மின் நூல்

Monday, December 18, 2017

பாரதியார் கதை - 2

                                                                         2

வாழ்க்கையில் ஏற்படும் திருப்பங்கள் நம்மைக் கேட்டுக் கொண்டு வருவதில்லை.

அதிலும் ஒரு விசேஷம் என்னவென்றால்  எந்த நெருக்கடியிலும் அடுத்து நடக்க வேண்டியது இது தான் என்று ஏற்கனவே யாரோ தீர்மானித்து வைத்திருக்கிற மாதிரி அந்த அந்த நேரத்து அது அது நமது எந்த பிரயாசையும் இன்றி சொல்லி வைத்தாற் போல நடப்பது தான். 


இதை பகவான் கிருஷ்ணர் உபதேசித்ததாகச் சொல்லப்படும் 'எது நடக்கிறதோ, அது நன்றாகவே நடக்கிறது' என்ற கீதாச்சாரம் வரியோடு இணைத்துச் சொல்லலாம்.  நடப்பது எதுவும் நம் தேவைகளுக்காக நம்மை இணைத்துக் கொண்டு தான் செயல்படுகின்றன.  இது இந்துத்வா என்றால் இந்துத்வா; இல்லை,   நம்மை நாமே புரிந்து  கொள்வதற்கான ஞானம் இது என்றால் ஞானம்.

தன்  தந்தை மறைவுக்குப் பிறகு அலமந்து நின்ற பாரதியார் வாழ்விலும் அவர் அடுத்தப்படியாக என்ன செய்ய வேண்டும் என்பதற்கு வழிகாட்டல் கிடைக்கிறது.  பாரதியாரின் தந்தை சின்னசாமி அய்யரின் சகோதரி  காசிமாநகரில் இருந்தார்.   அந்த மாதரசியின் பெயர் குப்பம்மாள்.  குப்பம்மாளும் அவர் கணவர் கிருஷ்ணசிவனும் தமிழ் நாட்டிலிருந்து சிவ ஸ்தலமான காசிக்கு வரும் யாத்திரிகர்களுக்கு வேண்டுகிற உதவிகளை தாமாக முன் வந்து செய்யும்  மேன்மயான குணம் பெற்றிருந்தார்கள்.   சொந்த  சகோதரனின்  மகன் நிலை புரிந்ததும்  'நீ  காசிக்கு வந்து விடு' என்று அத்தையிடமிருந்து பாரதியாருக்கு அழைப்பு வந்தது.  எந்த சக்தி பாரதியை உந்தித் தள்ளியதோ  தெரியவில்லை,  மறுக்காமல் பாரதியும் உடனே காசி கிளம்பி விட்டார்.

'யாதும் ஊரே; யாவரும்  கேளிர்' என்பது  தமிழ்ச் சான்றோனின்  அமுத
வாக்கு.  யாதும் ஊராயினும்  ஒவ்வொரு தலத்திற்கும் இயற்கையின்  கொடையால் விதவிதமான நேர்த்திகள் கிடைத்திருக்கின்றன என்பதும் நமது புரிதல்களில் ஒன்றாகியிருக்கிறது.  காசி 15000 வருடங்களுக்கு மேலான பழைமை வாய்ந்த இடம்.

புனித கங்கை நதியின்  அருட்கொடை பெற்ற காசி மாநகரம் கல்விச்சாலை களுக்கும் வேத விற்பன்னர்களுக்கும் பெயர் பெற்ற நகரமாக விளங்கியது தான் பாரதியின் எதிர்கால வாழ்க்கைத் திருப்பங்களுக்கு பெரும் கொடையாக அமைந்தது. 

அத்தையின் வீடு கங்கைக்கரையோரம் இருந்தது.  ஹனுமந்த் காட் படித்துறைக்கு வெகு அருகில்.  பாரதிக்கு கங்கைக்கரையே மனம் லயிக்கும் இடமாக மாறிப் போனது.

"இன்னது  நீர்க்கங்கை யாறு எங்கள் ஆறே
இங்கிதன் மாண்பினுக்கு எதிரெது வேறே.." என்று கவிதை அவர் சிந்தனையில் கொப்பளித்துக் கிளம்பியது.  காசி மிஷன் கல்லூரியும், ஜெயின் நாராயண் கல்லூரியும் பாரதியின் கல்விச்சாலைகள்.  அலகாபாத்
சர்வ கலாசாலை நுழைவுத் தேர்வில் முதல் வகுப்பில் தேர்ச்சி அடைந்தார்.
 ஹிந்தியும், சமஸ்கிருதமும் இயல்பாகவே அவரது கல்வி கற்றலுக்கு துணை நின்று பரந்து விரிந்த பார்வையைத் தந்தன.  காசி நகரில் சில காலம் பள்ளி  ஒன்றில் பாரதியார் ஆசிரியப்பணியும் ஆற்றியிருக்கிறார்.

வாலிப வயதின் ஆரம்பப் பருவம் என்பது மிக முக்கியமான ஒன்று. சிறுவன் நிலையிலிருந்து வாலிபத்தின் தலை வாசலில் நிற்கும் பொழுது புதுச் சிந்தனைகளும், கருத்துக்களும் மிகச் சுலபமாக மனசை ஆக்கிரமிக்கின்றன.   ஒரு  முழு  மனிதன் உருவாகத் தொடங்குகிற ஆரம்ப காலத்தில் உளவியல் பாங்கில் இந்தப்  பருவம் புதுக்கருத்துக்களை உள்வாங்கிக் கொண்டு தன்னில் விதைத்துக் கொள்ள விளைநிலமாய் காத்திருக்கிறது.  அந்த பருவத்தில் பாரதிக்குக்  கிடைத்த பேறாய் வடபுலத்துக் கல்வியும் அமைந்த வாழ்க்கை அனுபவங்களும் மன விசாலத்தை உருவாக்குவதில் பெரும் பங்களிப்பைத் தந்திருக்கின்றன.

இமயம் முதல் தெற்குக் கோடி குமரி வரை ஒரே நாடு-- அது எங்கள் பாரதம் என்ற இருமாப்பு மனசில் ஏறி அமர்ந்தது.  'காவிரியும் நமதே; கங்கையும் நமதே' என்ற அகண்ட பாரதப்  பார்வை.  இந்த 'ஏக இந்தியா' உணர்வு தான் பாரதி காசி போய் படித்ததின் பெரும் பலன் என்று இன்றும் என் எண்ணமாய் இருக்கிறது.  தமிழகத்தில் எனக்கமைந்த வாலிபப் பருவ கல்விச் சூழல்களின் அனுபவங்கள் இந்த எண்ணத்தை உறுதிபடுத்துகின்றன.

கங்கையாற்று ஹனுமான் காட்டிற்கு வெகு அருகில் சின்ன சந்து போல இருக்கும் தெருவில்  இன்றைய சங்கர மடத்திற்கு எதிரில் இருக்கும் * 'சிவ மடம்' என்று பெயர் பொறித்திருக்கும் நீண்ட குடில் தான் பாரதியின் அத்தை வீடு.  மாமா கல்விமான்.  வீட்டிற்கு வேதம் படித்த  பண்டிதர் நிறைய பேர் வந்து போவார்கள்.  அவர்களுடன் பேசிக்  களிக்கவும்,  கருத்து விவாதங்கள் நடத்தவும் பாரதிக்கு அந்த இளம் வயதிலேயே வாய்ப்புகள் அமைந்தன.

அந்த வயதில் ஆங்கிலக் கவிஞன் ஷெல்லி விடுதலை உணர்வைப் போதித்த  பாரதியின் உள்ளம் கவர்ந்த கவிஞானான்.  கங்கைக்கரை படிக்கடிக்கட்டுகளில் ஷெல்லியின் கவிதைப் புத்தகமும் கையுமாக உலாவிக் கொண்டிருப்பாராம் பாரதி.  வாசித்து அறிந்திருக்கிறேன்.  பிற்காலத்தில் 'ஷெல்லி தாசன்'  என்றே அவர் புனைப்பெயர்  கொண்டார்.  இருப்பினும்  ஷெல்லியிடமிருந்து பெற்ற கவிதானுபவம்  பாரதியின் காதல் கவிதைகளில் மட்டும் அவனது நீட்சியாயிற்று.  அந்தக் காதலையும் கண்ணன் மேல் கொண்ட  காதலாக ஆண்டாளைப் போன்ற இறைக்காதலாக உருமாற்றிக் கொண்டவர் பாரதியார்.   அவரது முதல் காதலையும் இறைக்காதலாக உருவகம் கொள்ளவும் முடியும்.   'ஆங்கோர் கன்னியைப் பத்துப் பிராயத்தில் ஆழ நெஞ்சில் ஊன்றி வணங்கினன்' என்று  கன்னியை வணங்குவதாக மானசீகமாக  அந்த தெய்வக் கன்னிகைக்கு மரியாதை கொடுக்கிறார் என்று இப்பொழுதிய ஞானோதயம்.

ஒரு நாளைக்கு பலமுறை கங்கை நீரில் மூழ்கி எழுவாராம் பாரதி.  கங்கை அவர் மனசில் ஒரு நதியாக தோற்றம் கொள்ளவில்லை.  காற்றும் தெய்வம்; கங்கையும் தெய்வம் தான் அவருக்கு. 

காசி வாழ்க்கை இளம் வயது பாரதியிடம் உடை மாற்றத்தையும் கொடுத்திருக்கிறது.   கச்சம் வைத்துக் கட்டிய வேஷ்டி, கோட், தலைப்பாகை என்று அந்நாளைய பேராசிரியர்கள் தோற்றம் கொடுத்திருக்கிறது.   பால கங்காதர திலகரின்  சுதந்திர வேட்கை கொண்ட வீர  உரைகள் அவர் நாடி நரம்புகளில் முறுக்கேற்றியது.  காசி வாசம் அவருக்கு மிகவும் பிடித்துப் போயிற்று.

வாழ்க்கையின் போக்குகள் நாம் நினைக்கின்ற மாதிரி அமைவதாகப் போக்குக் காட்டினாலும் இந்தப் பகுதியின் ஆரம்பத்தில் சொன்ன மாதிரி வாழ்க்கையின் திருப்பங்கள் நம்மைக் கேட்டுக் கொண்டு வருவதில்லை.

காசி வாழ்க்கையை மிகவும் நேசித்த பாரதி மீண்டும் எட்டையபுரம் திரும்ப நேரிட்டது.


(வளரும்)


========================================================================


 *  சென்ற தடவை காசி ஷேத்திரத்திற்குச் சென்ற பொழுது,  பாரதி இளம் பருவத்தில் வாழ்ந்த 'சிவ மடம்'  குடிலில் நுழைந்து பார்க்கும் பாக்கியம் கிட்டிற்று.  வீட்டின் நுழைவுப் பகுதியில் ஆர்ச் மாதிரியான வளைவுக்குக் கீழே இந்தியிலும் தமிழிலும்  'சிவ மடம்' என்று சிமெண்ட் எழுத்துக்களில் பொறித்திருக்கிறது.  நான் போயிருந்த பொழுது பெரியவர் ஒருவரைச் சந்திக்கும் பேறு கிடைத்தது.  பெரியவரின் பெயர் கே.வி. கிருஷ்ணன். பாரதியாரை காசி வாழ்க்கைக்கு அழைத்து பெருமை பெற்ற பாரதியின் அத்தை குப்பம்மாள் அவர்களின் பேரனாம் இவர்.  காசி தமிழ்ச் சங்கத்தின் தலைவர்.  தான் பாரதியின் குடும்ப உறவுமுறை  என்பதில் ஏகப்பட்ட பெருமிதம் அந்தப் பெரியவருக்கு.  பாரதிக்குப் பிற்காலத்தவர் இவர் ஆயினும் இவரிடமிருந்து  பாரதியைப்  பற்றி நிறைய அந்நாளைய தகவல்களைத் தெரிந்து கொள்ளவும் முடிந்தது.  மடத்தில் பாரதியின் மார்பளவு சிலை ஒன்றும் உண்டு.
========================================================================

படங்கள் உதவியோருக்கு நன்றி.

22 comments:

ஸ்ரீராம். said...

வாழ்க்கையின் திருப்பங்கள் நம்மைக் கேட்டுக்கொண்டு வருவதில்லை என்பது உண்மை. காசியில் பாரதியின் உறவினரை சந்தித்தீர்கள் என்பது விசேஷம். நான்கு வருடங்களுக்கு முன் சங்கீதக் கச்சேரிகளுக்கு என் உறவினர் ஒருவருடன் சென்றபோது ​அவருடன் பணிபுரிந்தவர் வீட்டுக்குச் சென்றிருந்தோம். அவரும் பாரதியாரின் உறவினர்.

நெல்லைத் தமிழன் said...

ஆஹா.. அந்தக் காலத்திலேயே தமிழ்ப்பெண், அதுவும் கட்டுப்பெட்டியாக இருக்கும் சமூகத்தைச் சேர்ந்தவர், காசிக்கு வாழ்க்கைப்பட்டுச் சென்றிருக்கிறாரே.

நிச்சயம் வடபுலத்துக் கல்வி பாரதியாருக்கு விசாலமான அறிவைத் தந்திருக்கவேண்டும்.

இப்போது காசியில் இருக்கும் அவர் சந்ததியினருக்கு தமிழ் தெரிகிறதா?

வாலியும் அவரது 'நானும் இந்த நூற்றாண்டும்' நூலில், பாரதியின் மகளை ஸ்ரீரங்கத்தில் சந்தித்தது பற்றி எழுதியிருக்கிறார்.

ஜீவி said...

@ ஸ்ரீராம்

IRCTC-யின் The Gangas Charter Train Tour Package என்று யாத்ரா ஸ்பெஷல் டூரில் கங்கை உற்பத்தியாகும் இடத்திலிருந்து கங்கை கடலில் கலக்கும் இடம் வரை சென்று வர ஏற்பாடு செய்திருந்தார்கள். நாங்கள் அலகாபாத் (திரிவேணி சங்கமம்), காசி, கயா ஆகிய இடங்களை தங்கிப் பார்க்கும் முக்கிய இடங்களாகக் கொண்டிருந்தோம். (சில சாஸ்திர சம்பிரதாய கிரியைகளுக்காக) காசியில் மட்டும் மூன்று நாட்கள் தங்கியிருந்தோம். (31-10-13 மதியத்திலிருந்து 2-11-13 இரவு வரை)

அனுமன் காட் படித்துறை அருகிலேயே புரோகிதரின் பெரிய மாடி வீட்டில் அறைகள் ஒதுக்கப் பட்டிருந்தன. புரோகிதரின் வீடு இருக்கும் சந்தின் தொடர்ச்சியாக சங்கர மடம் இருந்தது. சங்கர மடத்தின் எதிரில் சிவ மடம். தமிழில் எழுத்துக்களைப் பார்த்து உள்ளே நுழைந்து பார்த்தது தான் ஆச்சரியம். பாரதி தங்கிப் படித்த இடம் அது என்று தெரிந்து சிலிர்த்துப் போனேன். பெரியவர் கே.வி.கிருஷணனை சந்திக்கிற வாய்ப்பு கிடைத்ததும் இன்னொரு ஆச்சரியம். 2013 வருட தீபாவளி கங்காஸ்தானம் எங்களுக்கு புனித கங்கையில் தான். காலை 5 மணி இருட்டில் குழல் விளக்கு வெளிச்ச வழிகாட்டலில் கங்கை படித்துறை சென்று எண்ணை ஸ்நானம் செய்து வந்தது இன்னொரு அதிசய அனுபவம்.

ஜீவி said...

@ நெல்லைத் தமிழன்

//ஆஹா.. அந்தக் காலத்திலேயே தமிழ்ப்பெண், அதுவும் கட்டுப்பெட்டியாக இருக்கும் சமூகத்தைச் சேர்ந்தவர், காசிக்கு வாழ்க்கைப்பட்டுச் சென்றிருக்கிறாரே.//

இல்லை, நெல்லை. பாரதியார் மட்டும் தான் காசிக்குச் சென்றதாகத் தெரிகிறது.
சிற்றன்னையுடன் விட்டுச் சென்றிருப்பார் போலிருக்கும். நானும் இந்த மாதிரியான ஊன்றிப் பார்க்கும் தகவல்களுக்கு ஏங்கி பாரதியார் பற்றிய பல கட்டுரைகளைப் படித்து விட்டேன். சரியான விவரங்கள் தெரியவில்லை.

பெரியவர் தமிழ் மாமணி விருது, பாரதியார் விருது பெற்றவர். காசி தமிழ்ச்சங்கத்தின் தலைவராகவும் இருப்பதாகக் கேள்விப்பட்டேன்.

நெல்லைத் தமிழன் said...

"நீண்ட குடில் தான் பாரதியின் அத்தை வீடு. மாமா கல்விமான். " - ஜீவி சார்.. இதனைத்தான் குறிப்பிட்டிருந்தேன். குப்பம்மாள் அவர்கள் (பெயரை வைத்து) தமிழ்னாட்டைச் சேர்ந்தவர், காசிக்கு கிருஷ்ணசிவனுக்கு வாழ்க்கைப்பட்டுப் போயிருந்தார் என எண்ணினேன்.

ஜீவி said...

@ நெல்லைத் தமிழன்

ஓகோ.. அப்படியா சமாச்சாரம்?.. நான் செல்லம்மாவை பாரதி காசிக்கு தன்னுடன் அழைத்துப் போனாரா என்று கேட்கிறீர்களாக்கும் என்று நினைத்தேன்.

கிருஷ்ணசிவனும் தமிழ் நாட்டுக்காரராய் இருக்கலாம். எதற்குச் சொல்ல வந்தேன் என்றால் அந்த அனுமன் காட் பகுதி சென்னை மாம்பலம் மாதிரி இருக்கிறது. பிராமண புரோகிதர்கள், கங்கை நீர் நிறைந்த சொம்புகள், காசிக் கயிறு என்று..

தி.தமிழ் இளங்கோ said...
This comment has been removed by the author.
Thulasidharan V Thillaiakathu said...

நிறைய தகவல்கள்! பாரதியாரின் அத்தையின் பேரனை நீங்கள் சந்தித்தது ஆஹா யு ஆர் லக்கி அண்ணா.

//வாழ்க்கையில் ஏற்படும் திருப்பங்கள் நம்மைக் கேட்டுக் கொண்டு வருவதில்லை// அதைச் சொல்லுங்க...அப்படி வரும் நு தெரிந்தால் நாம் கொஞ்சம் முன் ஜாக்கிரதை முத்தண்ணாவாக இருக்கலாமே!!!..

ராஜ்குமார் பாரதி அவருடைய பேரன் தானே? அவரிடமும் கூடக் குறிப்புகள் இல்லையோ??!! பாரதியின் மனைவி செல்லம்மா இங்குதானே இருந்தார்.. சமீபத்தில் கூட பதிவர் அனு பாரதியின் பதியைப் பற்றிய பதிவில் பாரதியின் மனைவி தில்லி ரேடியோவில் பேசியதையும் போட்டிருந்தார். "பாரதியார் அறியாத கலை" என்று பேசியதை அங்குக் கொடுத்திருந்தார். நானும் இணையத்தில் வாசித்திருக்கேன். அது போல அவர் திருச்சி வானொலியில் என் கணவர் என்ற தலைப்பிலும் பேசியிருப்பதை வாசித்த நினைவு.

தொடர்கிறோம்

கீதா

தி.தமிழ் இளங்கோ said...

பாரதியின் காசி வாழ்க்கை பற்றி நான் படித்த நூல்களில் இவ்வளவு விரிவாகச் சொல்லாமல் விட்டு விட்டார்கள். - தொடர்கின்றேன்.

ஜீவி said...

@ கீதா

//அதைச் சொல்லுங்க...அப்படி வரும் நு தெரிந்தால் நாம் கொஞ்சம் முன் ஜாக்கிரதை முத்தண்ணாவாக இருக்கலாமே!!!..//

முத்தண்ணாவை விட முக்கியமானது ஒன்று இருக்கிறது. நடக்க வேண்டியவை நம்மைக் கேட்டுக் கொண்டு நடப்பதாயிருந்தால், நாம் 'இப்படி வேண்டாம் எனக்கு; அப்படி...' என்று நிறைய திருத்தங்கள் கொடுப்போமே! :))

//ராஜ்குமார் பாரதி அவருடைய பேரன் தானே? அவரிடமும் கூடக் குறிப்புகள் இல்லையோ??!! //

தேடிப் பார்க்கிறேன்.

//பாரதியாரின் அத்தையின் பேரனை நீங்கள் சந்தித்தது ஆஹா யு ஆர் லக்கி அண்ணா.//

தமிழ் நாட்டிலிருந்து சென்ற நிறையப் பேர் அவரைச் சந்தித்திருப்பதாக அறிகிறேன். பாரதி பற்றி தமிழில் அவர் எண்ணத்தில் உரையாடிக் கேட்டது, அரிய வாய்ப்பு தான், சகோதரி!

ராஜ்குமார் பாரதி, பாரதியின் கீதங்களைப் பாடிக் கேட்டிருக்கிறேன். ஒரு காலத்தில் பொதிகை சேனலில் அவரது நிகழ்ச்சிகள் அடிக்கடி இருக்கும். மஹாகவியின் பாடல்களைக் கொண்டு பொதிகையில் எம்.பி. ஸ்ரீனிவாசன் நடத்திய 'சேர்ந்திசை' நிகழ்ச்சிகள் மறக்க முடியாதவை. செல்லம்மா பாரதி உரையாற்றிக் கேட்டதில்லை.

'பாரதியார் அறியாத கலை'-- பணமுண்டாக்கும் கலை தாங்கள் சொல்லி இணையத்தில் இப்பொழுது தான் படித்துப் பார்த்தேன். மனம் கனத்தது.

ஜீவி said...

@ தி. தமிழ் இளங்கோ

//இவ்வளவு விரிவாக சொல்லாமல் விட்டு விட்டார்கள்../

பாரதியார் பற்றி அறியும் பல தகவல்களை வாசித்து பலர் சொல்லக் கேட்டதை உள்வாங்கிக் கொண்டு என் பார்வையில் அவற்றைக் கோர்வையாக எழுத முயற்சிப்பதால் இந்தத் தொடர் உங்களுக்கு வேறு வகையான தோற்றம் கொடுக்கலாம்.

ஆரம்பத்தில் குழந்தைகளுக்காக நூலாக பாரதியின் கதையை எழுத வேண்டும் என்று நினைத்திருந்தேன். எழுத ஆரம்பத்தும் நிறைய கனமான விஷயங்களைச் சொல்ல வேண்டும் என்ற ஆர்வத்தில் அது முடியாமல் போயிற்று.

தங்கள் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி, நண்பரே!

நெல்லைத் தமிழன் said...

ஜீவி சார்,

"நான் செல்லம்மாவை பாரதி காசிக்கு தன்னுடன் அழைத்துப் போனாரா" - இது சாத்தியமில்லாதது. அதுவும் அந்தக் காலத்தில். பாரதி சென்றது படிப்பதற்கு.

'பாரதியார் அறியாத கலை'-- பணமுண்டாக்கும் கலை" - ஜீவி சார்... என் கதை என்ற நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் பிள்ளை அவர்கள், பாரதியைச் சந்தித்ததைப் பற்றி ஒரு பகுதி எழுதியிருக்கிறார். அதைப் படிப்பவர்கள் யாருக்கும், அவர் பணத்தை ஒரு பொருட்டாக எண்ணியதில்லை என்று தெரியும். அப்போதெல்லாம் பெரும்பாலானவர்கள் 'சுதந்திர வேட்கை'க்காக, சொத்தை விற்று ஏழையானதுதானே வழக்கம். 1940 வரைகூட, 'காந்தி வெள்ளையரிடம் வேலைக்குச் செல்லக்கூடாது, சுதேசி துணியைத்தான் உபயோகப்படுத்தவேண்டும் போன்ற பல கண்டிஷன்'களை' முழு முயற்சியோடு செய்து தங்கள் குடும்பத்தைப்பற்றி அக்கறை இல்லாமல் இருந்தவர்கள்தானே சுதந்திரத்துக்குப் பாடுபட்ட பெரியோர்கள். நான் விரைவில் உங்களுக்கு அந்தப் புத்தகத்தில், 'பாரதி' பற்றிய பகுதிகளை அனுப்புகிறேன்.

ஜீவி said...

@ நெல்லைத் தமிழன்

//"நான் செல்லம்மாவை பாரதி காசிக்கு தன்னுடன் அழைத்துப் போனாரா" - இது சாத்திய
மில்லாதது. அதுவும் அந்தக் காலத்தில். பாரதி சென்றது படிப்பதற்கு. //

பாரதியார் அத்தை வீட்டில் தங்கிப் படித்துக் கொண்டிருக்கும் காலத்து, கிருஷ்ண சிவனைப் பார்க்க வரும் பண்டிதர்களுடன் பெண்கள் விடுதலை, பெண்களின் நிலை'
என்பதனையெல்லாம் விவாதித்ததாக ஓரிடத்தில் படித்தேன்.

அப்பொழுது தான் இந்த நினைவு வந்தது.

ஜீவி said...

@ நெல்லைத் தமிழன்

//தங்கள் குடும்பத்தைப்பற்றி அக்கறை இல்லாமல் இருந்தவர்கள்தானே சுதந்திரத்துக்குப் பாடுபட்ட பெரியோர்கள். //

சில இலட்சியங்களுக்கு தங்களை ஆட்படுத்திக் கொண்ட, சொல்லப்போனால் ஆஹிருதி ஆக்கிக் கொண்ட இலட்சிய புருஷர்களுக்கு குடும்பத்தை பற்றிய அக்கறையை விஞ்சிக் கொண்டு சமூகம் பற்றிய அக்கறை அதிகமிருந்தது. என் வாழ்க்கையில் அப்படிப்பட்ட நிறையப் பேருடன் பழகும் பாக்கியமும் பெற்றிருக்கிறேன். அவர்களில் அரைக்கால் பங்கு அளவு அக்கறையின்மையை நாம் கொண்டிருந்தாலும் மனைவிமார்கள் பொறுப்பதில்லை.
அந்த விதத்தில் எல்லாம் பார்த்தால் செல்லம்மா போன்றவர்களை கோயிலில் வைத்துத் தான் கும்பிட வேண்டும்.

ஜீவி said...

@ நெல்லைத் தமிழன்

//உங்களுக்கு அந்தப் புத்தகத்தில், 'பாரதி' பற்றிய பகுதிகளை அனுப்புகிறேன்.//

நன்றி. அனுப்பி வையுங்கள், நெல்லை.

G.M Balasubramaniam said...

நாங்கள் கசிக்குச் சென்றிருந்தபோது சங்கர மடத்தில்தான் தங்கினோம் அப்போதுவலைத்தளம் ஆரம்பித்திருக்கவில்லை சங்கர மடத்திலேயே உணவுக்கு ஏற்பாடுகள் இருந்தது நாங்கள் சென்றசமயம் நடிகௌ ராதிகா தன் கணவருடன் வந்து மடத்தில் தம்பஹி பீஜை செய்தார்கள் அப்போது சித்தி தொடர் வந்து கொண்டிருந்தது ராதிகாவைப் பாக்க அல்ல சித்தியைப் பார்க்க தமிழர் கூட்டம் இருந்தது ஹனுமான் காட்டில் சாக்கடை நீர் கலக்க அங்கு குளிக்கவே தயக்கமாக இருந்தது

ஜீவி said...

அப்படியா? அனுமான் காட்டிற்கு பக்கத்து காட்டில் கங்கை ஆழமில்லாமலும், குளிப்பதற்கு ஏற்றவான வசதியுடனும் இருக்கும்.

அந்த படித்துறையில் தான் தீபாவளி கங்கா ஸ்னானத்தை முடித்துக் கொண்டோம்.

வே.நடனசபாபதி said...

//இந்த 'ஏக இந்தியா' உணர்வு தான் பாரதி காசி போய் படித்ததின் பெரும் பலன் என்று இன்றும் என் எண்ணமாய் இருக்கிறது.//

உங்களின் எண்ணம் சரியே. அவரது காசிப் பயணம் அவரது ‘பார்வை’யை விசாலப்படுத்தியது என்பது உண்மை.

பாரதியாரின் கதை சுவையாக்ப் போய்க்கொண்டு. இருக்கிறது. திரு ராஜ் குமார் பாரதீயின் சகோதரர் திருப் அர்ஜூன் பாரதி என்னோடு கோட்டயத்க்ட்டில் பணி புரிந்தவர். அவரைக் கேட்டாலும் மேலதிகத் தகவல்களைத் தருவார்.

ஜீவி said...

@ வே. நடனசபாபதி

//உங்களின் எண்ணம் சரியே. அவரது காசிப் பயணம் அவரது ‘பார்வை’யை விசாலப்படுத்தியது என்பது உண்மை. //

மகிழ்ச்சி, சார்.

நாம் நினைப்பதை இன்னொருவரும் அங்கீகரித்தலில் விளையும் சந்தோஷம் இது.

//திரு ராஜ் குமார் பாரதீயின் சகோதரர் திருப் அர்ஜூன் பாரதி என்னோடு கோட்டயத்க்ட்டில் பணி புரிந்தவர். அவரைக் கேட்டாலும் மேலதிகத் தகவல்களைத் தருவார். //

நல்லது. பரவலாகத் தெரியாத செய்திகள் தெரிய வந்தால் அது இந்தக் கட்டுரைத் தொடருக்கு பெருமை கூட்டும்.

இந்தத் தொடரை அவர் பார்வையில் பட வைக்க முடியுமா, சார்?...

வே.நடனசபாபதி said...

இன்றுதான் திரு அர்ஜூன் பாரதி அவர்களை தொடர்புகொள்ள முடிந்தது. அவருக்கு தங்களின் எட்டு பதிவுகளின் இணைப்புகளை மின்னஞ்சலில் அனுப்பியுள்ளேன். நானும் மற்ற பதிவுகளைப் படித்து கருத்திடுவேன்.

ஜீவி said...

@ வே. நடன சபாபதி

மிக்க நன்றி, ஐயா.

திரு. அர்ஜூன் பாரதியின் தொடர் பற்றிய கருத்துக்களையும், ஏதாவது திருத்தங்கள் இருந்தால் அவற்றையும், அவர் தரக்கூடிய்

ஜீவி said...

அவர் தரக்கூடிய ஆலோசனைகள், தகவல்கள் இவற்றை எதிர்பார்ப்போம். எல்லோரும் கூடி
பாரதிக்கான பெருமைத் தேரை இழுப்போம்.

Related Posts with Thumbnails