Monday, August 6, 2018

பாரதியார் கதை

                                                             அத்தியாயம்--   21


டையத்தில் இருக்கும் பொழுது  பாரதியாருக்கு  சுதேசமித்திரனுடனான  தொடர்பு மீண்டும் துளிர்த்தது.   இங்கிருந்தே மித்திரனுக்கு கட்டுரைகள் அனுப்பி வந்தார்.  கடையத்தில் 'கலா நிலையம்'  என்றோரு அமைப்பை நிறுவி தமிழ்ப்பணி புரிய விழைந்தார்.   நெல்லைக்குச் செல்லும் பொழுதெல்லாம் நெல்லையின் பிரபல வழக்குரைஞரும் தேசியவாதியுமான சாது கணபதி பந்துலுவின் வீட்டில்   பாரதியார் தங்குவதுண்டு.  பாரதி நெல்லை வரும் பொழுதெல்லாம் தவறாமல்  சோமசுந்தர பாரதியும் பாரதியைச் சந்திப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தார்.  தாமிரபரணி ஆற்றங்கரையில் பாரதி புனைந்த பாடல்கள் பிரசித்தம்.  சில நாட்கள் மாலை வேளைகளில் தன் கடையம்   வீட்டின் வாசல் வெளிப்புறம் நின்று  கொண்டு சொற்பொழிவுகள் செய்வதுண்டு.   அதற்கு
நிறைய கூட்டம் கூடுமாம்.  ஊர் மக்கள் மிகுந்த ஆர்வத்துடன் பாரதியாரின் உரைகளைக் கேட்பார்களாம்.  கவிஞர்,  எழுத்தாளர், பத்திரிகையாளர், அரசியலாளர், சொற்பொழிவாளர் என்று பன்முகம் கொண்டவராய் பாரதி திகழ்ந்திருக்கிறார்.   சென்னைக்  கடற்கரையில்   அவர் ஆற்றிய சொற்பொழிவுகள் பிரிட்டிஷாரைக் கலக்கியிருக்கின்றன.   ஒரு பழைய இதிகாச காலத்து புராணத்தின் பின்னணியில் பிரிட்டிஷார் ஆட்சி காலத்து அதிகாரச் சிக்கல்களை ஆழமாக அலசி ஆராயவே பாரதியார் மகாபாரதக் கதையின் சில பகுதிகளை நீள் காவியமாக்கி 'பாஞ்சாலி சபதம்' என்ற பெயரில்  படைத்திட்டார்.

கடலூர் சிறை விடுதலைக்குப் பின் அவர் ஆற்றிய சொற்பொழிவுகள் குறிப்பிடத்தக்கன.  அந்நாட்களில்  ஒரு ரூபாய் நுழைவுக் கட்டணம் வைத்து மேடைச் சொற்பொழிவுகளுக்கு ஏற்பாடு பண்ணும் ஒரு வழக்கமிருந்தது.  இப்படியான பல சொற்பொழிவுகளில்   ஆங்கிலத்திலும், தமிழிலும் சரளமாகப் பேசி  பாரதியார் மக்களை மிகவும் கவர்ந்திருக்கிறார்.  சொற்பொழிவுகளுக்கு நடுவிலேயோ, ஆரம்பத்திலோ தனது பாடல்கள் சிலவற்றைப் பாடி மக்களை மகிழ்ச்சியில் அவர் ஆழ்த்துவதுண்டு.   இந்திய வரலாறு,  இந்தியாவின் பழம்பெரும் பெருமை,    இந்து மதத்தின் சிறப்பு, இந்திய விடுதலை--   இதெல்லாம் அவரது பேசு பொருளாக அமைந்திருக்கிறது.  விடுதலைக்குப் பிறகான கடையம்  வாழ்க்கையின் போது பாரதியார் சென்னை சென்றிருக்கிறார்.  சரியாகச் சொல்ல வேண்டுமானால் 1919 ஆண்டு  பிப்ரவரி மாதம்  அது.  ரெளலட் சட்ட வரைவை
எதிர்த்து கிளர்ச்சிகள் நடந்த நேரம் அது.  சென்னையில் நடந்த கிளர்ச்சிக் கூட்டத்திற்கு தலைமை தாங்க மஹாத்மா காந்தி அழைக்கப்பட்டு அவரும் ராஜாஜி வாழ்ந்த இல்லத்தில் தங்கியிருந்த நேரம்.  காந்தியாரின் வருகை அறிந்து பாரதிக்கு ஏகப்பட்ட மகிழ்ச்சி.  அவரைச் சந்திக்கச் செல்கிறார்.

பாரதியாரின் வாழ்க்கை பற்றி எழுதியிருக்கும் வ.ரா. நூலில் காணப்படும் தகவலை அப்படியே இங்கு தருவது சுவையாக இருக்கும்.

"அப்பொழுது ராஜாஜி, கதீட்ரல் ரோடு, இரண்டாம் நம்பர்  பங்களாவில் குடியிருந்தார்.  அந்தப் பங்களாவில் தான் காந்தி வந்து தங்கினது. நாலைந்து நாட்கள் தங்கியிருந்தார்.  ஒரு நாள் மத்தியானம்.  சுமார் இரண்டு மணி இருக்கும்.  காந்தி வழக்கம் போலத் திண்டு மெத்தையில் சாய்ந்து கொண்டு வீற்றிருந்தார். அவர் சொல்லிக் கொண்டிருந்ததை பக்கத்தில் உட்கார்ந்திருந்த  மஹாதேவ தேசாய் எழுதிக் கொண்டிருந்தார்.   காலம் சென்ற சேலம் பாரிஸ்டர் ஆதி நாராயண செட்டியார் குடகுக் கிச்சிலிப்  பழங்களை  உரித்துப் பிழிந்து மகாத்மாவுக்காக  ரசம் தயார் பண்ணிக் கொண்டிருந்தார்.  ஒரு பக்கத்துச் சுவரில்  ஏ. ரங்கசாமி அய்யங்கார், சத்தியமூர்த்தி முதலியவர்கள் சாய்ந்து நின்று  கொண்டிருந்தார்கள். எதிர்ச் சுவரில் ராஜாஜியும் மற்றும் சிலரும் சாய்ந்து கொண்டு நின்றிருந்தார்கள்.  நான் வாயில் காப்போன்.  யாரையும் உள்ளே  விடக்கூடாது என்று எனக்குக் கண்டிப்பான உத்தரவு.  நான் காவல் புரிந்த லட்சணத்தைப் பார்த்துச் சிரிக்காதீர்கள்.  அறைக்குள்ளே பேச்சு   நடந்து கொண்டிருந்த சமயத்தில் பாரதியார் மடமடவென்று வந்தார்.  "என்ன ஓய்!" என்று சொல்லிக் கொண்டே  அறைக்குள்ளே நுழைந்து விட்டார்.  என் காவல் கட்டுக் குலைந்தே போய்விட்டது.

உள்ளே சென்ற பாரதியாரோடு நானும் போனேன்.  பாரதியார் காந்தியை வணங்கி விட்டு, அவர் பக்கத்தில் மெத்தையில் உட்கார்ந்து கொண்டார். அப்புறம் பேச்சு வார்த்தை ஆரம்பித்தது.

பாரதியார்:  மிஸ்டர் காந்தி!  இன்றைக்குச் சாயங்காலம் ஐந்தரை மணிக்கு நான் திருவல்லிக்கேணிக் கடற்கரையில் ஒரு கூட்டத்தில் பேசப் போகிறேன். அந்தக் கூட்டத்துக்குத் தாங்கள் தலைமை வகிக்க முடியுமா?

காந்தி:  மகாதேவபாய்!  இன்றைக்கு மாலையில் நமது அலுவல்கள் என்ன?

மகாதேவ்:  இன்றைக்கு மாலை ஐந்தரை மணிக்கு நாம் வேறோர் இடத்தில் இருக்க வேண்டும்.

காந்தி:  அப்படியானால், இன்றைக்குத் தோதுப்படாது.  தங்களுடைய  கூட்டத்தை நாளைக்கு ஒத்திப்போட முடியுமா?

பாரதி: முடியாது.  நான் போய் வருகிறேன்.  மிஸ்டர் காந்தி!  தாங்கள் ஆரம்பிக்கப் போகும்  இயக்கத்தை நான் ஆசிர்வதிக்கிறேன்.

பாரதியார் போய்விட்டார்.    நானும்  வாயில்படிக்குப் போய் விட்டேன்.  பாரதியார் வெளியே போனதும், "இவர் யார்?" என்று காந்தி கேட்டார்.  தாம்  அறிந்த  பாரதியாரைப்   புகழ்ந்து சொல்வது நாகரிகம் அல்ல என்று நினைத்தோ என்னவோ ரங்கசாமி அய்யங்கார் பதில் சொல்லவில்லை.  காந்தியின் மெத்தையில் மரியாதை தெரியாமல் பாரதியார் உட்கார்ந்து கொண்டார் என்று கோபங்கொண்டோ என்னவோ சத்தியமூர்த்தி வாய் திறக்கவில்லை.  ராஜாஜி தான், "அவர் எங்கள் தமிழ்நாட்டுக்  கவி" என்று சொன்னார்.

அதைக் கேட்டதும், "இவரை பத்திரமாகப் பாதுகாக்க வேண்டும்.  இதற்கு தமிழ் நாட்டில் ஒருவரும் இல்லையா?" என்றார்  காந்தி.  எல்லோரும் மெளனமாக இருந்து  விட்டார்கள்'......  என்று வ.ரா. குறிப்பிடுகிறார்.

மனங்கள் இரண்டும்   கலந்து உறவாடியது  போலும்.  ஒரே சந்திப்பு தான்.  பாரதியாரும் காந்திஜியும் ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு விட்டார்கள்.

அன்றைக்கு மாலையில் நடந்த திருவல்லிக்கேணி கடற்கரைக் கூட்டத்தில் தான்  பாரதியார்  "வாழ்க, நீ  எம்மான்.." என்று காந்தி அடிகளைப் போற்றிப் பாடுகிறார்.

சென்னை விக்டோரியா  பப்ளிக் ஹாலில் 'நித்யத்தின் வழிபாடு' {Cult of the Eternal}  என்ற தலைப்பில் 1919 மார்ச் 2-ம் நாள் பாரதி உரையாற்றியதாக ஏற்கனவே இத்தொடரில்  குறிப்பிட்டிருக்கிறேன்.    அவர் ஆற்றிய இந்த உரை மகாத்மாவைச் சந்தித்த பிறகு நிகழ்ந்திருக்க வேண்டும்.  அடுத்து சென்னை வன்னிய தேனாம்பேடை கூட்டம் ஒன்றில் பாரதி அற்புதமான சொற்பொழிவை நிகழ்துகிறார்.

சென்னையில் இரண்டு மாதங்கள் இருந்திருந்திருப்பார் போலத் தெரிகிறது. பின்பு கடையம் செல்கிறார்.  பின்பு கானாடுகாத்தான், பொட்டல்புதூர், காரைக்குடி, பின்பு திருவனந்தபுரம் என்று வாழ்க்கை இருகரம் நீட்டி பாரதியாரை அழைத்திருக்கிறது.   அன்பர்கள் அழைப்பை ஏற்று சில ஊர்களில் சில நாட்கள் தங்கல்,  சில ஊர்களில்  சொற்பொழிவு என்று.....

திருத்துறைப்பூண்டி அருகிலுள்ள மணலி  என்ற ஊரில் பாரதியார்  நிகழ்த்திய சொற்பொழிவு ஒன்றை உதாரணத்திற்குச் சொல்லலாம்.  குலோத்துங்கன் வாசகசாலை என்ற நூல் நிலைய முதலாம் ஆண்டு நிறைவு விழாவில் பாரதி பேச அழைக்கப்பட்டிருந்தார்.  சத்தியமூர்த்தியும் பேச்சாளர்களில் ஒருவர்.  சத்தியமூர்த்தி  பேசிய பிறகே பாரதி பேசியிருக்கிறார்.

'இந்தியாவின் முற்காலப் பெருமையும் தற்கால நிலையும்' என்பது தான் பாரதிக்குப் பேசக்கொடுக்கப்பட்டிருந்த தலைப்பாம்.  சொற்பொழிவின் தொடக்கத்தில் 'இந்தப் பாருக்குள்ளே நல்ல நாடு எங்கள் பாரத நாடு', 'ஜெயமுண்டு பயமில்லை மனமே' -- பாடல்களை  பாரதி பாடினாராம்.   அன்றைய அரசியல் குறித்துப் பேச  அவரது  விடுதலையின் போதே பிரிட்டிஷ் அரசு சில கட்டுப்பாடுகள் விதித்திருந்தாலும்,  பாரதி மிகச் சிறப்பாக தனக்குக் கிடைத்த வாய்ப்பை உபயோகப்படுத்திக் கொள்கிறார். இந்தியாவின் வரலாறு,  அதன் பழம்பெருமை, இந்து மதத்தின் சிறப்பு, அதன் பழம்பெருமைகளை மீட்டெடுப்பதற்கான விடுதலைத் தேவைகள், அதற்கான முயற்சிகள் என்று அன்றைய பாரதி ஆற்றிய உரை விரிவாக அமைந்து சபையினரைக் கட்டிப்போட்டு விட்டதாம்.    'இந்தியாவில்   நியாயம் ஏற்பட்டால் தான் உலகத்தில் நியயம் ஏற்படும்.  ராஜரீக வேற்றுமைகள், ஜாதி வேற்றுமைகள், வர்ண வேற்றுமைகள் பால் வேற்றுமை முதலிய எல்லாவிதமான பாரபட்சங்களிலும் முடிவான நியாயம் இந்தியாவில் தீர்மானிக்கப்பட்டாலன்றி  உலகத்தில்  நியாயம்  ஏற்படாது.  இந்தியா பூமிக்கு முத்திரை நாடு;  இது கரு நாடு; இது மனுஷ்ய நாகரிகத்திற்கு தாய் நாடு.." என்று பாரதியின் அன்றைய உரை உலகளாவிய நோக்கில் அமைந்திருந்தது.   1920 டிசம்பர் 15-தேதியிட்ட சுதேசமித்திரனில் பாரதியின் மணலி கூட்ட பேச்சு பற்றிய குறிப்புகள் காணப்படுகின்றன.

அந்நாளைய சென்னை மாகாணத்தில் பாரதியார் சென்று வந்த ஊர்களைப் பற்றிய குறிப்பு ஒன்று 'பாரதி கண்ட தென்நாடு'  என்ற தலைப்பில்  ரா.அ. பத்மநாபனின் நூலில் காணக்கிடைக்கிறது.  எட்டையபுரம், கடையம், திரு நெல்வேலி, தூத்துக்குடி, மணியாச்சி, கோவில்பட்டி, சென்னை, மதுரை,  நாகப்பட்டினம், கடலூர், விழுப்புரம்,  திருவண்ணாமலை, காரைக்குடி, மணலி, கானாடுகாத்தான், ரவணசமுத்திரம், பொட்டல்புதூர், திருவனந்தபுரம், ஈரோடு ஆகிய ஊர்களுக்குப் பயணபட்டு இருக்கிறார்.  எட்டையபுரம், கடையம், மதுரை, சென்னை, புதுவை ஆகிய ஊர்கள் அவர் வாழ்ந்த ஊர்கள்.   1906-ல் கல்கத்தாவிலும், 1907-ல் சூரத்திலும் நடந்த காங்கிரஸ் மாநாடுகளில்  கலந்து கொண்டிருந்திருக்கிறார்.

எல்லாக் காலங்களிலும்  சுதேசமித்திரன் பத்திரிகை பாரதியாருக்கு தாய்வீடாகவே இருந்திருக்கிறது என்பது  மீண்டும்   நிரூபணமாயிற்று.

சுதேசமித்திரனிலிருந்து  அழைப்பு.     பாரதியார் சென்னை புறப்பட்டார்.


{வளரும்}


படங்கள் உதவிய நண்பர்களுக்கு நன்றி.


10 comments:

ஸ்ரீராம். said...

சாது கணபதி பந்துலு - பெயரை முதல் முறையாகக் கேள்விப்படுகிறேன்.

ஸ்ரீராம். said...

கடையம் வீடு படத்தைப் பார்க்கும்போது அந்த வீட்டின்முன் நின்று சொற்பொழிவாற்றி இருந்தால் எத்தனை பேர் கேட்டிருப்பார்கள் என்கிற கேள்வி வருகிறது! - நிறைய கூட்டம் கூடும் என்று சொல்லப்பட்டாலும்...

ஸ்ரீராம். said...

காந்தி - பாரதி சந்திப்பு மிகுந்த சுவாரஸ்யம். அதிரடியாய் நுழைந்து, சம்பிரதாய பேச்சுகள் இன்றி, வெட்டு ஒன்று, துடு ரெண்டு என்று பேசி, அனாவசிய போலி மரியாதைகள் காட்டாமல் சென்ற பாரதியின் நேர்மை... ஏனோ சத்யமூர்த்தியால் அதை ரசிக்க முடியவில்லை! பின்னர் பாரதியுடன் கூட்டங்களில் பங்கேற்றிருக்கிறார். அப்போது பாரதியின் பேச்சுக்கும், பாட்டுக்கும் கிடைத்திருக்கக் கூடிய வரவேற்பைப் பார்த்து சத்தியமூர்த்தியின் மனநிலை எப்படி இருந்திருக்கும்!

ஸ்ரீராம். said...

இந்த கட்டுரை புத்தமாகும்போது படிப்பபவருக்கு மிகுந்த பயனுடையதாக இருக்கும்.

கோமதி அரசு said...

//'இந்தப் பாருக்குள்ளே நல்ல நாடு எங்கள் பாரத நாடு', 'ஜெயமுண்டு பயமில்லை மனமே' -- பாடல்களை பாரதி பாடினாராம். அன்றைய அரசியல் குறித்துப் பேச அவரது விடுதலையின் போதே பிரிட்டிஷ் அரசு சில கட்டுப்பாடுகள் விதித்திருந்தாலும், பாரதி மிகச் சிறப்பாக தனக்குக் கிடைத்த வாய்ப்பை உபயோகப்படுத்திக் கொள்கிறார்.//

அச்சமில்லை, அச்சமில்லை என்ற அவர் எழுதிய பாடலுக்கு எடுத்துகாட்டாக அச்சமில்லாமல் தன் கருத்தை எடுத்து சொல்லி இருக்கிறார் பாடல்கள் மூலம்.

வணங்கி கொள்கிறேன் பாரதியை.


தொடர்கிறேன்.

ஜீவி said...

@ ஸ்ரீராம்

திருநெல்வேலி வீரராகவபுரத்தில் வாழ்ந்த புகழ்பெற்ற தேசபக்தர் சாது கணபதி பந்துலு.
பாரதி நெல்லைக்கு போகுங்கால் சில நாட்கள் இவர் வீட்டிலும் தங்குவது உண்டாம்.
'அப்படி ஒரு சமயம் தங்கியிருந்த பொழுது தான் நிமிர்ந்த நன்னடையும் நேர் கொண்ட பார்வையும் கொண்ட புதுமைப் பெண்ணை தன் கற்பனையில் தரிசித்து பாடலாகப் பாடினாக்ர்' என்றூ பெ.நா.அப்புஸ்வாமி அவர்கள் தினமணி பத்திரிகையின் ஞாயிறு
சப்ளிமெண்ட் இதழ் தினமணிச்சுடரில் எழுதியிருக்கிறார். அக்காலத்தில் மஹாகவி பற்றி தொடர்ந்து பல கட்டுரைகள் சுடரில் எழுதி வந்தார் பெ.நா. அப்புஸ்வாமி அவர்கள். {அப்புசாமி என்றாலே பலருக்கு ஜ.ரா.சு. ஞாபகம் வந்துவிடும் என்பதால் பெ.நா.சு. பற்றி ஒரு சிறு குறிப்பாவது தேவை}

பெ.நா.அப்புஸ்வாமி பற்றி தினமணி தொடர்பு கொண்ட குடும்பம் ஆகையால் நீங்கள் நன்கு அறிந்திருப்பீர்கள். இவருக்கு கலைமகள் குழாமோடும் {மஞ்சரி} நெருங்கிய தொடர்பு உண்டு. என் இளமைப் பருவத்தில் பெ.நா. அப்புஸ்வாமி அவர்களின் அறிவியல் கதைகளை ஆர்வமுடன் வாசித்து வந்திருக்கிறேன். குழந்தைகளுக்கு அறிவியல் செய்திகளைத் தெரியப்படுத்துகிற மாதிரி எழுதுவதில் வல்லுநர். ஒருவிதத்தில் பார்க்கப் போனால் சுஜாதாவுக்கு முன்னோடி. அவர் வீடு மைலாப்பூரில் இருந்ததக நினைவு.

ஜீவி said...

@ ஶ்ரீராம். (2)
அந் நாளைய கூத்து நிகழ்ச்சிகளுக்கு கிராமப்புறங்களில்
கூட்டம் கூடுவதில்லையா.. அந்தப் பாணியில் பாரதியார் வீட்டு
வாசலில் நின்று கொண்டு புராண சமயக் கலவையாய் சொற்பொழிவுகள்
நிகழ்த்தியிருக்கிறார். ஆனால் அத்தனைக்கும் அடிச்சரடு தேசபக்தி
அடிமைத்தளை ஒழித்தல் தான். கிராம அடித்தட்டு மக்கள் கூடி பாரதியாரின்
பேச்சை சுவாரஸ்யமாகக் கேட்பார்களாம்.

ஜீவி said...

@ ஶ்ரீராம் (3)
அந்த ‘ஏனோ’ பொருள் பொதிந்த ஒன்று தான். இலட்சியவாதிகளாய் இருப்பினும் நீரு பூத்த நெருப்பாய்அந்த ‘ஏனோ’ அவர்கள் நெஞ்சில் பொதிந்து போய் இருப்பதை வரலாற்றின் நீண்ட நெடிய பக்கங்களில் எங்கணும் காணலாம்.

சில பெரியவர்களின் ‘லடாய்’கள் நினைவுக்கு வருகின்றன.

ஜீவி said...

@ ஶ்ரீராம் (4)

நன்றி. அதற்காகத்தான் தவிர்க்கவே முடியாத கால தாமதற்கிடையேயும் முழுமூச்சுடன் இயங்கிக் கொண்டிருக்கிறேன்.

ஜீவி said...

@ கோமதி அரசு

சரியாகச் சொன்னீர்கள். தொடர்ந்து வாசித்து வருவதற்கு நன்றி.

Related Posts with Thumbnails