Tuesday, January 19, 2016

என்ன சேதி?..


புத்தகத்தைப் படிப்பது ஒரு தளம் என்றால், அதைப் பற்றிப் பேசுவதும், விவாதிப்பதும், மக்களிடையே எடுத்துச் சொல்வதும் அவசியமான  இன்னொரு தளம்.   ஒரு திரைப்படம் வெளியாகும் பொழுது குறைந்தபட்சம் ஆயிரம் பேராவது அதற்கு இணையத்தில் விமரிசனம் எழுதுகிறார்கள். ஃபேஸ்புக், ட்விட்டர் எனப் பகிர்ந்து  கொள்கிறார்கள்.  ஆனால் சிறந்த  கவிதை, நாவலகள் பற்றிப் பேசுவதற்கு ஒரு சதவீதம் பேர் கூட முன் வருவதில்லை..
                                        --- எஸ். ராமகிருஷ்ணன்.

ஆனந்தவிகடனில் ‘இந்திய வானம்’ என்று எஸ்.ரா.வின் தொடர்
ஆரம்பித்திருக்கிறது.  அந்தத் தொடரில் தான்  மேற்கண்ட தன் எண்ணத்தைப்  பகிர்ந்து கொண்டிருக்கிறார்.      

எஸ்.ரா. செம பிஸி. புத்தகச் சந்தையா, புத்தக வெளியீடா, புத்தகம் குறித்த எந்த பொதுவிழாக்களிலும் எஸ்.ரா.வைப் பார்க்க முடிகிறது.. அங்கு தன் எண்ணங்களை மனம் திறந்து பகிர்ந்து கொள்கிறார். வாசிப்பு  உலகத்திலிருந்து எழுதும் உலகிற்கு வந்தவர் எஸ்./ரா. அவரது வாசிப்பு பொழுதுகளுக்கு பங்கம் நேர்ந்து விடாமல் தம்மை அழைக்கும் எந்த விழாவிற்கும் எஸ்.ரா. தவறாமல் கலந்து  கொள்வதாகவே நமக்குத் தெரிகிறது.  இன்னொரு விஷயம்.  அன்றைக்குப் பார்த்த எஸ்.ராமகிருஷணன் தான் இன்றைக்கும். இப்பொழுதெல்லாம் அச்சு ஊடகங்களில் அவரை நிறையவே பார்க்க முடிந்தாலும் அவரில் எந்த மாற்றமும் இல்லை.  பேச்சில், கருத்தில், அவற்றை எடுத்துரைப்பதில் இன்னும் மெருகு கூடியிருப்பதை சொல்லியே ஆகவேண்டும். 

ழக்கமாக சாகித்ய அகாதமி  விருது என்றால் தமிழகத்தில் சலசலப்புக்கு பஞ்சமே  இல்லாதிருக்கும். ‘இவருக்கு ஏன்  இல்லை, அவருக்கு ஏன் இல்லை’ என்ற வாக்கு வாதங்கள் காலம் போய், நாலைந்து வருடங்களுக்கு முன் சாகித்ய அகாதமி விருது பெற்றவரே தனக்கு அந்த விருது என்றோ தந்திருக்க வேண்டும், தாமதமாகத் தந்து விட்டார்கள்’ என்று குறைப்பட்டுக் கொண்டார்.

இந்தத் தடவையும் சாகித்ய அகாதமியில் தமிழுக்கான  விருது அறிவித்து ரொம்ப நாளாகி விட்டது.  எல்லா தடவைகளும் மாதிரி இல்லாமல் இந்தத் தடவை விருதை யார் பெற்றார்கள் என்பதே தெரியாத அளவுக்கு பாராட்டு விழா எடுப்பதோ, பலபடப் பேசுவதோ எல்லாமே மிஸ்ஸிங்.  

இந்தத் தடவை தமிழுக்காக 2014-ம் ஆண்டு அகாதமி விருது பெற்றவர் பழம் தமிழ் எழுத்தாளர் ஆ.மாதவன். திருவனந்தபுரம் சாலை கடைத்தெருவில் 'செல்வி ஸ்டோர்ஸ்' என்றோரு பாத்திரக்கடை இருக்கும். அந்தக் கடைக்கு உரிமையாளர். அந்த சாலை கடைத்தெருவிற்கு உயிர் கொடுத்து தமிழில் உயிர்ப்பித்தவர். எழுத்து  பிர்மாக்கள் வட்டத்தில் ‘சாலைத்தெருவின் கதைசொல்லி’ என்றே அழைக்கப்படுபவர். ‘கடைத்தெருவின் கலைஞன்’ என்று ஜெயமோகன் இவரைப்  பற்றி எழுதியிருக்கிறார்.   நம் பதிவுலக சகபதிவர் கிருத்திகா இவரைப் பற்றி எழுதியிருந்ததும் நினைவுக்கு வருகிறது.

‘கிருஷ்ணப்பருந்து’ ஆ.மாதவன் என்றால் அந்தக்  காலத்தில் பிரசித்தம். அந்தக் காலத்து மனுஷருக்கு இந்தக் காலத்தில் விருது கொடுத்ததால் அது ஒரு காலம் தப்பிய செயலாகப் போய்விட்டதோ என்னவோ.? மனிதர் தான்  உண்டு; தன் எழுத்து உண்டு என்று இருந்ததும் ஒரு காரணமாகப் போனதுவோ?.. குடத்திலிட்ட விளக்கு குன்றேற வில்லை. கொண்டாட்டமும் இல்லை..

விருது கிடைத்ததை அடுத்து ஒரு பேட்டியில் மாதவன் சார் மனந்திறந்து  ஒன்றைச் சொன்னார். “தி.ஜானகிராமனின் ‘மோகமுள்’ளுக்கு அப்புறம் தமிழில் நாவலே இல்லை!” என்று ஒரே போடாகப் போட்டார். இருந்தும் தமிழ் எழுத்துலகம் அசைந்து  கொடுக்கவில்லை. பொருட்படுத்துகிற அளவுக்கு இது ஒன்றும் பெரிய விஷயமில்லை என்று இருந்துவிட்டது போலும்.  அவர்களுக்கு ஆயிரம் வேலைகள்.

‘கல்கி’ இதழில் வில்லிசை வேந்தர் சுப்பு ஆறுமுகம் ‘அருளே, அறிவே, அமுதே’ என்று தான் காஞ்சிப் பெரியவர் திருவருள் பெற்ற பேறு குறித்து தொடராக எழுத ஆரம்பித்திருக்கிறார். ‘திருநெல்வேலி  மண்ணை சேர்ந்த  நான் வில்லுப்பாட்டு நடத்தி அதனால் ஓரளவுக்குப்  பெயரும் புகழும் பெற்றிருந்தேன்.  கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணனுக்கு திரைப்படங்களில் காமெடி எழுதிக் கொண்டிருந்தேன்..” என்று தனது ஐம்பதாண்டு வாழ்க்கைக்கு அப்புறமான தனது வாழ்க்கைத் தேடலைப்  பற்றி எழுத ஆரம்பித்திருக்கிறார். இந்த மாதிரியான பொருளில் வாசிப்பு விருப்பமுள்ளவர்களுக்கு இந்தத் தொடர் விருந்தாக அமையப் போவது நிச்சயம்.

ழுத்தாளர் வீரபாண்டியன் ‘பருக்கை’ என்கிற ஒரே ஒரு புதினத்தை தமிழில் படைத்தவர். தமிழ் எழுத்துலகில் அறியப்பட வேண்டியவர். அவர் எழுதிய அந்த ஒரு புதினமே அவருக்குப் பெரும் புகழைச் சேர்த்திருக்கிறது. அந்தப் புதினத்திற்கு சாகித்ய அகாதமியின் ‘யுவ புரஸ்கார்’ விருது கிடைத்திருக்கிறது. கல்வி கற்றலோடு சமகால தேவைகளுக்காக கேட்டரிங் பணியை பகுதி நேரப்பணியாகச் செய்யும் இளைஞர்களின் வாழ்க்கைப் போராட்டமும் வாழ்வியல் அனுபவங்களும் நாவலாகியிருக்கிறது. இதுவரை யாரும் கையாளாத சப்ஜெக்ட். நாம் நினைத்தே பார்த்திருக்காத துயரங்கள். எழுத்துகளாக உயிர்ப்பு கொண்டிருக்கின்றன.

வீரபாண்டியன் இந்த நாவலுக்கு முதலில் 'சாம்பார்' என்று தான்  பெயர் வைத்திருந்தாராம்.  எங்கே அது சமையல்  குறிப்பு  சம்பந்தமான புத்தகமாக ஆகிவிடுமோ என்ற பயத்தில் 'பருக்கை' என்று பெயர் மாற்றம் செய்தாராம்.

‘தில்லி அழைத்தது, மனம் நெகிழ்ந்தது என்று தாம் விருது பெற்ற அனுபவத்தை நெகிழ்ச்சியுடன், மகிழ்ச்சியுடன் ‘கல்கி’ பொங்கல் சிறப்பிதழில் வீரபாண்டியன் பகிர்ந்து கொண்டிருக்கிறார்.  வீரபாண்டியன் பெற்ற விருது, வாழ்க்கையினுடனான போராட்டங்களை அனுபவக் கதைகளாக்கும் இளம் எழுத்தாளர்களுக்கு நம்பிக்கை நட்சத்திரமாக ஒளிரும்.

ஜெயகாந்தனின் ‘ஓர் இலக்கியவாதியின் அரசியல் அனுபவங்கள்’ என்னும் நூலிருந்து:

‘நான் மவுண்ட் ரோடில் பத்திரிகை விற்றுக் கொண்டிருக்கிறேன்.  ரவுண்ட்டாணாவுக்கு எதிரில் ‘இண்டியன் எக்ஸ்பிரஸ்’ வாசலில் Gandhiji Shot Dead என்ற போஸ்டர் ஒட்டப்பட்டது.  எனக்கு அப்போது ஆங்கிலம் சரிவரத் தெரியாது.  அதுவுமில்லாமல், காந்திஜியை ஒருவன் சுட முடியும் என்றும் அவர் சாவாரென்றும் அது சாத்தியம் என்கிற எண்ணமும் எனக்கு அப்போது இல்லை. எனவே, அந்தக் கூட்டத்திலும் நான் பத்திரிகை விற்கப் போனேன்.

அப்போது யாரோ ஓர் ஆள் என்னிடம் போஸ்டர் படித்து, “ஓ! காந்திஜி ஷாட் டெட்” என்று சொல்லி விட்டுப் போனான். 

“அப்படீன்னா என்ன அர்த்தம்?” என்று அவரிடம் கேட்டேன்.
  
அவர் பதில் சொல்லவில்லை. சரி, என்னவோ விபரீதம் என்று புரிந்து  கொண்டேன்.   ஜனங்கள் எங்கு பார்த்தாலும் கும்பல் கும்பலாக நின்று பொருமுகிறார்கள்.  கடைகளையெல்லாம் மூடுகிறார்கள். நானும் புத்தகங்களை மூட்டை கட்டிக் கொண்டு டிராமில் ஏறினேன்.

டிராமில் ஏறியதும் என் பக்கத்தில் உட்கார்திருந்த ஒருவர் ஆங்கிலத்தில் கேட்டார்: “வாட் இஸ் தி கிரவுட்?”

நானும் எனக்குப் புரியாத விஷயத்தை  அவரிடம் ஆங்கிலத்தில் சொன்னேன்: “காந்திஜி ஷாட் டெட்.”

“வாட்?.. காந்திஜி?.. ஷாட்?.. டெட்?” என்று நான்கு கேள்விகளாக நான் சொன்னதையே என்னிடம் திருப்பிக் கேட்டார் அவர்.

நானும் ஆங்கிலத்தில் “எஸ்!” என்றேன். 

அவர் அடுத்த ஸ்டாப்பிங்கில் அழுது கொண்டே இறங்கினார்.  என் புத்தியில் அப்போதும் காந்திஜி சுட்டுக்  கொல்லப்பட்டு விட்டார் என்ற செய்தி உறைக்கவில்லை’.

--- என்று ஜே.கே. தன் நினைவுகளை எழுதியிருக்கிறார்.

நினைத்தாலே கண்களை நீர் முட்டுகிறது.

ஜனவரி-30 தேசப்பிதாவின் நினைவு தினம். 
 
  
 
  , .
சம்பந்தப்பட்ட பத்திரிகைகளுக்கும்
படங்களை உதவியோருக்கும் நன்றி.

                

21 comments:

ஸ்ரீராம். said...

பிர்மாவும் பிரம்மாவும் ஒரே பொருளா?

ஸ்ரீராம். said...

ஆனந்த விகனை நிறுத்தப் போகிறேன். அநியாய சினிமாச் செய்திகள், நாம் வலையிலும், முக நூலிலும் படிப்பவற்றை மறுபடி எடுத்துப் போட்டு, சிறப்பு மலர் என்று ஒவ்வொரு பிரபலத்தைப் பற்றியும் நாம் ஏற்கெனவே அறிந்தவற்றையே கட்டம் கட்டமாக வெளியிட்டுப் பக்கங்களை நிரப்பி, இதழுக்குக் காசு கூட்டி.. எஸ்ரா தொடர் ஒன்றுதான் உருப்படி.

ஸ்ரீராம். said...

ஆ மாதவன் ஐயா சொல்லியிருக்கும் அந்தக் கருத்தை நானும் படித்தேன். அவர் தமிழ் நாவல்கள் படிப்பதை நிறுத்தி விட்டாரோ என்னவோ!

ஸ்ரீராம். said...

ஆனந்த விகனை நிறுத்தப் போகிறேன். அநியாய சினிமாச் செய்திகள், நாம் வலையிலும், முக நூலிலும் படிப்பவற்றை மறுபடி எடுத்துப் போட்டு, சிறப்பு மலர் என்று ஒவ்வொரு பிரபலத்தைப் பற்றியும் நாம் ஏற்கெனவே அறிந்தவற்றையே கட்டம் கட்டமாக வெளியிட்டுப் பக்கங்களை நிரப்பி, இதழுக்குக் காசு கூட்டி.. எஸ்ரா தொடர் ஒன்றுதான் உருப்படி.

ஸ்ரீராம். said...

ஆ மாதவன் ஐயா சொல்லியிருக்கும் அந்தக் கருத்தை நானும் படித்தேன். அவர் தமிழ் நாவல்கள் படிப்பதை நிறுத்தி விட்டாரோ என்னவோ!

ஸ்ரீராம். said...

சுப்பு ஆறுமுகம் வெள்ளந்தியாகச் சொல்கிறாரா, அந்தப் பூச்சில் சொல்கிறாரா என்று அறிய முடியாத வார்த்தைப் பிரயோகங்கள். படித்தேன்.

ஸ்ரீராம். said...

வீரபாண்டியன் பற்றி அறிகிலேன்!

ஸ்ரீராம். said...

ஒரு இலக்கியவாதியின் அரசியல் அனுபவங்கள் என்னிடம் பைண்ட் செய்யப்பட்டு இருக்கிறது எங்கிருக்கிறது என்று தேட வேண்டும்!

ஸ்ரீராம். said...

உங்கள் தளம் ஒரு புதுப் பொலிவு பெற்றுள்ளது. ஒரு மாறுதல், ஒரு வித்தியாசம்...!

படங்கள் ஆங்காங்கே இணைப்பதும் சுவை கூட்டுகிறது. அழகு. வாழ்த்துகள்.

வை.கோபாலகிருஷ்ணன் said...


என்ன சேதி?.. என்ற தலைப்பில் பல விஷயங்களைப்பற்றி சின்னச்சின்னதாகப் பகிர்ந்துகொண்டுள்ளது மிகச் சிறப்பாக உள்ளது.

ஒவ்வொன்றையும் மிகவும் உற்சாகத்துடன் படித்தேன். ரஸித்தேன். பகிர்வுக்கு நன்றிகள்.

அன்புடன் கோபு

ஜீவி said...

@ ஸ்ரீராம் (1)

கிருஷ்ணன், கிருட்டினன் போலத் தான்!

ஜீவி said...

(2) ஸ்ரீராம் (2)

எப்படி இருந்த ஆ.வி?.. என்ன நேர்ந்ததென்று தெரியவில்லை.

இல்லை, அவர்களுக்குத் தெரிந்தது நமக்குத் தெரியவில்லை.

ஜீவி said...

@ ஸ்ரீராம் (3)

இந்த மாதிரியான பார்வை ஜெமோக்குக் கூட உண்டு. ஆனால் அவர் ப. சிங்காரத்தின்'புயலிலே ஒரு தோணி'யிலிருந்து ஆரம்பிப்பார்.

தொடர்கதைகளெல்லாம் நாவலாகாது என்பது அவர் சொல்வதன் உள்ளடக்கம். அதைத் தாண்டி என்னன்னவோ அளவுகோல்கள். "ஆளைவிடுங்கப்பா!' என்று புத்தகங்களிலேயே அமிழ்ந்து போகிறவன் தலைதெறிக்க ஓடுகிற மாதிரி.

மொத்தத்தில் நாவல் என்பது மேல்நாட்டுச் சரக்கு. நீண்ட கதைகளே புத்தகங்களாகத் தான் வெளிவருவது அங்கிருக்கும் வழக்கம். நமக்கு அடுத்த வாரம் என்ன என்று சஸ்பென்ஸ் போட்டு நீட்ட வேண்டும். அதனால் ஒட்டுமொத்த கதை (நாவல்) என்கிற பார்வையில் அடிபட்டுப் போய் விடுகிறது என்கிறார்கள். அப்படிப்பார்த்தால் சுஜாதா எல்லாம் சும்மா என்றால் அடிக்க வருவீர்கள்.

ஆனால் மாதவன் ஐயா சொல்வது ரொம்ப அநியாயம். 'மோகமுள்' தி.ஜா.வின் கன்னி முயற்சி. அதில் எழுத்துக்கள் அவர் பிடிக்கு அடங்காது வழியும். 'அம்மா வந்தாள்' வரவர அடங்காதது அடங்கி அவருக்குப் பிடிபட்டுவிட்டது. சிறுகதைகளில் தாம் மனுஷன், மன்னர்!

ஜீவி said...

@ ஸ்ரீராம் (4)

அறியின் உங்கள் பாஸிடிவ் வரிசையில் போட்டு பெருமைப்பட்டுப் போவீர்கள்.

அறியாததையெல்லாம் அறிய வைக்கிற கூகுள் ஆண்டவரே என்று வேண்டிப் பாருங்களேன்.:))

நிறைய வீரபாண்டியர்கள் இருக்கிறார்கள். இவர் எஸ்.வீரபாண்டியன்.

ஜீவி said...

@ ஸ்ரீராம்

நான் 'துக்ளக்'கில் வெளிவந்தத் தொடரை சேர்த்து வைத்திருக்கிறேன். வெகுதிரள் மக்களுக்குத் தெரியாத பல தகவல்கள் இந்த நூலில் இருப்பதே இதற்கான சிறப்பு.

ஜீவி said...

@ ஸ்ரீராம்

முன்பு புத்தகப் பதிப்பிற்காகவென்றே திட்டமிட்டு பதிவுகளை எழுதி வந்தேன்.

இப்பொழுது அப்படியில்ல. பல விஷயங்களை 'கவரப்' செய்து நிறைய எழுத வேண்டும் என்று ஆசை வந்திருக்கிறது.

பதிவை விட பின்னூட்டங்களில் நிறைய பதிவு தொடர்பாக பேச முடிகிறது என்பது ஒரு செளகரியம்.

சிலர் பின்னூட்டங்களுக்கு பதிலளித்து வாசித்தவர்களின் அனுபவங்களோடு கலந்து கொள்ளவே யோசிக்கிறார்கள். சிலர் பின்னூட்டங்களில் கருத்துக்களைச் சொல்லி வீணடிப்பாதை விட அவற்றை வெவ்வேறு பதிவுகளில் பதிஜ்து பதிவு எண்ணிக்கையை கூட்ட வேண்டும் என்று நினைக்கிறார்கள்.

உண்மையிலேயே 'பதிவுகளில் பின்னூட்டங்கள்' என்கிற சப்ஜெக்ட் ஒரு அமுதசுரபி. எழுத எழுத அதைப் பற்றிய நிறைய உண்மைகள் வந்து கொண்டே இருக்கும்!

ஜீவி said...

@ வை.கோ.

சின்னச் சின்ன பகிர்தல்களில் எழுதுபவர்க்கும், வாசிப்பவருக்கும் இருக்கும் சுகம் இத்தனை நாள் தெரியாமல் இருந்தது. தெரிந்து கொண்டேன், கோபு சார்!

கூடிய வரை இந்த முறையை இனி பின்பற்றி வருகிறேன். பின்னூட்டப் பெட்டி கிடைக்காமல் தாங்கள் பட்ட சிரமத்தை நீங்கள் அனுப்பிய மெயில் மூலம் அறிந்து வருந்தினேன், அதையே copy & paste பண்ணி பதிப்பித்து விடலாம் என்று நினைத்த பொழுது உங்களின் பின்னூட்டமும் வந்து சேர்ந்து விட்டது. ரொம்ப நன்றி,சார்!

வல்லிசிம்ஹன் said...

நிறைய அறிந்து கொண்டேன்.ஜீவி சார்.
தமிழுடன் என்னை இணைப்பவர்களில் ஸ்ரீராம் பெரும்பங்கு வகிக்கிறார். அவரது பட்டியலில் இருந்து எங்கள் எல்லோருக்கும் பிடித்த பதிவுகளைப் படிக்க நமுடிகிறது. இன்று கிடைத்த அவல் சுவையானது.

‘தளிர்’ சுரேஷ் said...

சுவையான செய்திப் பகிர்வுகள்! சுவாரஸ்யம்! மிக்க நன்றி!

ஜீவி said...

@ வல்லிசிமஹன்

வாங்க, வல்லிம்மா..

புத்தகங்கள், எழுத்தாளர்கள், பத்திரிகைகள் என்று உங்களுக்கும் எனக்கும் பிடித்த நிறைய தகவலகளைப் பகிர்ந்து கொள்ளலாம்.

தவறாது வருகை தர வேணும். நன்றி.;

ஜீவி said...

@ தளிர் சுரேஷ்

வாருங்கள், நண்பரே! இன்னும் நாலு வரி எழுத மாட்டீர்களா என்று எதிர்பார்க்கிற பின்னூட்டம். நன்றி.

தொடர்ந்து வருகை தர வேணும். நன்றி.

Related Posts with Thumbnails