மின் நூல்

Sunday, March 4, 2018

பாரதியார் கதை -- 13

                            அத்தியாயம்-- 13


ந்திய விடுதலைப் போராட்டத்திற்கான உந்து சக்தியாக இருந்தது கர்ஸான் காலத்திய வங்காளப் பிரிவினையே.  வங்காளப் பிரிவினை ஏற்றி வைத்த இந்திய சுதந்திரத்திற்கான தீபம் எந்த அரசியல் சுழற் காற்றிலும் அணையவில்லை.  மேலும் மேலும் பிரித்தினிய அரசுக்குக்கு எதிராக மக்கள் எழுச்சியாக கிளர்ந்து ஜொலித்துக் கொண்டே இருந்தது.

அந்தப் போராட்டங்களின் எழுச்சியை கொஞ்சமாகவேனும் மட்டுப்படுத்த பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் படாத பாடு பட்டனர்.   இந்தியர்களுக்கு பெயருக்காகவேனும் சில உரிமைகளை வழங்க வேண்டும் என்று 1909-ல் ஐக்கிய ராஜ்யத்தின் நாடாளுமன்றத்தில்  Indian Councils Act - என்பதான சட்டம் ஒன்று இயற்றப் பட்டது.  இந்த சட்ட ஆக்கத்திற்கான பரிந்துரைகளை  அந்நாளைய இந்திய துறைச் செயலாளர் ஜான் மார்லேவும் இந்திய வைஸ்ராய் மிண்டோவும் இணைந்து தயாரித்திருந்த அறிக்கையின் அடிப்படையில் சட்டம் நிறைவேற்றப் பட்டது.   அதனால் Indian Councils Act-ல் பரிந்துரைக்கப்பட்ட சீர்த்திருத்த நடவடிக்கைகள்  "மிண்டோ-மார்லி சீர்திருத்தங்கள் என்று வரலாற்றில் பெயர் கொண்டது.

இந்த சீர்திருத்த நடவடிக்கைகளால் அதுவரை நியமன அடிப்படையில் இருந்த உறுப்பினர் தேர்வுகள்  தேர்தல்கள் மூலம் தேர்ந்தெடுக்க வேண்டும் என்றாயிற்று.  இதனால் பல்வேறு அமைப்புகளில் இந்திய உறுப்பினர்களின் எண்ணிக்கை கூடியது.  இது   இந்த சட்டத்தின் முக்கிய அம்சம்.

அரவிந்தர் கல்கத்தாவில் இருந்த பொழுது நடத்திய பத்திரிகை 'கர்மயோகி'. அந்தப் பத்திரிகை வெளிவருவதில் சில காரணங்களால் சுணக்கம் ஏற்பட்டு நிறுத்தப்பட்டிருந்தது.    அரவிந்தரும் புதுவை வந்து விடவே,  புதுவையில் பாரதியின் பார்வையில் 'கர்மயோகி' பத்திரிகை புனர் ஜென்மம் எடுத்தது.

மிண்டோ மார்லி சீர்த்திருத சட்டத்தினால் அரவிந்தர் 'கர்மயோகி'யின்  முந்தைய இதழ்களில் சில கருத்துக்கள் தெரிவித்திருந்தார்.  சீர்திருத்தங்கள் என்ற பெயரில்  சிறுசிறு விஷயங்களில் கட்டுப்பாடுகளை நெகிழ்த்துவது முக்கியமான விஷயங்ளுக்கான தீர்வுகளை மறக்கடிப்பதற்கான ஏற்பாடு என்பது மாதிரியான அரவிந்தரின் கருத்துக்களின் அடிப்படையில் பாரதியார் தீவிரமாக 'கரிமயோகி'யில் கட்டுரைகள் எழுதினார்.

ஏற்கனவே விவேகானந்தர் 'பதஞ்சலி யோக
சூத்திரத்தை' ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்திருந்தார்.  பாரதியாரோ இன்னும் செழுமைபடுத்தி பதஞ்சலி யோக சூத்திரத்தின் 'ஸமாதிபாகம்' என்னும் முதல் பகுதியை சமஸ்கிருதத்திலிருந்து தமிழுக்கு நேராக மொழி மாற்றம் செய்திருக்கிறார்.  'கர்மயோகி'யில் பதஞ்சலி யோக சூத்திரத்திற்காக பாரதியின்  தமிழாக்கம் தொடராக வெளிவந்தது.

அநேகமாக மாலை நேரங்களில் கலவை சங்கரன்  செட்டியார் வீட்டிற்கு  அரவிந்தரை சந்திப்பதற்காக பாரதியார் செல்வதுண்டு.  நேரம் போவது தெரியாமல் இருவரும் பல விஷயங்கள் பற்றி பேசிக்  கொண்டிருப்பார்களாம்..   இது பற்றி வ.ரா. சுவையாக வர்ணிப்பதை இங்கு எடுத்தாளுவது பொருத்தமாக இருக்கும்.   இந்த தேசத்து சுதந்திர போராட்ட காலத்து தலைவர்களின் உரைகள் எப்படியெல்லாம் இருக்கும் என்று இந்தக் காலத்து வாசகர்கள் தெரிந்து ரசிக்கவும் வாய்ப்பாக இருக்கும் என்பதினால் வ.ரா.வின் எழுத்துக்களை அப்படியே இந்த  இடத்தில் எடுத்தாளுகிறேன்.

'திலகர் சம்பாஷணையில் பொருளும் சக்தியும் இருக்கும்;  ஆனால் வழவழப்பும், இனிப்பும்,   நகைச்சுவையும்   இருக்காது.  தோழர் கபர்தேயின் பேச்சில் வியக்கத்தக்க  நகைச்சுவையும்,  சிங்காரமும்   செழித்து இருக்கும்.  சுரேந்திர நாதரின்  பேச்சே   பிரசங்கம்.  விபின் சந்திரபாலரின் பேச்சில்  கசப்பும்,  சுளிப்பும் கலந்திருக்கும்.  ஆனால், சக்தியும் நவீனமும் கூட இருக்கும்.  கோகலேயின் பேச்சு தங்கக் கம்பி இழை சன்னப் பேச்சு.  பிரேஸ்ஷா மேத்தாவின் பேச்சு  தடியடி முழக்கம்.  லஜபதிராய், அமரிக்கையுடன், முன்னெச்சரிக்கை நிறைந்த  பேச்சு பேசுவார்.  ஜி. சுப்ரமணிய அய்யர் விஸ்தாரமாகப் பேசுவார்.  சேலம் விஜயராகவாச்சாரியார் சட்ட மேற்கோள், சரித்திர மேற்கோள் இல்லாமல் பேசவே மாட்டார்.



'பாரதியார் --அரவிந்தர் சம்பாஷனைகளில் நவரசங்களும் ததும்பும்.  ஒழுகும்.  கவிதை, சரித்திரம், தத்துவம், அனுபவம், கற்பனை, ஹாஸ்யம் குறுக்கு வெட்டு, விஸ்தாரம், உண்மையை வெளிப்படுத்தும் ஆவல், அபரிதமான இலக்கியச் சுவை, எல்லையில்லாத உடல் பூரிப்பு-- எல்லாம் சம்பாஷனையினிடையே இடைவிடாது நர்த்தனம் செய்யும்.  அந்தக் காலத்திலே குறுக்கெழுத்து நான் பழகிக் கொள்ளவில்லையே என்று வருந்துகிறேன்.  சம்பாஷனையில் சிற்சில கட்டங்களும் குறிப்புகளும் தான் இப்போது என் நினைவில் இருக்கின்றன.  தினசரி டயரி எழுதும்  பழக்கம் என்னிடம் இல்லை.  அளவற்ற நஷ்டம்.  இப்போது என்ன செய்வது?..

புதுச்சேரித்  தேசபக்தர்களுக்குள் வ.வே.சு. அய்யரைப் போல் நூல் பயிற்சி உள்ளவர்கள் யாருமே இல்லையெனச் சொல்லலாம்.  அபாரமாகப் படிப்பார். வீரரகளின் சரித்திரம், இலக்கியம், யுத்த சாஸ்திரப் புத்தகங்கள், பழைய தமிழ்க் காவியங்கள், பிற நாட்டு நல்லறிஞர்களின் நூல்கள் இவைகளை அய்யர் இடைவிடாது படித்துக்  கொண்டிருப்பார்.  கஸ்ரத் செய்வதில் அவருக்கு ரொம்ப  ஆவல்.  நீந்துவார். ஓடுவார். பாரதியாருக்கு இவைகளில் எல்லாம் நிரம்ப ஆசை தான்.  ஆனால், செய்வதேயில்லை. எல்லாவற்றையும் பக்கத்திலிருந்து கொண்டு உற்சாகத்துடன்  வேடிக்கை பார்ப்பார்.


-- என்று வ.ரா. வர்ணிப்பதையெல்லாம் வாசித்துக் கொண்டே இருக்கலாம் போல அவர் எழுதுவதில் ஒன்றிப் போவோம்.

திரைப்படங்களின் பாதிப்பு நம்மில் மிகப்  பெரிது.  பாரதியார் என்றால் எஸ்.வி. சுப்பையா அவர்கள் நினைவும், கப்பலோட்டிய  தமிழனில் அவர் நடித்த பரபரத்த நடிப்பும் தான் பொதுவாக நம் நினைவுக்கு வரும்.

இதோ பாரதியார் எப்படியிருப்பார் என்று நம் கண்முன்  கொண்டு வந்து வ.ரா. நிறுத்துகிறார், பாருங்கள்!..

பாரதியார் சுந்தர ரூபன்.  மாநிறம்.  ஐந்தரை அடிக்குக் கொஞ்சம் அதிகமான உயரம்.  அவரது மூக்கு மிகவும் அழகான மூக்கு.   அவருடைய கம்பீரமான முகத்துக்கு அளந்து அமைக்கப் பட்டிருப்பதைப் போலிருக்கும்  அந்த அழகிய  நாசி,  ஸீஸர், ராஜகோபாலாச்சாரியாருடையது போல கருட மூக்கு அல்ல.  ஸீஸர் மூக்கு, நடுவில் உயர்ந்து, நுனியில் கூர்மையாகி கண்டவர்களைக் கொத்துவது போலத் தோன்றும்.  பாரதியாரின் மூக்கு கடைசல் பிடித்தது  போல இருக்கும்.   நீண்ட நாசி.  அந்த நீளத்தில் அவலட்சணம் துளி கூட இருக்காது.

பாரதியாரின்  கண்கள் செவ்வரி படர்ந்த செந்தாமரைக் கண்கள்.   இவைகளின் நடுவே, அக்னிப் பந்துகள் ஜொலிப்பதைப் போலப் பிரகாசத்துடன்  விளங்கும்.   அந்தக் கண்களை எவ்வளவு நேரம் பார்த்துக் கொண்டிருந்தாலும் தெவிட்டாது.

அவரது நெற்றி பரந்த நெற்றி.  நெற்றியின்  இரண்டு  கங்குகளிலும், நிலத்தைக் குடைந்து  கொண்டு போயிருக்கும்  கடலைப் போல முகம் தலைமயிரைத்  தள்ளிக் குடைந்து  கொண்டு போயிருக்கும்.     கங்குகளின்   மத்தியில், முகத்தின் நடு  உச்சியில், மயிர் கொஞ்சம் நிமிர்ந்து நிற்கும்.  நெற்றியிலே இந்த சேர்மானம் அவருக்கு வர்ணிக்க முடியாத அழகை கொடுத்தது.   பேர் பாதிக்கும் அதிகமாக  அவர்  தலை  வழுக்கை.

இடுப்பிலே 'தட்டு சுற்று' வேஷ்டி.   சாதாரணமாய் சொல்லப்படும் 'சோமன் கட்டு' அவர் கட்டிக் கொண்டதில்லை.  உடம்பிலே எப்பொழுதும் ஒரு  பனியன்.  பனியனுக்கு  மேல் ஒரு ஷர்ட்டு.  அது கிழிந்திருக்கலாம்.  அநேகமாக பித்தான்  இருக்காது.  இதுக்கு மேல் ஒரு  கோட்டு.  அதற்கு மரியாதைக்காக ஒரு பித்தான் போட்டுக் கொள்வார்.

ஷர்ட்டின்  இடப்பக்கப் பித்தான்  துவாரத்த்தில் ஏதாவது ஒரு  புதிய  மலர் செருகி வைத்துக்  கொள்வார்.  ரோஜா, மல்லிகைக்கொத்து  முதலிய மணம் கமழும் பூக்கள் அகப்பட்டால்  நல்லது தான்.  இல்லாவிட்டால் வாசனை இல்லாத புதுப்பூ எது அகப்பட்டாலும்  போதும்.  வேப்பம்பூவாய்  இருந்தாலும்  பரவாயில்லை.   'நாள் மலர்' ஒன்று அந்த பித்தான் துவாரத்தில் கட்டாயமாக இருந்துதான் ஆக வேண்டும்.

இடக்கையிலே ஒரு நேட்டுப்  புத்தகம், சில காகிதங்கள், ஒரு புஸ்தகம்-- இவை கண்டிப்பாய் இருக்கும்.  கோட்டுப் பையில் ஒரு பெருமாள் செட்டி பென்ஸில் இருக்கும்.  பவுண்டன் பேனா அவரிடம் தரிப்பது இல்லையோ என்னவோ, பவுண்டன் பேனாவினால் அவர் எழுதி, நான் பார்த்ததில்லை. எப்பொழுதும் பென்ஸில் எழுத்துத் தான்.

எழுத்து குண்டு குண்டாக இருக்கும்.  ஒரு எழுத்தின் மேல் இன்னொரு எழுத்து படாது;  உராயவும் உராயாது.  க-வுக்கும் ச-வுக்கும் வித்தியாசம் இல்லாமல் நம்மில் பலர் எழுதுகிறார்களே, அத்தகைய அலட்சியப் புத்தியைப் பாரதியார் எழுத்தில் காண முடியாது.  ஒற்று எழுத்துக்களுக்கு மேல் நேர்த்தியான சந்தனப் பொட்டைப் போல புள்ளி வைப்பார்.

உடை விஷயத்தில் ஒன்று  பாக்கி.  வடநாட்டு சீக்கியர்களைப் போல முண்டாசு கட்டிக் கொள்வதில் அவருக்கு ஆசை அதிகம்.  அந்தத் தலைப்பாகையுடன் அவர் ஹிந்துஸ்தானி பேசினால், அவரைத் தமிழன் என்று யாருமே சொல்ல முடியாது;  அவ்வளவு தெளிவான உச்சரிப்பு.

பாரதியார் இடக்காலைக் கூசாமல் தரையில் வைக்க மாட்டார்.  இடக்கால் பாதத்தில் அவருக்கு முக்கால்  பைசா அகலத்தில் ஆணி  விழுந்திருந்தது. சில சமயங்களில் கவனக் குறைவால் அவர் இடக்கால் கல்லிலோ வேறு கடினமான பொருளிலோ  பட்டு விட்டால், அவர் துடிதுடித்து அந்த இடத்திலேயே சிறிது நேரம் உட்கார்ந்து விடுவார்.

பாரதியார்  குனிந்து நடந்ததே கிடையாது.  "கூனாதே, கூனாதே..." என்று அடிக்கடி இளைஞர்களிடம் சொல்லுவார்.  கொஞ்சங்கூட சதைப்பிடிப்பே இல்லாத மார்பை, பட்டாளத்துச் சிப்பாய் போல முன்னே தள்ளித் தலை நிமிர்ந்து பாடிக் கொண்டே நடப்பதில் பாரதியாருக்கு ரொம்பப்  பிரியம்.

"லா மார்ஸேய்ஸ்,  லா ஸாம்பர் தே மியூஸ்.." என்ற பிரஞ்சுப்  படைப் பாட்டுகளைப்  பாடிக்கொண்டு, அவைகளின் தாளத்திற்கேற்ப நடப்பதில் பாரதியாருக்கு பிரம்மானந்தம்;  இந்தப்  பாட்டுக்களின் மெட்டுகளைத் தழுவி தமிழில் பல பாட்டுகள் பாட வேண்டுமென்று சொல்லிக் கொண்டிருப்பார்.  இரண்டொரு பாட்டுகள் பாடியுமிருக்கிறார்.

பாரதியார் இருக்கும் இடத்தில் கூட்டத்திற்கு  ஒரு நாளும் குறையிருக்காது.. வெளியே புறப்பட்டால் இரண்டொருவரேனும் அவரைப் பின் தொடர்ந்து கூடவே செல்லாமலிருப்பதில்லை.   ஆனால் எட்டத்திலேயே போய்க்  கொண்டிருக்கும் ரகசியப் போலீஸாரைப் பற்றிக் குறிப்பிடத் தேவையா?....

-- பாரதியாருடன்  நெருங்கிப் பழகிக்  கூடவே இருந்து களித்த வ.ரா. அவர்களின் அனுபவப் பகிர்வாக பெரும்பாலும் இந்த அத்தியாயச் செய்திகள் வாசிப்பவர்களின் ரசனைக்காக  எடுத்தெழுதப்பட்டன.

பாரதியாரின் புதுவை வாழ்க்கையைத்  தொடர்ந்து பார்ப்போம்.


(வளரும்)


படங்கள் உதவிய  அன்பர்களுக்கு நன்றி.




21 comments:

G.M Balasubramaniam said...

பாரதியார் பாடும் பாடல்களை எழுத்தாக்குவது குறித்தசந்தேகம் எனக்குண்டு இதே போல் பண்டைய தமிழ்ப்பாடல்களிலும் உண்டு எழுதி முடித்தபின் பாடிப்பார்ப்பாரா பல பாடல்களும் இலக்கணவிதிகளுக்கு உட்பட்டு இருப்பதே

ஸ்ரீராம். said...

வராவின் பாரதியார் மூக்கு பற்றிய வர்ணனை சுவாரஸ்யம்.

ஜீவி said...

@ G.M. Balasubramaniam

பாரதியார் வரகவி. காகிதம் எழுதுகோலைத் தேடிக்கொண்டு, எதுகை--மோனைகளுக்காக யோசித்தோ, அல்லது எ.மோ. இல்லாமலோ கவிதை வரிகளைத் தேடி எழுதியவரல்ல.

பல கவிதைகள் அதற்கான வெளிப்படும் சூழ்நிலைகளில் அவரிடமிருந்து வெளிப்பட்டிருக்கின்றன. முயற்சி செய்யாமலேயே சிலர் எழுதும் பொழுது அடுக்குத் தொடராக சொற்கள் வந்து விழுமில்லையா, அந்த மாதிரி.

பாரதியாரின் கவிதைகள் எந்த சூழ்நிலையில் எப்படியெல்லாம் வெளிப்பட்டிருக்கின்றன என்பது குறித்து அவரது நண்பர்கள் சொல்லியிருக்கும் குறிப்புகளை வைத்துக் கொண்டு ஒரு தனி அத்தியாயத்தை அதற்காகவே அர்ப்பணிக்க இருக்கிறேன். அப்பொழுது விவரமாகக் குறிப்பிடுகிறேன்.

ஆக்கபூர்வமான தங்கள் பின்னூட்டத்திற்கு மிக்க நன்றி.

ஜீவி said...

@ ஸ்ரீராம்

நானோ பாரதியின் கால் ஆணி பற்றியும் அவர் இடக்கால் எதிலாவது மோதி விட்டால் துடிதுடித்து உட்கார்ந்து விடுவார் என்பது பற்றி வாசித்துத் துடிதுடித்துப் போனேன்.

அதைத் தொடர்ந்து என்னன்னவோ மனத் தொய்யல்கள். கால்-காலன், யானை காலால் இடறியது என்று ஏதேதோ நினைவுகளில் நெகிழ்வுற்றேன்.

நெல்லைத் தமிழன் said...

ரசித்துப் படிக்கிறேன்.

ஒரு யுக புருஷன்... ஆனால் காலம் அவனுக்கு பசிக் கொடுமை தெரியாமல் வைக்கவில்லையே. தன் குடும்பத்தைக் காப்பாற்ற முடியாமல் எத்தனை பரிதவித்திருக்கும் அந்த மனம்.

நெல்லைத் தமிழன் said...

ரசித்துப் படிக்கிறேன்.

ஒரு யுக புருஷன்... ஆனால் காலம் அவனுக்கு பசிக் கொடுமை தெரியாமல் வைக்கவில்லையே. தன் குடும்பத்தைக் காப்பாற்ற முடியாமல் எத்தனை பரிதவித்திருக்கும் அந்த மனம்.

வெங்கட் நாகராஜ் said...

பாரதி பற்றி பல விஷயங்களை தெரிந்து கொள்ள முடிந்தது. முந்தைய பகுதிகளையும் படிக்க வேண்டும். படிக்கிறேன்.

பிலஹரி:) ) அதிரா said...

பாரதியார் பற்றிய வர்ணிப்பு மிக அழகு...

//திலகர் சம்பாஷணையில் பொருளும் சக்தியும் இருக்கும்; ஆனால் வழவழப்பும், இனிப்பும், நகைச்சுவையும் இருக்காது. தோழர் கபர்தேயின் பேச்சில் வியக்கத்தக்க நகைச்சுவையும், சிங்காரமும் செழித்து இருக்கும். சுரேந்திர நாதரின் பேச்சே பிரசங்கம். விபின் சந்திரபாலரின் பேச்சில் கசப்பும், சுளிப்பும் கலந்திருக்கும்.//

ஹா ஹா ஹா நகைச்சுவை இருக்கும் பிரசங்களைத்தான் மீண்டும் மீண்டும் கேட்கச் சொல்லி மனம் சொல்லும்.. இப்போ உலகம் விரும்புவது நகைச்சுவைகளைத்தானே.

ஸ்ரீராம். said...


//நானோ பாரதியின் கால் ஆணி பற்றியும் அவர் இடக்கால் எதிலாவது மோதி விட்டால் துடிதுடித்து உட்கார்ந்து விடுவார் என்பது பற்றி வாசித்துத் துடிதுடித்துப் போனேன்.//


எனக்கென்னவோ பாஸிட்டிவ் விஷயங்கள் சட்டென கண்ணில் படுவது வழக்கமாகிப் போகிறது!

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University said...

எட்டத்திலேயே போய்க்கொண்டிருக்கும் போலீஸ். எவ்வளவு விஷயங்களை சமாளித்துள்ளார்.

கோமதி அரசு said...

//பாரதியார் சுந்தர ரூபன். மாநிறம். ஐந்தரை அடிக்குக் கொஞ்சம் அதிகமான உயரம். அவரது மூக்கு மிகவும் அழகான மூக்கு. அவருடைய கம்பீரமான முகத்துக்கு அளந்து அமைக்கப் பட்டிருப்பதைப் போலிருக்கும் அந்த அழகிய நாசி, ஸீஸர், ராஜகோபாலாச்சாரியாருடையது போல கருட மூக்கு அல்ல. ஸீஸர் மூக்கு, நடுவில் உயர்ந்து, நுனியில் கூர்மையாகி கண்டவர்களைக் கொத்துவது போலத் தோன்றும். பாரதியாரின் மூக்கு கடைசல் பிடித்தது போல இருக்கும். நீண்ட நாசி. அந்த நீளத்தில் அவலட்சணம் துளி கூட இருக்காது.//

அருமையான விவரிப்பு. பாரதியை கண் முன்னே காண முடிகிறது.

கோமதி அரசு said...

//பாரதியார் இடக்காலைக் கூசாமல் தரையில் வைக்க மாட்டார். இடக்கால் பாதத்தில் அவருக்கு முக்கால் பைசா அகலத்தில் ஆணி விழுந்திருந்தது. சில சமயங்களில் கவனக் குறைவால் அவர் இடக்கால் கல்லிலோ வேறு கடினமான பொருளிலோ பட்டு விட்டால், அவர் துடிதுடித்து அந்த இடத்திலேயே சிறிது நேரம் உட்கார்ந்து விடுவார்.//

அதனுடன் எவ்வளவு நடை எவ்வளவு நாட்டுக்கு சேவை!
வியக்க வைக்கும் தேசபக்தர் நம் தேசிய கவி.

கோமதி அரசு said...

பாரதியார் குனிந்து நடந்ததே கிடையாது. "கூனாதே, கூனாதே..." என்று அடிக்கடி இளைஞர்களிடம் சொல்லுவார். கொஞ்சங்கூட சதைப்பிடிப்பே இல்லாத மார்பை, பட்டாளத்துச் சிப்பாய் போல முன்னே தள்ளித் தலை நிமிர்ந்து பாடிக் கொண்டே நடப்பதில் பாரதியாருக்கு ரொம்பப் பிரியம்//

அவரை போல நடித்தவர்கள் எல்லாம் இந்த நடையை சிறப்பாக செய்தார்கள்.
நிற்கும் படங்கள் எல்லாம் நெஞ்ச்சை நிமிர்த்து தலைநிமிர்ந்து இருப்பது போல் தான் இருக்கும்.

அருமையான கட்டுரை.
பாரதியைப் பற்றி படிக்க படிக்க எப்பேர்பட்ட மனிதர் என்று வியக்க தோன்றுகிறது.

Thulasidharan V Thillaiakathu said...

பாரதியைப் பற்றி நிறைய தகவல்கள் அறிய முடிகிறது. வர அவர்கள் பாரதியை வர்ணித்திருப்பது அருமை....நல்அகருத்துகளும் கூட கொஞ்சம் இலைமறை காயாய் நகைச்சுவை கலந்து கொடுக்கப்பட்டால் சுவாரஸ்யமாக ஏற்றுக்கொள்ளப்படுவது உலக இயல்பு...

துளசி, கீதா

Thulasidharan V Thillaiakathu said...

பாரதியைப் பற்றி நிறைய தகவல்கள் அறிய முடிகிறது. வர அவர்கள் பாரதியை வர்ணித்திருப்பது அருமை....நல்அகருத்துகளும் கூட கொஞ்சம் இலைமறை காயாய் நகைச்சுவை கலந்து கொடுக்கப்பட்டால் சுவாரஸ்யமாக ஏற்றுக்கொள்ளப்படுவது உலக இயல்பு...

துளசி, கீதா

G.M Balasubramaniam said...

பாரதியின் கவிதைத் திறன் பற்றி எந்த சந்தேகமும் இல்லை ஆனால் அவர் பாடுவதை எப்படி பதிவெடுக்கப்படுகிறது என்பதே வினா அவர் எழுதாமல் பாடினால் அவைஎழுத்தில் எப்படிவந்தன எழுதி வைத்துப்பின் பாடுகிறாரா

நெல்லைத் தமிழன் said...

ஜி.எம்.பி சார்... நாமக்கல் கவிஞர் வெ.ராமலிங்கம் அவரது தன் அனுபவத்தை, 'என் கதை' என்ற நூலில் எழுதியிருக்கிறார். அதில் பாரதியைச் சந்தித்ததைப் பற்றியும் அவர் கவிதை சொல்லும்போது (ஆவேசமாகப் பாடுவது) கேட்டதையும் எழுதியிருக்கிறார். அவர் பாடியதில் குறைந்த அளவே (எடிட் செய்யப்பட்டு அல்லது நீக்கப்பட்டு) எழுத்தில் வந்துள்ளது என்று பதிவு செய்கிறார். தேச விடுதலைப் பாடல்களில் அவர் சொன்ன பல வரிகள், அதேபோல வரவில்லை என்று சொல்கிறார். பாரதி வர கவி.(அந்த மாதிரி திறமை உள்ளவர்கள் பூவுலகில் ரொம்ப காலம் வாழ்வதில்லை)

ஜீவி said...

@ நெ.த.

நெல்லை! 'எங்கள் முத்து மாரியம்மா..' பாடலை அந்தச் சூழ்நிலையில் அப்படியே உள்ளத்திலிருந்து வெளிப்பட்ட ஒலியாய் பாரதி பாடிய் நிகழ்வை விவரிக்கும் குறிப்புகள் உண்டு.

கோர்வையாக எழுதிக் கொண்டு வரும் பொழுது எதை எப்பொழுது விவரிக்க வேண்டுமோ அப்பொழுது சொன்னால் தான் சுவையாக இருக்க வேண்டும். அதையெல்லாம் பதிவில் சொல்ல் வேண்டும். பின்னூட்டங்களில் அல்ல. ஏனென்றால் இன்றைய இந்தப் பதிவுகள் நாளைய புத்தகம் என்பதினால். ஒரு அத்தியாயத்தின் தொடக்கம் எப்படி இருக்க வேண்டும், அதன் முடிப்பு எப்படியிருக்க வேண்டும் என்பதையெல்லாம் யோசித்து எழுதி வருகிறேன்.

அதனால் ஜிஎம்பி அவர்களின் பின்னூட்டத்திற்கு உடனே பதில் எழுதவில்லை.

பாரதி போன்றவர்களின் சில நடவடிக்கைகள் கேள்விகளுக்கு அப்பாற்பட்டவை. எந்த சூழ்நிலையில் அவர் என்ன செய்தார் என்பது தெரியாமல் அந்த மாமனிதனை நமக்குத் தோன்றும் இந்தக் காலத்துக் குறுக்குக் கேள்விகளில் அடைக்கக் கூடாது.

இந்தத் தொடரை எழுதிக் கொண்டு வருங்கால் அந்த மஹாகவிஞ்சனின் மேலான என் ப்ரேமை அதிகரித்துக் கொண்டே வருகிறது. சில நேரங்களில் உணர்வு பிழம்பின் ஆட்கொள்ளலில் தத்தளிக்கிறேன்.

ஜிஎம்பீ சாரின் கேள்விகள் விசித்திரமானவை. எழுத்தில் எப்படி வந்தது என்பது அவர் அடிப்படை வினா. எழுத்தில் எப்படி வந்திருக்கும் என்பதனை அவர் வெகு சுலபமாக யூகிக்கலாம். அதை இன்னொருத்தர் சொல்லித் தான் தெரிய வேண்டும் என்பதில்லை.

இந்த மாதிரி விஷயங்கள் நிறைய இருக்கின்றன. ஒவ்வொன்றையும் எடுத்துக் கொண்டு
அலசக் கூடாது. சில விஷயங்களில் உள்ளுணர்வுகள் சொல்லும் பதில்களை ஏற்றுக் கொள்ளவும் வேண்டும்.

ஜீவி said...

@ ஜிஎம்பீ

ஜிஎம்பீ சார். இந்தப் பதிவிலேயே அவர் கைவசம் எப்பொழுதும் சில காகிதங்களும், பெருமாள் செட்டியார் கடை பென்சிலும் இருக்கும் என்று குறிப்பு வந்திருக்கிறது. அதனால் தன்னில் கவிதை ஊற்றெடுக்கும் பொழுது அதை அவர் குறித்து வைத்துக் கொண்டார் என்றும் கொள்ள்லாம்.

எந்தக் குறிப்பும் இல்லாமல் சில சூழ்நிலைகளில் உணர்வுகள் கொப்பளிக்க வார்த்தைகளாய் அவர் கவிதை மழை பொழிந்திருக்கிறார் என்பதற்கும் குறிப்புகள் உண்டு.

இந்தத் தொடரின் பின்னால் வரும் ஒரு பகுதியில் இவற்றையெல்லாம் எனக்குத் தெரிந்த அளவுக்கு விளக்கிச் சொல்கிறேன்.

KABEER ANBAN said...

தங்களுடைய அருமையான பாரதி பற்றிய பதிவுகளில் யதிகிரி அம்மாளின் ‘பாரதி நினைவுகள்’(சந்தியா பதிப்பகம்) என்கிற அற்புதமான களஞ்சியத்தையும் சேர்த்துக் கொள்ளுங்கள். அவர் மண்டயம் ஸ்ரீநிவாஸாச்சாரியாரின் மூத்த புதல்வி. பாரதியார் அவரை தம் மகளைப் போலவே பாவித்தார். பாரதியின் குடும்பவாழ்க்கையும் அவருடைய நகைச்சுவை உணர்வுக்கும் அது ஒரு கை விளக்கு. அவர் பாரதியாரின் மனைவியுடனும் மிக உரிமையோடு பழகியவர்.
ஜி.எம்பீ சாரின் கேள்விக்கு : அவர் எல்லாப் பாடல்களையும் கைப்பட எழுதி, ராகம் போட்டு வருவோர் போவோர்க்கெல்லாம் உற்சாகமாக பாடிக்காட்டினார் என்பதை யதுகிரியின் புத்தகத்தின் மூலம் அறிகிறோம்.

ஜீவி said...

@ Kabeer Anban

தாங்களும் இந்தத் தொடரை வாசித்து வருவது கண்டு மகிழ்ச்சி. ஜீஎம்பீ சாரின் சந்தேகத்திற்கான பதிலுக்கும் நன்றி. ஆனால் ஜிஎம்பீ சார் தான் இதையெல்லாம் மறுபடியும் பார்த்து தனக்குள் ஒரு கருத்துக் கொள்வார் என்று எதிர்பார்ப்பதற்கில்லை.
'நான் எழுத்தில் எப்படி வந்தது?.. யார் பதிவு செய்தார்கள்? என்றல்லவா கேட்டேன்' என்று கேட்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

நன்றி.

Related Posts with Thumbnails