மின் நூல்

Tuesday, October 21, 2014

மறக்க முடியாத சில குறுங்கவிதைகள்


ரபுக் கவிதைகள் வலம் வந்த காலத்தில் தான் புத்தம் புது முயற்சிகளாய் ஏழெட்டு வரிகளில் அடங்கியதாய் உத்தியை முதன்மையாக் கொண்டு எழுதப்பட்ட கவிதை சாயலுள்ள வார்த்தைக் கோர்வைகள் கவிதைளாய் தோற்றம்  கொண்டன.

அமெரிக்கக் கவிஞர் வால்ட் விட்மனின் 'புல்லின் இலைகள்' என்னும் கவிதைத் தொகுப்பின் பாதிப்பில் பல மொழிகளில் இம்மாதிரியான வசனக் கவிதைகளின் தாக்கம் துளிர் விட்டன.  மஹாகவி பாரதியாரும் வால்ட் விட்மனின் இந்த வசனக் கவிதைகளைப் (free verse poems)  பற்றி  தமது கட்டுரை ஒன்றில் குறிப்பிட்டிருக்கிறார்.  தமிழ்க் கவிதை உலகிற்கு இவ்வகையான வசனக் கவிதை புதுவரவாகையால் அந்த நேரத்து அவை புதுக்கவிதைகள் என்று அழைக்கப்பட்டன.    கவிதைகள் யாப்பது என்பது பண்டிதர்களின் வசமாய் இருந்த காலத்தில் அவர்களிடமிருந்து பறிக்கப் பட்ட ஒரு செயலே போன்று தமிழில் ஓரளவு தேர்ச்சி பெற்றோர் எல்லாம் கவிதை எழுதலாம் என்கிற ஒரு அங்கீகாரத்தைப் பெற்றுத் தந்தமையால் வெகு எளிதில் தன் வளர்ச்சியைத் தானே நிர்ணயித்து கொண்ட மாதிரி  இப் புதுகவிதைகள் இயல்பாகவே வெகுஜன பிரபலம்  கொண்டன.  தமிழ் படித்த எல்லோருமே இப்படியான கவிதைகள் எழுத ஆசைப்பட்ட காலம் அது.

சி.சு. செல்லப்பா தனது 'எழுத்து' பத்திரிகையில் புதுக்கவிதைகளுக்கு ஆக்கமும் ஊக்கமும் தந்ததோடு மட்டுமல்லாது, 'புதுக்குரல்கள்' என்று ஒரு தொகுப்பை வெளியிட்டு புத்தக மூட்டைகளை சொந்தத் தோளில் சுமந்து பள்ளிகள், கல்லூரிகள் என்று அலைந்து அவற்றைக் கல்விச்சாலைகளில் அறிமுகப்படுத்தியவர்.  புதுக்கவிதைகளுக்கென்று  முதன் முதல் வெளிவந்த தொகுப்பு நூல் செல்லப்பாவின் 'புதுக்குரல்கள்' தொகுப்பு தான். தமிழில் புதுக்கவிதைக்கு மணிக்கொடிக் காலம், எழுத்துக் காலம், வானம்பாடிக் காலம் என்று அந்தந்த காலத்தை ஒட்டிய வளர்ச்சிப் போக்கு உண்டு.   'கசடதபற',  'தீபம்', 'சரஸ்வதி'. 'ழ', 'கலாமோகினி', 'கணையாழி', 'ஞானரதம்', 'நடை', 'தாமரை','கிராம ஊழியன்',
'ஐ',  'சூறாவளி' போன்ற இதழ்கள் புதுகவிதைகளின் வளர்ச்சிக்கு சிறப்பான பங்களித்திருக்கின்றன.


கலை சம்பந்தப்பட்ட ஒவ்வொரு காலகட்ட இயக்கமும் தனக்கு முற்பட்ட காலத்தின் இயக்க ரீதியான வழக்கு முறைக்கு எதிர் வினையாகத் தோற்றம் கொடுப்பதை மாற்றத்தின் செயலாக அந்தந்த இயக்கத் தொடர்ச்சியின் ஊடாக வழிநெடுக நாம் பார்க்கலாம்.  இந்த மாற்றத்தை  ஒரு காலத்து செயல்பாட்டிலிருந்து இன்னொரு காலக்கட்ட வளர்ச்சிக்கு முன்னெடுத்துச் செல்வதாகக் கொள்ளலாம்.  இதையே 'கடந்து  செல்வதாக' சிலர் சொல்லவும் கேட்டிருக்கிறேன்.  ஒரு காலத்தின்   வழக்கு முறைகளைக் கடக்கும் இந்தக்கடத்தல் தவிர்க்கமுடியாத ஒன்றாக ஒவ்வொரு இயக்கப் போக்கிலும் தன்னாலே நிகழ்கிறது.

இதற்கு தனிநபர்கள்  காரணமல்ல.  காலத்தின் மாற்றங்களில் அதற்கேற்பவான வழிமுறைகளும் மாற்றம் கொண்டு அந்தகைய மாற்றங்ளுக்கு உபயோகப்படுவர்களை உபயோகப்படுத்திக் கொள்கிறது என்றே நாம் கொள்ளுதல் தகும்.


தமிழில் புதுக்கவிதைக்கு பாரதி தான்  முன்னோடியாக அமைந்தார் என்றாலும் அவருக்குப் பிறகு புதுக்கவிதையுலகை வார்த்தெடுத்த பெருமை

பிச்சமூர்த்தி  அவர்களுக்குப் போய்ச் சேர்ந்தது.  சி.சு. செல்லப்பாவின் 'எழுத்து' பத்திரிகை, பிற்காலத்தில் கோவையில் நிலைகொண்ட  'வானம்பாடி' இயக்கம் என்று ஒவ்வொரு காலகட்டத்திலும் அதன் வளர்ச்சிக்கேற்ப சீராட்டல்கள் நடந்திருக்கின்றன. இன்றைய காலகட்டத்திலும் கவிதை எனப்படுவதும் இதுவே என்கிற செல்வாக்கும் கிடைத்திருப்பதைக் குறிப்பிட்டே ஆக வேண்டும்.

இந்த சூழ்நிலையில் என் நினைவுகளில் மறக்கவே முடியாமல் பதிந்து போய் விட்ட சில கவிதைகளை பகிர்ந்து கொள்ள ஆசைப்பட்டதின் விளைவு இப்படி ஒரு பதிவாக மலர்ந்திருக்கிறது.



ஆனை வந்தது முதலில்
அப்புறம் கலைந்து போனது
குதிரை மீதில் ஒருவன்
கொஞ்ச நேரம் போனான்                                  
பாட்டன்  புரண்டு மல்லாந்தான்
பாளை வெடிச்சு மரமாச்சு
அலையாய் சுருண்டது கொஞ்சம்
மணலாய் இறைந்தது கொஞ்சம்
கணத்தில் மாறிடும் மேகம்
உண்மையில் எது உன் ரூபம்?

                                                                -- மாலன்
                                                                                              


ராமச்சந்திரனா என்று கேட்டேன்
ராமச்சந்திரன் தான் என்றார்
எந்த ராமச்சந்திரன் என்று
நானும் கேட்கவில்லை
அவரும் சொல்லவில்லை.

                                                          -- நகுலன்




திண்ணை இருட்டில் எவரோ கேட்டார்
தலையை எங்கே வைப்பதாம் என்று
எவனோ சொன்னான்
களவு போகாமல் கையருகே வை

                                                           --  ஞானக்கூத்தன்



எங்கிருந்து வருகிறது
இந்த நதி?
    மலைகளின்
   மெளனம் உடைந்தா?
முகில்களின்
ஆடை கிழிந்தா?
வ்னங்கள் பேசிய
இரகசியங்கள் கசிந்தா?

என்னிலிருந்து

என் அந்தரங்களின்
ஊற்றுக் கண் திறந்து
என் மார்புகள்
புல்லரித்து
என் இரத்த குழாய்களில்
புல்லும் பூவும் மணந்து
என்னை முழுக்காட்டி
என்னையே கரைத்துக் கொண்டு
அங்கிருந்து வருகிறது
இந்த நதி

                                                                         -  சிற்பி



இலக்கண செங்கோல்
யாப்பு சிம்மாசனம்
எதுகைப் பல்லக்கு
மோனைத் தேர்கள்
தனிமொழிச் சேனை
பண்டித பவனி
இவையெதுவும் இல்லாத
கருத்துக்கள் தம்மைத் தாமே
ஆளக் கற்றுக்கொண்ட
புதிய மக்களாட்சி முறையே
புதுக்கவிதை

                                              -- மு. மேத்தா




முட்டி முட்டி பால்குடிக்கின்றன
நீளக் குழல் விளக்கில்
விட்டில் பூச்சிகள்

                                                         -- பாலா

மழைக்குப் பயந்து
அறைக்குள் ஆட்டம் போட்டன
துவைத்த துணிகள்

                                        -- பாலகுமாரன்





பின்னாலும் போகவில்லை
முன்னாலும் போகவில்லை
நடுக்கிணற்றில் நிகழ்காலம்

                                                          
                                                                                                                              
யாப்புடைத்த கவிதை
அணையுடைத்த காவிரி

                                                              --  சி. மணி




(பிறிதொரு போழ்து இன்னும் நிறைய பகிர்ந்து  கொள்ளலாம்..)



அன்பர்கள் அனைவருக்கும் தீபாவளி வாழ்த்துக்கள்!




44 comments:

கவிஞர்.த.ரூபன் said...

வணக்கம்
சிறப்பான தொகுப்பு பகிர்வுக்கு நன்றி

தங்களுக்கும் தங்கள் குடும்பத்தார் அனைவருக்கும் இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள்

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

ஸ்ரீராம். said...

அட, நீண்ட நாட்களுக்குப் பிறகு வனத்தில் ஒரு பூ! அதுவும் புதுக் கவிதைப் பூ! எங்கிருந்து தொடங்கியது என்ற வரலாறை இழுத்து வந்து மாதிரிக்குச் சில கவிதைகளும்!

நீளமான கவிதை எழுத கதை எழுதுவது போன்ற ஒரு கற்பனை, ஒரு கரு தேவைப் படுகிறது. அது சிக்கி விட்டால் வார்த்தைகள் வசப்பட வேண்டும்! எனக்கெல்லாம் கிடைத்த வார்த்தைகளை மடக்கிப் போட்டு கவிதை என்று சொல்லி வழக்கம்!

மு. மேத்தாவின் கவிதையில் 'கண்ணீர்ப் பூக்கள்' தொகுப்பு படித்திருக்கிறேன்.

"விழிகள் நட்சத்திரங்களை
வருடினாலும்
விரல்கள் என்னவோ
ஜன்னல் கம்பிகளோடுதான்"

வரிகளும்,

"வாசிக்கத் தெரிந்த
கரங்களுக்குத்தான்
ராகம் பிடிபடுகிறது.
நேசிக்கத் தெரிந்த
இதயங்களுக்குத்தான்
காதல் புரிகிறது
உனக்கெங்கே புரியப்போகிறது"

வரிகளும் (இரண்டாவதில் வரிகள் நினைவுக்கு வருவதில் சற்றுத் தடுமாற்றம்)

வருடங்கள் தாண்டியும் நினைவில் நிற்பவை.

அதே போல,
சுஜாதா எழுதிய, அல்லது ரசித்த "லிஃப்டில் ஒரு பெண் காதலிப்பதா கற்பழிப்பதா என்று முடிவு செய்வதற்குள் மூன்றாவது மாடி வந்து விட்டது" (கடைசி வரி சரியாக நினைவில்லை)

போன்ற வரிகளும் நினைவில் நிற்கின்றன.

இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்.

இராஜராஜேஸ்வரி said...

இனிய தீபாவளி வாழ்த்துகள்..


குறுங்கவிதைகள் அனைத்தும் ரசிக்கவைத்தன..

புத்தம் புது வெள்ளமாய் பாய்ந்த வார்த்தைகள் - சிறகணிந்தாற்போல்
பிரமிப்பூட்டுகின்றன..!

வை.கோபாலகிருஷ்ணன் said...

மேகத்தின் உருவத்தைப்பற்றி
மாலன் சொல்லியுள்ளது அழகு

அட ராமச்சந்திரா !
நகுலனுடையது நகைச்சுவையாக இருக்கிறது.

கையருகே வைக்காவிட்டால் தலையும் களவு போகுமோ?
ஞானக்கூத்தனே ஞானத்துடன் எச்சரித்துவிட்டார். :)

நதி மூலம் பற்றி சிற்பி
சொல்வதும் சுவாரஸ்யமே.

புதுக்கவிதை பற்றி மு.மேத்தா சூப்பர் ! :)
[மக்களாட்சியே தான், சந்தேகமே இல்லாமல்]

பாலா, பாலகுமரன் + சி. மணி மூவரும்
சிம்பிளாக சிறப்பாகவே எழுதியுள்ளனர்.

அனைத்தையும் தொகுத்துக்கொடுத்தது அழகு.
தங்களுக்கு என் நன்றிகள், சார்.

அன்புடன் கோபு

கரந்தை ஜெயக்குமார் said...

தங்களுக்கும் தங்களின் குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள்

ஜீவி said...

வணக்கம், ரூபன்.

தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி.

தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் அன்பான தீபாவளி வாழ்த்துக்கள்.

ஜீவி said...

ஸ்ரீராம்!

உண்மையாகச் சொல்லப்போனால்
'எங்கள் பிலாக்' தான், இந்தப் பதிவுக்குக்கே காரணம்.

நீங்கள் அடிக்கடி மேயும் லிஸ்ட்டைப் பார்த்ததில் கட்டகடைசிக்கு ஒருத்தர் முன்னாடியாய் நான் இருப்பதைப் பார்த்தேன். அப்பாடி! ஒரு வருடம் ஓடிப் போனதே தெரியாவிட்டாலும்
பதிவு போடாமல் ஒரு வருடமா
ஆகிவிட்டது என்று திகைப்பாய் இருந்தது. இனியும் தாமதித்தால்
லிஸ்டிலேயே காணாமல் போய்விடுமோ என்று அவசர அவசரமாய் குறுங்கவிதைகள் சமாசாரம் பதிவாயிற்று..

வை.கோ.சாரும் இப்பத்தான் லேசா பிடியைத் தளர்த்தியிருக்கார். விட்ட இடத்திற்கு வந்தாச்சு; இனிமே தொடர்ந்து சம்பாஷிக்கலாம்.

அனைவருக்கும் அன்பான தீபாவளி வாழ்த்துக்கள்.

ஜீவி said...

//சுஜாதா எழுதிய, அல்லது ரசித்த//


சுஜாதா எழுதியதாகவே இருந்தாலும் இதெல்லாம் அவர் லாண்டிரி கணக்கு வரிசையில் சேரட்டும். எழுதியவரின் பெயர்ப் பெருமையில் எதையெல்லாமோ வாசிக்க நேர்ந்தாலும் இதையெல்லாம் ரசித்ததாகச் சொல்வதற்கே நெளிய வேண்டியிருக்குமே!

அசோகமித்திரன் பற்றிய ஒரு பதிவில், சமீபத்தில் ஜெயமோகன் சொன்னது நினைவுக்கு வருகிறது.

'இளம் எழுத்தாளர்களின் சிக்கல்கள் பெரிது. முக்கியமானது தன் இடம் ஏது என்ற வினா. அவர்கள் முன்னத்திய எழுத்தாளர்களை நிராகரித்தே ஆகவேண்டும். அது இருவகையில். ஒன்று அவர்களைக் கடந்துசெல்வது. அவர்களை வாசித்து விமர்சித்து ஆராய்ந்து அவர்களின் போதாமைகளை உணர்ந்து அந்த இடைவெளி வழியாக மேலே செல்வது. அதுதான் ஆற்றல் உள்ளவர்களின் வழி. இன்னொன்று தானே கண்ணைமூடிக்கொண்டு இல்லை என்று கற்பனை செய்வது'-

நிராகரிப்பது என்பது என்னைப் பொருத்தமட்டில் உடன்பாடு இல்லாவிட்டாலும்'கடந்து செல்லும்' யுக்தியை வரவேற்கிறேன்.

சுஜாதா என்றில்லை, எப்படிப்பட்ட க்யாதி பெற்றவர்களிடமும் மானசீகமாக கைகுலுக்கி உடன்பாடில்லாத விஷயங்களில் கடந்து செல்ல வேண்டியது தான்...

ஜீவி said...

வாங்க, இராஜி மேடம்,

குறுங்கவிதைகளில் பகிர்ந்து ரசிக்க வேண்டிய பட்டியல் நீண்டதாக
இன்னும் உள்ளது. இப்போதைக்கு இதுவே தவிர அவ்வப்போது இதைச் செய்யலாம்.

தங்கள் வருகைக்கு நன்றி. அன்பான தீபாவளி வாழ்த்துக்கள்.

ஜீவி said...

வாங்கோ, வை.கோ. சார்!

'ராமசந்திரனா என்று கேட்ட' கவிதை ரொம்பவும் விஷய கனம் கொண்டது. பல பல கோணங்களில் பலதை அர்த்தமாகக் கொள்ள வேண்டிய கவிதை. நகுலன் (டி.கே.துரைசாமி)யை நினைத்தாலே பலருக்கு அவரது இந்த கவிதை தான் நினைவுக்கு வரும்.

ஒருவன் பூண்டிருக்கும் பெயருக்கும்
அவனுக்கும் ஆன உறவு பற்றியதானது இந்தக் கவிதை.

ஒவ்வொருவருக்கும் அவரது பெயர் தான் அவர்களைப் பிரதிநிதித்துவப் படுத்துகிறது.

அதுவே ஒரு கூட்டத்தில் 'கோபாலகிருஷ்ணன், சார்!' என்று கூப்பிட்டால், எத்தனை கோபால கிருஷ்ணன்கள் திரும்பிப் பார்ப்பார்கள்!

எல்லா கோபாலகிருஷ்ணன்களும்
ஒரே மாதிரி இல்லை அல்லவா? குணம்,மனம்,அறிவு,உடல்வாகு
என்று பலவிதங்களில் மாறுபட்டு இருப்பார்கள், இல்லையா?

ஆனால் இவர்கள் எல்லோருக்கும் கோபாலகிருஷ்ணன் என்று ஒரே பெயர் தான்.

ஒரு பெயர் ஒருவரின் குணாம்சமாகி
எப்படி அவருக்கு மட்டுமே என்றாகி
சரித்தரமாகிறது என்பது யோசித்துப் பார்த்தால் வியப்பாய் இருக்கும்.

காந்தி என்கிற பெயரை இந்த கோணத்தில் யோசித்துப்பாருங்கள்.
காந்தி கூட வேண்டாம். மஹாத்மா
என்கிற ஒரு சொல் போதும்.

பல நேரங்களில் பெயர் மனிதனை வென்று விடும். சில நேரங்களில் தான் பெயரை மனிதன் வெல்வான்!

ஒரு மனிதன் அவனுக்கு வைக்கப் பட்ட பெயர் மட்டுமே தான, என்பது யோசிக்க வேண்டிய ஒன்று.

தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினருக்கும் அன்பான தீபாவளி வாழ்த்துக்கள்.

ஜீவி said...

வாருங்கள், கரந்தையாரே!

தங்கள் அன்பான வருகைக்கு நன்றி.
தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினருக்கும் என் அன்பான தீபாவளி வாழ்த்துக்கள்.

அடிக்கடி வருகை தர வேண்டுகிறேன்.

ரிஷபன் said...

இப்படி ரசித்த நிறைய கவிதைகள்.. வளர்த்தெடுத்துப் போகிற படைப்பாளிகளால் கவியுலகம் ஜீவித்திருக்கிறது

Kavinaya said...

அழகிய குறுங்கவிதைகள்! சிற்பி அவர்களின் நதி, கவிதையின் (அல்லது எழுத்தின்) பிரசவிப்பைச் சொல்வது போல் இருக்கிறது. பகிர்வுக்கு நன்றி ஐயா.

ஜீவி said...

ஜீவித்தலின் பயன்பாடும் வளர்ச்சியுமே ரசனை தான் போலிருக்கு.

தங்கள் அன்பான வருகைக்கும் பகிர்தலுக்கும் மிக்க நன்றி, ரிஷபன் சார்!

ஜீவி said...

மாலனின் கவிதை நினைவில் பளிச்சிட்ட போது அந்தக் கால 'திசைகளு'ம் உங்கள் நினைவும் வந்தது உண்மை.

வருகைக்கும் 'சிற்பி'யை ரசித்துப் பகிந்தமைக்கும் நன்றி, கவிநயா!

த.தமிழரசன் said...

பல நேரங்களில் பெயர் மனிதனை வென்று விடும். சில நேரங்களில் தான் பெயரை மனிதன் வெல்வான்!, தமிழ் இனபம் பருகுதல் உயிர்க்கு இன்பம் என்பதை உங்கள் பக்கங்களில் கண்டு மனிழ்ந்தேன். தொடரட்டும் உங்கள் சேவை.என் இனிய தீபவொளி நல் வாழ்த்துகள்

ஜீவி said...

@ தமிழரசன்

அன்பு தமிழரசன்,

தங்கள் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி.

தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினருக்கும் அன்பான தீபாவளி வாழ்த்துக்கள்.

சிவகுமாரன் said...

என் 20 வயதில் தேடித் தேடி படித்த கவிதைகள். கொஞ்சம் எழுதிப் பார்த்தும் மரபின் மீதிருந்த மாறாக் காதல்.. அந்தப் பக்கம் போக விடாமல் தடுத்தது. அதனாலேயே புறக்கணிக்கப் பட்டதும் உண்டு,
ஆனாலும்புதுக் கவிதைகள் காலத்தின் கட்டாயம். அரிக்கேன் விளக்கு அசைந்தாட ஆடி ஆடிப் போகும் மாட்டு வண்டியில் கூதலுக்கு இதமாய் போர்த்திக் கொண்டு பயணிப்பதும், புல்லட் ரயிலில் ஏ.சி, குளிரில் பயணிப்பதும் வேறு வேறு அனுபவம் .
பழைய நினைவுகளை மீட்டெடுத்த அருமையான பதிவு. நன்றி ஜீவி சார்

அப்பாதுரை said...

'3 years ago' என்று உங்க பதிவைப் பத்தி எபில பார்த்ததும் என்னதிது விசித்திரம்னு இங்கே வந்தா - அட, 3 days ago பதிவு எழுதியிருக்கீங்க! வருக வருக.. படிச்சுட்டு வரேன் மறுபடி.

அப்பாதுரை said...

மரபை அரியணையில் ஏற்றியதும் நாம தான். இறக்கியதில் மட்டும் ஏனோ அசாத்திய சாதனையின் பெருமை.

புதுக்கவிதை என்றால் சுலபமாகப் புரியக்கூடியது என்பது உண்மையா தெரியவில்லை. இந்தக் கவிதையைப் பார்ப்போம்:

'எனக்குத் தெரிவதேயில்லை
நடுநடுங்கும் எளிய சுடரை
எப்படிக் காப்பது என்று'.

மனுஷ்யபுத்ரனின் வரிகளை என் நினைவிலிருந்து கொடுத்திருக்கிறேன். இந்தக் கவிதை சுலபத்தில் புரியக்கூடியதா? எத்தனையோ வருடங்களாகப் புரிந்து கொள்ள முயற்சித்து வருகிறேன்.

நல்ல கவிதையின் தாக்கம் சுலபமாகப் புரிவதிலா இருக்கிறது?

கிடையாது.

மரபுக் கவிதைகளின் அருஞ்சொல் உபயோகம் வேண்டுமானால் எளிமையான புதுக்கவிதையின் வரவேற்புக்கும் பரவலுக்கும் காரணமாயிருக்கலாம். ஆனால் மரபுக் கவிதையின் இலக்கணக் கட்டுக்கோப்பு அழகை வசன கவிதை தரமுடியாது என்றே நினைக்கிறேன்.

எனினும், இது உயர்வு அது தாழ்வு என்றில்லை. கவிதையின் சிறப்பு கவிஞரின் சொல் பொருள் நடை ஆளுமையில் வெளிப்படுகிறது என்று நினைக்கிறேன்.

பாரதி எத்தனையோ சிறப்பான கவிதைகள் எழுதியிருக்கிறார் - எத்தனையோ மோசமான கவிதைகளையும். அவருடைய வசன கவிதைகள் அத்தனை முதிரவில்லை. முயற்சியைப் பாராட்டலாம்.

பொருளழகு சொல்லழகை விடச் சிறந்தது. பொருளாழம் எந்த நடையிலும் சிறப்பாகவே இருக்கும். அதுவே கவிதையின் போதைக்கேணி.

கோதாவரி நதியின் பிரம்மண்டத்தை ராம சோதரர் பார்த்து இப்படி வியந்ததாகச் சொல்கிறார் கம்பர்:
"சான்றோர் கவி எனக்கிடந்த கோதாவரி"

மேற்கண்டது வசனகவிதையின் எளிமையினும் எளிமையான சொல்லாடல். எத்தனை பொருளாழம்!

கவிதையின் சிறப்பை கவிதையின் இலக்கணமோ முறையோ கட்டுப்படுத்துவதில்லை என்பதற்கு இன்னொரு கம்பவரி: 'கடன்பட்டார் நெஞ்சம் போல் கலங்கினான் இலங்கை வேந்தன்'. இதை எந்தக் கவிதை நடையிலும் இத்தனை எளிமையாகச் சொல்ல முடியுமா தெரியவில்லை.

திருக்குறளின் பெரும்பான்மையான வரிகள் வசனகவிதை எனலாம் - எதுகையும் மோனையும் அந்த வசனகவிதைப் பெண்ணின் அலங்காரம். அவ்வளவு தான்.

மு.மேத்தா போன்றவர்கள் தேவையில்லாமல் மரபுக்கவிதைகளைப் போட்டுத் தாக்குவது (கியது?) வருத்தமே. நமக்கு இயல்பாக வரும் நடையில் எழுதுவோம் அதைவிட்டு இன்னொரு நடை குறிப்பிட்டோரின் ஆதிக்கம் என்று தாமாகவே எண்ணிக்கொண்டு சாடுவது வெட்கப்பட வைக்கிறது.

பண்டித பவனி என்பது சிந்தனையில் இருக்கிறது - வெளிப்பாட்டில் அல்ல. 'மூங்கிலிலை மேலே' கம்பன் ஏமாந்த கதை தெரியாதா?

புரியும்படி எழுதுவது வசனகவிதையின் இலக்கணம் என்றால் - புரியும்படியான வழக்குச் சொற்களைக் கொண்டு, வசனகவிதையில் பின்வரும் நாலடியார் வரிகளை யாராவது எழுத முடியுமா? எழுதினால் எப்படி இருக்கும் என்று தெரிந்து கொள்ள ஆவல். நாலடியார் வரிகள் இதோ:

'கோடேந்து அகல் அல்குல் பெண்டிதர்தம் பெண்ணீர்மை
சேடியர் போலச் செயல்தேற்றார்'

பொருளையும் சொல்லிவிடுகிறேன்;

எழும்பிப் பருத்த பக்கங்களும் அகலமும் கொண்ட அல்குலைக் கொண்டவராயினும் குலமகளிர் பொதுமகளிர் போல் தம்மை அழகுபடுத்திக் கொள்ளார்.

புதுக்கவிதையில் இதை யாராவது முயற்சி செய்து பிரமிக்க வைத்தால் நல்ல புத்தகம் ஒன்று பரிசளிக்கிறேன்.

சுவாரசியமான பதிவு. திரும்பினாலும் திரும்பினீர்கள், இது போலெழுதி ஏங்க வைத்து விட்டீர்களே ஜீவி சார்?

அப்பாதுரை said...

சுஜாதாவுக்கு புதுக்கவிதை வந்ததேயில்லை ஸ்ரீராம். அவர் தெரிந்ததாகக் காட்டிக் கொண்ட இன்னொரு விஷயம் புதுக்கவிதை.

அப்பாதுரை said...

புதுக்கவிதை மக்களாட்சி என்பது அசிங்கமாக இருக்கிறது. மு. மேத்தாவா!

ஜீவி said...

@ சிவகுமாரன்

//அரிக்கேன் விளக்கு
அசைந்தாட அசைந்தாட
ஆடி ஆடிப் போகும்
மாட்டு வண்டியில்
கூதலுக்கு இதமாய்
போர்த்திக் கொண்டு
பயணிப்பதும், புல்லட் ரயிலில்
ஏ.சி, குளிரில் பயணிப்பதும்
வேறு வேறு அனுபவம் //

அன்புள்ள சிவகுமாரன்,

நீங்கள் எதையும் எழுதினாலே அவை கவிதையாகிறதே, இதற்கு என்ன சொல்கிறீர்கள்?..

பாரதி பேசியதே கவிதையோ என்பது என் நெடுநாள் சந்தேகம்.

அவர் பேசினார் நாம்
அதனைக் கவிதையாய்
கொண்டோம்; அவ்வளவுதான்!

சிறுகதைகளும், புதுக்கவிதையும்
மேல்நாட்டு பாணியில் நாம் கற்றுக் கொண்டவை.

கால்சராய் போட்டு பழகிவிட்ட மாதிரி. வேட்டி கட்டுவது
சங்கடமாய் போகையில் கால்சராய்
மாட்டுவது செளகரியமாய்ப் போனது மாதிரி. அரைக் கால்சராய்கள் புழக்கத்திற்கு வருகிற வேகத்தில் முழுக் கால்சராய்களே மறந்து போகப் போகிற மாதிரி!

அசெளகரியங்கள் காலங்கடந்தவைகளாய் ஆகி, செளகரியங்கள் புழக்கத்தில் நீடிக்கிற மாதிரி.


இந்த செளகரியத்தை இன்னொரு செளகரியம் சாப்பிட்டு விட்டதென்றால் அது இன்னொன்றிற்கு இரையாகிற வரை நீடிக்கும். காலம் காட்டும் யதார்த்த பாடம் இது.

ஐபாடில் கதை படிக்கிற காலம் இது.
இணைய எழுத்துக்கள் உலா வரும்
நேரம் இது. அச்சடித்தலும் காணாமல் போகும் காலம் வெகு தூரத்தில் இல்லை.

எது செளகரியமோ அதற்கு தான் மவுசு என்று அத்தனையும் மாறிக் கொண்டே இருக்கின்றன.

புதுசாக ஒன்றைக் கற்றுக் கொள்வதற்குள் அது காணாமல் போய்விடுகிறது.

நின்று நிதானித்துப் பார்க்க அவகாசமில்லாமல் சுழற்காற்றில் அடித்துப் போகும் சருகுகள் நாம்.

மிடில் க்ளாஸ் வர்க்க அல்லாடலில் வேறென்ன நினைப்பதற்கு?.. சொல்லுங்கள்.

ஜீவி said...

@ அப்பாதுரை

எழுந்து தாழும் பேரலை இரைச்சலில்
'குறைந்தபட்சம் எதுகை மோனைகளாவது இருக்கும் படி பார்த்துக் கொள்ளுங்கள், ஐயா!' என் கிற ஆசைக்குரலும் அமுங்கிப் போய் விடுகிறதே, நண்பரே! இந்த லட்சணத்தில் ஏற்றியதும், இறக்கியதும் நாமே தான் என்றால் எப்படி?..

எதுவும் நம்மால் இல்லை. இதையெல்லாம் நிர்ணயிப்பவர்கள் எங்கோ.நிர்ணயிக்கப்பட்டவைகளுக்குள் நாமும் நம் ஆசைக்கு ஏதாவது நாமும் செய்வோமே என்று பதுங்கிக் கொள்கிறோம். அவ்வளவே.

//புதுக்கவிதை என்றால் சுலபமாகப் புரியக்கூடியது என்பது உண்மையா தெரியவில்லை... இந்தக் கவிதை சுலபத்தில் புரியக்கூடியதா? எத்தனையோ வருடங்களாகப் புரிந்து கொள்ள முயற்சித்து வருகிறேன்.

நல்ல கவிதையின் தாக்கம் சுலபமாகப் புரிவதிலா இருக்கிறது?

கிடையாது.. //

ஹஹ்ஹஹா! அதிகபட்ச சிரிப்பானந்தா நீங்கள்!

புரியவில்லை என்றால் புரியாததே மேலானது என்கிற முடிவுக்கு வருவோம். அதுவே சரியானது.
வேறெதுவும் செய்வதற்கில்லை!:))

ஜீவி said...

//பொருளழகு சொல்லழகை விடச் சிறந்தது. பொருளாழம் எந்த நடையிலும் சிறப்பாகவே இருக்கும். அதுவே கவிதையின் போதைக்கேணி.//

நம் மொழியில் சொல்ல முடியாதது எதுவுமே இல்லை. சொல்வதற்கு ஏற்பவான மொழிவளத்தின் செருக்கும் தளுக்கும் மனம் பூராவும்
விரவிப் பரவியிருக்க வேண்டும்.
புதுமைப்பித்தனின் 'துன்பக்கேணி'
பற்றி சமீபத்தில் பார்த்தீர்களா? உடனே போதைக்கேணி இடத்திற்கு ஏற்ப வந்து விட்டது, பாருங்கள்.
இது தான் மொழியின் சிறப்பில் வசப்படுதல்.

எல்லா மொழிகளிலும் அந்தந்த மொழிக்கேற்பவான இந்த வசப்படுத்துதல் இருக்கிறது. அந்த வரம், கைவரப் பெற வேண்டும்.

அந்த சித்தி மட்டும் சாத்தியப்பட்டு விட்டால், சொல்லழகும் பொருளழகும் கூப்பிட்ட குரலுக்கு ஏனென்று கேட்கும்.


ஜீவி said...

@ அப்பாதுரை

//பொருளழகு சொல்லழகை விடச் சிறந்தது. //

சொல்லழகு, பொருளழகுக்கு இந்தப் பதிவு வச்னக்கவிதை ஒன்றிலிருந்தே
உதாரணம் காட்டுகிறேன்.

பாலகுமாரனின் கீழ்க்கண்ட கவிதை வரிகள்:

முட்டி முட்டி பால்குடிக்கின்றன
நீளக் குழல் விளக்கில்
விட்டில் பூச்சிகள்

என் நினைவில் நீளக் குழல்விளக்கு என்று தான் இருந்தது. சரிபார்க்க கூகுளில் தேடிய பொழுது,
நீலக் குழல்விளக்கு என்றே பல தரவுகளிலிருந்து தெரிய வந்தது.
பாலகுமாரனின் பார்வையில் இருக்கும் தளத்திலேயே நீலக்குழல் விளக்கு என்று தான் இருக்கிறது.

பாலின் நிறம் வெண்மை. என்னதான் UV நீலக்குழல் என்றாலும் வெளிர் நீலமாகத் தான் உள்ளிருக்கும் குழல் தென்படும்.

பாலின் வெண்மைக்கு, நீலக்குழல் சரிப்பட்டு வராது. இதனால் பொருளழகும் சொல்லழகும் கெடும். அதனால் நீலக்குழல் என்பது பாடபேதமாக இருக்கலாம் என்று நீள (நீண்ட) குழல்விளக்கு என்று மாற்றினேன்.

யாராவது கேட்டால் இந்த விளக்கத்தை சொல்லலாம் என்றிருந்தேன். யாரும் கேட்கவில்லை. யாரும் கேட்காவிட்டாலும் இன்னொருவர் எழுதியதை நான் தவறாக எழுதி விடக் கூடாதல்லவா?.. அதற்காக
அடுத்த தடவை பாலகுமாரனை சந்திக்கும் வாய்ப்பு வரும் பொழுது
அவரிடமே கேட்டுத் தெளியலாம் என்றிருக்கிறேன்.

ஜீவி said...

@ அப்பாதுரை

// நாலடியார் வரிகளை..//

சொல்லழகு, பொருளழகு பற்றி நீங்கள் சொல்லிக் கொண்டே வரும் பொழுது என் நினைவில் ஒரு நாலடியார் பாட்டு நின்றது..

வற்றிய ஓலை கலகலக்கும் எஞ்ஞான்றும் - பச்சோலைக்கு இல்லை ஒலி.. என்று முடியும் பாடல்.

நீங்களும் நாலடியார் வரிகளையே கீழே குறிப்பிட்ட பொழுது ஆச்சரியம்!

'கூளப்ப நாய்க்கன் விறலிவிடுதூது'
என்று கவியரசர் அடிக்கடி மேற்கோள்
காட்டும் சிற்றிலக்கிய நூல், சுப்ரதீபக் கவிராயர் பாடியது. புதுக்கவிதை படிக்கிற மாதிரியே எளிமையாக இருக்கும். படித்துப் பாருங்கள்.

ஜீவி said...

@ அப்பாதுரை

இன்னொரு விஷயம் சரி; அந்த 'இன்னொரு' குறிப்பால் உணர்த்தும்
அதற்கு முற்பட்ட ஒன்று என்ன?

ஸ்ரீராம். said...

///பொருளழகு சொல்லழகை விடச் சிறந்தது//

வயிற்றில் பாலை வார்த்தீர்கள்!

சுஜாதா புதுக்கவிதையில் விற்பன்னர் என்று நான் சொல்லவில்லையே! :)) அவர் எழுதியதை விட யாராவது எழுதியதை ரசனைப் பகிர்தலாய் எழுதியதுதான் அதிகம்.

ஜப்பானிய ஹைக்கூ பற்றி எழுதி அவரும் நிறைய முயற்சித்திருப்பார்.

மோகன்ஜி said...

அன்பு ஜி.வீ சார்! நலம்தானே?
புதுக்கவிதை பற்றிய உங்கள் பதிவு சிந்திக்கத்தக்கது. நீங்கள் குறிப்பிட்ட கவிதைகள் பெரும்பாலும் எனது ரசனை லிஸ்டில் இருப்பது ஒரு சந்தோஷமான ஆச்சர்யம்.
புதுக்கவிதை பழையகவிதையாகி வருடங்கள் ஆகிவிட்டதல்லவா?
மரபுக்கவிதை சிறந்ததா?வசனக்கவிதை சிறந்ததா? எனும் கேள்விகள் கேட்கப் பட்டு சலிக்கும்வரை விவாதங்கள் நடந்து முடிந்தும் விட்டன. மரபின் அழகு அதன் கட்டமைப்பிலும், நினைவில் நிற்கும்வண்ணம் திகழ்வதிலும் தான்.
பாஸ்ட்புட் யுகத்தில் மரபுக்கவிதை பயிற்சிபெற்று எழுதும் கவிஞர்கள் குறைவு. பாடுபொருள் பரந்து கிடக்கையில் வசனகவிதை எழுதுவது எளிதாயும், படிப்பவன் அதில் தன்னைப் பொருத்திக்கொள்ள ஏதுவாகவும் இருக்கிறது. அதனாலேயே எழுதியும் குவிக்கிறார்கள். மிகநல்ல ஆக்கங்களும் சில அவற்றில் உண்டு. அந்த ஓரிரு நல்லவைகளை தெரிவுசெய்ய ஆயிரமாய் கவிதைகள் படிக்கும் பெருந்துன்பத்தை மேற்கொள்ள தயாராய் இருக்க வேண்டும். மரபில் கூட இந்தக்கஷ்டம் படிப்பவனுக்கு இருந்தது அல்லவா? பாரதியின் படைப்புகளை அவர்காலப் பண்டிதர்கள் ஏற்கவில்லையே? எதுவும் காலத்தின் போக்கில் கரையேறி நிலைக்க வேண்டும்.
எனக்கு மரபுக்கவிதை அலங்கரித்து நிற்கும் அன்னையின் சௌந்தர்யமாயும், புதுக்கவிதைகள் காற்றில் கலைந்தாடும் காதலியின் கூந்தல்போலவும் தோன்றுகிறது. மரபோ வசனமோ, காலத்தையும் கடந்து நிற்பவை கலைமகள் கைப்பொருள்.
மேலும் பேசலாம்.





அப்பாதுரை said...

மரபும் ஒரு நாள் புதிதாக இருந்தது தானே மோகன்ஜி? நாலடியாருக்கும் கம்பனுக்கும் எத்தனை வேறுபாடு! குறுந்தொகைக்கும் திருக்குறளுக்கும் எத்தனை வேறுபாடு!

கவிதை ஒரு வெளிப்பாடு. கவிஞன் கலைஞன். என்ன சொல்றீங்க?

அப்பாதுரை said...

சிவகுமாரன்... ஆகா!

அப்பாதுரை said...

நூல் அறிமுகத்துக்கு நன்றி ஜீவி சார். தேடிப் பார்க்கிறேன்.

கவிதைக்கும் உரைநடை(?)க்கும் வித்தியாசம் இப்போது தெரிவது போல் அந்தக் காலத்தில் இல்லையோ? ஒரு உரை நடைகூட தேறவில்லையே சங்க காலத்திலிருந்து பார்த்து விட்டேன். உரை என்றாலே பதினெட்டாம் நூற்றாண்டுக்குப் பிறகு தான் ஏதாவது தேறும் போலிருக்கிறது.

அந்த வகையில் மேத்தா குறிப்பிடும் பண்டித பவனி க்விதையில் நேர்ந்ததோ?

ஜீவி said...

@ அப்பாதுரை

//கவிதைக்கும் உரைநடை(?)க்கும் வித்தியாசம் இப்போது தெரிவது போல்//

'தெரியாதது போல்' என்று இருந்திருக்க வேண்டுமோ?

கூ.நா. கதை கூட கிட்டத்தட்ட 18-ம் நூற்றாண்டு கதை தான். ஜமீன் கதை. அவ்வளவு போதும். படித்து விட்டு கடந்து வாருங்கள்.

ஜீவி said...

@ அப்பாதுரை

//அந்த வகையில் மேத்தா குறிப்பிடும் பண்டித பவனி க்விதையில் நேர்ந்ததோ?//

அதன் வெகுஜன 'புழக்கத்தின் வேகத்தை'ச் சொல்வதற்காக மேத்தா சொல்லியிருப்பார்.

என் நண்பர் ஒருவர் வெண்சுருட்டை
(நன்றி: தமிழ்வாணன்) ஊதிக் கொண்டே வெ.சு. அட்டைபெட்டியில் புதுக்கவிதை எழுதுவார். அவிழ்த்து விட்ட குதிரை போல அந்த அளவுக்கு கவிதை உணர்வு ஊரெல்லாம் பவனி வந்த காலம் அது.

ஜீவி said...

@ மோகன்ஜி

நகச்சுத்தி படிச்சேன். பிச்சு உதறியிருக்கிறீர்களே!

நயா பைசா ரொம்ப காலத்துக்கு நயா பைசா என்றே புரிதல் ஆனது போல.

புதுக்கவிதை பழசாகி இன்றைய கவிதை ஆகிவிட்ட போதிலும் கூட
அதைக் குறிப்பிட வேறு பெயர் (வசனக் கவிதை? சொன்னால்
ஏற்றுக் கொள்ள மாட்டார்களே!) தெரியாததால் தான் புதுக்கவிதை என்றே குறிப்பிட்டேன்.

ஆனால் இந்தப் பதிவில் குறிப்பிட்டிருக்கும் கவிதைகளுக்கும்
இன்றைய கவிதைகளுக்கும் கூட
பெருத்த வித்தியாசம் காணலாம்.

//நல்ல கவிதையின் தாக்கம் சுலபமாகப் புரிவதிலா இருக்கிறது?

- அப்பாதுரை //

ஆமாம் என்கிறேன்.

வேறு என்னத்திற்கு எழுதுவது? எழுத்து விளைவிக்கும் பலன் வேறு என்ன தான் இருக்கப் போகிறது?..

சுய பிரதாபத்திற்கா? இல்லை, மந்திரங்கள் போல புரியாமலும் பொருள் தெரியாமலிருப்பது தான்
மயக்கத்தைக் கூட்டி பெருமையைக் கூட்டுமா?,, தெரியவில்லை. மேத்தா சொன்ன மக்களாட்சியும் மண்மூடிப் போன உணர்வு தான் மிஞ்சுவதாயிற்று.

கலைமகள் கைப்பொருள் வசப்பட்டால் அன்னையின் கூந்தல் அலைபாய்வதும் பாடு பொருள்
ஆகுமில்லையா?..

நீங்கள் சொன்ன மரபின் செளந்தர்யத்தை இன்றைய கவிதைகள் கொள்ளவில்லை. இதுவே இதன் கவிதையிழப்பாய் எனக்குத் தோன்றுகிறது.

கோமதி அரசு said...

28/09/2013 ல் கேம்டனின் உள்ள அமைதியான ஒருசூழலில்உள்ள வால்ட்விட்மன் நினைவில்லம் சென்று வந்தோம்.

இந்த பதிவை படித்தவுடன் அங்கு போனது நினைவுக்கு வந்து விட்டது.

சிற்பி, நகுலன் கவிதை மிகவும் பிடித்தது.
அனைத்து பகிர்வும் நன்றாக இருக்கிறது.


அப்பாதுரை said...

எனக்கென்னவோ சுலபமாகப் புரிவதால் கவிதை அதன் சிறப்பை இழப்பதாகப் படுகிறது. கவிதையைப் பெண்ணுக்கு ஒப்பிடுவது எதனால் என்கிறீர்கள்?

'மின்னல் வெட்டி முத்துச் சிந்தி' என்பது தெள்ளெனப் புரிந்தால் கவிதை காணாமல் போகும் அங்கே என்று நினைக்கிறேன்.

அப்பாதுரை said...

புரியாமலே போனால் மந்திரம்.
உனக்கொரு புரிதல்
எனக்கொரு புரிதல்
இணைந்தொரு புரிதல்
நற்கவிதைத் தந்திரம்.

ஜீவி said...

@ கோமதி அரசு

உங்கள் நினைவுகளைப் பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி, கோமதிம்மா.

நகுலன் புரிந்ததில் ரொம்பவும் சந்தோஷம்.

ஜீவி said...

@ அப்பாதுரை

//எனக்கென்னவோ சுலபமாகப் புரிவதால் கவிதை அதன் சிறப்பை இழப்பதாகப் படுகிறது.. //

நீங்கள் சொல்கிறபடியே பார்த்தாலும், புரியாதது எளிமையாய் இருந்தும்
புரியாதது தான் அதன் சிறப்பு.

'ராமச்சந்திரனா' கவிதை எவ்வளவு எளிமை பாருங்கள். இருந்தும் கவிஞன் சொல்ல வந்தது லேசில் புரியாது. அது புரிவதற்கு தத்துவ விசாரணை வேண்டும்.

'மின்னல் வெட்டி முந்து சிந்தி' அப்படி ஒன்றும் புரிபடாமல் இல்லை. ஆனால் இப்பொழுது வாசிக்க நேர்கிற பல கவிதைகள்,
சம்பந்தப்பட்ட அந்தக் கவிஞர்கள் விளக்கம் சொன்னால் தான் புரியும் போலிருக்கு..

ஒரு குறிப்பிட்ட கவிதை எனக்குப் புரியவில்லை என்றால் அது என் குறைப்பாடு. என் போதாமை.

அதே கவிதை வாசிக்கிற பலருக்குப் புரியவில்லை என்றால் அது அந்தக் கவிதையை எழுதிய கவிஞரின் குறைபாடு. இந்தக் குறைபாடு இல்லாமல் பார்த்துக் கொண்டால் நிச்சயம் அது சிறப்பான கவிதை தான். இது கூட வெகுதிரள் வாசிப்போருக்கு தானே எழுதுகிறோம் என்கிற எண்ணத்தில் தான். இல்லை, எழுதுவதெல்லாம் தனக்காகத் தான், தன்னையொத்த
'புரிதல்'திறமை கொண்டோருக்குத் தான் என்றால் பிரச்னையே இல்லை.

கவிதையோ, கதையோ, கட்டுரையோ எந்தப் படைப்பும் வாசிப்போருக்குப் புரிவது தானே
அந்த படைப்பால் ஆய பலன்?..

இப்படியான கண்ணோட்டத்தில் புரிவது முக்கியமா, சிறப்பு முக்கியமா என்று நீங்கள் தான் சொல்ல வேண்டும். தொடர் பகிர்தலுக்கு நன்றி, அப்பாதுரை சார்.


ஜீவி said...

மோகன்ஜீ, இன்று தான் பார்த்தேன். எவ்வளவு மாதத்திற்கு முன்னாலான உங்கள் நல்ல கருத்துக்கள் தொடர முடியாமல் போயிருக்கிறது?.. மன்னிக்கவும்.

இனிமேல் இந்த இடத்தில் தொடர்ந்தால் பொருத்தமில்லாது போய்விடும்.

இதே விஷயத்தை மறுபடியும் புதுப்பதிவாய் இடுகிறேன். அங்கு பேசிக் களீக்கலாம்.

அன்புடன்,
ஜீவி

ஆத்தூர் சாகுல் said...

சுவையான பதிவு.
அருமை 👌

ஆத்தூர் சாகுல் said...

சுவையான பதிவு.
அருமை 👌

Related Posts with Thumbnails