மகளிர் இதழ்களில் 'அவள் விகடனு'க்கு என்று எப்பொழுதுமே ஒரு தனி இடம் உண்டு. அவள் விகடன் 15-11-16 இதழ் அந்த தனித்துவத்தை தெளிவாகவே சொன்னது.
பெண்கள் பொதுவாக மருத்துவமனை உள்ளிட்ட இடங்களில் பெயர் பதிவு செய்யும் பொழுது கணவர் பெயர் சேர்த்தோ, அல்லது அவரது பெயரின் முதல் எழுத்தை இன்ஷியலாகக் கொடுக்கப் பழகியிருக்கிறார்கள்.ஆனால் அவர்கள் கல்வி மற்றும் பிறப்புச் சான்றிதழ்களிலோ தந்தையின் பெயரே இன்ஷியலாக இருக்கும் பொழுது அலுவல் ரீதியான குழப்பங்கள் ஏற்படுகின்றன' ஆரம்பித்து உருப்படியான ஒரு விவாதத்தை கட்டுரை முன் வைக்கிறது.
வழக்கறிஞர் அருண்மொழி அவர்களும் பெண்ணியச் செயற்பாட்டாளர் ஓவியா அவர்களும் தங்கள் கருத்துக்களைச் சொல்லி இந்த விவாதத்தைச் செழுமைபடுத்தியிருக்கிறார்கள். வாசிக்க வேண்டிய கட்டுரை.
சில ஆண்களும் சரி, பெண்களும் சரி தங்களின் பிறந்த ஊரையும் (பெரும்பாலும் சொந்த ஊர்) இன்ஷியலின் முதல் எழுத்தாகச் சேர்த்துக் கொள்ளும் வழக்கமும் நெடுங்காலமாக உண்டு. இது ஊர்ப்பாச விஷயம். பெற்றெடுத்தத் தந்தை தாய்க்கு இணையாக பிறந்த ஊரையும் மறக்காமல் தங்கள் பெயருடன் சேர்த்துக் கொண்டிருக்கிறார்கள். அதைப் பற்றி இந்த விவாதத்தில் கலந்து கொண்ட இருவருமே குறிப்பாகக் கூட எதுவும் சொல்லவில்லை என்பது ஒரு உபரித் தகவல்.
அதே 'அவள் விக்டன்' இதழில் 'மை டியர் சேமிப்புப் புலிகளே' என்று பா.விஜயலெஷ்மி எழுதும் தொடர். பெண்கள் மத்தியில் சேமிப்புப் பழகத்தை ஊக்குவிக்கும் அற்புதமான தொடர்.
'முதலில் வீட்டுக்கான மாத பட்ஜெட் போடுவதை பெண்கள் கற்றுக் கொள்ள வேண்டியது அவசியம். மளிகை சாமான் தொடங்கி, மருந்துப் பொருட்கள் வரை விலை எக்கச்சக்கமாம உயர்ந்திருக்கும் பொருளாதாரச் சிக்கல்கள் நிறைந்த காலகட்டம் இது' என்று ஆரம்பித்து 'எதிர்காலத்தில் வாங்கும் சம்பளத்தை விட செலவுகள் அதிகரிக்கப்போகும் அபாயகரமான வாழ்க்கை முறையில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்' என்று எச்சரிக்கிறார். இனி அன்றாட நிதி நிர்வாகம் பெண்களுக்குத் தெரிந்திருக்க வேண்டிய அவசியத்தையும் அத்தியாவசியத்தையும் கட்டுரையில் வலியுறுத்துகிறார்.
'ஜன்னல்' பத்திரிகையின் தீபாவளி இதழ் பிரமாதம்.
பத்தோடு பதினொன்றாக 'ஜன்னல்' பத்திரிகையையும் ஒரு சினிமாப் பத்திரிகையாக ஆக்கிவிடாமல் தடுத்தாண்டாண்டு கொண்டிருக்கும் சில சங்கதிகளைச் சொல்கிறேன். வரிசையாக 'ஜன்னல்' புராணம் தான்.
ராஜ்சிவா எழுதும் 'அவர்கள்' என்னும் அறிவியல் தொடர் பற்றி இதற்கு முன்னால் இதே பகுதியில் குறிப்பிட்ட ஞாபகம். அந்தத் தொடர் 21-வது அத்தியாயமாக இந்த இதழிலும் தொடர்கிறது.
ராஜ்சிவா வித்தியாசமாக எழுதுகிறார். அறிவியல் பாணி சமாச்சாரங்களை கடந்த அரை நூற்றாண்டுக்கும் மேலாக சுஜாதா சொல்லேர் உழவனாய் உழுது தள்ளியிருக்கிறார். இந்த விஷயத்தில் அவர் பாணியை தவிர்த்து எழுதுவது என்பதே பெரிய விஷயம். ராஜ்சிவா அந்தக் காரியத்தை திறம்பட செய்கிறார் என்பதற்காக சொல்ல வந்தேன்.
இதுவரை அறிவியல் கண்டுபிடித்தகற்றில் அதி வேகமாகச் செல்வது ஒளி தானாம். ஒரு செக்கனுக்கு மூன்று லட்சம் கிமீ . கற்பனைக்கே கட்டுப்படாத வேகம். வேகம் சரி, இந்த ஒளி நகர்தலும் காலத்தின் கட்டுப்பாட்டுக்குள் தானே?.. ஒரு மீட்டர் கடக்க மூன்று நானோ செக்கன் நேரமாம்.
தூரத்தில் ஒரு மீட்டர் தூரத்தில் ஒரு பொருள் இருக்கிறது என்று வைத்துக் கொள்ளுங்கள். அந்தப் பொருளிலிருந்து ஒளி உங்களை வந்து அடையும் ஆகும் நேரம் இந்த மூன்று நானோ செக்கனாம். ஒரு நானோ செக்கன் என்பது ஒரு செக்கனின் பில்லியன் மடங்கில் ஒரு பகுதியாம்.
ஏற்கனவே நான் இந்த கணக்கு சமாச்சாரத்தில் கொஞ்சம் வீக். இருந்தாலும்
என்ன சொல்கிறார் என்பது தெளிவாகப் புரிய நானும் சில கணக்குக்களைப் போட்டுப் பார்த்தேன். இந்த மாதிரியான பயிற்சிகள் தான் ராஜ்சிவாவின் இந்தத் தொடரை ஆர்வத்துடன் படிக்கத் தூண்டுகோலாக இருக்கிறது என்று அடித்துச் சொல்வேன்.
.
எழுத்தாளர் சாரு நிவேதிதா என்னைக்குமே எதைச்சொன்னாலும் வெட்டு ஒன்று துண்டு இரண்டு தான். வழவழவுக்கு இடமே இல்லை; தெளிவா இருக்கும்.
பாப் டிலனுக்கு இலக்கிய நோபல் பரிசு கொடுத்திருக்கக் கூடாது, உவர் ஆனர் என்று தன் தரப்பு நியாயத்தைச் சொல்லியிருக்கிறார்.
பாப் டிலர் நோபல் பரிசுக்கு உரியார் தான். அமெருக்க கலாச்சார உருவாக்கத்தில் அவர் பணி மகத்தானது. அவர் ஒரு நல்ல பாடகர்; பாடலாசிரியர் மட்டுமே. அதனால் இலக்கியத்திற்கும் அவருக்கும் எந்த சம்பந்தமும் இல்லை' என்பது சாருவின் வாதம். பாடல் இலகியமாகாதா என்றால் ஆகாது என்று ஆணித்தரமாக மறுக்கிறார்.
ஒரு காலத்தில்'வைரமுத்து பாடல்களுக்கு நோபல் பரிசு கிடைக்கலாம்' என்று பகடியாக எழுதியிருந்தேன். இப்போது பார்த்தால் அது நடந்து விடும் போலிருக்கிறது' என்று நம்மை முறுவலிக்க வைக்கிறார்.
"ஒரு உதாரணம் சொல்கிறேன்.." என்கிறார் சாரு. "அசோகமித்திரனும் இளையராஜாவும் எதிர் எதிர் வீடு. இளையராஜா தமிழரின் இசைக் கடவுள்; அசோகமித்திரனை எத்தனை பேருக்குத் தெரியும்? சொல்லுங்கள். இந்த நிலையில், இலக்கியத்திற்காக வழங்கப்படும் சாகித்ய அகாதமி விருதை, இளையராஜா எழுதிய சினிமா பாடல்களுக்காகத் தருகிறோம் என்று சொன்னால் நாம் என்ன செய்ய முடியும்?" என்கிறார்.
"பாடல் இலக்கியமாகாதா?.,. பாரதியின் பாடல்கள் இலக்கியமில்லையா?-- என்ற கேள்வி வரும் பொழுது, "தர்க்க ரீதியாக இந்தக் கேள்வி சரிதான்.." என்று ஒப்புக்கொள்கிறார் சாரு. "ஆனால் நான் சொல்வது அறம் சம்பந்தப்பட்டது. சினிமா பாடல், மேடைப் பாடல், சினிமா வசனம் என்று எல்லாவற்றையும் இலக்கியத்தில் அடக்கினால், அதற்குப் பிறகு இலக்கியத்தை சீந்த யாருமே இருக்க மாட்டார்கள்.." என்று அவர் சொல்லும் பொழுது அவர் பக்க நியாயம் புரிகிற மாதிரியும் இருக்கிறது.
அடுத்து ஜெமோ. (இப்போவெல்லாம் ஜெமோவை பற்றி நீங்கள் ஏதாவது எழுதாமல் இருப்பதில்லை என்ற முணுமுணுப்பைத் தாண்டி....)
ஜன்னல் இதழில் 'தெய்வங்கள்.. தேவர்கள்.. பேய்கள்..' என்ற வினோத தலைப்பில் ஜெயமோகன் ஒரு தொடர் எழுதுகிறார்.
பெரும்பாலும் நாட்டார் கதைகள். இந்த இதழில் குலசேகரப் பெருமாள் பற்றியது. குலசேகரப் பெருமாள் யார் என்றால் சுருக்கமாகவே சொல்லி விடுகிறேனே! சேரன் செங்குட்டுவன் வழித்தோன்றல்களாக வந்தவர்கள் சேரமான் பெருமாள் அரசர்கள். இவர்களில் கடைசிப் பெருமாள், குலசேகரப் பெருமாள். வடக்கே கொடுங்கல்லூரைத் தலைநகராகக் கொண்டு ஆட்சி செய்தவராம் இவர். கொடுங்கல்லூரை போர்ச்சுக்கீசியர் தாக்கிய பொழுது, அப்படியே மொத்த தன் கருவூலச் செல்வங்களையும் காப்பாற்றிக் கொண்டு தென் சேர நாட்டிற்கு வந்து விட்டாரம். இதான் தொடரும் கதையின் அல்லது வரலாற்று நிகழ்வின் ஆதாரப் புள்ளி.
அப்புறம் திருவனந்தபுரம் கோயிலின் ரகசிய அறை, இரணியல் அரண்மனையின் இடிபாடுகள், பள்ளியறை யக் ஷி, மீனாட்சி பிள்ளை அவள் மகள் காமாட்சி பிள்ளை, கல்குளம் உடையார், அச்சிக்குறும்பு, தினம் தினம் பள்ளியறையில் காணப்படும் பொன் நாணயம் என்று நிறைய சுவாரஸ்ய விஷயங்கள் உண்டு.
வண்ணதாசன் சிறுகதை ஒன்று இந்த ஜன்னல் இதழில். 'ஒரு கனவு,
சொப்பனம்..' என்பது கதையின் பெயர். வழக்கமான வண்ணதாசன் சிறுக்தைகள் எப்படி இருக்குமோ அதற்கு பங்கம் ஏற்பட்டு விடாமல் இந்தச் சிறுகதையும் இருப்பதே பங்கமாக் தெரிகிறது. மனசில் பூக்கும் எண்ணங்களை வெளிப்படுத்தலில் கூட அப்பப்போ மாற்றம் வேண்டாமா, கல்யாண்ஜி, சார்?.. வண்ணதாசன் என்றால் இப்படித் தான் எழுதுவார் என்று பழகிப்போன வாசிப்பாக ஆகிவிடக் கூடாதல்லவா?.. இதெல்லாம் நம் ஆதங்கம் தானே தவிர, கதை நிகழ்வுகளை நம் கண் முன்னால் காட்சிப்படுத்தும் அவர் திறமை என்றைக்குமே 'ஓகோ' ரகம் தான். இந்தக் கதை ருக்கு அக்கா மனசில் நிற்கிறார்.
மருத்துவர் கண்ணன் அவர்களின் 'சுரக்கும் சூட்சுமங்கள்' பற்றிச் சொல்லாவிட்டால் பாவம். தமிழில் இதுவரை இந்த தலைப்பில் எந்த மருத்துவக்கட்டுரையும் எந்தப் பத்திரிகையிலும் வெளிவந்ததாக நினைவில்லை. இந்தத் தொடரைப் பிரசுரிப்பதின் மூலம் 'ஜன்னல்' பெரும் பெருமையைத் தேடிக் கொண்டிருக்கிறது.
அட்ரீனல் சுரப்பியில் ஏற்படும் பாதிப்புகள் பற்றி சென்ற இதழில் மருத்துவர் ஐயா எழுதியிருந்தார். இந்த இதழில் அட்ரீனலின் ஆதாரமான அக அட்ரீனல் பற்றி விவரமாக எழுதியிருக்கிறார்.
கட்டக் கடைசியாக ஒரு குட்டிக் கவிதை: நானிலம் போற்றும் நீதி பற்றி.
காடு இருந்த இடத்தில்
அமைந்திருக்கும் முல்லை நகரில்
கழனி இருந்த இடத்தில்
வீடு கட்டிக் கொண்டவர்கள்
கால்வாய் இருந்த இடத்தில்
சாலை அமைப்பதை எதிர்த்து
வழக்குத் தொடுத்திருக்கிறார்கள்
குளம் இருந்த இடத்தில்
அமைந்திருக்கும் உயர் மன்றத்தில்
நீதி இன்னும் நிலுவையில் இருக்கிறது!
--- சேயோன் யாழ்வேந்தன் நன்றி: ஆனந்த விகடன்
(இதழ்: 2-11-16)
படங்கள் உதவிய நண்பர்களுக்கு நன்றி.
17 comments:
பல ஆண்டுகளாக வார இதழ்களை வாசிப்பதே இல்லை.வாசிக்க வைக்கும் எழுத்து எதுவும் அவைகளில் காணக்கிடைக்காத அரும்பொருளாகி விட்டதே காரணம்.
உங்களுடைய பதிவை வாசித்த பிறகு தான் அங்கொன்றும் இங்கொன்றுமாக சில நல்ல, படிக்கத்தூண்டும் எழுத்துக்களும் வெளிவருகிறதென்பதை அறிகிறேன்!
வாழ்த்துகள்!
அவள் விகடன் ஒரு காலத்தில் வாங்கிக் கொண்டிருந்தோம்! இப்போது இல்லை! ஜன்னல் சில இதழ்கள் வாங்கினேன். இப்போதைய இதழ்களில் இது கொஞ்சம் மாற்றமாய் சிறப்பாய்த்தான் இருக்கிறது. எனது கவிதைகள், ஜோக்ஸ்கள் அனுப்பி பிரசுரம் ஆகவில்லை! அந்த கோபத்தில் வாங்குவதை நிறுத்திவிட்டேன்?!! சுவையான அறிமுகத்திற்கு நன்றி சார்!
குட்டிக் கவிதை என்னைக் கவர்ந்தது. நீங்கள் சொல்லும் இதழ்களை நான் படித்ததில்லை. ஆனால், சாருவின் கட்டுரையைக் குமுதத்தில் படிக்கிறேன். ஜெமோ குலசேகரப்பெருமாளைத் தொட்டிருக்கிறாரா? வரலாற்றுக்குப் பங்கம் வராமல் எழுதுவார் என்றே நம்புகிறேன். (அவர் பையனுக்கு அரசுக்கட்டிலைக் கொடுத்துவிட்டுத் துறவறம் பூண்டதையும், மருமகன் ஆட்சியைப் பிடித்ததையும்)
ஜன்னல் இதழ் பார்த்ததே இல்லை. குமுதம் கடையில் வாங்கும்போது சின்ன புத்தகத்தை நீங்களே வைத்துக் கொள்ளுங்கள் என்று சொல்லி லைஃப் இதழை மட்டும் வாங்கி வரலாம் என்று தோன்றுகிறது. ராஜ்சிவா எழுதிய சில புத்தகங்களை படித்துள்ளேன். ஒன்றிரண்டை எங்கள் ப்ளாக்கில் பகிர்ந்துள்ளேன்.
முன்பெல்லாம் கல்கி குமுதம் ஆனந்தவிகடன் போன்ற இதழ்களை வாங்கிக்கொண்டிருந்தேன். அவைகளில் அதிகமாக திரைப்படத்துணுக்குகள் வரத்தொடங்கியதால் அவைகளை வாங்குவதை விட்டுவிட்டேன். என் மனைவி மங்கையர் மலர் வாங்கிக்கொண்டிருந்தவர் தற்போது குமுதம் சிநேகிதிக்கு மாறிவிட்டார். அதில் வரும் கட்டுரைகளைப் படிப்பதுண்டு.
பள்ளியில் படிக்கும்போது கல்கண்டு மஞ்சரி மற்றும் கலைமகள் இதழ்களை விரும்பி படித்ததுண்டு.
தங்களது பதிவைப் படைத்ததும் ஒரு சில இதழ்களையாவது தற்போது வாங்கலாமே என்று தோன்றுகிறது. (குங்குமம் இதழ் வெளிவரப்போகிறது என்ற அறிவிப்பு வந்தபோதே கர்நாடக மாநிலம் உடுப்பியில் இருந்த நான், அஞ்சலில் சந்தா தொகை கட்டி முதல் இதழிலிருந்து படித்திருக்கிறேன்)
தாங்கள் பகிர்ந்திருக்கும் குட்டிக் கவிதை மிக அருமை.
இங்கு வந்தபிறகு வார இதழ்கள் கிடைப்பதும் படிப்பதும் அரிதாகிவிட்டது.
ஜன்னல் ஒரேயொரு இதழ் ப்டித்தேன். 20வருடங்களுக்கு முன் வாசுகி என்றொரு இதழ் வந்தது. கவிதைப் போட்டியெல்லாம் வைப்பார்கள். காலவெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது. வாசகர்கள் குறைந்து விட்டார்கள். இளம் தலைமுறையினரிடம் வாசிப்புப் பழக்கம் வெகுவாகக் குறைந்து விட்டது.
ஒரே பதிவில் பல பொருண்மைகளிலான செய்திகளை அறிந்தோம். தேர்ந்தெடுத்து பகிர்ந்தமைக்கு நன்றி.
@ S. Krishnamurthy
//அங்கொன்றும் இங்கொன்றுமாக சில நல்ல, படிக்கத்தூண்டும் எழுத்துக்களும் வெளிவருகிறதென்பதை அறிகிறேன்!//
ரொம்ப சரி. படிக்கத் தூண்டும் தூண்டிலைப் போட்டு ஆதாயம் தேடப் பார்க்கிறார்கள் என்பதே சரி. விற்பனையை உயர்த்துவதற்கு என்னன்ன செய்யலாம் என்று போட்ட திட்டத்தில் கைவிட்டுப் போன பழைய வாசகர்களையும், புது வாசகர்களையும் எப்படிக் கவரலாம் என்ற யோசிப்பில் வந்த ஞானம் இது. மெயின் ஸ்விட்ச் இப்பொழுதும் சினிமா தான். இடையே இந்த மாயப் பொடி தூவல். இதிலும் ஆதாயமில்லை என்று தெரிய வந்தால் இதையும் கைகழுவி விடுவார்கள்.
கேரளம் மாதிரி தமிழகத்தில் நுகர்வோர் விழிப்புணர்வு இல்லாததால், பத்திரிகை எழுத்து விஷயத்தில் ஆழமான எதையும் எதிர்பார்ப்பதற்கில்லை. ஆனால், புத்தக வாசிப்பில் விதவிதமான தலைப்புகளில் புத்தகங்கள் அச்சாகிக் கொண்டிருக்கின்றன. புத்தக வாசிப்பும் நாளுக்கு நாள் பெருகிக் கொண்டே வருகிறது. வரப்போகிற ஜனவரி புத்தக் விழாவுக்காக சில பதிப்பகங்கள் கொண்டு வரபோகிற புத்தகத் தலைப்புகளை பார்க்கும் பொழுதே மனசுக்கு ஆறுதலாக இருக்கிறது. இது தமிழக வாசிப்பு உலகைப் பொருத்த மட்டில் ஒரு நல்ல செய்தி.
தாங்கள் ஆசிர்வதித்தால் தான் எழுதவும், எழுதாளானாய் நாலு பேருக்குத் தெரியவும் முடியும் என்ற பத்திரிகைகளின் சட்டாம்பிள்ளைத்தனம் மண்மூடிப்போய் வெகுகாலமாகி விட்டது. புத்தக பிரசுரங்களையும் ஆரோக்கியமான வாசிப்பு உலகிற்கு வழிநடத்திச் செல்ல வேண்டிய காலகட்டத்தில் நாம் இருக்கிறோம்.
தாங்கள் இந்தப் பதிவை வாசித்து கருத்தைப் பதிந்தமைக்கு நன்றி, சார்.
@ தளிர் சுரேஷ்
'நான் அனுப்புவது பிரசுரமாகவில்லை; அதனால் வாங்குவதில்லை' என்பதும் ஒரு கோணத்தில் நுகர்வோர் தீர்மானிப்பு தான். உங்கள் கோபமும் குழந்தைக் கோபம் தான். பிரசுரமானால் வாங்குவேன் என்பது இந்த ஸ்டேஜில் ஏற்படுகிற உணர்வு. அடுத்து பிரசுரம் செய்தும் ஒரு பிரதி பத்திரிகையைக் கூட இவர்கள் அனுப்பி வைக்கவில்லயே என்ற கோபம் வரும். எப்படிப் பார்த்தாலும் இணைய தளம் தான் உங்கள் சாஸ்வதமான எழுத்துக் கூடம். பயிச்சிக் கேந்திரமும் இதுவே தான். காலாதிகாலத்தும் நீங்கள் எழுதுவது எதுவும் கல்வெட்டாய் பதிய வாய்ப்பு அளிப்பதும் இதுவே தான்.
உங்கள் ஆர்வமும் வளர்ச்சியும் நீங்கள் விரும்பும் விதத்தில் அமைய வாழ்த்துகிறேன். தங்கள் பகிர்வுக்கு வாழ்த்துக்கள்.
@ நெல்லைத்தமிழன்
சமூக நோக்கம் உள்ள எந்த எழுத்தும் தங்கள் குரலாக ஸ்ரீமான் பொதுஜனத்தைக் கவர்வதில் ஆச்சரியமில்லை. இந்தக் குட்டிக் கவிதையும் நம்மைக் கவர்ந்தது அதனால் தான்.
சாருவும் ஜெமோவும் இன்றைய காலகட்ட எழுத்துலகில் தவிர்க்க முடியாதவர்கள். ஒவ்வொரு காலகட்டத்திற்கும் இப்படித் தவ்ரிக்க முடியாதவர்கள் எல்லா துறைகளிலும் இருந்திருக்கிறார்கள்.
உங்கள் எதிர்ப்பார்ப்பில் என்ன சூட்சுமம் இருக்கிறதென்று அந்த வர்லாறு தெரியாததால் எனக்குத் தெரியவில்லை. புனைவிலக்கிய படைப்புகளை விட வரலாற்றுச் செய்திகளை உபயோகப்படுத்திக் கொண்டு அதன் மேலான தன் படைப்புத் திறமையைப் பதிய வைப்பது ஜெமோக்கே உரித்தான் சாமர்த்தியம். அந்த சாமர்த்தியம் தான் அவரை வாசிக்கவும் வைக்கிற சூட்சுமமாக எனக்குத் தெரிகிறது.
தங்கள் கருத்துப் பகிர்வுக்கு நன்றி, நண்பர் நெல்லைத் தமிழன!
பரவாயில்லை நமக்கு கொஞ்சம் நல்ல ரசனைதான் என்று சில சமயம் நினைத்துக் கொள்வேன். ஜன்னலைப் பற்றி நீங்கள் எழுதியிருப்பதை படித்ததும் அது உண்மைதானோ என்று தோன்றுகிறது. தற்போது வந்து கொண்டிருக்கும் பத்திரிகைகளில் என்னை கவர்ந்தது ஜன்னல்! அவ்வப்பொழுது வாங்கி படிப்பேன், ரசிப்பேன். சந்தா கட்டலாமா என்று ஆலோசிக்கிறேன்.
@ ஸ்ரீராம்
// ஜன்னல் இதழ் பார்த்ததே இல்லை//
ஜன்னல் இதழ் உங்கள் மதுரையில் தான் ஜனனம் கொள்கிறது, ஸ்ரீராம்.
ஆசிரியர் இலாகா மட்டும் சென்னையில். ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதமாய் ஒரு இதழ் வாங்கிப் பாருங்கள். மற்ற இதழ்களிலிருந்து ஓரளவு வேறுபட்டுத் தெரிவது தெரியும்.
//புத்தகத்தை நீங்களே வைத்துக் கொள்ளுங்கள் என்று சொல்லி லைஃப் இதழை மட்டும் வாங்கி வரலாம் என்று தோன்றுகிறது. //
லைஃப் இதழைப் பார்த்தாலே சுஜாதாவின் துணைவியார் சுஜாதாவின் பேட்டி நினைவுக்கு வந்து மனதை உறுத்துகிறது. சில வாரங்களாக லைஃப் இதழைப் பார்க்கவில்லை.
விகண்டனி 'தடம்' பார்த்தீர்களா, எப்படி?..
//தங்களது பதிவைப் படைத்ததும் ஒரு சில இதழ்களையாவது தற்போது வாங்கலாமே என்று தோன்றுகிறது.//
வாடகை நூல்நிலையம் மூலம் வாங்கிப் படித்தால் கட்டுபடி ஆகும். வெரைட்டியாகவும் படிக்கலாம். நான் அப்படித்தான் செய்கிறேன். ரூ.20/-க்கு குறைச்சலாக எந்த இதழும் இல்லை.
ஆசிரியர் சாவி தான் அந்த இதழுக்கு 'குங்குமம்' என்று பெயர் வைத்தார். அப்படியான பெயரை அவர் தேர்ந்தெடுத்தெடுத்தற்கு சில மாதங்கள் முன்னால் அவர் குடும்பத்தில் நிகழ்ந்த ஒரு சோக நிகழ்வு நினைவுக்கு வரும். மிகுந்த மனத்திண்மாயுடன் பத்திரிகையின் பெயரைத் தேர்வு செய்திருப்பதாக நினைத்துக் கொள்வேன். இது என் கற்பனையின் விளைவு என்பதால் நிஜம் போல பகிருந்து கொள்வதில்லை.
சாவி ஆசிரியராக குங்குமமும், மணியன் ஆசிரியார்க 'இதயம் பேசுகிறது இதழும் வெளிவரப்போவதாக திடுதிப்பென்று முழுப்பக்க விளம்பரம் போல ஆனந்த விகடன் இதழில் வெளிவந்த செய்தியைப் படித்த நாள் மறக்க முடியாது. நீங்கள் அப்பொழுது கர்நாடக மாநிலம் உடுப்பியிலிருந்து சந்தா கட்டி இதழை வாங்கிப் படித்திருக்கிறீர்கள் என்ற ஆர்வம் புரிகிறது.
தங்கள் நினைவுகளைப் பகிருந்து கொண்டமைக்கு நன்றி, நண்பரே!
வாடகை நூல்நிலையம் மூலம் வாங்கிப் படித்தால் கட்டுபடி ஆகும். வெரைட்டியாகவும் படிக்கலாம். நான் அப்படித்தான் செய்கிறேன். ரூ.20/-க்கு குறைச்சலாக எந்த இதழும் இல்லை.//
முன்பு எவ்வளவு பத்திரிக்கைகள் படித்தோம் ! வாடகை நூல் நிலையம் மூலம், வீட்டுக்கே கொண்டு வந்து தருவார்கள் தினம் இரண்டு வாரபுத்த்கம் ஒன்று ஒரு மாத இதழ் , அல்லது கதை புத்தகம் படிக்கலாம்.
வித்தியாசமான அலசல். ஜன்னல் பத்திரிக்கை விளம்பரம் பார்த்தேன் வாங்கவில்லை இப்போது தினமலர் பத்திரிக்கை மட்டும் தான்.
@ சிவகுமாரன்
'வாசுகி' இதழ் 'தினகரன்' நிறுவனத்தின் வெளியீடாக வந்தது. தாமரை மணாளன் ஆசிரியராக இருந்தார்.
இளந்தலைமுறையிடம் வாசிப்புப் பழக்கம் குறைந்து விட்டது என்பதை விட அவர்கள் வாசிப்பு பழக்கம் மாறியிருக்கிறது என்று சொல்லலாம். சென்ற வாரம் ஒரு பதிப்பதிக்கத்தில் இருந்தேன். அப்பொழுது வேகவேகமாக உள்ளே வந்த இளைஞர் நிதான்மாக சில புத்தகங்களின் தலைப்புககளைச் சொல்லி ஸ்டாக்கில் இருந்த புத்தகங்களை வாங்கி பிளாஸ்டிக் அட்டையை நீட்டி பணம் செலுத்தி மிகவும் மகிழ்வுடன் சென்றார். இன்றைய வாசிப்பு உலகின் பிரதிநிதியாய் அவர் வாங்கிய புத்தகங்கள்.
1. பாரதியும் அவர் படைப்புகளும்
2. புராதன இந்தியா என்னும் பழைய 56 தேசங்கள்
3. புத்தரின் புகழ்மிகு வாழ்க்கை
4. ஆரிய வேதங்கள்
5. ந. பிச்சமூர்த்தியிலிருந்து எஸ்.ரா. வரை
6. சிந்தா நதி (லா.ச.ரா.)
7. பத்மினி (ஒரு இந்தியக் காதல் கதை)
8. கால் புழுதி (கனக துரிகா)
9. சின்னு முதல் சின்னு வரை (வண்ணதாசன்)
10. ஒளரங்கசீப்
11. என் சரித்திர்ம் (உ.வே.சா)
-- இதிலிருந்து என்ன தெரிகிறது,சிவகுமாரன்?..
@ Dr. B. Jambulingam
//பல பொருள்மைகளிலான செய்திகள்//
தமிழின் ஆளுமையை வெகுவாக ரசித்தேன். நன்றி, ஐயா!
@ Bhanumathy Venkateswaran
ஆரம்ப இதழ்களிலிருந்து பார்த்தால், சினிமா பக்கம் கொஞ்சம் கூடச் சாய்ந்திருப்பது போல் தோன்றுகிறது. அவர்களும் என்ன செய்வார்கள், சொல்லுங்கள்.. பகாசுரப் பத்திரிகைகள் தடாலடியாக எதைஎதையோ செய்கிறார்கள். வார இதழ்களையெல்லாம் படிப்பவர்களை விடப் புரட்டுபவர்களே அதிகம். அதனால் வாசிப்பவர்களுக்கு அல்லாமல் புரட்டிப் பார்ப்போர்க்கு ஏற்றவாறு இதழ்கள் தயாராகின்றன.
இலக்கியம் படிப்பவர்கள் தனியாகத் துண்டாக இருக்கிறார்கள் என்பதற்காக தேர்ந்த இலக்கியம் படிப்போருக்காக தனியாக இதழ்கள் வெளியிட்டுப் பார்த்தார்கள். அது குறிப்பிட்ட பகுதி வாசகர்களைத் தாண்டிச் செல்லவில்லை. ஒரு தெருவில் ஒருவர் மருந்துக்கடை வைத்தால், அதன் அருகிலேயே இன்னொரு மருந்துக்கடை முளைக்கிற மாதிரி, ஒவ்வொரு பெரிய பேனர் பத்திரிகையும் தேர்ந்த இலக்கியக்காக தனிப் பத்திரிகை என்று ஆரம்பிக்க வியாபாரம் டல்லடிக்க ஆரம்பித்தது.
அதைவிட ஒரே கூரையின் கீழ் எல்லா சமாச்சார்களையும் அடைக்கலாம் என்று வெகுஜன வாசிப்புக்கு ஏற்ற மாதிரி மசாலா தூவி எல்லாவகைகளும் இப்பொழுது பவனி வர ஆரம்பித்திருக்கின்றன.
சந்தா கட்டுவது என்பது நம்மை அவர்களிடம் இழக்கிற காரியம். அதை விட நல்ல விஷயகனமுள்ள பத்திரிகைகளை மாற்றி மாற்றி ஊக்குவிப்பதே மேலான காரியம் என்று நினைப்பு மேலிட்டாலும், மஞ்சரி (தமிழின் ரீடர்ஸ் டைஜஸ்ட்) மாதிரி இப்பொழுது ஏதாவது பத்திரிகை இருக்கிறதா, சொல்லுங்கள்..
Post a Comment