பகுதி: 9
சிலப்பதிகாரம் தமிழின்
ஐம்பெருங்காப்பியங்களில் முன் தோன்றியது.
ஐந்து பெரும் காப்பிய குடும்பத்திற்கும் தலைமை தாங்குகின்ற தலைமகன் மாதிரி
சகல இலட்சணங்களும் பொருந்திய படைப்பாக இது இருக்கிறது. அதுவும் தவிர ஒரு காப்பியம்
என்றால் இப்படித் தான் இருக்க வேண்டும் என்று தன் மனத்திற்குள் வடித்துக் கொண்டு
பார்த்துப் பார்த்து இழைத்த காவியமாய் பிற்கால நாவல் இலட்சணங்களையும் கொண்டு இளங்கோவடிகள் இந்தக் காப்பியத்தைப்
படைத்திருப்பது அவரது அளப்பரிய புலமையின் சிறப்புகளை எடுத்துக் காட்டுவதாய்
உள்ளது.
சிலப்பதிகாரமே முன் தோன்றிய முதல்
காப்பியமாதலால், அந்தக் காப்பியத்தை வரையறைப்படுத்துவதற்கும் வழிகாட்டுவதற்கும்
இதற்கு முன் தோன்றிய காப்பியங்கள் தமிழில் ஏதுமில்லை. இருந்தாலும் இதற்கு பின் தோன்றும் இந்த மாதிரி
படைப்புகளுக்கு வழிகாட்டுகிற சகல இலக்கியச் சிறப்புகளுடன் அடிகளார் இதைப்
படைத்திருப்பது தான் இந்தக் காப்பியத்திற்கான சிறப்பாகிப் போகிறது.
இளங்கோ அடிகளுக்குப் பிடித்த எண்
மூன்று போலிருக்கிறது.
முத்தான மூன்றாய்
அமைந்த செய்திகள் இந்த சிலப்பதிகாரத்தில் நிறைய உண்டு. அந்நாளைய தமிழகத்தை ஆண்ட மாமன்னர்கள் மூன்றாக இருந்ததுவும் இந்த சிறப்புகளுக்குச் சிறப்பு சேர்க்கிறது. அடிகளார் சிலப்பதிகாரத்தை மூன்று
காண்டங்களாகப் பிரித்திருக்கிறார் என்று முன்பே பார்த்தோம். அந்த மூன்று காண்டங்களில் உள்ளடக்கப்பட்ட முப்பது
காதைகள். காண்டம் என்பதைப் பெரும்
பிரிவுகள் என்று கொண்டால் காதைகளை அவற்றுள் அடக்கப்பட்ட சிறு பிரிவுகள் என்று
கொள்ளலாம். மூன்று பெரும் பகுதிகளுக்குள்
அடக்கப்பட்ட முப்பது உள் தலைப்புகளான சிறு
பிரிவுகள்.
இந்த முப்பது காதைகளையும்
காண்டத்திற்கு பத்து காதைகளாக அடிகளார் பிரிக்கவில்லை. புகார் காண்டத்தில் பத்து
காதைகளும், மதுரைக் காண்டத்தில் பதின்மூன்று காதைகளும், வஞ்சிக் காண்டத்தில் ஏழு காதைகளுமாக முப்பது காதைகள். ஆக மதுரைக் காண்டத்திற்குத் தான் அதிக காதைகள்.
புகார் காண்டம் கோவலன்—கண்ணாகி
திருமணம், அவர்களது இல்லற வாழ்வின் சிறப்புகளும் என்று ஆரம்பமாகிறது. மூன்றாவது காதையான அரங்கேற்றுக் காதையில்
கணிகையர் குலத் தோன்றல் மாதரசி மாதவியின் அறிமுகம். சோழ மன்னன் முன்னிலையில் அவள்
நாட்டிய அரங்கேற்றம். அந்த அரங்கேற்றத்தில் சோழன் ஆயிரத்தெட்டு கழஞ்சு பொன்
மதிப்புடைய ஒரு மாலையை மாதவியின் அரங்கேற்ற நாட்டியத்திற்கான பரிசாக
அளிக்கிறான்.
சிலப்பதிகாரத்திலும் ஒரு
கூனி வருகிறாள். இவள் ஆடலரசி மாதவியின்
தோழி. மாதவியின் தாய் சித்திராபதி, கூனியிடம் தன்
மகளுக்கு அரசன் அளித்த மாலையைக் கொடுத்து ‘இந்த மாலையை வாங்குவதற்கு வசதி
படைத்தவன் மாதவியை அடையட்டும்’ என்று
கூனியை ஆடவர் திரியும் வீதியில் மாலையும் கையுமாக நிறுத்தி வைக்கிறாள்.
விதி
சதி செய்ய வீதியில் நின்ற கூனியிடம் அந்த மாலையை வாங்கி மாதவியை அடைகிறான்
கோவலன். புதுக்கருக்கு கலையாத மண
வாழ்க்கையில் இன்னொரு பெண் நுழைந்தது விதி வசத்தால் என்றாலும் மனைவி இருக்க
கணிகையரையும் அவ்வப்போது நாடும் அக்கால காளையரின் காம இச்சைக்கு கோவல வண்டின் மலர்
தாவுதல் சாட்சியம் கூறுகிறது.
ஆனால் மாதவி வித்தியாசமானவள் என்பது
தான் இந்த காப்பியத்திற்கான எதிர்பாராத
ஆரம்ப முடிச்சாக அமைகிறது. நிலா முற்றத்தில் கோவலனுடன் கூடிக் களித்த மாதவி
அவனையே தன் கணவனாக மனசில் வரிக்கிறாள். கூடலும் ஊடலுமாய் மாதவியுடன் நேர்ந்த சுகத்தொடக்கம்,
கோவலனுக்கு கண்ணகியை மறக்கும் அளவுக்கு பேரின்பமாய் இருக்கிறது. கணவனைப் பிரிந்த
கண்ணகியின் நிலையோ அனலின் அருகாமை கண்ட
மெழுகின் நிலை.
இடையே
இந்திரவிழா
வந்து
ஊரெல்லாம்
விழாக்கோலம்
பூணுகிறது.
ஒரு
நாவலில்
ஊடாடிய
நிகழ்வு
கொண்டாடங்களை
விவரிக்க
அடிகளாருக்கும்
அட்டகாசமான
வாய்ப்பு
கிடைக்கிறது. இந்திர
விழவூரெடுத்த
காதை
என்று
இந்திர
விழா
நிகழ்ச்சிகளை
விவரிப்பதற்காகவே
ஒரு
தனிக்
காதை
ஒதுக்கி
சிறப்பு
செய்கிறார்
இளங்கோ.
கடலாடு காதையை அடுத்த கானல்வரியில் மாதவியின் பிரிவு. நிறைமதி நன்னாளில் புதுப்புனல் விழாவைக் கொண்டாடும் தலை நாளில் புகார் நகரத்து கடலில் விளையாடிக் களிக்கும் ஆசையில் மக்கள் கடற்பரப்பு நோக்கி விரைகின்றனர். மஞ்சத்தில் கோவலனுடன் கூடிக் களித்திருந்த மாதவி
‘கடலாடி வருவோம்’ என்ற தன் ஆசையைச் சொல்ல கோவலன் அவள் கைப்பிடித்து
அழைத்துச் செல்கிறான். அவர்களைத் தொடர்ந்து வரும் விதியும் அந்தக் கடற்பரப்பில்
தன் கைவரிசையைக் காட்டி விளையாடுகிறது.
கானல்வரிக்
காதையை அழகான வரிப்பாட்டுகளால் நிரப்புகிறார் அடிகளார். கடல்காட்சியுடனான
பின்னணியில் அந்தப் பின்னணி தந்த களிப்பில் மாதவி கோவலனிடம் யாழைத் தந்து,
யாழிசைக்க வேண்டுகிறாள். அவள் களிப்பு
கோவலனுக்கு உன்மத்தமூட்டுகிறது. கோவலன்
மகிழ்ச்சியுடன் யாழை வாங்கி அதை இசைக்கத் தொடங்குகிறான்.
இங்கும் இளங்கோவுக்குப் பிடித்த அந்த மூன்று எண்ணிக்கை. காவிரியை தலைமகளாகக் கொண்டு மூன்று ஆற்றுவரிப் பாடல்கள்.! சிலப்பதிகாரத்தின் வாசிப்பு சுகத்திற்காக கோவலன் காவிரியை வாழ்த்திப் பாடும் இரு ஆற்றுவரிப் பாடல்களை மட்டும் இங்கு எடுத்தாளுகிறேன்:::
இங்கும் இளங்கோவுக்குப் பிடித்த அந்த மூன்று எண்ணிக்கை. காவிரியை தலைமகளாகக் கொண்டு மூன்று ஆற்றுவரிப் பாடல்கள்.! சிலப்பதிகாரத்தின் வாசிப்பு சுகத்திற்காக கோவலன் காவிரியை வாழ்த்திப் பாடும் இரு ஆற்றுவரிப் பாடல்களை மட்டும் இங்கு எடுத்தாளுகிறேன்:::
திங்கள் மாலை
வெண்குடையான் சென்னி செங்கோல் அது ஓச்சி
கங்கை தன்னைப்
புணர்ந்தாலும் புலவாய் வாழி காவேரி!
கங்கை தன்னைப்
புணர்ந்தாலும் புலவாது ஒழிதல் கயற்கண்ணாய்
மங்கை மாதர்
பெருங்கற்பென்று அறிந்தேன் வாழி காவேரி!
மன்னு மாலை வெண்குடையான் வளையாச் செங்கோல் அது ஓச்சி
கன்னி தன்னைப் புணர்ந்தாலும் புலவாய் வாழி காவேரி!
கன்னி தன்னைப் புணர்ந்தாலும் புலவா தொழில் கயற்கண்ணாய்
மன்னு மாதர் பெருங்கற்பு என்று அறிந்தேன் வாழி காவேரி!
மன்னு மாலை வெண்குடையான் வளையாச் செங்கோல் அது ஓச்சி
கன்னி தன்னைப் புணர்ந்தாலும் புலவாய் வாழி காவேரி!
கன்னி தன்னைப் புணர்ந்தாலும் புலவா தொழில் கயற்கண்ணாய்
மன்னு மாதர் பெருங்கற்பு என்று அறிந்தேன் வாழி காவேரி!
கற்பை அணிகலனாகக் கொண்ட பெண்கள் தங்கள் கணவர் பிற பெண்களுடன்
கூடினாலும் தம் கணவனை வெறுக்க மாட்டார்கள். அப்படி வெறுக்காமல் இருப்பதும் அவர்களின்
கற்பின் சிறப்பே!” என்ற அர்த்ததில் யாழிசைத்துப் பாடுகிறான். அவன் அப்படிப் பாடியதில் வேறு யாரோ பெண்ணை அவன விரும்புவது
போல குறிப்பு இருப்பதாகக் கருதி மனச்சுணக்கம் கொள்கிறாள் மாதவி.
ஆனால் கோவலன் பாடிய அந்த ஆற்றுவரிப் பாடலில் அவன் மனச்சாட்சி அவனைக்
குத்திக் காட்டுவதாக என் எண்ணம். தன் செயலுக்கு நியாயம் கற்பிக்க கண்ணகியின்
கற்பைத் துணைக்கழைக்கிறான் அவன்.. காதல் மனைவியைத் தனித்து விட்டுத் தான் மாதவியுடன் உல்லாசத் தொடர்ப்பு கொண்டிருப்பினும் தன்னைக்
காத்துக் கொண்டிருப்பது கண்ணகியின் கற்பே என்று கண்ணகியின் கற்பின் நிழலில்
ஒதுங்குகிறான்.
---- இந்தக் கருத்து சிலப்பதிகாரத்திற்கு இதுவரை உரை எழுதிய எந்த
ஆசிரியரும் சொல்லாத கருத்து. ஆதலின் இதனை
என் கருத்தாகவே கொண்டு உங்கள் எண்ணத்தையும் சொல்லுங்கள்.
(தொடரும்)
படங்கள் உதவிய நண்பர்களுக்கு நன்றி.
55 comments:
//இந்த முப்பது காதைகளையும் காண்டத்திற்கு பத்து காதைகளாக அடிகளார் பிரிக்கவில்லை. புகார் காண்டத்தில் பத்து காதைகளும், மதுரைக் காண்டத்தில் இருபத்து மூன்று காதைகளும், வஞ்சிக் காண்டத்தில் ஆறு காதைகளுமாக முப்பது காதைகள். ஆக மதுரைக் காண்டத்திற்குத் தான் அதிக காதைகள்.//
புகார் காண்டத்தைப்பற்றி நான் புகார் அளிப்பதாக எண்ண வேண்டாம்.
10 + 23 + 6 = 39 அல்லவா! ..... ஒன்பது காதைகள் எங்கோ உபரியாக வந்துள்ளன.
அதனால் எங்கோ இந்தக் கணக்கு இடிக்கிறது.
//சிலப்பதிகாரத்திலும் ஒரு கூனி வருகிறாள்.//
ஆஹா ! அந்தக்கால இலக்கியங்களில் கூனி இல்லாமல் ராணிகளே (கதாநாயகிகளே) இல்லை போலும்.
அதைத்தான் இப்போது நம் டி.வி. மெகா தொடர்களில் வில்லிகள் எனச் சொல்கிறார்களோ.
>>>>>
// புதுக்கருக்கு கலையாத மண வாழ்க்கையில் இன்னொரு பெண் நுழைந்தது விதி வசத்தால் என்றாலும் மனைவி இருக்க கணிகையரையும் அவ்வப்போது நாடும் அக்கால காளையரின் காம இச்சைக்கு கோவல வண்டின் மலர் தாவுதல் சாட்சியம் கூறுகிறது.//
மலர் தாவும் கோவல வண்டு ..... அழகான வார்த்தைப் பிரயோகங்களாக உள்ளன.
>>>>>
//மாதவி வித்தியாசமானவள் என்பது தான் இந்த காப்பியத்திற்கான எதிர்பாராத ஆரம்ப முடிச்சாக அமைகிறது. நிலா முற்றத்தில் கோவலனுடன் கூடிக் களித்த மாதவி அவனையே தன் கணவனாக மனசில் வரிக்கிறாள். கூடலும் ஊடலுமாய் மாதவியுடன் நேர்ந்த சுகத்தொடக்கம், கோவலனுக்கு கண்ணகியை மறக்கும் அளவுக்கு பேரின்மாய் இருக்கிறது.//
எதிர்பாராத இந்த ஆரம்ப முடிச்சும், கோவலனையே தன் கணவனாகவே வரித்த மாதவியின் மிகச்சிறந்த அற்புதமான மனசும், மாதவியால் கோவலனுக்குக் கிடைத்த பேரின்பமும் இந்தக் காவியத்திற்கே சுவையூட்டும் சம்பவங்களாக அமைந்துள்ளன.
>>>>>
//ஆனால் கோவலன் பாடிய அந்த ஆற்றுவரிப் பாடலில் அவன் மனச்சாட்சி அவனைக் குத்திக் காட்டுவதாக என் எண்ணம். தன் செயலுக்கு நியாயம் கற்பிக்க கண்ணகியின் கற்பைத் துணைக்கழைக்கிறான் அவன்.. காதல் மனைவியைத் தனித்து விட்டுத் தான் மாதவியுடன் உல்லாசத் தொடர்ப்பு கொண்டிருப்பினும் தன்னைக் காத்துக் கொண்டிருப்பது கண்ணகியின் கற்பே என்று கண்ணகியின் கற்பின் நிழலில் ஒதுங்குகிறான்.//
கோவலன் என்று இல்லை. தவறுதலான பாதையில் செல்லும் யாருமே, தங்களுக்குள் தங்களுக்கென்றே சாதகமாக வாதாட ஓர் தனியான நியாயம் வைத்திருப்பார்கள். அவர்களின் மன சாட்சி ஒருபக்கம் அவர்களை அவ்வப்போது குத்திக்காட்டி கேலி செய்துகொண்டேதான் இருக்கும்.
இதில் தங்களின் மனசாட்சிப்படியான .... தங்களின் எண்ணமாகச் சொல்லியிருப்பதும் சிறப்புடையதாகவே உள்ளது.
பகிர்வுக்கு பாராட்டுகள் ..... நன்றிகள் ..... தொடரட்டும் இதுபோன்ற இலக்கியச்சுவை.
அந்தக் கால வழக்கம் பற்றி இந்தக் காலத்தில் சிந்தித்துக் கூட உணர முடியாது. அந்தக் கால மகளிர் கணவன் கணிகையர் வீடு போனாலும் பொறுத்திருப்பார்கள். மகன் தந்தையின் காம வாழ்க்கைக்கு வயது கொடுப்பான். நீங்கள் சொல்வது போல கணவன் ஆண் இதைப் பாடும்போது 'அதுதானே இயல்பு?' என்று சொல்வது இந்தக் காலத்தைப் பொறுத்த வரைதான் சப்பைக் கட்டு. அந்தக் காலத்தில் வழக்கத்தைப் பாடுகிறார்!
மூன்றாம், இரண்டாம் படங்கள் படங்கள் லதா, மாருதியின் கைவண்ணம் என்று தெரிகிறது! முதல் படம் யார் என்று தெரியவில்லை.
@ வைகோ (1)
காசாளர் பணி பார்த்திருக்கிறீர்கள் என்றால் சும்மாவா? நான் தான் தவறாக தட்டச்சு செய்து விட்டேன். இப்பொழுது சரி செய்து விட்டேன்.
சுட்டிக் காட்டியதற்கு நன்றி, கோபு சார்..
ஜீவி said... @ வைகோ (1)
காசாளர் பணி பார்த்திருக்கிறீர்கள் என்றால் சும்மாவா? நான் தான் தவறாக தட்டச்சு செய்து விட்டேன். இப்பொழுது சரி செய்து விட்டேன்.
சுட்டிக் காட்டியதற்கு நன்றி, கோபு சார்..//
சரி, அதுபோகட்டும். 10 + 13 + 7 = 30 இப்போ அது OK.
இன்னொரு கணக்கும் உதைக்கிறது எனக்கு. நான் வரிசையாக அனுப்பி வைத்த பின்னூட்டங்கள் மொத்தம் ஐந்து. தாங்கள் வெளியிடப்பட்டுள்ளதோ மூன்று மட்டுமே.
மீதி இரண்டு இன்னும் எனக்குக் கணக்கு உதைக்கிறது. தேர்தல் நேரத்தில் பறக்கும் படையினரால் ஒருவேளை அவை மடக்கப்பட்டுவிட்டதோ / முடக்கப்பட்டு விட்டதோ ! :)
வைகோ சார்!
//மீதி இரண்டு இன்னும் எனக்குக் கணக்கு உதைக்கிறது. தேர்தல் நேரத்தில் பறக்கும் படையினரால் ஒருவேளை அவை மடக்கப்பட்டுவிட்டதோ / முடக்கப்பட்டு விட்டதோ ! ://
நல்ல டைமிங் ! ரசித்தேன்.
ஜீவி சார்!
உண்மையை சொல்லவா? எனக்கு எதனாலோ மாதவியின் மீதான பரிவு, கண்ணகியின் மீதான நன்மதிப்பைவிட ஒரு மாத்திரை கூடத்தான்! கல்லூரிக்கு காலங்களில் 'மாதவியே ! கண்ணகியே!' என்று கட்சிகட்டிக்கொண்டு வாதிட்டதும் அந்த வாதத்திற்காக முனைந்து சிலம்பை உருப் போட்டதும் இனிய நினைவுகள்.
கோவலன் குற்றவுணர்ச்சியும் கண்ணகியின் கற்பு அவனைந்தீரோ காப்பதாகக் கொண்டதும் உங்கள் மேதைமை ஜீவி சார்.
உங்கள் கருத்து மிகச் சரியே
பெரும் காப்பியத்தை என் போன்றோர்
மிக எளிதாகப்
புரிந்து கொள்ளும் வண்ணம்
பருந்துப் பார்வையாகவும்
மிக நெருங்கியப் பார்வையாகவும்
கொடுத்த விதம் மிக மிக அருமை
அடுத்த பதிவை ஆவலுடன் எதிர்பார்த்து
இளங்கோ அடிகள் ஊழ், விதி என்று எல்லாம் தன் கதையில் சொல்கிறார்.
விதியின் செய்லால் மாதவியின் பாடலில் கருத்து மாறுபாடு ஏற்பட்டது. யாழ் வாசிக்கும் போதே அதில் பண்ணை மாற்றி வாசிக்கிறாள்.
கணிகையாக இருந்தாலும் கற்பு நெறியுடன் வாழ்ந்தவள் தான் மாதவி.
முதல் படம் மணியன் செல்வன் வ்ரைந்த படம் என்று நினைக்கிறேன் ஸ்ரீராம்.
வை.கோ.
ஒரே இடத்துக்குப் போக வேண்டியவைகளை தனித்தனி பார்ஸல்களாக அனுப்பி வைத்திருந்தீர்கள், அல்லவா?.. அதனால் தான் ஒன்று மாற்றி ஒன்று வந்து சேர்ந்திருக்கிறது. இப்பொழுது சரியாய் இருக்கும் என்று நினைக்கிறேன்.
@ மோகன்ஜி
இளங்கோவின் வழக்கமான கணக்குப்படி மூன்று.
இன்னொருத்தரை விட்டு விட்டீர்களே?..
ஜீவி said... வை.கோ.
//ஒரே இடத்துக்குப் போக வேண்டியவைகளை தனித்தனி பார்ஸல்களாக அனுப்பி வைத்திருந்தீர்கள், அல்லவா?..//
நமக்குள் ஒருவருக்கொருவர் அனுப்பிக்கொள்வதை மட்டும் தனித்தனி பார்ஸல்களாகவே அனுப்பிக்கொள்வோம் என நானும் மணிராஜ் திருமதி. இராஜராஜேஸ்வரி அவர்களும் என்றைக்கோ பல வருடங்கள் முன்பு எங்களுக்குள் செய்துகொண்ட ஒப்பந்தம் இது. இன்றுவரை அதையே நானும் மிகவும் ஸ்ட்ரிக்ட் ஆக கடைபிடித்து வருகிறேன்.
இதனால் ஆழ்ந்து படித்து ஆங்காங்கே ரஸித்ததை தனித்தனியே சொல்வதில் ஓர் பேரின்பம் பின்னூட்டமிடுபவருக்கு .... கோவலனுக்கு மாதவியிடம் ஏற்பட்டது போலவே.
பதிவிட்டவருக்கும் ஓர் சிற்றின்பம் .... ஆஹா பல எண்ணிக்கைகளில் நம் இந்தப்பதிவுக்குப் பின்னூட்டம் எகிறிக்கொண்டிருக்கிறதே ... என்று. :)
//அதனால் தான் ஒன்று மாற்றி ஒன்று வந்து சேர்ந்திருக்கிறது. இப்பொழுது சரியாய் இருக்கும் என்று நினைக்கிறேன்.//
9.51 AM தொடங்கி 10.34 AM வரை ... 43 நிமிடங்களுக்குத் தொடர்ச்சியாகவே ஐந்து பார்ஸல்களையும் நான் அனுப்பி வைத்தேன். அது எப்படியோ இரண்டு மட்டும் நடுவில் காணாமல் போய் இப்போது கிடைத்துள்ளது. எனினும் மகிழ்ச்சியே.
இப்போது எல்லாமே ஓக்கே. மிக்க நன்றி ஸார்.
@ ஸ்ரீராம்
தப்பு தான். வீபிஷணனா, கும்பகர்ணனா என்றெல்லாம் பட்டிமன்றங்கள் நடக்கும் பொழுது அந்தக் காலத்தில் நடந்தவைகளுக்கு இந்தக் காலத்தில் சாட்டையை சுழற்றுகிறார்களே என்று நானும் நினைத்துக் கொள்வதுண்டு.
ஆனால் ஒரு விஷயத்தைப் பாருங்கள். கோவலனுக்கு இன்னொரு பெண்ணிடம் நாட்டம் இருப்பது போல அவன் பாடியதைப் புரிந்து கொண்ட மாதவிக்கு கோபம் பொத்துக் கொண்டு வருகிறது. அந்த அளவுக்கு காதலனை விட்டுக் கொடுக்காமையில் இது வளர்ச்சி இல்லையா?..
சங்க கால 'கற்பு' புரிதலில் இருந்த போக்குகளை எடுத்துக் காட்டி, அந்த நிலையிலிருந்து தன் காப்பியத்தில் இளங்கோ எந்த அளவுக்கு மாற்றம் கண்டிருக்கிறார் என்பதை அடுத்து வரும் பகுதியில் எழுதப் போகிறேன். அப்பொழுது சொல்லப் போவது எடுபடுவதற்காக இந்த அடித்தளம்.
'கற்பு' என்பது கற்பனையே என்ற எண்ணம் செல்வாக்கு பெற்றிருக்கும் காலமாகவும் தற்காலம் தெரிகிறது. 'எப்படிப் பட்ட கணவ்ரை நீங்கள் விரும்புவீர்கள்?' என்ற கேள்வி கேட்கப்பட்டு ஒரு நிகழ்ச்சி தொலைக்காட்சியிலோ இல்லை... சரி, விட்டுத் தள்ளுங்கள்.
@ ஸ்ரீராம் (2)
எனக்கும் தான். கூகுள் இமேஜ் தயவு.
@ வை.கோ. (2)
கூனி என்றால் கூன் விழுந்தவர்கள், இல்லையோ?.. தற்கால தொலைக்காட்சி வில்லிகள் கூன் நிமிர்ந்தவர்கள் போலிருக்கு.
@ வை.கோ. (3)
பாவம் இந்த வண்டுகள். வயிற்றுக்கு ஈவதற்காக அவை உறிஞ்சுவதை போய் இலக்கியங்களில் என்ன பாடு படுத்துகிறார்கள்?.
அமர்ந்த பூக்களின் மகரந்தங்கள் அவற்றில் கால்களில் ஒட்டிக் கொண்டு... இலவச சேவை வேறு!
வண்டுகள் இல்லையென்றால் 'மகரந்த சேர்க்கை' என்ற இயற்கையின் ஏற்பாடே அஸ்தமித்துப் போய் விடுமோ?.. பாவம், இந்த வண்டுகள்.
நினைத்தால் பரிதாபமாக இருக்கிறது.. கொலைக்க்ளப்ப்டப் போகும் கோவல வண்டும் பாவம் தான்!
தமிழ் படித்த இந்தப் பேராசிரியர்கள் எல்லாம் இந்த சிலப்பதிகாரத்தை வைத்துக் கொண்டு என்னவெல்லாம் ஆராய்ச்சிகள் செய்திருக்கிறார்கள், என்கிறீர்கள்?..
பொற்கழ்சுகளுக்கு ஈடாக விற்கப்படப் போகிறோம் என்று தெரிந்திருந்த மாதவி அன்று சந்தித்த கோக்வலனைக் கணவன் நிலைக்கு ஏற்றுவது எப்படி?
கோவலன் ஏற்கனவே திருமண்மானவன் என்றூ மாதவிக்கு தெரிந்திருக்குமா? அப்படி தெரிந்திருப்பில் கோவலனின் மீது அவள் உரிமை கொண்டாடுவது எந்த விதத்தில் நியாயம்?..
'கோவலனுக்கு ஏற்ற மனைவி தானா கண்ணகி?'என்ற கேள்வி கேட்டு கண்ணகி என்ற ஒரு கற்பு இயுந்திரம் என்ற கட்டுரை எழுதிய எழுத்தாளர் இந்திரா பார்த்தசாரதி---
இன்னும் இன்னும் என்னவெல்லாமோ.. வேண்டாம், போதும்.
சிலப்பதிகாரத்தைப் படிப்பதைக் காட்டிலும் சுவாரசியம் தருகிறது தங்கள் எழுத்து. \\\\தமிழ் படித்த இந்தப் பேராசிரியர்கள் எல்லாம் இந்த சிலப்பதிகாரத்தை வைத்துக் கொண்டு என்னவெல்லாம் ஆராய்ச்சிகள் செய்திருக்கிறார்கள், என்கிறீர்கள்?..///
நான் தமிழாசிரியன் இல்லை . ஆனாலும் என் பாக்குக்கு நானும் சிலம்பை விட்டு வைக்கவில்லை.
http://sivakumarankavithaikal.blogspot.com/2010/11/blog-post_19.html
@ வை.கோ. (4)
1. கோவலனையே தன் கணவனாக வரித்த மாதவியின் அற்புதமான மனசு--
2. மாதவியால் கோவலனுக்குக் கிடைத்த பேரின்பமும்--
என்று பகுதி பகுதியாகப் பிரித்துப் பார்த்திருக்கிறீர்கள்.
கோவலன் என்ற ஆணின் பார்வையில் இதெல்லாமே அவனுக்கு செளகரியமான ஏற்பாடுகள் தாம். இருப்பினும் காப்பியச் சுவையைக் கூட்டும் அம்சத்தில் கசப்பான சுவையாக இவை அமைந்து விட்டனவோ என்று பார்ப்பாரும் உண்டு. 'இருக்கட்டுமே! கசப்பும் ஒன்பான் சுவைகளில் ஒன்று தானே' என்று சப்புக் கொட்டுபவர்களும் உண்டு.
ஆனால் இளங்கோவடிகளோ அவர் விஷயத்தில் உடும்புப் பிடியாக இருக்கிறார். அவருக்குப் பிடித்த அந்த மூன்றை ஸதாபிப்பதிலேயே கண்ணும் கருத்துமாக இருக்கிறார். மூன்றில் ஒன்று ஊழ்வினை. எல்லாமே அவரவர் செய்த வினையில் அடிப்படையில் அமைவது என்று ஒரே போடு.
மாதவி செய்த வினையின் அடிப்படையில் அவள் மனசு கோவலனை கணவனாக வரிப்பதும், கோவலன் செய்த வினையின் அடிப்படையில் மாதவியுடனான கூடலில் அவன் பெற்ற இன்பமும் என்று இருவரின் வினையின் அடிப்படையிலான வினைப்பலன்கள் ஒன்றாகப் பிணைந்து கூட்டு சேருகின்றன.
ஊழ்வினை என்பதை செய்த காரியத்திற்கான பலன் என்றே கொள்ள வேண்டும். அப்ப்டியாக கிடைக்கும் அந்த ஊழ்வினைப் பலனில் துன்பம் மட்டுமே இல்லை என்றுத் தெரிகிறது. விதிவசத்தல் இன்பமும் உண்டு என்பது தெளியும் போது சந்தோஷம் கூடுகிறது. ஆனால் சில இன்பங்கள் துன்பங்களுக்கு இட்டுச் செல்லும் இன்பங்கள் என்றாகும் போது அந்தந்த சமயங்களில் அப்படியான இன்பங்களைத் தவிர்க்கவும் தோன்றுகிறது.
ஊழ்வினை என்ற பிர்மாண்டம் நம்மை அழுத்தும் பொழுது இந்த மாதிரியான தவிர்த்தல்கள் முடியுமா என்பது அடுத்த கேள்வி.
முடியும் என்பதே பதில். செய்யும் வினைகளில் (காரியங்களில்) அதிகபட்ச கவனம் கொண்டால் அந்த மாதிரியான தவிர்த்தல்கள் முடியும்.
ஆனால் நாள்தோறும் நாம் செய்யும் அடுக்கடுக்கான வினைச் செயல்களில் இந்த மாதிரியான தீவிர கவனம் கொள்ள முடியாமல் போய் சிலவற்றைத் தவிர்த்தல் முடியாமல் போகும். அப்படி முடியாமல் போவதும் நமக்காக அமைந்து போன ஊழ்வினையின் ஒரு அமசமே என்கிறார்கள் பெரியோர்கள்.
@ வை.கோ.
//எனக்கு கணக்கு உதைக்கிறது..//
கணக்கு உதைக்கிறது என்கிற வழக்கு மொழி எப்படி வந்தது என்று தெரியவில்லை. கணக்கு என்றாலே எனக்குத் தகராறு தான் என்று இன்னொரு பேச்சு மொழி.
கணக்குப் பாடம் மட்டும் தான் இந்த பழிச்சொல்லையெல்லாம் ஏற்று கொண்டிருக்கிறது. கணக்குத் திணிப்பு எதிர்ப்பு என்று மட்டும் நல்லவேளை யாரும் போராடவில்லை.
@ மோகன்ஜி
//உண்மையை சொல்லவா? எனக்கு எதனாலோ மாதவியின் மீதான பரிவு, கண்ணகியின் மீதான நன்மதிப்பைவிட ஒரு மாத்திரை கூடத்தான்! //
பாலகுமாரன் சொன்னது ஞாபகம் வருகிறது.
"பெண்ணை பொருள் போகம் என்று நினைத்தவனுக்கு சிரமமுமில்லை; சந்தோஷமும் இல்லை. 'செம்புலப்பெயல் நீர் போல அன்புடை நெஞ்சம் தாம் கலந்தனவே' என்று உருகுகிறவனுக்குத் தான் சந்தோஷம், சிரம் எல்லாம்' என்பார் அவர்.
@ எஸ். ரமணி
பருந்துப் பார்வை-- நெருங்கிய பார்வை உதாரணம் உங்கள் ரசனையின் வெளிப்பாடு.
'மிகச் சரியே' என்று வழிமொழிந்தமைக்கு நன்றி. சில விஷயங்களில் விவாதம் வேண்டும் என்று நினைக்கிற விஷயங்களில் இது ஒன்று.
தொடர்ந்து வந்து வாசித்து கருத்திட வேண்டுகிறேன்.
@ கோமதி அரசு
'விதியின் செயலால் மாதவியின் பாடலில் கருத்து மாறுபாடு ஏற்பட்டது' என்று
சொல்வது மாதவியின் உள்ளுணர்வை ஒரு மாற்று குறைத்து மதிப்பிடுவதாக எனக்குத் தோன்றுகிறத.
இந்த விதியின் செயல் என்பதை ஒட்டுமொத்த ஒரு காரியத்திற்குக் கொடுத்து விட்டு, அந்த ஒட்டு மொத்த காரியத்தின் பகுதிச் செயல்பாடுகளை அவரவர் மனம் சார்ந்த நடவடிக்கைகளாகக் கொண்டால் ஓரளவு சரிப்பட்டு வரும்.
உதாரணத்திற்கு கோவல்ன்--மாதவி சந்திப்பு விதியின் செயல் என்று கொண்டு அவர்கள் உறவு தொடர்பானவை அவரவர் உணர்வு தொடர்பானவை என்று கொண்டால் உயிர் கொண்டு உலாவும் மனித மனங்களுக்கு ஒரு மரியாதை கொடுத்த மாதிரி இருக்கும்.
எல்லாமே விதியின் செயல் என்று நினைப்பது மனிதனை செயல்பட விடாது முடங்க வைக்கும். ஆனால் எல்லாமே வினையின் செயல் ( செயல்படும் காரியத்தின் விளைவு) என்று எண்ணிப்பாருங்கள், ஏற்றுக் கொள்கிற மாதிரி இருக்கும். 'அவரை விதைத்தால் அவரை தான்; துவரை விதைத்தால் துவரை தான்' என்று சொல்வார்களே, அந்த மாதிரி.
தங்களின் வித்தியாசமான அணுகுமுறை காப்பியத்தின்மீதான ஈர்ப்பை மேம்படுத்துகின்றது. தங்களது அனுமானத்தோடு நான் ஒத்துப்போகிறேன். நன்றி.
@ Dr. B. Jambulingam
வித்தியாசமான அணுகுமுறையை அனுபவமாய் கொண்டதற்கு நன்றி.
அனுமானத்தோடு ஒத்துப் போவதில் மிகவும் மகிழ்ச்சி. தொடர்ந்து வருகை தந்து கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள், ஐயா.
ஜீவி said... @ வை.கோ.
//கணக்கு உதைக்கிறது என்கிற வழக்கு மொழி எப்படி வந்தது என்று தெரியவில்லை.//
’கணக்கு என்பது என்ன கழுதையா .... உதைப்பதற்கு’ என நானும் என்னுள் அடிக்கடி நினைத்துக்கொள்வது உண்டு.
ஒரு ஐம்பது ஆண்டுகளுக்கு முன் என் வீட்டருகே ‘ஆரணி சலவை நிலையம்’ என்று ஒரு கடை இருந்தது. வாசலில் எப்போதும் 4-5 கழுதைகளைக் கட்டி வைத்திருப்பார்கள். அங்கு அழுக்குத் துணி மூட்டைகளை கழுதைகளின் மேல் ஏற்றி, காவிரி நதிக்கு காலையில் ஓட்டிச்செல்வார்கள். அங்குபோய் துணிகளை நன்கு துவைத்து காய வைத்தபிறகு கழுதைகளின் மேல் மீண்டும் அவைகளை மூட்டையாகக்கட்டி மாலையில் அந்தக் கடைக்கு ஓட்டி வருவார்கள். பிறகு துணிகளை இஸ்திரி போடுவார்கள். அதனால் இந்தக்கழுதைகளுடன் எனக்குக் கொஞ்சம் பரிச்சயம் உண்டு. :) ஆனால் ஏனோ இப்போது கழுதைகளையே கண்ணால் காண முடிவது இல்லை.
//’கணக்கு என்றாலே எனக்குத் தகராறுதான்’ என்று இன்னொரு பேச்சு மொழி. //
கணக்கு இருக்குமிடத்திலெல்லாம் அது மிகச்சரியாகவே, துல்லியமாகவே நிர்வகிக்கப்பட வேண்டும். அதுவும் கட்சிக்கணக்கு, ஆட்சிக்கணக்கு, பொதுமக்களின் சொத்துக்கணக்கு, தேர்தல் கணக்கு, வேட்பாளர் ஒவ்வொருவரும் தேர்தலுக்காக செலவு செய்யும் கணக்கு, அவரவர்களின் சொத்துக்கணக்கு என்றால் கேட்கவே வேண்டாம். சரியாக நிர்வகிக்கப்படாவிட்டாலோ, ஊழல் பங்களிப்பினில் கூட்டாளிகளுக்குள் பாரபட்சம் காட்டப்பட்டாலோ ஒருவருக்கொருவர் வீண் தகராறுதான் ஏற்படும். அதனாலும் இந்த இன்னொரு பேச்சு மொழி ஏற்பட்டிருக்கலாம்.
//கணக்குப் பாடம் மட்டும் தான் இந்த பழிச்சொல்லையெல்லாம் ஏற்று கொண்டிருக்கிறது. //
’எண்ணும் எழுத்தும் கண்ணெனத்தகும்’ என்றே எண்ணுக்கு (கணக்குக்கு) அதிக முன்னுரிமை கொடுத்துச் சொல்லப்பட்டுள்ளது என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும்.
’அழகிய தமிழ் மொழி இது’க்கும் மேல் முக்கியத்துவம் வாய்ந்தது, கணக்கு மட்டுமே என்பது என் ஆணித்தரமான வாதமாகும்.
ஏக், தோ, தீன், சார்; ஒன், டூ, த்ரீ, ஃபோர்; ஒன்று, இரண்டு, மூன்று, நான்கு என எந்த மொழியில் எப்படிச் சொன்னாலும் ஓக்கே. கூட்டிக்கழித்துப் பார்த்தால் கணக்குக்கு விடை கடைசியில் சரியாகவே வந்தாக வேண்டுமாக்கும். :)
@ வை.கோ.
வீடு தோறும் வாஷிங் மெஷின் வந்தது, கழுதைகள் குறைவிற்கு காரணமாகிப் போனதோ என்னவோ! கழுதைகள் உதை விடுவதற்குப் பிரசித்தி பெற்றவை ஆகையால் அவ்வவ்போது உதையை நாம் நினைத்துக் கொள்ளும் பொழுதெல்லாம் கழுதை நியாபகம் வந்து விடுகிறது.. கூடவே சுஜாதாவும் என்றால் அடிக்க வருவார்கள்.
அதுசரி, எல்லா கணக்கையும் பற்றிச் சொன்னவர் அந்த 'ரெண்டு கணக்கை'ப் பற்றிச் சொல்லாமலே விட்டு விட்டு விட்டீர்களே! (சும்மா தமாஷுக்கு. எனக்கும் தெரியும்!)
//எண்ணும் எழுத்தும் கண்ணெனத்தகும்’ என்றே எண்ணுக்கு (கணக்குக்கு) அதிக முன்னுரிமை கொடுத்துச் சொல்லப்பட்டுள்ளது என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும். //
முனைவர் தமிழ்ன்பன் என்று ஒரு தமிழ் ஆர்வலர். இவர் தமிழ் இலக்கியத்தில் எண்ணும் எழுத்தும் எப்படி வந்தது என்பதை ஆராய்ந்து 288 பக்கங்களுக்கு ஒரு நூல் எழுதியிருக்கிறார் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்!..
பின்னாடி கண் வருவதால் முன்னாடி எண் வந்தது; அவ்வளவு தான்.
அப்படியே கண் எனத் தகும் என்றாலும் எது வலது, எது இடது என்று சொல்ல வில்லை அல்லவா?.. இரண்டு கண்ணுமே முக்கியம் என்பதால் எண்ணும் எழுத்தும் இரண்டுமே முக்கியம் என்று கொள்ள வேண்டியது தான். எண்ணை முன்னாடிச் சொன்னதால் அதனால் அதற்கு எந்த முக்கியத்துவமும் வந்து விடவில்லை என்று பட்டி மன்றக்காரர்கள் மாதிரி வாதிடலாம்.
ஆனா எண் மட்டும் இல்லை என்றால் உலகமே அஸ்தமித்து விடும் என்பது ஒரு மஹா உண்மை. அடிப்படை கடிகாரக் கணக்கு. வயது கணக்கு. காலண்டர் இல்லேனா, லோகமே அம்போ!
பூஜ்யத்தை பலர் ஒரு எண்ணாகவே மதிப்பதில்லை.. பார்க்கப் போனா அதான் எண்களில் ராஜா!
'எண்' சாத்திரத்தைக் கண்டுபிடித்தது, அரேபியர்களா?.. பூஜ்யத்தை முதன் முதலா லோகத்துக்கு அறிமுகப்படுத்தியது நாம் தான் என்கிறார்கள்!
கணக்கு பிணக்கு ஆமணக்குன்னு பாரதியாரே சொல்லியிருக்கிறார் என்றால் அது வேறு விஷ்யம். உம்பர் வானத்துக் கோளையும் மீனையும் ஓர்ஜ்து அளஜ்த பாஸ்கரன் மாட்சியைப் பற்றிச் சொன்னது அவர் தான்.
முதல் படம் மணியம் செல்வம்னு நினைக்கிறேன் ஶ்ரீராம்.
மற்றபடி மோகன்ஜி நானும் பள்ளிக் காலத்தில் கண்ணகியா, மாதவியா, பாண்டிமாதேவியா என்ற பட்டிமன்றங்களில் பங்கெடுத்திருக்கேன். குன்றக்குடி அடிகளார்(முன்னிருந்தவர்) நடத்திய பட்டிமன்றங்களையும் கேட்டிருக்கேன். என்னோட ஓட்டு எப்போவும் பாண்டிமாதேவிக்குத் தான். :) செங்கோல் தவறியதால் தன்னுயிரை ஈந்த நெடுஞ்செழியனின் மனைவி கணவன் இறந்தான் என்று தெரிந்ததுமே அவள் உயிரையும் விட்டு விடுகிறாள். கணவனை ஒரு கணமும் பிரியாமல் இருக்கணும் என்று அவள் நினைப்பு. அதைச் செயல்படுத்தி விடுகிறாள்.
@ஜீவிசார்,
அதோடு மதுரையை எரித்ததால் எனக்குக் கண்ணகியைப் பிடிக்காது. கோவலன் பாத்திரத்தையே கேவலமாகவும் நினைக்கத் தோன்றும். மாதவி அவனுக்கு எத்தனை உண்மையாக இருந்தாள். முதலில் மனைவியை மறந்து மாதவியின் பின்னால் போனான்.பின்னால் மாதவியின் மேல் சந்தேகம் வந்து மனைவியிடம் திரும்பினான். அந்தக்காலம் தான் என்றாலும் தான் ஒரு ஆண் என்பதால் எப்படி வேண்டுமானாலும் நடந்து கொள்ளலாம் என்னும் எண்ணம் கோவலனிடம் இருப்பதையே இது சுட்டுவதாகத் தோன்றும்.
கண்ணகியிடமும் பரிதாபமெல்லாம் தோன்றுவதில்லை. கணவனைக் கட்டிக்காக்கத் தெரியாத ஒரு பெண்ணாகவே நினைக்கத் தோன்றும். இதற்கு மணிமேகலை பரவாயில்லை! :)
கமென்ட் போச்சா இல்லையானு தெரியலை! :(
@ கீதா சாம்பசிவம்
//நானும் பள்ளிக் காலத்தில் கண்ணகியா, மாதவியா, பாண்டிமாதேவியா என்ற பட்டிமன்றங்களில் பங்கெடுத்திருக்கேன்..//
-- கீதா சாம்பசிவம்
//இளங்கோவின் வழக்கமான கணக்குப்படி மூன்று.
இன்னொருத்தரை விட்டு விட்டீர்களே?.. //
-- மோகன்ஜிக்கு ஜீவி
--என்று அங்கு மோகன்ஜிக்கு நான் சொன்னதை இங்கு எடுத்துக் காட்டி விட்டீர்கள். இளங்கோவடிகளுக்கு மிகவும் பிடித்தமான மூன்று எண்ணிக்கைக் கணக்கை வரிசைப்படுத்தினால் அதுவே அழ்காக இருக்கும்!
@ கீதா சாம்பசிவம்
//அதோடு மதுரையை எரித்ததால் எனக்குக் கண்ணகியைப் பிடிக்காது.//
பாவம் கண்ணகி! நீங்களாவது பரவாயில்லை.
தில்லி எழுத்தாளர், 'கணையாழி'தொடர்பு கொண்டிருந்த இந்திரா பார்த்தசாரதி தெரியும்மில்லையா?.. அவரோட இந்த கட்டுரையைப் பாருங்கள்.
http://www.thinnai.com/index.php?module=displaystory&story_id=20108255&format=print&edition_id=20010825
அவர் பார்வையில் கண்ணகி ஒரு பொம்மை. கோவலனின் தீவிரத்திற்கு ஈடுகொடுத்து நேர்த்தியாக 'விளையாட' தெரியாத பொம்மை.
இப்படித்தான் 'குருதிப்புனல்' நாவலிலும் சிக்மண்ட் ப்ராய்டைத் துணைக்கு அழைத்து ஒரு கோணல் பார்வை. இநற்கு சாகித்ய அகாதமி பரிசு வேறே!
ப்ராய்ட் இப்படியெல்லாம் தன் 'மன இயல்' கூறுபோடப்படும் என்று நினைத்துக் கூடப் பார்த்திருக்க மாட்டார்!
//ஒரு ஆண் என்பதால் எப்படி வேண்டுமானாலும் நடந்து கொள்ளலாம் என்னும் எண்ணம் கோவலனிடம் இருப்பதையே இது சுட்டுவதாகத் தோன்றும். //
இரண்டு பெண்டாட்டிக்காரர்களைக் கண்டாலும் உங்களுக்கு இளப்பம்.
உங்கள் நன்மதிப்பைப் பெற பின் என்னத்கான் செய்வான், கோவலன்?..
@ கீதா சாம்பசிவம்
//கணவனைக் கட்டிக்காக்கத் தெரியாத ஒரு பெண்ணாகவே நினைக்கத் தோன்றும்..//
அது என்ன கட்டிக்காப்பது?.. இது மட்டும் ஆணை வைத்தே எல்லாமும் என்று பார்க்கிற ஆண் ஆதிக்க மனோபாவம் இல்லையா?
// இதற்கு மணிமேகலை பரவாயில்லை..//
போச்சுடா! மாதவி -- கண்ணகி -- மணிமேகலை! மூன்று வெவ்வேறு வரிசைகளைப் பார்த்து விட்டீர்களே!
சிவப்பதிகாரம் தொடர் பதிவு
அருமை நண்பரே ....
தொடர்கிறோம், தொடருங்கள்...
@ A.S. Joseph
அருமை என்பதை விட உங்களுக்குப் பெருமை தரும்படி ஏதாவது சொல்லுங்களேன். அதற்கான வாய்ப்பே இந்த மாதிரியான வாசிப்புகள். நன்றி.
//இளங்கோவின் வழக்கமான கணக்குப்படி மூன்று.
இன்னொருத்தரை விட்டு விட்டீர்களே?.. //
புரியலையே!! கண்ணகி, மாதவி, பாண்டிமாதேவி மூவர் இருக்கும்போது இன்னும் எப்படி மூன்று என்னும் கணக்கில் இன்னொருத்தரைக் கொண்டு வருவது??????? நான் பாண்டிமாதேவிக்குத் தான் ஆதரவு கொடுப்பேன்னும் சொல்லி இருக்கேனே!
//இரண்டு பெண்டாட்டிக்காரர்களைக் கண்டாலும் உங்களுக்கு இளப்பம்.
உங்கள் நன்மதிப்பைப் பெற பின் என்னத்கான் செய்வான், கோவலன்?.. //
தசரதனுக்கு மூன்று மனைவியர்! ஆனாலும் நான் இளப்பமாகக் கருதியதில்லை. நீங்களாக என்னைப் பற்றிய ஒரு கருத்தை நினைத்துக் கொண்டால் அதற்கு நான் பொறுப்பும் இல்லை! :)
கண்ணகி கோவலனைப் பிரிந்ததற்காக ஒரு சின்ன விநாடியாவது வருந்தி இருப்பாளா சந்தேகமே! ஆனால் தான் ஒரு கற்புக்கரசி என்பதை நிரூபித்தாகவேண்டும் என்னும் ஒரே எண்ணம் தான் அவளிடம் இருந்தது.அப்படிக் கணவனைப் பிரிந்தே இருந்தவளுக்குக் கணவன் கொலையுண்டதும் பிரிவாற்றாமை ஏற்பட்டு விட்டதா? ஆகவே பாண்டியன் சபையில் அவள் நீதி கேட்டது கூட செயற்கையாகவே படுகிறது. ஆனால் இதுவும் அவள் சொந்த சுயநலம் கருதியே! தான் ஓர் கற்புக்கரசி என்பதை நிரூபிக்கவே. மற்றபடி நான் இந்திரா பார்த்தசாரதி எழுதி இருப்பதை எல்லாம் ஏற்கெனவே படித்திருக்கிறேன் என நினைக்கிறேன். சிலப்பதிகாரம் தமிழில் முதல் காவியமாக இருக்கலாம். இலக்கிய நடை சிறப்பாக இருக்கலாம். அதற்காகக் கண்ணகியைப் போற்ற வேண்டும் என்னும் அவசியம் ஏதும் இல்லை!
//அது என்ன கட்டிக்காப்பது?.. இது மட்டும் ஆணை வைத்தே எல்லாமும் என்று பார்க்கிற ஆண் ஆதிக்க மனோபாவம் இல்லையா?//
இங்கே ஆண் ஆதிக்க மனோபாவம் வரலை. பெண்ணின் ஆதிக்கம் இல்லையே என்னும் ஆதங்கம் தான். கண்ணகியிடம் கொஞ்சமேனும் கணவன் என்னும் பற்றுதல் இருந்திருந்தால் அவன் பிற பெண்ணைத் தேடிச் செல்லும்படி விட்டிருக்க மாட்டாளே! கணவனின் அன்பைத் தனக்கு மட்டுமே என அனுபவித்துக் கொள்ளத் தெரியவில்லை. அந்த விதத்தில் மாதவி கெட்டிக்காரி தான்!
//உங்கள் நன்மதிப்பைப் பெற பின் என்னத்கான் செய்வான், கோவலன்?.. //
உங்களைப் போன்ற சில ரசிகர்கள் இருக்கும்வரை கோவலனின் நன்மதிப்புக்கு என்ன குறை? நான் ஒருத்தி கோவலனை நல்லவன் என்று சொல்லாததால் எதுவும் குறையப் போவதில்லை! ஏனெனில் என்னைப் பொறுத்தவரை அவன் கேவலன்! கண்ணகியோடு மதுரைக்குப் போகும்போது கூட மாதவியின் கடிதம் கண்டு மனம் மகிழ்ச்சி அடைகிறான். ஆகவே வேறு வழியில்லாமல் தான் அவன் கண்ணகியோடு செல்கிறான். :) அவன் மனம் ஒப்பிப் போகவில்லை.
@ கீதா சாம்பசிவம்
ஹையோ!.. மேலோட்டமாகப் படித்தால் இப்படித்தான்.
மோகன்ஜி இரண்டு பேரைக் குறித்திருந்தார். பாண்டிமாதேவியை விட்டு விட்டார்.
இளங்கோ கணக்கு மூன்றாயிற்றே என்று கேட்டிருந்தேன்.
நீங்கள் பாண்டிமாதேவி பற்றிச் சொன்னதும், மோகன்ஜி விட்ட கணக்கை நீங்கள் சரி செய்து விட்டீர்கள் என்று சொல்லியிருக்கிறேன். அவ்வளவு தான்.
இன்னொரு தடவை என் பின்னூட்டதைப் படித்துப் பாருங்கள். தெளீவாகத் தெரியும்.
//நீங்களாக என்னைப் பற்றிய ஒரு கருத்தை நினைத்துக் கொண்டால் அதற்கு நான் பொறுப்பும் இல்லை! :)//
கபாககு என்று பேச்சை எடுத்தாலே---------- :)_) அது என்னவோ ஊருக்கு உலகுக்கெல்லாம் பறை சாற்ற வேண்டிய விஷயம் மாதிரி...
//அதற்காகக் கண்ணகியைப் போற்ற வேண்டும் என்னும் அவசியம் ஏதும் இல்லை!//
போற்ற வேண்டும் என்று யார் சொன்னார்கள்?.. கண்ணகியைப் பற்றி எதுவுமே எழுத நான் ஆரம்பிக்க வில்லை, அதற்குள் இப்படியா!
கண்ணகியைப் பற்றி எழுதும் போது மறக்காமல் இதை பிரஸ்தாபியுங்கள். சொல்கிறேன்.
@ கீதா சாம்பசிவம்
//இங்கே ஆண் ஆதிக்க மனோபாவம் வரலை. பெண்ணின் ஆதிக்கம் இல்லையே என்னும் ஆதங்கம் தான்.//
ஆண் ஆதிக்கமும் பெண் ஆதிக்கமும் ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள். இதில் யார் ஆதிக்கம் விஞ்சினாலும் இன்னொருவரை அடிமை படுத்துவதில் கொண்டு போய் விடும்! ஆதிக்க மனப்பான்மையே, அதுவும் கணவர்--மனைவியரில்-வெறுக்கத் தக்க ஒன்று.
கணவன்-மனைவி உறவு என்பது ஆதிக்கப்படுத்துவதல்ல, ஒன்றில் ஒன்று கரைவது.
@ கீதா சாம்பசிவம்
// ஆனால் தான் ஒரு கற்புக்கரசி என்பதை நிரூபித்தாகவேண்டும் என்னும் ஒரே எண்ணம் தான் அவளிடம் இருந்தது.அப்படிக் கணவனைப் பிரிந்தே இருந்தவளுக்குக் கணவன் கொலையுண்டதும் பிரிவாற்றாமை ஏற்பட்டு விட்டதா?//
கோவலன் கொலைகளப்படும் பொழுது அவனுக்கு வயசு என்ன இருக்கும் என்று நினைக்கிறீர்கள்?.. மிஞ்சி மிஞ்சிப் போனால் பதினேழு. கண்ணகிக்கு? பதினைந்து! திருமணம் ஆகி ஒரு வருடம் கூட நிறைவடையவில்லை.. அதற்குள் இந்த சிறுசுகளீடம் என்னன்ன எதிர்ப்பார்ப்பு உங்களுக்குத் தான்!
/அந்த விதத்தில் மாதவி கெட்டிக்காரி தான்!//
மாதவி-- கண்ணகியெல்லாம் ஒப்பிடுவது பட்டிமனற பேதைமை!
கோவலினிடம் அன்பு கொண்ட இரு வேறு பெண்கள். ஒருத்தி மனைவி. இன்னொருத்தி காதலி. அவ்வளவு தான்!
அவளுக்கு இவள், இவளுக்கு அவள் என்று கோவலனே ஒப்பிட்டுப் பார்க்கவில்லை. அதற்குள் அவர்கள் வாழ்க்கையில் மூக்கை நுழைப்பதில் தான் நம்மில் எவ்வளவு பேருக்கு பேரானந்தம்!
@ கீதா சாம்பசிவம்
தொடர்ந்து பின்னூட்டமிட்டு அசர வைத்ததற்கு நன்றி. அந்தக் கால பட்டிமன்றத்தில் கலந்து கொண்ட நினைவோ? இல்லை, கைவசம் வைத்திருந்த சரக்கோ?..
தொடர்ந்து வந்து சிறப்பு செய்யுங்கள். நன்றி.
நான் முன்பே குறிப்பிட்டது போல் சிலப்பதிகாரமெல்லாம் பள்ளியிலும், கல்லூரியிலும் படித்தது. என்னதான் இலக்கியத்தில் ஈடுபாடு உண்டென்றாலும், பாடத்திட்டத்தில் படிக்கும் பொழுது கண்ணகி, கோவலன், மாதவி இவர்களின், குணாதிசயங்களை அலசும் அளவிற்கு படிக்க முடியுமா என்ன? சொற்பொழிவுகளில் கேட்டது, புத்தகங்களில் படித்தது இவைகளின் மூலம் தெரிந்து கொண்டவரை மாதவியிடம் தோன்றிய மரியாதை கண்ணகியிடம் தோன்றவில்லை.
எல்லா ட்ரை ஆங்குலர் லவ் ஸ்டோரியிலும் இரெண்டாம் கதா நாயகிதான் எடுபடுவாள். அந்த இரெண்டாம் நாயகி/நாயகன் துறவறம் பூணுவது சிலப்பதிகார காட்சியை இந்திய சினிமா இன்னும் விடவில்லை.
மேலும் கோவலனை பெண் பித்தனாக இளங்கோ அடிகள் சித்தரித் திருப்பதாக தெரியவில்லை. அரசன் பரிசளித்திருந்த விலை உயர்ந்த மாலையை வாங்கக் கூடிய அளவிற்கு தன்னிடம் தனமுண்டு என்று தன் அந்தஸ்தை காட்டிக் கொள்வதற்காகவே
அந்த மாலையை அவன் வாங்கி இருக்கிறான்.
இன்னொரு முக்கியமான விஷயம், அந்தக் கால காப்பியங்களை இந்தக் கால நடை முறையோடு பார்க்க கூடாது. பல தார மணம் என்பது அப்போது ஒப்புக்கொள்ளப் பட்ட நடைமுறை. அதனால் தன் கணவனை தன் பிடிக்குள் வைத்துக் கொள்ள தெரியாதவள் கண்ணகி என்று கூறி விட முடியாது. ஏன் இப்போது கூட எத்தனையோ செலிப்ரிடிகள் இரு தார மணம் புரிந்தவர்களாகவே இருக்கிறார்கள். அதை அவர்களின் மனைவிகளும் ஒப்புக் கொண்டுதானே அவர்களோடு வாழ்கிறார்கள்?
@ Bhanumathy Venkateswaran
கோவலனுக்கு மனைவியாக வாய்த்தவள் கண்ணகி ஒருவளே. அதனால் பலதார மணம் என்கிற பார்வையும் இங்கில்லை. ஆக அந்த ஹோதாவில் கோவலன்--மாதவிக்கு நேர்ந்த பிணைப்பைக் குழப்பிக் கொள்ள வேண்டாம்.
வாசித்துத் தெரிந்து கொண்ட அளவில் மாதவியிடம் தோன்றிய மரியாதை கண்ணகியிடம் தோன்றவில்லை என்பது ஒரு பெரிய விஷயமே அல்ல. ஏனென்றால் மேற்கொண்டான வாசிப்பில் இந்த கருத்தும் மாற்றம் கொள்ளலாம்.வாசித்துத் தெரிந்து கொண்டதை உங்கள் அனுபவத்தில் அலசித் தேர்ந்தால் எல்லா வாசிப்பின் கருத்துக்களும் மாறிக் கொண்டே இருப்பதை நீங்களே அனுப்வமாகக் கொள்ளலாம். எந்தக் கருத்தும் ஆண்டாண்டு காலமாக நிலையாக நம்மில் உருவாகியிருந்தால், அந்தக் கருத்துக்கு மறுதலையான வாசிப்பை நாம் பெறவில்லை என்றே அர்த்தம். அதனால் எல்லா வாசிப்பும் நம்மை இன்னும் இன்னும் உயர்த்திக் கொள்ளவே.
இதுவரை வந்த பின்னூட்ட அளவில் மாதவி, பாண்டிமா தேவி அலவுக்கு கண்ணகியை யாரும் புரிந்து கொள்ள வில்லையோ அல்லது எந்தப் போற்றலையும் பெற அவ்ள் நடவடிக்கைகள் அமையவில்லையோ தெரியவில்லை.
ஆகவே இனி வரும் பகுதிகளில் இந்த காப்பியத்தில் கண்ணகியின் பாத்திரப் படைப்பை நுணுக்கிப் பார்ப்போம். சங்ககாலத்தில் ஆண்-பெண் உறவுகளில் காணப்பட்ட புரிதலகளை போக்குகளை எந்த அளவுக்கு இளங்கோ தன் காப்பியத்தில் மாற்ற முயற்சிகள் மேற்கொண்டு அதில் வெற்றியும் பெற்றிருக்கிறார் என்று பார்ப்போம். அந்த சாதனைக்கு அவருக்குக் கிடைத்த பாத்திரப்படைப்பு தான் கண்ணகி.
நீண்ட பின்னூட்டத்திற்கும் வாசித்துக் கருத்திட்டமைக்கும் மிக்க நன்றி. தொடர்ந்து வந்து தங்கள் வித்தியாசமான கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ள வேண்டுகிறேன்.
@ சிவகுமாரன்
மன்னிக்கவும் தாமதமான பதிலுக்கு. கவிஞர் வாசிப்பது இரட்டை மடங்கு மகிழ்ச்சி. தங்கள் பதிவுக்கு வருகிறேன், விரைவில். நன்றி.
கோவலன் பாடிய அந்த ஆற்றுவரிப் பாடலில் அவன் மனச்சாட்சி அவனைக் குத்திக் காட்டுவதாக நீங்கள் சொல்லியிருக்கும் கருத்து ஏற்புடையதே. ஏனெனில் நம்மில் பலர் ஒரு தவறை செய்துவிட்டு அதையே நினைத்து வருந்துவதில்லையா? அது போலத்தான் இதுவும். எல்லா மனிதருக்கும் மனச்சாட்சி உண்டே!
கண்ணகியைப் பொறுத்தவரை அவள் ஒரு வழக்கமான அந்த கால குடும்பத்தலைவி போல இருந்திருக்கிறாள் என்றே கேள்விப்பட்டிருக்கிறேன். இல்லாவிடில் மாதவி வீட்டிலிருந்து திரும்பி வந்த கோவலனை ஏற்றுக்கொண்டு அவன் கூப்பிட்டதும் மறு பேச்சின்றி அவனோடு மதுரைக்கு புறப்பட்டு, கேட்டவுடன் கால் சிலம்பை கொடுத்து வாழ்வைத் தொலைத்திருப்பாளா?
கண்ணகியின் பாத்திரப் படைப்பை தங்களின் பார்வையில் காண காத்திருக்கிறேன்.
திரு ஸ்ரீராம் அவர்களின் பின்னூட்டத்திற்கு அளித்த பதிலில் ‘எப்படிப் பட்ட கணவரை நீங்கள் விரும்புவீர்கள்?' என்ற கேள்வி கேட்கப்பட்டு ஒரு நிகழ்ச்சி தொலைக்காட்சியிலோ இல்லை.’ என்று குறிப்பிட்டதன் மூலம் தொலைக்காட்சி நிறுவனங்களுக்கு ஒரு நிகழ்ச்சி நடத்த தேவையான கருப்பொருள் ஒன்றை கொடுத்துவிட்டீர்கள் என நினைக்கிறேன்.
@ வே. நடனசபாபதி
மன்னிக்கணும். நான் சொன்னது தங்களுக்கு மாறுபட்ட புரிதலாகி விட்டது.
// 'எப்படிப் பட்ட கணவ்ரை நீங்கள் விரும்புவீர்கள்?' என்ற கேள்வி கேட்கப்பட்டு ஒரு நிகழ்ச்சி தொலைக்காட்சியிலோ இல்லை... சரி, விட்டுத் தள்ளுங்கள். //
என்று ஸ்ரீராமிற்குச் சொல்லியிருந்தேன்.
அது என்னவென்றால் தொலைக்காட்சியிலோ, யூட்யூபிலோ ஒரு காட்சி பார்த்தேன். 'எப்படிப்பட்ட கணவரை நீங்கள் விரும்புவீர்கள்?' என்று கிட்டத்தட்ட இருபதுக்கு மேபட்ட பெண்களிடம் கருத்துக் கேட்பது போலக் கேட்கிறார்கள். அதற்கு பெரும்பாலோர் சொன்ன பதில், 'எக்ஸ்பீரியன்ஸ்டு'. அவர்கள் சொன்னதை எழுத நான் விரும்பாததினால், சரி, விட்டுத் தள்ளுங்கள்' என்று அந்த விஷயத்தையே கைகழுவினேன். அவ்வலவு தான்.
@ வே. நடனசபாபதி
//கண்ணகியின் பாத்திரப் படைப்பை தங்களின் பார்வையில் காண காத்திருக்கிறேன். //
சங்ககால ஆண்--பெண் தொடர்பு சம்பந்தப்பட்ட விஷயங்களை இளங்கோ தன் சிலப்பதிகாரக் காப்பியத்தில் தலைகீழாக மாற்றிக் காட்டுகிறார். அந்த மாற்ரத்திற்கு தகுந்த மாதிரி கண்ணகியின் பாத்திரப்படைப்பை வார்த்து எடுத்திருக்கிறார்.
கண்ணகி கற்புக்கரசி. அவள் கணவன் கோவலன் தான் இன்னொரு பெண்ணை நாடி தன் கற்பை இழக்கிறான். இருந்தும் அநியாயமாக அவன் பாண்டியன் அரசவையில் களவன் எனத் தூற்றப்பட்டு தண்டனை பெற கொளைக்களப்படுகிறான். அரசனுக்கும் அவையோருக்கும் தன் கணவன் கள்வன் அல்லன் என்று நிரூபித்து தண்டனை வழங்கிய பாண்டிய மன்னனைத் தண்டிக்கும் விதமாக தலைநகர் மதுரையை தன் கற்பின் அனலில் கொளுத்துக்கிறாள் கண்ணகி-- இது தான் சிலப்பதிகாரம் வாயிலாக பொதுவாக எல்லோருக்கும் தெரிந்த கண்ணகியின் கதை.
இந்தப் பொதுக்கதையின் ஊடி சபதமில்லாமல் அலட்டிக் கொள்ளாமல் சங்ககால ஆண்-பெண் தொடர்புகலை புரட்டிப் போட்ட மாதிரி மாற்றி காப்பியத்தைப் புனைந்திருக்கிறார் இளங்கோ என்பது என் பார்வை. அதை அந்தப் பகுதி வரும் பொழுது எடுத்துக்காட்டுகளுடன் விவரிக்கிறேன்.
தங்கள் தொடர் வருகைக்கு நன்றி, ஐயா.
Post a Comment