக்கங்கள் முழுவதும் படைப்பிலக்கியத்திற்கான பக்கங்களாக மலரப்போகிறது.  இரண்டு தொடர்கதைகள்; ஒன்று சமூகத் தொடர்கதையாகவும் மற்றொன்று சரித்திரமாகவும் இருக்கும். இரண்டு தொடர்கதைகளுக்கு ஓவியர் வரையும் படம் சேர்த்து பத்துப் பக்கங்கள் போனால் மீதி இருபத்திரண்டு பக்கங்கள். இதில் இரண்டு பக்கங்கள் கவிதைகளுக்காகவும் மீதி சிறுகதைகளுக்காகவும்.  ஒரு சிறுகதை காலஞ்சென்ற தமிழ் எழுத்தாளரின் நினைவைப் போற்றும் வகையில் அவரது அமரத்துவம் வாய்ந்த சிறுகதையாக இருக்கும். இன்னொன்று வேற்று மொழியில் வெளியான சிறந்த சிறுகதை ஒன்றின் மொழிபெயர்ப்பாக இருக்கும்.  மற்ற சிறுகதைகள் ஐந்து பக்கங்களுக்கு குறையாமல் தேர்வு செய்த கதையாக இருக்கும். அந்தந்த மாதம் வெளியாகும் சிறுகதைக்களுக்குள் சிறப்பான ஒன்றைத் தேர்வு செய்து அந்தக் கதைக்கு நட்சத்திர அந்தஸ்த்து அளித்து வழக்கமான சன்மானத்தை விட கூடுதல் சன்மானம் அளிக்க ஒப்புக்கொண்டிருக்கிறார்கள்.   'செந்தாமரை'யில் இப்படி ஒரு மாற்றம் ஏற்பட்டால், என்னவாகும் என்பது உங்களுக்குத் தெரியும்.  சென்ற இதழ் 'செந்தாமரை' கிட்டத்தட்ட முப்பதாயிரம் பிரதிகள் விற்பனை கூடியிருக்கிறது.  அதாவது இந்த முப்பதாயிரம் பிரதிகளும் வேண்டுவோர் கையில் போய்ச் சேர்ந்திருக்கின்றன. நாள்பட நாள்பட இந்த நிலவரம் இன்னும் கூடும்" என்றான்.

"சரித்திரக் கதைகளை எந்த ஆதாரத்தில் நம்புவது என்று தெரியவில்லை; அந்தக் குறை சரித்திரத் தொடரில் வராமல் பார்த்துக் கொள்ள வேண்டும்" என்றார் ஒருவர்.

"பொதுவாக சரித்திர கதைகளின் கதைப்போக்குக்கே, செப்பேடுகளையும், கல்வெட்டுகளையும், ஓலைச்சுவடிகள் போன்ற ஆவணக் குறிப்புகளையும் நடைபெற்ற போர்களையும், மெய்க்கீர்த்திகளையும், வரலாற்றுச் சம்பவங்களையும் ஆதாரமாகக் கொள்வது வழக்கம். இவற்றிற்கு மாறுபட்டு இருந்தால் அடிப்படையிலேயே அந்தக் கதை தேறாதுன்னு தெரியும்.  இது தவிர வேறு என்ன ஆதாரம் எதிர்பார்க்கிறீர்கள்?" என்றார் இன்னொருவர்.

"முழுவதும் கற்பனையாக எழுதுவது சமூக நாவல்கள் என்றால் சரித்திர சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு எழுதுவது சரித்திர நாவல்கள் என்று கொள்ளலாம்.  சமூக நாவல்களில் முழுச் சுதந்திரம்;  சரித்திர நாவல்களில் வரையறைக்கு உட்பட்ட சுதந்திரம் என்று சொல்லலாம். சரித்திர மாந்தர்களின் குணாம்சங்களை நிர்ணயிப்பதில் அறிய வந்த சரித்திர நிகழ்வுகள் ஓரளவுக்கு உதவியாக இருக்கலாம்.  அவ்வளவு தான். மற்றபடி சரித்திர நிகழ்வுகளுக்கு மாறுபாடில்லாமல் அமையும் எந்த பாத்திரப்படைப்பும் ஏற்றுக் கொள்ளத் தக்கதே.." என்றான் லஷ்மணன். "ஒன்றை கவனத்தில் கொள்ள வேண்டும்.  சரித்திர நாவல்களில் எழுத்தாளனுக்குக் கிடைக்கும் சுதந்திரம் இது ஒன்றே.  ஒரு சரித்திர நிகழ்வு நடந்ததிற்கு இது தான் காரணம் என்று வரலாற்று பூர்வமாக தெரியாத பட்சத்தில் தன் கற்பனையில் அதற்கான ஒரு காரணத்தை உருவாக்கி அதை நாவலாகப் புனைவதில் தான் எழுத்தாளனின் சாமர்த்தியமே இருக்கிறது.  இந்த அவனது சாமர்த்தியம் தான் அப்பட்டமான சரித்திரத்திற்கும் ஒரு கற்பனைப் புனைவிற்கும் இருக்கும் நூலிழை வித்தியாசம்.  அந்த வித்தியாசம் மட்டும் இல்லை என்றால், அந்த நூல் வெறும் சரித்திர நிகழ்வுகளின் கோர்வையாகப் போய்விடும்! அந்த வித்தியாசத்தில் சரித்திர நிகழ்வுகளுக்கு மாறுபடாத தன் கற்பனைச் சிறப்பைக் காட்டி வெற்றி பெறுவது தான் சரித்திர நாவலாசிரியர்களின் சிறப்பாக அமைந்து போகிறது.." என்றான் லஷ்மணன்.

"சரித்திர நாவல்களை வாசிப்பது ஒரு கனவுலகில் சஞ்சரிக்கிற மாதிரியான உணர்வை எனக்கு ஏற்படுத்துகிறது" என்றார் ஒருவர்.  "அதனால் தான் அது எனக்கு பிடிக்கறது கூட.."

"நான் தஞ்சாவூர்க்காரன் என்பது உங்களுக்குத் தெரியும். நான் தஞ்சையில் வசித்த காலத்தில் எனக்கேற்பட்ட உணர்வுகள் அலாதியானவை.  தஞ்சைக் கோட்டையை பார்க்கும் பொழுதெல்லாம், என்னன்னவோ நினைவுகளில் மனம் கிடந்து ஊஞ்சலாடும்..  இந்த கோட்டையில் நிகழ்ந்த சரித்திர நிகழ்வுகள் எல்லாம் நினைவுக்கு வந்து நெஞ்சு விம்மும்.  பழையாறையிலிருந்து வந்திருக்கும் குந்தவையை கோட்டை வாசலில் நின்று நந்தினி வரவேற்கும் ஒரு காட்சி தஞ்சைக் கோட்டையைப் பார்க்கும் பொழுதெல்லாம் நினைவில் தவறாமல் தட்டுப்பட்டுப் போகும்.  அதெல்லாம் பொன்னியின் செல்வனின் பாதிப்பு.  இன்று 'காந்தளூர் சாலை' எழுதி எனக்கேவான என்னுள் புதைந்த எத்தனையோ நினைவுகளை அசைப்போட்டுக் கொண்டிருக்கிறேன்.." என்றான் லஷ்மணன்.  "எல்லாம் நான் முன்னால் சொன்னது தான்.  இன்றைய வாழ்க்கையின் முந்தைய வரலாறு தான் அத்தனையும். முந்தைய வரலாறு என்பது நமது முன்னோர் வாழ்ந்த காலத்தின் வரலாறாகிறது.  சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் இராஜராஜசோழனின் ஆட்சி காலம்.  ஒரு நபரின் சாராசரி வயது அறுபது என்று எடுத்துக் கொண்டாலும் பதினாறு தலைமுறைகளுக்கு முன்னால் பொன்னியின் செல்வனின் ஆட்சி.   பதினாறு தலைமுறைக்கு முன்பான எனது குடும்பத்துப் பெரியவர் இராஜராஜ சோழன் காலத்து தஞ்சை வீதிகளில் வலம் வந்திருப்பார் என்கிற நினைவை என்னால் எப்படி மறக்க முடியும்?.. சொல்லுங்கள்" என்று உணர்வுப் பிழம்பாய் அவன் சொன்னதைக் கேட்ட போது உஷா தன்னை மீறி கைதட்டினாள். அவளது கையொலி கேட்டதுமே மொத்த கூட்டமும் திரும்பி அவளைப் பார்த்த பொழுது நாணத்தில் உஷாவின் தலை கவிழ்ந்தது..

"அவங்க தான் 'ஆசிரியருக்குக் கடிதங்கள்' ஷா!  தெரியுமோ!" என்று ஊர்மிளா வலதுப் பக்கக் கோடியிலிருந்து உஷாவைக் கூட்டத்திற்கு அறிமுகப்படுத்திய பொழுது,  'நல்ல வேளை. ஊர்மிளா வந்தாச்சு. ஜாதகத்தை மறக்காமல் அவளிடம் சேர்ப்பித்து விட வேண்டும்' என்று வித்யா நினைத்துக் கொண்டே, சரித்திர நாவல்களைப் பற்றி லஷ்மணன் சொன்னதை மனத்தில் வாங்கிக் கொண்டாள்..  அதன் அடிப்படையிலேயே சமூக நாவல்கள் பற்றியும் கேட்பதற்கு அவளிடம் கேள்வி இருந்தது.  இருந்தாலும் அதை இந்த அவையில் கேட்கலாமா என்கிற உணர்வு தான் அதைப் பற்றிக் கேட்காமல் அவளை அடக்கி வைத்தது.

"மூன்று நாவல்களின் சிறப்பு பற்றி மூவர் சொல்லப் போகிறார்கள்" என்று அடுத்தபடியாக ஒரு பெரியவரிடமிருந்து அறிவிப்பு வந்தது.  என்னன்ன நாவல்கள் என்றும் அவர் சொன்னார்.  "முதலில் சாண்டில்யனின் 'கடல்புறா', அடுத்து தொ.மு.சி. ரகுநாதனின் 'பஞ்சும் பசியும்', இறுதியாக நகுலனின்
'நவீனன் டைரி'.  அதற்கு முன்னால் உணவு இடைவேளை.  மண்டப உணவுக்கூடத்தில் இலை போட்டாயிற்று.. அனைவரும் உணவுக்குப் பின் இதே அரங்கில் கூடலாம். எல்லோருக்கும் நன்றி' என்று அவர் அறிவிப்பை முடித்துக் கொண்டார்.

எல்லாரும் எழுந்திருந்தனர்.  பெண்கள் கூட்டம் ஒன்று உஷா நின்றிருந்த பக்கம் வந்தது. வந்தவர்கள், உஷாவிடம் தங்களை அறிமுகப்படுத்திக் கொண்டனர். வித்யாவை உஷா அவர்களிடம் அறிமுகப்படுத்திய பொழுது, "அப்படியா.." என்று அவர்களில் செக்கச்செவேலென்று இருந்த பெண்ணொருத்தி வித்யாவை இறுகக் கட்டிக்கொண்டே விட்டாள்.

அவர்களோடு பேசியபடியே ரிஷி இருந்தப் பக்கம் நகர்ந்தாள் வித்யா. ஊர்மிளாவும் லஷ்மணனும் கூட அங்கு தான் நின்றிருந்தனர்.  ரிஷியிடம் சில இளைஞர்கள் ஆட்டோகிராப் வாங்கிக் கொண்டிருந்தனர். இவர்கள் அங்கு போன சமயத்தில் தன்னிடம் 'ஆட்டோகிராப்'பை நீட்டிய இளைஞனிடம் ரிஷி பெயர் கேட்க, அந்த இளைஞன் சேரன் என்று தன் பெயரைச் சொன்ன பொழுது அந்த இடமே கலகலத்தது.

அந்த சமயத்தில் தான் ஊர்மிளாவின் செல்லும் ரீங்கரித்தது. கைப்பையிலிரு ந்து அவசர கதியில் செல்லை எடுத்த ஊர்மிளா, மறுபக்க குரல் கேட்டு, "சொல்லு, வேணி..." என்று சொல்லிக் கொண்டே அந்த இடத்தில் எழுந்த இரைச்சலைத் தவிர்க்க நகர்ந்தாள்.

'வேணி! எப்போதோ கேள்விப்பட்ட பெயராக இருக்கிறதே' என்று நினைத்துக் கொண்டே ஊர்மிளாவிடம் ஜாதகத்தைக் கொடுக்க வித்யா தோள் பையின் ஜிப்பைத் திறந்தாள்.


(இன்னும் வரும்)





























18 comments:

ஸ்ரீராம். said...

-சிறுகதை, கவிதை, பிறமொழிச் சிறுகதை.... மணிக்கொடிகாலத்தில் பி எஸ் ஆர் செய்த மாற்றம் போலும் மாற்றம் செந்தாமரையில்! கூடவே கல்கி அதே காலகட்டத்தில் விகடனில் தந்த சன்மானம் போலவும்! இரண்டும் ஒரே இடத்தில்.... அதான் அவரே சொல்றாரே...முந்தைய தலைமுறை விட்டுச் சென்ற பாதையில்தான், அதை ஒட்டித்தான் நம் பாதையை அமைக்கிறோம் என்று...!

-இது மாதிரி நடந்திருக்கலாம் என்ற கற்பனையில் எழுதும் சரித்திரக் கற்பனையில் அந்தக் கால கட்டத்தின் மன இயல்பும் சம்பவங்களை ஒட்டி அந்தக் கற்பனைப் பாத்திரத்தை அமைக்க வேண்டும். தற்போது மலையாளத்திலும் தமிழிலும் வந்துள்ள உறுமி படம் இவ்வகை என்று அதன் டைரக்டர் சந்தோஷ் சிவன் சொல்லியிருப்பதைப் படித்தேன்!

-சரித்திர நாவலை ஒட்டி சமூகக் கதை.... படித்துக் கொண்டு வந்த போது எனக்குத் தோன்றியதேதான் வித்யாவுக்கும் தோன்றியதா....

-சொல்லப் பட்டிருக்கும் மூன்றில் முதல் மட்டும்தான் படித்திருக்கிறேன்!

-ஓ... சேரன் இங்கு வந்தாச்சா...!!! :))

Geetha Sambasivam said...

//நாதஸ்வரம் என்னும் வாத்யத்தையே எடுத்துக் கொள்ளுங்களேன். இப்பொழுதெல்லாம் கோயில்களிலும், திருமணம் போன்ற குடும்ப விழாக்களிலும் தான் நாதஸ்வர இசையையே அனுபவிக்க முடிகிறது. காலப்போக்கில் இங்கெல்லாம் கூட இதற்கு இடமில்லை என்கிற நிலமை ஏற்படுகிறது என்று வைத்துக் கொள்ளுங்கள், பிற்பாடு நாதஸ்வரம் என்றால் என்னவென்றே வரும் தலைமுறைக்குத் தெரியாமல் போய் விடும்.//

மந்திராலயம் சென்று கொண்டிருந்த நாதஸ்வரக் கலைஞர்களிடம் பேசியபோது அவர்கள் சொன்னது இன்னமும் மனதில் இருக்கிறது. கிராமங்களே இப்போது காலியாக இருக்கின்றன. கிராமத்துக் கோயில்கள் கவனிப்பாரின்றி இருக்கின்றன. ஒரு காலத்தில் இவற்றை எடுத்து நடத்தியவர்கள் இன்று நாட்டிலேயே இல்லை. பெரும்பாலானவர்கள் வட மாநிலங்கள், வெளிநாடு என்று போயாச்சு! ஆதரிப்பவர் யார்? :(((((((


//ஒன்றை கவனத்தில் கொள்ள வேண்டும். சரித்திர நாவல்களில் எழுத்தாளனுக்குக் கிடைக்கும் சுதந்திரம் இது ஒன்றே. ஒரு சரித்திர நிகழ்வு நடந்ததிற்கு இது தான் காரணம் என்று வரலாற்று பூர்வமாக தெரியாத பட்சத்தில் தன் கற்பனையில் அதற்கான ஒரு காரணத்தை உருவாக்கி அதை நாவலாகப் புனைவதில் தான் எழுத்தாளனின் சாமர்த்தியமே இருக்கிறது. இந்த அவனது சாமர்த்தியம் தான் அப்பட்டமான சரித்திரத்திற்கும் ஒரு கற்பனைப் புனைவிற்கும் இருக்கும் நூலிழை வித்தியாசம். //

பல்வேறு கோணங்களிலும் அலசி ஆராய்ந்து பொறுமையாக எழுதி வருகிறீர்கள். சரித்திர நாவல் குறித்துச் சொல்வது சரியே. இதிலே வெற்றி பெற்றவர்களும் உண்டு; தோல்வி அடைந்தவர்களும் உண்டு. சுஜாதா, பாலகுமாரன் போன்றவர்கள் எழுதும் சரித்திர நாவல்களைப் படிக்க எனக்குப் பொறுமை இல்லை; அதே சமயம் கல்கி, சாண்டில்யன், ஜெகசிற்பியன், அகிலன் போன்றோரின் சரித்திர நாவல்களில் ஜீவன் ததும்பும். சாண்டில்யனின் தேவையற்ற வர்ணனைகளை ஒதுக்கிவிட்டுப் படிக்க வேண்டும். :)))))


//பதினாறு தலைமுறைக்கு முன்பான எனது குடும்பத்துப் பெரியவர் இராஜராஜ சோழன் காலத்து தஞ்சை வீதிகளில் வலம் வந்திருப்பார் என்கிற நினைவை என்னால் எப்படி மறக்க முடியும்?.. சொல்லுங்கள்"//

மதுரைத் தெருக்களில் நடக்கையில் எனக்குப் பலமுறை இந்த உணர்வு தோன்றி இருந்திருக்கிறது.

இராஜராஜேஸ்வரி said...

'வருங்காலமே வருக!' நல்லா இருக்கு .ஆரம்பமே அமர்க்களம். !

அப்பாதுரை said...

எழுத்துப் பாதையின் விரிவு அருமையான கருத்து.
நம்ப முடியாத சரித்திரக் கதைகளுக்குப் பெயர் புராணம். :)

////பதினாறு தலைமுறைக்கு முன்பான எனது குடும்பத்துப் பெரியவர்..
எனக்கும் இந்த உணர்வுகள் சில சமயம் தோன்றுவதுண்டு..

G.M Balasubramaniam said...

முழுவதும் கற்பனையில் எழுதினால் ஜீவன் இருக்குமா.? நிஜங்களின் அடிப்படையில் நிகழ்வுகளை அமைத்து கற்பனைத் தேனில் குழைத்து எழுதினால்தான் சுவை இருக்கும். இல்லாவிட்டால் இடங்களை நிரப்ப உப்யோகிக்கப் படும் வார்த்தைகளின் கோர்வையாகவே இருக்கும்.அதனால்தானோ என்னவோ பலருக்கு சரித்திரக் கதைகளில் மனம் ஒப்புவதில்லை.

அப்பாதுரை said...

ஜிஎம்பி சொல்லியிருப்பது அருமையான கருத்து.

அப்பாதுரை said...

அந்தக் கோவில்களை எடுத்து நடத்துவதால் என்ன பயன் கீதா சாம்பசிவம். அதற்கு பதில் அந்த நிலத்தையும் இடத்தையும் அனாதை இல்லம், முதியோர் இல்லம், பள்ளிகூடம் என்று உருப்படியாக ஏதாவது செய்யலாமே?

அப்பாதுரை said...

உங்க பதிவுல ஒரு பின்னூட்டம் எழுதினா ஊர் முழுக்க அனுப்புறீங்களே, நியாயமா? :-)

ஜீவி said...

பிறமொழிக் கதை மொழிபெயர்ப்பைப் பொறுத்த மட்டில் தி.ஜ.ர. ஆசிரியராய் இருந்த தமிழகத்து ரீடர்ஸ் டைஜஸ்ட் 'மஞ்சரி' நினைவில் நின்றது.

உங்களது 'ஆதித்த கரிகாலனைக் கொன்றது யார்?' பதிவில், 'முதலில்
மனத்தில் ஏற்பட்ட பிம்பங்களை எந்த ஆதாரத்தின் பேரில் நம்பினோம்?' என்று என்னிடம் கேட்டிருப்பீர்கள்.
அதற்கான பதில் தான், இந்தப் பதிவில்--

"சரித்திரக் கதைகளை எந்த ஆதாரத்தில் நம்புவது என்று தெரியவில்லை; அந்தக் குறை சரித்திரத் தொடரில் வராமல் பார்த்துக் கொள்ள வேண்டும்" என்றார் ஒருவர்.

- என்று கேள்வியாகக் கேட்கப்பட்டு அதற்கான பதில் தொடர்கிறது.

'கல்கி'யின் ஆழ்வார்க்கடியான்,
சேந்தன் அமுதன், குடந்தை ஜோதிடர், பூங்குழலி, மந்தாகினியின் பாத்திரப் படைப்புகள்,மற்றும் செம்பியன் மாதேவியின், கண்டராதித்த சோழனின் ஆலயத் திருப்பணிகள் என்று பலவற்றைச் சொல்லலாம்.

முடிந்தால், 'சங்கதாரா'வின் பாத்திரப் படைப்புகள், 'பொ.செ'- விலிருந்து எப்படிவிலகியிருக்கின்றன என்பது பற்றி நீங்கள் ஒரு பதிவு போடலாம்.

வித்யாவின் சமூகக்கதைகள் பற்றிய
பார்வை வரும் அத்தியாயங்களில் விரியும் பொழுது நீங்களும் அப்படி நினைத்தீர்களா என்று சரிபார்த்துக் கொள்ளுங்கள்.

ஆமாம், உங்களின் 'நியாயமா?' சிறுகதையில் சேரன்-செங்குட்டுவனை அண்ணன்-தம்பி ஆக்கியது நினைவில் நின்று சேரன் வந்தார். சேரன் வந்ததால், ஆட்டோகிராப்பும் வந்தது.

தொடர் வருகைக்கு நன்றி, ஸ்ரீராம்!

ஜீவி said...

@ கீதா சாம்பசிவம்

ஒரு காலத்தில் இருந்து இன்றில்லாத எத்தனையோ. கோயில் சிற்பங்களில் காணப்படும் யாளி பற்றி எனக்கு பெரியதொரு கற்பனையே உண்டு.
அன்னம் - தமயந்தியை நினைத்தாலே நினைவுக்கு வரும் அந்த அன்னம்?.. சமீபகாலங்களில்
குதிரைகளைப் பற்றி கவலை ஏற்பட்டிருக்கிறது.

ஒன்று தெரிகிறது. புழக்கத்தில் இல்லை என்றால் நாளாவட்டத்தில் மறைந்து விடுகிறது. சிலப்பதிகாரத்தில் காணப்படும் இசைக்கருவிகள், இசைக்கலைஞர் களின் இலட்சணங்கள், இசை அமைதி இதையெல்லாம் இன்று நினைத்துப் பார்த்தால் நீண்ட மெளனத்தில் ஆழ்ந்து விட வேண்டியது தான். யாழ்.. அந்த மகர யாழ்.. உங்களுக்கு அதுபற்றி விவரம் ஏதாவது தெரிந்தால்சொல்லுங்களேன்

காளிதாசனின் வர்ணனைகளை ஒதுக்கி வைத்து விட்டு சாகுந்தலத்தைப் படிக்க முடியுமோ?.. அப்படித்தான் சாண்டில்யனும். அவரின் போர் வியூக விவரிப்புகள் மற்றவர்களிடம் காணக்கிடைக்காதது.

உங்கள் மதுரை நினைவுகளைச் சொல்லி வழிமொழிந்தமைக்கு நன்றி.
அப்பாஜிக்கும் அப்படித்தானாம்.

தொடர்வதற்கு நன்றி, கீதாம்மா.

ஜீவி said...

@ இராஜராஜேஸ்வரி

இந்தப் பதிவு எழுதிய நாளில் இங்கு டி.வி.யில் 'Welcome Future' என்று ஒரு வரி பார்த்த மகிழ்வில் அந்த 'வருங்காலமே வருக'..

தொடர்ந்து வாசித்து வருவதற்கு நன்றி, ராஜி மேடம்.

ஜீவி said...

@ அப்பாதுரை


//நம்ப முடியாத சரித்திரக் கதைகளுக்குப் பெயர் புராணம். :) //

சட்டென்று உங்கள் நகை உணர்வு மனத்தில் பதிந்தது புன்முறுவலாக வெளிப்பட்டது. :))

நாட்பட நாட்பட ஒரு காலத்தில் நம்பியதெல்லாம், நம்ப முடியாமல் போவது இயல்பு தானே! அப்படி இல்லை என்றால், அவை புராணம் என்கிற பெயரைக் கூட இழந்து விடும். புராணம் என்கிற பெயர் கூட தொன்மம் என்றாகி விட்டது.

நம்பமுடியாத பலவற்றின் இடுக்கில்
எத்தனையோ நம்ப முடிந்ததான -- இன்றைய வளர்ச்சியின் ஆதிகால உருவாகத் தெரிபவை எத்தனையோ!
(உ.ம்) இராவணனின் உபயோகத்தி லிருந்த அந்த வானூர்தி!(புஷ்பக விமானம்?) அப்படியான ஒரு விமானம் இருந்ததா என்கிற கேள்வியை விட அப்படி ஒரு கற்பனை இருந்ததே நம்மைக் கவர்வதற்கு போதுமானதாக இருக்கிறதே!

அந்தப் பதினாறு தலைமுறை முன்னான பெரியவர் .. ஆமாம், இன்னும் பத்து தலைமுறைக்கு அப்புறம், 'இராஜராஜப் புராணம்' என்று காவியம் படைக்கப்பட்டாலும்
ஆச்சரியப்படுவதற்கில்லை! நம்ப முடியாதவைகளுக்குப் பின்னான நம்ப முடிந்தவை பிற்கால நம்ப முடியாதவைகளுக்கான காத்திருப்பு பட்டியலில் இருக்கின்றன போலும்!

//எனக்கும் இந்த உணர்வுகள் சில சமயம் தோன்றுவதுண்டு..//

இரயிலில் பயணிக்கும் பொழுது நம்மைப் போலவேயான சகப் பயணியைக் கண்ட களிப்பு எனக்கு!

தொடர்ந்த வருகைக்கு நன்றி, அப்பாஜி!

அப்பாதுரை said...

//கேள்வியை விட அப்படி ஒரு கற்பனை இருந்ததே நம்மைக் கவர்வதற்கு போதுமானதாக இருக்கிறதே!
outstanding! புராணங்கள் காலத்தை வெல்ல இதான் காரணம். வால்மீகி வியாசர் போன்றவர்களின் vision என்னைக் கட்டிப் போட்டதை விவரிக்கவே முடியாது. அவர்களின் அற்புதமான கற்பனை "கடவுள்தனத்தில்" தொலைந்தது துரதிர்ஷ்டம், in my view.
இந்த topic எனக்கு ரொம்பப் பிடிச்ச discussion. எழுதி மாளாது ஜீவி சார்.

ஜீவி said...

@ G.M. Balasubramanian

//நிஜங்களின் அடிப்படையில் நிகழ்வுகளை அமைத்து கற்பனைத் தேனில் குழைத்து எழுதினால் தான் சுவை இருக்கும். இல்லாவிட்டால்..//

உங்கள் கருத்து தான் எனக்கும். அதைத் தான் இப்படி எழுதியிருக்கிறேன்:

மற்றபடி சரித்திர நிகழ்வுகளுக்கு மாறுபாடில்லாமல் அமையும் எந்த பாத்திரப்படைப்பும் ஏற்றுக் கொள்ளத் தக்கதே.." என்றான் லஷ்மணன். "ஒன்றை கவனத்தில் கொள்ள வேண்டும். சரித்திர நாவல்களில் எழுத்தாளனுக்குக் கிடைக்கும் சுதந்திரம் இது ஒன்றே. ஒரு சரித்திர நிகழ்வு நடந்ததிற்கு இது தான் காரணம் என்று வரலாற்று பூர்வமாக தெரியாத பட்சத்தில் தன் கற்பனையில் அதற்கான ஒரு காரணத்தை உருவாக்கி அதை நாவலாகப் புனைவதில் தான் எழுத்தாளனின் சாமர்த்தியமே இருக்கிறது. இந்த அவனது சாமர்த்தியம் தான் அப்பட்டமான சரித்திரத்திற்கும் ஒரு கற்பனைப் புனைவிற்கும் இருக்கும் நூலிழை வித்தியாசம். அந்த வித்தியாசம் மட்டும் இல்லை என்றால், அந்த நூல் வெறும் சரித்திர நிகழ்வுகளின் கோர்வையாகப் போய்விடும்! அந்த வித்தியாசத்தில் சரித்திர நிகழ்வுகளுக்கு மாறுபடாத தன் கற்பனைச் சிறப்பைக் காட்டி வெற்றி பெறுவது தான் சரித்திர நாவலாசிரியர்களின் சிறப்பாக அமைந்து போகிறது.." என்றான் லஷ்மணன்.

ஜீவி said...

@ அப்பாதுரை

// உங்க பதிவில் ... //

தெரியாமல் அவசரத்தில் செய்த பிழை தான். நியாமில்லை தான். ஆனால் பிழையும் நன்மை பயத்தது என்றாகிப் போனது தான் ஆச்சரியம். இந்தப் பின்னூட்டங்களுக்குள் இதுவும் ஒரு பின்னூட்டமாய் புதைந்து போய் விடாமல், தொடர்ந்த சில செயல்களுக்கு வழியமைப்பதாய் அது ஆகிவிட்டது தான் ஆச்சரியம். இந்தக் கதையின் தொடர்ச்சிக்கான
கருத்தாக நான் கொண்டிருந்த எண்ணங்களுக்கு இது வலு சேர்த்திருக்கிறது.

ஸ்ரீராம் மிகச் சரியாகக் கண்டுபிடித்து விட்டாரே! பார்த்தீர்களா?..

அப்பாதுரை said...

i was just kidding sir.

பாச மலர் / Paasa Malar said...

மீண்டும் ஒரு மனநிறைவான பகுதி இந்தக் கதையில்....நிறைய விஷயங்கள் பேசியிருக்கிறீர்கள்....எல்லா வகைக் கதைகளின் அலசல்கள்....மீண்டும் உளவியல் பார்வை...

அதிலும் சரித்திரக் கதைகள் படிக்கும்போது ஏற்படுகிற உணர்வு உலகளாவியது போலும்...

கீதா சொல்வதை வழிமொழிகிறேன்....மதுரை வீதிகளிலும் தஞ்சைப் பெரிய கோவிலிலும் நானும் இதை உணர்ந்திருக்கிறேன்...

கோமதி அரசு said...

'வேணி! எப்போதோ கேள்விப்பட்ட பெயராக இருக்கிறதே' என்று நினைத்துக் கொண்டே ஊர்மிளாவிடம் ஜாதகத்தைக் கொடுக்க வித்யா தோள் பையின் ஜிப்பைத் திறந்தாள்.//

வேணியின் அக்காவிற்கு நாராயணன் ஜாதகம் தருகிறார்கள் வித்யா என நினைக்கிறேன்.

Related Posts with Thumbnails