மின் நூல்

Tuesday, February 6, 2018

பாரதியார் கதை --9

                                                       அத்தியாயம்--9


1906  கல்கத்தா காங்கிரஸில் மிதவாத--தீவிரவாத கருத்து மோதல் வெளிப்படையாகவே தெரிந்தது.    1886-ல் இதே கல்கத்தாவில்  கூடிய இரண்டாவது காங்கிரஸ் மாநாட்டிற்கு தலைமை தாங்கிய தாதாபாய் நெளரோஜியே 1906 காங்கிரஸூக்கும் தலைமை தாங்கினார்.

ஒவ்வொரு மாநாட்டிற்கும் அரைத்த மாவையே அரைக்கும் போக்கு மாறவில்லை எனில் காங்கிரஸின் தீவிரவாதிகளின் கை ஓங்கும் என்ற நிலையில் மாநாட்டிற்குத் தலைமை  தாங்கிய  மிதவாதி தாதாபாய்ஜியே நாட்டிற்கு  'சுயராஜ்யம் வேண்டும்'  என்ற தீர்மானத்தை  முன் மொழிந்து தீர்மானம் ஏகோபித்த ஆதரவுடன்  நிறைவேறியது.

அந்த கல்கத்தா மாநாடு பாரதியாரின் உணர்வுகளின் போக்குக்கு பெரும் வடிகாலாய் அமைந்து அவர் வாழ்க்கையிலும் 'அடுத்துச் செய்ய வேண்டியது என்ன?' என்பதற்கு வழிகாட்டுவதாய் அமைந்தது.  'சுயராஜ்யம் எமது பிறப்புரிமை; அதனை  அடைந்தே தீருவோம்' என்று கல்கத்தா காங்கிரஸில்  கர்ஜித்த பாலகங்காதர திலகரின் வீராவேச உரைகள் பாரதியாரை வழி நடத்துவதற்கான பாதையைப் போட்டது.   மனசுக்குள் உருவாகிய நிறைய வேலை திட்டங்களுடன்  உற்சாகமாய் சென்னைக்குத் திரும்பினார் பாரதி.

பாரதிக்குத் தெளிவாகத் தெரிந்தது.   ஜி.எஸ்.அய்யரின்  'சுதேசமித்திரன்'  புத்தம் புதிதாய் பூத்திருக்கும் தனது திலகர் வழி புரட்சிகர இலட்சியவாத கருத்துக்களை பதிப்பிப்பதற்குத் தாங்காது என்று தெரிந்தது. 'மித்திரன்' அந்நாளைய வெகுஜன  பத்திரிகையாக உலா வந்தது.  அதன் வாசகர்கள் மிதவாத--தீவிரவாத இரண்டும்  கலந்த ஆசாமிகள்.   பத்திரிகை என்று வரும் பொழுது பத்திரிகை அதிபர்  சில ரிஸ்குகளை எடுத்தாலும் வாசகர்களின் மனோபாவத்திற்கு ஏற்ப பத்திரிகை இல்லை எனில், பத்திரிகையின்  சர்குலேஷனுக்கு ஆபத்து ஏற்படலாம்.  அந்த விதத்தில் அய்யரை பலிகடா ஆக்குவதில் பாரதிக்கு விருப்பமில்லை.    மாதர் முன்னேற்றப்  பத்திரிகை மாதிரி தோற்றமளிக்கும் 'சர்க்கரவர்த்தினி'யும் சரிப்பட்டு வராது.  ஆங்கில மொழியில் வெளிவந்த முழு அரசியல் பத்திரிகைகளுக்கு ஈடாக தமிழிலும் ஒன்று வேண்டும் என்று பாரதியார் துடிதுடியாய் துடித்தார்.  ஆயிரம் கோட்டைகள் கட்டலாமே தவிர புதிதாய் ஒரு  பத்திரிகை ஆரம்பிப்பது என்பது பாரதியின் சக்திக்கு மீறிய செயல்.  பத்திரிகை என்பது முற்றிலும் பாரதியின்  நிலைமைக்குக் கொஞ்சமும் சம்பந்தமில்லாத பொருளாதாரம் சம்பந்தப்பட்ட விஷயம்.   இந்த நிலையில் என்ன செய்வது என்று அவர் யோசித்த பொழுது தான் ஆபத்பாந்தவனாய் அனாதரட்சகனாய் மண்டயம் திருமலாச்சாரியார், 'நானிருக்கக் கவலையேன்?' என்று பாரதிக்குத் துணையாய் வந்தார்.

மண்டயம் திருமலாச்சாரியாருக்கு தேசப்பற்று இருந்தது.  புரட்சிகர சிந்தனைகள் இருந்தது.  வேண்டிய அளவு செல்வமும் இருந்தது.  பாரதி மேல் அளப்பரிய பக்தியும்  தேசவிடுதலைக்கு தன் அளவில் ஏதாவது செய்தாக வேண்டும் என்ற வேகமும் இருந்தது.  இத்தனையும் திருமலாச்சாரியாரிடம் கூடி வந்து இருக்கையில்  தமிழுக்கென்று ஒரு முழு அரசியல் பத்திரிகை ஆரம்பிப்பதில் தடையென்ன இருந்து விடப் போகிறது?...


ஒரு சுபயோக சுபதினத்தில்  இந்திய சுதந்திர வேள்வியை வளர்ப்பதற்காக 'இந்தியா'  பத்திரிகை ஜனனம் நிகழ்ந்தது.  9-5-1906  அன்று இந்திய தேசத்தின்  பெயரிலேயே 'இந்தியா'  குழந்தை  பிறந்தது.  பத்திரிகையின் ஆசிரியர் பாரதியார் தான்  என்றாலும் மண்டயம் திருமலாச் சாரியாரின் உறவினரான  சீனிவாசன் என்பவர் பெயர் ஆசிரியராகக் குறிப்பிடப்பட்டிருந்தது.  எல்லாம் காரணமாகத் தான்.  எல்லா அடக்குமுறைகளையும் எதிர்பார்த்தே திருமலாச்சாரியார் பத்திரிகையின் வெளியீட்டைத் தீர்மானித்திருந்தார்.  எந்த இக்கட்டிலும் பாரதியார் சிக்காமல் தப்பித்து விட வேண்டும் என்பதற்கான எல்லா யோசனைகளும் மேற்கொள்ளப்பட்டிருந்தன.

பாரதி  கையை வைத்தால் எதுவும் தவறாகப்  போனதில்லை.  இதழியலில் பல புதுமைகளைப்  புகுத்தியவர் அவர்.   அது வரை வாரப்பத்திரிகை அளவில் இருந்த  வழக்கத்தை  மாற்றி 'இந்தியா' பத்திரிகையை முழு செய்தித்தாள் அளவில் கொண்டு வந்தார்.  பத்திரிகை வெளிவரும் நாளைக் குறிப்பிட  ஆண்டு, மாதம், நாள் இவற்றை தமிழில் குறிப்பிட்டார்.  பக்க எண்களையும் தமிழில் குறித்தார்.  தமிழ் இதழியலில் இந்தப் புரட்சியை முதன்  முதல் செய்தவர் பாரதியாரே.

பத்திரிகை சந்தா கட்டணத்திலும் உலகிலேயே இல்லாத அளவுக்கு ஒரு புரட்சியைச் செய்தவர் பாரதி.

ரூ.200/-க்கு குறைவாக மாத வருமானம் உள்ளோருக்கு ஆண்டு சந்தா ரூ.3/-
ரூ.200/-க்கு அதிகமாக மாத வருமானம் உள்ளோருக்கு ஆண்டு சந்தா  ரூ.10/-
ஜமீன் தார்கள், பிரபுக்கள் போன்ற வசதி  படைத்தோருக்கு  ஆ.சந்தா ரூ.30/-

பாரதியார் எந்தவிதமான ஆதாரத்தை சமர்பிக்கச் சொல்லி இப்படியான புதுமையான சந்தா முறையைப் நடைமுறைப் படுத்தினார் என்று தெரியவில்லை. இருந்தாலும் இதழியல் துறையில் பாரதிக்கு முன்னாலும் சரி, பின்னாலும் சரி, பத்திரிகை சந்தா விஷயத்தில் இப்படி ஒரு  முறையைக் கைக்கொண்டவர் வேறு யாருமில்லை என்ற பெருமை பாரதிக்குச் சொந்தமாகிறது.

இந்தியா இதழ் வார ஏடாக சனிக்கிழமை தோறும் வெளிவந்தது.  16 பக்கங்கள்.  பத்திரிகையின் குறிக்கோள்  'சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம்' என்று பிரகடனப்படுத்தியிருந்தார் பாரதியார்.  பிரஞ்சு  புரட்சி உலகத்திற்கு வழங்கிய  மனித குலத்திற்கான மூன்று வார்த்தை மந்திரங்கள் இந்தியா பத்திரிகையின் குறிக்கோளாக முழங்கப் பட்டது.

தமிழ் இதழியல் துறையில் அரசியல் கார்டூன் (கருத்துப்படம்) போடுவதை முதன் முதலாக அறிமுகப்படுத்தியவர் பாரதியாரே.  'இந்தியா' பத்திரிகையின் முதல் பக்கத்தில்  கருத்துப்படம்  பிரசுரித்து அவர் ஆரம்பித்து வைத்த முறை  இன்றும் தொடர்கிறது.  செய்திகளுக்குத்  துணைத் தலைப்புகள் கொடுத்து அந்த துணைத்தலைப்பினை செய்திகளிலிருந்து  பிரித்துக் காட்டும்படி ஃபாண்ட் (Font) சைஸ் மாற்றி வெளியிட்டிருக்கிறார்.

பத்திரிகையில் எழுதும் சில விஷயங்களை எழுதியது தான் தான் என்று  காட்டிக் கொள்ளாமலிருக்க வேண்டிய நிர்பந்தம்  பாரதிக்கு பல காலங்களிலும் ஒரு சுமையாகவே இருந்திருக்கிறது.  வேதாந்தி, ராமதாஸன், தேசாபிமானி, காளிதாசன், ஷெல்லிதாசன்,  சக்திதாசன், சாவித்திரி என்ற புனைப்பெயர்களில் ஒளிந்து கொண்டு  எழுதும் நிர்பந்தமும் அவருக்கு ஏற்பட்டிருக்கிறது.  அது தவிர அன்பின் அடிப்படையில் தன்  மனைவி செல்லம்மாள் பெயரிலும் பாரதி எழுதியிருக்கிறார்.  பாரதியாரின் இந்த  பாதிப்பில்  வ.வே.சு. ஐயர், மீனாட்சியம்மாளாகவும்,  நீலகண்ட  பிரம்மச்சாரி, கமலநாயகியாகவும்  மாறியிருக்கின்றனர்.  பாரதி ஆரம்பித்து வைத்த  மனைவி பெயரில் எழுதுவது சுஜாதா வரை  தொடர்ந்திருப்பதும் ஒரு வரலாறு தான்.


(வளரும்)


படங்கள் உதவியோருக்கு நன்றி.

12 comments:

நெல்லைத் தமிழன் said...

கேலிச்சித்திரம் முகப்புப் பக்கத்தில் வருவதை ஆரம்பித்துவைத்தவரும் பாரதியாரா? நிறைய தகவல்களை இடுகை தருகிறது. தொடர்கிறேன்.

ஸ்ரீராம். said...

சந்தா முறையின் அந்தப் புதுமை கவர்கிறது. இந்நாள் வரையில் வேறு யாருக்கும் அந்த மனம் வரவில்லை பாருங்கள்!

G.M Balasubramaniam said...

பாரதியின் வாழ்க்கை தெரிந்து கொண்டால் அவரது ஒவ்வொரு செயலுக்கும் ஏனென்னும் காரணம் தேடத்தோன்றும் அதனால்தானோ ஏனோ அவரதுவாழ்க்கை பற்றி அதிகம் யாருக்கும் தெரிவதில்லை ./ சொல்வதில்லை

Thulasidharan V Thillaiakathu said...

ரொம்பவே வியக்க வைக்கும் தகவல்கள். அதுவும் பத்திரிகைத் துறையில் பாரதி முதன் முதலில் கொண்டுவந்த புதுமைகள் அருமை! இதுவரை அறியாத தகவலும் கூட. அவர் புனைப்பெயரில் எழுதியது தெரியும். அவரைத் தொடர்ந்து வ வெ சு ஐயர் மற்றும் நீலகண்ட பிரம்மச்காரியும் எழுதியது அறியாதது. எத்தனை புதுமைகள் மிகவும் கவர்ந்தது அந்தச் சந்தா!!! மிக மிக அருமையான முறை.
கீதா: மேற் சொல்லப்பட்ட எங்கள் இருவரின் கருத்துடன்... ஆனால் சந்தா முறை இப்போது எந்தப் பத்திரிகையும் அதைக் கையாளவில்லை. கொண்டுவந்தால் நல்லது. இன்னும் நன்றாக ரீச் ஆகும் ஆனால் நடைமுறைச் சிக்கல்கள் இருக்கலாம்... நீங்கள் சொல்லியிருப்பது போல் பாரதி அதை எப்படி எந்த ஆதாரத்தில் கொண்டுவந்தாரோ? உங்கள் தேடுதலில் அந்தத் தகவலும் கிடைத்தால் நலல்து இல்லையா ஜீவி அண்ணா?

மிக மிக அருமையான வியத்தகு தகவல்கள்...தொடர்கிறோம்

கோமதி அரசு said...

//பாரதி கையை வைத்தால் எதுவும் தவறாகப் போனதில்லை. இதழியலில் பல புதுமைகளைப் புகுத்தியவர் அவர். //

நீங்களும் பாரதியைப்பற்றி புதுமையாக சொல்லி இருக்கிறீர்கள்.
(ராஜா கையை வ்ச்சா ராங்கா போனதில்லை பாணியில்)

பாரதியைப் பற்றி நிறைய அறிந்து கொண்டேன்.
நன்றி சார்.

ஜீவி said...

@ நெல்லைத் தமிழன்

அப்படித்தான் இதழியல் சரித்திரம் சொல்கிறது, நெல்லை. தொடர்ந்து படித்ததும் வாசித்ததின் விளைவான மனசில் படியும் கருத்தைப் பதிவதற்கு நன்றி.

ஜீவி said...

@ ஸ்ரீராம்

வருமானத்திற்கேற்றபடி வரி slab போல பத்திரிகை சந்தா!.. ஏழை எளியோர்கள் கையிலும் பத்திரிகை போய்ச் சேர வேண்டும், அதே நேரத்தில் வசதிபடைத்தவர்கள் வாசிப்பதற்கு + பத்திரிகை வளர்ச்சிக்கான நிதி போல கொஞ்சம் கூடத் தர வேண்டும் என்று எதிர்பார்ப்பில் தான் இப்படி சந்தா முறையை வகுத்தார் போலும்.

நிதி மிகுந்தவர் பொற்குவை தாரீர்
நிதி குறைந்தவர் காசுகள் தாரீர்
அதுவுமற்றோர் வாய்ச் சொல் அருளீர்
ஆண்மையாளர் உழைப்பினை நல்கீர்

-- என்று சொன்னவரும் பாரதி தான். இந்த மாதிரி 'சகலரும் பங்கு பெற வேண்டும்' என்ற சிந்தனை பாரதிக்கு மனசில் படிந்த எண்ணமாய் இருந்திருக்கிறது.

உயர்ந்த சிந்தனை!

ஜீவி said...

@ GMB

//பாரதியின் வாழ்க்கை தெரிந்து கொண்டால் அவரது ஒவ்வொரு செயலுக்கும் ஏனென்னும் காரணம் தேடத்தோன்றும்.. //

ரொம்ப சரி.

//அதனால்தானோ ஏனோ அவரதுவாழ்க்கை பற்றி அதிகம் யாருக்கும் தெரிவதில்லை . சொல்வதில்லை.. //

இதான் புரியலே.

ஜீவி said...

@ துளசிதரன்
@ கீதா

//பாரதி அந்த சந்தா முறையை எப்படி எந்த ஆதாரத்தில் கொண்டு வந்தாரோ?//

இந்த வளர்ச்சியடைந்த காலத்தில் கூட தொட்டதெற்கெல்லாம் ஆதார் என்கிறார்களே' என்ற நினைப்பு தான் ஓடியது. அந்தக் காலத்தில் இதை நடைமுறைப்படுத்த 'இந்தியா' பத்திரிகை என்ன பாடு பட்டிருக்கும் என்பதை புரிந்து கொள்ள முடிகிறது.

//ஆனால் இப்படியான சந்தா முறை இப்போது எந்தப் பத்திரிகையும் அதைக் கையாளவில்லை. கொண்டுவந்தால் நல்லது.//

நீங்க வேறே. இன்றைய பத்திரிகைக் காரங்களுக்கு விளம்பர லாபம் தான் குறி. எப்போது வாசகர் ரீச் பற்றி இவங்க நினைப்பாங்கன்னா, எந்த அளவுக்கு விற்பனை இருக்கிறதோ அந்த அளவுக்கு விளம்பரம் குவியும் என்ற காரணத்திற்காகத்தான் எதையாவது அச்சிட்டு எப்படியாவது வாசிக்கறவங்க கையிலே கொண்டு வந்து சேர்த்திடறாங்க..

ஜீவி said...

@ கோமதி அரசு.

//(ராஜா கையை வ்ச்சா ராங்கா போனதில்லை பாணியில்)//

யாராவது கண்டுப்பாங்கன்னு தான் அந்த வரியை எழுதி வைச்சேன். உங்க பின்னூட்டம் வந்ததும் அந்த எதிர்பார்ப்பு பூர்த்தி ஆயிற்று. 'டக்'ன்னு இந்த வரி, அந்த வரியை நினைக்க வைச்சது தான் வாசிப்பின் ரசனை! ஒண்ணை படிக்கறச்சே, download பண்ணியிருக்கற ஃபைல்லேந்து இன்னொண்னை மூளை எடுத்துக் குடுக்கறது, பாருங்கள்!Wonderful!..

தி.தமிழ் இளங்கோ said...

சூழ்நிலை காரணமாக, படிக்காமல் விட்டுப் போன 'பாரதியார் கதை' யின் தொடர்களை இப்போதுதான் படித்து முடித்தேன்.

ஜீவி said...

@ தி. தமிழ் இளங்கோ

வாங்க, இளங்கோ சார்!

நல்லது. படித்து முடித்த பின் நிறையச் சொல்லத் தோன்றியிருக்குமே?..

Related Posts with Thumbnails