அத்தியாயம்--26
விடுதலைக்குப் பிறகு கொஞ்ச காலம் தான் எருக்கஞ்சேரி வாசம். சென்னை சென்று, விட்ட இடத்தில் தொடர வேண்டும் என்ற வேகம் நீலகண்டனை ஆட்டிப் படைத்தது. அந்த ஆசைக்கு அணைபோட்டு நிறுத்த முடியவில்லை. ஒரு சுபயோக சுப தினத்தில் நீலகண்டன் சென்னை வந்து சேர்ந்தான்.
திருவல்லிக்கேணி பைகிராப்ட்ஸ் ரோடில் 566 எண்ணுள்ள கட்டிடத்தில் தங்க இடம் கிடைத்தது. பக்கத்து காசி அய்யர் உணவு விடுதியில் சாப்பாடு. பகல் பூராவும் சுதேசி பிரச்சாரம். பாக்கி நேரங்களில் சுதந்திர இந்தியாவின் கனவு. காசு இருந்தால் சாப்பாடு இல்லையென்றால் கொலைப் பட்டினி என்று வாழ்க்கையின் சிரமங்கள் பரிச்சயமாயின. பசி பொறுக்க முடியாத தருணங்களில் முகத்தை மறைத்துக் கொண்டு இராப்பிச்சை என்று அலைந்து கிடைத்ததை வாங்கிச் சாப்பிடவும் நேர்ந்திருக்கிறது. பிச்சை எடுக்கக் கூடாது என்ற வைராக்கியம் மனதை பிசையும் பொழுது தொடர் பட்டினி தொடர்ந்திருக்கிறது. ஏன் இந்த இளைஞனுக்கு இந்த நிலை என்று மனம் இப்பொழுது நினைத்துப் பார்த்தாலும் வருந்துகிறது. 'சுதந்திர தேவி! நின்னைத் தொழுதிடல் மறக்கிலேனே!' என்ற உணர்வு பொங்கி எழுந்ததாலா?..
நீலகண்டனுக்கு அப்பொழுது 30 வயது இருக்கலாம். அந்த முப்பது வயதுக்குள் இந்த இளைஞன் வாழ்க்கையில் தான் எத்தனைப் போராட்டங்கள். ஒரு நாள் நீலகண்டன்
திருவல்லிக்கேணியில் பாரதியாரைப் பார்த்து விடுகிறார். 'பாரதி! நான் தான் நீலகண்டன்..' என்று சொன்ன நீலகண்டனை அடையாளமே தெரியவில்லை பாரதிக்கு. நீலகண்டன் அவ்வளவு இளைத்திருந்தார். குடுமி இல்லை. அங்கி போன்ற ஆடை உடலைப் போர்த்தியிருந்தது. "நீலகண்டா! என்னடா இது கோலம்?" என்று பாரதி பதறிப் போய் நீலகண்டனைக் கட்டி அணைத்துக் கொள்கிறார். நீலகண்டன் தயங்கித் தயங்கி, "பாரதி! உன்னிடம் இருந்தால் எனக்கு ஒரு நாலணா கொடேன்.. சாப்பிட்டு நாலு நாள் ஆச்சு.." என்கிறார். எதற்கும் நிலைகுலையாத பாரதி நிலை குலைந்து கண்ணீர் மல்கி நீலகண்டனின் சாப்பாடுக்கு ஏற்பாடு செய்கிறார். அந்த நேரத்தில் வந்த ஆத்திரத்தில் பாரதி பாடிய பாடல் தான் 'தனியொரு மனிதனுக்கு உணவில்லை எனில் ஜகத்தினை அழித்திடுவோம்..' என்று தெரிய வருகிறது.
நீலகண்ட பிரம்மச்சாரிக்கும் பாரதிக்கும் ஏழே வயசு வித்தியாசம். பாரதி ஏழு வயசுப் பெரியவர். இருவருமே டிசம்பர் மாதத்தில் தான் பிறந்திருக்கின்றனர். அப்பொழுது திருவல்லிக்கேணியில் பிரம்மச்சாரி பாரதியை சந்தித்ததுக்கும் இறைவன் விதித்திருந்த காரணத்தை அந்த நேரத்தில் அவர்கள் இருவருமே அறிய மாட்டார்கள். ஆனால் தொடர்ந்த சரித்திர நிகழ்வுகளைப் பார்க்கும் பொழுது, இதற்காகத்தான் இது என்று இறைவன் நிர்ணயித்திருந்த காரணங்கள் புரியும் போது மனம் சிலிர்க்கிறது.
அந்தக் காரணமும் நீலகண்ட பிரம்மச்சாரிக்கு 1921-ம் வருடம் செப்டம்பர் 11-ம் தேதியன்று புரிந்தது.
காலம் நம்மைக் கேட்டுக் கொண்டா நகர்கிறது?.. நாட்கள், மாதங்களாகி, மாதங்கள் வருடங்களாக உருக் கொள்கின்றன. நாளாவட்டத்கில்
நீலகண்டனுக்கு இடதுசாரி சிந்தனையாளர் சிங்காரவேலருடனான
பழக்கம், புரட்சிகரமான கம்யூனிச சிந்தனைகளும் தேசப் புரட்சி பற்றிய எண்ணங்களும் மனசை ஆக்கிரமிக்கின்றன. மக்களை அணி திரட்டி வெகுஜனப் புரட்சி நடந்தாலன்றி, இந்த ஆங்கிலேயரை நாட்டை விட்டு ஓட்டுவது சிரமம் என்று தீர்மானமான முடிவுகளை எடுக்கிறார் நீலகண்டன். பொதுவுடமைக் கருத்துக்களை உள்ளடக்கி நூலொன்றை வெளியிடுகிறார். பிரிட்டிஷ் ஆட்சி அதிகாரம் விழித்துக் கொள்கிறது.
சென்னையில் பாரதியாருடனான சில மாத கால பழக்கத்திற்காகத் தான் இவர் சிறையிலிருந்து வெளியில் விட்டு வைக்கப் பட்டிருந்தாரோ என்று எண்ணும்படி 1922 வருஷம் நீலகண்டன் கைது செய்யப் படுகிறார். ராபர்ட் வில்லியம் டிஎஸ்கோர்ட் ஆஷ் கொலையை விட கம்யூனிச சித்தாந்தங்களின் விளக்கமாக சிவப்பு சிந்தனையில் ஒரு நூல் வெளிவந்த விஷயம் சகித்துக் கொள்ள முடியாமலிருக்கிறது ஆட்சியாளருக்கு. ஆஷ் கொலைக்கு 7 ஆண்டுகள் என்றால் இந்த நூல் வெளியீட்டுக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனையை பிரித்தானிய ஆங்கில அரசு நீலகண்டனுக்குப் பரிசாக வழங்கியது.
அந்நாளைய பிரிட்டிஷ் தண்டனைச் சட்டப்படி ஒரு தடவைக்கு மேல் சிறையேகும் குற்றவாளிகளுக்கு வழங்கப்படும் கறுப்பு குல்லாய் நீலகண்டனுக்கும் வழங்கப்பட்டது. தீவிர பயங்கரவாதியாய் அந்த நாற்பதே வயசு இளைஞர் சித்தரிக்கப்பட்டு வடமேற்கு இந்திய மாண்ட்கோமரி சிறைச்சாலை, பின்னர் பெஷாவர், அதற்குப் பின் மூல்டான், கடைசியாக ரங்கூன் என்று அந்த பத்து வருஷ தண்டனை காலத்தில் பந்தாடப்பட்டார்.
சந்தேகமில்லாமல் தமிழகத்தில் பொதுவுடமை சித்தாந்த புத்தக வெளியீட்டிற்காக சிறையேகிய முதல் நபர் நீலகண்ட பிரம்மச்சாரியாகத் தான் இருக்கும். மக்கள் புரட்சி சிந்தனைகளுக்காக சிறை சென்ற நீலகண்டனாரின் மனசில் சிறையிலிருந்த அந்த பத்தாண்டு காலத்தில் அகப்புரட்சி ஏற்பட்டிருந்தது. தன் தாய் மாமா வெங்கட்ராம சாஸ்திரியுடன்-- இவர் மாயவரம் முனிசிபல் பள்ளி ஆசிரியர்-- சிறுவயதில் வேதாந்த கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டு விவாதித்தது எல்லாம் இப்பொழுது முழு உருக்கொண்டு இவரை ஆட்டிப் படைத்து இனி செய்ய வேண்டியது பற்றி ஆக்கபூர்வமான சிந்தனைகளை மனசில் விதைத்தது.
இரண்டு வருடங்கள் தேசாந்தரியாக பல இடங்களுக்குப் போனார். அப்படியான பயணங்கள் இவருக்கு ஞானபீடமாக அமைந்தன. தாடி வளர்ந்ததும், காவியுடை தரித்ததும் இயல்பாக நடந்தன. ஒரு நாள் ரயிலில் சென்று கொண்டிருக்கும் போது 90 வயது விஜயநகரத்து ராணி அறிமுகமாகி தன் ராஜ்யத்திற்கு அழைத்துப் போதல், ஆனைக்குன்று என்ற இடத்தில் இவர் ஆசிரமம் அமைத்தல் ஆகிய காரியங்கள் தானாக அமைகின்றன. ஏதோ உந்துதலில் திடீரென்று அங்கிருந்து கிளம்பி தென்பெண்ணை உற்பத்தி ஸ்தானத்திற்கு வந்து சேருகிறார். ஒரு பக்கம் உயர்ந்த நந்தி ஹில்ஸ், மறுபக்கம் எழில் கொஞ்சும் சந்திரகிரி. அந்த இடத்தில் சிவாலயம் ஒன்றை அமைத்து வழிபட இவரைத் தரிசிக்க வந்த ஜனத்திரளுக்கு இவர் ஓம்கார் சு, வாமிகளாகிறார். எல்லாம் இறைவனின் சித்தம் என்றாகிறது.
காந்திய பொருளாதார ஆசான் ஜே.சி.குமரப்பா, சர்தார் படேல் ஆகியோர் அந்நாட்களில் இவரைச் சந்தித்து ஆன்மிக இந்தியாவை சமைப்பது பற்றி உரையாடல் நிகழ்த்தி இருக்கின்றனர். 1936 வாக்கில் மஹாத்மா நந்தி ஹில்ஸூக்கு வந்திருந்தார். நீலகண்ட பிரம்மச்சாரி, ஓம்கார் சுவாமிகளாக மாறி அங்கிருப்பது தெரிந்து அவரைச் சந்திக்க விரும்பினார். ஆனால் மஹாத்மாவால் மலையேறிப் போக முடியவில்லை. மஹாத்மாவின் தனிச் செயலாளர் மஹாதேவ தேசாய் மலையேறி வந்து ஓம்கார் சுவாமிகளைப் பார்த்து காந்தியின் விருப்பத்தைச் சொன்னார். அது கேட்டு நந்தி ஹில்ஸில்
காந்திஜி தங்கியிருந்த இடத்திற்கு வந்து சுவாமிகள் காந்திஜியைச் சந்தித்து அளவளாவியதில் இருவருக்குமே பூரண திருப்தி. 1936-ம் வருடம் மே மாதம் 30-ம் தேதி மாலை 7 மணி சுமாருக்கு மஹாத்மாவும் ஓம்கார் சுவாமிகளும் சந்தித்துப் பேசியதாக சரித்திர ஏடுகள் நமக்குத் தகவல் தெரிவிக்கின்றன. வாழ்க்கையின் நிகழ்ச்சி நிரல்கள் எப்படியெல்லாம் வலை பின்னுகிறது என்று நமக்கும் ஆச்சரியமாகத் தான் இருக்கிறது.
நீலகண்ட பிரம்மச்சாரியின் வாழ்க்கை ஏறத்தாழ 42 ஆண்டுகள் துறவியாகவே கழிந்தது. கிட்டத்தட்ட 19 ஆண்டு காலம் சிறைப்பறவையாக இருந்த ஒரு சுதந்திரப் போராட்டக்காரர், புரட்சியாளராக-- கம்யூனிஸ்ட்டாக வரிக்கப்பட்டு, பின் வேதாந்தியாகி துறவியாக மாறிய கதை இது.
88 ஆண்டுகள் வாழ்ந்த வாழ்க்கையின் ஏடுகள் பிரமிப்பூட்டுகின்றன. அதுவும் 1978 மார்ச் 4-ம் தேதி நிறைவுற்றது.
ஓம்கார் சுவாமிகள் என்று அழைக்கப்பட்ட துறவியிடம் தாங்கள் கொண்டிருந்த பற்றினை வெளிப்படுத்தும் விதமாக அந்தப் பகுதி மக்கள் அவருக்கு சமாதியை நிறுவினர். 'இந்திய சுதந்திரத்திற்காகப் போராடிய புரட்சியாளர் ஸ்ரீ ஓம்கார் சுவாமிகள் இங்கு சமாதியாகி உள்ளார்' என்று கன்னட மொழியில் எழுதப்பட்டுள்ள வாசகங்கள் நமக்கு அவரது நீண்ட நெடிய போராட்ட வாழ்க்கையின் வரலாற்றைத் தெரிவிக்க போதுமானதாக உள்ளது.
(வளரும்)

8 comments:
http://www.motherandsriaurobindo.in/_StaticContent/SriAurobindoAshram/-09%20E-Library/-03%20Disciples/Kittu%20Reddy,%20Prof./-01%20English/Books/The%20Role%20of%20South%20India%20in%20the%20Freedom%20Movement/-12_Omkar%20Swami%20and%20the%20Assassination%20of%20Ashe.htm
'From a terrorist revolutionary sentenced to a long prison to a spiritual ascetic and teacher would seem to many to be a far cry indeed. Yet this is exactly what happened in the case of Sri Sadguru Omkar who is today a revered octogenarian Saint who has his Ashram opposite the Nandi Hills in Kolar district', wrote Sri Dharma Vira, Governor of Karnataka in 1970. ஸ்ரீ அரவிந்தாசிரம வலைத்தளத்தில் நீலகண்ட பிரம்மச்சாரியின் transformation மிக அழகாக விவரிக்கப்பட்டிருக்கிறது
நீலகண்ட பிரம்மச்சாரிஅவர்களின் வாழ்க்கை வரலாறு தெரிந்து கொண்டேன்.
ஒரளவு தெரியும்.
எவ்வள்வு இன்னல்கள் பட்டு தங்களைப் பற்றி நினையாமல் நாட்டுக்கு உழைத்து இருக்கிறார்கள்.
அனைவருக்கும் அன்பான வணக்கங்கள்.
எப்படிப்பட்ட கடினமான வாழ்க்கை நீலகண்ட பிரம்மசாரிக்கு.
78ல்தான் அவர் வாழ்க்கை முடிவுற்றதா?
மிகுந்த ஆர்வத்தோடு படிக்கும்படி தொடர் அமைவது சிறப்பு.
ஒரராண்டிற்குப் பிறகு பதிவுலகம் வந்துள்ளேன். முன் பதிவுகளை படித்துவிட்டு எனது கருத்தை தருகிறேன்,
@ Krishnamurthy. S.
It appears you don't have
permission to access this page.
வாசிக்க முயற்சித்த போது கிடைத்த அறிவுறுத்தல். கிட்டத்தட்ட பிரம்மச்சாரி அவர்களைப் பற்றி 15-க்கும் மேற்பட்ட புத்தகங்களைப் படித்து மனத்தில் வாங்கிக் கொண்டு எழுதினேன்.
-- ஜீவி
@ கோமதி அரசு
அண்ணன் தம்பிகளோடு நிறைவான பெரிய குடும்பம். மிகச் சிறிய வயதில் வீட்டை விட்டு அவர் வெளியேறிய பொழுதே அவருக்கான வாழ்க்கை இறைவனால் தீர்மானிக்கப்பட்டு விட்டது போலும்.
தொடர்ந்து வாசித்து வருவதற்கு நன்றி. நெல்லைத் தமிழனின் குறிப்பைப் படித்திருப்பீர்கள்.
@ நெல்லைத் தமிழன்
ஆமாம், நெல்லை. தேச சுதந்திரத்திற்குப் பிறகு கிட்டத்தட்ட 30 ஆண்டுகள் வாழ்ந்திருக்கிறார்.
தேசம் சுதந்திரம் அடைந்த நாளை ஒருசிலர் துக்க நாளாக அனுஷ்ட்டித்ததைக் கேள்விப்பட்டிருந்தால் எந்த அளவுக்கு இந்த மாதிரியான சுதந்திரப் போராட்ட தியாகிகள் வேதனைப் பட்டிருப்பார்கள்?-- நினைத்துப் பாருங்கள்.
@ நடன சபாபதி
நல்வரவு, சார். இப்பொழுதே படிக்க ஆரம்பித்து விடுங்கள். நன்றி.
Post a Comment