மின் நூல்

Saturday, February 3, 2018

பாரதியார் கதை --8

                                                   அத்தியாயம்--8

நிர்வாக வசதிகளுக்காக வங்காளம் இரண்டாகப் பிரிக்கப்படும் என்ற அறிவிப்பு  வந்தவுடனேயே வங்காளத்தில் இந்த பிரிவினையை எதிர்கொள்ளும் மக்கள் நடவடிக்கைகள் ஆரம்பமாகி விட்டன.  அங்கங்கே  பொதுக் கூட்டங்கள் போட்டு ஆர்ப்பாட்டங்கள்,    அன்னியர் துணிகளை பகிஷ்கரிப்பது,  கிளர்ச்சிகள்  என்று வங்கப்  பிரிவினையை எதிர்த்த போராட்டங்கள் தேசமெங்கிலும் பல்வேறு ரூபங்கள் எடுத்தன.

 கடைசியில் போராட்டக் களத்தின் முழுமையான வடிவமாய்  சுதேசி இயக்கம் என்ற பெயரில்  மக்களைத் திரட்டும்  பணி ஆரம்பமாயிற்று.

இந்த சுதேசி இயக்கம் பாரதியின் மனசை வெகுவாகக் கவர்ந்தது.  தமிழகத்து குரலாய் சென்னைக் கடற்கரையில் முதல் எழுச்சிக் கூட்டம் செப்டம்பர் 15-ம் தேதி நடைபெற்றது.   இந்தக் கூட்டத்தில்  உணர்வு பூர்வமாய் கலந்து கொண்ட பாரதி,  வங்கத்திற்கான தனது வாழ்த்துக் கவிதைகளை தூதாக அனுப்பினான்.  பொதுக்கூட்டத்தில் 'வங்கமே வாழியவே'  என்று வங்கப் போராட்டத்திற்கான கவிதைகளை ஓதினான்.     

வங்கப்  பிரிவினை அதிகாரபூர்வமாய் அமுலுக்கு வந்த அக்டோபர் 16-ம் தேதி நாடு பூராவும் ஒற்றுமை நாளாகக் கொண்டாடப்பட்டது.  ராக்கி கயிறை அணிந்து கொண்டு ஒருவொருக்கொருவர்  சகோதரத்தை வெளிக்காட்டிக் கொண்டனர்.

மாணவர்களுடன் பாரதி கொண்டிருந்த தொடர்புகளும் முக்கியமானது.  சென்னை பச்சையப்பன் கல்லூரி, கிருஸ்தவக் கல்லூரி, மாநிலக் கல்லூரி மாணவர்கள் பாரதியின் கடற்கரை கலந்துரையாடல்களில் கலந்து கொண்டனர்.   திருவல்லிக்கேணி விளையாட்டரங்கம் என்ற பெயரில் மாணவர்கள்  சுதந்திரமாக கலந்து கொள்வதற்கு ஏற்பாடுகள் மேற்கொண்டு அங்கெல்லாம் சுதேச இயக்கத்தின் வளர்ச்சிக்கு  வழி வகுக்கப்பட்டன.

பாரதியின் இலட்சியம்  முப்பரிமாணம் கொண்டது.   ஆங்கில ஆதிக்கத்திற்கான எதிர்ப்பு,   மக்களின் அறியாமை இருட்டுக்கு வெளிச்சம் பாய்ச்சும் முயற்சி,   மிதவாதம்--தீவிரவாதம் என்று பிரிந்திருந்த சுதேச இயக்கத்தின் தீவிரவாத போக்கை ஆதரிப்பது என்று பாரதி தீர்க்கமான முடிவுகளைக் கொண்டு அவற்றிலிருந்து இம்மியும் பிசகாது போர்த்தந்திரங்களை மேற்கொண்டது இப்பொழுது நினைத்துப் பார்த்தாலும் ஆச்சரியமேற்படுத்துகிறது.   அவர் மேற்கொண்ட இந்த மும்முனை போராட்டத்திற்கு அத்தாட்சியாக அவரது பல கவிதைகளை மேற்கோள்  காட்டலாம்.

பாரதியைப் பொறுத்த மட்டில் தீவிரவாதத்தை  தனிநபர் சாகசங்களாகப் பார்க்காமல் வெகுஜன  மக்கள் கலந்து கொள்ளும்   அறப் போராட்டங்களாகவே  பார்த்திருக்கிறார்.  அன்னிய  ஏகாதிபத்தியதின் அருட் பார்வைக்காக பெட்டிஷன்கள்  கொடுத்துக் கொண்டு 'மயிலே, மயிலே, இறகு போடு' என்று  காத்திராமல்  தெருவில்  இறங்கிப்  போராட வேண்டும் என்பதான வழி முறைகளை ஆதரித்து சுதேச இயக்கத்தில் திலகரின் தலைமையை ஏற்கிறார்.

'வாழ்க திலகன் நாமம் வாழ்க,   வாழ்கவே!
நாலு திசையும் ஸ்வாதந்தர்ய நாதம் எழுகவே!
நரக மொத்த அடிமை வாழ்வு நைந்து கழிகவே!
ஏலு மனிதர் அறிவை யட்ர்க்கும் இருள் அழிகவே
எந்த நாளும் உலக மீதில் அச்சம் ஒழிகவே!
................................................................................
அன்பெனுந்தே  னூறித் ததும்பும்
புதுமலர் அவன் பேர்
ஆண்மை யென்னும் பொருளைக் காட்டும்
அறிகுறியவன் பேர்'......

-- என்று  பெருமை பொங்க திலகர்  தலைமையைப் போற்றுகிறார்.

எக்காலத்திலும் அந்தந்த காலகட்டத்தில் ஒருவருக்கு அமையும் நண்பர்கள்
மிக முக்கியமானவர்கள்.  நண்பர்களின் பெருமை சொல்லவும் கூடுமோ?..
இந்த காலகட்டத்தில் பாரதியாருக்கு அமைந்திட்ட உயிர்த் தோழர்களைப் பற்றிக் குறிப்பிட வேண்டும்.
**எஸ். துரைசாமி ஐயர்,   பாரதியாரின்  பேரில், அவர் கவிதைகளின் மேல் பெரும் பக்தி கொண்டவர்.  கள்ளங்கபடமற்றவர்.  எந்த நேரத்திலும்
பாரதியாரின் முகக்குறிப்பு அறிந்து அவர் கேட்கும் முன்பே பல  உதவிகள் செய்தவர்.  எந்த உதவியையும் பி வர். சுய மரியாதை இயக்கம் சார்ந்தும் சில காலம் இருந்திருக்கிறார்.
                                                                                                         
வி. சர்க்கரைச் செட்டியார் இன்னொருவர்.   தமிழக தொழிற்சங்க முன்னோடி.   திருவிகவின் தோழமையுடன் களப்பணி நடத்தியவர்.  தேசிய இயக்கத்தின் பால் அளப்பரிய காதல் கொண்டவர்.           

மண்டையம் எஸ்.என். திருமலாச்சாரியார்.  வசதிபடைத்தவர்.  பாரதியார் பிற்காலத்தில் நடத்திய 'இந்தியா' பத்திரிகைக்கு பெரும் அளவில் பொருளாதார உதவிகள் செய்தவர்.

மண்டையம் சீனுவாசாச்சாரியார் 'இந்தியா' பத்திரிகையின் பங்குதாரர்களில் ஒருவர்.  சென்னையிலும் சரி, புதுவையிலும் சரி பாரதியாரின் ஆத்ம நண்பராய் இருந்தவர் இவர்.

டாக்டர் எம்.ஸி. நஞ்சுண்டராவ் மயிலாப்பூரில் மருத்துவராக பணியாற்றி
வந்தவர்.  பெரியவர்.  தேசபக்தர். நெருக்கடியான நேரங்களில் பாரதிக்கு பல உதவிகள் செய்திருக்கிறார்.  பாரதியாரிடம் பேரன்பு கொண்டவர்.

கிருஷ்ணசாமி  அய்யர் என்ற காவல் துறை நண்பர் கூட பாரதியாருக்கு நெருக்கமாய்  இக்கட்டான  நேரங்களில் பல உதவிகள் செய்திருக்கிறார்.  பாரதியாரின் நட்பு வட்டத்தில் இவரும் ஒருவராய் இருந்திருக்கிறார்.

1905-ல் கோபால கிருஷ்ண  கோகலே தலைமையில் நடந்த காங்கிரஸ் மாநாட்டில் இளைஞர் காங்கிரஸ் பிரதிநிதியாக பாரதியார் கலந்து கொண்டிருக்கிறார்.  1906-ல் கல்கத்தாவில் தாதாபாய் நெளரோஜி தலைமையில்  நடைபெற்ற காங்கிரஸ் மாநாட்டிலும் பாரதியார் கலந்து கொண்டிருக்கிறார்.

***  கல்கத்தா சென்றிருந்த  பொழுது****சகோதரி நிவேதிதா சொற்பொழிவு அறிவிப்பைப் பார்த்தவர்,  அவர் சொற்பொழிவு நடந்த ராமகிருஷ்ணா மடத்திற்குப்  போகிறார்.   முழு உரையையும்   கேட்டவர், கூட்டத்திற்கு வந்த எல்லோரும் அந்த இடத்தை விட்டு அகன்றும் இவர் மட்டும்  அந்த சொற்பொழிவை செவிமடுத்த பிரமையில்  உட்கார்ந்திருக்கிறார்.

அமர்ந்திருந்த பாரதியின் அருகே  நிவேதிதா வந்ததும், சட்டென்று எழுந்திருந்து அவரை நமஸ்கரிக்கிறார் பாரதி.                                                                                                      ப்ரியத்துடன்,   "Do you want to meet me Mr. Gentleman?  Who are you?.. I think  I have seen you  somewhere in India"  என்று  சகோதரி  நிவேதிதா பாரதியை கேட்டாராம்.

"Yes Madam..  We met at Varanasi" என்றாராம் பாரதியார்.

"Oh yes, You are correct.  Welcom, welcome.." என்று பாரதியை நினைவு  கொண்டிருக்கிறார் நிவேதிதா.

"I want to discuss women's liberation and welfare of women in India" என்று சொல்லியிருக்கிறார் பாரதி.

சடக்கென்று, "Are you married?" என்று  கேட்டிருக்கிறார் நிவேதிதா.

பாரதி, "Yes.." என்றதும், "Where is she?" என்று வினவியிருக்கிறார் நிவேதிதா.

"She is in  KADAYAM, a village in  South.." என்றிருக்கிறார் பாரதியார்.

நிவேதிதா புன்னகைத்து விட்டுச் சொன்னாராம்."Please go and bring your wife and  keep her with you.  Then you think about others.." என்றாராம்.
                                                                                                                 
'பெண்கள் நலன் பற்றிப் பேசும் நீங்கள்,உங்கள் வீட்டில் உள்ள பெண்களுக்கு சுதந்திரம் அளிக்க வேண்டாமா?  அதைச் செய்து விட்டு அதிலிருந்து தொடங்குகள்..' என்று நிவேதிதா சொன்னதைப் புரிந்து  கொண்டிருக்கிறார் பாரதி.

நிவேதிதா போட்ட போடு உடனே பாரதியை கடயம் அனுப்பியிருக்கிறது. ஒன்றரை  மாதம் கழித்து  செல்லம்மாவை அழைத்துக் கொண்டு மீண்டும் காசி வந்தாராம் பாரதி.

சிலர் சில நேரங்களில் சொல்கின்ற சில வார்த்தைகள்  கல்வெட்டு பதிவு போல பதிந்து
காலாதிகாலத்திற்கு வாழ்க்கையை  நெறிப்படுத்துவது போல அமைந்து விடும்.

பெண்கள் நலன் மட்டுமல்ல,  ஆண்-பெண் சம உரிமை,  கடவுள்  மறுப்பு போன்ற முற்போக்காகத் தன்னைக் காட்டிக் கொள்ள முயலும் பல விஷயங்கள் ஊருக்குத் தான் உபதேசம், வீட்டுக்குள் இல்லை என்றளவிலேயே இருந்து  கொண்டு சகோதரி நிவேதிதா சொன்ன வார்த்தைகளை  எக்காலத்தும் நினைவுபடுத்திக் கொண்டே இருக்கின்றன.


(வளரும்)                                       
                                                                           
                                                                                       
=======================================================================

** வ.ரா.வின் 'பாரதியாரின் வரலாறு'  நூல்

***  பாரதியாரின்  மருமகன்  பேராசிரியர் கிருஷ்ணன்  சிவன் ஒரு பேட்டியில் சொல்லியிருந்த தகவல்களிலிருந்து திரட்டியது.

**** சகோதரி நிவேதிதாவின்  இயற்பெயர் மார்கரெட் எலிசபெத் நோபல். ஆங்கில--ஐரிய பெண்.  சுவாமி விவேகானந்தரின்  முதன்மைச் சீடர்.  1895-ல் இலண்டனில் விவேகானந்தரைச் சந்தித்தவர் அவர் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டு அடுத்த முன்று ஆண்டுகளில் இந்தியா வருகிறார்.  கல்கத்தாவில் தங்குகிறார்.  தெய்வத்திற்கு அர்ப்பணிப்பு என்னும் பொருள்  படும் நிவேதிதா என்னும் பெயரை இவருக்குச் சூட்டியவர் சுவாமி விவேகானந்தர்.  கல்கத்தாவில் அன்னை சாரதா தேவியுடன் உரையாடுவதற்காகவே இவர் வங்க மொழியைக் கற்றுத் தேர்ந்தார் என்று சொல்வார்கள்.     இந்து சமயத்து  பிரம்மச்சரிய தீட்சை பெற்ற முதல் மேற்கத்திய பெண் இவராவார். 

=======================================================================

படங்கள் உதவியோருக்கு நன்றி.

9 comments:

G.M Balasubramaniam said...

படிக்கப் படிக்கத்தான் தெரிகிறது பாரதிபற்றி நான் அறிந்தது கடுகளவு என்று தொட ர்கிறேன்

ஜீவி said...

@ GMB

பாரதியின் கவிதைகளுக்கே முக்கியத்துவம் தந்து பேசப்படுவதால் அவர் வாழ்ந்த வாழ்க்கையின் முழுமை பரவலாகத் தெரியாமலேயே போய்விட்டது. சுதந்திர இந்தியாவிலும் வேறு சில காரணங்களுக்காக அவரது வாழ்க்கை நிகழ்வுகள் இருட்டடிப்பு செய்யப் பட்டிருப்பதாக யூகிக்க முடிகிறது.

தாங்கள் தொடர்ந்து ஆர்வத்துடன் வாசித்து வருவதற்கு நன்றி, ஐயா.

நெல்லைத் தமிழன் said...

நிறைய தகவல்கள் தெரிந்துகொள்கிறேன். இன்டெரெஸ்டிங் ஆகச் செல்கிறது. தொடர்கிறேன்.

ஜீவி said...

@ நெல்லைட்ய் தமிழன்

நன்றி, நெல்லை. நானும் தொடர்கிறேன்.

ஸ்ரீராம். said...

திரு ஆர்யா ஓவியங்களும் வரைவார் என்று படித்திருக்கிறேனோ? அவரின் படமும், சர்க்கரை செட்டியார் படமும் கிடைப்பது கடினம் இல்லை? ஸிஸ்டர் நிவேதிதா சொல்லியிருப்பது பற்றியும் படித்திருக்கிறேன். ஆனால் அதை மனதில் பதிந்து உடனே செயலில் காட்டிய பாரதி பெரிய மனிதன்.

ஜீவி said...

@ ஸ்ரீராம்


//திரு ஆர்யா ஓவியங்களும் வரைவார் என்று படித்திருக்கிறேனோ//

இவர் வேறு ஆர்யா, ஸ்ரீராம். ஓவியர் ஆர்யா பாரதியாரின் உயிரோவியத்தை வரைந்தவர். பாஷ்யம் என்ற பெயர் கொண்டவர். சென்னை செயிண்ட் ஜார்ஜ் கோட்டையில் யூனியன் ஜாக் கொடி இறக்கி தேசியக் கொடியை ஏற்றிய தீரர்.

பாரதியாரின் நண்பர் ஆர்யா, சுரேந்திரநாத் ஆர்யா. இவரது இயற்பெயர் எத்திராஜ்.

இந்த இரு ஆர்யாக்களில் வாசிப்பவருக்கு குழப்பம் இல்லாமல் இருக்க அடிக்குறிப்பு எழுதுகிறேன்.

ஜீவி said...

@ ஸ்ரீராம்


//ஆர்யாவின் படமும் சர்க்கரை செட்டியார் படமும் கிடைப்பது கடினம் இல்லை?//

தேடித் தேடி பார்த்து முடியாமல் தான் படம் கிடைக்கவில்லை. இருந்தாலும் நப்பாசை இருக்கிறது. எப்படியும் போட்டுவிட முயற்சி செய்கிறேன்.


இதில் வேடிக்கை என்னவென்றால் immage--ல் ஆர்யா என்று தேடி போட்டு விடலாம் தான்.
ஆர்யா என்று நடிகர் ஒருவர் இருக்கிறார் இல்லையா, அவர் தோற்றம் கூட எனக்குத் தெரியாது. அவர் படத்தைப் போட்டு இமாலயத் தவறைச் செய்ய வேண்டாமே என்று தான்.

சிலரைப் பற்றிச் சொல்லும் பொழுது அந்தந்த இடங்களில் அவர்களின் படங்களைப் போடாவிட்டால் ஒரு குறையாகத் தான் உண்ர்கிறேன். இருந்தாலும் முயற்சி செய்கிறேன்.

செயல்வீரர் பாரதியை பெரிய மனிதன் என்று நீங்கள் உவந்து மகிழ்ந்தது நெகிழ்ச்சியாக இருந்தது.

தொடர்ந்து வாசித்து வாருங்கள்.

ஜீவி said...

@ ஸ்ரீராம்

ஒரு வழியாக தீரர் ஆர்யாவின் படத்தைப் போட்டாயிற்று.

சக்கரை செட்டியார் தான் பாக்கி. தமிழகத் தொழிற்சங்க முன்னோடி. அதே வேலையாகத் தேடினால் கிடைத்து விடுவார் என்ற நம்பிக்க இருக்கிறது. எனது தொழிற்சங்க தொடர்பு காலங்களில் சர்க்கரை செட்டியாரைப் பற்றி நன்றாக அறிந்திருந்தும் யாரின் புகைப்படங்களையும் முக்கியமாகக் கொள்ளாத போக்கில் வளர்ததினால் இப்பொழுது கண்டு பிடிக்க சிரமமாக இருக்கிறது.

மதுரை கிருஷ்ண மூர்த்தி சார் கண்டுபிடித்துச் சொல்வார் என்ற நம்பிக்கை இருக்கிறது. பார்க்கலாம்.

ஜீவி said...

// சர்க்கரை செட்டியார் படமும் கிடைப்பது கடினம் இல்லை?//

யூரேகா!.. சர்க்கரைச் செட்டியார் படம் கிடைத்து விட்டது. ஆனால் வலையேற்ற முடியவில்லை. ஏதோ தொழிற்நுட்ப சிக்கல்.. பார்க்கலாம்.

Related Posts with Thumbnails