மின் நூல்

Saturday, August 12, 2017

அழகிய தமிழ் மொழி இது!..

சென்ற பகுதி:

http://jeeveesblog.blogspot.in/2017/02/blog-post_63.html

பகுதி--26
ன்னன் செங்குட்டுவனின் கவனம் வாயிற்காவலர் மேல் படிந்தது.  'ஏது சேதி?'  என்று பார்வையிலேயே கேட்ட  மன்னனிடம் காவலன் ஒருவன் பணிந்து சொல்லத் தொடங்கினான்:

"மன்னர்கோவே!  பல்வேறு வகைப்பட்ட திறமையுடைய நாடக மகளிர் நூற்று இருவர்;  குயிலுவக் கருவியை கையாள்வோர் இருநூற்று எண்மர்;  தொண்ணூற்றாறு வகைப்பட்ட சமய சாத்திரங்களைக் கற்றுத் தேர்ந்தோர்;  நகை வேழம்பர்  நூற்றுவர்;    தேர்கள் நூறும்,  ஐந்நூறு யானைகளும், பிடரி மயிர் அலைபாயும் பதினாயிரம் புரவிகளும்,  வடபுலத்து விளையும் பொருள்கள் ஏற்றி வந்த இருபதினாயிரம் வண்டிகளும், தலைப்பாகையும் சட்டையும் இட்ட தங்கள் தலைவன்  தூதுவன் சஞ்சயனுடன் வந்திருக்கும் ஆயிரவரும் தலைவாயிலில் திரண்டிருக்கின்றனர்,  வில் கொடி செங்கோல் வேந்தே!" என்றான்.

"ஓ! நல்லது.  நாடக மகளிரும் குயலுவக் கருவியாளரும் சஞ்சயன் தன்னொடு  இங்கு வர வழி காட்டுங்கள்.." என்று ஆணையிட்டான்  மன்னன்.

செங்கோல் வேந்தனின் திருவிளக்கு அவையத்து சஞ்சயன் வந்து தாழ்ந்து வணங்கி மன்னவனைப் போற்றித்  துதித்தான்.  தன்  கூட வந்திருந்த கலைஞர் பெருமக்களை மன்னவனுக்கு சஞ்சயன் இன்னார் இவர் என்று தெரிவித்து வணங்கினான்.  "தங்களுக்கு ஒரு சேதி சொல்ல வந்துள்ளேன் மன்னவா.." என்ற சஞ்சயன் அந்தச் சேதியை என்னவென்று கூறலானான்.

"மன்னாதி  மன்னா!  கடவுள் சிலை அமைக்க  கல் வேண்டி வடபுலம் நோக்கி செல்வது  தான் சேர மன்னனின் நோக்கம் எனில் ஓங்கிய இமயத்திலிருந்து  கல் எடுத்து அதனை கங்கை பேராற்றில் நீராட்டி, நின் நாட்டிற்கே கொண்டு வந்து தர சித்தமாக இருக்கிறோம் என்று நட்புச் சேதியை   நூற்றுவர் கன்னர் தகவலாக என் மூலம் அனுப்பியுள்ளனர், மன்னா!"  என்று சஞ்சயன் தான் தூதுவனாக வந்த காரணத்தைச் சொன்னான்.

"அப்படியா, சேதி!  **** நூற்றுவர் கன்னரின் நட்பு வாழ்க!" என்று வாழ்த்தித் தொடர்ந்தான் சேர மாமன்னன்.  "சஞ்சயரே!  கேட்டுக் கொள்ளவும்.. இப்பெரும் படை எழுச்சி  பெருந்தெய்வ உரு பொறிக்க இமயத்திலிருந்து கல்லைக் கொண்டு வருவது மட்டுமல்ல!" என்று அவை அதிரச் சொன்னான். "காவா நா கொண்ட கனக, விஜயர் என்னும் இரு குறுநில மன்னர் தாம் கூட்டிய விருந்தொன்றில்  பிற மன்னருடன் கூடிக் குலவி அருதமிழாற்றல் அறியாது உளறியிருக்கின்றனர். அவர்கள் அறியாத தமிழர் தம் வீரத்தையும் பெருமையையும் அவருக்கு  நேரில் அறிவுறுத்தும் பொருட்டும் எம் வடபுலப் பயணம் ஏற்பாடு ஆகியிருக்கிறது, சஞ்சய!"  என்றான்.  "சஞ்சய!  நம் நட்பு பேணும் நூற்றுவர் கன்னருக்கும் என் சேதியாக ஒன்றைச் சொல்வாயாக!    கங்கை பேராற்றை யாமும் என் கூற்றுவப் படையினரும் கடந்து  செல்வதற்குத்  தேவையான பரிசில்களுக்கு தகுந்த ஏற்பாடுகளைச் செய்யுமாறு சொல்வாயாக!" என்றான்.

"மன்னர்க்கு மன்னவா!  தங்கள் ஆணை எங்களின் பெருமிதம்!  அப்படியேச் சொல்கிறேன்.."என்று வணங்கி அவை நீங்கிச் சென்றான் சஞ்சயன்.

சஞ்சயன் சென்ற பின்,  ஆயிரம் கஞ்சுகர் சந்தன, முத்துக் குவியலையும் தென்னவர் இட திறைப் பொருட்களோடு கொண்டு வந்து சேர்த்தனர்.   சேர்த்த பொருட்களுக்கு   அவை சேர்ந்தமைக்கு அடையாளமாக         இலட்சினை இட்ட திருவோலைகளை திருமுகம் எழுதுவோர் திறைப் பொருள் தந்த மன்னர்களிடம் சேர்ப்பித்து விடுமாறு வழங்கினர்.  அப்படியான திருமுகங்களைப் பெற்றுக் கொண்டு கஞ்சுகர் அவை நீங்கினர்.

திரை கடல் தான் திரண்டதோ என்று வியக்கும் வண்ணம் பெரும் படையை வடபுலம் நோக்கி நடத்திச் சென்ற செங்குட்டுவன் நூற்றுவர்  கன்னர் ஏற்கனவே ஏற்பாடு  செய்திருந்த ஓடங்களை உபயோகித்து கங்கை பேராற்று வங்கப் பரப்பின்  வடகரையை அடைந்தனர்.  பின் பகைவரை எதிர் கொள்ள பாடி வீடு அமைத்துத்  தங்கினர்.

கனக விஜயருக்கும் சேதி போனது.   உத்தரன், விசித்திரன்,  உருத்திரன், பைரவன்,  சித்திரன், சிங்கன்,  தனுத்திரன், சிவேதன் என்ற எட்டு வட நாட்டு அரசர்களுடன் கூட்டு கொண்டு "தென் தமிழ் ஆற்றலைக் காண்போம், நாம்"    என்ற இறுமாப்புடன்   சேரமாமன்னனுடன் மோதினர்.

ஞாயிறு தென்படவில்லை.  அதன் வெயில் கதிரை துகில்  கொடிப் பந்தல்கள் விழுங்கின.  பதப்படுத்தப் பட்ட தோலால் போர்த்திய வளைந்த போர்ப்பறை, வெண்மை உமிழும் சங்கு, நீண்ட கொம்பு,  இடி இடித்தாற் போல முழங்கும் போர்முரசு,  இழும் என்னும் ஒலி நாதம் கொண்ட கஞ்சதாளம் எல்லாம் ஒரு சேர முழங்கி உயிர்க் குலை நடுநடுங்க திசைகள் அதிர விநோதமான ஓசைகள் பிளந்தன.

தோளில் வில் தாங்கிய வீரர்,  அதிவேகமாக தேரைச் செலுத்தும்
திறமையாளர்,  யானை மத்தகத்தின் மேல் அமர்ந்து வரும் யானை மறவர், குதிரை வீரர் என்று வரிசை வரிசையாக வருவோரின் அதகள ஆர்ப்பாட்டத்தில் நிலம் அதிர்ந்து புழுதி கிளம்பி யானைகள் தம் முதுகில் சுமந்த மணி நாவிலும்,   சங்குகளின் நாவிலும் நிரம்பி அவை தம் செய்தொழில் மறந்து ஓசை எழுப்ப முடியாது தவித்தன.

இரு பக்கப் படைகளும் ஒன்றில் ஒன்று மோதி ஒன்றாகின.  தோள்களும், தலைகளும் தனித்தனையாக சிதறுண்டு கிடந்த பிணக்குன்றின் மீதேறி  பேய்கள் கூத்தாடிக் களித்தன.   நிணம் பொருந்திய குறுதி ஆற்றில் பெண் பேய்கள் தம் கூந்தலை தாழத் தழைய விட்டு இரத்த குளியல் நிகழ்த்தின.

வலிமை கொண்ட தேர்ப்படை வடவரசர்களின் சிறப்பு.  வாளேந்திய சேர வீரப்படையினரின் கூர்வாள் தேர் மொட்டுக்களைக் கொய்தன.   கடுங்களிர்களின் பிடரியும்,  புரவிகளின் முதுகுகளும் பாழ்பட  கூற்றுவன் அந்தப் பகல் நேரத்திலேயே பல உயிர்களை நாசம் கொள்வான்  என்பதனை வடவரசர்கள் கண்கள் பிதுங்கக் கண்டனர்.  இறுதியில் போர்  ஓய்ந்து  வெற்றி வாகை சூடிய  செங்குட்டுவன் பனம் பூ தொடுத்த தும்பை வெளிர் மாலையை சுற்றியிருந்த படைவீரர்  ஆரவாரத்திற்கிடையே  தன் சென்னியில் சூட்டிக் கொண்டான்.


(தொடரும்)

========================================================================

****  நூற்றுவர்  கன்னர் என்ற மன்னன்,  கங்கையாற்றைக் கடந்து செங்குட்டுவன்   படைகள் செல்ல உதவினான் என்று சிலப்பதிகாரம் குறிப்பிடுகிறது.  சாதகர்ணி என்ற வடமொழிப்  பெயரே   நூற்றுவர் கன்னர் என்றாயிற்று என்பர் வரலாற்று ஆய்வாளர்கள்.

========================================================================


படங்கள் உதவிய நண்பர்களுக்கு நன்றி.

10 comments:

கோமதி அரசு said...

//திரை கடல் தான் திரண்டதோ என்று வியக்கும் வண்ணம் பெரும் படையை வடபுலம் நோக்கி நடத்திச் சென்ற செங்குட்டுவன்//


போர்க்களக் காட்சிகள் கண் முன்னே விரிந்தது.


//செங்குட்டுவன் பனம் பூ தொடுத்த தும்பை வெளிர் மாலையை சுற்றியிருந்த படைவீரர் ஆரவாரத்திற்கிடையே தன் சென்னியில் சூட்டிக் கொண்டான்.//

வெற்றி வாகை சூடிய செங்குட்டுவன் கனக, விஜயன் தலைகளில் கண்ணகிக்கு கோயில் கட்ட கற்களை சூடுவதை பார்க்க தோடர்கிறேன்.

அருமை.

நெல்லைத் தமிழன் said...

இந்த சதகர்ணி கூட்டத்தை வைத்து சாண்டில்யன் அவர்கள் ஒரு நாவல் எழுதியிருந்ததாக ஞாபகம்.

உங்கள் எழுத்து, அந்தக் காலத்தில் அரசவை எப்படி நடந்திருக்கும் என்று எண்ணவைக்கிறது. 'ஆயிரம்' என்பது ஒரு வாழ்த்துக்காகச் சேர்க்கப்பட்டிருக்குமா? பதினாயிரம் புரவி என்பது கற்பனை செய்வதற்கு அரியதாக அல்லவா இருக்கிறது.

இதுபோல, தூது செல்பவர்களும் எப்படிச் சென்றிருப்பார்கள், பல தேசங்களைக் கடந்துதானே தாங்கள் பார்க்கவேண்டிய அரசை அடையவேண்டும், அப்படியும் எப்படி பகைவர்களைத் தாண்டிச் சென்று, அந்த அரசனை அடைந்து தூதுச் செய்தியைச் சொல்லியிருப்பார்கள் என்று எண்ணவே வியப்பாக இருக்கிறது.

அதுபோல், பரிசிலாக வந்தவற்றையும் acknowledgement என்று சொல்லும்விதமாக, ஒரு ஓலையின்மூலம் பரிசு அனுப்பிய அரசருக்கு அனுப்பும் பாங்கும் வியக்கவைக்கிறது. இடையில் உள்ளவர் கவர்ந்துவிடாமல் எப்படி இவற்றையெல்லாம் செய்திருப்பார்கள் என்று அறியவே ஆச்சரியமாக இருக்கிறது.

ஜீவி said...

@ கோமதி அரசு

வஞ்சிக் காண்டத்தை விட்ட இடத்திலிருந்து தொடர்ந்து தொய்வில்லாது முடித்து விடுவதாக இருக்கிறேன். பார்ப்போம்.

நீலகிரி பாடி வீட்டிலிருந்து வஞ்சி அரண்மனை சென்று அங்கிருந்து நேராக கங்கைக் கரை, கனக விஜயரோடு போர் என்று வெகு சுருக்கமாக முடித்து விடுகிறார் அடிகளார். இந்தப் போர்க் காட்சி மட்டும் இல்லை என்றால் ஒரு போர் நடந்ததற்கேற்பவான வீர விளையாட்டுகள் இல்லாமலேயே போயிருக்கும். பேய்கள்-- ஆண் பேய், பெண் பேய் எல்லாம் வருகின்றன. சின்னதாக ஒரு கலிங்கத்துப் பரணி.

தொடர்ந்து வாசித்து வருவதற்கு நன்றி.

ஜீவி said...

@ நெல்லைத் தமிழன்

சித்தரஞ்சனி என்ற நாவலா, நெல்லை?.. சிலம்பைப் பொருத்த மட்டில் நூற்றுவர் கன்னர் என்பது ஒரே ஒரு மன்னன் தான். நூற்றுவர் கன்னர் என்பது பரம்பரைப் பெயர் போல இருந்து அந்த வம்சத்தில் வந்த மன்னன், செங்குட்டுவனிடம் நட்பு பாராட்டியதாகவும் இருக்கலாம்.

சதகர்ணி என்ற பெயர் கொண்ட வம்சத்தினர் ஆந்திர தேசத்தவர் என்று தனியே ஒரு கதையும் ஓடுகிறது. கெளதமி புத்ர சதகர்ணி



ஜீவி said...

(தொடர்ச்சி) கொளதமி புத்ர சதகர்ணி என்பவர் நட்சத்திர அந்தஸ்த்தில் ஜொலிக்கிறார்.
நாசிக் கல்வெட்டுகள் இவர் புகழ் பாடுகின்றன.

என் சரக்கு என்று தனியே எதுவுமில்லை. எல்லாம் அடிகளாரின் வரிகள் தாம்.

பதினாயிரம் புரவி என்பது நிஜமாலும் தான்.

".. நண்ணிய நூற்றுவர் நகை வேழம்பரும்
கொடுஞ்சி நெடுந்தேஓர் ஐம்பதிற் றிரட்டியும்
கடுங்களி யானை ஒரைஞ் ஞூறும்
ஐயீ ராயிரங் கொய்யுளைப் புரவியும்
எய்யா வடவளத் திருபதி னாயிரம்...

--- என்று சிலம்பு கணக்கு கொடுக்கிறது.

இன்றைய கணித எண் சாத்திரமே அன்றைக்கும் வழக்கிலிருந்தது என்பது இன்னொரு ஆச்சரியம்.

ஜீவி said...

(தொடர்ச்சி)

பொதுவாக தூதுவர்கள் நட்பு--பகை என்ற எல்லயெல்லாம் தாண்டி எல்லா அரசர்களுக்கும் தேவையானவர்கள் என்ற அந்தஸ்த்தில் எங்கே செல்லவும் 'பாஸ்போர்ட்' பெற்றவர்கள் போல வாழ்ந்திருக்கிறார்கள் என்று தெரிகிறது. எல்லா செக்போஸ்ட்டுகளிலும் கேள்வி கேட்காமல் அவர்களுக்கு சிறப்பு அனுமதி கிடைக்கும் போலிருக்கிறது.

பரிசிலாக வந்தவற்றிற்கு ஓலை ரசீது போட்டுக் கொடுத்த செய்தி என்னையும் கவர்ந்தது.
யார் யார் என்னன்ன கொடுத்தார்கள் என்பது போன்ற வரவு செலவு கணக்குகள் துல்லியமாக இருந்ததாகத் தெரிகிறது.

மன்னர்கள் ஆட்சியை நுணுகி நுணுகிப் பார்த்தால் பல ஆச்சரியங்கள் இருக்கத்தான் செய்கின்றன. வாள் தான் பேசும் என்றாலும் தர்ம நியாயங்களுக்கும் மரியாதையும் வலுவும் இருந்தன என்பது தான் காணக்கிடைக்கிற செய்தியாய் தெரிகிறது.

தங்கள் வாசிப்பு ரசனைக்கு நன்றி, நெல்லை.

நெல்லைத் தமிழன் said...

"சித்தரஞ்சனி என்ற நாவலா" - இப்படிப்பட்ட ஞாபக சக்தி எனக்குக் கிடையாது. நீங்கள் சொன்னப்பறம் என்னிடம் உள்ள சித்தரஞ்சினி மின்னூலைப் பார்த்தால், அது கௌதமிபுத்ரன், சாதவாகனர்கள் பற்றி ஆரம்பிக்கிறது. ஆனாலும், குறிப்பா 'சத கர்ணிகள்' என்று படித்திருக்கிறேன். பார்ப்போம் ஞாபகம் வருகிறதா என்று. (இதற்காக அந்த மின்னூலைப் பார்க்கும்போதுதான், சாண்டில்யன் அவர்கள் எப்படி, சரித்திர ஆதாரங்களை சில பக்கங்களில் குறிப்பிட்டிருக்கிறார் என்று பார்க்க நேர்ந்தது. பெரிய திறமைசாலி. "இளந்திரையன் குதிரையில் வந்தான்" என்பதற்கே பக்கம் பக்கமான, வெகு நீஈளமான வாக்கியங்கள் எழுதக்கூடியவரல்லவா? அவருக்கு 'கதாநாயகியும் கதா நாயகனும் பேசிக்கொள்ளும் காட்சிகள் வந்துவிட்டால், கல்கி அவர்களைவிட, வெகு ரசனையோடு பக்கம் பக்கமான வசனங்களை எழுதித் தள்ளிவிடுவார். நல்லவேளை, அதற்கு ஓவியர் லதா அவர்கள்தான் படம் வரைவார்கள் (பொதுவா). அதனால் கல் சிற்பங்களின் நேர்த்தியோடு நிறுத்திக்கொண்டுவிடுவார்.

மன்னர்கள் ஆட்சி முறையும் மிகுந்த ஆச்சர்யம் தரக்கூடியதுதான். Acknowledging receipt of gifts, தூது செல்லுதல், முத்திரை மோதிரம் போலியாக இருக்காமல் பார்த்துக்கொள்வது, உள்ளூரிலேயே தனக்கு எதிர்ப்பு வராமல் பார்த்துக்கொள்வது, போட்டி உறவினர்களைக் கண்காணிப்பு வளையத்தில் வைத்திருப்பது (பொதுவா இஸ்லாமிய அரசர்கள், அரசுப்போட்டிக்கு வரக்கூடியவர்களை சதக் செய்துவிடுவார்கள், ஆனால் உத்தமச் சோழன் அரசாண்டபோது, அடுத்து அரசுக்குரியவனான அருண்மொழித் தேவனை-ராஜ ராஜ சோழனை எப்படிக் கண்காணித்திருப்பான், சந்தேகம் ஏற்படும் சாத்தியமில்லாமல் எப்படி அருண்மொழித்தேவன் நடந்திருப்பான் என்றெல்லாம் யோசிக்கும்போது ஆச்சர்யம் அளிக்கிறது), எதிரி நாட்டில் ஒற்றர்கள் வைத்திருப்பது, communication, திரை வசூலிக்கும் முறை போன்றவை ஆச்சர்யம் தரக்கூடியவைதான்.

ஜீவி said...

@ நெல்லைத் தமிழன்

சாண்டில்யன் அவர்களை நேரில் சந்தித்து அளவளாவிய தருணங்கள் நெஞ்சில் முட்டி மோதுகின்றன.

தி.நகர் மஹாலஷ்மி தெரு. (சிவா விஷ்ணு கோயில் எதிர்ப்புறம்) ரங்கநாதன் தெருவைத் தாண்டி நடந்தாலே இப்பொழுது கூட சாண்டில்யன் அவர்களின் நினைவு வந்து விடும்.
வைஷ்ணவ குடும்பம். பேரன், பேத்திகளுக்குக் கூட தாத்தாவும் பாட்டியும் அண்ணா, மன்னி தான்.


கல்கியும், சாமிநாத சர்மாவும் கூட ஒரே தெருக்காரராய் ஒரு காலத்தில் இருந்திருக்கிறார்கள் என்பது ஆச்சரியமான ஒரு தகவல்.
அவரது மூத்த மகன் சடகோபன் பேராசிரியராக இருந்தவர். இளைய மகன்
வைஷ்ணவக் கல்லூரி முதல்வர். (வீட்டில் டிஸ்கஷன் இருந்திருக்குமோ?)

கன்னிமாரா நூலகம் அவருக்கு சரித்திர விவரங்களின் ஆதார களமாக இருந்திருக்கிறது. (தமிழ்வாணன் சொல்லித் தெரிந்தது)

நெல்லைத் தமிழன் said...

ஜீவி சார்.. சர்வ சாதாரணமாக இவங்க பேர்லாம் சொல்றீங்க, அவங்களோடு பேசியிமிருக்கீங்க... தமிழ்வாணன் அவர்கள் என்னோட சிறுவயதில், 'அணில்' அதன் பிறகு அவரது துப்பறியும் நாவல்கள், கல்கண்டு மூலம், ரொம்பவே களிப்படையச் செய்தவர். சாண்டில்யன்-அவரது சரித்திரக்கதைகள்தான்-அதற்கான அவரது உழைப்பு ஆச்சரியமானது. எங்கேயோ படித்தேன், அவர் எழுதிய கடல்புறா (2000 பக்கம், மூன்று தொகுதிகள்)- அதன் கையெழுத்துப் பிரதிகள் 20,000 பக்கங்களுக்கு மேல் என்று. (சேரன்ல ஆரம்பிச்சு எங்கேயோ போகுது நான் எழுதுவது). பொதுவா, எழுத்து என்பதில், கல்கியின் சரித்திர நாவல்களுக்கும் சாண்டில்யனுக்கும் நான் வித்தியாசமாகக் கருதுவது, விகடனுக்கும் குமுதத்துக்கும் (1960-1980) உள்ள வித்தியாசத்தைத்தான்.

ஜீவி said...

விரைவில் தமிழ்வாணன் அவர்கள் பற்றி தனிப் பதிவு போடுகிறேன். எத்தனையோ அவர் பற்றிய நினைவுகள். ஆவணமாக்க வேண்டிய விஷயங்கள் நிறைய இருக்கின்றன.

எப்படிப் போனாலும், அல்லது பார்த்தாலும் வாசகர்களுக்கு குமுதமும் விகடனும் எதிர் எதிராக நிறுத்தக் கூடிய ஒரு விஷயமாகப் போய் விடுகிறது. அந்தக் கால எம்ஜிஆரும், சிவாஜியும் மாதிரி.

எதிரும் புதிருமாக இரண்டு விஷயங்களை அல்லது இருவரை நிறுத்துவது மற்றவற்றை அல்லது மற்றவர்களை ஓரம் கட்டி அந்த இரண்டின் அல்லது அந்த இருவரின் வளர்ச்சிக்கான வேகமாக அமைந்து விடுகின்றன.

எல்லாக் காலங்களிலும் இப்படி இரண்டு விஷயங்களுக்கு எதிரும் புதிருமான முக்கியத்துவத்தை இயல்பாகவோ அல்லது வலியவோ கொடுத்து மற்றவற்றைக் காணாமல் போக்கியிருக்கிறார்கள் அல்லது மறக்கடித்திருக்கிறார்கள்.

வரலாற்றில் ராஜதந்திரமான ஒரு போக்கு இது. எவரை அல்லது எதை முன்னிறுத்துவது என்ற குழப்பமான சூழ்நிலைகளில் மாமருந்தாக இந்த போக்கு உபயோகப்படுவதே இதன் சிறப்பு.

பல என்றிருப்பதை இரண்டாகச் சுருக்கி விட்டால் அந்த இரண்டில் எது என்று சுலபமாகத் தீர்மானித்து விடலாம். அல்லது இயற்கையாகவே அந்த இரண்டுக்கு மட்டுமே வளர்ச்சிப் போக்கு தீர்மானிக்கப் படுகிறது.

இந்த இரண்டின் இன்னொரு விசேஷம் என்னவென்றால் எதற்குமே தனிக்காட்டு ராஜா அந்தஸ்து கிடைத்து விடாமல் அந்த இரண்டுமே பார்த்துக் கொள்ளும்.

'எங்களுக்குள் ஆயிரம் இருக்கலாம்; நீ யார் நடுவே நுழைவதற்கு?' என்று இன்னொன்று தலையெடுக்காமல் இந்த இரண்டுமே பார்த்துக் கொள்ளும்.



Related Posts with Thumbnails