Saturday, September 10, 2016

அழகிய தமிழ் மொழி இது!...

பகுதி--22

தீக்கடவுள் திக்கெட்டும் மதுரையைப் பற்றினான்.  

நகரைக் காக்கும்  காவல்  தெய்வங்கள் தம் காவலைக் கைவிட்டன.  ஆதிபூதம், அரசபூதம்,  வணிக பூதம், வேளான்பூதம் என்றெல்லாம் அழைக்கப்பட்ட மதுரையைக் காத்த பூதங்கள் மதுரையை காக்கும் பொறுப்பிலிருந்து தம்மை விடுவித்துக் கொண்டன.    தீ   கடைவீதி,  மீன் கொடி பறக்கும் தேரோடும் வீதி, பால் வேறு தெரிந்த நால்வேறு தெருக்களையும் எரித்து சாம்பலாக்கியது.  அறநெறியாளர் வாழும் இடங்களைத் தீண்டாது,  தீயோர் வாழும் இடங்களை தேடிச் சென்று தீ தீண்டியது.  கறவைப் பசுக்களும், கன்றுகளும் கொழுந்து விட்டு எரியும் தீ  தம்மைத்  தொட்டு விடாதவாறு அறப்பண்புகளை தம் வாழ்க்கை நெறியாய் கொண்ட ஆயர்களின் விசாலத் தெருக்களில் அடைக்கலம் புகுந்தன.  களிறுகளும், அவற்றின்  மடப் பிடிகளும், பாய்ந்து செல்லும் குதிரைகளும் மதில் அரண் தாண்டி தப்பிப்  பிழைத்தன.

செல்விருந்து ஓம்பி வருவிருந்து பார்த்திருக்கும் இல்லற நெறிகளிலிருந்து வழுவாத மனையறம் காக்கும் மகளிர் பெரும் மகிழ்ச்சியில் இருந்தனர்.   “விரிந்த மார்ப்பில் அணிகள் அணிந்த தன் கணவனை இழந்த இந்த கைம்பெண் தன் காதலன் மேல் அநியாயமாய் சூட்டப்பட்ட பழி துடைக்க தன் கொங்கையால் செய்த இப்பூசல் கொடிதன்று; நற்செயலே!” என்று கொண்டாடி தீக்கடவுளை தொழுதுத் துதித்தனர்.
                                                                                                                 
ஆயக்கலைகள் அத்தனையையும் கற்றுத் தேர்ந்த இசை இயல்புகள் அறிந்த மகளிர் வாழும் தெருவிலும் தீ பற்றியது  ஆடல் அரங்குகளை தீ நாக்குகள் கவ்வ,  நாடக மகளிர் யாழ், மத்தளம், குடமுழா,  குழல் போன்ற இசைக்கருவிகளை இழந்தனர். “ஓ!  இவள் எந்தாட்டவளோ?.. யார் பெற்ற மகளோ?.. இந்நாட்டில் தன் இறைவனைப் பறிகொடுத்தாளே!..,  ஆராய்ந்து பாராது தீர்ப்பு எழுதிய மன்னனை  தன் சிலம்பாலே புறங்கண்டு பழி எய்திய ஊரையும் தீயில் பொசுக்கிய  கற்பின் கனலாகிய இந்தப் பெண்பாவை யாரோ?  அறிந்திலோமே!”  என்று கண்ணகியைப் பற்றிய விவரங்கள் அறியத் துடித்தனர்.

மாமதுரையில் அன்றைய மாலைக் கொண்டாட்டங்கள்  மதிப்பிழந்து ஒழிந்தன;  ஓமங்களும் அகையொட்டிய   வேத ஒலிகளும் முழக்கப் பெறாது முடங்கிப் போயின;  மகளிர் விளக்கேந்தி மலர் தூவி வழிபடும் தெய்வ வழிபாடுகளும் முரசின் முழ்க்கமும்  மறந்து எங்கும் துயரம் படிந்த்து. 

தலையிலே இளம் பிறை கொண்டவள் அவள்.  ஒளி பொருந்திய முகத்தில் குவளைக் கண்ணுடையவள்..  தன்  செக்கச்சிவந்த வாயில் கடைவாய்ப் பல் வெளிப்பட்ட தோற்றம் கொண்டவள்;  அவளின்  இடப்பாகம் கருந்நீல நிறம் படிந்த்தாயும், வலப்பாகம் பொன்னொளியில் மினுக்குவதாகவும் இருந்தது.  இடக்கையில் பூந்தாமரை ஏந்தியும், வலக்கையில் கொடுவாள் பிடித்தவளாவும் இருந்தாள்.  வலக்காலில் வீரக்கழலும் இடக்காலில் ஒலிக்கும் சிலம்பும் பூண்டிருந்தாள்.  

--- இவளே மதுராபதித் தெய்வம்.  பாண்டிய வம்சம் பிறப்பெடுத்த காலத்திலிருந்து அதைக் காத்து வரும் குலதெய்வம்.  கொற்றம் இழந்து, அரசுக் கொடியையும் இழந்துத் தவிக்கும் பாண்டிய அரசின் நிலை கண்டு மிகவும் துயருற்றாள். தன் காதல் கணவனை அநியாயமாய் இழந்து,  ஊதுலை களத்து துருத்தி போல வெப்ப நெடுமூச்செறிந்து, வீதித் தெருகளில் பொங்கும் கோபத்தில் சுழன்று திரிந்து, அங்கங்கே திகைத்து நின்று,  தாங்கவொண்ணா துயரைத் தாங்கவியலாது  செயலற்று மயங்கும் வீர பத்தினியின் முன்புறம் வரத்தயங்கி  பின்புறத்தே நின்று, “நங்கையே வாழ்க!  நான் உன்னிடம் சொல்வதற்கு உண்டு.  கேட்பாயாக”  என்றாள்.

“என் பின் வரும் யார் நீ?.. என் பெருந்துயர் நீ அறியாயோ?” என்றாள்  கற்பின் செல்வி.

“நங்கையே!  நின் துன்பம் அறிவேன்.  பெருஞ்சிறப்பு கொண்ட  மாமதுரையின் காவல் தெய்வம் நான்.  என்  பெயர் மதுராபதி. சில உண்மைகள் நான் உனக்குச் சொல்வேன்.  உன் கணவனுக்கு நேர்ந்த அநியாயத்திற்காக நானும் மிகவும் கவலை கொண்டுள்ளேன்.. தோழி!  நான் சொல்லவிருப்பதைக் கேட்பாயாக!”  என்றாள்.

“எனது மனம் மிகவும் வருந்திச் சொல்லும் செய்தி இது..  எம் வேந்தர்க்கு ஊழ்வினையால் விளைந்த கேட்டின் செய்தியைக் கேட்பாயாக!.. உன் கணவனுக்கு வந்துற்ற தீவினைக்குக் காரணமான முன்வினையின் செய்தியையும் கூறுவேன்.  காது கொடுத்துக் கேட்பாயாக..”  என்று மென்மையாக மதுராபதித் தெய்வம் சொல்ல கண்ணகி கேட்டாள்.

“இம் மாநகர் வேந்தர் பெருமான்  இதுகாறும்  வேதஒலி அல்லாது  மக்கள் எந்தக் குறையும்  இல்லாது வாழ்ந்ததினால்  மக்கள் குறைக்குரலை ஒலிக்கும் ஆராய்ச்சி மணியின் நாவோசையை ஒருபோதும்  கேட்டறியான்.  இளம் வயதில் வாலிபரது நெஞ்சம் இளமைத் துள்ளலில் இஷ்டம் போலத் தறிகெட்டுத் திரிவது வழக்கம்.  ஆனால் வாலிபம் காக்கும் திறன் கொண்ட பாண்டியர் குடிக்கு அந்த வாலிபப் பருவமும் எந்தப் பழியையும் தந்ததில்லை..

‘இந்த நிகழ்வை அறிவாயோ நீ?..  கீரந்தை  என்னும் பெயர் கொண்ட அந்தணன் ஒருவன் பொருள் தேடி  வேறுநாடு சென்றிருந்தான்.   அப்பொழுது இரவுக்காவல் பணி மேற்கொண்டிருந்த பாண்டிய மன்னன் தனித்திருக்கும் கீரந்தை மனைவியின் அச்சம் தவிர்க்க  இரவில் அவள் வீட்டுக் கதைவைத் தட்டினான்.  இரவு வீட்டுக் கதவு தட்டப்படுவதில்    அச்சம் கொண்ட கீரந்தை மனைவி ‘அரசனின் தாழாத செங்கோலாட்சியே மக்களுக்கு பாதுகாப்பு வேலியாக அமையும்; அதை விஞ்சிய குற்றமற்ற காவல் வேலி மக்களுக்கு வேறு எதுவும் இருக்க முடியாது’ என்று சொல்லி என்னைத் தனியே விட்டு சென்றீரே!  இப்பொழுது  அந்த அரச வேலி என்னை இந்த நேரத்தில் காவாதோ?’  என்று கணவன் சொன்னது நினைத்து  உரத்துச் சொன்னாள்.  அவள் சொன்னது  கதைவைத் தட்டிய பாண்டியனின் செவிகளில் காய்ச்சிய இரும்பு ஆணி நுழைவது போல நுழைந்து அவன் மனதைச் சுட்டது.  தேவேந்திரனது மணி முடியை தன் சக்கரப்படை கொண்டு பந்தாடிய அந்தப் பாண்டிய வேந்தன்,  அந்த அபலைப்பெண்ணின் சொல் கேட்டு அஞ்சி நடுங்கினான்.  மன்னனின் செங்கோலாட்சி மீது இவ்வளவு நம்பிக்கை வைத்திருக்கும் இவர் வீட்டுக் கதவையா இரவில் தட்டினேன் என்று மனம் குமைந்து  அரையில் தொங்கிய வாளெடுத்து தன் கையைத் தானே வெட்டிக் கொண்டான்.  இத்தகைய குடிப்பெருமை கொண்ட பாண்டியருக்கு எக்காலத்தும் எந்த இழிவும் ஏற்படாது, தோழி!

“புறாவின் துயர் துடைக்க தன் தசை அறுத்து  துலாக்கோல்  தட்டில் இட்ட  சிபிச் சக்கரவர்த்தியும், ஒரு பசுவுக்காக தன் செல்வ மகனைத் தேர்க்காலில் இட்ட மனுநீதிச் சோழனும்  அரசாண்ட சோழ நாட்டில்  ஞானச்செல்வம் பெற்ற பராசரன் என்றொரு  அந்தணன் இருந்தான்.    அவன் உதியன் சேரலாதன் என்னும் சேரமன்னனின்  கொடைச் சிறப்பைப் பற்றிக் கேள்விப்பட்டான்.  இந்த உதியன் சேரலாதன் யாரென்றால்  வண்டமிழ் மறையோருக்கு வானுறை கொடுத்த  திண்டிறல் நெடுவேல் சேரன் அவன்.  அவனைக் காண பராசரன்  காடு, நாடு,  பொதியமலை தாண்டி  ஒருவழியாக சேரமன்னனின் அரண்மனை அடைந்தான்.

“அரண்மனையிலோ வீடுபேறு ஒன்றையே விரும்பும் கோட்பாடு கொண்டவராய்,  பிறப்பிலேயே இருபிறவி வாய்த்தவராய்,  மூன்று வகைத் தீயை வளர்ப்பவராய்,  நான்கு மறைகளையும் முற்றும் அறிந்தோராய்,  ஐம்பெரும் வேள்விகளைப் பேணுபவராய்,  ஆறு வகைத் தொழில்களைச் செய்யும்  அந்தணர் சிலரைப் பார்க்கிறான்.  அவர்கள்  வாதில் பிறரை வென்று தம் கீர்த்தியை நிலைநாட்டிய முறையினை பராசரனுக்குச் சொன்னார்கள்.  அவர்கள் செறுக்கறுக்க பராசரன் அவர்களை வாதுக்கு அழைத்து தன் நாவன்மையால்  பார்ப்பன  வாகை சூடினான்.  சேரமன்னன் அவனைப் பாராட்டி அளித்த பரிசிலைப் பெற்றுக் கொண்டு தன் ஊர் திரும்புகையில்  வழியில்  மழலை பேசும் தளர்நடை கொண்ட விளையாட்டுச் சிறுவர்கள்  சிலர் அவனைச் சூழ்ந்து கொள்கின்றனர்.

“சிறுவர்களைக் கண்ட பராசரன் அவர்கள் திறமையை ஊக்குவிக்கும் எண்ணத்துடன், “குழந்தைகளே!  உங்களில் யாராவது என்னுடன் சேர்ந்து மறை ஓத வல்லுனர் ஆயின், இதோ என்னிடமிருக்கும் இந்த சின்ன மூட்டை பரிசிலை பெற்றுக் கொள்வீர்கள்” என்றான்.

“மற்ற சிறுவர்கள் தயங்க, வார்த்திகன் என்பவனின் மகனான தஷிணாமூர்த்தி என்னும் சிறுவன் சேர்ந்து மறை ஓத முன் வந்தான்.  தளர்வுறும் நாவினை உடையவனாயினும் பராசரனுக்கு பொருந்தும் வகையில் மறையொலி வழுவாது ஓதி  அந்த பாலகன் பராசுரன் பாராட்டைப் பெற்றான்.   அழகிய பூணூல்,  அணிகலன்கள், கடகம், தோடு இவற்றோடு தன் கையில் கொண்டு வந்த பரிசு மூட்டையையும்  சொன்னபடியே  பரராசரனும் அந்தப் பாலகனுக்குத் தந்துவிட்டு  தன் ஊர் நோக்கிய பிரயாணத்தைத் தொடர்ந்தான்.

“வார்த்திகன் வீட்டாரின் திடீர் வசதி கண்டு அக்கம்பக்கத்தினர் பொறாமை கொண்டனர்.   ஏதோ புதையல் கண்டெடுத்து அரசுக்கு மறைத்து விட்டான் இவன் என்று பழிசூட்டி  அவனை சிறையிலிட ஏற்பாடு செய்து விட்டனர்.  கணவனுக்கு நேர்ந்த கொடுமை பொறாது வார்த்திகனின் மனைவி கார்த்திகை  அலமந்து போனாள்.  ஏங்கியழுதாள்;  துயர் தாங்காது  நிலத்தில் வீழ்ந்து புறண்டாள். பொங்கினாள்.  அவள் துயர் காணப்பொறாமல்  கொற்றவையின் கோயில் கதவு  திறக்க முடியாமல் தன்னிச்சையாக மூடிக்கொண்டது.

“கோயில் கதவு மூடிக்கொண்ட செய்தி பாண்டியனுக்குப் போயிற்று.  கொற்றவை கோபம் கொள்ளும் அளவுக்கு நம் ஆட்சியில் என்ன தவறு நேர்ந்து விட்டது என்று கதிகலங்கிப் போனான் மன்னன்.  ஏவலரை அழைத்து விசாரித்து வரச் சொன்னான்.  ஏவலர் வார்த்திகனின் உண்மை நிலை அறிந்து அவனை சிறையிலிருந்து விடுவித்து மன்னன் முன் கொண்டு போய்   நிறுத்தினர்.  வார்திகனின் வாய்மொழி கேட்டு தவறிழைத்த பணியாளர்களுக்கு தண்டனை கொடுத்தான்.  இது என் ஆட்சியின் செங்கோன்மை வழுவிய செயல் என்று ஒப்புக்கொண்டு ‘பெரியீராகிய நீவிர் என் பிழையைப் பொறுதருள வேண்டும்’  என்று வேண்டினான்.   நீர் வயல் சூழ்ந்த திருத்தங்கால் என்னும் ஊரையும் விளைநிலன் பெருகிய வயலூரையும் இறையிலியாக வழங்கினான். கற்புடை நங்கை கார்த்திகையையும்,  வார்த்திகனையும் முன்னால் நிறுத்தி தன் திருமார்பு நிலத்தில் பொருந்துமாறு வீழ்ந்து வணங்கினான்.  அக்கணமே  கூடல் மாநகரத்து நீண்ட தெருக்களில் நிரம்பியிருந்த உயர்ந்த மாடங்கள் எங்கணும் கேட்குமாறு  கலை அமர் செல்வி  கொற்றவையின் கோயில் கதவு பெரும் சப்தத்துடன் திறந்து கொண்டது.

“மூடிக்கொண்ட கொற்றவை கோயில் கதவுகள் திறந்ததில் பாண்டியனுக்கு மட்டற்ற மகிழ்ச்சி.   அந்த மகிச்சியில் சிறைக் கோட்டங்களைத் திறந்து விட்டான்.  ‘பிறரிடமிருந்து பெற்ற  இடுபொருளாயினும்,  நிலம் தோண்டிக் கிடைத்த படு பொருளாயினும்  அவற்றை ஏற்றுக் கொண்டோருக்கும்,  காணக்கிடைத்தவருக்குமே சொந்தமாகும்’ என்று  யானை எருத்தத்து முரசு கட்டி திக்கெட்டும் அறிவிக்கச் செய்தான்  கொற்ற வேந்தன்.

“இத்தகு சிறப்பு கொண்ட இப்பாண்டிய மன்னன் இப்பொழுது நீதி தவற நேர்ந்ததற்கான தீவினையையும் கேட்பாயக..” என்று சொன்ன மதுராபதித் தெய்வம்  கண்ணகியைப் பார்த்து மேலும் சொல்வதற்கு முன் முன்னுரை போல இதைச் சொன்னது:


“ஆடித் திங்களில்  பேரிருள் சூழ்ந்த கிருஷ்ணபட்சத்து  அஷ்டமியும்  கார்த்திகையின் குறையும் சேர்ந்த வெள்ளிக் கிழமையன்று ஒள்ளிய நெருப்பு உண்ண உரைசால் மதுரையும் அதனை ஆளும் மன்னனும் கேடு எய்துவார்கள்’ என்ற முன்னிட்டுக் கணித்த கணிப்பு உரையும் உண்டு.  அதன் செயல்படும் செயல் தான் இப்பொழுது நடந்து முடிந்ததெல்லாம்!  நிரைதொடியோயே!  இதை அறிவாயாக’ என்று மதுராபதித் தெய்வம் சொன்னது  கண்டு கண்ணகி திகைத்தாள்.


(தொடரும்)

படங்கள் உதவிய நண்பர்களுக்கு நன்றி.
22 comments:

ஸ்ரீராம். said...

//நகரைக் காக்கும் காவல் தெய்வங்கள் தம் காவலைக் கைவிட்டன. ஆதிபூதம், அரசபூதம், வணிக பூதம், வேளான்பூதம் என்றெல்லாம் அழைக்கப்பட்ட மதுரையைக் காத்த பூதங்கள் மதுரையை காக்கும் பொறுப்பிலிருந்து தம்மை விடுவித்துக் கொண்டன.//

காவிரிப் பிரச்னையில் கர்னாடக காவல்துறை, அரசு செய்வது போல!

sury Siva said...

காவல் தெய்வம் சொல்லும் சங்கதிகள் சில படித்தவை.

சில அறியாதவை.திகைத்து நிற்பது கண்ணகி மட்டும் அன்று.திளைத்தோர், இக்காவியத்தைப் படிப்போர் யாவருமே.சுப்பு தாத்தா.
www.subbuthatha72.blogspot.com

ஜீவி said...

@ ஸ்ரீராம்

கலை தினசரியைச் சுட்ச்சுடப் படித்து விட்டு, இந்தப் பதிவு படித்தீர்களா, ஸ்ரீராம்?

ஜீவி said...

@ Sury Siva

சிலப்பதிகாரம் என்றால் ஓரளவு கதையின் அவுட்லைன் தெரிந்திருந்தது. பள்ளிப் படிப்பின் அறிவில் சிலப்பதிகாரத்தின் பல அடிகள் மனப்பாடமாகியிருந்தது. சிலம்புச் செல்வர் ம.பொ.சி., கலைஞர் போன்றோர் இந்தக் காப்பியத்தின் மேல் ஒரு காதலை ஏற்படுத்தியிருந்தனர்.

சிலப்பதிகாரத்தை ஆழ்ந்து படித்து உரை தயாரிக்கையில் தான் எனக்கும் பல புதுச்செய்திகள் தெரிய வருகின்றன. இத்தனை காலம் கழித்து அவற்றை அறிவதே ஒரு புது அனுபவமாக இருக்கிறது.

தங்கள் அன்பான பின்னூட்டத்திற்கும் தொடர்ந்து வாசித்து வருவதற்கும் நன்றி, சுதாஜி!

வை.கோபாலகிருஷ்ணன் said...

ஒரு பெரிய கதைக்குள் எத்தனை எத்தனை சிறிய கதைகள்.

படிக்கப்படிக்க மிகவும் வியப்பாக உள்ளது. பகிர்வுக்கு நன்றிகள்.

மேலும் தொடரட்டும்.

ஜீவி said...

@ வை.கோ.

ஆமாம், கோபு சார்!

இது தான் நாவலின் கோட்பாடு என்று இப்பொழுதெல்லாம் சொல்லுகிரார்கள். அதனால் தான் தமிழின் முதல் நாவல் காப்பியம் சிலப்பதிகாரம் தான் என்று சொல்லத் துணிந்தேன்.

ஆனால் இப்படி நிறைய கதைகள் தொடர்ச்சியாக வருவது கதையின் நகர்வுக்கு முட்டுக்கட்டை போட்ட மாதிரி இருக்கிறது. மகாபாரதம் மாதிரி கதைக்குள் கதை இருந்தால் தெரியாது. இதில் என்னவென்றால் நிறைய சிறு சிறு வெவ்வேறு கதைகள்.

நடக்கிற காரியங்கள் எல்லாமே ஏற்கனவே ஃபிக்ஸ் ஆகிவிட்டன. அப்படி ஃபிக்ஸ் ஆனவை எப்பப்போ நடக்கணுமோ அப்பப்போ வரிசைக் கிரமப்படி நடக்கும். நம் முயற்சியில், நடக்கப் போவதை நிறுத்தவோ மாற்றவோ முடியாது. நடப்பவை அத்தனையும் நம் ஊழ்வினையின் அடிப்படையில் என்று தீர்மானமாக சிலப்பதிகாரம் சொல்கிறது. இதான் சார் சிலப்பதிகாரத்தின் சென்டர் பாயிண்ட்.

தாங்கள் தொடர்ச்சியாக வாசித்து வருவதில் மகிழ்ச்சி, கோபு சார்.

Dr B Jambulingam said...

தொடர்ந்து படித்துவருகிறேன். நிகழ்வுகளும் கலையுணர்வோடு அமைந்த பொருத்தமான படங்களும் பதிவினை மேம்படுத்துகின்றன.

தி.தமிழ் இளங்கோ said...

தொடர்கின்றேன்.

G.M Balasubramaniam said...

கதையில் தீ தீண்டாதோரில் அறவோர் என்று வருகிறது இந்த அறவோர் எந்தப் பொருளில் சிலப்பதிகாரத்தில் வருகிறது அந்தணர் என்று படித்த நினைவு

Geetha Sambasivam said...

ஏற்கெனவே மதுராபதித் தெய்வம் குறித்தும், முன்வினை குறித்துச் சொல்வதும் படித்திருக்கிறேன். என்றாலும் மீண்டும் படிக்கச் சுவை. கர்நாடகா அரசு காவிரிப் போராட்ட விஷயத்தில் கையைக் கட்டிக் கொண்டு தான் இருக்கிறது! :(

ஜீவி said...

@ Dr. B. Jambulingam

தாங்கள் தொடர்ந்து படித்து வருவதர்கு நன்றி. ஏதாயினும் தவறுகள் இருப்பினும் தெரியப்படுத்துங்கள், ஐயா. திருத்திக் கொள்ளலாம்.

இன்னொன்று. சிலப்பதிகார மதுரை எரிப்புக்குச் சான்றாக வரலாற்று சான்றுகள் இருப்பின் தெரியப்படுத்தினால், இந்தப் பதிவைப் படித்து வருபவர்களுக்கு அது ஒரு வழிகாட்டலாக இருக்கும்.

நன்றி, ஐயா. தாங்கள் தொடர்ந்து கருத்திட்டு வழிநடத்த வேண்டுகிறேன்.

ஜீவி said...

@ தி. தமிழ் இளங்கோ

முந்தைய பதிவுகளுக்கும் பின்னூட்டம் இட்டிருக்கிறீர்கள். அந்தந்த பதிவுக்குச் சென்று மறுமொழியளிக்கிறேன். தாங்கள் தொடர்ந்து வாசித்து வருவதற்கு நன்றி, நண்பரே.

ஜீவி said...

@ G.M.B.

தாங்கள் உன்னிப்பாகப் படித்து வருவதர்கு நன்றி.

பல சமயங்களில் (நேரங்களில்) தோன்றாத்துணையாய் திருவள்ளுவர் பெருமான் நமக்கு வழிகாட்டுவார். தமிழர்களின் ஞானஆசான் அவர் தானே?.. தமிழனின் வேதமும் திருக்குறள் தானே?..

அந்தணர் என்போர் அறவோர்மற் றெவ்வுயிர்க்கும்
செந்தண்மை பூண்டொழுக லான்

அதனால் அறவோர் என்றேன்.

ஜீவி said...

@ கீதா சாம்பசிவம்

'ஆடித் திங்களில் பேரிருள் சூழ்ந்த கிருஷ்ணபட்சத்து அஷ்டமியும் கார்த்திகையின் குறையும் சேர்ந்த வெள்ளிக் கிழமையன்று...'

இதை வைத்து மதுரை எரிதல் பற்றி ஏதாவது கண்டறிய முடியுமா, கீதாம்மா?.. அல்லது யாராவது கண்டறிந்து சொல்லியிருக்கிறார்களா?..

ஜீவி said...
This comment has been removed by the author.
ஜீவி said...
This comment has been removed by the author.
ஜீவி said...
This comment has been removed by the author.
ஜீவி said...
This comment has been removed by the author.
KABEER ANBAN said...

பாண்டியன் ஊழ்வினை மட்டுமன்று . அதில் கோவலனும் கண்ணகியும் பொற்கொல்லனும் கூட பிணைந்திருக்க வேண்டும் அன்றோ! அறிய மிக ஆவலாயிருக்கிறது. இந்த பகுதி நான் கேள்விப்படாத ஒன்று. காத்திருக்கிறேன்.
நன்றி

ஜீவி said...

@ கபீரன்பன்

ஆமாம். தனிப்பட்ட அவரவர் ஊழ்வினைகள் சங்கிலிப் பிணைப்புகள் போல மற்றவர்களின் ஊழ்வினைப் பலாபலன்களுடன் கலப்பது இன்னொரு ஆச்சரியம். இதில் ஒரு குடும்ப அமைப்பு உறவுகளும் அடக்கம்.

பதிவுக்கான பின்னூட்டங்களைப் படித்து வரும் பொழ்து 'அந்த பொற்கொல்ல கள்வனுக்கு என்ன வாயிற்று? மண்டிய தீயில் அவன் மாட்டிக் கொண்டானா?' என்று யாருமே கேட்கக் காணோமே என்று நினைத்துக் கொள்வேன்.

நீங்கள் அவனைப் பற்றி பிரஸ்தாபித்து விட்டீர்கள். உங்கள் ஆர்வத்திற்கு நன்றி, கபீரன்ப!

வே.நடனசபாபதி said...

// மன்னனின் செங்கோலாட்சி மீது இவ்வளவு நம்பிக்கை வைத்திருக்கும் இவர் வீட்டுக் கதவையா இரவில் தட்டினேன் என்று மனம் குமைந்து அரையில் தொங்கிய வாளெடுத்து தன் கையைத் தானே வெட்டிக் கொண்டான்.//

இந்த நிகழ்வை நான் வேறு மாதிரியாக படித்திருக்கிறேன். அந்த பெண்மணி சொன்னதைக்கேட்டு பதைபதைத்த மன்னன் அந்த தெருவில் உள்ள எல்லோரது வீட்டு கதவுகளை தட்டி சென்று விட்டதாகவும், மறுநாள் அரசவையில் இது பற்றி புகார் வந்தபோது, வீட்டுக் கதவை தட்டியவனுக்கு என்ன தண்டனை தரலாமென கேட்டபோது அரசவையில் இருந்தோர் அவனைக் கண்டுபிடித்து அவனது கையை வெட்டவேண்டும் என தீர்ப்பு சொன்னதூம் பாண்டியன் உடனே வாளெடுத்த்கு தன் கையை வெட்டிக்கொண்டதாகவும் படித்திருக்கிறேன். பின்பு அந்த பாண்டியன் பொன்னாலான செயற்கை கையைப் பொருத்திக் கொண்டதால், பொற்கைப் பாண்டியன் என அழைக்கப்பட்டான் எனவும் படித்திருக்கிறேன்.

இது வேறு கதையா என விளக்க வேண்டுகிறேன்.

ஜீவி said...

@ வே. நடனசபாபதி

மன்னர்கள் அந்தக் காலத்தில் மக்களின் அச்சம் தவிரிக்க இரவு நேரங்களில் ஊர்க்காவல் வருவதுண்டு. படைத்தலைவன் போன்ற பணிபுரியும் வீரர்களை அனுப்பாமல் தானே அந்தப்பணியைச் செய்யும் அளவுக்கு அவர்கள் மக்கள் நலனில் அக்கறை கொண்டிருந்தார்கள்.

இக்காலத்தில் கூட இரவுப்பணியாற்றும் கூர்க்கா போன்றவர்கள் இரவுப் பணியாற்றும் பொழுது தடியால் கதவைத் தட்டி விட்டுப் போவது உண்டு. இது, அவர்கள் அன்றைய இரவு பணியாற்றியதற்கு அத்தாட்சி. தட்டிய வீட்டில் காலையில் வந்து கையெழுத்து வாங்கிச் செல்வார்கள்.

மன்னனுக்கு அந்த அவசியம் இல்லை எனினும், மன்னன் ஊர்க்காவலில் வலம் வருகிறான என்பதைத் தெரிவிக்க, வீட்டிலிருப்போர் அச்சம் தவிர்க்க கதவைத் தட்டியிருக்கலாம்.

நீங்கள் சொல்வது சரிதான். அந்தப் பாண்டியன் நாமறிந்த வரை பொற்கைப் பாண்டியன் தான்.

இளங்கோ அடிகளார் அந்தப் பாண்டிய மன்னனின் பெயரைக் குறிப்பிடாமையால் நானும் குறிப்பிடவில்லை.

பதிவுக்கு பின்னூட்டங்களால் சுவை கூட்டுவதற்கு நன்றி, சார்.

Related Posts with Thumbnails