பகுதி--11
புகார் காண்டத்தின் எட்டாம் பகுதியான
வேனிற்காதை முழுக்க கோவலனைப் பிரிந்த மாதவியின் மனப்புழுக்கம் தான். யாழாலும், இசையாலும் அவள் காம தாபத்தைத் தணிக்க
முடியவில்லை. தணிப்பதற்கு பதில் யாழும் இசையும் விரகதாபத்தை விசிறி விடவே செய்தன.
மாதவி நிரம்ப யோசித்து கோவலனுக்கு ஒரு மடல் எழுதத் துணிகிறாள். தாழை மடல் தான் எழுது
தாள், பித்திகை என்ற மலரின் அரும்பு
எழுதுகோலாகிறது. சாதிலிங்கப் பூவின் குழம்பு எழுது மை என்று உபயோகமாகி மடல் தயாராகி
விட்டது. ‘
‘உயிரே! உயிரே... என் நிலை அறிவீரா.?
உன்னோடு கலக்கத் துடிக்கிறேன். காம வேதனை கொடுந்தீயாய் என்னை வாட்டுகிறது.
இளவேனிலோ அனுபவமில்லாத இளவரசனாகிப் போனான்.
திங்கள்ச் செல்வனும் சரியில்லை.. நீங்கள் வந்து தான் என் தாபத்தைத் தணிக்க
வேண்டும்..’ என்ற அர்த்தத்தில் உணர்வு கொட்டும் மடல் தயாராகி விட்டது. தோழி
வசந்தமாலையை அழைத்து ‘என் தலைவனிடம் இதைக்
கொண்டு போய்க் கொடுத்து கையோடு அவரை அழைத்து வருக” என்று அனுப்புகிறாள்.
கோவலனைத் தேடிப்போன வசந்தமாலைக்கு
ஒருவழியாக கடைவீதியில் அவன் கிடைக்கிறான்.
வ.மாலை மடலைத் தந்ததும் அதில் என்ன எழுதப் பட்டிருக்கும் என்று
கோவலனுக்குப் புரிந்து போயிற்று. மடலைக்
கையில் வாங்காமலேயே சீறுகிறான்: “ஆடல் மகளே ஆதலின் அவள் நடிப்பைக் கண்டு நான்
மயங்கேன்” என்று மடலை வாங்க மறுத்து வசந்த மாலையை திருப்பி அனுப்புகிறான். ‘பாவம்
மாதவி, கோவலனின் கோபம் கண்டு எப்படிக்
கலங்கப் போகிறாளோ’’ என்று பெரும் வருத்தத்தோடு வந்த வசந்தமாலை,
திருப்பப்பட்ட மடலை மாதவியிடம்
தருகிறாள். ஆனால் மாதவியோ, ‘இன்று
மாலை வராவிட்டாலும், நாளை காலை வருவார்’ என்று நம்பிக்கையோடு சொல்கிறாள்.
இந்த இடத்தில் ஒன்றைக் குறிப்பிட வேண்டும். கோவலனுக்கும் மாதவிக்கும் ஏற்பட்ட சந்திப்பு ஓர்
ஈர்ப்பாக இருவரிடமும் பலப்பட்ட்த்தற்காக காரணம் ரொம்பவும் நேர்த்தியானது. அந்தக் கால கணிகையர் நாட்ட வழக்கப்படி என்ற மேம்போக்கான
பார்வையைத் தாண்டியது இது.
இருவருமே இளம் வயதினர். இந்த வயதில் இருவருமே இசைக்கலையில் மேம்பட்ட ஞானம் கொண்டவர்கள். அவர்களின் இசை ஞானத்தை நமக்குத் தெரியப்படுத்தவே அரங்கேற்றுக் காதை, அந்தி மாலைச் சிறப்புச்செய் காதை, இந்திரவிழ்வூரெடுத்த காதை, கடலாடு காதை, கானல்வரி, வேனிற்காதை என்று ஆறு காதைகளை அர்ப்பணம் செய்திருக்கிறார் அடிகளார்.. போதாக்குறைக்கு மாதவி ஆடற்கலையில்
அதி அற்புதமான திறமை கொண்ட பெண்ணாய் திகழ்ந்தவள். சொல்லப் போனால் கடைவீதியில் மாதவிக்கு ஈடாக கோவலன் வாங்கிய ஆயிரத்து எண் கழஞ்சு
மதிப்பிலான பச்சை மாலை அவள் சோழ மன்னனின் அவையில் பரிசாகப் பெற்றது தான்.
சோழமன்னனின் அவையில் அவளது ஆடற்கலையின் அரங்கேற்றமே நடந்த அளவுக்கு நாட்டியக்
கலையில் தேர்ச்சி பெற்றவள் மாதவி..
ஆண்—பெண் உடல் ஈர்ப்பை தாண்டி இசைக்கலைஞன்
கோவலனின் மனதை ஆரம்பத்தில் ஆக்கிரமித்தது மாதவியின் இந்த கலைத்திறமைகள் தாம். உடல் இச்சைக்காக
மாதவியை கோவலன் விலைகொடுத்து வாங்கினான் என்று கொச்சையாகக் கொள்ளக்கூடாது. சோழமன்னின் அரசவையில் போற்றப்பட்ட ஆடல் அணங்கு
கடைவீதியில் விலை பேசப்பட்ட பொழுது, இசையில்
நாட்டமில்லாத வேறு எந்த வசதிபடைத்த குணக்கேடனுக்கும் இவள் உரிமையாகி
விடக்கூடாது என்ற கலைஞான அக்கறையிலும் கோவலன் மாலையை வாங்கி அவளை உரிமையாக்கிக் கொண்டிருக்கலாம். இரண்டு கலைஞர்களின் இசை மீதான ஈடுபாடு ஆண்-பெண்
என்பதால் அதற்கேற்பவான ஈர்ப்பைக் கொண்டு அடுத்த கட்ட வளர்ச்சியை இயல்பாக்க் கொண்ட்து என்றே கொள்ள
வேண்டும். .
வேனிற்காதையில் மாதவி என்றால் அடுத்த
கனாத்திறம் உரைத்த காதையில் கண்ணகி. கோவலனைப்
பிரிந்த அவள் வருத்தம் இந்தக் காதையில் உரைக்கப்படுகிறது.
மாலை நேரத்துப் புகார் நகர்.. மலர்
தூவி விளக்கேற்றி இறைவனை வழிப்படும் மகளிர் கூட்டத்தின் கலகலப்பில் களைகட்டுகிறது.
தேவந்தி என்ற பெண் கண்ணகியின் தோழி..
கோயிலுக்குச் செல்லும் அவள் தன் கூட வர
கண்ணகியையும் அழைக்கிறாள். தேவந்தி பற்றிய சுவாரஸ்யமான கதை ஒன்றை
இந்த இடத்தில் சொல்கிறார் அடிகளார். மாலதி என்பவள் மாற்றாள் குழ்ந்தைக்கு
பாலூட்டும் பொழுது அந்தக் குழந்தை விக்கி இறந்து விடுகிறது. இப்படி அபவாதம் நேரிட்டு விட்டதே! மாற்றாளுக்கும் அவள் கணவனுக்கும் என்ன பதில் சொல்வேன் என்று அலமந்து போகிறாள் அந்த ஆரணங்கு.
குழந்தையின் உயிர்ப்பிச்சை கேட்டு கோயில் கோயிலாக படி ஏறி இறங்குகிறாள்.
அன்றைய காலத்தில்
புகார் நகரில் இருந்த திருக்கோயில்களின் ஒரு
பெரிய பட்டியலே அடிகளார் மூலம் நமக்குத்
தெரிய வருகிறது. என்னன்ன கோயில்கள்?.. தேவலோகத் தருவான கற்பக
மரம் நிற்கும் கோயில்,
ஐராவதம் நிற்கும் கோயில், அழ்கான பலதேவர் கோயில், சூரிய தேவனின் கோயில்,
ஊர்க்காவல் தெய்வத்தின் கோயில், முருகன்
கோயில், வச்சிரப்படை நிற்கும் கோயில், மாசாத்தன் கோயில், அருகன் கோயில்,
சந்திரன் கோயில் என்று திசை தோறும் திசை
தோறும் இருக்கும் கோயில்களைச் சொல்கிறார். ஒவ்வொரு கோயிலிலும் “தெய்வமே! என் துயர்
துடையுங்களேன்..” என்று மாலதி வேண்டுகிறாள்.
கடைசியாக பிச்சாண்டர் கோயில்
அடைகிறாள். பிச்சாண்டர் கோயிலில் அந்த
அதிசயம் நடந்தது. மாலதி முன் ஒரு
பெண் தோன்றி “அந்தக் குழந்தையை என்னிடம் தா!” என்று கேட்டு வாங்கிக் கொள்கிறாள்.
குழந்தையை வாங்கிக் கொண்டவள் சக்கரவாளக் கோட்டமாகிய இடுகாடு நோக்கி விரைகிறாள்.
அப்பொழுது தான் மாலதிக்கு தெரிகிறது,
தன்னிடம் குழந்தையை வாங்கிக் கொண்டவள் பெண்ணலல, பேய்—அதுவும் இடாகினிப் பேய் என்று
தெரிகிறது. இடுகாடு அடைந்ததும் இடாகினிப்பேய் இருகரம் தூக்கி குழந்தையை வாயில் போட்டுக் கொண்டு விழுங்குகிறது.,
அந்தக் காட்சியைக் கண்ட மாலதி
நடுங்கிப் போகிறாள். அந்த நேரத்து பாசாண்ட
சாத்தன் என்னும் தெய்வம் அவள் முன் தோன்றுகிறது. “பயப்படாதே! நீ செல்லும் வழியில் உன் கண் எதிரிலேயே
குழந்தையைக் காண்பாய்!” என்று அருள்பாலிக்கிறது.
பாசாண்ட சாத்தன் சொன்னபடியே வழியில் ஒரு மரத்தடியில் மாலதி அந்தக்
குழந்தையைக் காண்கிறாள். குழந்தையை வாரி எடுத்து மார்பில் அணைத்து
பெற்றவர்களிடம் சேர்ப்பிக்கிறாள்.
அந்த பாசாண்ட சாத்தன் தெய்வமே குழந்தையாக வந்தது என்று
மாலதிக்குத் தெரியாது. பாசாண்ட சாத்தன் வளர்ந்து கல்விக் கேள்விகளில்
சிறந்து விளங்குகிறான். மறைநூல் ஓதுகிறான். தேவந்தி என்ற பெண்ணை மணக்கிறான். இல்லற வாழ்க்கை இனிதே சென்று கொண்டிருக்க
திடீரென்று ஒரு நாள் தேவந்தியிடம் தன் தெய்வத் தன்மையைச் சொல்லி, “இனி எம்
கோயிலுக்கு வந்து எம்மைக் காண்பாயாக..” என்று
சொல்லி மறைகிறான்.
தேவந்தி மனம் தெளிகிறது. கணவன் தீர்த்த யாத்திரை சென்றிருப்பதாக மனதில்
கற்பிதம் கொண்டு அவன் நலமுடன் திரும்பி வருவதற்காக தினமும் பாசாண்ட சாத்தன்
கோயிலுக்குச் சென்று வழிபடுவதை வழக்கமாக்கிக் கொள்கிறாள்.
தன்னைப் போலவேயான கணவனைப் பிரிந்து வாழும் கண்ணகியின் துயரும்
தேவந்தியைக் கலக்குகிறது. ‘தோழியின்
கணவனும் நலமே திரும்பி வர வேண்டும்’ என்று கண்ணகிக்காக தெய்வத்திடம் வேண்டி
வழிபடுகிறாள். அந்த நம்பிக்கையில் ஒருநாள் கண்ணகியிடம், ‘கணவனின் பிரிவுத் துயரம் நீங்கி உனக்கு நலமுண்டாகட்டும் என்று
வாழ்த்துகிறாள். அதற்கு கண்ணகி, உன் வாழ்த்தின் பலனாய் என் கணவனைப் பெறுவேன்.
இருந்தாலும் என் மனம் ஒருநிலையில் இல்லை.. நேற்று இரவு நான் கண்ட கனவு
அச்சம் அளிப்பதாய் இருக்கிறது..” என்று தான் கண்ட கனவை தேவந்தியிடம்
விவரிக்கிறாள்.
அப்படி என்ன கனவு தான் கண்ணகி
கண்டாள்?.. கண்ணகியே தேவந்தியிடம் சொல்கிறாள் கேளுங்கள்: “தேவந்தி! நேற்றிரவு என் கணவனைக் கனவில் கண்ட
பாக்கியம் பெற்றேன். என் இருகை பற்றி அவர் அழைத்துப் போனார். இதற்கு முன்
பார்த்திராத ஒரு புதிய நகரில் நாங்கள் நுழைந்தோம். அந்நகர மக்கள்
பொய்த்தேளை எங்கள் மீது தூக்கிப் போடுவது
போல பழிச்சொல்லை எங்கள் மேல் இட்டனர்.
கனவு என்று அறியவில்லை. நனவு போலவே
இருக்கிறது. என் கணவனுக்கு ஏதோ தவறு
நேரிட்ட உணர்வு என்னைப் பற்றிக் கொண்டது. அவ்வூர் அரசனிடம் போய் என் கணவன்
குற்றமற்றவர் என்று வழக்குரைத்தேன். அந்த அரசனையும் அந்த ஊரையும்
தீங்கு பற்றிக் கொண்டது. என்ன தீங்கு நேர்ந்தது என்று கூறக்கூடாது. அதனால்
அந்தத் தீங்கை உன்னிடம் சொல்வதைத் தவிர்க்கிறேன். நான் பெற்ற தீவினையின் பலன் தான்
அந்த தீங்கு போலும். அதற்குப் பிறகு எனது கரம் பற்றியவனுடன் நான் பெற்ற நற்பேற்றை நான் சொன்னால் நீ நகைப்பாய்!” என்கிறாள்.
கண்ணகியின் கனவைக் கேட்ட தேவந்தி,”கண்ணகி!
உன் கணவன் உன்னை எக்காலத்தும் வெறுத்தானில்லை. உன் கணவன் பொருட்டு செய்ய வேண்டிய
ஏதானும் நோன்பைச் செய்யத் தவறியிருப்பாய். அதனால் தானோ என்னவோ இத்துயரெல்லாம்...
போகட்டும். புகார் நகர் தாண்டி நெய்தல் நிலச் சோலையிலே இருபொய்கைகள் உள்ளன. சோமகுண்டம், அக்னி குண்டம் என்று அவற்றைச்
சொல்வார்கள். அந்தப் பொய்கைகளில் மூழ்கி நீராடி காமக்கோட்டம் சென்று காமதேவனை தொழு!
உன் துன்பம் போகும். உன் கணவரும் மீண்டு வருவார்!
நானும் வருகிறேன். நாம் இருவரும் சென்று அந்த குண்டங்களில் நீராடி பெற்ற
துன்பம் நீங்கப் பெறுவோம்” என்றாள்.
அந்த சமயத்தில் வேண்டிய வீட்டு
வேலைகளுக்குத் துணையாக இருக்கும் சிறு பெண் ஒருத்தி அங்கு வந்து, “கடைவாயிலில் நம் காவலன்
போலும்.. வந்துள்ளார்..” என்று சொல்லிக் கொண்டிருக்கையில் கோவலன் வீட்டின்
உள்புறம் வந்து கண்ணகியின் பள்ளியறைக்குள் நுழைகிறான்.
பரபரப்புடன் அவன் பின் சென்ற
கண்ணகியின் வாடிய மேனி கண்டு கோவலன் வாடிப்போனான். உள்ளம் நொருங்கிப் போனான். “வஞ்சம் பொதிந்த
மாயத்தாளோடு கூடி ஆடிக்களித்த தீய ஒழுக்கத்தால் எல்லா செல்வத்தையும்
தொலைத்தேன். இன்றைய வறுமை என்னை நாணச் செய்கிறது..” என்று வருத்தத்தில்
நொந்து கொள்கிறான்.
கணவன் சொல் கேட்டு கண்ணகி,”வருந்தற்க...என்
காற்சிலம்பு உள்ளது. கொள்மின்” என்கிறாள். கோவலனுக்கு தெளிவு பிறக்கிறது. “சேயிழையே
கேள்..” என்று கிடைத்த தெம்பில் கண்ணகியிடம் சொல்கிறான்: “இந்தச் சிலம்பை முதலாகக்
கொண்டு வணிகம் செய்து இழந்த பொருளை மீட்டெடுப்பேன். வணிகச் சிறப்பு கொண்ட மதுரை மாநகர் சென்றால்
வழியுண்டு. நீயும் என்னுடன் புறப்படுக..” என்கிறான்.
எந்த வினைக்கும் அதன் விளைவான மறுவினை
உண்டு. அந்த மறுவினை தான் செய்த வினைக்கான
வினைப்யன். அறிந்தோ அறியாமலோ கோவலன் செய்த வினை அதற்கான பயனை முடித்து வைக்க
அவனைத் துரத்துகிறது. அந்தத் துரத்தலின் தூண்டுதலில் பொழுது புலர்வதற்கு முன்
கோவலன் புகார் நகரம் நீங்கி மாடமதுரைக்குச் செல்லப் புறப்படுகிறான்.
ராமன் இருக்குமிடமே அயோத்தி என்ற
வாக்கிற்கேற்ப கண்ணகியும் அவனைத்
தொடர்ந்து செல்கிறாள்..
கோவலன்
செய்த தீவினை என்ன?.. காதல் மனைவி இருக்க கணிகையை நாடியது... அல்லது அவன் கோவலனாகப் பிறந்ததே எந்தப்
பிறப்பிலோ செய்த வினையின் பயனை அனுபவிப்பதற்காக இருக்கலாம் என்று மறுபிறவியில் நம்பிக்கை கொண்டோர் கொள்ளலாம். அவனின் வினைக்கான
துன்பம் அவன் மனைவியையும் சேர்த்து விரட்டுவது தான் கணவன்—மனைவிக்கான உறவின் தாத்பரியம். இதுவே கண்ணகிக்கும் மாதவிக்குமான வித்தியாசமாகவும்
போகிறது.. கண்ணகி தீவலம் வந்து அவனின் கரம் பிடித்தவள் ஆகையால் அவளுக்குத் தான்
கணவனுடன் கலந்த நேரடியான அதிக பாதிப்பு.
கண்ணகி
தான் கண்ட தீக்கனவை தேவந்திக்கு உரைத்த இந்த கனாத்திறம் உரைத்த காதையிலேயே ஒரு உள்
கதையாக மாலதியின் கதையையும், தேவந்தியின் கதையையும் நுழைத்திருக்கிறார் அடிகளார். இதனால் நாவலுக்கான செழுமை இன்னும் கூடிப் போகிறது..
இந்த
இடத்தில் ஜெயமோகன் சொன்ன நாவலுக்கான இலக்கணத்தை நினைவு கொள்வோம். கதைகளும் கதை
மாந்தர்களும் பெருகிப் பெருகிச் செல்லும் பிரவாகமாக நாவலில் இருக்க
வேண்டும் என்ற சாத்தியப்பாடு இங்கு நிகழ்ந்திருக்கிறது. கோவலன்—கண்ணகி—மாதவி என்று இவர்களைச் சுற்றியே
கதை போகாமல் பல கதை மாந்தர்கள்,
சுற்றுப்பட்ட சிறுசிறு கதைகள், அது
சம்பந்தப்பட்ட செய்திகள் என்று கூடை முடைவது போல சிலப்பதிகார நாவலை முடைகிறார்
இளங்கோ.
தேவந்தி
கதை மாதிரி இன்னும் நிறைய நிறைய குறுங்கதைகள் இந்தக் காப்பியத்தில் நீங்கள்
வாசிக்கக் காத்திருக்கின்றன. ஒரு
காப்பியத்தை வடிக்கும் போக்கில் இளங்கோ அடிகள் நேர்த்தியாக வெகு நுணுக்கமாக
என்னவெல்லாம் நகாசு வேலைகளைச் செய்திருக்கிறார் என்று வரும் பகுதிகளை ரசிப்பதற்கு
ஏதுவாக முன்கூட்டியே சொல்லப்பட்ட இந்த நாவல் வரையறைகள் உதவும்.
(தொடரும்)
படங்கள்
உதவிய நண்பர்களுக்கு நன்றி.
28 comments:
//தேவந்தி கதை மாதிரி இன்னும் நிறைய நிறைய குறுங்கதைகள் இந்தக் காப்பியத்தில் நீங்கள் வாசிக்கக் காத்திருக்கின்றன//
நான் 11வது படிக்கும் போது சிலப்பதிகாரம் பாடமாய் வந்தது. கதைக்குள் கதைகள் வரும். மாடலன் கோவலனிடம் நீ முற்பிறவியில் செய்த நன்மைகள் என்று நிறைய கதை சொல்வார். கீரிபிள்ளை பார்ப்பனபெண் கதை, யானையிடமிருந்து முதியவரை கோவலன் காப்பற்றியது என்று நிறைய கதைகள் வரும். நன்றாக இருக்கும், அவற்றை உங்கள் பதிவில் படிக்க ஆவலாய் இருக்கிறேன்.
அத்தனை கோவில்கள் அம்மாநகரத்தில் இருந்திருக்கின்றன என்று தெரிகிறது. தொடர்கிறேன்.
தேவந்தி கதையை அறிய முடிந்தது! சுவாரஸ்யமான நடையில் அசத்துகிறீர்கள்! வாழ்த்துக்கள் சார்!
தொடர்பதிவு படித்தேன் நண்பரே
தொடர்ந்து பதிவுகள் தாருங்கள்...
@ கோமதி அரசு
முடிந்தவரை காப்பியத்தோடு தொடர்பு கொண்ட குறுங்கதைகளைச் சொல்கிறேன். ஆனாலும் முழு சிலப்பதிகாரத்தையும் இங்கு எழுத முயற்சித்தால் அது சிலப்பதிகாரம் பற்றிய தொடராக மாறிப்போகும்.
சிலப்பதிகாரம் மட்டுமல்ல, மற்ற நாங்கு காப்பியங்களின் கதைகளை மட்டுமாவது சொல்ல வேண்டும்.
ஐம்பெருங்காப்பியங்களின் தொடர்ச்சியே இன்றைய நாவல் இலக்கியம் என்று விளக்கமாகச் சொல்லி நிரூப்பிப்பதே இந்தத் தொடரின் நோக்கம்.
அதுமட்டுமல்ல, தொல்காப்பியர் வகுத்த இலக்கணக்களிலிருந்து வழுவிப் போய் விடாமல் இந்த காப்பியங்கள் எப்படி இயற்றப்பட்டிருக்கின்றன என்பதையும் சொல்ல வேண்டும்.
அதிலிருந்து தொலகாப்பிய காலத்திலிருந்தே உரைநடையில் கதை சொல்லும் கலையைப் பற்ரித் தெரிந்திருந்தோம் என்று தெரிகிறது.
ஆங்கிலேயர் வருகைக்குப் பின் தான் நாவல் இலக்கியம் பற்றி நாம் தெரிந்து கொண்டோம் என்பது ஒரு வரலாற்றுப் பிழை. இந்தப் பிழையை எந்தத் தமிழ் பல்கலைக் கழகமோ, அதில் பட்டம் பெற்ற முனைவர்களோ, பேராசிரியர்களோ இது வரைச் சுட்டிக் காட்டியதில்லை.
தமிழ் இலக்கியச் சிறப்புக்கு பெருமை சேர்க்கும் தொடராக அமைய வேண்டும் என்ற ஆர்கத்தில் எழுதி வருகிறேன்.
நல்ல நினைவாற்றலும் வாசிப்பனுபவமும் கொண்ட தாங்கள் தொடர்ந்து வந்து கருத்துக்களைப் பகிர்ந்து கொள்வதற்கு நன்றி.;
@ ஸ்ரீராம்
பழந்தமிழகத்தில் கோயில்கள் இல்லாத நகரமே இருந்ததில்லை என்று உறுதியாகச் சொல்லலாம். கோயில் இல்லாத இடத்தில் குடியிருக்க வேண்டாம் என்ற மூதுரையே குடியிருப்புகள் இருந்த இடங்களில் கோயில்கள் இருந்தன என்பதற்கு சான்று.
கோயில்கள், அவற்றிற்கான இடத்தேர்வில் ஆரம்பித்து எதெது எப்படியெல்லாம் அமைய வேண்டும் என்று நிறைய வரையறைகள் அவற்றைச் சொல்லும் ஆகம் நூல்கள் வகைவகையாக இருக்கின்றன. இது பற்றி ஓரிரண்டு பதிவுகளாவது எழுத வேண்டுமென்பது எனது நெடுநாளைய ஆசை.
எந்த தேசத்தில் தான் கோயில்கள் இல்லை?.. தெய்வங்கள், கோயில்கள், வழிபாடுகள் எல்லாமே உலகளாவிய பழக்கங்கள்.
தொடர்ந்து வாசித்து வந்து கருத்திடுவதற்கு நன்றி, ஸ்ரீராம்.
இந்தப் பதிவினை ஒரு முறை, இரு முறை அல்ல,
இது வரை ஐந்து முறை படித்தேன்.
அழகான, நயமான, இதமான, எளிதான,
அவைக்கு அடக்கமான,
இனிமையான , இயல்பான வார்த்தைகளால்
ஈன்று இருக்கிறீ ர்கள் ஒரு கட்டுரையை,
எனக்குப் பிடித்த ஒரு கட்டுரை நடையில்
காவியத்தைப் படிப்பது களிப்பைத் தந்தது.
சில இடங்களில் மனதில் பல ஓவியங்கள் தோன்றின
என்றாலும் மிகை இல்லை.
இரு பெண்டிரிடையே காணும் வித்தியாசத்தை
இல்லற இலக்கணத்துக்குட்படுத்தி சமைத்திருப்பது
பாராட்டத்தக்கது என்று ஒரு சொல் சொன்னால் போதுமோ !
உம்மை எனக்கு இன்னமும் முன்னமே பரிச்சயம்
ஆகியிருக்கவேண்டும். பல நான் கற்று இருக்கலாம்.
தொடர்ந்து எழுதுங்கள்.
சுப்பு தாத்தா.
//மாதவி நிரம்ப யோசித்து கோவலனுக்கு ஒரு மடல் எழுதத் துணிகிறாள். தாழை மடல் தான் எழுது தாள், பித்திகை என்ற மலரின் அரும்பு எழுதுகோலாகிறது. சாதிலிங்கப் பூவின் குழம்பு எழுது மை என்று உபயோகமாகி மடல் தயாராகி விட்டது.//
ஆஹா ..... தாழம்பூ .....
வாசமுள்ள மடல் இது ..... வஸந்தத்தைத் தேடுது.
//ஆனால் மாதவியோ, ‘இன்று மாலை வராவிட்டாலும், நாளை காலை வருவார்’ என்று நம்பிக்கையோடு சொல்கிறாள்.//
அவளுக்குத்தான் இது தெரியுமே ..... நல்லதொரு நம்பிக்கை.
//ஆண்—பெண் உடல் ஈர்ப்பை தாண்டி இசைக்கலைஞன் கோவலனின் மனதை ஆரம்பத்தில் ஆக்கிரமித்தது மாதவியின் இந்த கலைத்திறமைகள் தாம். உடல் இச்சைக்காக மாதவியை கோவலன் விலைகொடுத்து வாங்கினான் என்று கொச்சையாகக் கொள்ளக்கூடாது. சோழமன்னின் அரசவையில் போற்றப்பட்ட ஆடல் அணங்கு கடைவீதியில் விலை பேசப்பட்ட பொழுது, இசையில் நாட்டமில்லாத வேறு எந்த வசதிபடைத்த குணக்கேடனுக்கும் இவள் உரிமையாகி விடக்கூடாது என்ற கலைஞான அக்கறையிலும் கோவலன் மாலையை வாங்கி அவளை உரிமையாக்கிக் கொண்டிருக்கலாம். இரண்டு கலைஞர்களின் இசை மீதான ஈடுபாடு ஆண்-பெண் என்பதால் அதற்கேற்பவான ஈர்ப்பைக் கொண்டு அடுத்த கட்ட வளர்ச்சியை இயல்பாக்கிக் கொண்டது என்றே கொள்ள வேண்டும். //
நல்லதொரு அருமையான விளக்கம். GOOD JUSTIFICATION :)
வசந்தமாலை, தேவந்தி, மாலதி போன்ற உப கதாபாத்திரங்களும், அவர்களின் கதைகளும், வழிபட்ட கோயில்களின் பட்டியலும் சிறப்பாக உள்ளன.
//கடைசியாக பிச்சாண்டர் கோயில் அடைகிறாள். பிச்சாண்டர் கோயிலில் அந்த அதிசயம் நடந்தது.//
ஆஹா, இங்கும் திருச்சியிலும் ஓர் பிக்ஷாண்டார் கோயில் உள்ளது. அதுவே என் மாமனார் மாமியார் வாழ்ந்த அவர்களின் சொந்த ஊர் ஆகும். அங்குள்ள சிவனுக்கு பிக்ஷாடனேஸ்வரர் என்றே பெயர். சென்றவாரம் கூட என் ஒரே மச்சினரின் பீமரத சாந்திக்காக (69 >>>> 70 years age இல் செய்துகொள்ளும் ஓர் விழா) இங்கு நான் சென்று வந்தேன்.
இந்த பிக்ஷாண்டார் கோயில் என்ற கிராமத்திலிருந்து 10 நிமிடம் நடக்கும் தூரத்தில் மட்டுமே உள்ளது உலகப்புகழ் பெற்ற திவ்ய க்ஷேத்ரமான மும்மூர்த்தி ஸ்தலம் ‘உத்தமர் கோயில்’ ..... இங்கு பிரும்மா+விஷ்ணு+சிவன் ஆகிய மும்மூர்த்திகளுக்கும் அவர்களின் தேவிகளுக்கும் தனித்தனி சந்நதிகள் உள்ளன. இங்கு வியாழக்கிழமைகளில் பக்தர்கள் கூட்டம் மிக அதிகமாக இருக்கும்.
>>>>>
//கோவலன்—கண்ணகி—மாதவி என்று இவர்களைச் சுற்றியே கதை போகாமல் பல கதை மாந்தர்கள், சுற்றுப்பட்ட சிறுசிறு கதைகள், அது சம்பந்தப்பட்ட செய்திகள் என்று கூடை முடைவது போல சிலப்பதிகார நாவலை முடைகிறார் இளங்கோ.
தேவந்தி கதை மாதிரி இன்னும் நிறைய நிறைய குறுங்கதைகள் இந்தக் காப்பியத்தில் நீங்கள் வாசிக்கக் காத்திருக்கின்றன. ஒரு காப்பியத்தை வடிக்கும் போக்கில் இளங்கோ அடிகள் நேர்த்தியாக வெகு நுணுக்கமாக என்னவெல்லாம் நகாசு வேலைகளைச் செய்திருக்கிறார் என்று வரும் பகுதிகளை ரசிப்பதற்கு ஏதுவாக முன்கூட்டியே சொல்லப்பட்ட இந்த நாவல் வரையறைகள் உதவும். //
பாராட்டுகள். வாழ்த்துகள். பகிர்வுக்கு நன்றிகள். தொடரட்டும் தங்களின் இந்தத் தொடர் ......
@ தளிர் சுரேஷ்
நன்றி, தளிர் சுரேஷ் சார்!.. தங்கள் பின்னூட்டமும் அசத்தல் தான். தொடர்ந்து வாருங்கள்..
@ அ.சு. ஜோசப்
அது என்ன பிரியமில்லாதவன்?.. எதிலும் பிரியமில்லாமல் இருக்கவும் கூடுமோ?..
பிரியமுள்ளவரின் பிரியமான பின்னூட்டத்திற்கு நன்றி..
@ பெரியவர் சூரி சிவா
பாலாச்சுளையை தேனில் நனைத்தாற் போன்றதோர் பின்னூட்டம்.
ஐயன் ஐந்து முறை படித்தது அனுபவித்ததற்கு தங்களின் தமிழ் ரசனையே காரணம். தமிழுக்காக தனிப் பக்க பதிவு கொண்டிருப்பவர், அல்லவா?..
இது தான் உங்களுக்குப் பிடித்த கட்டுரை நடையா?.. ஜமாய்ச்சுடலாம்.
தொடர்ந்து எழுதுகிறேன். தங்கள் ஆசிகளுக்கு நன்றி.
@ Geetha Sambasivam (பகுதி -9 பின்னூட்டம்)
//உங்களைப் போன்ற சில ரசிகர்கள் இருக்கும்வரை கோவலனின் நன்மதிப்புக்கு என்ன குறை? நான் ஒருத்தி கோவலனை நல்லவன் என்று சொல்லாததால் எதுவும் குறையப் போவதில்லை! ஏனெனில் என்னைப் பொறுத்தவரை அவன் கேவலன்! கண்ணகியோடு மதுரைக்குப் போகும்போது கூட மாதவியின் கடிதம் கண்டு மனம் மகிழ்ச்சி அடைகிறான். ஆகவே வேறு வழியில்லாமல் தான் அவன் கண்ணகியோடு செல்கிறான். :) அவன் மனம் ஒப்பிப் போகவில்லை.//
கீதாம்மா... நானும் சிலப்பதிகாரத்தை புரட்டிப் புரட்டிப் பார்த்து விட்டேன்.
'கண்ணகியோடு மதுரைக்குப் போகும் போது கூட ... மனம் ஒப்பிப் போகவில்லை..' இப்படியான கருத்துக்கு எந்த சான்றும் இல்லையே!
ஜீவி சார் !
அடடா ! என் நெடிய பின்னூட்டம் எங்கே போயிற்று? உங்கள் மறுவினை உண்டோ என வந்தால், முதலுக்கே மோசம். தேவந்தி கைக் குழந்தையுடன் இடாகனி தான் அதையும் இழுங்கியிருக்க வேணும். மதுரைக்கு வருகிறானே கோவலன்...
ஒருமுறை கிவாஜ அவர்களிடம் பின்வரும் கேள்வி கேட்கப்பட்டது :
" சிலம்பில், மதுரையை கோவலன் நெருங்கும் போது, நகரின் முகப்பில் கொடிகளெல்லாம் கொலைகளப் படப்போகிறாய் வராதே! வராதே!! என்று படபடத்தன என்கிறார் இளங்கோ. ஆனால் கம்பனிலோ,அதே கொடிகள் இராம பட்டாபிஷேக ஏற்பாடுகள் போது அனைவரையும் வா! வா!! என்றழைப்பதாய் இருக்கிறதே? இது எஞ்ஞனம்?"
கிவாஜ உடனே சொன்னார்.
"அயோத்தியில் கொடிகள் நெடுக தொங்கவிடப்பட்டவை. அசைவில் வாவா என்றதைப்போல் தோற்றமளித்தது. மதுரையிலோ கொடிகள் கம்பங்களில் கட்டப் பெற்றவை. காற்றில் இடமும் வலமுமாய் அலையும் போது போபோ என்பதாய்த் தோன்றியது. கம்பனும் சரி. இளங்கோவனும் சரியே!"
@ வை.கோ. (1)
தாழம்பூக்கும் பாம்புக்கும் ஜென்மத் தொடர்பு.
அதனால் வாசமுள்ள மலர் மட்டுமில்லை, சிறு புழு போல நெளியும் அதுவும் உண்டு. ஓரிரண்டு தடவை பார்த்தும் இருக்கிறேன். அதனாலே தாழம்பூ என்றாலே அதான் நிங்கைவுக்கு வரும்!
வரலெஷ்மி விரதம் பண்டிகை போது வெள்ளி அம்மன் முகத்திற்கு ஜடை அலங்காரம் செய்ய தாழ்ம்பூ இல்லை என்றால் என் மனைவிக்கு சுரத்தே இருக்காது! எங்கே கிடைக்குமோ, ஏது செய்வேனோ எப்படியாவது வாங்கி வந்தே ஆக வேண்டும்!
சென்னையில் அரிதிலும் அரிதாய் கிடைக்கும் இடம் தேடிப்போய் (ஒரு மடல் அந்த நேரத்திற்கு 50 ரூபாய் என்பான்) புலிப்பாலே கொண்டு வந்த சாகசத்தில் ஒரு வழியாய் வாங்கி வந்து விடுவேன்!
நினைவுகளைக் கிளறியதற்கு நன்றி, கோபு சார்!
@ வை.கோ. (2)
மாலை வராவிட்டாலும் நாளை வருவார் என்ற நம்பிக்கை தான் மாதவிக்கு.
அவள் நம்பிக்கை தான் பொய்த்துப் போய்விட்டதே! ஊழ்வினை வலிது.
அவள் நம்பிக்கையைப் பொய்க்க வைத்ததில் ஊழ்வினைக்குப் பெரும் பங்கு உண்டு!
அவன் ஊழ்வினை வேறு மாதிரி இருந்திருந்தால், அவள் கொண்ட நம்பிக்கை படி அடுத்த நாள் கோவலன் அவள் இல்லத்தில் அசட்டுச் சிரிப்புடன் ஆஜராகி இருந்திருப்பான்!
சாதாரணமாக எல்லா கதைகளுக்கும் ஒரு துவக்கம், ஒரு சிக்கல், ஒரு முடிவு இருக்க வேண்டும் என்பது பொது விதி. சிக்கல்தான் கதை அல்லது காப்பியத்திற்கு சுவாரஸ்யம் கூட்டி நகர்த்தி செல்வது. சிக்கல் வர ஒரு முடிச்சு விழ வேண்டும். சிலப்பதிகாரத்தில் எனக்கு ஒரு சந்தேகம், சுகமாக சென்று கொண்டிருந்த கோவலன், மாதவி பிரிய வேண்டும் என்றால் இங்கே ஒரு முடிச்சு வேண்டும். ஆனால் ஒரே பாடலிலேயே உறவை முறித்துக் கொள்ளும் அளவிற்கு சென்று விடுவார்களா? இதற்கு முன் சிறு சிறு சச்சரவுகள் அல்லது கருத்து வேறுபாடுகள் அவர்களுக்குள் தோன்றியிருக்குமோ? அதை ஏன் இளங்கோவடிகள் குறிப்பிடவில்லை? "மாயப் பொய் பல கூட்டு மாயத்தாள்" என்னும் சொற்றொடரும், பின்னால் மாதவி கொடுத்தனுப்பிய மடலை வாங்க மறுக்கும் பொழுதும், "ஆடல் மகளே அவள் நடிப்பை கண்டு நான் மயங்கேன்" என்னும் சொற்றொடரும் இதற்கு முன் பல முறை கோவலன் மாதவியால் காயப் பட்டிருக்கலாமோ, அதனால் கண்ணகிக்கு தான் இழைத்த துரோகத்தின் குற்ற உணர்ச்சி அதிகமாகி இருக்கலாமோ? என்று சந்தேகம் கொள்ள வைக்கின்றன. ஒரு சிறு விரிசல், அது கொஞ்சம் கொஞ்சமாக அதிகமாகி படாரென்று வெடித்தது என்று நாமாக யூகித்துக் கொள்ள வேண்டும் என்று இளங்கோவடிகள் விட்டு விட்டாரா?
@ வை.கோ. (3(
//நல்லதொரு அருமையான விளக்கம். GOOD JUSTIFICATION :) //
இதுவும் இதுவரை யாரும் பார்த்திராத பார்வை, கோபு சார். தங்கள் நியாயத் தீர்ப்புக்கு நன்றி.
@ வை.கோ. (4)
திருச்சி அருகேயுள்ள பிச்சாண்டர் கோயில் பற்றி இதற்கு முன்னே தங்கள் பதிவில் எழுதி படித்த நினைவு.
நானும் கும்பகோணம் ஆகையால், திருச்சியிலும் என் தந்தை வழி உறவினர்கள் சிலர் இருந்தனர். அதில் பிஷ்ஷாண்டார் கோயில் ஊரைச் சார்ந்தவர்களும் உண்டு என்று கேள்விப்பட்டிருக்கிறேன். பல ஆண்டுகளுக்கு முந்தைய நினைவுகள். அதனால் தெளிவாகச் சொல்ல முடியவில்லை.
பிஷ்ஹாண்டார் கோயில் ஊர் பற்றி நினைவு கொண்டமைக்கு நன்றி.
@ வை.கோ. (5 )
"கோவலன்—கண்ணகி—மாதவி என்று இவர்களைச் சுற்றியே கதை போகாமல் பல கதை மாந்தர்கள், சுற்றுப்பட்ட சிறுசிறு கதைகள், அது சம்பந்தப்பட்ட செய்திகள் என்று கூடை முடைவது போல சிலப்பதிகார நாவலை முடைகிறார் இளங்கோ."
-- இதான் முக்கியமானது. கெட்டியாகப் பிடித்துக் கொள்ளுங்கள். அங்கங்கே வாசித்து வரும் பொழுது உங்களுக்கே சிலப்பதிகாரக் காப்பியம் என்பது ஒரு நாவலாக நம் கற்பனையில் எப்படிப் பரிமாணம் கொள்கிறது' என்பது புரிபட்டுப் போய்விடும். அந்தப் பார்வையில் படிக்கும் பொழுது இதுவரை தெரிந்த சிலப்பதிகாரம் இல்லாமல் வேறொன்று மாதிரியும் புலப்படும்.
தொடர்ந்து வாசித்துக் கருத்துக்களை உங்கள் பாணியில் பதிவிடுவதற்கு மிக்க நன்றி, கோபு சார்.
@ மோகன்ஜி
உங்களுக்கு வெறும் அடடா! எனக்கோ பேரிழப்பாக இருக்கிறது. தேடித் தேடிப் பார்த்து விட்டேன். எங்கேயும் கண்டேனில்லை. நினைவில் இருந்து எடுத்து மீண்டும் எழுதி அனுப்ப முடியுமா, மோகன்ஜி?,,
காளமேகப் புலவரே பிறவி எடுத்த உணர்வை ஏற்படுத்துபவர் அல்லவோ வாகீச கலாநிதி?.. மதுரையின் படபடப்பையும், அயோத்தியின் அசைவையும் ஒலி-ஒளிக் காட்சியாய் கற்பனையில் கண்டு ரசித்திருக்கிறாரே!
எனக்கோ எம்.ஏ.வேணுவின் சம்பூரண ராமாயணம் நினைவுக்கு வந்தது.
அயோத்தியில் கொடிகள் அசைய, தேரோட்டிக்கு கை அசைவில் சேதி சொல்லி கன்னக் கதுப்புச் சதைகள் துடிதுடிக்க என்னமாய் நடித்திருப்பார் நடிகர் திலகம்!
இன்னொரு சிவாஜி எப்போ தெரியலையே! காத்திருப்போம். காலமெலாம் காத்திருப்போம்.
// சோழமன்னனின் அரசவையில் போற்றப்பட்ட ஆடல் அணங்கு கடைவீதியில் விலை பேசப்பட்ட பொழுது, இசையில் நாட்டமில்லாத வேறு எந்த வசதிபடைத்த குணக்கேடனுக்கும் இவள் உரிமையாகி விடக்கூடாது என்ற கலைஞான அக்கறையிலும் கோவலன் மாலையை வாங்கி அவளை உரிமையாக்கிக் கொண்டிருக்கலாம்.//
ஒருவேளை கோவலனது குணநலத்தை இந்த நிகழ்வு தூக்கிப்பிடிக்கலாம். ஆனாலும் தன்னை நம்பி கை பிடித்து வந்த கண்ணகியை மறந்து மாதவியின் வீட்டில் தங்கியவனின் நடத்தை பற்றி என்ன சொல்ல?
//தேவந்தி பற்றிய சுவாரஸ்யமான கதை ஒன்றை இந்த இடத்தில் சொல்கிறார் அடிகளார். //
இதைப் படிக்கும்போதே கதைக்குள் கதை இருப்பது திரு ஜெயமோகன் அவர்கள் சொன்ன ஒரு நாவலுக்கான இலக்கணம் இருக்கிறதே என நினைத்துக்கொண்டே மேலே படித்தபோது தாங்களும் அதையே அடிக்கோடிட்டு காட்டியுள்ளீர்கள்.
//தேவந்தி கதை மாதிரி இன்னும் நிறைய நிறைய குறுங்கதைகள் இந்தக் காப்பியத்தில் நீங்கள் வாசிக்கக் காத்திருக்கின்றன.//
நானும் வாசிக்க ஆவலுடன் காத்திருக்கிறேன்.
@ Bhanumathi Venkateswaran
ரொம்பவும் உள்ளார்ந்து பார்த்திருக்கிறீர்கள். இருவரும் இந்த கானல்வரி பாட்டு மூன்றோடு நிற்கவில்லை. நிறைய வரிப்பாடல்கள் பாடுகிறார்கள். அதில் கோவலன் பாடும் மூரிவரிப் பாடல்களும் மாதவி பாடும் சாயல்வரிப் பாடல்களும் குறிப்பிடத் தக்கன. இருந்தாலும் வேறு ஒரு பெண்ணை நினைத்து அவன் பாடுவது போலவும், இவளோ வேறொரு ஆணை நினைத்துப் பாடுவது போலவும் இருவரும் மாற்றி மாற்றி கற்பிதம் கொண்டது என்னவோ உண்மை. ஆனால் கானல்வரி காதைக்கு முன் இருவரிடம் எந்த சந்தேகமோ, சலசலப்போ இருந்ததில்லை என்பது மட்டும் தெளிவாகத் தெரிகிறது.
சிலப்பதிகார வரிகளைத் தாண்டி கோவலன் மனநிலையை ஆராய்ந்தால் ஒன்று தெரிகிறது. அது ஒரு ஆண் மனோபாவம் சம்பந்தப்பட்டது.
மனைவி இருக்க மாற்றாளோடு தொடர்பு கொண்டவர் மனைவியோடு கூட இல்லாத நெருக்கத்தை மாற்றாளிடம் காண்பார்கள். வேறெந்த ஆண்களோடும் அவள் பேசிச் சிரிப்பதைக் கூட பொறுத்துக் கொள்ள மாட்டார்கள். அவர்கள் தாங்கள் நேசிப்பவரிடம் கொண்டிருக்கும் ஆழ்ந்த காதலும், நெருக்கமும் அப்படியான ஒரு ஆளும் உரிமையை எடுத்துக் கொண்டு இவள் தனக்கு மட்டுமே சொந்தம் என்றும், மாற்றாரிடம் லவலேசமும் அவள் மனசு படியக் கூடாது என்றும் நினைப்பார்கள். அந்த நினைப்புக்கு அடுத்த கட்டம்
தனக்கு இடம் கொடுத்த மாதிரி இன்னொருத்தனுக்கு இடம் கொடுத்து விடுவாளோ என்ற சந்தேகமாக விரியும். சோழமன்னனை நினைத்துப் பாடிய மாதிரியான மாதவியின் பாட்டு அந்த அளவுக்கு கோவலனிடம் ஆழ்ந்த சலனங்களை ஏற்படுத்தியிருக்கலாம். அந்த காரணத்தால் தான் "மாயப் பொய் பல கூட்டு மாயத்தாள்" என்றும் "ஆடல் மகளே அவள் நடிப்பை கண்டு நான் மயங்கேன்" எனறும் வார்த்தைகள் அவனிடமிருஜ்து வெளிப்பட்டிருக்கலாம் என்றும் கொள்ளலாம். சுத்தமாக தனிநபர் கையாளல் சம்பந்தப்பட்ட உளவியல் சமாசாரம் இது.
ஆழ்ந்து உன்னிப்பாக நோக்கிய உங்கள் கருத்துக்கு நன்றி. தொடர்ந்து வாருங்கள்.
@ வே. நடனசபாபதி
//தன்னை நம்பி கை பிடித்து வந்த கண்ணகியை மறந்து மாதவியின் வீட்டில் தங்கியவனின் நடத்தை பற்றி என்ன சொல்ல? //
அந்தக் கால வழக்கப்படி இதெல்லாம் பெரிய விஷயமே அல்ல. சங்க காலத்தில் இதை விட மோசம். இந்தக் கால இயைபுப்படி இதையெல்லாம் சிரச்சேதம் பண்ணுகிரோமே தவிர ஒவ்வொரு காலத்தும் அந்தந்த காலத்து இயைபுகள் இயல்பாகத் தான் இருந்திருக்கின்றன.
என் கணிப்புப்படி கண்ணகியிடம் இல்லாத மாதவியிடம் இருந்த ஒரு ஈர்ப்பு மாதவியின் நாட்டிய + இசைக் கலை ஈடுபாடு தான். கோவலனும் இசைக் கலையில் நன்கு தேர்ச்சி பெற்ற கலைஞனாகத் தெரிகிறான். கவிதை அவன் உதடை அசைத்தாலே கொப்பளீத்துக் கொண்டு வருகிறது.. கண்ணகியுடனான முதல் இரவில் 'மாசறு பொன்னே, வலம்புரி முத்தே' ஒரு நல்ல உதாரணம். உண்மையிலேயே கோவலனுக்கு மாதவியின் உடல் ஈர்ப்பு ஒரு பொருட்டாகவே இல்லாமல் இசை ஈர்ப்பு விஞ்சி இருந்திருக்கலாம். எல்லா ஈர்ப்புகளுமே தனக்கே சொந்தம் என்று நினைக்கிற தன் வயப்பட்டவை. அந்தந்த நேரத்து அவையெல்லாம் அவற்றைக் கையாளுகிறவர்களைப் பொறுத்தும் இருக்கிறது.
இப்படித் தான் இவற்றைக் கையாள வேண்டும் என்று இன்னொருத்தர் சட்டம் போட முடியாது.
இதெல்லாம் அவரவர் சம்பந்தப்பட்டு இருப்பதால், நாம் இப்படியெல்லாம் குடைந்து பார்த்துக் கொண்டிருக்க இளங்கோவோ அவருக்குப் பிடித்த மூன்றில் ஒன்றான 'ஊழ்வினை உருத்து வந்து ஊட்டும்' என்று ஒரே போடாகப் போட்டு விடுகிறார். 'ஆமாம் தானே?' என்று நாமும் ஒத்துப்பாட வேண்டியிருக்கிறது.
'ஊழ்வினை உருத்து வந்து ஊட்டும்' என்பதும் "Everu action has an equal and opposite reaction' என்று பிற்காலத்து இயற்பியல் மேதை சர் ஐஸக் நியூட்டன் சொன்னது தான். இங்கு வினையை செயல்பாடு என்று கொள்ள வேண்டும்.
தொடர்ந்து வாசித்து பின்னூட்டம் இடுவதற்கு மிக்க நன்றி, ஐயா.
Post a Comment