மின் நூல்

Monday, November 21, 2016

விகடனில் புதிய வரலாற்றுத் தொடர்


 காவல்கோட்டம்’ நாவலுக்காக சாகித்ய அகாதமி பரிசு  பெற்ற எழுத்தாளர்  சு. வெங்கடேசனின் புதிய வரலாற்றுத் தொடர்கதை  சமீபத்தில்  ஆனந்த விகடன்  இதழில் துவங்கியுள்ளது.  

‘வீரயுக நாயகன் வேள் பாரி’ என்றுத் தலைப்பிட்டிருப்பதால்  பரம்பு மலையை ஆண்ட  கடையெழு வள்ளல்களில் புகழ்பெற்றவரான பாரி வள்ளலை  நாயகனாகக் கொண்ட நாவல் என்று தெரிகிறது.


‘பாணர்களின் நாயகன்’ என்றுத் தலைப்பிட்ட  அத்தியாயத்தின் தொடக்க வரியே இப்படி ஆரம்பிக்கிறது


இது சுமார் முன்னூறு ஆண்டுக்காலக் கதை.  

அப்போது வடவேங்கடம், தென் குமரி என்று தமிழ் நிலத்திற்கு எல்லையோ, பெயரோ கூட உருவாகிவிடவில்லை.  


அடர்ந்த வனத்தில், ஆற்றுப்படுகையில், வண்டல் பூமியில், வற்றிய பாலையில், கடலோரத்தில், மலைமுகட்டில் என வெவ்வேறு வகையான நிலங்கள் தோறும் இனக்குழுக்காளாக சேர்ந்து வாழ்ந்த மக்கள் தங்கள் குல முறைப்படியான வாழ்வை நடத்திக் கொண்டிருந்தனர்.  அரசோ, அரசனோ உருவாகிவிடவில்லை.  குலத்தலைவன் மட்டுமே இருந்தான்.  அவனே குலங்களை வழி நடத்திக் கொண்டிருந்தான்.


குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என ஐவகை நிலங்களிலும் நூற்றுக்கு மேற்பட்ட மனிதக் கூட்டங்கள் தங்களின் தனித்த அடையாளங்களோடு செழித்திருந்தன.   இயற்கையோடு இயந்த வாழ்வு. தேவை மட்டுமே ஆசையாகவும் கனவாகவும் இருந்தது...  வேட்டையாடிய உணவை நெருப்பில் சுட்டு  தின்று கொண்டிருந்த போது, குகையில் இருந்த பெண்கள் ஓய்வு நேரத்தில் நீரைக் கொதிக்க வைத்து இறைச்சியை அதில் வேக வைத்தனர்...


----என்று ஆதிமனித குகை வாழ்க்கை  பழைய கற்காலத்திலிருந்து ஆரம்பித்து,


குலத்தலைவர்களும் சிற்றரசர்களும் பாணர் சமூகத்தை அரவணைத்து அள்ளித் தந்தனர். அவர்களின் ஆற்றலையும் வள்ளல் தன்மையையும் பாணர்கள் விடாமல் பாடினர்.


இப்போது வள்ளல்களில் தலைநாயகனாக பறம்பு நாட்டை ஆளும் வேள்பாரி இருந்தான்.


---- என்று பாரிவள்ளல் 
 காலத்திற்கு  ஆசிரியர் வருகிறார்.

பல  தடவைகள்  திருப்பித் திருப்பி வாசித்தும் ஆசிரியர் குறிப்பிடும் அந்த முன்னூறு ஆண்டுக் கதைக் காலம்  எதுவென்று புரிந்து கொள்ள முடியவில்லை.

நம் பதிவர் குடும்பத்தில் வரலாற்று நூல்களை வாசிப்போர் எக்கச்சக்கம்.


தெரிந்தவர்கள்,  புரிந்தவர்கள் பின்னூட்டமிட்டு என் வாசிப்பு ரசனைக்கு உதவலாம்.



து  லா.ச.ராவின்  நூற்றாண்டு.

லா.ச.ரா.  அம்பாள் உபாசகர்.   அம்பாளில் தாயார் தரிசனம்.   அவரைப் பொறுத்தமட்டில் அத்தனையுமே சிலிர்ப்பூட்டும் அனுபவங்கள்.  சகுந்தலை,  அபிதா, தரிசினி,  ஜனனி, தயா, அஞ்சலி,  கங்கா என்று வித்விதமான நாமங்களில் வர்ணக் கோலங்கள்.   

அடிப்படையில் நான் செளந்தரிய உபாசகன் என்று லா.ச.ரா.வே சொல்லியிருக்கிறார்.  அவர் எழுத்தின் ஆழ்ந்த வாசிப்பும் ஏதோ சக்தி பூஜையை ஆரம்பித்து முடித்தது போல இருக்கும்.  அவர் கதைகளின் வாசிப்பின் ஊடே உள்முக தரிசனமாய்  மீண்டும் மீண்டும் ஒருவித லய சுத்தத்துடன் புரண்டு வரும் வார்த்தைகளுக்கும்  மந்திர உச்சாடங்களுக்கும் வேறுபாடு காண முடியாத நெருக்கத்தில் இருக்கும்.  

ல.ச.ரா.விற்கு  சடங்களிலோ, சம்பிரதாயங்களிலோ துளியும் 
 நம்பிக்கை இருந்ததில்லை என்று அவர் துணைவியாரே சொன்னதாக சமீபத்தில் ஒரு பத்திரிகைப் பேட்டியில்  படித்தது ரொம்ப நாட்களாக உறுத்தலாக இருந்தது.  ஏனென்றால்  சடங்குகளையும் சம்பிரதாயங்களையும்  சுற்றிச் சுற்றி நெய்யப்பட்டதாகவே லா.ச.ரா.வின் எழுத்து இருந்தது..  குடும்ப வட்டத்தை விட்டு வெளிவராத எழுத்தில் பூஜைகள்,  குத்து விளக்கு, தீபச்சுடர், அதன் குதியாட்டம்,  மந்திர உச்சாடனங்கள் போன்ற வார்த்தைத் தெரிப்புகள் என்று பக்கத்திற்குப் பக்கம் பின்னலிடப்பட்டிருந்தன.   சடங்குகளில் அவருக்குத் துளியும்  நம்பிக்கை இல்லை என்பது நினைத்தே பார்க்க முடியாத ஒன்று.   அப்படி இருக்குமேயானால் தனக்கு கொஞ்சமும் நம்பிக்கையில்லாத ஒன்றை வாழ்நாள் முழுதும் கதைக்காக கதை பண்ணினவராய் ஆகிப்போவார். .   லா.ச.ராவின் எழுத்துக்கள் அவாது உணர்வில் புடம்போடப்பட்டு விதிர்விதிர்த்து வார்த்தைகளானவை.   அதனால் அப்படி இருப்பதற்கு வாய்ப்பே இல்லை.

ஒரு பேட்டி என்பதினால்  பேட்டி எடுத்தவரின் புரிதலுக்கேற்ப வார்த்தைகள் மாறுபடுவதற்கு

வழியிருக்கிறது.  நான் அப்படிச் சொல்லவே இல்லை என்று பேட்டி வெளிவந்த  பிறகு  பேட்டி கொடுத்தவர் சொன்ன உதாரணங்களையும் நாம் நிரம்பவே பார்த்து விட்டோம்.  

'கல்கி'  நவம்பர் 6  இதழில்  லா.ச.ரா.வின்  புதல்வர் சப்தரிஷி  தன் தந்தையைப் பற்றி எழுதியிருக்கிறார்.  

வாலி  தலைமையில் ல.ச.ரா.வுக்கு ஒரு பாராட்டுக்கூட்டம்  நடந்ததாம்.   அப்போ ஒருத்தர் லா.ச.ரா.வைப் பார்த்து கேட்டாராம்.

"நீங்கள் ஏன் எழுதுகிறீர்கள்?'

"என்னால் எழுதாம இருக்க முடியலே.   அதனாலே எழுதறேன்.  நான்  மெதுவாக எழுதுபவன் தான்.  ஆனால் எழுதிக் கொண்டேயிருப்பவன்.  தெனம் சாதகம் பண்ணிண்டே இருக்கணும்.."

ஆமாம்.  லா.ச.ரா.  மிகவும் மென்மையானவர் தான்.  இப்படியெல்லாம் அச்சுப்பிச்சென்று கேள்வி கேட்பவர்கள் நாணும்படி  பதில் சொல்ல லாயக்கானவர் ஜெயகாந்தன் தான்.  

 'நீங்கள் ஏன் எழுதுகிறீர்கள்?' என்று ஜெயகாந்தனிடம் யாராவது கேட்டிருந்தால் சுரீரென்று  பதில்   வந்திருக்கும் என்று அந்த சந்தர்ப்பத்திற்கேற்ப  நினைத்துக் கொண்டே மேலே படித்தபோது எழுதுவது பற்றி லா.ச.ராவே ஜேகேயிடம் கேட்ட ஒரு சம்பவம் பற்றி சப்தரிஷி சொல்கிறார்.

கலைஞன் பதிப்பகம்  லா.ச.ரா., ஜெயகாந்தன், அசோகமித்திரன், சுந்தர ராமசாமி, கி.ரா.வுக்கு ரீடர் வெளியிட்ட விழாவில்  ஜெயகாந்தனிடம்  ல..ச.ரா.  கேட்டாராம். "என்னப்பா, இப்பல்லாம் உன் எழுத்தைக்  காண முடியறதில்லே?"

"எல்லாம் எழுதி முடிச்சாச்சு  லா.ச.ரா." என்றாராம் ஜே.கே.                

"என்ன நீ இப்படிச் சொல்றே? சரஸ்வதியே இன்னும் புஸ்தகத்தைக் கீழே போடாமே வெச்சிருக்காளேப்பா.." 

ஜெயகாந்தன் வாஞ்சையுடன் லா.ச.ரா.வின் கைகள் மேல் கைவைத்து, "வாஸ்தவம் தான்" என்றாராம்.

எழுத்தாளர்கள், கவிஞர்கள்  என்ற படைப்பிலக்கிய பிர்மாக்களிடம்  ப்ரேமை கொண்டவர்கள் யார் என்று கேட்டால்,  சட்டென்று அவர்களுக்கென்று அமைந்து போகும் வாசகர்கள் தான் என்று பதில் சொல்லி விடலாம்.

பத்திரிகைகளுக்கு  அந்தப் படைப்பிலக்கிய   ஆளூமைகளுடன்  அவர்கள் எழுத்து அந்தந்த பத்திரிகைகளில்  வெளிவரும்  காலத்தில் ஏற்படும் வியாபாரத்  தொடர்பாக இருக்கலாம். அதைத் தாண்டி தம் எழுத்தால் பத்திரிகையின்  சர்க்குலேஷனை உயர்த்திய,  அந்தந்த பத்திரிகைகளுக்கென்று அமைந்து  போன எழுத்தாளர்களை பத்திரிகைகளும் அவ்வளவாக நினைவில் வைத்துக்  கொண்டிருப்பதில்லை.   தம் பத்திரிகையோடு நெருக்கமாக  சம்பந்தப்பட்ட அமரான எழுத்தாளர்களின் நினைவு தினங்களில் அவர் புகைப்படம் போட்டு அவர் எழுத்தாற்றல் பற்றிக் குறிப்பிட்டு நினைவு கொள்ளலாம்.   இப்படிச் செய்வது எழுத்துத் தொடர்புள்ள  இந்தத் தலைமுறைக்கு அந்தத் தலைமுறையுடான ஒரு உறவுத் தொடர்பாகவும் அமையும்.   ஆனந்தவிகடன் என்றால் தேவனும்,  குமுதம் என்றால் ரா.கி.ரங்கராஜனும் நினைவுக்கு வருவது வாசகர்களுக்குத் தான் போலும்.  

பெரும்பாலான படைப்பாளிகளின் குடும்பத்தினருக்கு  அப்பா, தாத்தா, கணவன் என்று அந்தப் படைப்பாளியிடம் கொண்ட குடும்ப  உறவைத் தான் முக்கியமாக உணர்கிறார்கள். சில எழுத்தாள குடும்பங்களில் அலுவலகத்திற்குப் போய் சம்பாதிப்பது போல  எழுதுவதை ஒரு உத்தியோகமாக எண்ணுகிறார்கள்.  சம்பாதிப்பதற்கான ஒரு வழி இது என்று சில எழுத்தாளர்களே தங்கள் எழுத்தைப் பற்றி  நினைக்கும் பொழுது இதைப் பற்றிச் சொல்வதற்கு ஒன்றுமில்லை.     பிரபல சில எழுத்தாளர்களின் குடும்பத்தினர் அவர் எழுதிய எதையையும் படித்ததில்லை என்பது ஒன்றும் பிரம்ம ரகசியமில்லை.  சிலர் இதை வெளிப்படையாகவே சொல்கிறார்கள்.   

இதையெல்லாம் பார்க்கும்  அவர்களின் அத்யந்த  வாசகர்களுக்கு மனம்  வெறுத்துப் போகலாம்.  புத்தகம்,  வாசிப்பு,  அவை பற்றிய விமர்கசனங்கள்,  எண்ணங்கள் என்று தாம் தான்  புத்தி பேதலித்துத் திரிகிறோமொ என்ற எண்ணம் கூட வரலாம்.

ஆனால் அவையெல்லாம் ஷணநேர மயக்கங்கள்.  வாசிப்பை நேசிக்கும் எவர்க்கும் அந்த வாசிப்புப் பழக்கத்திலிருந்து விலகுவது அவ்வலவு லேசான காரியமில்லை.

போதைப் பழக்கங்களிலிருந்து   விடுபடுதல் அவ்வளவு சுலபமான காரியமில்லை என்று சொல்வார்கள்.   வாசிப்பை நேசிப்பதும் அது போல ஒன்று தான்.   வாசிப்பு ஆரோக்கியமான ஒரு போதைப் பழக்கம் என்று கூட செல்லமாக அதன் மேல் மேலான காதல் கொள்ளலாம்.



விகடனுக்கும்  கல்கிக்கும்  நன்றி. 
புகைப்படங்கள் நல்கிய நண்பர்களுக்கும் நன்றி.


24 comments:

வை.கோபாலகிருஷ்ணன் said...

//பிரபல சில எழுத்தாளர்களின் குடும்பத்தினர் அவர் எழுதிய எதையையும் படித்ததில்லை என்பது ஒன்றும் பிரம்ம ரகசியமில்லை. சிலர் இதை வெளிப்படையாகவே சொல்கிறார்கள்.

இதையெல்லாம் பார்க்கும் அவர்களின் அத்யந்த வாசகர்களுக்கு மனம் வெறுத்துப் போகலாம். புத்தகம், வாசிப்பு, அவை பற்றிய விமர்சனங்கள், எண்ணங்கள் என்று தாம் தான் புத்தி பேதலித்துத் திரிகிறோமோ என்ற எண்ணம் கூட வரலாம்.

ஆனால் அவையெல்லாம் ஷணநேர மயக்கங்கள். வாசிப்பை நேசிக்கும் எவர்க்கும் அந்த வாசிப்புப் பழக்கத்திலிருந்து விலகுவது அவ்வளவு லேசான காரியமில்லை.

போதைப் பழக்கங்களிலிருந்து விடுபடுதல் அவ்வளவு சுலபமான காரியமில்லை என்று சொல்வார்கள். வாசிப்பை நேசிப்பதும் அது போல ஒன்று தான். வாசிப்பு ஆரோக்கியமான ஒரு போதைப் பழக்கம் என்று கூட செல்லமாக அதன் மேல் மேலான காதல் கொள்ளலாம்.//

அருமையான கட்டுரை ..... முத்தான முடிவுரையுடன்.

பாராட்டுகள் + பகிர்வுக்கு நன்றிகள், ஸார்.

வை.கோபாலகிருஷ்ணன் said...

//தம் பத்திரிகையோடு நெருக்கமாக சம்பந்தப்பட்ட அமரரான எழுத்தாளர்களின் நினைவு தினங்களில் அவர் புகைப்படம் போட்டு அவர் எழுத்தாற்றல் பற்றிக் குறிப்பிட்டு நினைவு கொள்ளலாம்.//

மிகவும் நல்ல யோசனைதான்.

இதனை செயல்படுத்த முடியாததற்கு முக்கியக் காரணம் ... தம் பத்திரிகையோடு நெருக்கமாக சம்பந்தப்பட்ட அமரரான எழுத்தாளர்களைப் பற்றி முழுமையாக தெரிந்தும் அறிந்தும் உள்ள பத்திரிகை ஆசிரியர்களும் ஒருவேளை அமரர் ஆகி இருப்பார்களோ என்னவோ எனவும் நினைக்கத் தோன்றுகிறது.

நெல்லைத் தமிழன் said...

வெங்கடேசன், கபிலர், அவ்வை, அதியமான் போன்றவர்களெல்லாம் இருந்த காலத்தையும் சேர்த்து எழுதப்போகிறாரோ? இவைகளுக்குத்தான் இலக்கியக் குறிப்புகள் உண்டு. அவ்வை சமாதானம் செய்தது, நெல்லிக்கனி, அங்கவை சங்கவை..வள்ளல்தன்மை.. கடைச்சங்க காலமா (கடைஎழு வள்ளல்கள் காலம்). வித்தியாசமாகத்தான் இருக்கும்.

"ல.ச.ரா.விற்கு சடங்களிலோ, சம்பிரதாயங்களிலோ துளியும் நம்பிக்கை இருந்ததில்லை--- ஆனால் அவர் கதைகளில் அவைகள் இல்லாமல் இருந்ததில்லை" - சுஜாதா, பக்தி, கடவுள் இவைகளில் தனக்கு நம்பிக்கை இருப்பதாக எப்போதும் காண்பித்துக்கொண்டதில்லை. கடைசி காலத்தில் திருவரங்கம் சென்று வந்ததை எழுதியிருக்கிறார். அவருடைய மனைவி சுஜாதா அவர்கள், கணவர் பழைய வழக்கங்களில் நம்பிக்கை கொண்டவர் என்று அவர் மறைவுக்குப் பின் சொல்லியிருக்கிறார். 'ஒரு வேளை' இப்படி இருந்தால்.. என்பதுதான் அவர்கள் எழுத்தில் வெளிப்படுகிறதோ?

பத்திரிகைகளில், விகடன், சுஜாதாவையும் ஜெயகாந்தனையும் நினைவுகூர்ந்ததுபோல் தேவனையோ சாவியையோ (100வது ஆண்டில், அவரது சீடர் ரவிப்பிரகாஷ் நினைவுகூர்ந்தது தவிர) கொத்தமங்கலம் சுப்புவையோ அல்லது சில்பியையோ நினைவுகூர்ந்ததுபோல் தெரியவில்லை. ஒருவேளை அந்தக் கட்டுரைகளும் தற்போதைய வாசகர்களுக்குப் பிடிக்கும் என்பதால்தான் (சுஜாதா ரசிகர்கள், ஜெயகாந்தன் ரசிகர்கள்) வெளியிட்டிருக்கலாம்.

எழுத்து வேறு, எழுத்தாளன் வேறு. ஒரு எழுத்தாளன், ரொம்ப சிறப்பாகப் பணம் பண்ணுவதில்லை. அதனால் அவரது குடும்பம் அவருக்கு அவ்வளவு அனுசரணையாக இருந்திருக்க வாய்ப்புமில்லை. அதனால் அவருடைய எழுத்துக்களைப் படித்திருக்க, அதில் ஆழ்ந்திருக்க வாய்ப்பு குறைவு. இன்னொன்று, அருகில் எளிதாக இருக்கும் பொருளின் மதிப்பு எப்போதும் குறைவு. அவருடைய படைப்பினால் அவரால் குடும்பத்துக்குத் தேவையான பணம் சம்பாதிக்க இயலாவிட்டால், குடும்பத்தில் அவருடைய மதிப்பும் குறைவாகத்தான் இருக்கும்.

ஆனால், வாசகர்கள், எழுத்தாளனின் எழுத்தினால் கவரப்பட்டு, அவருடனே ஐக்கியமாகிறார்கள். அவர் சம்பந்தப்பட்ட செய்தி எல்லாவற்றிலும் ஈர்ப்பு கொள்கிறார்கள். என்னைப் பொருத்தவரையில், எழுத்தாளனை நேரில் சந்திக்காமல், அவருடன் பழகாமல் இருப்பதுவரைதான் இந்த ஈர்ப்பு இருக்கும். உள்ளும் புறமும் தெரிந்துகொள்வது அந்த mythஐக் கலைத்துவிடும்.

middleclassmadhavi said...

//போதைப் பழக்கங்களிலிருந்து விடுபடுதல் அவ்வளவு சுலபமான காரியமில்லை என்று சொல்வார்கள். வாசிப்பை நேசிப்பதும் அது போல ஒன்று தான். வாசிப்பு ஆரோக்கியமான ஒரு போதைப் பழக்கம் என்று கூட செல்லமாக அதன் மேல் மேலான காதல் கொள்ளலாம்.//
மிக்க உண்மை!! :-)
லா ச ராவின் எழுத்துக்கள் மீண்டும் மீண்டும் படிக்க உள்ளார்ந்த அர்த்தங்கள் புலப்படுவதை உணர்ந்திருக்கிறேன்.

வே.நடனசபாபதி said...

அந்த முன்னூறு ஆண்டுக் கதைக் காலம் எதுவென்று அறிந்துகொள்ள நானும் ஆவலாயிருக்கிறேன்.

திரு லா.சா.ரா அவர்கள் பற்றி சொல்லும்போது நீங்கள் ஏன் எழுதுகிறீர்கள்?' என்று ஜெயகாந்தனிடம் யாராவது கேட்டிருந்தால் சுரீரென்று பதில் வந்திருக்கும் என்ற வரிகளைப் படித்தபோது எனக்கு எழுத்தாளர் ஜெயகாந்தன் அவர்கள் எப்போதுமே தனது கருத்தை துணிவுடன் வெளிப்படையாக சொல்பவர் என்று காலஞ்சென்ற என் அண்ணன் சபாநாயகம் சொல்லியது நினைவுக்கு வருகிறது.

என் அண்ணன் அவருடன் நெருங்கிப் பழகுமுன் அவரை முதன்முதல் சந்தித்தது 1962ல் அரியலூரில் நடைபெற்ற ‘கலை இலக்கியப் பெருமன்ற’ ஆண்டு விழாவிலாம். அந்த விழாவிற்கு திரு.ஜெயகாந்தன் அவர்கள் சிறப்புரையாற்ற அழைத்திருந்தார்களாம். அந்த விழாவில் என் அண்ணன் தலைமை தாங்கி பேசும்போது “திரு.ஜெயகாந்தன் அவர்கள் புதுமைப்பித்தனுக்குப் பிறகு நமக்குக் கிடைத்த அரிய எழுத்தாளர். புதுமைப்பித்தனைப் போலவே அற்புதமாக எழுதுகிறார்” என்று பாராட்டியிருக்கிறார். . திரு ஜெயகாந்தன் அவர்கள் தனது உரையில், “திரு.சபாநாயகம் அவர்கள் நான் புதுமைப்பித்தனைப் போல எழுதுவதாகச் சொன்னார். இல்லை! நான் புதுமைப்பித்தனை விடவும் மேலாக எழுதுகிறேன். புதுமைப்பித்தனைப் போல எழுதுவதற்கு இன்னொருவர் எதற்கு? நான் ஜெயகாந்தனாக எழுதுகிறேன்.’ என்று பதிலடி கொடுத்தார் என்று என் அண்ணன் சொல்லக் கேட்டிருக்கிறேன்.

‘தம் எழுத்தால் பத்திரிகையின் சர்க்குலேஷனை உயர்த்திய, அந்தந்த பத்திரிகைகளுக்கென்று அமைந்து போன எழுத்தாளர்களை பத்திரிகைகளும் அவ்வளவாக நினைவில் வைத்துக் கொண்டிருப்பதில்லை.'

வேதனையான செய்தி. சில இதழ்கள் அந்த எழுத்தாளர்களுடைய படைப்புகளை அவர்கள் உயிரோடு இருக்கும்போது நூல்களாக வெளியிட அனுமதிக்கவில்லை என்பதும் வருத்தப்படக் கூடிய மேலதிகத் தகவல். உயிரோடு இருக்கும்போதே கௌரவிக்காத அந்த இதழ்கள் அமரர்களான அந்த எழுத்தாளர்களின் நினைவு தினங்களில் அவர்களின் புகைப்படத்தைப் போட்டு அவர்களின் எழுத்தாற்றல் பற்றிக் குறிப்பிட்டு நினைவு கொள்வார்கள் என்பது ஐயமே.

ஸ்ரீராம். said...

நான் சொல்ல நினைத்த 99% கருத்துகளை நெல்லைத்தமிழன் சொல்லி விட்டார். அவரது கருத்துதான் எனக்கும்.

மறுபடியும் வலியுறுத்திச் சொல்ல விழைவது எழுத்தாளனின் எழுத்தை மட்டும் ரசிக்க வேண்டுமே தவிர, அவர்களை நெருங்கிப் பார்ப்பது நல்லதல்ல. அதே போல எழுத்தாளர்கள் தமது சொந்தக் கருத்தைத்தான் எழுதவேண்டும் என்றும் எதிர்பார்ப்பது சரியல்ல. அவர்கள் என்ன பிரச்சாரமா செய்கிறார்கள், தங்கள் கருத்தை மட்டுமே எழுதுவதற்கு? எல்லாவற்றைப் பற்றியும் கலந்துதான் எழுதுவார்கள்.

தனது நிலைப்பாட்டுக்கு எதிரான மனநிலையில் எழுதுவது சிலபேர்களிடம் இருக்கிறது என்றே தோன்றுகிறது.

திரு வே நடனசபாபதி சொல்லியிருக்கும் சம்பவம் சுவாரஸ்யம்.

கோமதி அரசு said...

/தம் பத்திரிகையோடு நெருக்கமாக சம்பந்தப்பட்ட அமரரான எழுத்தாளர்களின் நினைவு தினங்களில் அவர் புகைப்படம் போட்டு அவர் எழுத்தாற்றல் பற்றிக் குறிப்பிட்டு நினைவு கொள்ளலாம்.//


http://s-pasupathy.blogspot.in

பசுபதிவுகள் என்று வலைத்தளம் வைத்து இருப்பவர் உங்களை போல் பழைய எழுத்தாளர்கள் நினைவு தினத்தில் பதிவுகள் போட்டு எழுத்தாளர்களை நினைவு கூர்கிறார்.

ஜீவி said...

@ வை. கோபாலகிருஷ்ணன்

//இதனை செயல்படுத்த முடியாததற்கு முக்கியக் காரணம் ... தம் பத்திரிகையோடு நெருக்கமாக சம்பந்தப்பட்ட அமரரான எழுத்தாளர்களைப் பற்றி முழுமையாக தெரிந்தும் அறிந்தும் உள்ள பத்திரிகை ஆசிரியர்களும் ஒருவேளை அமரர் ஆகி இருப்பார்களோ என்னவோ எனவும் நினைக்கத் தோன்றுகிறது.//

நகைச்சுவையாகச் சொல்லியிருக்கிறீர்கள் போலிருக்கு.

யார் அமரரானாலும் அவருக்காக ஆவணமான வரலாறுகள் இறப்பில்லாமல் வாழ்ந்து கொண்டிருக்கின்றன. பத்திரிகையுலக வரலாறும் அப்படியான ஒன்று தான்.

எது எப்படியாயினும் பத்திரிகை உலகக் கல்வி என்பது வரலாறு படைத்திட்ட தமிழ் எழுத்தாளர்களைப் பற்றியும் தெரிந்திருக்க வேண்டிய கல்வியும் ஆகும். எந்தப் பத்திரிகையுடனும் சம்பந்தப்பட்டவர்களுக்கு அந்தப் பத்திரிகையின் வரலாறு பற்றியாவது குறைந்தபட்சம் தெரிந்திருக்க வேண்டும் என்பதும் அந்தக் கல்வியின் பாடதிட்டங்களில் ஒன்று.

அமரர் ஆர்.எம்.அழகப்ப செட்டியாரை கெளரவ ஆசிரியராகக் கொண்டு அவர் பெயரை அட்டைப்பக்கத்தில் பத்திரிகையின் பெயருக்குக் கீழே பிரசுரித்து ஆரம்ப காலங்களில் 'குமுதம்' பத்திரிகை வெளிவந்து கொண்டிருந்தது. வள்ளல் செட்டியார் அவர்கள் நினைவு தினம் வரும் சமயத்தில் வெளியாகும் இதழில் அவர் சிறப்புகள் பற்றி ஒரு கட்டுரையும் தவறாது வெளியாகும். அந்த வர்லாற்று நிகழ்வு இப்பொழுது நினைவுக்கு வருகிறது.

முத்தான முடிவுரையுடன் என்ற தங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றி கோபு சார்.

ஜீவி said...

@ நெல்லைத் தமிழன்

//வெங்கடேசன், கபிலர், அவ்வை, அதியமான் போன்றவர்களெல்லாம் இருந்த காலத்தையும் சேர்த்து எழுதப்போகிறாரோ? //

நானும் அப்படித்தான் முதல் வாசிப்பில் நினைத்தேன், நெல்லைத் தமிழரே!

ஆனால் வாசித்த வாசிப்பில் மனம் நிறைவு கொள்ளவில்லை.

இது சுமார் முன்னூறு ஆண்டுக்காலக் கதை. அப்போது வடவேங்கடம், தென் குமரி 'என்று தமிழ் நிலத்திற்கு எல்லையோ, பெயரோ கூட உருவாகிவிடவில்லை.' என்ற வரி மேலும் நெருடலைக் கொடுத்தது.

'வட வேங்கடம் தென்குமரி ஆயிடை தமிழ் கூறும் நல்லுலகத்து' என்னும் வரி தொல்காப்பிய எழுத்ததிகார சிறப்புப் பாயிரத்திலேயே பதியப்பட்டு உள்ளதால், வள்ளல் பாரி காலத்தை 'அந்த முன்னூறு ஆண்டுக்காலக் கதையாக' கதாசிரியர் குறிப்பிடவில்லை என்று தெரிகிறது.

ஜீவி said...

@ நெல்லைத் தமிழன் &
ஸ்ரீராம்

1. கீழை பழங்கற்காலம் என்பது கி.மு. 15 லடசம் ஆண்டுகளுக்கும் முற்பட்ட காலம்.

2. தொல்காப்பிய காலம் என்பது கி.மு. 711 என்று வரலாற்று ஆய்வாளர்கள் உலக செம்மொழி மாநாட்டொ; ஆய்வுகள் சமர்ப்பித்துள்ளனர்.

3. வள்ளல் பாரி காலம் கடைச்சங்க காலத்தவர். கடைச்சங்க காலம் கி.மு.200-ல் தொடங்கி கி.பி.250 வரையிலான காலம் என்று சொல்லலாம்.

-- இந்த குறிப்புகளை வைத்து--

'இது சுமார் முன்னூறு ஆண்டுக்காலக் கதை.

அப்போது வடவேங்கடம், தென் குமரி என்று தமிழ் நிலத்திற்கு எல்லையோ, பெயரோ கூட உருவாகிவிடவில்லை'.

-- என்று ஆசிரியர் குறிப்பிடுவதைக் கண்டு பிடிக்க முடியுமா பாருங்கள்.

ஜீவி said...

@ நெல்லைத்தமிழன்

//"ல.ச.ரா.விற்கு சடங்களிலோ, சம்பிரதாயங்களிலோ துளியும் நம்பிக்கை இருந்ததில்லை--- ஆனால் அவர் கதைகளில் அவைகள் இல்லாமல் இருந்ததில்லை" - சுஜாதா, பக்தி, கடவுள் இவைகளில் தனக்கு நம்பிக்கை இருப்பதாக எப்போதும் காண்பித்துக்கொண்டதில்லை//

சகட்டு மேனிக்கு எல்லா எழுத்தாளர்களையும் ஒரே வட்டத்திற்குள் அடைக்காதீர்கள்.

சுபாவும் எழுத்தாளர்கள் தாம்; சுஜாதாவும் எழுத்தாளர் தாம். இரண்டு பெருமே பொழுது போக்கு எழுத்தாளர்கள் தாம் எனினும் இரு தரப்பார்க்கும் பல வேறுபாடுகள் உண்டு..

ல.ச.ரா.-- தமிழின் எல்லா எழுத்தாளர்களிடமிருந்தும் வித்தியாசப்பட்டவர்.

அவரை ஒவ்வொரு ஷணமும் ஆட்கொண்ட உணர்வே அவரின் எழுத்தாயிற்று. எழுதிக் கொண்டே வருகையில் எழுத்தின் நடுவே முக்கோணங்கள், கோலங்கள், தாமரை இதழ்கள் என்று படங்கள் வரைந்து நீங்கள் பார்த்திருக்கிறீர்களா?.. இதெல்லாமே அவர் உணர்வின், உணர்ந்ததின் வெளிப்பாடுகள். யந்திரம், மந்திரம், தந்திரம் போன்ற சக்தி பூஜை சமாச்சாரங்கள் போல்.

// எழுத்து வேறு; எழுத்தாளன் வேறு..//

இதெல்லாம் வெற்று பொழுது போக்கு எழுத்தாளர்களுக்குப் பொருந்தும். பத்திரிகை விரும்பும் எதையும் இவர்களால் எழுதித் தர முடியும். இவர்களைப் பற்றியெல்லாம் எழுத நினைப்பதே வேஸ்ட்.

ஒரு நல்ல எழுத்தாளனால் தன் மனதை விரோதித்துக் கொண்டு எதையும் எழுத முடியாது.
அதாவது தானே தன் எழுத்தாய் இருப்பவன் அவன்.

அதனால் தான்--

பல வேடிக்கை மனிதர்கள் போல நான் வீழ்வேனென்று நினைத்தாயோ -- என்று பாரதியால் குரல் கொடுக்க முடிந்தது.

நெல்லைத் தமிழன் said...

ஜீவி சார்... நீங்கள் எழுதிய பதிலைப் படித்தபின், லா.ச.ரா கதை ஒன்றை (பாற்கடல்) தேடிப் படித்தேன். ரொம்ப நல்லா இருந்தது. இன்னும் சிலவற்றைத் தேடிப் படிப்பேன். சிவசங்கரி அவர்களும் பாலங்கள் என்ற கதை எழுதியிருக்கிறார். கால மாறுபாடு எழுத்தாளர்களின் எழுத்தில் இருக்கத்தானே செய்யும். எழுத்து, அனுபவம், கற்பனை, காலம், சூழல் ஆகியவற்றின் கலவையல்லவா? ரசனையும் காலவர்த்தமாறத்திள்கு உட்பட்டதல்லவா? எழுத்துக்கள் காலத்தை வென்று நிற்க இயலுமா? நான் சொல்வது நாவல் போன்ற வெகுஜன எழுத்துக்கள். துப்பறியும் சாம்புவையோ, வாஷிங்டனில் திருமணத்தையோ, பாற்கடலையோ வரும் தலைமுறை ரசிக்க முடியுமா? மனதை விரோதித்துக்கொண்டு எழுத்தாளனால் ஏன் எழுதமுடியாது? அவனுடைய கதாபாத்திரங்களும் அவனைப்போல் இருக்கத் தேவையில்லையல்லவா? poetic justice என்பது எல்லாக் காலங்களுக்கும் எல்லா எழுத்தாளர்களுக்கும் எல்லா எழுத்துக்கும் பொருந்துமல்லவா? நீங்கள் சொல்லவந்ததை நான் சரியாகப் புரிந்துகொள்ளவில்லையா?

வை.கோபாலகிருஷ்ணன் said...

//*இல்லை! நான் புதுமைப்பித்தனை விடவும் மேலாக எழுதுகிறேன். புதுமைப்பித்தனைப் போல எழுதுவதற்கு இன்னொருவர் எதற்கு? நான் ஜெயகாந்தனாக எழுதுகிறேன்.*//

மிகவும் அழகாகவும், ஆவேசமாகவும், ஆணித்தரமாகச் சொல்லியுள்ளார், எழுத்தாளர் திரு. ஜெயகாந்தன், அவர்கள். இது போன்ற எண்ணம் ஒவ்வொரு எழுத்தாளருக்குமே இருக்க வேண்டும். இன்னும் சொல்லப்போனால் அவரவர் பாணியில் அவரவர் எழுதிக்கொண்டே போக வேண்டும். அவ்வாறு எழுதிச்செல்லும் ஒரு எழுத்தாளர் மற்ற பிரபலங்களின் படைப்புகளைப் படிக்க வேண்டும் என்ற அவசியமேகூட இல்லை என்பதே என் கருத்து. அதனாலேயே நான் எந்தப் பிரபலங்களின் படைப்புகளையும் இதுவரைத் தேடி வாங்கிப் படித்ததே இல்லை. பொழுதுபோகாதபோது ஏதாவது ஒன்றிரண்டு அகஸ்மாத்தாக என்னால் படிக்க நேரிட்டிருக்கலாம். நான் எழுதியவையெல்லாமே என் போக்கில் என்னால் எழுதப்பட்டவை மட்டுமே என்பதையும் இங்கு குறிப்பிட்டுச் சொல்லிக்கொள்கிறேன்.

*இதனை இங்கு பகிர்ந்துகொண்ட திரு. வே. நடனசபாபதி அவர்களுக்கு என் நன்றிகள்.*

ஜீவி said...

@ நெல்லைத் தமிழன்

//நீங்கள் சொல்லவந்ததை நான் சரியாகப் புரிந்துகொள்ளவில்லையா?.. /

இல்லை, நண்பரே! சரியாகப் புரிந்து கொள்வதால் தான் நாம் தொடர்ந்து பேசிக் கொண்டிருக்கிறோம்.

சில விஷயங்களில் சிலருக்குத் தீவிரமான பிடிப்பு உண்டல்லவா?.. அப்படியானவர்களுக்கு அப்படியான விஷயங்களில் தான் கொண்டுள்ள பிடிப்புக்கு எதிராக பேசவோ எழுதவோ முடியாது. அந்தப் பிடிப்பை நீங்கள் கொள்கை, கோட்பாடு, நேசிப்பு, ஈடுபாடு என்று எப்படி வேண்டுமானாலும் வியாக்கியானம் கொள்ளலாம்.

அந்தப் பிடிப்பு என்பது மனம் கொள்ளும் ஒரு செயல். அதனால் மனத்தை விரோதித்துக் கொண்டு எழுத முடியாது என்றேன். சரியா?..

காலத்தின் கோலங்களுக்கு ஏற்ப இந்த மாதிரியான கொள்கை, கோட்பாடு, நேசிப்பு, ஈடுபாடு எல்லாம் ஒருவரிலேயே வெவ்வேறு நிலைகளுக்கு மாறலாம். அப்படியான சமயங்களில் மாறிய நிலைகளுக்கு ஏற்ப அவர் கொள்ளும்பி டிப்பும் மாறுகிறது. அதற்கேற்ப மனவியல்புகளும் மாறுகின்றன. அப்பொழுதும் மாற்றமடைந்த அந்த மனதை விரோதித்துக் கொண்டு பேசவோ எழுதவோ அப்படியானவர்களால் முடியாது.

இதை எல்லா நிலைகளிலும் மனதுக்கு உண்மையாக இருத்தல் என்றும் சொல்லலாம். மனசுக்கு உண்மையாக இருத்தல் என்பது மனம் ஒன்று தான் ஒன்று என்று செயல்படத் தெரியாதவர்களாய் இருப்பார்கள் என்று சொல்லலாம். இப்படி மனசுக்கு உண்மையாக இருப்பவர்கள் புண்ணிய பிறவிகள். பெரும்பாலும் எல்லோராலும் புரிந்து கொள்ள முடியாதவர்கள். மோலோட்டமாகப் பார்க்கும் பொழுது இவர்கள் கருத்துக்களில் முரண்படுகிறவர்கள் போலத் தோன்றும். ஞானசூன்யங்கள் இவர்களைப் பச்சோந்தி என்பார்கள்.

கவிஞர் கண்ணதாசனை எடுத்துக் கொள்ளுங்கள். இந்த மனதை விரோத்தித்துக் கொள்ள முடியாமைக்கு நல்ல உதாரணம். நாத்திகராய் இருந்த பொழுதும் சரி, ஆத்திகராய் மாற்றம் கொண்ட பொழுதும் தன் மனசுக்கு விரோதமில்லாமல் பேசி, எழுதிய மாமனிதர்.

ஜெயகாந்தனும் அப்படித்தான். எளியோர்கள் மத்தியில் வாழ்ந்து இடதுசாரி எண்ணங்களில் திளைத்த பொழுது 'டிரெடில்' போன்ற சிருகதைகளை அவரால் எழுத முடிந்தது. அந்தப் பிடிப்பு தளரும் பொழுது 'சில நேரங்களில் சில மனிதர்கள்' பிரப பாத்திரப்படைப்பும், பிரபுவின் செயல்களுக்காக நியாயம் கற்பிக்கும் மனசும் அவரில் அமைகிறது.

மனம் ஒன்றே மனிதனைப் பிரதிநிதிதுவப்படுத்துவது. மனத்திற்காக வாழ்வதே ஒவ்வொருவரின் வாழ்க்கையாக அமைகிறது. அதனால் மனதை விரோதித்து வாழ்தல் என்பது தன்னை விரோதித்து வாழ்தல். தன்னை விரோதித்துக் கொண்டு தான் வாழ்தல் வாழ்க்கையும் ஆகாதுல். அதனால் அப்படிப்பட்ட வாழ்வை ஞானவான்கள் நினைத்தே பார்க்க மாட்டார்கள். அதனால் அவர்களின் எழுத்தும் பேச்சும் அவர்களாகவே அமைகிறது.

இப்பொழுது ஸ்ரீராம் தன் பின்னூட்டத்தில் சொல்லியிருக்கும்---

'அதே போல எழுத்தாளர்கள் தமது சொந்தக் கருத்தைத்தான் எழுதவேண்டும் என்றும் எதிர்பார்ப்பது சரியல்ல. அவர்கள் என்ன பிரச்சாரமா செய்கிறார்கள், தங்கள் கருத்தை மட்டுமே எழுதுவதற்கு?' என்னும் வரிகளைப் பொருத்திப் பாருங்கள்.

எதிரும் புதிருமான இரண்டு எல்லைகளும் தெளிவாகப் புரியும்.

அப்புறம்? 'அந்த முன்னூறு ஆண்டு கதைக் கால' விஷயம் பற்றி யோசித்தீர்களா?..

அன்புடன்,
ஜீவி




















ஜீவி said...

@ நெல்லைத் தமிழன்

//எழுத்தாளனை நேரில் சந்திக்காமல், அவருடன் பழகாமல் இருப்பதுவரைதான் இந்த ஈர்ப்பு இருக்கும். உள்ளும் புறமும் தெரிந்துகொள்வது அந்த mythஐக் கலைத்துவிடும். //

உள்ளும் புறமும் ஒன்றாய் இருக்கிற யாரையும் சந்திப்பது, பழகுவது நம் வாழ்க்கைக்கு பயன் பயப்பது.

'நம்மைப் போலவே எண்ணம் இருப்பவரைத் தான் நமக்கும் பிடிக்கும்' என்பது பொதுவான ஒரு மன இயல் ரீதியான கருத்து. ஓரளவு உண்மையும் கூட.

ஆடியில் உங்களை நீங்களே பார்த்துக் கொள்வது போல, உங்களையே போலவான சிந்தனை உள்ள இன்னொருவரை சந்திப்பது, அவருடன் நட்பு கொள்வது எல்லாம் பிடித்துப் போகும்.

என் வாலிப வயதில் ஜே.கே-யைச் சந்தித்த பொழுதெல்லாம் நான் உணர்ந்தது இது.

வாலிப வயது தாண்டி வளர்ந்து விட்ட சூழ்நிலையில் குரு-சிஷ்ய மனோபாவம் இல்லாமல் யாரிடமும் நட்பு கொள்வது சிந்தனை வளர்ச்சிக்கும் நட்புக்கும் மேன்மை பயக்கும்.

ஜீவி said...

@ Middle class Madhavi

லா.ச.ரா.வின் எழுதியவற்றைப் வாசிக்கையில் அவற்றின் அடிநாதமாய் புதைந்திருக்கும் உள்ளார்ந்த அர்த்தங்கள் புல்ப்படுவது பெரிய விஷயன். தங்களுக்கு அந்த பாக்கியம் கிடைத்ததில் மகிழ்ச்சி. இதையெல்லாம் எண்ணுகையில் லா.ச.ரா. தனக்காகத் தான் எழுதினார் போலிருக்கு.

லா.ச.ரா. வங்கி ஊழியராய் இருந்தவர். அவரும் மிடில் கிளாஸ் தான். ))) சொல்லப்போனால் நாம் எல்லோருமே மிடில் கிளாஸ் கூட்டம் தானே!

வாசித்துப் பின்னூட்டமிட்டதிற்கு நன்றி, சகோதரி!

ஜீவி said...

@ வே. நடனசபாபதி

'இது சுமார் முன்னூறு ஆண்டுக்கால கதை'!.. எது?.. புரியலையே, சார்!

ராகுல சாங்கிருத்தியாயன் எழுதிய 'வோல்காவிலிருந்து கங்கை வரை' நூலை வாசித்திருக்கிறீர்களா, சார்?.. இந்த அத்தியாயத்தின் தொடக்கத்தை வாசிக்கும் பொழுது சாங்கிருத்தியாயன் விவரிக்கும் பழைய கற்கால சரித்திரம் நினைவுகளில் படர்ந்தது. ஆனால் அந்தக் காலம் இலட்சக்கணக்கான ஆண்டுகளுக்கு முற்பட்டது.

'அப்போது வடவேங்கடம்-- தெங்குமரி என்று தமிழ் நிலத்திற்கு எல்லையோ பெயரோ கூட உருவாகி விடவில்லை' என்பதும் இந்த காலகட்டத்திற்குப் பொருத்தமானது தான்.
ஆனால் அது இலட்சக்கணக்கான ஆண்டுகளுக்கு முந்திய ஆதிமனிதன் வாழ்ந்த பழைய கற்காலம் ஆயிற்றே! முன்னூறு எங்கே வந்தது?.. எப்படி கணக்குப் போட்டாலும் புரியவில்லை!

ஜே.கே. பற்றிய வாசிப்பில் நானும் தங்கள் தமையனாரின் நினைவுகளில் மூழ்கிப் போனேன். நான் ஜெயகாந்தனை முதல் முதல் பார்த்தது, அரிவாள்--சுத்தியல் பொறித்த சிவப்பு வண்ணக்கொடி பட்டொளி வீசிப் பறக்க சிறிய மேடை போட்டு நடந்த அரசியல் பொதுக்கூட்டத்தில்! அது 1964-ம் ஆண்டு. தோழ்ர் சிரில் என்னுடன் தொலைபேசி இலாகாவில் புதுவையில் பணியாற்றியவர். எழுத்தாளர். வேந்தன் என்ற பெயரில் விகடனில் நிறைய உருவகக் கதைகள் எழுதியிருக்கிறார். ஜெயகாந்தனுக்கும் பழக்கமானவர். அவர் தான் முதன் முதல் என்னை ஜெயுகாந்தனுக்கு அறிமுகப்படுத்தி வைத்தார்.

அடுத்த ஆண்டே சென்னை ஹால்ஸ் ரோடில் அவர் குடியிருந்த வீட்டில் சந்தித்தேன். அதற்குப் பிறகு பல சந்திப்புக்கள். மேடையில் லேசாக அசைந்தபடி சிம்மக்குரலில் இடி இடிக்கிற மாதிரி அவர் முழங்கும் பொழுது தோழர் ஜீவாவைப் பார்ப்பது போலவே இருக்கும். 1965-ல் இந்தி திணிப்பு எதிர்ப்பு போராட்டம் பொழுது பவானியில் அவர் பேசிய பேச்சு மறக்கவே முடியாத ஒன்று. நாம் நேரில் சந்திக்கும் பொழுது பகிர்ந்து கொள்வோம். அந்தக் கூட்டம் நடந்த அன்று இரவு ஓட்டலில் தங்கியிருந்த அவரைச் சந்தித்து ஆனந்த விகடனில் வெளிவந்த அவரது முதல் குறுநாவலான 'உன்னைப்போல் ஒருவன்' பற்றி விவாதித்திருக்கிறேன். தோழர் ஜெயகாந்தன் பற்றி நிறைய நினைவுகள் நெஞ்சில் மோதுகின்றன. ஜே.கே. வெளிக்குத் தான் கொஞ்சம் கடுமையாக இருப்பது போலத் தெரிவாரே தவிர அவர் மனசு மிகவும் மென்மையானது என்று நெருக்கமானவர்களுக்குத் தெரியும். ஆரம்ப காலத்திலிருந்தே தனிநபர் சுதந்திரத்தை மிகவும் போற்றிய மனிதராக அவர் இருந்திருக்கிறார்.

ஜீவி said...
This comment has been removed by the author.
ஜீவி said...

@ ஸ்ரீராம்

//நான் சொல்ல நினைத்த 99% கருத்துகளை நெல்லைத்தமிழன் சொல்லி விட்டார். அவரது கருத்துதான் எனக்கும். //

நெல்லைத் தமிழன் அவர்களுக்கான என் பின்னூட்டங்களையும் படித்திருப்பீர்களே! இல்லையென்றால் படிது விடுங்கள்.

//மறுபடியும் வலியுறுத்திச் சொல்ல விழைவது எழுத்தாளனின் எழுத்தை மட்டும் ரசிக்க வேண்டுமே தவிர, அவர்களை நெருங்கிப் பார்ப்பது நல்லதல்ல.//

யாருக்கு நல்லதல்ல?.. எழுத்தாளருக்கா?.. இல்லை, வாசகருக்கா?.. எழுத்தாள வாசகனுக்கு அதான் சுவாரஸ்யம். தனக்குப் பிடித்த எழுத்தாளரிடமிருந்து கற்றுக் கொள்ளலாம்; அல்லது அவருக்குக் கற்றுக் கொடுக்கலாம்.

//தனது நிலைப்பாட்டுக்கு எதிரான மனநிலையில் எழுதுவது சிலபேர்களிடம் இருக்கிறது என்றே தோன்றுகிறது... //

அப்படியான எழுத்துக்கள் கடைந்தெடுத்த போலியாக் இருக்கும். நம்பித் தொலைத்து விடாதீர்கள்.

ஜீவி said...

@ கோமதி அரசு

அறிமுகத்திற்கு நன்றி,கோமதிம்மா. பசுபதிவுகள் பார்த்தேன். அவரைப் பின் தொடர பதிந்து கொண்டேன்.

//உங்களை போல் பழைய எழுத்தாளர்கள்...//

இங்கே தான் உதைக்கிறது.. அவர் வேறே மாதிரி.. நான் வேறே மாதிரி இல்லையா?..

தவிர, பதிவர்கள், வாசகர்களைச் சொல்லவில்லை நான். பத்திரிகைகள், தம் பத்திரிகையின் உயர்வுக்காக உழைத்த எழுத்தாளர்களை மறக்காது, அவர்களது நினைவு தினங்களிலாவது நினைவு கொள்ள வேண்டும் என்று சொன்னேன். ஒரு நன்றிக்காவது இதை அவர்கள் செய்ய வேண்டும்.

ஜெயா டிவியில், செய்திகளின் வாசிப்புக்கு இறுதியில் 'இன்று!..' என்று,

இன்றைய அதே தேதியில் நடந்த உலகளாவிய செய்திகளை சொல்வார்கள். அன்றைய தேதியில் நடந்த பழைய நிகழ்வுகளை நினைவு கூர்வதாக அது இருக்கும். அந்த மாதிரி
தம் பத்திரிகை சம்பந்தப்பட்ட எழுத்தாளர்களை அந்தந்த பத்திரிகைகள் நினைவு கூர்ந்தால் இன்றைய வாசகருக்கு வழிகாட்டக்கூடிய ஒரு தகவலாக அது இருக்கும் என்பதற்காகச் சொன்னேன்.

Bhanumathy Venkateswaran said...

லா.ச.ரா.வுக்கு இது நூற்றாண்டா? அடடா..! அவருடைய எழுத்துக்கள் மீது எனக்கு பக்தி. என்ன ஒரு எழுத்து! நெருப்பு என்று எழுதி இருப்பதை படித்தால் வாய் வெந்து போக வேண்டும் என்று சொன்னவரால் தான் நம்பாத விஷயங்களை எழுத முடியாது.

ஜீவி said...

@ Bhanumathy Venkateswaran

அமரர் லா.ச.ரா. அவர்களின் துணைவியார் 90 வயதைக் கடந்த பெரியவர். அவருக்கு என் நமஸ்காரங்கள். மற்ற எழுத்தாள மனைவிமார்கள் போல் இல்லாமல், லா.ச.ரா.வின் எழுத்துக்களில் தோய்ந்தவர். லா.ச.ரா.வின் எழுத்துக்களின் மேல் நம்மைப் போன்ற வாசகர்களுக்கே வாசிப்பைத் தாண்டியதான பக்தி இருக்குமானால், எந்த அளவுக்கு தன் கணவரின் எழுத்துக்களில் ஒன்றரக் கலந்து அதுவே உணர்வுப் பிழம்பாய் அவரில் செயல்பட்டிருக்கும் என்று சொல்லத் தேவையில்லை.

அந்தப் பேட்டியில் ஸ்பெஷ்டமாக இந்த வயதிலும் எந்த நினைவுப் பிழையுமில்லாமல் கோர்வையாகப் பேட்டி அளித்திருக்கிறார். அந்தப் பேட்டியின் குறிப்பிட்ட சராம்சத்தை என் நினைவுகளிலிருந்து நேரேட் பண்ணுகிறேன். வரிக்கு வரி அப்படியே இல்லை என்றாலும் அவர் சொல்ல வந்த விஷயம் இது தான்.

கணவர் உயிரோடு இல்லாத போது பெண்கள் பூவையும் பொட்டையும் இழக்கும் சம்பிரதாயம் தொடர்பாக வந்த பேச்சு இது. 'அவருக்கு இதிலெலாம் துளிக்கூட நம்பிக்கைக் கிடையாது. நான் இல்லாவிட்டாலும் பூவையும் பொட்டையும் நீ இழக்கக் கூடாது என்று சொல்லியிருக்கிறார். நான் பொட்டு வைத்துக் கொண்டிருக்கிறேன். பூ மட்டும் வைத்துக் கொள்ள மனம் இடம் கொடுக்கவில்லை' என்கிற அர்த்த்த்தில் பேட்டியில் வரிகள் வருகின்றன.

'இந்த மாதிரியான சம்பிரதாயங்களில், கைம்பெண்கள் இப்படித்தான் இருக்க வேண்டும் என்பது போன்ற சம்பிரதாயங்களில்-- லா.ச.ரா.விற்குத் துளியும் நம்பிக்கை இருந்ததில்லை' என்கிற விதத்தில் அர்த்தப்படுத்திக் கொள்ள வேண்டியது, அவருக்கு
ஒட்டுமொத்த சடங்குகளில் சம்பிரதாயங்களில் நம்பிக்கை இருந்ததில்லை என்று அர்த்தப்படுத்திக் கொள்கிற மாதிரி பேட்டியின் வரிகள் அமைந்து விட்டன. இதான் இத்தனை அனர்த்தங்களுக்கும் காரணம்.

அதனால் லா.ச.ரா. என்ற கலாபுருஷர், தாம் கொண்டிருந்த உணர்களின் பிரதிபலிப்பாய் தம் எழுத்தையும் உபாசித்த எழுத்துக்கலைஞர், தம் உணர்வுகளுக்கு எந்த பங்கமும் நேரிடாதவாறு தம் எழுத்தைப் படைத்து அதை வாசிக்க நமக்கெல்லாம் வழங்கினார் என்று பூரணமாய் நம்பலாம். அவரது எழுத்தை நேசித்த, நேசித்தலைத் தாண்டியதான பக்தி பூர்வமாய் அதை உண்ர்ந்த உங்களுக்கும், தான் நம்பாத எதையும் அவரால் எழுதவும் முடியாது என்று தீர்மானமாக பிரகடனம் பண்ணவும் முடிகிறது. சொல்லப்போனால் அவர் எழுதியதாகவேத் தெரியவில்லை. அவர் உணர்வுகளே அவர் எழுத்தாய் தம்மைத் தாமே சமைத்துக் கொண்டன என்பதே உண்மை.

லா.ச.ரா. என்ற அற்புத எழுத்தாளரின் எழுத்தின் மீது பக்திபூர்வ பிரேமை கொண்டவர்களின் ப்ரீதிக்காகத் தான் இவ்வளவும் எழுத நேரிட்டது. மன்னிக்கவும்.

Bhanumathy Venkateswaran said...

வணக்கம் ஐயா!

லா.ச.ராவின் நூற்றாண்டு விழாவை சொன்னதற்கு நன்றி!

சாதாரணமாக நான் பின்னூட்டங்கள் எழுதும் பொழுது முதலில் மனதில் தோன்றியதை எழுதி விடுவேன். பிறகு எடிட் செய்து, எடிட் செய்து பெரும்பாலானவற்றை குறைத்து முக்கியமான விஷயத்தை மட்டும் வெளியிடுவேன். அதனால் சில சமயங்களில் என் பின்னூட்டங்கள் கடுமையாக இருக்கிறதோ என்னவோ?

//இந்த மாதிரியான சம்பிரதாயங்களில், கைம்பெண்கள் இப்படித்தான் இருக்க வேண்டும் என்பது போன்ற சம்பிரதாயங்களில்-- லா.ச.ரா.விற்குத் துளியும் நம்பிக்கை இருந்ததில்லை' என்கிற விதத்தில் அர்த்தப்படுத்திக் கொள்ள வேண்டியது, அவருக்கு
ஒட்டுமொத்த சடங்குகளில் சம்பிரதாயங்களில் நம்பிக்கை இருந்ததில்லை என்று அர்த்தப்படுத்திக் கொள்கிற மாதிரி பேட்டியின் வரிகள் அமைந்து விட்டன. இதான் இத்தனை அனர்த்தங்களுக்கும் காரணம்.//

இத்தனை விரிவாக பதிவில் இல்லாததாலும், அவர் ஒரு நவராத்திரியின் பொழுது வெளி உலகோடு தன்னை முற்றிலும் துண்டித்துக் கொண்டு, தனி அறையில் கண்களை கட்டிக்க கொண்டு, காதுகளை அடைத்துக் கொண்டு, மௌன விரதமாக கடும் உணவு கட்டுப்பாட்டை விதித்துக் கொண்டு விரதம் அனுஷ்டித்ததை எழுதியிருந்தார். அப்படிப்பட்டவருக்கு சம்பிரதாயங்களில் நம்பிக்கை இல்லாமல் இருக்குமா? என்று தோன்றியது. லா.ச.ரா. என்னுடைய வணக்கத்துக்குரிய எழுத்தாளராக இருப்பதால் அதிகம் உணர்ச்சி வசப்பட்டு விட்டேன் போலிருக்கிறது.

//அவர் உணர்வுகளே அவர் எழுத்தாய் தம்மைத் தாமே சமைத்துக் கொண்டன என்பதே உண்மை.//

200% உண்மை!

//லா.ச.ரா. என்ற அற்புத எழுத்தாளரின் எழுத்தின் மீது பக்திபூர்வ பிரேமை கொண்டவர்களின் ப்ரீதிக்காகத் தான் இவ்வளவும் எழுத நேரிட்டது. மன்னிக்கவும்.//

அடடா! யாரை யார் மன்னிப்பது? உங்கள் வயதிற்கும், அனுபவத்திற்கும் முன் நான் ஒரு தூசு. என் ஆயிரம் தெண்டனிட்ட நமஸ்காரங்களை ஏற்றுக் கொள்ளுங்கள்.

ஜீவி said...

@ Banumathy Venkateswaran

//சாதாரணமாக நான் பின்னூட்டங்கள் எழுதும் பொழுது முதலில் மனதில் தோன்றியதை எழுதி விடுவேன். பிறகு எடிட் செய்து, எடிட் செய்து பெரும்பாலானவற்றை குறைத்து முக்கியமான விஷயத்தை மட்டும் வெளியிடுவேன். //

ஏறத்தாழ நானும் அப்படித்தான் சகோதரி! பிறர் மனம் புண்படக்கூடாதது என்பதில் மிகவும் அக்கறை எடுத்துக் கொள்வேன். அதானாலேயே திருமதி லா.ச.ரா. அவர்கள் பேட்டியில் சொல்லியிருந்த அந்த சம்பிரதாய விஷயத்தை வெளிப்படச் சொல்லாமல் எழுதியிருந்தேன். 'சடங்கு-சம்பிரதாயம்' என்று நாம் வழக்கமாக இரண்டையும் சேர்த்து சொல்வதினாலோ என்னவோ திருமதி லா.ச.ரா. சொல்லாத சடங்கும் சேர்ந்து கொண்டது.
அதனால் தான் 'ஒரு பேட்டி என்பதினால் பேட்டி எடுத்தவரின் புரிதலுக்கேற்ப வார்த்தைகள் மாறுபடுவதற்கு வழியிருக்கிறது' என்று கட்டுரையில் குறிப்பிட்டிருந்தேன்.
உங்கள் பின்னூட்டத்திற்காக பதிலை எழுதும் பொழுது திருமதி. லா.ச.ரா. அவர்களே என் மனசில் நிறைந்திருந்தார்கள். அதனால் இதையெல்லாம் விளக்கமாக எழுத வேண்டியிருக்கிறதே என்று வருந்தி அவரிடம் நான் மன்னிப்புக் கேட்டதாக எடுத்துக் கொள்ளுங்கள். உண்மையில் மனசிலிருந்து வெளிப்பட்டதும் அதான். சரியா?..

இப்பொழுது உங்கள் மனம் வருந்தாது. தெளிவு கிடைத்திருக்கும். ஆசிர்வாதங்கள்.

Related Posts with Thumbnails