மின் நூல்

Thursday, July 14, 2016

அழகிய தமிழ் மொழி இது!...

பகுதி--17

யார் இந்த மாடலன் என்று தெரிந்து கொள்வதற்கு முன்னால் இந்த சிலப்பதிகார நாவலின் போக்கைக் கொஞ்சம் அலசிப் பார்ப்போம்.

இந்த நாவல் எழுதப்படுவதற்கான நோக்கம் மூன்று கருத்துக்களை வலியுறுத்துவதற்காக
என்று தெள்ளந்தெளிவாக பதிகத்திலேயே பறைசாற்றப்படுகிறது.

என்ன அப்படியான மூன்று கருத்துக்கள்?..


  1. செய்த காரியங்களுக்கான வினை தான் ஒரு மனிதனை வாழ்க்கை பூராவும் தொடர்ந்து வந்து அவனுக்கான நல்லது கெட்டதுகளைத் தீர்மானிக்கின்றனவினைக்கு முடிவே இல்லை. அது ஒரு தொடர் சங்கிலி. சொல்லப் போனால் செய்த வினைகளின் தொடர் சங்கிலி தான் வாழ்க்கையே. அடுத்தத்த பிறவிகள் தான் அடுத்தடுத்த வாழ்க்கை என்பதினால், ஒரு பிறப்பில் செய்த நல்லவை தீயவைக்கான வினை, பிறவிதோறும் முடிவே இல்லாமல் தொடர்ந்து வரும் ஆற்றல் பெற்றிருக்கிறது. ஆக, பிறவி முற்றுப்பெற்றால் தான் அந்தப் பிறவிக்கான வினைத்தொடரும் முற்று பெறும். அதாவது வினைகளின் முற்றுப்பெறுதலே வாழ்க்கையின் முற்றுப் பெறுதலாகி மனிதப்பிறவி தெய்வ நிலையை அடைகிறது.
     2.  அரசாட்சியில் பிழை செய்தோருக்கு அறமே கூற்றுவனாகிறான் என்ற கருத்து.
இதிலும் வினை, அறத்தின் தோற்றம் கொண்டு அப்படிப் பிழை செய்தோருக்கு காலனாகிறது.

     3.  கற்பின் அணிகலான பத்தினிப் பெண்களை உயர்ந்தோர் போற்றிப் புகழ்வோர் என்பதின் மூலம் அவர்களும் தெய்வநிலையை அடைகிறார்கள்.

முதல் கருத்தில் பிறவி தோறும் செய்யும் செயல்களுக்கான நல்லது—கெட்டது, வாழ்க்கை பூராவும் தொடர்ந்து வருகிறது என்று தெரிந்தது. அதாவது ஒருவர் தன் சங்கிலி வாழ்க்கையில் செய்யும் நல்லவையும் தீயவையும் அவறிற்கேற்ப வினைகளாக அவர் வாழ்க்கையில் செயல்பட்டு அதுவே அவர் வாழ்க்கையாக உருக்கொள்கிறது.
வாழ்க்கை என்று தனியே வேறு இல்லை. செய்யும் செயல்களின் வினைச் சேர்க்கைகளே வாழ்க்கை. வினைகள் தாம் செயல்படுவதற்கு இந்த பிரபஞ்சம் சம்பந்தப்பட்ட எதையும் உபயோகப்படுத்திக் கொள்கின்றன என்பது தான் வேடிக்கையான உண்மை. இந்த உபயோகப்படுத்திக் கொள்ளலும் காரண காரியங்களோடு நடைபெறுகிறது. அப்படி வினையின் செயல்பாடாக செயல்பட்டது, செயல்பட்டவரின் வினையாகி அதற்கான நல்லவை தீயவைகளை அவை அவருக்கு அளிக்கின்றன.

சிலப்பதிகாரக் காப்பியத்தின்படிப் பார்த்தால் 'எந்தப் பிறவியிலோ தான் செய்த வினைக்கான பலனை கோவலன் அனுபவிக்க வேண்டும்; அவன் செய்த வினைக்கான பலன் மதுரையில் நடைபெற வேண்டும்' என்று தீர்மானிக்கப் பட்டிருப்பதால் அவன் மதுரை செல்ல வேண்டும். அவன் மதுரை செல்வதற்கு அவன் மனம் ஒத்துழைக்க வேண்டும். அதற்கான மனத்தூண்டுதலை பல்வேறு நபர்களாலும் காரியங்களினாலும் தடையின்றி அவன் பெற வேண்டும். அப்படிப் பெறுவதற்கான தூண்டுதலாக அமைந்த ஒருவனே இந்தப் பகுதியில் நாம் பார்க்கப் போகிற மாடலன்.

தீர்க்கமாகப் பார்க்க போனால் கோவலனோடு சம்பந்தப்பட்ட அத்தனை பேருமே கோவலனின் வினைப்பயனுக்காக செயல்படுபவர்கள் ஆகிறார்கள். அப்படிச் செயல்படுவதே அவரவருக்கான வினைகளின் செயல்பாடுகளாகிறது. ஒவ்வொருவர் செயல்படுவதும் அவரின் சொந்த வினைக்கான செயல்பாடாகி   அவரவரின் வினைப்பலன்களும்  பூர்த்தியாகின்றனஅவரவர் தம் செயல்பாடுகளின் வினைகளுக்கான பலன்களை, நல்லவையோ-- தீயவையோ அவரவர் அறுவடை செய்கின்றனர். என்னன்ன அறுவடை செய்கின்றனர் என்பதனை அவரவர் தனிப்பட்ட வாழ்க்கையைப் புரட்டிப் பார்த்தால் தான் தெரியும்.

பாண்டியன் நெடுஞ்செழியன், அவனைத் தொட்டு அவன் மனையாட்டி கோப்பெருஞ்செல்வி, கோவலனைத் தொட்டு அவன் தாலிகட்டிய மனைவி கண்ணகி, காதலி மாதவி, மாதவியைத் தொட்டு அவள் மகள் மணிமேகலை என்று சிலர் அறுவடை செய்தவை மட்டும் அவரவர் வாழ்க்கைக் கதை தெரிந்ததினால் தெரிகிறது.

உலகமே நாடக மேடை; அதில் நாமெல்லாம் நடிகர்கள்' என்று ஆங்கில நாடகத் தந்தை ஷேக்ஸ்பியர் சொல்லியிருப்பது நினைவுக்கு வருகிறது. இதோ மாடலன் வந்தாச்சு; வாழ்க்கையான நாடக மேடையில் கோவலன் தன் வினைப்பயனை அனுபவிக்கக் காத்திருக்கையில் மாடலன் அதில் எப்படி சம்பந்தப்படுகிறான் என்று பார்ப்போம்.

அதற்கு முன்னால் மாடலனைப் பற்றி ஒரு சின்ன அறிமுகம்; இளங்கோவடிகளார் அறிமுகப்படுத்தி இருப்பதை அப்படியே ஒற்றி எடுத்து ...

நீரையே வேலியாகக் கொண்ட ஊர் தலைச்செங்கானம். அந்தத் தலைச்செங்கானத்தில் பிறந்தவன் மாடலன். நான்கு வேதங்களையும் ஓதி உணர்ந்தவன். பிறருக்கு நன்மை செய்வதையே கொள்கையாகக் கொண்டவன். மாமறை முதல்வன். அவனே மாடலன் என்போன். மாதவ முனிவனான அகத்தியர் வாழ்ந்த பொதிய மலையை வலம் வந்து குமரியின் பெரிய துறையிலே முறைப்படி நீராடி தன் ஊர் திரும்புவன். திரும்பும் வழியில் பயணக் களைப்பு தீர எதிர்ப்பட்ட சோலையைப் பார்த்து உள்ளே நுழைய அதுவே கவுந்தி அடிகள் தங்கியிருந்த இடமாகி கோவலனையும் சந்திக்க நேரிடுகிறது...

யாரை எங்கு கொண்டு சேர்க்க வேண்டும், எதற்காகக் கொண்டு வந்து சேர்க்க வேண்டும்
யாருக்காக யார் செயல்பட வேண்டும் அப்படிச்  செயல்பட்ட வினைப்பயன்கள் எப்படியெல்லாம் பங்கு போடப்படுகின்றன  என்பதெல்லாம் முன்னமையே தீர்மானைக்கப்பட்ட ஒன்றாய் வினையின்  செயல்பாட்டுகளுக்குரிய  அட்டவணைப்படியே நடக்கிறது.

அடிகளார் தங்கியிருக்கும் குடிலுக்குள் நுழைந்த மாடலன் கவுந்தி அடிகளுக்கு வணக்கம் சொன்னான். கவுந்தி நான்மறையோனின் நலம் விசாரித்தார். கோவலன் பக்கம் மாடலன் திரும்ப கோவலன் அவரை வணங்கினான்.. கோவலனைப் பார்த்த்தும் நான்மறையோன் மகிழ்ச்சி கொண்டான்.

கோவலன் தானே?..” என்று கோவலன் யார் என்று  தனக்குத் தெரியும் என்பது போல நிச்சயப்படுத்திக் கொண்டான் நான்மறையோன். “மாந்தளிர் மேனி மாதவி மடந்தை பச்சிளம் குழந்தையை ஈன்றெடுத்ததும் ஒரு பெண் குழந்தைக்குத் தந்தையான களிப்பில் குழந்தைக்குத் தொட்டிலிட்டு பெயர் சூட்டும் விழாவை மிகச் சிற்ப்பாக நீ கொண்டாடியது ஊர் அறியும். 'முன்பு ஒரு நாள் இருள் சூழ்ந்த நள்ளிரவில் அலை மோதும் பெருங்கடலில் என் முன்னோன் சென்ற மரக்லம் உடைந்தது. கடலில் தூக்கி வீசப்பட்ட அவன் கரைகாணாது தத்தளித்துக் கொண்டிருந்தான். அப்பொழுது நடுக்கடலில் தெயவமகள் ரூபத்தில் ஒரு கடல் தேவதை தோன்றி 'செய்தவப்பயனாய் நீ உயிர்ப்பிழைப்பாய்' என்று ஆசி கூறி என் முன்னோனை கரைச் சேத்துக் காப்பாற்றியது. அந்த எம் முன்னோனைக் காப்பாற்றிய எங்கள் குலதெய்வத்தின் பெயராகிய 'மணிமேகலை' என்னும் பெயரை என் குழந்தைக்குச் சூட்டுவீர்களாக' என்று நீ கேட்டுக் கொள்ள ஆயிரம் கணிகையர் ஒன்று கூடி வாழ்த்திசைத்து குழந்தைக்கு மணிமேகலை என்று பெயர் சூட்டினர்கள். பொன்னும் மணியும் அந்த விழாவில் வரியவற்கு வாரி வழங்கிய கருணை மிகுந்த வீரன் நீ!” என்று மாடலன் மகிழ்ச்சியோடு சொன்னான்.

உண்மையில் பார்க்கப்போனால் மாதவிக்கு பெண் குழந்தை பிறந்த சேதியே சிலப்பதிகார காப்பிய வாசிப்பின் இந்த இடத்தில் தான் நமக்குத் தெரிகிறது. பிறந்த குழந்தைக்கு மணிமேகலை என்று கோவலன் பெர்யரிட்டதையும், அப்படி அவன் பெயரிட்டதற்கான காரணத்தையும் இந்த இடத்தில் தான் இளங்கோ அடிகளார் நமக்குத் தெரியப்படுத்துகிறார். அதுவும் கோவலன் வாயிலாக அல்லாமல் கோவலனின் சொந்த வாழ்க்கை நிக்ழ்ச்சி ஒன்றை அவனிடமே பிரஸ்தாபித்து மாடலன் நினைவு கொள்கிற மாதிரி மாதவிக்கு பெண் குழந்தை பிறந்த சேதியை அடிகளார் வெளிப்படுத்துவது இந்த காப்பிய வடிவமைப்பின் மிகச் சிறந்த ஒரு உத்தி. அதுவும் இனி நிகழவிருக்கும் சம்பவங்களுக்கு முன்னால் கோவலனுக்குப் பிறந்த குழந்தை பற்றி சொல்ல வேண்டிய அவசிய அவசரத்தை கருத்தில் கொண்டு அந்தச் செய்தியை காப்பியத்தில் நுழைப்பதற்கு தகுந்த இடத்திற்காகக் காத்திருந்து தக்க இடம் வந்ததும் அந்தக் காரியத்தை அற்புதமாகச் செய்தது தான் காப்பியத்தை இயற்றிய ஆசிரியனின் சாமர்த்தியம்.

கோவலன் வாழ்க்கையில் நடந்த இன்னும் சில நிகழ்வுகளை கோவலனே ஆச்சரியப்படும்படி சொல்லி கோவலன் மனசில் இனி அவனுக்காக அமையபோவதான வாழ்க்கையில் ஒரு நம்பிக்கையை ஏற்படுத்தி அடுத்த கட்ட நகர்வுக்கு அவனைத் தயார்படுத்துகிறான் மாடலன். மாடலனின் எதிர்ப்பார்ப்பின்படியே கோவலனும் அவன் சொல்வதை ஆர்வத்துடன் கேட்கிறான்:

முன்பொருநாள் வயது முதிர்ந்த ஞானவானான ஒருவன் கோலூன்றிய தளர்ந்த நடையுடன் ஏதாவது பொருள் உதவி நீ அவனுக்குச் செய்வாய் என்கிற எண்ணத்துடன் உன்னிடம் வந்தான். அந்த சமயத்தில் யாருக்கும் அடங்காத மதயானை ஒன்று அட்டகாசத்துடன் தெருவில் பிளிறலுடன் ஓடிவந்தது. இந்த கோலூன்றிய முதியவன் எங்கும் ஓட முடியாது தடுமாறி நிற்க வேகமாக வந்த யானை தன் துதிக்கையால் அவனைப் பற்றித் தூக்கியது. அதைப் பார்த்து பாய்ந்து வந்த நீ, அந்த முதியோனை யானையிடமிருந்து காப்பாற்றினாய்; அதன் நீண்டிருந்த துதிக்கை பிடித்து மேலேறி தந்தங்கள் பற்றி யானையின் பிடறியில அமர்ந்தாய்! உன் வீரசாகச நடவடிக்கையில் யானையும் அடங்கியது.. முதியோனைக் காப்பாற்றிய உன் கருணையும் போற்றப்பட்டது...    இதெல்லாம் உனக்கு நினைவிருக்கில்லையா?” என்று கோவலன் வியக்க அவன் வாழ்க்கையில்  நடந்தவற்றைச் சொன்ன மாடலன், மேலும் தொடர்ந்தான்.

கொடும் பாம்பின் தீண்டலிருந்து குழந்தையைக் காப்பாற்றியது கீரி ஒன்று. அதை அறியாமல் குழந்தையின் தாய் அந்தக் கீரியை அடித்துக் கொன்றாள். இதைப பார்த்த அவள் கணவன் மனம் நொந்து அவள் சமைத்த உணவைக் கூட உண்ண விரும்பாதவனாய் தேசாந்திரம் கிளம்பினான். அவன் செயலைப் பொறுத்துக்கொள்ள முடியாத அவன் மனைவி அவன் பின்னே ஓடினாள். அவள் கணவனோ, “இனியும் உன் கை உணவு வாங்கிச் சாப்பிட்டு வாழும் வாழ்வு முறையன்று; இந்தா! இந்த ஏட்டினைப் பிடி!” என்று வடமொழி வாசகங்கள் எழுதப் பெற்ற ஒரு ஏட்டினை அவளிடம் தந்தான். “நன்றாகக் கேட்டுக் கொள்.. மக்கள் பிறப்பின் மாண்பினை, அதன் தாத்பரியத்தை அறிந்தவர் எவரின் கையிலாவது இந்த ஏட்டைக் கொடு! அதுவே நீ செய்ய வேண்டியது" என்று அறிவுறுத்தி வடதிசை ஏகினான். கணவன் சொன்னபடியே அவளும், 'என் கொலைப்பாதகம் ஒழிய தானம் செய்வதற்கான பொருட்செல்வம் கொடுத்து புண்ணியம் பெருங்கள்..' என்று கடைவீதிகளில் புலம்பித் திரியலானாள். அந்த வழியாகச் சென்ற நீ அந்தப்பெண்ணை அழைத்து, “என்ன துன்பம் உனக்கு நேர்ந்தது?.. அது என்ன கையில் ஏடு?” என்று அந்தப் பெண்ணைக் கேட்டாய். அந்தப் பெண் நடந்த விஷயங்களை உனக்குச் சொல்லி, “பொருள் பொதிந்த இந்த ஏட்டினை வாங்கி, கைப்பொருள் தந்து எனக்கு நேர்ந்த துன்பத்தைக் களைய வேண்டுகிறேன்" என்றாள் நீயும் அந்தப் பெண்ணின் கவலையைப் போக்கும் விதமாக அக்கணமே அறநூல்கள் வகுத்த நெறிப்படி அவள் பாவம் தொலையுமாறு தானம் செய்து அவள் துன்பம் நீங்க வழி செய்தாய்! அதுமட்டுமன்று; கோபித்துக்கொண்டு கிளம்பிய அவள் கணவனைத் தேடிக் கண்டுபிடித்து இருவரையும் ஒன்று சேர்த்து அவர்கள் வாழ்க்கைச் செல்வுக்கான பொருட்செல்வமும் வழங்கியவன் நீ!” என்று வரிசையாகக் கோவலனின் அருமை பெருமைகளை ஒவ்வொன்றாய் அந்த நான்மறையோன அடுக்கலானான்.

பொருளுக்காக பத்தினிப்பெண் ஒருத்தி பற்றி அவள் கணவனைடமே ஒருத்தன் பழி கூறினான். அப்படிப் பழி கூறியவனை, தவறு செய்பவர்களைத் தண்டிக்கும் பூதம் ஒன்று பற்றியது. பூதத்திடம் அகப்பட்டவனின் நிலை குறித்து வருந்திய நீ, 'என்னுயிரைக் கொண்டு இவன் உயிரை விடுவிப்பாயாக' என்று வேண்டிக் கேட்டாய். ஆனால் அந்த பூதமோ நல்லவன் உன் உயிரைக் கொள்ள மறுத்து அத்தீய்வனின் தாயின் முகத்துகெதிரேயே அவனை அடித்துத் துவம்சம் செய்தது. அதைப் பார்த்து செயலற்று நின்ற அந்தத் தாயையும் அவன் சுற்றத்தாரையும் உன் சுற்றம் போல் நினைத்து பல்லாண்டு அவர்களைப் பேணிக் காத்த வறியவர்களின் தலைவன் நீ!..” என்று கோவலனைப் புகழ்படப் பேசிய மாடலன், அவனை நெருங்கி, “கோவலனே! இப்பிறவியில் நீ செய்தவை எல்லாம் போற்றத்தக்க புண்ணிய காரியங்களே! அவற்றை நானும் நங்கு அறிவேன். ஆயினும் கொடி போன்ற இந்தப் பெண் காலடி வருந்த மாமதுரை வந்தது முற்பிறவியில் நீ செய்த வினைப்பயன் போலும்..” என்று வருந்திக் கூறினான்.

''இப்பிறவியில் நீ செய்தவை எல்லாம் போற்றத்தக்க புண்ணிய காரியங்களே' என்று மாடலன் சொன்னதும் தான் தெம்பு வந்த மாதிரி இருந்தது கோவலனுக்கு. 'புண்ணிய காரியங்கள் என்றால் நல்ல விளைவுகள் தானே ஏற்பட வேண்டும்?.. பின் ஏன் அப்படி ஒரு கனவு சமீபத்தில் தனக்கு வந்தது' என்று மாடலனிடம் கேட்டுத் தெளிவு பெற வேண்டும் என்ற எண்ணம் அவன் மனசில் தலைதூக்கியது.  இருந்தும் 'முற்பிறவியில் செய்த வினைப்பயன் என்று புதுசாக வேறு சொல்கிறானே' என்ற புதுக் குழப்பமும் அவனுக்கு வந்து சேர்ந்தது. இருந்தும் கேட்டுத் தெரிந்து கொண்டு விடலாம் என்ற தெளிவில் லேசாகத் தொண்டையைச் செருமிக் கொண்டு தான் கண்ட பொல்லாக் கனவை மாடலனிடம் கோவலன் சொல்ல ஆரம்பித்தான..


(தொடரும்)


படங்கள் வழங்கிய நண்பர்களுக்கு நன்றி.



20 comments:

sury siva said...

மாடலன் வந்தார்.
மாதவிக்கொரு செல்வி
மணிமேகலை பிறந்த செய்தி சொன்னார்.
கோவலனின் சென்ற காலத்துச்
சிறப்புகளை எடுத்துச் சொல்ல,
வியந்து நிற்கும் கோவலனை , தன்
எதிர் உள்ள நாட்களை நோக்கி
பயந்து நிற்கும் கோவலனை
கண்ணிமைகள் ஒட்டாமல்,
காண்கிறேன். இனி என்ன நடக்குமோ
எங்கு நடக்குமோ என்ற ஆவல் மனத்துள்ளே
துள்ளுவதை சொல்ல இயலவில்லை.

ஏன் எனின், வார்த்தை இல்லை.

சுப்பு தாத்தா.

வே.நடனசபாபதி said...

சிலப்பதிகாரம் எழுதப்பட்டதின் நோக்கம் குறிப்பிட்டுள்ள மூன்று கருத்துகளை வலியுறுத்துவதற்காக என்பதை தெளிவுபடுத்தியமைக்கு நன்றி!

// வாழ்க்கை என்று தனியே வேறு இல்லை. செய்யும் செயல்களின் வினைச் சேர்க்கைகளே வாழ்க்கை. வினைகள் தாம் செயல்படுவதற்கு இந்த பிரபஞ்சம் சம்பந்தப்பட்ட எதையும் உபயோகப்படுத்திக் கொள்கின்றன என்பது தான் வேடிக்கையான உண்மை//

என்ற விளக்கம் மிக அருமை.

முக்கியமான தகவலை சரியான இடத்தில் சொல்வது என்பது ஒரு கலை. அதை ஒரு சிறந்த படைப்பாளியால் மட்டுமே செய்யமுடியும். மாதவிக்கு மணிமேகலை பிறந்த தகவலை இளங்கோ அடிகள் மாடலன் மூலம், நமக்கு தெரிவிப்பது நீங்கள் சொன்னதுபோல் அவரின் சாமர்த்தியம் தான்.

கோவலன் கண்ட பொல்லாக் கனவு பற்றியும் அது குறித்து மாடலன் அளித்த விளக்கத்தையும் அறிய காத்திருக்கிறேன்.

ஸ்ரீராம். said...

புதிய Font ஏதாவது உபயோகப் படுத்தி இருக்கிறீர்களா? சிறிய எழுத்துகளாக இருக்கிறது! கண்ட்ரோல் ப்ளஸ் அடித்து பெரிதாக்கிப் படித்தேன். தொடர்கிறேன்.

வை.கோபாலகிருஷ்ணன் said...

மாடலன் + கோவலன் சந்திப்பும் மாடலன் கூறிடும் பல்வேறு நல்ல கதைகளும், தங்களின் இந்தப்பதிவின் மூலம் படிக்க மிகவும் சுவாரஸ்யமாக உள்ளன.

தொடர்ந்து படிக்க மிகுந்த ஆவலுடன் காத்திருக்கிறேன்.

தி.தமிழ் இளங்கோ said...

// யாரை எங்கு கொண்டு சேர்க்க வேண்டும், எதற்காகக் கொண்டு வந்து சேர்க்க வேண்டும் யாருக்காக யார் செயல்பட வேண்டும் அப்படிச் செயல்பட்ட வினைப்பயன்கள் எப்படியெல்லாம் பங்கு போடப்படுகின்றன என்பதெல்லாம் முன்னமையே தீர்மானைக்கப்பட்ட ஒன்றாய் வினையின் செயல்பாட்டுகளுக்குரிய அட்டவணைப்படியே நடக்கிறது.//

மனதைத் தொட்ட வரிகள். அருமையான விளக்கம் அய்யா. ஆனாலும் இப்படி ஒரு உயிரை விதியின் பயனாய் ஆட்டுவிப்பதில் படைத்தவனுக்கு என்ன ஆனந்தம் என்றுதான் புரியவில்லை. ’அலகிலா விளையாட்டுடையான்’ என்பது சரிதான்.

sury siva said...

ஆனாலும் இப்படி ஒரு உயிரை விதியின் பயனாய் ஆட்டுவிப்பதில் படைத்தவனுக்கு என்ன ஆனந்தம் என்றுதான் புரியவில்லை//

தத்துவத்தின் அடிப்படைக்குச் செல்கிறீர்கள்.

நாம் என்பது யார்?
எங்கிருந்து வந்தோம்?
ஏன் வந்தோம் ?
இங்கு நாம் வருவதற்கு முன் என்ன இருந்தது ?
இங்கே என்று சொல்லும் புவி, அது இருக்கும் அண்டம்
இதெல்லாம் எங்கிருந்து வந்தன?
ஏன் வந்தன ?
"நாம் எல்லோரும்" சென்றபின் இங்கே என்ன இருக்கும் ?
"இங்கே" எனச் சொல்லும், குறிப்பிடும் அதுவும் இருக்குமா?
இருந்தால் எப்படி இருக்கும் ?
போகும் என்றால் அது எங்கே போகும் ?

இந்தக் கேள்விக்கெல்லாம் அப்ஜெக்டிவாகவும் விடை அளிக்கலாம்.

இருந்தாலும், அண்மையில், அண்டத்தில் ஒரு சூரியனை , கருமைத் துளை
விழுங்குவதை படம் பிடித்து போட்டு இருந்தார்களே !(Black hole swallowing a Sun which approaches it)(NASA picture)

பார்த்தீர்களா ?

சுப்பு தாத்தா.

ஜீவி said...

@ Sury Siva

சுதாஜி வந்தார்
கவிதையொன்று தந்தார்
மாதவிக்குக் குழந்தையாய்
மணிமேகலை பிறந்த சேதி
காப்பியத்தின் நடுவே மாடலன்
வாய்மொழியாய் தெரிவித்த விதம்
அறிந்து மனம் மகிழ்ந்தார்
கோவலனின் கழிந்த காலம்
அவனது எதிர்காலம் குறித்து
கேள்விகள் நிறைய உண்டு
அவருக்கு என்று புரிகிறது
நிகழ் காலத்துப் புண்ணியம்
நீர்த்துப் போவதற்குமில்லை
முக்காலக் கணக்கெடுப்பில்
நடப்புக் காலத்தப் புண்ணியம்
கண்டுகொள்ளாமல் போகவில்லை
கணக்கெடுப்பில் அதுவும் உண்டு
தேர்ந்து வாசித்து அறிந்ததினால்
தெரிந்தது அதுவும்
அடுத்துச் சொல்வேன்.
வருகைக்கும் வாசித்துப்
கருத்து பகிர்ததற்கும் நன்றி ஐயா.

ஜீவி said...

@ வே. நடனசபாபதி

வருகைக்கும் குறிப்பிட்ட இடங்களை எடுத்துச் சொன்னமைக்கும் இளங்கோ அடிகளாரின் காப்பிய வடிவமைப்பை அனுபவித்து ரசித்தமைக்கும் நன்றி, சார்

அடுத்து கோவலன் கண்ட கனவு. நிகழ்ப்போவது முன் கூட்டியே கனவாக வருவதிலும் ஏதோ சூட்சுமம் இருக்கிறது என்ற நினைப்பு மோலோங்குகிறது அடிகளார் கோவலன் கண்ட கனவை கோவலன் மூலமாகவே விவரிக்கும் பொழுது. அதை அடுத்த பகுதியில் விவரமாகப் பார்க்கலாம். தொடர்ந்து வாசித்து கருத்திடுவதற்கு நன்றி, சார்.

ஜீவி said...

@ ஸ்ரீராம்

கண்ட்ரோல் பிளஸ் அடித்து பெரிதாக்கிப் பார்ப்பதும் அப்பப்போ உபயோகத்தில் இருக்க வேண்டியது தான். இல்லையென்றால் அந்த உபயோகம் கூட மறந்தே போய்விடுவதற்கு வாய்ப்பு இருக்கிறது.

பெரிதாக்கியும் மேலோட்டமான வாசிப்பே சித்தித்திருக்கிறது போலிருக்கு. தொடர்ந்து வாசிப்பதற்கு நன்றி, ஸ்ரீராம்.

ஜீவி said...

@ வை. கோபாலகிருஷ்ணன்

மாடலன் சொன்ன கதைகளில் ஒன்று-- அந்த கீரிப்பிள்ளை வரும் கதை-- பஞ்ச தந்திர கதைகளில் ஒன்று. சிலப்பதிகாரம் -- ப.த.கதை இரண்டில் எது முந்தைய காலத்தது என்று தேடிப் பார்க்க வேண்டும்.

இந்த மாதிரி சிலம்பில் நிறைய கதைகளை அங்கங்கே தூவி வைத்திருக்கிறார் அடிகளார்.
இந்த சின்னஞ்சிறு கதைகளை தனிக் கதைகளாகப் பார்க்காமல் நடக்கும் காப்பிய
நிகழ்வுகளோடு அந்தக் கதைகளை யோசித்துக் கோர்த்துப் பார்த்தால் இன்னும் காப்பியச் சிறப்பு மேலோங்குவது தெரியும்.

தொடர்ந்து வாசித்து கருத்திடுவதற்கு மிக்க நன்றி, கோபு சார்.

ஜீவி said...

@ தி. தமிழ் இளங்கோ

செய்யும் காரியங்களுக்கான (காரியம்-- வினை) நல்லதோ, கெட்டதோ பலாபலன் தான் வினைப்பலன். சரியா?..
காரியங்கள் (செயல்பாடுகள்) இல்லாமல் வாழ்க்கை இல்லை. அதனால் வினைகளிலிருந்து (செயல்பாடுகளிலிருந்து) நம்மால் தப்ப முடியவில்லை. சொல்லப்போனால், வினைகளிலிருந்து விளையும் பலன் நம் நுகர்வு சம்பந்தப்பட்டிருக்கிறது. ஆக பலவிதப்பட்ட அனுபவிப்புகளான திருப்திகளுக்காக நாம் செயல்பட்டுக் கொண்டே இருக்கிறோம். தனிமனித திருப்தியைத் தாண்டி குடும்ப திருப்தி, சமூக திருப்தி, உலகத் திருப்தி என்று திருப்தி என்பது இந்த ஜென்மத்தில் பூர்த்தி அடைந்து விடாதபடி எல்லையில்லாமல் நீண்டு கொண்டே இருக்கின்றன.

திருப்தி அடைந்து விட்டவனுக்கும் செத்துப் போனவனுக்கும் வித்தியாசம் இல்லை என்று எனக்கு ஆட்டோகிராப் போட்டுத் தந்தார் ஜெயகாந்தன். உண்மையான வரிகள். உயிர் என்ற ஒன்று உடலோடு ஒட்டிக் கொண்டிருக்கிற வரை திருப்தி என்பது நிறைவு இன்றி நீண்டு கொண்டே இருக்கிறது.

நம் ரசனைகளுக்கேற்ப நம் செயல்பாடுகளும் அதற்கேற்பவான அனுபவிப்புகளும் இருக்கின்றன. ரசனைகளைத் தேர்ந்தெடுத்து செயல்படுவதும் அதற்கான பலனை அனுபவிப்பதும் நாம் தான். அதனால் எல்லாமே என் சம்பந்தப்பட்டவையே எனறு சொல்வது தான் தன்னைத் தீர்மானிக்கும் தனிமனிதனின் கூற்றாக இருக்க வேண்டும்.

1. இவையெல்லாம்-- இந்த செயல்பாடுகள் எல்லாம்-- முன்னாலேயே (நாம் பிறக்கும் பொழுதே அல்லது அதற்கு முன்னாலேயே) தீர்மானிக்கப் பட்டவையா?
(ஏற்கனவே ப்ரோகிராம் பண்ணப்பட்டவையா?)

2. நம் செயல்பாடுகள் வேறு ஒரு சக்தியினால் தீர்மானிக்கப்பட்டிருக்கின்றனவா?

3. என்ன பிரயத்தனப்பட்டாலும் என்ன முயற்சித்தாலும் தீர்மானிக்கப்பட்டிருப்பதை என் செயல்பாடுகளால் மாற்ற் முடியாதா?..

--- என்ற கேள்விகள் எழும் பொழுது தான் பதில்களில் தடுமாற்றம் ஏற்படுகிறது.

'அலகிலா விளையாட்டுடையான்' வெளியில் எங்கும் இல்லை; என்னிலேயே உள்ளான். நானே அவன்; அவனே நான்-- என்றும் ஒரு தத்துவம் உண்டு.

இந்தத் தத்துவம் ஓரளவு மேற்கண்ட கேள்விகளுக்கு தகுந்த பதிலைக் கொடுக்க வல்லது.
அந்த பதிலில் செய்யும் காரியங்களுக்கு பொறுப்புக்கேற்றுக் கொள்ளும் சான்றாண்மையும் இருக்கும்.

வாய்ப்பு கிடைத்தால் இதன் தொடர்ச்சியை இந்தத் தொடரின் வேறு பகுதிகளில் பார்க்கலாம்.

மனத்தில் எழுந்த ஆழ்ந்த கேள்விகளைப் பின்னூட்டமாக்கியதற்கு நன்றி, நண்பரே!

ஜீவி said...

@ Sury Siva (2)

நாம் யார் என்பதும்
யார் நாம் என்பதும்
ஒரே மாதிரியான விடை அளிக்கக் கூடிய கேள்விகளா, ஐயா?

எங்கிருந்தாவது வந்தோமா? இல்லை
இங்கேயே இருந்தோமா, ஐயா?..


sury siva said...

நாம் ' என்பது ஒன்று இருக்கிறது என்றால் தானே
" யார் ?" என்ற கேள்வி எழுகிறது !!

'நாம் ' என்பதே மாயை எனப்புரிதல் ஏற்படுகையில்,
யார் ? என்ற கேள்வி நிற்காது.

அடுத்து, " நாம் " உண்மையிலே மாயை என்று கொண்டு விட்டால்,
கண் முன்னே நிதர்சனமாக தோன்றுவது என்ன ?

நான் என்று நான் நினைப்பது ந ம . நான் இல்லை. என்று உணர்ந்த
பின்னும் தொடர்கிறது அந்த கேள்வி : யார் நான் ?

அந்த மாடலன் சொன்னதை நினைவு கூர்வோமா ?
போன ஜென்மத்தில் கோவலன்.......
அப்போது அவனுக்கு கோவலன் என்று பெயர் இருந்திருக்காது.

அந்தக் கோவலன் தொடர்கிறான். இந்த ஜென்மத்திலும். ஜாக்ரத அவஸ்தை.

கோவலன் ஒரு கனவு காண்கிறான். அந்த கனவிலும் கோவலன் வருகிறான்.
அது ஸ்வப்ன அவஸ்தையிலும் தொடர்கிறது.

ஆக, ஏதோ ஒன்று தொடர்கிறது. அதை ஆன்மா என்று சொல்லுங்கள். இல்லை. வேறு ஏதேனும் பெயர் சொல்லுங்கள்.

அறம் ஒன்றே வெல்லும் என்ற இலக்கினை அடைய
ஒரு நாடகம் தேவை.
அந்த நாடகத்தில் நடிக்க சில நடிகர்கள் தேவை.
கோவலன், கண்ணகி, மாதவி, பாண்டிய மன்னன், கவுந்தி அடிகள் எல்லோருமே பாத்திரங்கள்.
நாடகத்தில் பாத்திரங்கள் தோன்றி மறைகின்றன.
ஆனால் நாடகம் சொல்ல வந்த இலக்கு நிற்கின்றது.
அது ஒன்றே உண்மைப்பொருள்.
அதை அறம் என்று சொல்லுங்கள். கடவுள் என்று வேறு ஒரு பெயர் சொல்லுங்கள்.
அதற்கு உரு என்று ஒன்று இல்லை. நடிக்க வந்த பாத்திரங்கள் அனைத்திலும் அது உள் நிற்கிறது.
அந்த பாத்திரங்கள் எல்லாம் ஒன்று கூடி நடித்தபின்னே நமக்கு உண்மைப்பொருள் தெரிகிறது.
காப்பியம் நிறைவுற்ற பின்னே, பாத்திரங்கள் பணி முடிந்துவிட்டது.

யார் நாம் ? என்று கேட்டீர்கள் அல்லவா ?
அண்டம் எங்கிலும் பரந்து கிடைக்கும்
அந்த பாத்திரங்கள் தான. நாம் .

சுப்பு தாத்தா.



சுப்பு தாத்தா.

”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி said...

மாடலனை பற்றி படிக்க வேண்டும் என்கிற ஆர்வம் தீர்ந்தது இன்று!
கொண்டு சென்ற பாங்கு அருமை!
இனி வருவேன் இங்கு!

மோகன்ஜி said...

ஜீவி சார்!

‘ம’கரம் கோவலனுக்கு ராசியில்லை.

கோவலன் வாழ்க்கையில்
மாறன் வந்தான்- அதனால்
மாதவி வந்தாள் – அவளால்
மணிமேகலை வந்தாள்.-தானாய்
மதுரை வந்தான்- ஈறாய்
மாடலன் வந்தான்- விதியாய்
மாமன்னன் வந்தான்.- முடிவாய்
மரணம் வந்தது.-காக்க வேண்டிய
மாணிக்கப் பரலோ தாமதித்தே வந்ததே!

ஜீவி said...

//அண்டம் எங்கிலும் பரந்து கிடைக்கும்
அந்த பாத்திரங்கள் தான. நாம் .//

அவ்வளவு சுலபத்தில் முடித்து விட முடியுமா, சூரி சார்?..

பாத்திரங்களிலும் தீய பாத்திரம், நல்ல பாத்திரம் என்று மாறுபட்ட வேட ஏற்புகள். வெறும் வேட ஏற்புகள் தாம் என்று விட்டுவிட முடியாத தீய--நல்ல செயல்பாட்டுக்கான பலாபலன்கள். எதன் பொருட்டு இந்த தீய--நல்ல ஏற்பாடுகள்?.. அவற்றிற்கான அளவுகோல்கள் தாம் என்ன?..

மாடலன் சொன்னவற்றை வைத்து வினாக்கள் நீண்டு கொண்டே போகின்றன.

கொஞ்சம் யோசித்தால் விடை கிடைக்கும் கேள்விகள் தாம். விடை கிடைக்காத கேள்விகள் மாதிரி மாயத்தோற்றம் கொண்டிருக்கின்றன. அவ்வளவு தான்!

தங்கள் தொடர் ஆக்கபூர்வமான பின்னூட்டங்களுக்கு நன்றி.

ஜீவி said...

@ ஆரண்யநிவாஸ் ஆர்.ராமமூர்த்தி.

இந்தத் தொடர் எழுத ஆரம்பித்ததும் தான் மாடலனே எனக்கு அறிமுகம். மாடலனின் பாத்திரப்படைப்பு இந்தக் காப்பியத்தில் அழுத்தமாகப் பதிந்து இன்னும் தொடர்ந்து வருகிறது. அதனாலேயே ஆர்வம் தீர இன்னும் நிறைய இருக்கிறது.

தங்கள் வருகைக்கு நன்றி. தொடர்ந்து வாசித்துக் கருத்துச் சொல்ல வேண்டுகிறேன், ஏ ஆர் ஆர் சார்!

ஜீவி said...

@ மோகன்ஜி!

கவிதையெல்லாம் தண்ணி பட்ட பாடு போலிருக்கு! நினைத்தவுடன் ஊற்றெடுத்து வருகிறதே!

சுதா சார் சொல்லியிருப்பதைப் பார்த்தால் ராசி, ராசியில்லை என்று எதுவுமில்லை. அந்தப் பாத்திரத்தின் அம்சம் அது (அதற்கு யார் என்ன செய்வது?) என்று சுலபமாக முடித்துக் கொண்டு விட்டார்.

சுதா சார் தெளிவாகச் சொல்லிவிட்டார். மாறன் வந்ததும், மாதவி வந்ததும், மணிமேகலை வந்ததும், மாடலன் வந்ததும், மாமன்னன் வந்ததும், மாணிக்கப் பரல் தாமதித்து வந்ததுவும்-- எல்லாம் வாழ்க்கை என்னும் நாடகத்தின் அடுத்த அடுத்த சீன்கள் (காட்சிகள்)

இவர் இவருக்கு இன்ன இன்ன பாத்திரம் என்று எப்படி நிர்ணயிக்கப்படுகிறது என்பது தான் அடிப்படை கேள்வி.

இளங்கோ அடிகளாரோ, 'ஊழ்வினை' என்று ஒரேடியாக அடித்துச் சொல்கிறார்.

இடுக்கில் ஒரு தெளிவையும் நுழைத்திருக்கிறார். நற்பலன்களும், தீப்பலன்களும் தொடந்து இல்லை.. தொடர்ந்த லாபத்தின் இறுதியில் நஷடமும், தொடர்ந்த நஷ்டத்தின் இறுதியில் லாபமும் தவிர்க்க முடியாதவை போல, தொடர்ந்த துன்பத்தின் இறுதியில் இன்பமும், தொடர்ந்த இன்பத்தின் முடிவில் துன்பமும் ஒட்டிக் கொண்டிருப்பது போல அடிகளார் நுணுக்கமாகச் சொல்கிறார்.

நமக்குத் துன்பமாகத் தோற்றம் கொடுப்பது, அடுத்த இன்பத்திற்கு இழுத்துச் செல்வதற்காகவே என்று அடிகளார் அழுத்தம் திருத்தமாகச் சொல்வது புதிய ஞானத்தின் வாசல் கதவு திறந்த மாதிரி இருக்கிறது!

தொடர்ந்து வந்து சிந்தனையைக் கிளற வேண்டும், மோகன்ஜி!

Geetha Sambasivam said...

பாம்பு, கீரி கதை பல வீடுகளிலும் அவரவர் வீட்டில் தொன்று தொட்டு நடந்ததாகச் சொல்லப்படுகிறது. இது சிலப்பதிகாரத்தில் மாடலன் சொல்வதாக வந்திருப்பதைப் பார்த்தால் சிலம்பின் காலம் குறித்தும் சந்தேகம் வருகிறதே! :) இளங்கோவடிகள் சேர நாட்டு இளவரசனே அல்ல என்று தொ.மு.சி. ஆராய்ந்து எழுதி இருப்பது சரியாக இருக்குமோ? :)

ஜீவி said...

@ கீதா சாம்பசிவம்

இதே பாம்பு--கீரி கதை பஞ்சதந்திர கதைகளில் ஒன்றிலும் வருகிறது. எல்லாம் கர்ண பரம்பரைக் கதைகள் போலத்தான். சரித்திரம் திரும்புகிறதோ என்று சொல்கிறோமே, அந்த மாதிரி எடுத்துக் கொள்ள வேண்டியது தான். காலந்தோறும் பல விஷயங்கள் அதே அச்சில் நடந்து கொண்டு தானிருக்கின்றன.

தொ.மு.சி. ரகுநாதனின் அந்த நூலை நான் படித்ததில்லை. வழிவழி சொல்லப்படுவதை மறுத்து எழுதினாலே அலாதியான கவனிப்பு தான்!

சிலப்பதிகாரத்தை யாத்தவர் இளங்கோ. அது ஒன்று போதாதா நமக்கு?.. அவர் யாராயிருந்தார் என்ற அடிப்படையில் காப்பியத்தின் மதிப்பு கூடவோ குறையவோ போவதில்லை. சரியா?..

தொடர் வருகைக்கு நன்றி.

Related Posts with Thumbnails