மின் நூல்

Sunday, February 25, 2018

நேரில் வந்த தெய்வம்

ன் மனைவிக்கு ஷேத்திராடனங்கள் செல்வதில்  ஆர்வம் மிகவும் அதிகம்.
இறை பக்தியும் அதிகம்.

தெற்கு பக்கம் நாங்கள் வந்தாலே ஏதாவது ஷேத்திராடனம் செய்ய
வேண்டும் என்று வற்புறுத்துவாள்.  எனக்கு அதில் அவ்வளவாக ஈடுபாடு கிடையாது.  அதற்காக நான் நாத்திகன் என்பது அல்ல.  பயணம் செய்வது என்பதே என்னை மிகவும் சோர்வு கொள்ள வைக்கும் விஷயம்.

என்னால் கூட்டங்களில் சிக்கிக் கொள்ள முடியாது.  முண்டியடித்து முன்னேறிச் செல்லும் சாமர்த்தியமும் கிடையாது.   வாயை வைத்துக் கொண்டு வெறுமனே மென்று கொண்டிருக்காமல்  எதையாவது சொல்லி வாங்கிக் கட்டிக் கொள்வது போன்ற விஷயங்களில் மட்டுமே ஆனந்தம் அடைபவன்  நான்.

அது 1944 என்று நினைக்கிறேன்.  எனக்கும் அப்படியொரு ஷேத்திராடனம் மேற்கொள்ளும் வாய்ப்பு நேர்ந்தது.  கூடவே, ஒரு அதிர்ஷ்டமும் வாய்த்தது. அது என் நண்பர் கிருஷ்ணமூர்த்தி சிலாக்கியமான ஆஞ்சநேய  உபாசகர். குருவாயூர், திருவனந்தபுரம் முதலிய ஷேத்திரங்களுக்கு அவருடன் நானும் என் மனைவியும் கிளம்பினோம்.

சரி.. மறப்பதற்கு முன் உங்களுக்கு ஒரு விஷயத்தைச் சொல்லி ஆக வேண்டும். எங்களுடன் வருவதற்கு கிருஷ்ணமூர்த்தி முன் வந்ததற்கு முக்கியமான  காரணம் ஒன்று  இருந்தது.  அவர் ஆஞ்சநேய உபாசகர் என்று சொன்னேன், அல்லவா?..

என் மனைவியின் சொந்த  ஊர் தாராபுரம்  அருகிலிருக்கிறா கொளிஞ்சவாடி என்னும் கிராமம்.    அங்கு  ஒரு  ஆஞ்சநேயர் கோயில் மிகவும் பிரசித்தம்.  வனவாசத்தின் போது ராமபிரானும் சீதாபிராட்டியும் லஷ்மணனும் அங்கே வந்து தங்கியதாக ஐதிகம்.  எங்கள் ஷேத்திராடனத்தை முடித்ததும்  தாராபுரம் செல்வதாக எங்கள் திட்டம்.  அந்த ஊர் அஞ்சநேயர் கிருஷ்ண மூர்த்தியை இழுத்திருக்கிறார் என்று சொல்ல வேண்டும்.

சரி,  மீண்டும் எங்கள் பயணத்திற்கு வருவோம்.  கன்யாகுமரியில்  அதி அற்புதமான தரிசனம்.  அதை  முடித்து திருவனந்தபுரம் செல்ல ஒரு வாடகை காரை அமர்த்திக்  கொண்டு மிகவும் ஆவலுடன் கிளம்பினோம்.   அந்த ஆவலில் ஒரு விஷயத்தைத் தெரிந்து கொள்ள தவறி விட்டோம்.

நாங்கள்  கிளம்பிய அன்று திருவனந்தபுரத்தில் போக்குவரத்துத் தொழிலாளர்களின் மறியல் போராட்டம்.  கார் திருவனந்தபுரத்தில் நுழைந்தது. அங்கு பார்த்தால் மிகப்  பெரிய  கும்பல் ஒன்று கைகளில் சகலவிதமான ஆயுதங்களையும் ஏந்தி மறியல் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தது.  எங்கும் ஒரே களேபரம்.  அப்பாவிகளாக உள்ளே நுழைந்த எங்களைச் சூழ்ந்து  கொண்டது, அந்தக்  கும்பல்.  எங்கும் வெறிக்  கூச்சல்கள். கட்டைகளால் எங்களின் காரைத் தாக்க ஆரம்பித்தது, அந்தக் கும்பல்.  நாங்கள் நடுநடுங்கி விட்டோம்.  விவரிக்க முடியாத பதற்றம்.  உயிர் பயம்.

எந்த நேரமும் எங்களை வெளியே இழுத்துத் தாக்கத் தயாராக இருந்தது அந்தக் கூட்டம்.   எங்கள் ஓட்டுநர் எவ்வளவோ சொல்லிப் பார்த்தார்.  மன்றாடிப் பார்த்தார்.  கேட்பதற்கு யாரும் அங்கு தயாராக இல்லை.  நான் நடிகணாகவும் (மேடைகளில் தான்!)  இருந்திருக்கிறேன், இல்லையா?.. மனதில் ஒரு  நல்ல யுக்தி  தோன்றியது.  கால்கள் ஊனமானவன் போன்ற பாவனையில் காரை விட்டு இறங்கினேன்.

அந்த  மறியல் கூட்டத் தலைவனின்  கால்களை இறுகப் பிடித்துக் கொண்டு "ஐயா!  நாங்கள் தெரியாமல்  இந்த ஊருக்குள் நுழைந்து விட்டோம்.  பத்மநாப சுவாமியை தரிசிக்கத் தான் நாங்கள் வந்தோம்.  நான் ஒரு பத்திரிகையாளன்.  இதோ, என்னுடைய அடையாள அட்டை.  எங்களுக்கு சுவாமி தரிசனம் கூட வேண்டாம்.  நாங்கள் திரும்பிச் செல்ல அனுமதியளித்தால் போதும்.." என்று அழாக்குறையாக மன்றாடினேன்.

கொஞ்ச நேரத்திற்கு நீண்ட அமைதி.  கோபமான பார்வைகள்.  அப்புறம் என்ன தோன்றியதோ தெரியவில்லை.. "போய்க்கோடா.." என்று வெறுப்புடன் சொல்லி நகர்ந்தான்.  தப்பித்தோம், பிழைத்தோம் என்று எங்கள் காரைக் கிளப்பிக் கொண்டு கிளம்பினோம்.  அடுத்து இன்னொரு ஆபத்தை நோக்கிப் போகிறோம் என்பது தெரியாமலேயே.

எங்கள் காருக்கு முன்னால் ஒரு பெட்ரோல் டாங்க்கர் சென்று கொண்டு  இருந்தது.  அதிலிருந்து எண்ணெய் வழியெங்கும் கசிந்து கொண்டே இருந்தது.  எங்கள் ஓட்டுநர் ஓட்டிய வேகத்தில், அந்த வழுக்கலில் சக்கரங்கள் சறுக்கி, நிலை  தடுமாறி, அருகில் மிகவும் ஆவேசத்துடன் ஓடிக்கொண்டு இருந்த காட்டாறு ஒன்றில் இறங்கி விட்டது எங்கள் கார்.

'இதோடு நம் ஆயுள் முடிந்தது' என்ற தீர்மானத்திற்கு வந்தோம்.  நடுங்கிய பயத்தில் கண்களை இறுக்க மூடிக் கொண்டோம்.  நண்பர் கிருஷ்ண மூர்த்தி பரபரப்புடன் ஆஞ்சநேய ஸ்தோத்திரத்தை ஜபிக்க ஆரம்பித்து விட்டார். எங்களுடன் ஒட்டியிருந்த கொஞ்சமான நல்ல நேரம் என்னவென்றால்,  எங்களுடைய கார் ஆற்றின் ஊடாகத் துருத்திக் கொண்டு, உயர்ந்து வளர்ந்திருந்த ஒரு மரத்தின் பிர்மாண்டமான கிளைகளின் இடையே சிக்கி இருந்தது.

ஓட்டுநர் தன்  பலத்தையெல்லாம் பிரயோகித்து, பிரேக்கை அழுத்திப்  பிடித்துக் கொண்டிருந்தார்.  விட்டால், அதோகதிதான்... ஆற்று வெள்ளாத்தின் வேகம் எங்கள் காரை இழுத்துக் கொண்டு போய்விடும்.  எங்கள் உயிர்கள் மீண்டும் எங்கள் கைகளில் இல்லை, .  நண்பர்  கிருஷ்ணமூர்த்தியைத் தவிர, நாங்கள் எல்லோரும் "ஆபத்து.. ஆபத்து" என்று உதவிக்காகக் கூச்சல் போட்டுக் கொண்டிருந்தோம்.  அவர், தன்னுடைய ஸ்தோத்திரத்தைத் தொடர்ந்து  கொண்டிருந்தார்.  யாரையும்  காணோம்  எங்கள் பதைப்பு இன்னும்  கூடியது.

திடீரென்று அந்தச் சாலையின் இடது புறத்தில், எங்கோ வெகுதொலைவு தள்ளி வேலையில் ஈடுபட்டுக் கொண்டு இருந்த சுமார் ஐம்பது பேர் ஓடோடி வந்தார்கள்.  எல்லோரும் சேர்ந்து காரை இந்தப்  பக்கம் இழுக்க முயற்சிதார்கள்.  பாதி நம்பிக்கை வந்தது.  ஆனால், மூச்.. கார் ஒரு இம்மி கூட நகரவில்லை!  கார் போட்ட ஆட்டத்தில் எங்களுக்குப் பாதி உயிர் போய்விட்டது.  மரணத்தின் நிழல் கொஞ்ச்சம் கொஞ்சமாக எங்களின் மீது படர ஆரம்பித்தது.

அப்பொழுது அந்த வழியாக லாரி ஒன்று வந்தது.  உதவிக்கு வந்த விவசாயத்  தொழிலாளர்கள், அந்த லாரியை வலுக்கட்டாயமாக மறித்து நிறுத்தி, நிலைமையை விளக்கினார்கள்.  அந்த லாரியின் ஓட்டுனர் தன்னுடைய லாரியை எங்கள் காருக்கு சரியாக நிறுத்தி, ஒரு கயிற்றைக் கட்டி மிகவும் சாதுர்யமாக எங்கள் காரை  இழுக்க ஆரம்பித்தார்.

கார் கொஞ்சம் கொஞ்சமாக மேலே வர ஆரம்பித்தது.  நாங்கள் ஒரு வழியாக மரணத்தை தூர விரட்டி விட்டு மேலே வந்தோம்.  கரணம் தப்பினால் மரணம் என்று சொன்னால் மிகையாகாது.  நன்றியுடன் பெருமூச்சு விட்டோம்.   நானும் என் மனைவியும் போட்டது வெறும் கூச்சல்.  கிருஷ்ணமூர்த்தி சொல்லிக் கொண்டிருந்தது ஆஞ்சநேய ஸ்தோத்திரம்.

அதன் சக்தி தான் இவர்களை இங்கு அனுப்பியதா?..

அந்த விவசாயத் தொழிலாளர்களுக்கு எப்படி  நன்றி சொல்வது?.. ஆயிரம் ரூபாயை எடுத்துத் தந்து, அவர்களிடம் வைத்துக் கொள்ளச் சொன்னேன்.  அதில் ஒருவர், என் கண்களையே   உற்றுப் பார்த்து, "நாங்கள் என்ன பிச்சைக்காரர்களா?.. நீங்கள் பத்திரமாக ஊர் போய்ச் சேருங்கள். எங்களுக்கு அது போதும்.." என்றார்.

என்ன ஒரு பண்பாடு!  என்ன ஒரு கருணை உள்ளம்!  ஒரு நிமிடம் ஆடிப் போய் விட்டேன்.   நெக்குருகிப் போனேன்.  அந்தக் கருணை உள்ளங்களில் நான் மிகவும் நம்பிக்கை வைத்திருக்கும் என்னுடைய தெய்வத்தை நேரில் கைகூப்பித் தரிசித்தேன்!



                                                               


                                                                     
    ----  பிரபல இசை விமரிசகர்
                  சுப்புடு அவர்கள்
                                                                             











           நன்றி: ஆனந்த விகடன்
                                                                                                                    3--11--2002  இதழ்                                                                                                           
               
 




படங்கள் உதவிய அன்பர்களுக்கு மனம் கனிந்த நன்றி.


19 comments:

கோமதி அரசு said...

நானும் என் மனைவியும் போட்டது வெறும் கூச்சல். கிருஷ்ணமூர்த்தி சொல்லிக் கொண்டிருந்தது ஆஞ்சநேய ஸ்தோத்திரம்.//

எந்த நிலையிலும் மனம் தளராமல் கிருஷ்ணமூர்த்தி அவர்கள் சொன்ன

ஆஞ்சநேய ஸ்தோத்திரத்திற்கு பலன் கிடைத்தது.

நேரில் வந்த தெய்வங்கள் தான் அந்த நல்ல மனிதர்கள்.

Bhanumathy Venkateswaran said...

சுப்புடு கிண்டலும், கேலியுமான எழுத்துக்கு சொந்தக்காரர் என்றுதான் நினைத்திருந்தேன். இப்படி இப்கபாகவும், எளிமையாகவும் கூட அவரை எழுத முடியுமா? நல்ல பகிர்வு.

பிலஹரி:) ) அதிரா said...

ஆவ்வ்வ்வ் ஒரு திகில் கதை படித்ததைப்போல இருந்தது.. காரில் யாரோ சில நல்லவர் இருந்திருக்கிறீங்க ஹா ஹா ஹா:)).. மறு பிறவி எடுத்து வந்திருப்பதுபோல இருக்குமே.

சில விசயங்கள் அதிசயமாகவே இருக்கும்.. நடக்கும்போது உயிர்போகும் ஆனா பின்பு நினைத்துப் பார்க்க கனவுபோல இருக்கும்.

மறியல் போராட்டம் நடத்துவோர் பொது மக்களையும் தாக்குவினமோ? ..

//கிருஷ்ணமூர்த்தி சொல்லிக் கொண்டிருந்தது ஆஞ்சநேய ஸ்தோத்திரம்.///

கடந்த சில வருடங்களாக எனக்கும் ஆஞ்சநேயரில் பயங்கர நம்பிக்கை..

என் பக்கத்திலும் இன்று “ஒரு தெய்வம் நேரில் வரப்போகிறது”:).

Thulasidharan V Thillaiakathu said...

சுப்புடு அவர்களுக்கு நேர்ந்தது அந்த ஆற்று அனுபவம் எப்படி இருந்திருக்கும்! என்று நினைத்துப் பார்த்தால் எப்படியான ஆபத்து என்று தோன்றியது...தண்ணீர் காருக்குள் புகுந்திருந்தால்...நம் நம்பிக்கை நம்மை ஏதோ ஒரு விதத்தில் காப்பாற்றுகிறது...மனிதர்களில் நல்லவர்களூம் உளர்...

கீதா

ஸ்ரீராம். said...

நல்லதொரு பகிர்வு. உயிரைக் காத்துக்கொள்ள கலகக்காரன் காளை பிடித்தது நெருடல். எனினும் சமயோசிதம். சுப்புடு பகிர்வு சுவாரஸ்யம். "நாங்க,என்ன பிச்சைக்காரர்களா?" ஸூப்பர்.

நெல்லைத் தமிழன் said...

ரொம்ப அருமையா சம்பவங்களை விவரித்து எழுதியிருக்கார் சுப்புடு. 'கரணம் காரணம் கர்த்தா' என்பதுபோல, ஒரு பிரச்சனை வரும்போது, நம்முடைய முயற்சியும் அவசியம். தெய்வ பலம் சேரும்போது, அதற்கான தீர்வு வந்துவிடுகிறது. 'தெய்வம் மனுஷ்ய ரூபேண' என்பதும் உண்மைதானே.

ஒவ்வொரு பதிவு, அனுபவம் படிக்கும்போது நமக்கு இதனைப்போல் என்ன நடந்திருக்கிறது என்பதில் மனம் ஆழ்ந்துவிடுகிறது. பலருடைய அனுபவப் பதிவுகளும் ஞாபகத்தில் வந்துவிடுகின்றன.

நல்லா தேர்ந்தெடுத்துப் போடறீங்க. வாழ்த்துகள்.

நெல்லைத் தமிழன் said...

சுப்புடு, விமர்சனம் என்ற பெயரில் எல்லார் வயிற்றெரிச்சலையும் கொட்டிக்கொண்டதும் (அதில் ஏகப்பட்ட சண்டைகளும் பிரசித்தம்), ஆனாலும் அவர் சங்கீத விமர்சனத்தை ஆவலுடன் வாசிப்பவராக கலாம்ஜி இருந்ததும், அவரை ஒருமுறை சுப்புடு சந்தித்தபோது, நான் இறந்தபிறகு என் உடலுக்கு நீங்கள் மாலை அணிவிக்கவேண்டும் என்ற ஆசையைத் தெரிவித்தபோது, அதேபோல், ஜனாதிபதி மாளிகையிலிருந்து சுப்புடுவின் சடலத்துக்கு மாலை அணிவிக்கப்பட்டதும் நீங்கள் படித்திருப்பீர்கள்.

நெல்லைத் தமிழன் said...

தர்மத்தைப் பற்றியும் நான் நினைப்பது - உதவி செய்து, அதற்கு பாராட்டு வாங்கிக்கொள்ளும்போது, அந்த உதவிக்கான பலன் குறைந்துவிடுகிறது. பலர் பல சமயங்களில் அதற்குப் பாராட்டும்போது பலன் குறைந்துகொண்டே வந்து பிறகு ஒன்றுமில்லாமல் ஆகிவிடும். உதவிக்கான பலனை, உதாசீனப்படுத்தி (அதாவது பலனைக் கருதிச் செய்யா வினை) விடும்போது, பலன் இரண்டுமடங்காகிவிடுகிறது.

ஸ்ரீராம். said...

காலை என்பது காளை என்று வந்து விட்டதற்கு வருந்துகிறேன்.

ஜீவி said...

@ கோமதி அரசு

//எந்த நிலையிலும் மனம் தளராமல் கிருஷ்ணமூர்த்தி அவர்கள் சொன்ன

ஆஞ்சநேய ஸ்தோத்திரத்திற்கு பலன் கிடைத்தது.

நேரில் வந்த தெய்வங்கள் தான் அந்த நல்ல மனிதர்கள்.//

இரண்டு விஷயங்களை இந்த நிகழ்வின் ஆப்ஸர்வேஷனாகச் சொல்லியிருக்கிறீர்கள்.

1. கிருஷண்மூர்த்தி அவர்கள் புறச்சூழ்நிலைகள் பற்றிப் பதறாது தான் நம்பும் தெய்வத்தின் மீது மனம் பதித்தது.

2. உதவிக்கு வந்த நல்ல மனிதர்களே தெய்வமாக ரூபம் கொள்வது.

நல்ல பார்வைகள். நன்றி.





ஜீவி said...

@ Bhanumathy Venkateswaran

சுப்புடு தாத்தாவின் கேலியும் கிண்டலும் தமிழக வாசிப்பு உலகம் ரசித்து அறிந்தது. அது அவருடைய சங்கீத ஞானம் பற்றியது. வித்வத்தின் விகசிப்பு.

இது ஆபத்தில் சிக்கிக் கொண்ட மனித மனத்தின் பரிதவிப்பு. வாழ்க்கையின் இக்கட்டான நேரங்களில் மனித மனம் நிஜ தரிசன பாடங்களைக் கற்றுக் கொள்கிறது என்பதைச் சொல்ல வந்த அவரது அனுபவம் இது.

ஜீவி said...

@ athiraமியாவ்

அந்த athiraவுக்கும் மியாவ்க்கும் இடைவெளி கூட இல்லையா என்ன என்று இரண்டு தரம் சரி பார்த்தேன்.

// சில விசயங்கள் அதிசயமாகவே இருக்கும்.. நடக்கும்போது உயிர்போகும் ஆனா பின்பு நினைத்துப் பார்க்க கனவுபோல இருக்கும்.//

நீங்கள் கூட 'ஷ'வுக்கு 'ச'வா?.. போகட்டும்.

நடக்கும் போது நிஜ வேதனை. நடந்து முடிந்து நடந்ததை நினைத்துப் பார்ப்பது நடந்ததை மனசில் ஓட்டிப் பார்க்கும் மீட்டல் தானே?.. மீள் பார்வைகளில் பயம் தெளிந்து துளிர் விட்டுப் போகும். இதே இன்னொரு தடவை நடந்தால், பார்த்து விடுவேன் ஒரு கை என்று சில நேரங்களில் ஜம்பங்கள் கூட தெறிக்கும்.

அது என்ன பயங்கர நம்பிக்கை.. நம்பிக்கைகள் கூட பயங்கரமாய் இருக்குமா என்ன?

'ஒரு தெய்வம் நேரில் வரப்போகிறது' என்பதை முன் கூட்டியே அறிந்தவர்கள்
பாக்யவான்கள். பாக்யவானுக்கு பெண்பால் இல்லையா, என்ன? என்ன அநியாயம் இது?

ஜீவி said...

@ கீதா

//தண்ணீர் காருக்குள் புகுந்திருந்தால்...//

தண்ணீரை விட்டுத் தள்ளுங்கள். ஆஞ்சநேய பக்தர் கிருஷ்ணமூர்த்தி மட்டும் தன் நண்பர் சுப்புடு சாரோட அந்த நேரத்தில் இல்லாமலிருந்தால்?.. என்பது தான் இந்த நிகழ்வு சொல்லும் உணர்வு.

சுப்புடு சாரும் அதைத் தான் சொல்ல வந்திருக்கிறார் என்று புரிகிறது.

'நாங்கள் எல்லோரும் "ஆபத்து.. ஆபத்து" என்று உதவிக்காகக் கூச்சல் போட்டுக் கொண்டிருந்தோம். அவர், தன்னுடைய ஸ்தோத்திரத்தைத் தொடர்ந்து கொண்டிருந்தார்...' என்பதின் வெளிப்பாடு அது தான்.

சுப்புடு தம்பதிகள் புறவயப்பட்ட பயத்தில் சிக்கிக் கொண்டிருக்க, கிருஷ்ணமூர்த்தியோ
புறவயப்பட்ட பாதிப்புகளை மீறி அகவயப்பட்ட பக்தி லயிப்பில் இருந்திருக்கிறார்.

கீதா உபதேசம் ஞாபகம் வருகிறதா, கீதா சகோ..?..

புறப் பாதிப்புகள் இல்லையெனில் அகவயப்பட்ட லயிப்புகளும் இல்லையோ?-- என்பது அடுத்த கேள்வி.

யோசித்துப் பாருங்கள்.

ஜீவி said...

@ ஸ்ரீராம்

//காலைப் பிடித்தது நெருடல். எனினும் சமயோசிதம். //

'நெருடல், சமயோசிதம்' என்பதெல்லாம் நாமாக நினைத்துக் கொள்வது.

அந்த நேர பதட்டம். அவ்வளவு தான்.
கட்டையைத் தூக்கிக் கொண்டு அடிக்க வருகிறான்.. "ஐயா, விட்டு விடு" என்ற பரிதாபம் அவ்வளவு தான்.

'சுப்புடு சார் எவ்வளவு ஞானவான்.. அவர் போய்..' என்பதெல்லாம் அவர் பற்றி நமக்குத் தெரிந்த விவரக் குறிப்புகள். அவ்வளவு தான். அந்த நேரத்தில் என்ன நடக்குமோ அது நடந்திருக்கிறது. அவ்வளவு தான்.

//"நாங்க,என்ன பிச்சைக்காரர்களா?"//

புதுமைப் பித்தன் சிறுகதை ஒன்றில் 'நா என்ன பிச்சைக்காரியா?' என்று ஆவேசம் ஒன்று பளீரென்று தெறித்து வரும். அது இதை விட ஸூப்பர்.

ஜீவி said...

@ நெல்லைத் தமிழன்

//'கரணம் காரணம் கர்த்தா.. //

இந்தப் பதிவின் அடிச்சரடான விஷயத்தைத் தொட்டு விட்டீர்கள்..

KARANAM KAARANAM KARTA VIKARTA GAHANO GUHAH..

விஷ்ணு சகஸ்ர நாமத்தில் பகவானின் புகழ் ஓதப்படுமே...

கிருஷ்ணமூர்த்தி, சுப்புடு, திருமதி சுப்புடு, ஆர்ப்பாட்டக்காரர்கள், உதவிக்கு வந்த மக்கள், லாரி டிரைவர்... ஒரு பேருண்மையை வெளிப்படுத்த இத்தனை பேர் பங்கு கொண்ட அந்த அருளாளனின் அலகிலா விளையாட்டு!...

ஜீவி said...

@ நெல்லைத் தமிழன்

//ஒவ்வொரு பதிவு, அனுபவம் படிக்கும்போது நமக்கு இதனைப்போல் என்ன நடந்திருக்கிறது என்பதில் மனம் ஆழ்ந்துவிடுகிறது. பலருடைய அனுபவப் பதிவுகளும் ஞாபகத்தில் வந்துவிடுகின்றன.//

மிகச் சரியாக நீங்கள் சொல்லியிருப்பது கண்டு ஆச்சரியம். நானும் இப்படியான நினைவுகளில் தான் சிக்கிக் கொண்டிருக்கிறேன்.

ஜீவி said...

@ நெல்லைத் தமிழன்

//சுப்புடு, விமர்சனம் என்ற பெயரில் எல்லார் வயிற்றெரிச்சலையும் கொட்டிக்கொண்டதும்..//

சுப்புடுஜியிடம் சரக்கு இருந்தது. சங்கீத சமாச்சாரத்தில் என்ன தப்பு யார் எந்த நேரத்தில் பண்ணுக்கிறார்கள் என்று கண்டுபிடிக்கிற திறன் இருந்தது.

இப்படியான திறமையுள்ள ஆசாமிகள் இன்னும் சிலர் இருந்தாலும் சுப்புடுவிடம் அவர்களிடத்தில் இல்லாத வேறு ஒரு திறமையும் கூட இருந்தது.

அதான் அவருக்கென்றே வாய்த்த நகைச்சுவை. எந்த எரிச்சலும் அவரின் அந்த நகைச்சுவை உணர்வில் நீர்த்து விடும். வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவது மாதிரி கிண்டலடிப்பதில் சமர்த்தர். அதனால் தான் அவரிடம் வகையாக மாட்டிக்கொண்டவர்கள் கூட அவர் ரசிகராய் இருந்தார்கள்.

கல்கி கூட 'கர்நாடகம்' என்ற பெயரில் கச்சேரிகளுக்கு விமர்சனங்கள் நகைச்சுவை தெளித்து சுப்புடுவுக்கு முன்னோடியாக எழுதியிருக்கிறார் என்றாலும் சுப்புடு அளவுக்கு இல்லை. அந்த விஷயத்தில் சுப்புடு தனிப்பிறவி தான்.

சுப்புடுவுக்குப் பிறகு அவர் மாதிரியே எழுதவும் சிலர் முயற்சித்திருக்கிறார்கள். முடியவில்லை என்பதே நெட் ரிசல்ட்.

ஜீவி said...

@ நெ.த

நீங்கள் சொன்னதும் தான் கலாம்ஜி தவறாமல் செய்ததும் நினைவுக்கு வந்தது.

எவ்வளவு பெரிய நிலைக்குப் போயும் அதெல்லாம் கலாம்ஜியை பாதிக்கவில்லை என்பது உண்மை. இதையெல்லாம் குறிப்புப் புத்தகத்தில் குறித்து வைத்திருக்க மாட்டார்கள். எல்லாம் மனக்குறிப்பு தான். இந்த நேரத்தில் இவர் இப்படிச் சொன்னாரே என்பது கலாம்ஜிக்கு சுப்புடுவின் இறப்புச் செய்தி கிடைத்ததும் நினைவுக்கு வந்தது தான் ஆச்சரியம். அந்த அளவுக்கு அவரின் அன்பு இருந்திருக்கிறது என்பது தான் விசேஷம்.

ஜீவி said...

@ நெ.த.

உங்களின் பலன் பற்றிய கணக்கு (Maths) சரியாக இருக்கலாம். ஆனால் அதற்கு அடிப்படையான விஷயம் ஒன்று இருக்க வேண்டும் இல்லையா?..

செய்த உதவிக்கான பாராட்டு கிடைக்கும் பொழுது சலனப்படாமல் இருந்தால் சரி.
டி.வி. நிகழ்ச்சிகளில் கூட நீங்கள் பார்த்திருக்கலாம். பிறர் பாராட்டும் பொழுது அதை ஏற்றுக் கொள்கிற மாதிரியான பாவம் சிலரிடம் தென்படும். சிலரிடம் தலையசைத்து
அங்கீகரிக்கிற தோரணயையும் பார்த்திருக்கிறேன். இந்த சலனத்தைத் தான் சொல்கிறேன். நீங்கள் சொல்கிற மாதிரி பலன் கருதா பண்பு, இது பிறவி எடுத்த என் கடன் என்கிற மாதிரியான எண்ணம் மனசில் படிவதற்கு பெரிய மனசு வேண்டும்.
+ and -- சுவாரஸ்யமான கணக்கு தான். சித்திரகுப்தனே அறிவார்.

Related Posts with Thumbnails