மின் நூல்

Saturday, February 17, 2018

ஆன்மீக அரசியல்

ரசியல் என்கிற வார்த்தை அரசின் சகல தன்மைகளைப் பற்றியும் அவற்றின் இயல்பு பற்றியும் இலக்கணம் வகுத்தாற் போல சொல்லும் சொற்றொடராக பொருள் கொள்ளும் காலம் ஒன்றிருந்தது.

ஆனால் எது பற்றியும் விவரிக்கும் வார்த்தையாக 'அரசியல்' என்ற வார்த்தை சமீபகாலமாக மாறிப் போயிருக்கிறது.   உணவு அரசியல், வியாபார அரசியல்,  வாழ்க்கை அரசியல்,  பொழுது போக்கு அரசியல், நடைமுறை அரசியல் என்று வழக்கத்தில் அரசியல் வார்த்தை உபயோகப்பட்டு வருகிறது.

இந்த வழக்கத்தில் ஆன்மிக வாழ்க்கை முறையின் சகல அம்சங்களையும் அலசி ஆராய்வதின் வெளிப்பாட்டையும் ஆன்மிக அரசியல்  என்று சொல்லலாம்.

நேரடியான அர்த்தத்தில் ஆன்மிகம் என்பது அரசியலா என்பது அடுத்த கேள்வி.

ஆன்மிகம் அரசியலோ இல்லையோ ஆன்மிகத்திற்கு எதிராக நிறுத்தப்படும் ஒன்று இருந்து அந்த எதிரான ஒன்று அரசியலாக உபயோகபடுத்தப்பட்டால் இயல்பாகவே ஆன்மிகவும் அரசியலாக உபயோகமாகிப் போவது நேரிடும்.

ஆன்மிகத்திற்கு எதிர் நாத்திகம் என்றால் ஆன்மிகம் அரசியலாவதைத் தவிர்க்க அல்லது தடுக்க நாத்திகமும் அரசியலாகக் கூடாது.  நாத்திகம் மட்டும் அரசியலாகும் ஆனால் ஆன்மிகம் அரசியலாகக்கூடாது என்றால் நாளடைவில் நாத்திகம் அரசியல் ஆவதில் எந்தப் பயனும் இன்றிப்  போகும்.

அதாவது பாம்பில்லாமல் கீரி இல்லை;   கீரி இல்லாமல் பாம்பில்லை என்கிற நிலை இது.  இன்னொரு விதத்தில் இதையே சொல்லப்  போனால் பாம்புக்கு எதிராக கீரியை நாம் நிறுத்தும் வரை பாம்பும் கீரியும் எதிர் எதிர் நிலையில் நிற்கும். 

கீரியை மட்டும் நிறுத்துவோம்,  பாம்புக்கு இங்கு வேலையே இல்லை என்றால்  கீரிக்கும் வேலை இல்லாது போவதைத் தவிர்க்க இயலாது போகும்.

வெளிச்சமும் நிழலும் போல ஒன்றில்லாமல் இன்னொன்றில்லை என்பது  போல ஆன்மிகமும் நாத்திகமும் ஒரு  நாணயத்தின் இருபக்கங்கள் போல ஒன்றிலேயே ஒன்றாக இருந்து கொண்டு இரண்டு போல நமக்குக்  காட்சி அளிப்பது.

வெகு எளிமையாகச் சொல்ல வேண்டும் எனில், ஆன்மிகம் என்பது அகவயமானது என்ற புரிதலில் நாத்திகத்தை புறவயமானது என்று புரிந்து கொள்ளலாம்.

அகவயமான உணர்வுகளை புறவயமான நிரூபிப்புகளைக் கொண்டு நிரூபிக்கவும் முடியாது,  புறவயமான நிரூபிப்புகளை வரிசைபடுத்திக் கொண்டு அகவயமான உணர்வுகளைப் புரிந்து கொள்ளவும் முடியாது.
புறவய அளவுகோல்களைக் கொண்டு அகவய உணர்வுகளை அறிந்து கொள்ளவும் முடியாது.

அகவய உணர்வுகளை சுயபரிசோதனைகளின் மூலம் அதற்கான முயற்சிகளில் ஆட்பட்டுத்தான் அறிய முடியும்.   அதனால் ஆன்மீகம் என்பது சுய அனுபவங்களின் மூலமாகவே அறிய வேண்டிய ஒன்றாகிறது.  அதாவது ஆன்மிகத்தை அறிவுபூர்வமாக அணுக வேண்டுமெனில் ஆன்மீக உணர்வுகளில் தன்னை நிலைக்களனாக வைத்துக் கொண்டு தன் அறிவு சார்ந்து அகவயமாக  ஆராய வேண்டியிருக்கிறது.  சரியாகச் சொல்ல வேண்டுமானால் உணர வேண்டியிருக்கிறது.

அறிவியல் உண்மைகளோ புறவயமானது.  அதாவது அகவய உணர்வுகளுக்கு நேர் மாறானது.   அதனால் அறிவியல் இயல்பாகவே நாத்திகத்தைச் சார்ந்து நிற்பது.    புறவய ஆய்வுகளின் மூலம் அறிவுலகம் நாள்தோறும் தன்னைப் புதுப்பித்துக் கொண்டே இருக்கிறது.   புதுப்புது நிரூபணங்கள் அறிவுலக வெளிச்சத்தில் அறிமுகமாகி உண்மைகளாகின்றன.  அப்படி உண்மையானவைகளை மட்டுமே அறிவுலகம் ஏற்றுக்  கொள்ளும்.  உண்மையாகாதவைகள் அறிவுலக எல்லைக்குள்ளேயே வராது வெளியேயே நின்று விடும்.  அல்லது நாளைய அறிதலுக்காகக் காத்திருக்கும்.  இதான் அறிவுலக விதி.

இதைப் புரிந்து கொள்ளாது ஆன்மிகத்தை அறிவியலோடு கலந்து அவியலாக்குவதோ,  அறிவியல் உண்மைகளை அடுக்கிக் கொண்டு ஆன்மிகத்தை உரசிப்  பார்ப்பதோ  சரிப்பட்டு வராது.

அதே மாதிரி உளவியலும் இன்று அறிவியல் சார்ந்த ஒரு  ஞானமாகிப் போன  நிலையில் உளவியல் சோதனைகளில் ஈடுபடாமல் ஆன்மிகத்தைப் புறந்தள்ளும் நாத்திக வாதங்களும் எடுபடாது.

அதனால் அகவயப் பார்வை கொண்ட ஆத்திகமும்,  புறவயப்  பார்வை கொண்ட நாத்திகமும் இன்றைய தேவையாகிப் போகிறது.

யோகா என்ற வார்த்தை சர்வ சாதாரணமான புழக்கத்தில் இருக்கும் வார்த்தையாக  இன்று மாறிப்  போயிருக்கிறது.  யோக நிலைகள் ஆன்மிக உணர்வுகளைத் திறக்கும் வாசல் என்ற உண்மைகள் மறக்கப்பட்டு நாத்திக, ஆத்திக வித்தியாசமில்லாமல் அனைவர் வாழ்க்கையிலும் ஒன்றிப் போயிருக்கிறது.

யோகா மாதிரியான, ஆன்மிகம் என்று ஒதுக்கி விடாத, மனதையும் உடலையும் செம்மை படுத்துகின்ற வாழ்க்கைக் கல்வி நிறைய மக்களுக்கு அறிமுகமாக வேண்டும்.

ஆன்மிகம் என்பது வெறும் கடவுள் வழிபாடு  மட்டுமில்லை.  அதே மாதிரியாக நாத்திகம் என்பது வெற்று கடவுள் மறுப்புக் கொள்கை மட்டுமில்லை. 

உண்மையான நாத்திகம் என்பது மார்க்ஸீய சிந்தனையில் புடம் போடப்பட்டு ஜொலிக்க வேண்டும்.   கடவுள் வழிபாடு என்பதும் ஆரம்பப் பள்ளி வகுப்புப் பாடம் மாதிரி தான்.  உண்மையான ஆன்மிகம் என்பதும் கடவுள் வழிபாட்டைத் தாண்டி கடவுள் வழிபாடு மேலும் இட்டுச் செல்கின்ற மகத்தான நல்லுணர்வுகளுக்கு நல்ல செயல்பாடுகளுக்கு வழி நடத்தக் கூடியதாக அமைய வேண்டும்.

ஆன்மிகமும்,  நாத்திகமும் செழுமையான வளர்ச்சி காணும் போது தான் இரண்டையும் ஒன்று சேர்க்கிற  மனித நேயம் என்கிற  ஒற்றைப் புள்ளியை நம்மால் இனம் காண முடியும். 

அறிவார்ந்த ஆன்மிகப் பார்வையும்,  அறிவார்ந்த நாத்திகமுமே இன்றைய தேவையாகிப் போய் அதுவே மனித குல மேன்மைகளுக்கும்,  உன்னதங்களுக்கும்  வழிநடத்திச் செல்கிற உண்மையான அர்த்தமும் ஆகிறது.


14 comments:

ஸ்ரீராம். said...

// ஆன்மிகம் என்பது வெறும் கடவுள் வழிபாடு மட்டுமில்லை. அதே மாதிரியாக நாத்திகம் என்பது வெற்று கடவுள் மறுப்புக் கொள்கை மட்டுமில்லை. //

என்பதை எத்தனைபேர் இந்நாளில் உணர்ந்திருக்கிறார்கள்?!!

சிவகுமாரன் said...


\\\\\\ஆன்மிகத்திற்கு எதிர் நாத்திகம் என்றால் ஆன்மிகம் அரசியலாவதைத் தவிர்க்க அல்லது தடுக்க நாத்திகமும் அரசியலாகக் கூடாது. நாத்திகம் மட்டும் அரசியலாகும் ஆனால் ஆன்மிகம் அரசியலாகக்கூடாது என்றால் நாளடைவில் நாத்திகம் அரசியல் ஆவதில் எந்தப் பயனும் இன்றிப் போகும்.////

மிகச் சரியான வாதம்

KILLERGEE Devakottai said...

சரியான சொல்லாடல்களால் அலசிய விதம் அருமை.

ஆன்மீக அரசியல் என்ற வார்த்தையே மக்களிடம் பிரிவினையை தொடங்கி வைக்கிறதே...

இந்துத்துவா
முஸ்லீம் லீக்

இந்த வார்த்தைகளுடன் சேர்ந்துதானே இதுவும் வலம் வருகிறது.

ஜீவி said...

@ ஸ்ரீராம்

எத்தனை பேர் எந்நாளில் உணரப் போகிறார்கள், ஸ்ரீராம்?..

ஜீவி said...

@ சிவகுமாரன்

தராசுத் தட்டு-- நடுவில் முள் -- இரண்டு பக்கம் தட்டு சாயாத நிலை. சரியாக எடை போட்டிருக்கிறீர்கள்.

ஜீவி said...

@ Killerji Devakottai

வாங்க, தேவகோட்டைஜி!

ஆன்மிகத்தையும் சரியாகப் புரிந்து கொள்ளக் கூடாது, நாத்திகத்தையும் சரியாகப் புரிந்து கொள்ளக் கூடாது என்ற ஒரு நிலை இன்றைய நிலை.

புரிந்து கொண்டால் எல்லா மதத்து ஆன்மிக-- நாத்திக அன்பர்கள் ஒன்றாய் மனித குல மேன்மைகளுக்கு பாடுபடத் தயாராகிப் போவார்கள். மதப் பிரிவுகள் மறந்து போய்
மதம் தாண்டிய மனித குல மேன்மைகளே நாளாவட்டத்தில் இலட்சியமாகி ஒரு புத்தம் புதிய சமுதாயம் உருவாகும்.

எப்படி யோசித்துப் பார்த்தாலும் ஆன்மிகம்--நாத்திகம் இரண்டிற்குமே மனித நேயம் தான் அடித்தளம் என்பது புரிந்து போகிற விடுதலை இது.

ஸ்ரீராம். said...

17 ஆம் தேதி வெளியிடப்பட்ட பதிவில் எப்படி என்னுடைய 13 ஆம் தேதி பின்னூட்டம்? குழப்பம்! ஆன்மிகம் என்றாலே குழப்பம்தானோ!!!!!!!!

KILLERGEE Devakottai said...

ஸ்ரீராம்ஜி 13-ஆம் தேதி வெளியிட்ட பதிவுக்கு நீங்கள் கருத்துரை போட்ட பிறகு மீண்டும் 17-ஆம் தேதி திருத்தம் செய்து வெளியிட்டு இருக்கலாம்.

Thulasidharan V Thillaiakathu said...

யோகா மாதிரியான, ஆன்மிகம் என்று ஒதுக்கி விடாத, மனதையும் உடலையும் செம்மை படுத்துகின்ற வாழ்க்கைக் கல்வி நிறைய மக்களுக்கு அறிமுகமாக வேண்டும்.//

ஆமாம்....நல்ல கருத்து...

//ஆன்மிகம் என்பது வெறும் கடவுள் வழிபாடு மட்டுமில்லை. அதே மாதிரியாக நாத்திகம் என்பது வெற்று கடவுள் மறுப்புக் கொள்கை மட்டுமில்லை. //

அண்ணா இதைப் புரிந்து கொண்டிருந்தால் இப்போதைய நிலை அரசியலிலும் கூடப் புகுந்திருக்காதே! வேறுபாடுகளெ வந்திருக்காதே...இரண்டுமே மக்களால் சரியாகப் புரிந்துகொள்ளப்படவில்லை. அப்படி நல்லது நடந்திருந்தால் மனிதம் தழைத்தோங்கியிருக்குமே...

//ஆன்மிகமும், நாத்திகமும் செழுமையான வளர்ச்சி காணும் போது தான் இரண்டையும் ஒன்று சேர்க்கிற மனித நேயம் என்கிற ஒற்றைப் புள்ளியை நம்மால் இனம் காண முடியும்.

அறிவார்ந்த ஆன்மிகப் பார்வையும், அறிவார்ந்த நாத்திகமுமே இன்றைய தேவையாகிப் போய் அதுவே மனித குல மேன்மைகளுக்கும், உன்னதங்களுக்கும் வழிநடத்திச் செல்கிற உண்மையான அர்த்தமும் ஆகிறது.//

இது என் மனதில் எப்பவும் ஓடும் சிந்தனை...ஆனால் என்னால் அதைச் சரியான வார்த்தைகளிட்டுச் சொல்லத் தெரியவில்லை. ரொம்ப அழகா சொல்லிட்டீங்க...நல்ல கருத்து அண்ணா...

கட்டுரை மிக அருமை .

கீதா

ஜீவி said...

@ ஸ்ரீராம்

தேவகோட்டைஜி சரியாகக் கண்டுபிடித்திருக்கிறார். 'ஆன்மிக அரசியல் தளம் திறக்க மாட்டெனென்கிறதே' என்று நெல்லை கேட்ட பொழுது நானும் நமது வாட்ஸாப் தளத்தில் 'கொஞ்சம் ஹெவி சப்ஜெக்டாகத் தெரிகிறது, கொஞ்சம் நீர்க்கடிச்சு எழுதலாமேன்னு எடுத்துட்டேன்' என்று சொன்னது நினைவிருக்கிறது.

லேசான திருத்தங்களுக்குப் பிறகு வெளியிட்டதால் அந்தக் குழப்பம். இது கூட பெரிசில்லை. மறுபடியும் வெளியிட்ட பொழுது 'எங்கள் பிலாக்'கில் அதற்கான குறிப்பு பதியவே மறுத்தது. சரி,போன்னு விட்டுட்டேன்.

ஜீவி said...

@ Killerji Devakottai

விளக்கத்திற்கு நன்றி, ஜி!

Thulasidharan V Thillaiakathu said...

எதற்கு ஆட்சியில் ஆன்மீகம், நாத்திகம்? மக்களுக்கு எது தேவையோ அதுதானே முக்கியமாகக் கருதப்பட வேண்டும்? இப்படி ஆன்மீகம், நாத்திகம் என்று வாதிட்டு எதிரெதிராக இருந்துவந்தால் மக்களுக்கான பணிகள் எல்லாம் புறம்தள்ளப்படும். அதுதானே இப்போது நடந்துவருகிறது. ஒன்று இப்படியானவை அரசியலில் நுழையக் கூடாது. இல்லை என்றால் இரண்டும் கை கோர்த்து மக்களின் நன்மையை, மக்களுக்கு முக்கியமானவற்றை மனதில் கொண்டு செயல்படவேண்டும்.

உங்களின் கடைசிவரிகள் மிககும் சரியே ஸார்.

நல்ல பதிவு...

Thulasidharan V Thillaiakathu said...

எங்கள் கமென்ட் வந்ததோ? காணவில்லையே...

Bhanumathy Venkateswaran said...

மிக நன்றாக அலசியிருக்கிறீர்கள். வெளியானதும் படித்தேன்,சற்று ஹெவியாக இருந்ததால் மனசுக்குள் ஊறப்போட்டேன், மீண்டும் படித்தேன். நீங்கள் கூறியிருப்பதை முழுமையாக புரிந்து கொள்ள முடிந்தது.
முழு பதிவும் சிறப்புதான் என்றாலும், அந்த கடைசி பத்தி பிரமாதம்💐👍👌

Related Posts with Thumbnails