மின் நூல்

Tuesday, October 4, 2016

நினைவில் நின்றவை

'தோழி'  இதழில் நிறைய எழுதுகிறார்  நம் பதிவுலக சகோதரி  ரஞ்சனி நாராயணன் அவர்கள்.

செப்டம்பர் 16--30  தேதியிட்ட 'தோழி' இதழில் அவர் எழுதிய கட்டுரை ஒன்று மனைதக் கவர்ந்தது.
'தோழி'க்கு  நன்றி.

வெளியில் அலுவலக வேலைக்குப் போவதைத் தான் சம்பாதிப்பு வேலையாகக் கருதும் உலகம்,  பெண்கள் வீட்டில் மாங்கு மாங்கு என்று உழைத்துக் களைப்பதும் அலுவலக வேலைக்கு எந்தவிதத்திலும் குறைச்சலில்லை என்கிறார்  இப்படியான  இல்லத்தரசிகளின் வீட்டு வேலைகளும் அங்கீகரிக்கப்பட வேண்டும் என்பது அவரது கோரிக்கை.

மைக்ரோ சாஃப்ட் நிறுவனத்தின் சொந்தக்காரர் திரு. பில்கேட்ஸின் மனைவி திருமதி மிலிண்டா கேட்ஸின் குரலையும் தன் கோரிக்கைக்குத் துணையாகக் கொள்கிறார்.   சாதாரண துணை இல்லை, மிக விவரமாக திருமதி கேட்ஸின் குரலை இந்தக் கட்டுரையில் சொல்லிச் செல்கிறார்.

ஒவ்வொரு வருடமும் கேட்ஸ் தம்பதி தங்களது இணைய தளத்தில் தங்களைப் பாதிக்கும் விஷயங்கள் குறித்து கடதம்  எழுதுகிறார்களாம்.  2016-ம் வருடம் திரு. பில்,  எரிபொருள் இல்லாத உலகத்தைப் பற்றியும் திருமதி கேட்ஸ்,  பெண்களின் நேரம் எப்படி சமையலறையிலேயே கழிகிறது என்பதைப் பற்றியும் கடிதங்கள் எழுதி இருக்கிறார்கள்.  திருமதி ரஞ்சனி அந்தக் கடிதங்களின் சாரத்தைத் தான் இக்கட்டுரையில் விவரிக்கிறார்.

வீட்டு வேலைகளை மூன்று விதமாகப் பிரிக்கலாமாம்.  1.  சமையல்  2.  சுத்தம் செய்தல்  3.  வீட்டில் உள்ள குழந்தைகளையும், முதியவர்களையும் பார்த்துக் கொள்வது.  இந்த மூன்றில் எதையெல்லாம் ஆண்களும் பங்கு போட்டுக் கொண்டு செய்ய முடியுமோ அப்படி வேலைகளைப் பிரித்துக் கொண்டு செய்வதால் பெண்களின் சக்தி கணிசமாக நாட்டின் பொருளாதார முன்னேற்றத்திற்கு உதவும்.' என்று  கணக்குப் போட்டுச் சொல்லும் திருமதி பில் கேட்ஸின் குரலை நம் மொழிப் பத்திரியகையில் பதிவு செய்திருப்பது அற்புதமான விஷய்ம்.

அமெரிக்க  சமாச்சாரமே இப்படி என்றால்,  நம்மவர்களைப் பற்றியும் நினைக்காமல் இருக்க முடியவில்லை.   ஏதாவது அலுவலகத்தில் பணியாற்றி பணி ஓய்வு பெற்று பென்ஷனும் வருகிறது என்றால் கேட்கவே வேண்டாம்.

அந்த வீட்டிற்கு அந்த ஆண்மகன் எத்தனை வயதானாலும் ராஜா  தான்.  ஈஸிச்சேர், இந்து பேப்பர்,  அரட்டை,  மாலை கோயில்-- குளம்,  சீட்டுக் கச்சேரி,  சங்கீத சபா என்று  நாளை 'குஷி'யாக கடத்துவதற்கு ஏகப்பட்ட பொழுது போக்குகள்!..

ஆனால் வீட்டு ராணிக்கு மட்டும் சாகும் வரை ஓய்வில்லை.  சமையல் அறை அவர் தாலி கட்டிக் கொண்ட  இன்னொரு புருஷன்!  .  இதில் இன்னொரு கொடுமை என்னவென்றால் பெண்கள் விருப்பப்பட்டு இத்தனை வேலைகளையும் இழுத்துப் போட்டுக் கொண்டு செய்வதே அவர்கள் பிறவி எடுத்த பயனாகக் கருதுகிறார்கள் என்று பட்டிமன்றத்திலிருந்து பலசரக்குக் கடை வரை ஆண்கள் பிரச்சாரம் பண்ணிக் கொண்டு திரிவது!

இவ்வளவு கடுமையாக ரஞ்சனி மேடம் சொல்ல வில்லை என்றாலும் அவர்
கட்டுரை  நம்மூர் படித்த வர்க்க  ஆண்களும், பெண்களும்  படித்தே ஆக வேண்டிய  கருத்துச் சுரங்கம்!  குறிப்பாக   வீட்டு வேலைகளை வீட்டில் உள்ளவர்கள் சரிசமமாக பகிர்ந்து கொள்ளவில்லை என்றால்,  இந்த வேலைகளைச் செய்வதில் சமநிலை வேண்டும் என்பதைப் புரிந்து கொள்ளவில்லை என்றால், பெண்கள் தங்கள் செயல்திறனைப் பயன்படுத்த முடியவில்லை என்றால்   நாம் எதிர்பார்க்கும் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (GDP-- Gross Domestic  Productivity)  எப்படி லாபத்தை அடைய முடியாமல் போகும் என்பதனை திருமதி மிலிண்டா கேட்ஸ் ஆணித்தரமாக நிருவியிருப்பதை ஒப்புக் கொள்ளத் தான் வேண்டும்.

நம் நாடோ எதற்கும் சரிப்பட்டு வராத வினோதமான நாடு. போதாக்குறைக்கு  மகனும் மகள் போலவேயான காலம் இது.  மகனுக்குத் திருமணம் ஆனாலும் தனிக்குடித்தனம்.  இல்லையென்றால் வெளிநாடு அல்லது வெளியூர்.  ஒரே ஊரில் கூட மகனும் தந்தையும் ஏதாவது காரணத்திற்காக என்று தனித் தனியாக வாழ்கிறார்கள்.   எப்படிப்பார்த்தாலும் நியூக்ளியர் குடும்பமே  வாழ்க்கை  முறையாகியிருக்கும் காலம் இது.

இந்த மாதிரியான வாழ்க்கையில் அடுப்படி விஷயங்களை கணவனும் தெரிந்து கொண்டாக வேண்டிய காலக் கட்டாயம்.  இருவரில்  யாருக்கேனும் உடல் நிலை சரியில்லை என்றால் இன்னொருத்தர் சமையல் பொறுப்பை ஏற்றுக் கொள்ள வேண்டிய கட்டாயம்.   தேவையின் கட்டாயம் ஒரு கஞ்சி போட,   சோறு பொங்க,  ரசம் வைக்கவாவது தெரிந்திருக்க வேண்டும்.

குறைந்த பட்சம் காலி காஸ் சிலிண்டரையாவது மாற்றத் தெரிந்திருக்க வேண்டும்.  அதற்கும் மனைவி தான் என்றால், நாடு பொறுக்காதுடா, சாமி!



பிடித்த கவிதை:

பள்ளி நுழைவாயில் முன்
மரமல்லி மர நிழலில்
கொண்டுபோன கொய்யாப் பழக் கூடையை
பக்கத்தில் இறக்கி வைத்து
நீள் செவ்வகச்  சாக்கு ஒன்றை                                                            
எதிரில் விரித்துப் போட்டு
பிள்ளைகள் வாங்கும் விலையில்
கூறு கட்டி வைத்து
இடைவேளை மணியடிக்கக் காத்திருக்கும்
இடைப்பட்ட வேளையில்
நட்சத்திரங்களென உதிரும்
மரமல்லிப் பூக்களை ஊசி நூல் கொண்டு
கோக்கத் தொடங்கும் அவள்
வீடு திரும்புகிறாள் மாலையில்
காத்திருக்கும் பேத்திக்கென
விற்று முடிந்த வெற்றுக்கூடைக்குள்
நட்சத்திர  சரமொன்றைச் சுமந்தபடி

==  பாப்பனப்பட்டு வ. முருகன்        நன்றி:  ஆனந்தவிகடன்   (இதழ்:   24-8-16)


 ம் பதிவுலக  நண்பர்  திரு. மோகன்ஜிக்கு  அறிமுகம் தேவை இல்லை.

அவர்  ஸ்ரீசாஸ்தாம்ருதம் என்றொரு தொகுப்பு நூலை சொந்தப் பொறுப்பில் வெளியிட்டிருக்கிறார்.   'சாஸ்தாம்ருதம்'   ஸ்ரீ சாஸ்தா, ஸ்ரீ ஐயப்பன் ஸ்தோத்திரப் பாடல்களின் திரட்டு.    திரு. மோகன்ஜி - திருமதி ஜெயந்தி
மோகன் தம்பதியரின்   சஷ்டியப்த பூர்த்தி விழாவில் தனிச்சுற்றுயாய் பாராயணத்திற்காக
தயாரிக்கப்பட்டதாம்.  விற்பனைக்கல்லாத  அழகான கையடக்க நூலை நல்ல தாளில் அச்சிட்டு வெளியிட்டிருக்கிறார்கள்.  நூலையும் வெகு  பொருத்தமாக மோகன்ஜி  தன் பெற்றோருக்கு சமர்ப்பணம் செய்திருக்கிறார்.

மோகன்ஜி  குருஸ்வாமி நாற்பதாண்டுகளுக்கும் மேலாக பெருவழியில் சபரிமலைப் பயணம் மேற்கொண்டவராம்.   தன் சபரிமலை யாத்திரை அனுபவங்கள் துணையாயிருக்க  கிட்டத்தட்ட 58  ஸ்தோத்திரங்களின் திரட்டை திரட்டுப்பாலாய் அவர் திரட்டிய நூல் இது.. அத்தனை ஸ்தோத்திரங்களையும்  தேடித் தேடி தவமாயிருந்துத் தொகுத்திருக்கிறார்.   ஸ்ரீதர்மசாஸ்தா ஐயப்பன் ஸூப்ரபாதத்தில் ஆரம்பிக்கும் தொகுப்பு  நூல் மங்களத்துடன் நிறைவுறுகிறது.   ஐயப்ப பக்தர்களுக்கு  இந்த தொகுப்பு நூல் அருமையான ஒரு கையேடாக இருந்து திகட்டாத இன்பத்தைத் தரும் வகையில் பார்த்துப் பார்த்து நூல் தொகுக்கப் பட்டிருக்கிறது.

மோகன்ஜியின்  ஆன்மீகப்  பணிகள்  அதையொத்த சிந்தனை கொண்டவர்களுக்கு  நிச்சயம் உற்சாகமூட்டும்.




11 comments:

வே.நடனசபாபதி said...

;தோழி’ இதழில் திருமதி ரஞ்சனி நாராயணன் அவர்களின் இல்லத்தரசிகளின் வீட்டு வேலைகளும் அங்கீகரிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை நியாயமானதே.
//வீட்டு ராணிக்கு மட்டும் சாகும் வரை ஓய்வில்லை. சமையல் அறை அவர் தாலி கட்டிக் கொண்ட இன்னொரு புருஷன்!//
இதற்கு காரணம் நமது குழந்தைகளுக்கு சிறுவயதிலேயே மனதில் விதைக்கப்படுகின்ற தவறான தகவல் தான். சின்ன குழந்தைகளின் புத்தகத்தில் ‘அப்பா ஆபீசுக்கு போகிறார். அம்மா சமைக்கிறாள்.’ என்பது போன்றவை படங்களோடு வெளியிடப்பட்டு அவ்வாறே சொல்லியும் கொடுப்பதால் அவர்கள் மனதில் அம்மா தான் சமையல் வேலைகளை செய்யவேண்டும் என்ற எண்ணம் வேரூன்றிவிடுகிறது.சிறிய வயதிலேயே பிள்ளைகளுக்கு ‘வீட்டு வேலைகளை ஆண்களும் பெண்களும் சரிசமாக செய்யவேண்டும்.’ என்று சொல்லிக்கொடுத்தால் ஒழிய இந்த அவலம் தீராது.
திருமதி ரஞ்சனி நாராயணன் அவர்களின் கருத்தை பகிர்ந்தமைக்கு நன்றி!

உங்களுக்கு பிடித்த பாப்பனப்பட்டு வ.முருகன் அவர்களின் கவிதை எனக்கும் பிடிக்கிறது. இதை படிக்கும்போது எனக்கு எங்கள் ஊர்பக்கத்தில் சொல்லும் ‘கம்புக்கும் காவல் பார்த்த மாதிரி ஆயிற்று. தம்பிக்கும் பெண் பார்த்த மாதிரி ஆயிற்று.’ என்ற சொல்லாடல் நினைவுக்கு வருகிறது.

மோகன்ஜி குருஸ்வாமியின் ஆன்மீகப்பணிக்கு வாழ்த்துகள்!

ஸ்ரீராம். said...

ஒரு கதம்பம் போன்ற பதிவு. மோகன்ஜிக்கும், ரஞ்சனி அக்காவுக்கும் வாழ்த்துகள்.

விசு ஒரு படத்தில் மனைவியைப் பார்த்து வசனம் பேசுவார். "நீங்கள் எல்லாம் தாலிக்கொடி உறவை விட, தொப்புள்கொடி உறவைத்தான் பெரிசா நினைக்கறீங்க..."

இந்தக் காலத்தில் எல்லாம் எங்கே தொப்புள்கொடி உறவு பெரிதாக இருக்கிறது! கட்டினவள்(ன்)தான் காலம் முழுவதும்..

'நேக்கு நீ, நோக்கு நான்' ன்னு வியட்நாம் வீட்டுல சிவாஜி சொல்ற மாதிரி!

மோகன்ஜி said...

ஜீவி சார்! நலம் தானே?
திருமதி ரஞ்சனி நாராயணின் கருத்து அப்பட்டமான உண்மை. ஒரு பெண் தாயாய், மனைவியாய் மேற்கொள்ளும் காரியங்கள் தான் எத்தனை எத்தனை? அவ்வளவையும் சலிப்பின்றி செய்ய அவளை ஊக்குவிப்பது அன்பு ஒன்றே அல்லவா? அந்தக் கடமைகளைப் பங்கு போட்டுக் கொள்ளும் ஆண் போற்றத் தக்கவன். நம் தலைமுறையை விட,இப்போதைய தலைமுறை ஆண்கள் வீட்டு வேலைகளை அதிகம் பகிர்கிறார்கள் என்பது என் துணிபு.

ஆ.வி.கவிதை நயம்!

எனது நூலுக்கு உங்களுடைய மதிப்புரையாக நல்லவண்ணம் சொல்லியிருக்கிறீர்கள். மிக்க நன்றி ஜீவி சார்! இறையருள் இருந்தால் இன்னும் ஐயப்பனின் வழிபாடு குறித்த பலவற்றை அச்சில் கொண்டுவர உத்தேசம். ஆசீர்வதியுங்கள்!

நான் வலைப்பக்கம் வந்து இரண்டு மாதங்கள் ஆயிற்று. உங்கள் பதிவுகளின் அரியர்ஸும் படிக்க இருக்கிறது. பதிவிடத் தயாராக நான்கு கதைகள் எழுதி வைத்தும், வானவில் மனிதனில் வெளியிடாமல் ஏதோ நேரம் கடத்தியபடி இருக்கிறேன். நிறைய படிப்பும் கொஞ்சம் முகநூல் கொரிப்பும் இப்போது.
விரைவில். மீள்வேன்.

உங்கள் அன்புக்கு நன்றி ஜீவி சார் !

”தளிர் சுரேஷ்” said...

பகிர்வுக்கு நன்றி ஐயா!

ஜீவி said...

@ வே. நடன சபாபதி

அப்பா ஆபிசுக்குப் போகிறார்; அம்மா சமைக்கிறாள் --..

கூட சேர்த்துக் கொள்ளுங்கள் அண்ணா பாடம் படிக்கிறான்; அக்கா துணி தைக்கிறாள்!

விஷயம் என்னவென்றால் இன்று அம்மாவும் ஆபிசுக்குப் போகும் பொழுதும் அம்மா தான் சமைத்து, எல்லோருக்கும் டிபன் கட்டிக் கொடுத்து அதற்குப் பிறகு ஆபிசுக்குப் போக வேண்டும்.

ஆனால் ஒன்று. அலுவலம் அடைந்த பிறகு தான் ஆணுக்கும் சரி, பெண்ணுக்கும் சரி
வீட்டை விட அது நிம்மதியான, சந்தோஷமான இடமாக இருக்கிறது. மனசு மலர்ந்து சிரிக்கும் இடமாக இருக்கிறது. பாரங்களை நண்பர்களிடம் இறக்கி வைக்கும் இடமும் அதுவே தான். அதனால் வீட்டில் முடங்கிக் கிடப்போரை விட அலுவலகம் செல்வோர் மகிழ்ச்சியாகவும் மலர்ச்சியாகவும் இருக்கிறார்கள்.

'நான் சம்பாதிக்கிறேன்' என்கிற 'கெத்து' கொடுக்கும் பலம் அலாதிதான்!

உங்க்கள் ஊர்ப்பக்க அந்த சொல்லாடலை ரசித்தேன். அன்பும் பிரியமும் இருந்தால் ஒரே நேரத்தில் ஒன்றென்ன நாலைந்து வேலைகளைச் செய்யலாம்.

அந்த அன்பில் தான் அம்மாக்கும் இப்படி சமையலறை ராணிகளாக இருக்கிறார்கள் என்றே நினைக்கிறேன்.

மோகன்ஜி பன்முக வித்தகர். உயரதிகாரிகளுக்கு மேலாண்மை மற்றும் மனோவியல் வகுப்புக்களையும் எடுப்பார்; தமிழலக்கியங்களிலும் ஈடுபாடு கொண்டவராய் இருப்பார்.
சாஸ்தா வழிபாட்டில் உள்ள நுணுக்கங்களை கண்டடைவதில் ஆராய்ச்சிகள் செய்திருக்கிறார் என்று இந்த நூலின் மூலம் அறிந்தேன்.

தங்கள் ஆழமான பின்னூட்டத்திற்கு நன்றி, சார்.

ஜீவி said...

@ ஸ்ரீராம்

விசுவுக்கு தாலிக்கொடி-- தொப்புள்கொடி இரண்டு வார்த்தைகளையும் ஒரே நேரத்தில் உபயோகித்து தியேட்டரில் கைத்தட்டைப் பெற வேண்டும் என்ற ஆசை..

தாலிக்கொடியாளின் தொப்புள்கொடியிலிருந்து சக்தி பத்து மாதாம் கிடைத்தது எக்பதை வசதியாக அவர் மறந்து விட்டார் போலும்.

கட்டினவ(ன்)ள் -- ரசித்தேன். சர்வசாதாரணமாக மொழியைக் கையாளுவதில் உங்கள் சாமர்த்தியத்தையும் பலமுறை ரசித்திருக்கிறேன்.

//கட்டினவள்(ன்)தான் காலம் முழுவதும்.. //

ஒருத்தரில் ஒருத்தர் கரைய அல்லது கரைவதாகக் காட்டிக்கொள்ள சரியான ஏற்பாடு சார். ஒருவிதத்தில் நல்லதும் கூட. 60-ஐத் தாண்டியும் அப்படியே இருந்தால் வரவேற்கக் கூடியதும் தான்.

ஜீவி said...

@ மோகன்ஜி

ஒரு பெண் தாயாய், மனைவியாய்--

மகளாய்.. அக்காவாய்.. தங்கையாய்.... மறந்து விட்டீர்களே!

லாசராவுக்கு சக்தியாய்.. சகுந்தலையாய்.. அபிதாவாய்.. தரிசினியாய்.. ஜனனியாய்... தயாவாய்.. அஞ்சலியாய்... கங்காவாய்... விதவிதமான நாமங்களில் வர்ணக் கோலங்களாய் அம்பாள் தரிசனம்!

நீங்கள் சொல்வதும் சரிதான்.. தனிக்குடித்தங்களில் அது கூட இல்லை என்றால் மற்ற விஷயங்களில் பிரதிபலிக்கும்.. இரண்டு சம்பாத்தியங்களில் இயல்பாக வேறூன்றிய கலாச்சார மாற்றம் இது!

நான் சொல்ல வந்தது ஈஸிசேர்காரர்களின் தனிக்குடித்தனம் பற்றி.. இன்றைக்கும் இருந்த இடத்திற்கு டபரா செட்டில் காப்பி வர வேண்டும் என்றால் எப்படி?.. பெண்களின் தேகம் மட்டும் இரும்பாலா இழைத்து உருவாக்கப்பட்டிருக்கு!

ஆ.வி--யின் கவிதையில் கூடப் பாருங்கள், அந்த வயதில் அந்தப் பாட்டி உழைக்க வேண்டி இருக்கிறது.. அந்த அயர்விலும் அன்பாய் பேத்திக்கு என நட்சத்திர சரம்!

உங்கள் அன்புக்கு நன்றி, மோகன்ஜி!

Geetha Sambasivam said...

ஆனந்த விகடனில் இப்படி எல்லாம் கவிதைகள் வருகின்றனவா? ஆச்சரியம் தான். ரஞ்சனி சொல்வது சரியே என்றாலும் இப்போதெல்லாம் முழுக்க முழுக்க மாறி வருகிறது. இரவு குழந்தையைப் பார்த்துக் கொள்வது கூட இப்போதெல்லாம் தந்தையே என்றும் மாறி வருகிறது. ஆகவே மாறவே இல்லைனு சொல்ல முடியாது. மாற்றங்கள் இன்னமும் தேவை எனலாம். மேலும் இப்போதெல்லாம் சாப்பாடு விலைக்குக் கிடைப்பதால் கணவன், மனைவி ஒரு சாதம் மட்டும் வைத்துக் கொண்டு வெளியில் சாம்பார், ரசம், கறி, கூட்டு வாங்கிக் கொள்ளலாம். வீட்டிற்கு வந்தே கொடுக்கிறார்கள். ஆகப் பெண்களின் வேலைப்பளு கொஞ்சம் கொஞ்சமாகக் குறைந்து வருகிறது என்றாலும் இம்மாதிரித் தயாரித்து விற்பனை செய்பவர்கள் வேலை செய்தே தீர வேண்டும் இல்லையா? ஆக மொத்தம் எங்கும் எப்போதும் எல்லோரும் சமம் என்பது இருப்பது கஷ்டம் தான். ஒருத்தர் சௌக்கியமாக இருக்க இன்னொருத்தர் கஷ்டப்பட்டே தீர வேண்டும்.

ஜீவி said...

@ கீதா சாம்பசிவம்

ஆனந்தவிக்டனில் இப்படியும் அப்படியும் எப்படியும் கவிதைகள் வரும். 'சொல்வனம்' என்று இக்கால வரிக்கவிதைகளுக்கென்றே ஒரு பகுதி. இந்தப் பகுதிக்கு வேறு பெயர் தேர்ந்தெடுக்கக் கூட முடியாத கற்பனை வரட்சி போலிருக்கு. 'சொல்வனம்' ஏற்கனவே பிரப்லமான இணையதள் இதழ் இல்லையோ?..

கறாராகச் சொன்னால் ரஞ்சினி மேடம் பில்கேட்ஸின் துணைவியார் திருமதி மிலிண்டா கேட்ஸ் குறிப்பிட்டிருப்பவைகளைத் தான் நம்முடன் பகிர்ந்து கொண்டிருக்கிறார். வரவர அமெரிக்காவும் ஆசாபாசங்களில் இந்தியாவுடன் கைகோர்த்துக் கொள்கிறது போலும்.
உலகெங்கும் வாழட்பவர்களோடு அவர்களின் பிரச்னைகளும் கூட வாழ்வதால் இப்பொழுதெல்லாம் நாட்டுக்கு நாடு மனிதர்களின் வாழ்வில் எந்த வித்தியாசமும் இல்லை.

நீங்கள் சொல்வது வேறு; திருமதி கேட்ஸ் சொன்னதாக திருமதி ரஞ்சனி சொன்னது வேறு. இடையில் கிடைத்த சைக்கிள் கேப்பில் நான் சொன்னதும் வேறு.

கறி, கூட்டு, சாம்பார், ரசம் வெளியே வாங்கலாமா?.. என்ன சொல்கிறீர்கள், மேடம்?
நேற்று கீரை ஆய்கிறேன் பேர்வழி என்று உட்கார்ந்து நான் கழித்துக் கட்டியது வாங்கிய கீரையில் முக்கால் பகுதி. முன்பெல்லாம் கத்திக்காயில் தான் அது நெளியும். இப்பொழுதெல்லாம் அசறாமலிருந்தால் எல்லா காய்கறிகளிலும் அதைப் பார்க்கலாம்.
என்ன இலட்சணத்தில் இதையெல்லாம் நீக்கி பக்குவம் பண்ணியிருப்பார்களோ?..
ரவையுடன் கூடப் பிறந்தது அது. வறுத்த ரவையிலும் அதையும் சேர்த்து வறுத்து விடுகிறார்கள். நிலைமை இப்படியிருக்க ரவை சேர்ந்த எதையும்-- உப்புமா, ரவா தோசை, கேஸ்ரி என்று எதை வெளியே சாப்பிடவும் அச்சமாக இருக்கிறது.

நம் கையே நமக்குதவி. சாப்பிடும் சமாச்சாரங்களில் மட்டும் காம்ஃப்ரமைஸே கூடாது.
சங்கீதா புராண ஸ்ரீராமிற்கு பிடிக்காது தான். அதற்காக சொல்ல வேண்டியதைச்
சொல்லாமல் இருக்க முடியுமா, என்ன?

Geetha Sambasivam said...

சரியாப் போச்சு போங்க! இந்த சாம்பார், ரசம், கறி, கூட்டு மட்டுமில்லாமல் வீட்டிலேயே சமைத்துத் தருபவர்களும் எங்க அம்பத்தூரில் வந்து கிட்டத்தட்ட இருபது வருடங்கள் ஆகின்றன. ஒரு நவராத்திரியில் குளியலறையில் கீழே விழுந்து எனக்கு வலக்கையில் சின்னதாய் எலும்பு முறிவு (hairline fracture?)வந்தப்போ நாங்க முழுச்சாப்பாடே ஒரு சாப்பாடு 30 ரூபாய் என்ற கணக்கில் வாங்கினோம். :) மற்றபடி இப்போதெல்லாம் எனக்குத் தெரிந்து எங்கள் குடும்பத்திலேயே பலரும் சாதம் மட்டும் வைத்துக் கொண்டு மற்றவை வெளியில் வாங்கிச் சாப்பிடுகின்றனர். எல்லாம் முடியாத குறை தான் வேறென்ன! நான் தான் இன்னமும் வெளியே போனால் கூட டிஃபன், காஃபி, சாப்பாடு கட்டி எடுத்துப் போகிறேனு நினைக்கிறேன். ஆனால் ஒரு நாளைக்கு இது சரி, மற்றபடி தேவை எனில் வெளியில் சாப்பிடத் தான் செய்கிறோம்! :( நம்பிக்கை தான் காரணம். நல்ல ஓட்டலாகப் பார்த்துப் போவோம். காசைக் கொடுத்து உடல் நலத்தைக் கெடுத்துக் கொள்ளாமல் இருக்கணுமே!

நெல்லைத் தமிழன் said...

சிந்திக்க வைத்தது ரஞ்சனி அவர்களின், அதனுடன் கூடிய உங்களின் கருத்து சேர்ந்த பதிவு. தாய்வானில் நான் பார்த்தது, பொதுவாக இருவரும் வேலைக்குப் போவதால், வேலைப் பகிர்வு, எப்போதும் வெளிச் சாப்பாடு, விடுமுறை நாட்களில் ஒருவேளை வீட்டில் பகிர்ந்து செய்யும் சாப்பாடு என்று. பெற்றோர் தனி வீடுகளில் அல்லது நகர்ப்புறத்திலிருந்து ஒதுங்கிய வீடுகளில். பிலிப்பைன்ஸில், கிட்டத்தட்ட நம் வீடுகளில் காணப்படும் முறை.. பெரும்பாலான வீட்டு வேலை மனைவியிடம். எனக்குத் தெரிந்தவரை, நாம்தான் ரொம்பக் கடுமையான வீட்டு நிர்வாகத்தை, சமையலைப் பெண்களிடம் கொடுத்து நாம் தப்பித்துக்கொண்டோம். அதுலயும், கணவனுக்கு வரும் புண்ணியத்தில் (பக்தி, கோவில், தினப்படி ஒழுகு போன்றவைகளால் வரும்) பாதி மனைவிக்கு வரும் என்று வேறு சொல்லிவைத்துவிட்டார்கள். இது இனிமேல் மிகவும் குறைய ஆரம்பித்துவிடும். இப்போ உள்ள ஜெனெரேஷன், இந்த மாதிரி விஷயங்களைக் கேள்வி கேட்கிறார்கள். அதுவும்கூட நல்லதுதான்.

Related Posts with Thumbnails