Friday, January 26, 2018

பாரதியார் கதை

                                                 அத்தியாயம்-- 7


ட்டையபுரத்து அரண்மனை வேலையை உதறித் தள்ளிய பாரதியை மதுரை 'வா,வா'  என்றழைத்தது.  மதுரை சேதுபதி உயர்நிலைப் பள்ளியில் தமிழாசிரியர் உத்தியோகம்.  1904 ஆகஸ்ட் மாதத்திலிருந்து நவம்பர் வரை நாலே மாதங்கள்.  நிரந்தர தமிழாசிரியர் விடுப்பில் இருந்ததால் அவரிடத்தில் பாரதியார் பணியேற்ற தற்காலிக வேலை.   ஊதியமாக மாதம் பதினேழரை ரூபாய்.

பள்ளி வேலைக்கு போன ஒழிந்த நேரத்தில் பாரதியார்  27 நட்சத்திரங்களை வைத்து விருத்த பாக்களிலே அமையுமாறு 'மூட சிகாமணிகள் நட்சத்திர மாலை'  என்றொரு நூலை இயற்றினார்.   அந்த நூலிலே மூட சிகாமணிகள் என்று சில பேரைக் குறிப்பிட்டுத் திட்டித் தீர்த்திருந்தார்.   மதுரையில் கந்தசாமி,  சங்கப்பா என்று இரு நண்பர்கள் பாரதிக்கு வாய்த்திருந்தனர்.
கந்தசாமி ஒரு கவிராயர்.  சங்கப்பாவோ வயதான ஒரு பிராமணர்.  வேதாந்தி.  இருவரும் பாரதி இயற்றிய மூட சிகாமணி நட்சத்திர மாலையை  படிக்கக் கேட்க வேண்டும் என்று மிகவும் விரும்பி அவரை வற்புறுத்திக் கேட்டனர்.  மதுரை பேரையூரில் இருந்த பங்களா ஒன்றில் பாரதி தனது 'மூட சிகாமணிகள் நட்சத்திர மாலை'யைப் படிக்க,  இருவரும் கேட்டனர்.  அந்த நூலை கந்தசாமிக் கவிராயர் மிகவும் ரசித்தாலும். சங்கப்பா  'இந்த நூலில் உள்ள விஷயங்கள் உண்மைதான். இருந்தாலும் உம்மைப்
போன்றவர்களுக்கு இதனால் பல தொல்லைகள் விளையும். அதனால் உடனே கிழித்தெறிந்து விடுங்கள்' என்று வற்புறுத்திக் கேட்டுக் கொண்டார்.  பாரதியும் பதில் பேசாமல் தாம் எழுதியிருந்த அந்த விருத்த கவிப்பாக்களை அப்படியே சுக்கு நூறாகக் கிழித்தெறிந்து விட்டார்.  முற்காலத்து பாரதியிலிருந்து விடுபட்டு பிற்காலத்து பாரதி எப்படி உருவாகிறார் என்பதற்காக இதை குறிப்பிட்டேன்.

இந்த சமயத்தில் மதுரையிலிருந்து வெளிவந்த  'விவேகபானு' என்னும் இதழில் பாரதியாரின் 'தனிமை இரக்கம்'  என்ற கவிதை பிரசுரமாகிறது.  எட்டையபுரம் ஸி. சுப்பிரமணிய பாரதியார் என்ற பெயரில் வெளிவந்த இந்தக் கவிதை தான் பாரதியாரின் அச்சில் பிரசுரமான முதல் கவிதை.  அவரது 22 வயதில் அந்தக் கவிதை பிரசுரமானாலும் அதற்கும் முந்தைய இளம் பருவத்தில் அரும்பு மீசை பருவத்தில் எழுதியிருப்பாரோ என்று எண்ண வைக்கும் கவிதை.

சேதுபதி பள்ளியிலிருந்து விடுபட்ட பாரதிக்கு அந்நாளைய பிரபல அரசியல் செய்தித் தாள் 'சுதேச மித்திரனி'ல் பணியாற்றும் வாய்ப்பு கிடைக்கிறது.  இன்றும் நாம் நினைத்துப் பார்க்கிற பாரதியின் வாழ்க்கையில் நிகழ்ந்த பெரும் திருப்பம் இது.

தமிழகத்தின் பத்திரிகை உலகின் முன்னோடிகளில் மறக்கவே முடியாதவர் ஜி. சுப்பிரமணிய அய்யர்.   தஞ்சை மாவட்ட திருவையாரில் 1855- ஆண்டில் பிறந்தவர்.  கல்விமானும் கல்வியை  எளியோருக்குப் போதித்தவரும் கூட.  சமூக சீர்திருத்தக் கொள்கைகளில்  தீவிரமாக இயங்கியவர்.  ஆங்கிலம் அறிந்தோரிடையே அன்றைய அரசியல் நிலமைகளைத் தீவிரமாகப் பிரச்சாரம் பண்ண வேண்டும் என்ற நோக்கில் 'தி இந்து' பத்திரிகையை தோற்றுவித்தவர்.  தமிழர்களிடையேயும் அரசியல் விழிப்புணர்ச்சியை ஏற்படுத்த 'சுதேச மித்திரன்' என்ற நாளேட்டையும் 1882-ல் தமிழகத்தில் வலம் வரச் செய்தவர்.   அப்படியான சுப்பிரமணிய  அய்யர் வேறு ஒரு வேலையாக மதுரை சென்ற பொழுது பாரதியாரைப் பார்க்கவும் அவருடன் அளவளாவுமான ஒரு சந்தர்ப்பம் நடக்க வேண்டிய ஒன்றாக இயற்கையின் ஏற்பாட்டின்படி நடக்கிறது..  ஒற்றைச் சந்திப்பிலேயே அய்யர் பாரதியாரின்  புலமையைப் புரிந்து கொண்டார்.  இவரை எப்படியாவது சென்னை அழைத்துச் சென்று தனது தமிழ்ப் பத்திரிகையில் ஒரு பொறுப்பைக் கொடுக்க வேண்டும் என்று மிகவும் விரும்பினார்.

பாரதியின் வாழ்க்கையை ஊன்றிக் கவனிக்கும் பொழுது நமக்கே ஆச்சரிய மூட்டும் சம்பவங்கள் நிறைய உண்டு.  பாரதியை  உபயோகப்படுத்திக் கொள்ளவே மற்றவர்கள் விரும்பி  அவர்களின் விருப்பத்தின் அடிப்படையில் பாரதியின் வாழக்கையில் நிகழ்ந்த பல நிகழ்வுகள் பின்னப்பட்டிருப்பதைப் பார்க்கலாம்.  காசியில் சுற்றித் திரிந்த வாலிபனை எட்டையபுர ஜமீந்தார் எப்படியாவது தன் ஜமீனுக்கு அழைத்து வந்து விட வேண்டும் என்று விரும்பி எ.புரத்துக்கு கூட்டி   வந்தார்.  இப்பொழுது பார்த்தால்   சுதேசமித்திரன் சுப்பிரமணிய அய்யர் பத்திரிகைப் பணியில் பாரதியை அமர்த்தி விட வேண்டும் என்று வேட்கை கொள்கிறார்.

பாரதியும் ரொம்பவும்  மற்றவர்களின் விருப்பங்களுக்கு இணங்கிப் போகக் கூடிய சுபாவம் கொண்டவராகவே தெரிகிறார்.   எட்டையபுர ஜமீன்தார் ஆசை எப்படி நிறைவேறியதோ அதே போலத் தான் சுப்பிரமணிய அய்யர் ஆசைப்பட்டதும் நிறைவேறுகிறது.

பாரதி மதுரை நீங்கி சென்னையில் 'சுதேச மித்திரன்' இதழில் துணை ஆசிரியர் பொறுப்பேற்றார்.  ஜார்ஜ் டவுனில் அரண்மனைக்காரத் தெருவில் அந்நாளைய சுதேசமித்திரன் அலுவலகம் இருந்தது.  பாரதி பிறந்த ஆண்டும், சுதேச மித்திரனின் தொடக்க ஆண்டும் ஒன்றே என்பது ஓர் அரிய ஒற்றுமை.  பாரதியின்  திரு நாமமும் மித்தரன் பத்திரிகை ஆசிரியரின் பெயரும் ஒன்றே என்பதும் இதை வாசிப்போருக்கு நான் சொல்லித் தெரிய வேண்டியதில்லை.

இந்த இடத்தில் சுதேச மித்திரன் நாளிதழைப்  பற்றிச் சொல்லியே ஆக வேண்டும்.   தமிழகத்தில்  தமிழில் செய்தித்தாள் வெளிவரும் நிகழ்வை ஆரம்பித்து வைத்த பெரும் பெருமை  சுதேசமித்திரனின் பெருமையாகும்.  விற்பனையும் கொடிக்கட்டிப் பறந்தது.   பாரதியார் பத்திரிகையில்  பொறுப்பேற்றுக் கொண்ட காலகட்டத்தில் பர்மா, சீனாவிலெல்லாம் அதற்கு வாசகர்கள் இருந்திருக்கிறார்கள்.   பினாங்கு, சிங்கப்பூர், மலாய், சுமத்திரா தீவுகள், போர்னியோ, இலங்கை என்று அப்பத்திரிகையின் திக்விஜயம் எட்டுத் திக்கும் நிகழ்ந்திருக்கிறது.   அந்நாளைய தமிழர்களின் செய்தித்தாள் வாசிப்பு ஆச்சரியமூட்டுவதாய் ஒரு பொற்காலம் போலத் தெரிகிறது.

பாரதியார் வாழ்க்கையிலும் ஒரு நட்சத்திர கீற்று மினுக்கி அந்த தம்பதியரின் சந்தோஷத்திற்கு ஒரு ரோஜா மலர்ந்தது.  சுதேச மித்திரனில் பணியாற்றத் தொடங்கிய காலத்தில் தான் பாரதியாருக்கு தலைமகள் பிறக்கிறாள்.  குழந்தைக்கு தங்கம்மாள் என்று பெயரிட்டு தம்பதியினர் மகிழ்கின்றனர்.

பாரதியார் சுதேசமித்திரனில் பணியில் சேர்ந்த காலத்திலேயே 'சர்வஜன மித்திரன்' என்று திருநெல்வேலியிலிருந்தும், திருச்சியிலிருந்து 'திருச்சி நேசன்',  'திராவிட போதினி', 'பிரஜானுகூலன்', 'லோகவர்த்தமானி', 'சுபோத பாரிஜாதம்', 'அமிர்தவர்ஷினி',   சேலத்திலிருந்து தட்சிண தீபம்', 'திராவிடாபிமானி', சென்னையிலிருந்து 'சுதேசி' என்று இதழ்கள் வெளிவந்து கொண்டிருந்தன.

சுதேசமித்திரன் அதிபர் பாரதியாரிடம் மிகவும்  பரிவுடனும், அன்புடனும் நடந்து கொண்டார்.   இருபத்திரண்டே வயதான பாரதி பத்திரிகை வேலகளுக்கும் புதுசு.  அதனால் மித்திரனில் மொழிபெயர்ப்பு, பிழைதிருத்தல் போன்ற வேலைகள் பாரதியாரின் பொறுப்பில் இருந்தன.  'பத்திரிகைத்  துறையில் பழக்கமும், தேர்ச்சியும் பெறும்படிச் செய்தவர் அவர் தான்.  அவரை நான் ஒரு வகையில் பரம குருவாக மதிக்கிறேன்.." என்று பாரதியாரும் அய்யரைக் குறித்துச் சொல்லியிருக்கிறார்.  பத்திரிகை பணிகளைப் பற்றி கொஞ்சம் கொஞ்சமாக பாரதி அனுபவமும் ஆற்றலும் பெற்றதும் சுதேசமித்திரனில் தான்.                                                             

பாரதியின் மனம் எதிலும் நிலைகொள்ளாமல் இதற்கு மேல் ஏதாவது செய்தாக வேண்டும் என்று அலைபாய்ந்து  கொண்டிருந்தது போலும்.

1905-ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம்.

சென்னை திருவல்லிக்கேணி  எண்:100, வீரராகவ முதலியார் தெரு  என்ற முகவரியிலிருந்து  'சக்ரவர்த்தினி' என்ற மாதப்  பத்திரிகையின் முதல்
இதழ்  வெளிவருகிறது.  சுதேச மித்திரனில் பணியாற்றிக் கொண்டிருந்த பாரதிக்கு  மித்திரனில் வெளியிட முடியாத விஷயங்களுக்கு  'சக்ரவர்த்தினி'  நிலைக்களனானது மட்டுமில்லை,   'சக்ரவர்த்தினி'யின் *ஆசிரியர் பொறுப்பையும் ஏற்றுக்  கொள்ள  வேண்டியது காலத்தின்  கட்டாயமாகிறது. இந்தப் பொறுப்பை அவர் ஏற்றுக் கொள்வதற்கு ஜி.எஸ்.அய்யரின் பின்புல அழுத்தமும், ஆதரவும்  இருந்திருக்கும் என்றும் யூகிக்க முடிகிறது.

பிரித்தானிய அரசின் இந்திய வைஸ்ராயாய்  கர்ஸான் பிரபு  கோலோச்சிய காலம் அது.                                                               

1905-ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதத்தில் 'சக்ரவர்த்தினி' இதழ் பாரதியாரை ஆசிரியராகக் கொண்டு வெளிவருகிறது என்றால்,  1905 அக்டோபர்  16-ம் தேதி கர்ஸான் பிரபுவின் ஆணைக்கிணங்க  வங்காளம் இரண்டாகப்  பிரிக்கப் படுகிறது.

இந்திய தேசியத்தின் கேந்திரமாக விளங்கிய வங்காளத்தில் தேசிய உணர்வுகளை நீர்த்துப் போகச் செய்ய வேண்டும் என்ற ஒரே நோக்கில் இந்த பிரிவினை ஆளும் பிரித்தானிய அரசின் வஞ்சக நாடகம் என்பதை தேசிய சக்திகள் புரிந்து கொண்டன.  ஒன்றாக இருந்த குடும்பத்தை இரண்டாகப் பிளந்தது போன்ற இந்தப் பிரிவினை சூழ்ச்சியை  பாரத தேச புதல்வர்கள் ஏற்றுக் கொள்ளாமல் தேசமெங்கிலும் திரும்பிய பக்கமெல்லாம் மக்கள் கிளர்ச்சி வெடித்துக் கிளம்பியது.  பிரிவினைக்கு எதிரான போராட்ட சக்திகள் ஒன்றாக இணைந்ததின் பெரும் பலனாய் சுதேசி இயக்கம் வலுப்பெற்று  தேசமெங்கும்  அதன் கீர்த்தி பற்றிக் கொண்டது.

பங்கிம் சந்திரரின் புகழ்பெற்ற பாடலான 'வந்தேமாதரம்' கீதத்தை  தமிழில் மொழிபெயர்த்து நவம்பர் மாத 'சக்ரவர்த்தினி' இதழில் பாரதியார் வெளியிடுகிறார்.  தமிழர்களின் நாடி நரம்புகளில் முறுக்கேற்றி 'வந்தேமாதரம்' அவர்கள்  உதடுகள் ஜபிக்கும் மந்திரமாகிறது.  அந்நாட்களில் தமிழக வீதிகளில் இந்திய விடுதலை இயக்கக் கொடி ஏந்தி,  'வந்தேமாதரம்' கோஷமிட்டு  தமிழர்கள்  உணர்வுப்  பிழம்பாய் ஜொலித்தனர்.

(வளரும்)


======================================================================
* 1905 செப்டம்பர் மாத 'செந்தமிழ்' என்ற பத்திரிகையில் 'சக்ரவர்த்தினி' இதழ் பற்றி ஒரு மதிப்புரையே காணப்படுகிறது.   'சுதேச மித்திரன் பதிப்பாசிரியர் ஜி.சுப்பிரமணிய அய்யர் முதலிய நல்லறிஞர்கள் விஷயமெழுதி வருகின்றனர்.  இந்த பத்திரிகையின் ஆசிரியர் ஸ்ரீ சுப்பிரமணிய பாரதியார் அவர்கள்' என்று காணப்படும் குறிப்பினால் பாரதியாரை ஆசிரியராகக் கொண்டு 'சக்ரவர்த்தினி' இதழ் வெளிவந்திருப்பதாகத் தெரிகிறது.

**
1961-ம் ஆண்டில் சைவ சித்தாந்தக் கழகம் வெளியிட்டிருக்கும் புலவர் இராமசாமியின் 'நாள், கிழமை, திங்கள் இதழ் விளக்க வரிசை' என்ற நூலில்  காணப்படும் தகவல்கள்.

 'சக்ரவர்த்தினி'யின் முதல் இதழ் 1905- ஆண்டு ஆகஸ்ட்டில் வெளிவந்திருக்கிறது.  பெண்கள் முன்னேற்றத்திற்கான சிந்தனையுடன் வெளியிடப்பட்ட  மாத இதழ் என்று ஒரு குறிப்பு கிடைக்கிறது.  பார்வைக்குக் கிடைத்த 1907 ஏப்ரல் மாத 'சக்கரவர்த்தினி' இதழ்  எம்.எஸ். நடேச அய்யரை ஆசிரியராகவும், பி. வைத்தியநாத அய்யரை வெளியீட்டாளராகவும் கொண்டு  ஏ.எல்.வி. அச்சகத்தில் அச்சிடப்பட்டு வெளிவந்ததாகத் தெரிகிறது.  இதழின் விலை 3 அணா என்றும் குறிப்பிடப்பட்டிருக்கிறது.


இந்த இரண்டு குறிப்புகளிலிருந்தும் 'சக்ரவர்த்தினி'  இதழின் தொடக்க காலத்தில் பாரதியார் அதற்கு ஆசிரியராகவும் 1907-ம் ஆண்டு காலகட்டத்தில் நடேச அய்யர் அவர்கள் இந்த இதழின் ஆசிரியர்  பொறுப்பில் இருந்திருந்திருக்கிறார் என்றும் அறிய வருகிறோம்.


=======================================================================
10 comments:

G.M Balasubramaniam said...

எனக்கு ஒரு சந்தேகமெழுகிறது முன்பெல்லாம் தானே கட்டௌகட்டாய்க்கட்டி பத்திரிக்கைகளை வினியோகிப்ப்பார்களாமே அந்தமாதிரியான கால கட்டத்தில் எழுதியது எல்லாம்மக்களைப்போய்ச் சேர்ந்த்ருக்குமா போய்ச் சேருமிடங்களிலேயே அந்த எழுத்துகள் பற்றிய கருத்துகள் தெரியப்படுத்தப் படுமா பாரதியும் தன்கருத்துகளையும் கொள்கைக்சளையும் நிறையவே காம்ப்ரமைஸ் செய்து இருப்பாரோ என்று தோன்றுகிறது பாரதி ராமாயணத்தை parody செஎது எழுதி இருந்த குதிரைக்கு கொம்பு போன கதையை சில நாட்களுக்கு முன் பகிர்ந்திருந்தேன் இதே கதைநூல் வடிவில் எப்போது வந்தது தெரியவில்லை. அவருக்கு புகழும் பெயரும் வந்தபின் அச்சிட்டதாயிருக்கும் என்று நினைக்கிறேன் ராமாயணதை கேலியாக எழுதினால் அந்தக்கால மக்களிடம்வரவேற்பு
இருக்குமா/ இருந்ததா பாரதியை விமரிசிப்பது இக்காலத்தில் சாத்தியமா

ஸ்ரீராம். said...

அந்தக் காலத்தில் பாரதியார் மதுரையிலிருந்து பேரையூருக்கு எப்படிச் சென்றிருப்பார்? புத்தக வெளியீடு போல, தனது படைப்பை வெளியிட அவர் சிரமம் எடுத்துக் கொண்டிருக்கிறார் என்று தெரிகிறது. அதே சமயம் ஒரு நொடியில் ஒருவரது கருத்துக்காக அதைக் கிழித்தும் எறிந்து விடுகிறார். புதிய தகவல்கள்.

தனிமரம் said...

பாரதியாரின் பன்முக ஆளுமைக்கு வழிகாட்டியது சுதேசமித்திரன் பணிக்காலம். அறியாத தகவல் பல தருகின்றீர்கள்.

ஜீவி said...

@ ஜிஎம்பீ

பாரதி ஒரு போராளி. சும்மா கதை, கட்டுரை, கவிதை எழுதிக் கொண்டு அவற்றைப் பிரசுரித்து காசு பார்த்துக் கொண்டு இருந்தவனில்லை. சுதந்திரப் போராட்ட களமிறங்கி போராடியிருக்கிறான். பரிதாபம் என்னவென்றால் வாழ்ந்த 39 வயதில் 22 வயதிற்கு அப்புறம் வாழ்ந்த 17 வருடங்களில் அவனது போராட்ட வாழ்வின் வரலாறு அத்தனையும் அடக்கம். குடும்பத்தோடு சேர்ந்து வாழ்ந்த காலம் ரொம்பவும் குறைச்சல். பிரிட்டிஷ் அரசால் தேடப்படும் நபராக அலைக்கழிக்கப் பட்டிருக்கிறான். பிரிட்டிஷாரால் வேட்டையாடப்பட்டு பதுங்கு குழியில் மாட்டிக் கொண்டாற் போல பரிதவித்த பொழுதும் சுதந்திர வேட்கையை மறந்தானில்லை; அவனின் கொள்கைப் போராட்டத்தில் எள்ளளவும் முனை மழுங்கவில்லை.. சுதந்திரக்கனவில் சுதந்தரத்திற்கு முன்னேயே, 'ஆனந்த சுதந்திரம் அடைந்து விட்டோம்..' என்று பள்ளு பாடிய மஹா புருஷன்! தமிழர்களின் உள்ளங்களை மலர்ந்து விரியச் செய்த மாமனிதன்.

'தாம் நடு வயதிலேயே மறைந்து விடுவோம் என்று அவருக்குத் தெரியுமோ என்னவோ, கையில் அகப்பட்ட சந்தர்ப்பங்களைக் கைநழுவிப் போகும்படியாக விட்டு விட்டு, சந்தர்ப்பமே வாய்க்கவில்லையே என்று பொய்யாக உளறும் மனிதர்களைப் போல அவர் செய்ததே கிடையாது. செய்ய வேண்டியதை இன்றே செய்வதும், அதை இப்பொழுதே செய்வதும் தான் பாரதியாரின் சுபாவம்' என்று வ.ரா. எழுதுகிறார்.

சூத்திரம் போல ஓரிரு வார்த்தைகளில் சொல்கிறேன். "எவனொருவன் தன் சொந்த நலன் களைப் புறக்கணித்து விட்டு அதைப் பற்றியே சிந்தனை இல்லாமல், வெகுஜன மக்களின் நல் வாழ்வுக்காக போராடுகிறானோ அவனை சின்னச் சின்ன விஷயங்களில் சிறைப்படுத்தி 'இப்படி இருந்தானே, அப்படி இருந்தானே' என்று விரல் நீட்டி குற்றம் குறை காண்பது அடாத காரியம்; அவ்வளவு தான் எனக்குச் சொல்லத் தோன்றுகிறது.

ஜீவி said...

@ ஸ்ரீராம்

பேரையூருக்கு என்ன காரணத்திற்காக சென்றாரோ?.. மதுரை நண்பர்களோடு சென்றிருக்கிறார் என்று தெரிகிறது.

பாரதியாரிடம் வேகம் ஜாஸ்தி. கம்ப இராமாயணம் பால காண்டத்தில் வருமே--

தடுத்து இமையாமல் இருந்தவர் தாளின்
மடுத்ததும் நாண் நுதி வைத்ததும் நோக்கார்
கடுப்பினில் யாரும் அறிந்திலர் கையால்
எடுத்தது கண்டனர் இற்றது கேட்டார்.

என்பது போல பெரியவர் சங்கப்பா சொன்னதும் அதையே வேத வாக்காகக் கருதி கிழித்தெறிந்து விட்டார் போலும்.

இந்த மாதிரி என் வாழ்க்கையிலும் நேர்ந்திருப்பதால் பாரதியார் கிழிந்தெறிந்த வேகம் புரிகிறது.

படைப்பை வெளியிடுகிறதாவது?.. இவர் எழுதி பத்திரிகைகளில் வெளிவந்ததோடு சரி என்று நினைக்கிறேன். இவர் காலத்தில் இவர் எழுதியவை புத்தகமாக வெளிவந்திருக்கிறதா தெரியவில்லை. பாரதியார் பற்றி சேகரம் பண்ணும் குறிப்புகளில் இது பற்றி ஏதாவது தகவல் தெரிகிறதா என்பதையும் கவனத்தில் கொள்கிறேன்.

நன்றி, ஸ்ரீராம்.

ஜீவி said...

@ தனிமரம்

தொய்வில்லாது தொடர்ந்து வாசித்து வருவதற்கு நன்றி, நண்பரே!

Thulasidharan V Thillaiakathu said...

புதிய புதிய தகவல்கள்! நீங்கள் சொல்லியிருப்பது போல பாரதியின் வாழ்க்கையை ஊன்றிக் கவனித்தால் நிறைய புரிபடும் தான்.

எல்லோரது விருப்பத்திற்கும் இணங்கிப் போகும் குணமும் தெரிகிறது என்று நீங்கள் குறிப்பிட்டது கிழித்தலிலும் இருக்கிறதோ. ஒருவரின் கருத்திற்காகத் தன் படைப்பையே கிழித்துவிடுகிறாரே...

(கீதா: அவரது நடையே...(நேரில் கண்டதில்லை ஆனால் பாரதியார் திரைப்படத்தில் பாரதியின் இயல்பை நன்றாகப் பிரதிபலித்திருப்பார் அந்த நடிகர் என்றே தோன்றுகிறது. அந்த நடை வேகமே சொல்லும் பாரதியின் மனமே மிகவும் வேகநடை போடும் என்று. இல்லை என்றால் கிழித்திருப்பாரா? யோசிக்காமல்...கிழித்திருக்கவில்லை என்றால் நமக்கு வாசிக்க அவரது படைப்பு கிடைத்திருக்குமே!! அவரது மனம் வேக வேகமான சிந்தனைகள் உடையது என்றும் தோன்றுகிறது அதனால்தான் எத்தனை அருமையான படைப்புகள் தோன்றியதும் எழுதிவிடும் ஆற்றல்??!!! இல்லையா!! )

இன்னும் பல புதிய தகவல்கள் அறிய முடியும் என்று தோன்றுகிறது...தொடர்கிறோம்

துளசிதரன், கீதா

ஜீவி said...

@ துளசிதரன்

//எல்லோரது விருப்பத்திற்கும் இணங்கிப் போகும் குணமும் தெரிகிறது என்று நீங்கள் குறிப்பிட்டது கிழித்தலிலும் இருக்கிறதோ. ஒருவரின் கருத்திற்காகத் தன் படைப்பையே கிழித்துவிடுகிறாரே...//

போராளிகளுக்குத் தனிப்பட்ட விருப்பம் என்று ஏதும் கிடையாது. பொது முடிவுக்குக் கட்டுப்பட்டவரே. ஒருவருக்கு ஏற்படும் பாதிப்பு பலரின் பாதிப்பாகி விடும் என்பதினால் தக்க யோசனைகளுடன் சிலதை தவிர்த்து விடல் நல்லதே.

படைப்பு பெரிய விஷயமல்ல. ஆனால் அதனால் நேரும் வேண்டாத அலைக்கழிப்புகளை கருத்தில் கொண்டால் பாரதி செய்தது சரியே. உருப்படாத விஷயங்களுக்கு சிலரின் பகையை சம்பாதித்துக் கொண்டு அவதிப்படாமல் பிரிட்ஷாரின் அடக்குமுறைகளை நேரடியாகக் கண்டித்து எழுதியதால் தான்-- கடைசியில் தன் எழுத்தின் தீரத்திற்காகத் தான்-- பாரதி வேட்டையாடப்பட்டதால் புதுவை போக நேர்ந்தது.

ஜீவி said...

@ கீதா

அந்த நடிகர் பாரதியின் பெயரையே கொண்டவர். எஸ்.வி. சுப்பையா இல்லையா?
பாரதி வேடிக்கை கதைகள் என்று சில கதைகள் எழுதியிருக்கிறார். அந்த மாதிரியில் அந்தக் கதை இருந்திருக்கும். இவை மாதிரி அல்லாத அவரது முக்கியமான படைப்புகள் தாம் நமக்கு முக்கியம். அதனால் கிழித்தது பெரிய விஷயமல்ல என்று எனக்குத் தோன்றுகிறது.

ஜீவி said...

@ கீதா

பாரதி ஆசுகவி. பல பாடல்கள் உணர்வுகள் உந்தி அந்தந்த நேரத்தில் அவரிடமிருந்து வெளிப்பட்டது தான். முதலில் பாடலாகப் பாடி பின்னால் நினைவில் தேங்கியதை எழுதுவது. அதனால் எழுதுவது என்பது பின்னால் இருந்திருக்கும். அப்படியாக என் நினைப்பு.

பாரதியாரின் கீர்த்தனைகள் ராகம், தாளம் இலக்கணங்களுக்குக் கட்டுப்பட்டவை. சங்கீதத்திலும் தேர்ச்சி பெற்றவர்களால் தான் இதெல்லாம் சாத்தியமாகும்.

Related Posts with Thumbnails