மின் நூல்

Thursday, April 19, 2018

பாரதியார் கதை --17

                                      அத்தியாயம்-- 17

பி.ஐ.எஸ்.என் என்பது ஆங்கிலேயர் நடத்தி வந்த ஒரு கப்பல் கம்பெனிக்குப் பெயர்.  பிரிட்டிஷ் இந்தியா ஸ்டீம் நேவிகேஷன் என்பது பி.ஐ.எஸ்.என். என்பதின் விரிவாக்கம்.

நாடெங்கும் சுதேசிய உணர்வு கொப்பளித்தக் காலம் அது.     நெல்லை மாவட்ட ஒட்டப்பிடாரம் ஊரில் பிறந்து புகழ்பெற்ற நேர்மையான வழக்கறிஞராகத்   திகழந்த தமிழர் ஒருவருக்கு  சுதேசி இயக்கத்தின் தியாகங்கள்   மனதில் நெகிழ்வேற்படுத்தியது.    செல்வ வளமிக்கக் குடும்பத்தில் பிறந்தவர் அவர்.  அவர் தாத்தா, அப்பா என்று எல்லோருமே வக்கீல் தொழில் புரிந்த வழக்கறிஞர் குடும்பம் அது. அப்படிப் பட்ட குடும்பத்தில் வந்த அந்த இளைஞர் தன்னையும் அந்த சுதேச இயக்கத்திற்காக அர்ப்பணிக்கும்   உத்வேகத்தில்  தான் பார்த்து வந்த   வழக்கறிஞர் தொழிலை உதறித் தள்ளினார்.   சுதேசியப் போராட்டக் களத்தில் குதித்தார்.

கப்பலோட்டியத் தமிழன் என்று எதிர்காலத்தில் புகழ்பெற்ற வ.உ. சிதம்பரம் பிள்ளை  அவர்கள் நீண்ட இந்தியக் கடற்பரப்பில் ஆங்கிலேய ஆதிபத்தியத்தை ஒடுக்கும் விதமாக  சுதேசிக் கப்பல்களை இயக்கிய  உண்மைக்  கதையின் ஆரம்பப் பகுதி இது தான்.

மிகுந்த யோசனையுடன் வணிக கப்பல்களை பி.ஐ.எஸ்.என்னுக்குப் போட்டியாக கடலில் விட திட்டம் உருவாகிவிட்டது...  உருவாகிய   திட்டத்தை செயல்படுத்த பங்குதாரர்களைச் சேர்த்து 1906 அக்டோபர் 16-ல் சுதேசி ஸ்டீம் நேவிகேஷன் கம்பெனி என்ற பெயரில் கப்பல் கம்பெனியை அரும்பாடுபட்டுத் துவங்கினார் வ.உ.சி.   தூத்துக்குடி பீச் ரோடில் கம்பெனிக்கான அலுவலகமும் ஏற்பட்டது.  மதுரை தமிழ்ச் சங்க வள்ளல் பாண்டித்துரை தேவர் கம்பெனிக்கு தலைவராகவும் சேலம் விஜயராகவாச்சாரியார் சட்ட ஆலோகராவும் பொறுப்பேற்றுக் கொண்டனர்.

அந்நாளைய  பம்பாயில் இருந்த ஷாலேன் என்ற நிறுவனம் குத்தகை அடிப்படையில் வ.உ.சி.யின் நிறுவனத்திற்கு  கப்பல் வழங்கத் தயாராக  இருந்தது.  ஆனால் இதை  ஆரம்பத்திலேயே மோப்பம் பிடித்த அந்த வெள்ளைக்கார கம்பெனி,  சுதேசி நிறுவனத்துடனான தன் கடல் போட்டியை முளையிலேயே கிள்ளி விட வேண்டுமெனத்  துடித்தது. அந்த துடிப்பின் வெளிப்பாடாய் ஷாலேன் கம்பெனி அச்சுறுத்தப் பட்டது. அதை அடுத்து ஷாலேனும்  வ.உசியின் சுதேசி கப்பல் நிறுவனத்திற்கு குத்தகைக் கப்பல் தரத் தயங்கினார். 
இருந்தாலும் அசரவில்லை வ.உ.சி.  சொந்தத்திலேயே கப்பல் வாங்கி விடுவது என்ற உறுதியுடம் பம்பாய் பயணம் மேற்கொண்டார்.  'கப்பலுடன் வந்தால் மட்டுமே தமிழகம் வருவேன்;  இல்லையெனில் கடலில் வீழ்ந்து மாய்வேன்' என்று பம்பாய் புறப்படுகிற நேரத்தில் பிள்ளையவர்கள் ஏற்றிட்ட சபதம் சரித்திரப் பிரச்சித்தி பெற்றது.

முதலில் எஸ்.எஸ். காலியோ என்ற கப்பல் கம்பெனிக்குச் சொந்தமாகியது.  பின் பிரான்ஸிலிருந்து எஸ்.எஸ். லாவோ என்ற கப்பல் வந்தது.  காலியோவும் சரி, லாவோவும் சரி இரண்டுமே அந்தாளைய நவீன கப்பல்கள்.  சுதேசிய   கப்பல்களுக்கு கிடைத்த ஆதரவு  வெள்ளையரின் கப்பல்களுக்கு  பெருத்த பொருளாதார இழப்பை ஏற்படுத்தியதை வெள்ளையரால் சகித்துக் கொண்டிருக்க முடியவில்லை.    மக்களுக்கோ சுதேசிய கப்பல்களின் வெற்றி-- நம் கப்பல், நம் வெற்றி என்பதான உணர்வு கிளர்ந்தெழுந்து. இதுவே வெள்ளையரின் கப்பல்களை பகிஷ்கரிக்கிற அளவுக்கு சுதேசிய களிப்பு ஒருபக்கம்; இன்னொரு  பக்கமோ இதையெல்லாம் பொறுத்துக் கொள்ள முடியாத பிரிட்டிஷ் அரசின் சதித் திட்டங்களின் விதவிதமான வடிவங்களை எதிர் கொள்ள நேரிட்டது.  சுதேசிய கப்பல் நிறுவனத்தின் மக்கள் ஆதரவை முடக்க பி.ஐ.எஸ்.என்னிலோ  கட்டணமில்லாத பயணம்,  பயணிகளுக்குக் குடை வழங்குதல் போன்ற இலவச யுக்திகளுக்கு  அன்றே கால்கோள் விழா நடத்தப்பட்டது.

வ.உ.சி. அவர்கள் பன்முக ஆற்றல்கள்  கொண்ட வித்தகர்.  தூத்துக்குடி கோரல் மில் தொழிலாளர்களின் அவல நிலைகள் போக்க வ.உ.சி.யும்  சுப்பிரமணிய சிவாவும் கைகோர்த்துப் போராடினர்.   இந்திய தொழிலாளர் வர்கப் போராட்டத்தில் தொழிற்சங்கம் அமைந்திராத காலகட்டத்தில் நூற்பாலைத் தொழிலாளர்களை ஒன்று திரட்டிய போராட்டம் ஒன்று உலகிலேயே முதன் முதலாக தூத்துக்குடியில் தான் அரங்கேறியது.  வ.உ.சி.யின் படை திரட்டும் ஆற்றல், பேச்சு வன்மை, தொழிலாளர்களின் நியாயமான கோரிக்கைகள் இதெல்லாம் ஒன்றாய்த் திரண்டு இறுதி வெற்றி நூற்பாலைத் தொழிலாளர்களுக்கே என்று ஆனது.  சுதேசி பிரச்சார சபை என்ற பெயரில் வ.உ.சி.யின் முயற்சியால் வெள்ளையர்களின் அநீதிகளை எதிர்த்து அறிவார்ந்த பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்பட்டன.   தர்ம சங்க நெசவு சாலை, தூத்துக்குடி கைத்தொழில் சங்கம், சுதேசிய பண்டக சாலை, வேளாண் சங்கம் என்று வெள்ளையர்களின் சூழ்ச்சிகளை எதிர்கொள்வதற்கான பல்வேறு   பாடி வீடுகளை வ.உ.சி.  அமைத்தார்.

இதற்கிடையில் வங்கத்து சுதந்திரப் புறா,   விபின் சந்திர பாலர்  சிறைக்கூண்டிலிருந்து விடுதலையாகும் செய்தி நாடெங்கும் பரவியது.  சந்திர பாலரின் விடுதலையை  விழா எடுத்துக் கொண்டாட வ.உ.சி. பெரிதும்  விரும்பினார்.  தூத்துக்குடியிலும் நெல்லையிலும் விழாவுக்கான ஏற்பாடுகள் களைகட்டின.   அவசர அவசர்மாக விடுதலை விழாவிற்கு ஆங்கில அரசு தடை விதித்தது.  தடையை மீறி தாமிரவருணி  ஆற்றின் தைப்பூச மண்டபத்தின் உச்சியிலேறி சிதம்பரனார் திரண்டிருந்த மாபெரும்  கூட்டத்தின் நடுவில் கர்ஜித்தார்.  அந்தக் கூட்டத்தில் சுப்பிரமணிய சிவாவின் எழுச்சியுரை சிதம்பரம் பிள்ளையின் துடிக்கும் பேச்சாற்றலுக்கு ஜரிகைப் பட்டை போல அழகு சேர்த்தது.

தடையை மீறி நடந்த மாபெரும் கூட்டத்தின்  வெற்றிக் களிப்பை ஆட்சி அதிகாரத்தில் இருந்தவர்களால்  சகித்துக் கொள்ளவே முடியவில்லை.     சிதம்பரநாதரை கைது செய்ய அதிகார வர்க்கம் துடித்தது.  அவரைத் தூத்துக்குடியில் கைது செய்தால் அதன் விளைவு பெரும் கலகமாக இருக்கும் என்று எதிர்பார்த்து மாற்று ஏற்பாடுகள் செய்தனர்.  திருநெல்வேலி கலெக்டர் தன்னை வந்து நெல்லையில்  வந்து சந்திக்குமாறு சிதம்பரனாருக்கு தாக்கீது அனுப்பினார்.   மக்கள் தடுத்தும்  தாம் கைது செய்யப்படலாம் என்பது தெரிந்தே வ.உ.சி.  கலெக்டரை சந்திக்க நெல்லை கிளம்பினார்.

இதற்குமேலும் இந்திய பிரிட்டிஷ் அரசால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை.  முதலில் வ.உ.சி.யின் சுதேசி கப்பல் கம்பெனியை பல்வேறு சூழ்ச்சிகளால் நிலைகுலையச் செய்து   நிறுவனம் திவாலாகும்   நிலைமைக்குத் தள்ளினர்.  அடுத்து அரசுக்கு எதிராக பல்வேறு  சந்தர்ப்பங்களில் செயல்பட்டார் என்று குற்றப்பத்திரிகை வாசிக்கப்பட்டு வ.உ.சி.யைக் கைது செய்தனர்.    வ.உ.சி.யின் கைதைக் கண்டித்து  மக்களிடையே கொந்தளிப்பு ஏற்பட்டது.  அதைத் தொடர்ந்து சிதம்பரனார் கோவை சிறைக்கோட்டத்திற்கு அனுப்பப்பட்டார்.

வ.உ.சி. சிறையேகியதும் சுதேசி கப்பல் கம்பெனி ஆழ்கடலில் அமுங்கிப் போன நிலைக்குள்ளாயிற்று.   வணிக ரீதியில் சுதேசி கப்பல் கம்பெனியில் பங்கு முதலீடு செய்திருந்த பெருந்தனக்காரர்கள்,  வ.உ.சி.யின் சுதேசிய செயல்பாடுகளை   வேண்டாத வேலையாகவே எண்ணினர்.  இத்தனை இன்னல்களுக்கும் இடையே சுதேசிய  கப்பல் கம்பெனியிடம் எஞ்சியது எஸ்.எஸ். காலியோ கப்பல் ஒன்றே. இந்தக் கப்பலையையும் எவரிடமாவது விற்று காசாக்கிக் கொள்கிற நிலையில் சுதேசி  ஸ்டீம் நேவிகேஷன் கம்பெனியின் சொத்துக்களை விலைபேசும் நிலை ஏற்பட்டது.  வங்காளத்து சந்திரநாகூர் பிரஞ்சிந்தியாவின் ஒரு பகுதி.  புதுவை சட்டசபை பிரதிநிதியாய் சந்திரநாகூரில்  இருந்த வங்காளி ஒருவர் இந்த 'காலியோ' கப்பலை விற்பதற்கான முயற்சிகளில் ஈடுபட்டார்.  திவாலான கம்பெனியின் எஞ்சிய சொத்துக்கள் விற்கப்பட்டு பங்குதாரர்களுக்கு பிரித்துக் கொடுக்கப்படும் என்ற நியாயங்கள் எல்லாம் சரி தான்.  ஆனால் அந்த காலியோ கப்பல் யாருக்கு விற்கப்பட்டது என்பது நெஞ்சு பொறுக்க முடியாத விஷயம் ஆயிற்று.  எந்த  பிரிட்டிஷ் கப்பல் கம்பெனி,  வ.உ.சி.யின்  சுதேசி கப்பெனியின் சீர்குலைவுகளுக்குக் காரணமானதோ, அதே  பி.ஐ.எஸ்.என். கம்பெனிக்கே  காலியோ விற்கப்பட்டது தான் கொடுமையிலும் கொடுமை!

இந்த செய்தி கேட்டு வெந்த புண்ணில் வேல் பாய்ச்சியது போல பாரதியார் துடித்துப் போனார்.  பிரிட்டிஷ் கம்பெனியின் அடாவடித்தனங்களைப் புறக்கணித்து சுதேசி கப்பலுக்கு மக்களின், வணிகர்களின் ஆதரவு பெருகிய பொழுது இந்த நாட்டு மக்களுக்கு நல்ல  காலம் வந்து விட்டதென்று புளகாங்கிதம் அடைந்த பாரதி,  வ.உ.சி.யும் சிறையில் அடைக்கப்பட்டு, கப்பலும் அநியாயத்திற்கு பி.ஐ.எஸ்.என். நிர்வாகத்தின் கைக்கே போய்ச் சேர்ந்ததில் மிகவும் சோர்ந்து போனார்.   கோவை சிறையில் சிதம்பரனார் அனுபவித்த துன்பங்களைக் கேள்விப்பட்டு துடிதுடித்துப் போனார்.  சிறைப்பறவை போல தானும் கையாலாகதவனாய்  புதுவையில் இருப்பது அவரை மிகவும் வேதனைக்குள்ளாக்கியது.   அக்கணமே பிரிட்டிஷ் இந்தியா பகுதிக்குப் போய் தானும் ஏதாவது செய்ய வேண்டும் என்ற துடிப்பு அவரின் இதய மூச்சாயிற்று.   அதுவும் பாரதியும் வ.உ.சி.யும் கொள்கையிலும் செயல்பாட்டிலும் ஒன்றிய நண்பர்கள்.  சுருங்கச் சொல்ல வேண்டுமானால் திலகர் படை வீரர்கள்.

சந்தோஷத்திலும் சரி, துக்கத்திலும் சரி கவிஞனுக்கு கவிதை தானே பிறக்கும்?..  வ.உ.சி.   கோவை சிறையில் பட்ட துன்பங்களைக் கேட்டுப்  பரிதவித்தவருக்கு கவிதை கண்ணீர் ஊற்றாய் பெருக்கெடுக்கிறது....  'மேலோர்கள் வெஞ்சிறையில் வீழ்ந்து கிடப்பதுவும்,   நூலோர்கள் செக்கடியில்   நோவதும் காண்கிலையோ?' என்ற இரத்தக் கண்ணீர் வரிகளை இன்று வாசிக்கும் பொழுதும் நம் நெஞ்சமெல்லாம் நெகிழ்கிறது.

(வளரும்)

படங்கள் அளித்து உதவியவர்களுக்கு நன்றி.





6 comments:

G.M Balasubramaniam said...

என்னதான் தேச நலனுக்காக உழைதாலும் கடைசியில் மிகவும் கஷ்டப்பட்டு தானே இறந்தார்

KABEERANBAN :கபீரன்பன் said...

வஉசி க்கு சேர வேண்டிய தொகை காந்தி மூலம் அனுப்பப்பட்டு வராமல் போய் அவர் காந்தியுடன் நடத்திய நீண்ட கடிதத் தொடர்பு ஹிந்து பத்திரிக்கையில் வெளியான நினைவு இருக்கிறது. காந்தி அவரை சரியாக பொருட்படுத்தவில்லையோ என்ற எண்ணமும் தோன்றுகிறது.

ஜீவி said...

@ ஜிஎம்பீ

தேச நலனுக்கு உழைத்தவர்களில் யார் சந்தோஷப்பட்டிருக்கிறார்கள், சொல்லுங்கள்.

Anonymous said...

@ கபீர் அன்பன்

இது பாரதி பற்றிய தொகுப்பு என்பதினால் வ.உ.சி. பற்றிய முழு வரலாற்றையும் எழுதாமல், பாரதி- வ.உ.சி. சம்பந்தப்பட்ட தகவலக்ளோடு முடித்தேன்.

தென்னாப்பிரிக்காவில் காந்தி இருந்த பொழுது வ.உ.சி.க்காக நிதி திரட்டி அனுப்பி வைக்க முயற்சித்தார். வ.உ.சி. கஷ்ட ஜீவனத்தில் இருந்த காலத்திய நினைவுகள் உருக்கமானவை.
நீங்கள் குறிப்பிட்டுக் கேட்டவுடன் தான் அவற்றையெல்லாம் எழுதி இக்காலத்து இளைஞர்களுக்கு தெரியப்படுத்த வேண்டும் என்ற உத்வேகமே ஏற்பட்டது. அடுத்த அத்தியாயத்தில் வ.உ.சி. பற்றித் தொடர்ந்து எழுதுகிறேன். இல்லையென்றால் நீங்கள் குறிப்பிட்டிருக்கும் செய்திகள் பற்றித் தனித் தலைப்பில் எழுதுகிறேன்.

நெடுநாட்களுக்குப் பிறகு உங்களைப் பார்த்ததில் மிகவும் சந்தோஷம். நீங்கள் வாசித்து வருவது எனக்கான பெருமை. நன்றி, கபீரன்ப!

Tamilus said...

நல்ல பதிவு , வாழ்த்துக்கள்

வணக்கம்,

www.tamilus.com எனும் முகவரியில் புதிய திரட்டி ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. பல தமிழ் திரட்டிகளுக்கு பதிவர்களின் சரியான ஒத்துழைப்பு கிடைக்காததால் அவற்றினை மூட வேண்டிய தேவை ஏற்பட்டது. அந்த நிலையினை இத் திரட்டிக்கு கொண்டுவரமாட்டீர்கள் என்ற புதிய நம்பிக்கையுடன் ஆரம்பிக்கப்பட்டுள்ளது தமிழ்US

உங்களது பதிவு பகிரப்பட்டுள்ளது. உங்களின் பயனுள்ள இடுகைகள், ஆக்கங்கள், பதிவுகள் என்பவை பலரைச் சென்றடைய இத் திரட்டியில் பகிர்ந்து உங்களின் ஒத்துழைப்பை நல்குவீர்கள் என நம்புகிறோம்.

நன்றி..
தமிழ்US

ஜீவி said...

கபீரன்பன்!

உங்கள் பின்னூட்டத்திற்கான எனது மறுமொழி தான் அது. Anonymous என்று தவறாக
க்ளிக் ஆகியிருக்கிறது. தவறுக்கு வருந்துகிறேன்.



Related Posts with Thumbnails