மின் நூல்

Monday, October 24, 2016

சில எழுத்தாளர்களும், சில பத்திரிகைகளும்

எழுத்துலகம்  சார்ந்த ஒரு சுவாரஸ்யமான தொடர்:

மிழின் வார, மாத இதழ்களைப் பற்றி  நன்றாகவே நமக்குத்  தெரியும்.

சில பத்திரிகைகள் சில எழுத்தாளர்களுக்கென்றே அமைந்து விட்ட மாதிரி தோற்றம் கொடுக்கும்.   அவரவருக்கென்று அமைந்து போன பத்திரிகைகளில் அவர்கள் எழுதும் பொழுது அவை தனிக் கவனம் பெற்றவை போலவும்,  பாந்தமாகப் பிரசுரமாகி இருப்பது போலவும் நமக்குத் தோன்றும்.  அதே எழுத்தாளர்கள்  வேறு பத்திரிகைகளில் எழுதும் பொழுது அந்தப் பத்திரிகைக்காரர்கள் என்னதான் கவனம் கொண்டு அழகுபடுத்தி இருந்தாலும் சரி, வாசிக்கும் நமக்கு  அந்த எழுத்தாளருக்கென்று அமைந்த பத்திரிகை  என்று நாம் நினைக்கும் பத்திரிகை அளவுக்கு  சோபிக்காது.   

ஒரு எழுத்தாளர் எந்தப் பத்திரிகையில் எழுதினாலும் சரி,  வாசகர்களுக்கு  அவர் எழுதியதின் சிறப்பு ஒரே மாதிரி இருக்க வேண்டியது, தானே?..  அது தான் இல்லை.  சில எழுத்தாளர்களுக்கும் சில பத்திரிகைகளுக்கும்  அப்படி என்னதான் ராசிப்பொருத்தமோ தெரியவில்லை,  அவர்களுக்கு அமைந்து போன பத்திரிகைகளில் அவர்கள் எழுதும் பொழுது மட்டும் அந்தப் பத்திரிகைக்கு எழுதுவதற்கு அவர் தான் பொருத்தமானவர் மாதிரி ஒரு தோற்றம் கொள்வார்.   எழுத்தாளரின் கதைகளுக்கு அல்லது தொடருக்குப் போடும் சித்திரங்களினாலோ அல்லது முக்கியத்துவம் கொடுத்து பிரசுரிக்கும் முறைகளினாலோ   என்னவோ,  ஒரே எழுத்தாளரின் எழுத்தை  வெவ்வேறு பத்திரிகைகளில் வாசகர் ரசிக்கும் ரசனைகளிலும் மாற்றம் தெரியும்.   எல்லா வாசகர் உணர்வுகளும் ஒரே மாதிரி இருக்காது ஆதலால்  எந்த எந்த எழுத்தாளருக்கு எந்தந்த பத்திரிகை அவருக்காக அமைந்து போன பத்திரிகை என்று நாம் தீர்மானிக்கும்  பட்டியலிலும்  வித்தியாசங்கள் இருக்கலாம்.

கறாராகச் சொல்ல வேண்டுமானால்,  இது சம்பந்தப்பட்ட எழுத்தாளர்களாலேயே  உணர  முடியாத ஒரு வாசக உணர்வு.  
வார, மாத பருவ இதழ்கள் வாசிக்கும் தேர்ந்த வாசகர்களாலேயே உணர முடிந்த ஒரு உணர்வு.

பத்திரிகை எழுத்து என்று வந்து விட்டால்,  பத்திரிகை--எழுத்தாளர் என்று இந்த இரண்டு நிலைகளையும் தவிர்த்து ஓவியர் எனறு ஓர் ஆசாமியும் இருக்கிறார்.   'பொன்னியின் செல்வனி'ல் கல்கி தம் எழுத்தால் கதை மாந்தர்களை வாசிப்பவர் உணர்வில் பதித்து வைத்ததற்கு  உருவம் கொடுத்த மாதிரி  ஓவியர் மணியம்  சித்திரங்கள் இருந்தன.   ஆழ்வார்க்கடியான்,  வந்தியத்தேவன், நந்தினி, பூங்குழலி, வானதி,  குந்தவை,  ஏன் அந்த ரவிதாசன் கூட இப்படித்தான்  இருந்திருப்பார்கள் என்று நாம் நம்பத் துவங்கினோம். அதனால் தான்  கல்கி  இதழிலேயே  பொன்னியின் செல்வன் பிற்காலத்து  மீள் பிரசுரங்களாக பல தடவைகள் பிரசுரமான போது, 
கதை மாந்தர் ஓவியங்களைப் பொறுத்தமட்டில்  ஆரம்பத்து நமது நம்பிக்கையை மாற்றிக் கொள்ள மிகவும் சிரமப்பட்டோம்.   அந்தளவுக்கு 'பொன்னியின் செல்வனைப் பொறுத்த மட்டில் ஓவியரின் பங்களிபபு கல்கியின் எழுத்துக்கு போட்டி போட்டுக் கொண்டு வாசகர்களின் உணர்வுகளுக்கு மிக நெருக்கமான இருந்தது.   

 இந்த ஓவியர் ஆளுகை மீறி  (எந்த ஓவியர் சித்திரம் போட்டாலும் சரி, போடாவிட்டாலும் சரி என்று)  தம் எழுத்தால் மட்டும் வாசிப்பவர் மனசை கவரந்த எழுத்தாளர்கள் இருக்கிறார்கள்.  இந்த லிஸ்டில் குமுதம்  எஸ்.ஏ. பி., லா.ச.ரா., ஜெயகாந்தன், ரா.கி. ரங்கராஜன் போன்றவர்கள் வருவார்கள்.


தமிழின் சில பிரபல எழுத்தாளர்களுக்கென்றே  அமைந்து போன அவர்களுக்கான பத்திரிகைகளைச் சொல்கிறேன்.   இப்பொழுது நான் சொல்ல வரும் விஷயம் உங்களுக்கும் சுலபமாகப் புரியும்.
.
எழுத்தாளர் சாண்டில்யனின் இயற்பெயர்  பாஷ்யம் அய்யங்கார்.
சென்னை தி.நகரில்  சிவா விஷ்ணு கோயிலுக்கு எதிரில் இருக்கும் மஹாலெஷ்மி  தெருவில் இவர் வசித்த பொழுது  நாலைந்து தடவைகள் நேரில் சென்று பேசிப் பழகியிருக்கிறேன்.   

அப்படி ஒரு தடவை அவரைச் சந்தித்த பொழுது இதே விஷயத்தை-- எழுத்தாளருக்கு அமைந்து போகிற பத்திரிகை 
விஷயத்தை-- அவரிடம் பகிர்ந்து கொண்ட பொழுது
“அப்படியா?..” என்று ஆச்சரியத்துடன் கேட்டுக்  கொண்டார்.  வாசகர்களிடம் பந்தா காட்டாமல்  இனிமையாக  பழகுவதில் சாண்டில்யனுக்கு இணை சாண்டில்யன்  தான்.  

இப்படிப்பட்ட சாண்டில்யனுக்கு  அமைந்து போன  பத்திரிகை  ‘குமுதம்’ தான்.  அந்தப் பத்திரிகையில் அவர் சரித்திரத் தொடர் பிரசுரமாகும் பொழுது  அந்தத் தொடரே தனிக் களை கொண்டு பிரமாதமாக இருக்கும்.   சொல்லப் போனால்  குமுத்த்திற்கு எழுதுவதற்கு முன்னால்  அவர் ‘அமுதசுரபி’ பத்திரிகையில்  ஜீவபூமி, 
மலைவாசல்  போன்ற தொடர்களை எழுதியிருக்கிறார்.  இருந்தாலும்  குமுத்த்தில் அவர் கடல்புறா,  யவனராணி போன்ற தொடர்களை எழுதிய  காலம்   மறக்கமுடியாதது.    குமுத்த்தில் அவர் எழுதிய  முதல் சரித்திரத் தொடர்  கன்னிமாடம்.  இந்தக் கதைக்கு ஓவியர் ஸாகர் படம் வரைந்திருந்தார் என்று நினைவு.   இதைத் தவிர மற்ற தொடருக்கெல்லாம்  லதா தான் சாண்டில்யன் கதைகளுக்கு  ஓவியம் வரைந்தார்.   சாண்டியல்யன்  கதா பாத்திரங்களுக்கு உருவம் கொடுத்து நடமாட விட்டவர் லதா.   குமுதம், சாண்டில்யன், ஓவியர்  லதா  இதுவும் அமைந்து போய்விட்ட ஒரு வெற்றிகரமான  கூட்டணி.  ஆனாலும் நான் அழுத்திச் சொல்ல விழைவது என்னவென்றால் வேறொரு பத்திரிகையில் இதே சாண்டியல்யன் சரித்திரக் கதை எழுதி  லதா ஓவியம் வரைந்திருந்தாலும் குமுதத்தில் சாண்டில்யனைப் படித்த மாதிரி இருக்காது என்பது தான்!..  இதற்குக் காரணம் என்னவென்பதை  சாண்டியல்யனின் எழுத்துக்களில் தோய்ந்த  வாசகர்கள் தாம் சொல்ல வேண்டும்.

ஆக,  சாண்டில்யன்  ஒரு குமுத எழுத்தாளர் என்று அழுத்தமாகச் சொல்ல்லாம்.

ஜெயகாந்தனுக்கு  அமைந்து போன பத்திரிகை 'ஆனந்த விகடன்' தான்.
அவ்வளவு கச்சிதமாக அந்தப் பத்திரிகை அவருக்கு  இருந்தது.  ஆனந்த விகடனில் அவர் கதைகளுக்கான சித்திரங்களை வெவ்வேறு சித்திரக்காரரகள்
வரைந்திருந்தாலும்,  அவர் எழுத்து,  சித்திரங்களை வைத்துத் தீர்மானிக்கப்படாமல் அவரை வைத்தே தீர்க்கமாகத் தீர்மானிக்கப்பட்டதால்,  அவருக்கான எழுத்தின் வீச்சு அவர் ஒருவரையே சார்ந்திருந்தது.

எழுத்தாளர் சாவி ஆசிரியாக இருந்த காலத்து ‘தினமணிகதிரில்’  எழுதிய ஜெயகாந்தனின் கதைகளைப்  பற்றியும் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும்.   தினமணிகதிரில்  எழுதிய பொழுது  ஆனந்த விகடன் ஜெயகாந்தன் இல்லை. வாழ்க்கை அவருக்கு  சமூகம் சார்ந்த பிரச்னைகளில் மாற்றுக்  கருத்துக்களைக் கொடுத்திருந்தது.    அந்தக் கருத்துக்கள்  அவர் கதைகளில் பிரதிபலித்தமையால் தினமணிகதிரில்  எழுதும் பொழுது வேறொரு  ஜெயகாந்தனாவே  அவர் உருக்கொண்டார்.

ஜெயகாந்தனின் அந்தந்த காலத்து சிந்தனைககளுக்கு ஏற்ப அவர் எழுத்தும் மாற்றம்  கொண்டிருக்கிறது.   அவர் கொண்ட மாற்றங்களுக்கு  ஏற்ப அந்தந்த காலத்தில்  ஒரு பத்திரிகையும் அவருக்கு அமைந்தது தான் ஆச்சரியம்.  சரஸ்வதியில் எழுதிய  'போர்வை', 'சாளரம்' போன்ற கதைகளைப் பிற்காலத்து அவராலேயே எழுத முடியாது போனதும் இன்னொரு ஆச்சரியம். 

ஜெயகாந்தனின்  எழுத்து வாழ்க்கையை  சரஸ்வதி காலம்,  தாமரைக் காலம், ஆனந்த விகடன் காலம்,  தினமணிக்கதிர் காலம் என்று   நான்காகப் பிரிக்கலாம்.   இந்த நான்கிலும் திருப்தியுறாமல்  சமூகத்தின் சகலமட்ட பிரச்னைகள் மீதான தன் கருத்துக்களைப் பதிவதற்காகவே  ‘கல்பனா ‘  இதழுக்கும் ‘ஞானரதம்’ இதழுக்கும் அவர்  ஆசிரியராக இருந்த பொழுது அந்தப் பத்திரிகைகளை உபயோகப்படுத்திக் கொண்டிருக்கிறார்.

எழுத்தாளர் சாவி பத்திரிகைத் துறையில் பழுத்த அனுபவம் பெற்றவர்.  தினமணிக்கதிருக்கு ஆசிரியர் பொறுப்பு ஏற்ற பொழுது,   கதிரின் விற்பனையை 7 லட்சமாக உயர்த்துவேன் என்று சபதம் போட்டு செயலாற்றியவர்.    அந்தக் காலத்தில் 7 லட்சம் என்பது குமுதம் விற்பனையைத் தாண்டிய ஒன்று.   அந்த இலக்கை அடைவதற்காக  எல்லாவித எழுத்துக்களும் கலந்த கதம்பமாக தினமணிக்கதிர்  தமிழ் பத்திரிகை உலகம் இதுவரைப் பார்த்திராத புத்தம் புது உருக்கொண்டது.  பத்திரிகையின் பெரிய சைஸ் ஒரு பக்கம் அழகான லேஅவுட்டுகளுக்கு வழிகொடுக்க,  இன்னொரு  பக்கம் ஜெயகாந்தனின்  ‘சமூகம் என்பது நான்கு பேர்',  ஸ்ரீ வேணுகோபாலனின்  'திருவரங்கன் உலா',  ஸ்ரீ வேணுகோபாலனே  புஷ்பா தங்கத்துரை என்ற பெயரில்  'சிவப்பு விளக்கு/ ஏரியா கதைகள்,  தியாகராஜ பாகவதரின் வாழ்க்கை அனுபவம்,  கோபலுவின் சித்திரங்களுடன் விந்தனின்  'பாட்டில் பாரதம்' என்று  வினோதமான கலவையுடன் அவரவருக்கு வேண்டியதைப் படித்துக் கொள்ளுங்கள் என்று பந்தி விரித்தது போல தூள் கிளப்பியது.

ஒரே தொடருக்கான கருவை மூன்று பத்திரிகைகளில் எழுதிய ஒரே தமிழ் 
எழுத்தாளர் ஜெயகாந்தனாகத் தான் இருக்க முடியும்.   அவர்  ஆனந்தவிக்டனில் எழுதிய ‘அக்னி பிரவேசம்’ சிறுகதையை,  தினமணிக்கதிரில் ‘சில நேரங்களில் சில மனிதர்கள்’ என்று தொடர்ந்து குமுதத்தில்  ‘கங்கை எங்கே போகிறாள்?’  என்று முடித்தார்.   ஒரே கதையை அந்தந்த நேரத்து தனது சமூகப் பார்வையோடு விரித்து மூன்று தொடர்களாக எழுதியிருக்கிறார்.  ஆனால்  குமுதத்தில் எழுதும் பொழுது, விகடன், தி.கதிர் அளவுக்கு  சோபிக்கவில்லை.   இதற்குக் காரணம் அந்தப் பத்திரிகைக்கென்று  அமைந்து போன வாசகர்கள் தாம்.   இதனால் ஜெயகாந்தன் ஜெயகாந்தனாகவே  எழுதினாலும், அவர் குமுதம் எழுத்தாளர் இல்லை என்று தெரிந்து போயிற்று.

இப்படி ஒவ்வொரு எழுத்தாலருக்கும்  ஒரு பத்திரிகை அமைகிறது என்று நீங்களும் உணர்ந்ததுண்டா ?..  சொல்லுங்கள்.

பெரும் பத்திரிகைகளுக்கு  எல்லாக் கோணங்களிலும் அதன் விற்பனை ஒன்று தான் குறிக்கோள்.  அந்த விற்பனைக்காக எந்த ஜகஜ்ஜால உத்திகளையும் மேற்கொள்ள அவை தயார்.   பெயர், புகழ் கிடைத்திட்ட எழுத்தாளர்களைத் தங்கள் இதழில் எழுத  வைத்து  அந்த எழுத்தாளர்களுக்கான வாசக அபிமானத்தை உபயோகப்படுத்திக் கொண்டு பத்திரிகை  விற்பனையைக் கூட்ட முயற்சிக்கும்.   ஆனால் அப்படி என்ன தான் முயற்சித்தாலும்  பத்திரிகைகளின் அந்த முயற்சிகளைத் தாண்டிக் கொண்டு எல்லா பத்திரிகைகளுக்கும்  எல்லா எழுத்தாளர்களும் பொருந்துவார்கள் என்று எதிர்பார்க்க முடியாமல் போய்விடுகிறது.

இப்போதைக்கு இந்த இரண்டு தமிழ் எழுத்தாளர்கள்.  மற்ற  பிரபல எழுத்தாளர்கள்  தொடரும் கட்டுரையில் வரப்போகிறார்கள்.

'இந்த எழுத்தாளருக்கு இந்தப் பத்திரிகை தான்'  என்று இப்பொழுதே எழுதி வைத்துக் கொண்டு வரும் பகுதிகளில் சரிபார்த்துக் கொள்ளவும் செய்யலாம்.   அந்தந்த பகுதி வரும் பொழுது பகிர்ந்து கொள்ளலாம்.  உங்களது மாறுபட்டத் தேர்வு என்றாலும்  அதைப் பகிர்ந்து கொண்டு உங்கள் தேர்வை நியாயப்படுத்தலாம்.

 ஆனால் உங்கள்  எல்லாத் தேர்வுகளையும் பின்னூட்டங்களில் இப்பொழுதே பதிய வேண்டாம்.  நீங்கள் தேர்ந்தெடுத்து வைத்திருக்கும் எழுத்தாளர் பகுதி வரும் பொழுது  உங்கள் தேர்வு பொருந்தி வந்திருந்தாலும் வந்திருக்காவிட்டாலும்  அதைப் பகிர்ந்து கொள்ளலாம்.
நம் தேர்வுப்படியே இங்கு வெளியாகும் குறிப்புகளும் அமைந்தாலும் அமையாவிட்டாலும்  முறச்சி செய்த நமக்கு  சந்தோஷம் தானே!...   

தனக்கென்று எந்தக் குறிக்கோளோ, சொந்தக் கருத்தோ இல்லாமல் பத்திரிகைகள் வெள்ளைக் காகிதங்களை கருப்பு மசியிட்டு போணி ஆக்குவதற்காக  அவற்றின் அபிலாஷைகளுக்கேற்ப எழுதிக் கொடுக்கிற எழுத்தாளர்களைப் பற்றி  இந்தத் தொடரில் கண்டுகொள்ளவேயில்லை என்பதையும் இங்கு குறிப்பிட வேண்டும்.

(தொடரும்)

படங்கள்  உதவிய  நண்பர்களுக்கு நன்றி.
  


19 comments:

ஸ்ரீராம். said...

நல்ல அலசல். சுவாரஸ்யம். இந்த மனநிலை வாசகர்களின் மனதை பொறுத்ததுதான். அதை அந்த படைப்பாளிகள் உணரமுடியாது என்றுதான் தோன்றுகிறது. சாண்டில்யனின் ஜலதீபம் கதைக்கு அதே குமுதத்தில் வர்ணம் படம் வரைந்திருந்தார். ஏனோ பொருந்தாதது மாதிரிதான் எனக்கும் தோன்றியது! சமீபத்தில் மனசு குமாரின் ஜலதீபம் அலசலிலும் இதைச் சொல்லி இருந்தேன்!

வே.நடனசபாபதி said...

சில எழுத்தாளர்கள் குறிப்பிட்ட இதழ்களுக்கு மட்டும் ஆரம்பத்தில் எழுதியதால் வாசகர்களின் மனதில் இந்த இதழுக்கு இவர் எழுதினால் தான் பொருத்தமாயிருக்கும் என எண்ணிக் கொண்டதின் விளைவே பின்னால் அவர்கள் வேறு இதழ்களுக்கு எழுதியபோது அவர் அந்த இதழ்களுக்கு பொருத்தமானவர் போல் தெரியவில்லை என நினைக்கிறேன்.
ஆனாலும் கல்கி, சாவி, போன்றவர்கள் தனியாக இதழ்கள் ஆரம்பித்து நடத்தியபோது அவர்களை அங்கே ‘அன்னியர்களாக’ எண்ணாமல் அங்கேயும் அவர்களுடைய எழுத்துகளுக்கு அபிமானிகளாய் வாசகர்கள் மாறிப்போனார்கள் என்பது உண்மை.
ஒரு குறிப்பிட்ட எழுத்தாளருக்கு .குறிப்பிட்ட ஓவியர் வரைந்தால் தான் பொருத்தம் என வாசகர்கள் எண்ணியதும் மேலே குறிப்பிட்ட காரணத்தால் தான் என நினைக்கிறேன்.
இது ஒரு மாதிரியான ‘மன மயக்கம்’ என்பது என் கருத்து.
‘சில எழுத்தாளர்களும், சில பத்திரிகைகளும்’ என்ற இந்த தொடர் தலைப்பில் சொன்னதுபோல் சுவாரஸ்யமாய் இருக்கிறது. வேறு பல பிரபல எழுத்தாளர்கள் பற்றியும் எழுத இருக்கிறீர்கள் என்பதை அறிந்து ஆவலுடன் தொடர்கிறேன்.

ஜீவி said...

S. Krishnamoorthy (at G+ )

சாண்டில்யனை முழுக்க முழுக்கத் தனது பத்திரிகையின் ஆஸ்தான எழுத்தாளர் மாதிரிப் பயன்படுத்திக் கொண்டது #எஸ்ஏபி யின் சாமர்த்தியம். அன்றைக்கு குமுதத்தின் விற்பனையை உச்சத்தில் தக்க வைத்துக் கொள்வதற்கு சினிமா நடிகைகளுடைய அந்தரங்கமும், சாண்டில்யனும் குமுதத்துக்குத் தேவைப் பட்டார்கள். அதற்காக சாண்டில்யனைக் குமுத எழுத்தாளர் என்று முத்திரை குத்த வேண்டாம் எனக் கேட்டுக் கொள்கிறேன் உவர் ஆனர்! குமுதத்தின் ஒரே முத்திரை #ஆபாசம்கலந்தஅசட்டுத்தனம்

ஜீவி said...

நண்பர் நமது அருமைக் கவிஞ்ர் சிவகுமாரனிடமிருந்து வந்திருக்கும் பின்னூட்டம் இது:

சிவகுமாரன்

ஆம். நிதர்சனமான உண்மை. நான் பலமுறை உணர்ந்திருக்கிறேன்.
-----------------------------------------------.
சுவாரசியமான அலசல்.

(பொறுத்துக்கொள்ள வேண்டும், சிவகுமாரன். தங்கள் பின்னூட்டத்தின் இடையே வரும் இரண்டு வரிகளை நீக்கி விட்டு பிரசுரித்திருக்கிறேன். அவை இனி வரப்போகிற பதிவில் வரும் எழுத்தாளர்களைக் குறிப்பிட்டுச் சொல்லியிருப்பதால். இப்பொழுதே அவர்களைப் பற்றிச் சொல்லி விட்டால் சுவை குன்றிப் போய்விடும். அதற்காகத்தான். புரிந்து கொள்வீர்கள் என்ற நம்பிக்கை உண்டு. தங்கள் பின்னூட்டத்திற்கு மிகவும் நன்றி)

G.M Balasubramaniam said...

ஆநந்தவிகடன் கல்கி. குமுதம் தினமணிக்கதிர் போன்ற பத்திரிக்கைகளைஒரு காலத்தில் தொடர்ந்து வாசித்து வந்திருக்கிறேன் இன்னமாதிரிக்கதைகளை இன்னமாதிரிப் பத்திரிக்கைகள் வெளியிடும் என்று ஓரளவு தீர்மானம் செய்ய முடியும் குமுதம் கவர்ச்சிக்காக தனி அக்கறை எடுத்துக் கொள்ளும் சாண்டியன் போன்றோர் அவை அதிகம் தலைகாட்டும் முறையில் எழுதுவார்கள் ஜெயகாந்தன் வித்தியாசமான சிந்தனையில் எழுதுவார் ஆனந்த விகடன் அதற்குத் துணை போனது.பதிரிக்கைகளின் எதிர் பார்ப்பு எழுதுபவருக்குத் தெரியும் அதுபோல் இன்னவர் எழுத்து இன்னமாதிரி இருக்கும் என்று பத்திரிக்ககளுக்கும் தெரியும் அவர்களுக்குள் ஒரு கெமிஸ்ட்ரி இருந்தது என்றே நினைக்கிறேன்/

கோமதி அரசு said...

மணியனுக்கு மாயா, ஜெயகாந்தன் கதைகளுக்கு கோபுலு, மாயா இருவரும் வரைந்து இருக்கிறார்கள், சாண்டில்யனுக்கு லதா கல்கிக்கு மணியன் என்று நம் கண்களுக்கு பழகி விட்டது. சாவி ஜெயராஜ் அவர்களை உயர்த்துக்கு கொண்டு வந்தார். சாவி அவர்கள் நிறைய எழுத்தாளர்களை அறிமுகம் செய்தார்.


நல்ல பகிர்வு இது, எழுத்தாளர்களைப் பற்றியும் பத்திரிக்கைகளையும் பற்றியும் தெரிந்து கொள்ள உதவும்.
உங்களின் பழைய பதிவுகளில் தனி தனியாக ஒவ்வொரு எழுத்தாளர்களைப் பற்றிய பதிவுக்ளை படித்து இருக்கிறேன்.
தொடர்கிறேன், நன்றி.

இங்கும் தொடர்கிறேன்.

ஜீவி said...

@ ஸ்ரீராம்

//இந்த மனநிலை வாசகர்களின் மனதை பொறுத்ததுதான். அதை அந்த படைப்பாளிகள் உணரமுடியாது என்றுதான் தோன்றுகிறது.. /

தாங்கள் சொல்வது சரிதான். இதை மட்டுமல்ல, தன் வாசகர்களைப் பற்றி எந்த தமிழ் எழுத்தாளரும் உணரவே இல்லை. ஆனால் வாசகர்கள் தங்களுக்குப் பிடித்த எழுத்தாலர்களை நன்றாகவே உணர்ந்திருக்கிறார்கள். இதைச் சொல்வதற்காகத் தான் இந்தக் கட்டுரைத் தொடரும் கூட.

என் ரசிகர்க்ள் இதை ஒத்துக் கொள்ள மாட்டார்கள் என்று ஒரு திரைப்பட நடிகராலோ, இயக்குனராலோ சொல்ல முடிந்தெல்லாம் தமிழ் எழுத்தாளர்களுக்குத் தெரியாத ஒன்று.

அட! ஜலதீபத்திற்கு வர்ணம் படம் வரைந்திருந்தாரா? ஓரிரு இதழ்களுக்கா? முழுக் கதைக்குமா?.. எனக்குத் தெரிந்திருக்கவில்லையே! சமூகக் கதைகளுக்கே உரித்தான அவர் படங்கள் சரித்திரக் கதைக்கு.. பஞ்சவரணம், சரித்திரக் கதைக்கு என்று நினைத்துப் பார்க்கவே முடியவில்லையே! தகவலுக்கு நன்றி, ஸ்ரீராம்!

ஜீவி said...

@ வே. நடனசபாபதி

கடந்த காலம் இப்பொழுது மாதிரி இல்லை. இந்தப் பத்திரிகையில் இந்த மாதிரி கதையெல்லாம் வராதே என்று கூட வாசகர்கள் தெரிந்து வைத்திருந்தார்கள்.

அட்டையை நீக்கி விட்டால் எல்லாப் பத்திரிகைகளின் உள்ளடக்கமும் ஒரே மாதிரி இன்று இருப்பது போல அன்று இல்லை என்பதால் சில எழுத்தாளர்களையும் சில பத்திரிகைகளையும் இணைத்துப் பார்க்க முடிந்தது. தமிழகத்தின் நாலைந்து பிரபலப் பத்திரிகைகளை வித்தியாசப்படுத்திப் பார்க்க முடியாத நிலை இன்று. அன்று அப்படியல்ல என்பதற்காக சொன்னேன்.

'கல்கி'யும் 'சாவி'யும் விகடனைச் சார்ந்திருந்த பொழுது அவர்களுக்காக அமைந்த வாசகர்கள், அவர்க்ள் தனிப் பத்திரிகைகளின் ஆசிரியர்களான பொழுது அவர்களைத் தொடர்ந்து வந்தார்கள். பத்திரிகைகள் மாறினாலும் வாசகர்கள் மாறவில்லை. வாசகர்களுக்கு தனக்குப் பிடித்த எழுத்தாளர்களே முக்கியம், பத்திரிகைகள் அல்ல என்ற நிலை. அதே மாதிரி தான் நா.பார்த்தசாரதி 'தீபம்' பத்திரிகையைத் தொடர்ந்த பொழுதும். இந்த மாதிரி வாசகர்கள் தாம் இவர்கள் தம் எழுத்து மூலம் சம்பாதித்த மூலதனம். 'தீபம்' பத்திரிகையை ஆரம்பித்த பொழுது, அப்படியே இல்லாவிட்டாலும், இதே கருத்துள்ள ஒரு வாக்கியத்தை எழுதி எனக்குக் கடிதம் எழுதியிருந்தார் நா.பா.

ஓவியர் சமாச்சாரம் வேண்டுமானால் மன மயக்கம் என்று சொல்லலாம். தங்கள் அழகான பின்னூட்டத்திற்கு நன்றி, நண்பரே!

ஜீவி said...

@ S. Krishnamoorthy

அன்புள்ள எஸ்.கே. சார்,

உங்களை 'பூவனத்தில்' பார்த்ததில் ரொம்பவும் சந்தோஷம். தொடர்ந்து 'பிலாக்'கிலேயே பின்னூட்டம் போட்டு உங்கள் மேலான கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ள வேண்டுகிறேன்.

சாண்டில்யனின் தொடர்கதைகளுக்கென்று ஒரு எழுது பாணி உண்டு. நாலு பக்க ஒரு அத்தியாயத்திற்கு ஆரம்பத்தில் இயற்கை வர்ணனை அல்லது அந்த சூழ்நிலை வர்ணனை, அங்கங்கே அங்க லாவண்ய வர்ணனைகள் (குமுத ஆசைகளையும் பூர்த்தி பண்ணனும் இல்லையா?) தொடர்ந்து கதையை நகர்த்தும் கதை மாந்தர் உரையாடல்,
அடுத்த பகுதியை எதிர்பார்க்கிற மாதிரியான அந்த அத்தியாய முடிவு. (அடுத்து வரும் பேராபத்தை அறியாதவனாய் இளஞ்செழியன் அந்தத் திரைச்சீலையைத் தூக்கிய பொழுது இரவு இரண்டாம் ஜாமம் கழிந்து மூன்றாம் ஜாமத்திற்கான அறிகுறிகள் தென்படத் துவங்கியிருந்தன.-- இந்த மாதிரி.) காளிதாசனின் வர்ணனைகளில் மனம் பறிகொடுத்தவர் அவர். சில வார்த்தைகளை தமிழில் எழுதினால் பளிச்சென்று தெரியும் என்பதால் ஆங்கிலத்தில் எழுதுவதுண்டு. ஆங்கிலத்திற்குப் பதில், சாண்டில்யன் சமஸ்கிருதத்தைப் பயன்படுத்தினார். பிருஷ்ட பாகம் என்ற வார்த்தையைக் குறிப்பிடுவதை அவரால் தவிர்க்கவே முடியாது. போர்த்தந்திரங்களும், யுத்த வியூகங்களும் வேறு எந்த தமிழ் சரித்திரக்கதை எழுத்தாளர்களிடம் நாம் கண்டிராத சாண்டில்யன் ஒருவருக்கே உரித்தான ஸ்பெஷாலிட்டி. கிட்டத்தட்ட எல்லா சரித்திரத் தொடர்களையும் இதே பாணியில் அவர் எழுதியிருந்தாலும் வாசிப்பதற்கு சலிப்பே ஏற்படாத விதவிதமான சொக்குப்பொடிகளை அங்கங்கே தூவியிருப்பார். அது அவருக்கே உரித்தான கைவந்த கலை. மர்மக்கதைகள் மாதிரி சரித்திரக் கதைகளை மாற்றிய எழுத்து மன்னன் அவர்.
இன்றும் வருடாந்திர புத்தகச் சந்தையில் கனத்த அவர் சரித்திர நாவல்கள் கனஜோராக விற்பனையாகிக் கொண்டிருக்கின்றன. வானதி பதிப்பகத்தைக் கேட்டால் தெரியும்.

'குமுதம்' எஸ்.ஏ.பி. பத்திரிகை உலகில் ஒரு ஜீனியஸ். இன்றும் பத்திரிகை உலகில் பேசப்படுவது இலட்சக்கணக்காக குமுதம் விற்பனைக்கு வழிவகுத்த அவர் சாமர்த்தியம்.
ஆபாசம் என்று நீங்கள் குறிப்பிடுவதை பத்திரிகை பாஷையில் கிளுகிளுப்பு என்று வேண்டுமானால் சொல்லலாம். எப்படி இப்படி குமுதம் மட்டும் ஓகோ என்று விற்பனையாகிறது என்று அந்தக் காலத்தில் ஒரு ஆராய்ச்சியே நடந்திருக்கிறது. குமுதத்தில் தலையங்கத்தை கடைசிப் பக்கத்தில் பிரசுரித்தால் மற்ற பத்திரிகைகளும் அந்த வழியைப் பின்பற்றின. வழக்கத்தில் இருந்த 'பொருளடக்கம்' பகுதியை எஸ்.ஏ.பி. நீக்கினாரா, மற்ற பத்திரிகைகளும் தங்கள் பொருளடக்கம் பகுதியை நீக்கின. சினிமா விமரிசனத்தில் முத்தான ஒரு கடைசி வரி எழுதினாரா, அதே வழியில் மற்ற பத்திரிகைகளும். அதிகபட்ச விற்பனை தான் பத்திரிகை உலகின் தாரக மந்திரம்.
அதுவே அவர்களின் சாமர்த்தியமும் கூட. நீங்களும் குறிப்பிட்டிருக்கிற சாமர்த்தியமும் இதுவே தான். இன்றும் கூட எஸ்.ஏ.பி. ஆரம்பித்து வைத்த குமுதம் பாணிகள் உயிர் வாழ்ந்து கொண்டிருக்கின்றன.

ஜெயகாந்தன் குமுத எழுத்தாளராய் வலம் வர முடியவில்லை. ஆனால் சாண்டில்யனாய் முடிந்திருக்கிறது. ஏன் என்பது உங்கள் யோசனைக்கே.

உங்களுக்கு மிகவும் பிடித்த இந்தப் பகுதிக்கு தொடர்ந்து வருகை தர வேண்டுகிறேன், எஸ்.கே. சார்!

ஜீவி said...

@ சிவகுமாரன்

தொடர்ந்து வாருங்கள், சிவகுமாரன்! நீங்கள் குறிப்பிட்டிருக்கிற தமிழ் எழுத்தாளர்கள் பகுதி வரும் பொழுது இந்தப் பின்னூட்டத்தில் தவிர்த்த பகுதிகளை ஞாபகமாகப் பிரசிரிக்கிறேன்.

நீங்கள் பலமுறை உணர்ந்த நிதர்சனமாக உணர்ந்ததைப் பின்னூட்டமாகப் போட்டு உணர்த்தியமைக்கு மிகவும் நன்றி. அடிக்கடி வாருங்கள்/

ஜீவி said...

@ G.M.B.

//இன்னமாதிரிக்கதைகளை இன்னமாதிரிப் பத்திரிக்கைகள் வெளியிடும் என்று ஓரளவு தீர்மானம் செய்ய முடியும்.. //

கரெக்ட்!

//குமுதம் கவர்ச்சிக்காக தனி அக்கறை எடுத்துக் கொள்ளும் சாண்டியன் போன்றோர் அவை அதிகம் தலைகாட்டும் முறையில் எழுதுவார்கள்.. /

சரியே!

//ஜெயகாந்தன் வித்தியாசமான சிந்தனையில் எழுதுவார் ஆனந்த விகடன் அதற்குத் துணை போனது.//

ஜெயகாந்தனுக்கு ஆனந்த விகடன் என்னும் எழுத்து வாகனம் கிடைத்தது ஜெயகாந்தனின் அதிர்ஷ்டமா, ஆனந்த விகடனுக்கு ஜெயகாந்தன் என்னும் அற்புத எழுத்தாளர் கிடைத்தது அதன் அதிர்ஷ்டமா என்பது ஒன்றில் ஒன்று இரண்டறக் கலந்த விஷயம்!

ஜெயகாந்தன் எழுத்தின் பரந்து பட்ட வெளிச்சத்திற்கு ஆனந்த விகடன் கிடைத்தது காலத்தின் கட்டாயமாக அமைந்தது அவருக்கும் அந்தப் பத்திரிகைக்கும் வாசக அன்பர்களுக்கும், தமிழ் எழுத்துலக்கிற்கும் பெரும் பேறாக அமைந்த சரித்திர நிகழ்வு வெகு இயல்பாகவே நடந்திருக்கிறது. இப்பொழுது தான் அதை முழுமையாக நாம் உணர்கிறோம்.

//அவர்களுக்குள் ஒரு கெமிஸ்ட்டிரி இருந்தது..//

அந்த கெமிஸ்ட்டிரியை உடைத்தெறிந்து தளைகளிலிருந்து வெளிவந்தவர்கள் தான் தமிழ் இலக்கிய உலகை ஒளிச்சுடரேந்தி பிரகாசிக்க வைத்திருக்கிறார்கள்.

தொடர்ந்து வாருங்கள், ஜிஎம்பீ ஐயா!

ஜீவி said...

@ கோமதி அரசு

வரும் பதிவுகளில் பத்திரிகைகளையும் அதில் எழுதியவர்களையும் அவர்களின் எழுத்துப் போக்கையும் தனியாகப் பார்க்க முயற்சிப்போம்.

தாங்கள் கூரியபடியே தமிழ் எழுத்தாளர்களாய்யும் தமிழ் பத்திரிகை உலகையும் தெரிந்து கொள்ள உதவுகிற மாதிரி இந்தத் தொடரை எழுத முயற்சிக்கிறேன்.

தொடர்ந்து வருகை தந்து கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள், கோமதிம்மா.

நெல்லைத் தமிழன் said...

இது சுவாரசியமான அலசல்தான். முதலில் ஒரு இதழில் எழுத்தாளரின் வெற்றிகரமான கதைத் தொடரைப் படிக்கும்போது, இந்த எழுத்தாளர் இந்தப் பத்திரிகைக்கான கெமிஸ்ட்ரி உள்ளவர் என நினைப்பது நமது மனமயக்கம்தான் என்று தோன்றுகிறது. அப்போதைய காலத்தில் ஒவ்வொரு பத்திரிகைக்கும், அதிலும் குறிப்பாக, விகடன், குமுதம், கல்கி (துக்ளக்கை இங்கு சேர்க்கவில்லை) போன்றவற்றிற்கு ஒரு தனித்துவம் இருந்தது. அதற்கேற்றவாறே அதன் core வாசகர்களும் இருந்தனர். பொதுவாக, கல்கி மிகத் தரமானதாகவும், விகடன் இரண்டாவது இடத்திலும், தரவரிசையில் கடைசியாக குமுதம் இதழும் இருந்தன. வாசகர்கள் எண்ணிக்கை (பொதுவாக தரத்துக்கு உள்ள மதிப்பீட்டின்படி) Reverse Orderல இருந்தது.

சாண்டில்யன் அவர்கள் குமுத்த்தில் வருடக்கணக்காக ஒரு கதையை எழுதியுள்ளார். பத்திரிகையின் skeletonக்குள் தகுந்தபடி அவர் கதையும், அதற்கேற்றவாறு லதா அவர்களின் ஓவியமும் அமைந்ததால் ஏற்படும் மனமயக்கம்தான் சாண்டில்யன் குமுத எழுத்தாளர் என்று தோன்றவைக்கிறது. மலைவாசல் போன்ற கதைக்கு ஓவியர் ஜெயராஜ் அவர்கள் முடிந்த அளவு low hip, கச்சையணிந்த கவர்ச்சிக் கன்னிகளை வரைந்தாலும் சாண்டில்யனின் வர்ணனைகளுடன் ஓவியர் லதாவின் படங்கள் மிகவும் பொருந்திப்போயின. ஒரு தொடரின் ஆரம்பத்திலேயே ஒரு sentenceஐ இரண்டு பக்கத்திற்குக் குறைவாக (கொஞ்சம் exaggerationதான்) சாண்டில்யன் எழுதமாட்டார். அதிலாயே காலச் சூழலிலும் கதைச் சூழலிலும் வாசகன் ஒன்றிவிடுவான். அதேபோன்று நாயகன் நாயகி காதல் பேச்சுக்களில் (அது போகும் மூன்று பக்கத்துக்கு) . Sweet nothing என்பதைக் கச்சிதமாக்க் கொண்டுவருவார். இதெல்லாம் ஓவியருக்கு நிறைய வாய்ப்புகளை வழங்கும். இதையே கல்கி வர்ணனைகளோடு ஒப்பிட்டால், அவர் எழுத்தை நான் பத்து வயதில் படித்தபோது அப்பா ஒன்றும் சொன்னதில்லை, ஆனால் குமுத்த்தைக் கையில் வைத்திருந்தால் அவரின் approval இருக்காது. இதன் கருத்து, பத்திரிகைக்கு ஏற்றவாறு சாண்டில்யன் தொடர் அமைந்து வெற்றியை சாண்டில்யனுக்குத் தந்தது. அவரும் அதே பாணியைத் தொடர்ந்தார்.

நம்மை ஒரு கதை அசத்தி அதனுள் நம்மைக் கொண்டுசெல்லும்போது, நாம் அந்தப் பாத்திரங்களின் அருகாமையில் ஐக்கியமாகிவிடுகிறோம். மீள் பிரசுரம் பண்ணும்போது புதிய ஓவியர் பலமடங்கு திறமையுடையவராக இல்லாவிட்டால் (முதலில் வரைந்த ஓவியருடைய பிம்பங்களை நம் மனத்திலிருந்து அழித்து, புதிதாக வரைந்துள்ள கதை மாந்தர்களின் உருவத்தை நம்மை ஏற்றுக்கொள்ளச் செய்து நம் மனத்தில் இருத்துவது) கதையின் தரமே குறைந்துவிடும். தவறாக எண்ணவேண்டாம். மணியமின் கதைமாந்தர்களைப் பார்த்த கண்கள் ஓவியர் பத்மவாசனின் படங்களை ஏற்க மறுக்கிறது. கம்பீரமாகத் தெரிந்த வந்தியத்தேவனும் குந்தவையும் பரிதாபமாகத் தோன்றுகின்றனர். அதே கதைக்கு ஜெ அவர்கள் வரைந்தால், குந்தவையின் முகத்தைப் பார்ப்பதற்குப் பதில் கழுத்துக்குக் கீழே அவர் focus இருக்கும் (அவர் திறமையைக் குறைத்துச் சொல்லவில்லை. அவர் ஓவியங்களின் ரசிகன் நான்.. சரியான வார்த்தை- ஜொள்ளு பார்ட்டி.

ஜெகாந்தன் அவர்கள் ஓரளவு intellectual எழுத்தாளர். அவருடைய, விகடனில் வந்த அதே கதை குமுத்த்தில் வந்தால் ரசிக்காது. இதேபோன்று அச்சு அசலாக விகடன் (அந்தக்காலத்து விகடன்) கடல் புறாவை மீள் பிரசுரம் பண்ணினால் வாசகர்களுக்கும் ரசிக்காது. ஓவியங்களின் சூழலும் வெகுவாக மாறிவிடும்.

இளைஞர்களை ஈர்த்த சு..... போன்றவர்களும் பத்திரிகைக்கு ஏற்றபடி கதை நடையில் சில மாற்றங்கள் (mild) செய்திருப்பார்கள். ஓவிரைத் தேர்ந்தெடுக்கும்போதே நமக்கு எந்தமாதிரியான கதை என்று தெரிந்துவிடும்.

பார்கலாம்... நீங்கள் ஒவ்வொரு எழுத்தாளரையும் எந்தப் பத்திரிகையின் சாயல் மிகவும் படிந்துள்ளவர் என்று கருதுகிறீர்கள் என்று. நான் நினைப்பது பத்திரிகை ஆசிரியர்கள்தான் தங்களுக்கு வரும் விமரிசனம், புதுத் தொடர் பத்திரிகையின் விற்பனையில் ஏற்படுத்தும் விளைவு (impact) இவற்றின் மூலமாக வாசகர்களின் நாடித்துடிப்பை அறிந்து அதற்கேற்ப முடிவெடுக்கிறார்கள். சிலர் வாசகர்களின் தரத்தை உயர்த்தும் முயற்சியிலும் ஈடுபடுகிறார்கள்.

அருள்மொழிவர்மன் said...

அருமையான, சுவாரசியமான அலசல். எழுத்தாளர் சாண்டில்யன் அவர்களின் நாவல்கள் பலவற்றையும் வாசித்துள்ளேன், ஏதோ ஒருவகையில் எனக்கும் அவரின் எழுத்தினூடே ஈர்ப்பு உண்டு. ஆனால் அவற்றையெல்லாம் தனி நாவல்களாக வாசித்ததுடன் சரி, நீங்கள் குறிப்பிட்டது போன்று குமுதத்தில் ஓவியத்துடன் இணைந்தவாறு படிக்கும் வாய்ப்புக் கிடைக்கவில்லை! ஒவ்வொரு படைப்பாளிக்கும் ஒருவித எழுத்து நடையுள்ளது போன்று வாசகர் வட்டமும் அமைகின்றது.

உங்களின் இவ்வலைபூவிலுள்ள அனைத்துப் பதிவுகளும் சுவாரசியமாக உள்ளது, தொடர்ந்து எழுதுங்கள் - வாழ்த்துகள்!!

ஜீவி said...

@ நெல்லைத் தமிழன்

உங்கள் பின்னூட்டமும் சுவாரஸ்யம் தான். நீண்ட பின்னூட்டத்திற்கு நன்றி.

எழுத்தாளர்கள்--பத்திரிகைகள் என்று எழுத ஆரம்பித்தது தான். பத்திரிகை--- கதைகளுக்கான ஓவியர் என்று பத்திரிகை ஓவியர் குறுக்கே வந்து விட்டனர். பத்திரிகைகள்-- ஓவியர் என்று தனியாக எழுத வேண்டும். இந்தப் பதிவைப் படிக்கும் யாரானும் பதிவர் கூட எழுதலாம்.

சில பத்திரிகைகளுக்கென்று அமைன்ந்து போன எழுத்தாளர்களைப் பற்றிச் சொல்லி அவர்களுக்கும் அந்த பத்திரிகைகளுக்குமான உறவுகள் பற்றிச் சொல்ல வேண்டும். அந்த திசையில் போக வேண்டிய கட்டுரை வேறு எங்கோ நொண்டி அடிக்கிறது.

தொடர்ந்து வாருங்கள். தொடர்ந்து பேஸ்லாம், நெல்லைத் தமிழன்.

ஜீவி said...

@ அருள்மொழி வர்மன

அழகான பெயர். தங்கள் முதல் வருகைக்கு நன்றி.

உங்கள் பின்னூட்டம் மூலம் எழுத்தாளர்+ வாசகர் -- ஓவியர் என்று சுத்தசுயம்பிரகாசமான
எழுத்தாளரின் எழுத்தை மட்டுமே ரசித்த ரசனையின் வெளிப்பாட்டைச் சொல்லியிருக்கிறீர்கள். புத்தகமாக நாவல்களை வாசிப்பது தனி அனுபவம் தான். அது எழுத்தை மட்டுமே முன்னிலைப்படுத்தக் கூடிய வேறு எந்த குறுக்கீடுகளுமில்லாத
நல்ல ரசனையாக அமைவது தனி அனுபவம் தான்.

புதுசாக இன்னொன்றும் சொல்லியிருக்கிறீர்கள். எழுத்தாளர் நடைக்காக வாசகர் வட்டம் அமைகிறது என்று. இப்பொழுதெல்லாம் பத்திரிகைகளில் பிரசுரமாக வேண்டும் என்ற அவசியம் இல்லாது புத்தம் புதியதாக முதல் அச்சாக புத்தகங்கள் வருவதால் இந்த சாத்தியப்பாடு நிகழ்ந்திருக்கிறது.

முன்பெல்ல்லாம் பத்திரிகைகளில் கதைகள் வெளிவந்தால் தான் ஊருக்குத் தெரிந்த எழுத்தாளராக ஒருவர் ஆவார். முழுக்க முழுக்க எழுத்தாளர்கள் பத்திரிகைகளையே நாடியிருந்த, வாசகர்களும் கதைகள் படிக்க பத்திரிகை ஒன்றையே எதிர்பார்த்திருந்த காலம் மண்மூடிப் போனது அதனால் 'நாங்கள் ஆசிர்வாதம் செய்தால் தான் நீங்கள் வெளியுலகிற்கே தெரிவீர்கள்' என்ற ஒரு மொழியில் எழுதுவோர் மீதான பத்திரிகைகளின் சட்டாம்பிள்ளைத்தனமும் ஒழிநதது.

ஒரு மொழியின்-- அதன்எ ழுத்தாளர், வாசகர் சுதந்திரத்தைப் பத்திரப்படுத்திய செயலும் ஆயிற்று.. அதுவும் இணையத்தின் செல்வாக்கு எழுத்தில் படிந்து விட்ட பிறகு--- இதெற்கெல்லாமே வாழ்த்துப் பா இசைக்க வேண்டும்.

நாளைய காலம் மொழிக்கும் சுதந்திர இலக்கியத்திற்குமான விடியலாக விடியட்டும்.

தங்கள் அன்பான வருகைக்கும் வாழுத்துக்களுக்கும் நன்றி, அருள்மொழிவர்மன்!

சிவகுமாரன் said...

நன்றி ஜீவி சார்.
பின்னூட்டமிடும் போதே நினைத்தேன், தங்கள் இலாகாவில் மூக்கை நுழைத்து விட்டோமோ என்று.
நல்ல காரியம் செய்தீர்கள். நன்றி

சிவகுமாரன் said...

கபீரைக் காண அன்புடன் அழைக்கிறேன்

கீதமஞ்சரி said...

வித்தியாசமான ஆய்வுக்களத்தில் இறங்கியிருக்கிறீர்கள்.. தாங்கள் இங்கு குறிப்பிடும் பல தகவல்கள் எனக்குப் புதியவை.. குமுதம் பத்திரிகையை கையிலெடுத்தாலே அடிகிடைக்கும் வீட்டில் வளர்ந்தவள் நான்.. அதிலும் சாண்டில்யன்.. வாய்ப்பே இல்லை. இருந்தாலும் வாசிப்பு வெறி பல சமயம் திருட்டுத்தனம் செய்யவைத்திருக்கிறது. ஜெயகாந்தன் என் ஆதர்ச எழுத்தாளர். அத்தனைக் கதைகளையும் ரசித்திருக்கிறேனே தவிர எந்தெந்த காலகட்டத்தில் எப்படியெப்படி உருமாற்றம் அடைந்த எழுத்து என்பதைப் பற்றி யோசித்ததில்லை. தாங்கள் தரும் தகவல்கள் வியக்கவைக்கின்றன. நன்றி ஜீவி சார்.

Related Posts with Thumbnails