அத்தியாயம்-- 10
பால பாரத சங்கம் என்ற அமைப்பை பாரதியார் மிகுந்த முயற்சிகளை மேற்கொண்டு நிறுவினார். இந்த சங்கத்தின் சார்பில் சுதேசி இயக்கத்தை பலப்படுத்த பல கலந்துரையாடல்களும், பொதுக் கூட்டங்களும் நடைபெற்றன. பாரதி விஜயவாடாவில் இருந்த விபின் சந்திர பாலரைச் சந்தித்து பால பாரத சங்க திருவல்லிக்கேணி கடற்கரைக் கூட்டத்தில் பேச அழைத்து வருகிறார்.
1907 செப்டம்பரின் விபின் சந்திர பாலர் பிரிட்டிஷ் அரசால் கைது செய்யப் படுகிறார். அவருக்கு ஆறு மாத கால காராகிரக தண்டனை. இந்த அநியாயக் கைதையும் தண்டனையையும் எதிர்த்து பால பாரத சங்கம் சார்பில் பொதுக் கூட்டம் போட்டு பாரதி முழங்கினார். பாரதி தலைமையில் கண்டன ஊர்வலமும் சென்னையில் நடக்கிறது. இந்த கால கட்டத்தில் பாரதி
சூரத் காகிரஸுக்கான தமிழகப் பிரதிநிதிகளைத் திரட்டும் முயற்சியிலும் ஈடுபடுகிறார்.
கலகத்தா காங்கிரஸூக்கு அடுத்த காங்கிரஸ் மாநாடு நாக்பூரில் நடப்பதாகத் தான் இருந்தது. ஆனால் திலகர் வழியில் தீவிரமாக செயல்படுவோரை உள்ளடக்கிய பிரதேசம் என்ற கருத்தில் நாகபுரியில் நடப்பதாக இருந்த காங்கிரஸ் மாநாட்டை அந்நாட்களில் மிதவாத கோட்டையாக இருந்த சூரத்திற்கு மாற்றி விட்டனர்.
1907-ம் ஆண்டு டிசம்பர் 26-ம் தேதி இந்திய தேசிய காங்கிரஸின் மாநாடு சூரத்தில் தொடங்கியது. 600-க்கு மேற்பட்ட பிரதிநிதி நாட்டின் பல பாகங்களிலிருந்தும் வந்திருந்தனர். மாநாட்டிற்குத் தலைவராக ராஷ் பிகாரி கோஷ் செயல்பட்டார். கோஷின் தலைமையை நேரு ஆதரித்தார்.
இந்த காங்கிரஸ் மாநாடே பிரிட்டிஷ் ஆட்சியாளர்களின் நடவடிக்கைகளை அனுசரித்துப் போவதான மிதவாத போக்குக்கும், அவர்களை எதிர்த்து தீவிர போராட்டங்களை நிகழ்த்த வேண்டும் என்று துடித்த தீவிரவாத போக்குக்குமான வாக்குவாதங்களைக் கண்ட மாநாடாக அமைந்தது. திலகர் இரண்டு பிரிவும் ஒத்துக் கொள்கிற ஒரு சமரசப் போக்கினை நிலைநாட்ட ஆன மட்டும் முயற்சி செய்தார்.
சூரத் மாநாட்டில் திலகரின் ஆதரவாளர்களாக வ.உ.சிதம்பரம் பிள்ளை, சுப்பிரமணிய சிவா, பாரதியார் உள்ளிட்ட நூற்றிற்கும் மேற்பட்ட தமிழகப்
பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். சூரத் காங்கிரஸில் ஏற்பட்டப் பிளவுக்குக் காரணம் தமிழ் நாட்டுப் பிரதிநிதிகளின் முரட்டுத்தனத்தால் தான் என்று அந்தக் காலத்தில் பரவலான ஒரு குற்றச்சாட்டு வலம் வந்தது.
சூரத் மாநாட்டிலிருந்து சென்னை திரும்பியதும் பாரதியார் மேள தாள முழக்கங்களுடன் மக்கள் அணி திரள பொதுக்கூட்டம் ஒன்றை நடத்தினார்.
மக்களிடம் சுதேசிய பொருட்களையே உபயோகிப்போம் என்ற உணர்வு ஓங்கியது. 'பாரத் பந்தர்' என்ற பெயரில் சுதேசிய பொருட்கள் விற்கும் கடையொன்று திறக்கப்பட்டது. பாரதியாரும், வ.உ.சியும் சுதேசிய பொருட்களை வாங்கி உபயோகப்படுத்துவதற்கான பிரச்சாரங்களை மேற்கொண்டனர்.
சூரத் மாநாடு பற்றிய முழு விவரங்களை பாரதி 'இந்தியா' பத்திரிகையிலும் எழுதினார். பின்னர் அதைத் தொகுத்து 'எங்கள் காங்கிரஸ் யாத்திரை' என்ற பெயரில் 2 அணா விலையுள்ள புத்தகமாக வெளியிட்டார். 'இந்தியா' பத்திரிகையில் பாரதி வாராவாரம் 'ஞானரதம்' என்ற தலைப்பில் எழுதி வந்த கட்டுரைத் தொடர் அந்நாளைய பத்திரிகை வாசிக்கும் பழக்கமுடைய தமிழர்களால் மறக்க முடியாத் ஒன்று. பாரதியின் வசீகரமான நடை, தமிழ் மொழியின் மயக்கும் அழகை தன் எழுத்துக்களில் கையாண்ட பாங்கு, தேசச் செய்திகளைத் தொகுத்தளித்த திறமை எல்லாம் இந்தியா பத்திரிகைக்கு திலகம் வைத்த அழகு போல மிளிர்ந்தன. பின்னால் எட்டணா விலையில் 'ஞானரதம்' பகுதி தொகுக்கப்பட்டு புத்தகமாக வெளிவந்தது.
எதைச் செய்தாலும் அதற்கு மேலாக என்ன செய்ய வேண்டும் என்று எந்நேரமும் செயல்பட்டுக் கொண்டே இருக்கும் குணம் தான் பாரதியாரை இயக்கிக் கொண்டே இருந்தது போலும்.
'இந்தியா' பத்திரிகை கிட்டத்தட்ட நாலாயிரம் பிரதிகள் விற்பனையை நிச்சயப்படுத்தியது. பிரம்மவாதின் என்று பெயரிடப்பட்ட அச்சுக்கூடத்திலிருந்து பத்திரிகை வெளிவந்து கொண்டிருந்தது. ஆங்கிலம் அறிந்த தமிழரிடையே சுதந்தர உணர்வை பற்றச் செய்வதற்காக 'பால பாரத்' என்ற ஆங்கில பத்திரிகையும் அதே அச்சகத்திலிருந்து 'இந்தியா' பத்திரிகையின் இணை இதழ் போல வெளிவர பாரதியார் அந்தப் பத்திரிகையிலும் எழுதினார்.
&& 'இந்தியா' பத்திரிகையின் முதல் பதிவு (Registration) 4-5-1906 அன்று எஸ்.என். திருமலாச்சாரியை உரிமையாளரகாவும் ஆசிரியராகவும் கொண்டு பதிவு செய்யப் பட்டிருக்கிறது. 31-5-1907-ல் எம். ஸ்ரீனிவாசனை உரிமையாளராகவும் பாரதியை
ஆசிரியராகவும் கொண்டு பத்திரிகை வெளிவருவதாக அரசாங்கத்திற்கு சமர்ப்பிக்கப்பட்ட பதிவுத் தகவல்கள் சொல்கின்றன. பிறகு 7-8-1907 பதிவுத் தகவல்களின்படி எம்.பி. திருமலாச் சாரியாரை உரிமையாளராகவும், அவரே ஆசிரியாராகவும் பதிவுத் தகவல்கள் மாறியிருக்கின்றன. ஆக பாரதியார் 31-5-1907-லிருந்து 6-8-1907 வரை மட்டுமே அரசாங்கத்திற்கு அனுப்பட்ட தகவல்களின் அடிப்படையில் 'இந்தியா' பத்திரிகைக்கு ஆசிரியராக இருந்திருக்கிறார். மீண்டும் 18-11-1907-ல் பதிவுத் தகவல்கள் மாற்றப்பட்டிருக்கின்றன. இப்பொழுது எம்.ஸ்ரீனிவாசன் பத்திரிகை உரிமையாளராகவும், ஆசிரியராகவும் செயல்பட்டிருக்கிறார். 15-8-1908-ல் எஸ்.என். திருமலாச்சாரியார் இந்தியா பத்திரிகையின் உரிமையாளராகவும், ஆசிரியராகவும் பொறுப்புக்களை ஏற்றுக் கொண்டிருக்கிறார். இந்தத் தகவல்களிலிருந்து எந்த அளவுக்கு அரசாங்கத்தின் கழுகுப் பார்வை 'இந்தியா' பத்திரிகையின் மீது உக்கிரமாக படிந்திருந்தது என்று அனுமானிக்கலாம். அந்த உக்கிரத்தை மழுங்கடிக்கவே இந்தியா பத்திரிகை நிர்வாகிகள் பத்திரிகை சம்பந்தப்பட்ட பதிவுத் தகவல்களை அடிக்கடி மாற்றி எப்படியெல்லாம் வெகு சாமர்த்தியமாக போராடியிருக்கிறார்கள் என்று தெரிகிறது.
கடைசியில் இந்தியா பத்திரிகை வெளியீட்டார்கள் எதிர்பார்த்தது நடந்தே விட்டது. பத்திரிகை கக்கிய எழுத்து வெப்பத்தை சகித்துக் கொள்ள முடியாத பிரிட்டிஷ் அரசு இந்தியா பத்திரிகை உரிமையாளர் திருமலாச்சாரியாருக்கும் பத்திரிகை ஆசிரியர் சீனிவாசனுக்கும் வாரண்ட் பிறப்பித்தது. அவசர அவசரமாகக் கூடிய பத்திரிகையின் முக்கிய குழுவும், நெருங்கிய நண்பர்களும் பாரதியாரை அவர்கள் நெருங்குவதற்குள் காப்பாற்றி விட வேண்டும் என்று பரபரத்தனர்.
(வளரும்)
&& திரு. ஹரிகிருஷ்ணன் அவர்களின் 'ஓடிப்போனானா?' கட்டுரைத் தொடர், தமிழோவியத்தில் வெளிவந்த தொடர்.
படங்கள் உதவிய நண்பர்களுக்கு நன்றி.
7 comments:
வ.வு.சி., சுப்ரமணிய சிவா, திலகர் போன்றவர்களைப் பார்த்ததும் படித்த புத்தகங்கள் ஞாபகம் வந்தன. நாமக்கல் வெ.ராமலிங்கம் பிள்ளை அவர்களோட புத்தகமான 'என் கதை?'யில், இதனைப் பற்றிக் குறிப்பிட்டுள்ளார். (மீண்டும் வாசித்துப் பார்க்கணும்).
பாரதியார் இப்போது சுதந்திரப்போராட்டத்துக்காக தீவிரமாகப் பணியாற்றும் சூழல். அவருடைய திறன் தெரிந்துதான் அவருக்குப் புரவலர்களும் நண்பர்களும் அமைந்திருக்கிறார்கள். தொடர்கிறேன்.
மிகவும் நுணுக்கமான விவரங்கள் பாரதியார் ஆசிரியராக இருந்த காலங்கள் பற்றி. தொடர்கிறேன்.
இத்தனை விவரங்கள் அவரது சுய சரிதையில் இல்லையே
@ G.M. Balasubramiam
// இத்தனை விவரங்கள் அவரது சுய சரிதையில் இல்லையே//
எந்த சுயசரிதையில்? எதைக் குறிப்பிடுகிறீர்கள் என்று தெரிந்தால் உதவியாக இருக்கும்.
@ நெல்லைத் தமிழன்
@ ஸ்ரீராம்
தொடர்ந்து வாசித்து வருவதற்கும் கருத்திடுவதற்கும் நன்றி.
பாரதியைப் பற்றிய அதிகத் தகவல்கள் படிக்கப் படிக்க உற்சாகம்.
நன்றி
@ சிவகுமாரன்
தொடர்ந்து வாசித்து வாருங்கள், சிவா.
Post a Comment