மின் நூல்

Thursday, May 9, 2019

வசந்த கால நினைவலைகள்...

                                                                         22


ரண்டாவது அக்கிரஹாரத்தில் நாங்கள் குடியிருந்த வீட்டிற்கு பக்கத்து வீட்டில் ஸ்ரீனிவாச அய்யங்கார்  என்ற பெரியவர் இருந்தார். அவர்  முதல் அக்கிரஹாரத்  தெரு முனையில்  ஜாப் டைப்ரைட்டிங் நிலையம் ஒன்றை சொந்தத்தில் வைத்திருந்தார்.  அய்யங்கார் மிகப் பிரமாதமாக தட்டச்சு செய்வார்.  காட்ராக்ட் பாதிப்பில் பார்வை தான் பாதிக்கப் பட்டிருந்தது.

ஒருநாள் அய்யங்கார் கூப்பிட்டு ஜாப் டைப்ரைட்டிங் ஆபீஸ் போனேன்.  என் வாழ்க்கையில் மிகவும் குறிப்பிடத் தக்க  தெரியாதவைகளைத்  தெரிந்து கொண்ட காலம் அய்யங்கார் அலுவலகத்தில் வேலை செய்தது.  காலையில் ஒன்பது மணி வாக்கில் அய்யங்கார் ஒரு குடையுடன் கிளம்பி விடுவார்.  கிட்டத்தட்ட இருபது நிமிஷ நடை தூரம் அவருக்கு.   தெருவில் இந்தப் பக்கம் அந்தப் பக்கம் பார்த்து ஜாக்கிரதையாக அவர் நடப்பதே நெகிழ்ச்சியாக இருக்கும்.  அவரைப் பற்றி எழுதுகையிலேயே மனம் குழைந்து  போகிறது.

ஜாப் டைப்ரைட்டிங் ஆபீசும் வேலைக்குப் போன இடமாக எனக்குத் தெரியவில்லை.   கண் பார்வை குன்றிய ஒரு பெரியவருக்கு அவர் ஈடுபட்டிருந்த  தொழிலில்  என்னாலான உதவியைச் செய்கிற மாதிரியான எண்ணம் மனத்தில் படிந்திருந்தது.   அந்த ஜாப் டைப்ரைட்டிங் ஆபிஸ் முதல் அக்கிரஹாரத்தின் முக்கியமான இடத்தில்  நான்கு தெருக்கள் கூடுமிடத்தில் இருந்தது.  தூக்கிக் கட்டிய  இடம்.  இரண்டு படிகள் ஏறிப் போனால்  சின்ன அறை மாதிரி இருக்கும்.    உள்ளே போய் மிஷின் கவரைக் கழட்டி விட்டால் போதும்.  என் பக்கத்தில் அய்யங்கார் அமர்ந்து  மேனஸ்கிரிப்ட்டில் எழுதியிருப்பதை  வரி வரியாய் படிக்க அடுத்த நொடியே அவர் சொல்வதை தட்டச்சாய் நான் கொண்டு வருவேன்.  போவோர் வருவோரை ரோடில் பார்த்துக் கொண்டே  காது மட்டும் அய்யங்கார் சொல்வதைக் கேட்டுக் கொண்ட  நொடியில் விரல்கள் தட்டச்சு இயந்திரத்தின் கீ போர்டில் பழகிய செயலாய் நர்த்தனமிடும்.

ஜாப் டைப்பிங் லேசுப் பட்ட காரியமல்ல.   முதல் அக்ரஹாரத்தில் வக்கீல்கள் நிறைய.  கடையைத் திறக்கும் முன்னே  கட்சிக்காரர்கள் காத்துக் கிடப்பார்கள்.   எல்லாத்துக்கும் அய்யங்காரின் க்யாதி தான்  காரணம்.  ரொம்ப வருஷமாய் அந்த இடத்தில் இருப்பவர்.  ஆங்கிலப் புலமை மிக்கவர்.  வக்கீல்கள் கையெழுத்துன்னா கேட்கவே வேண்டாம்.  கோழிக் கிறுக்கல் மாதிரி இருக்கும்.   குறிகள் போட்டு  கோடிழுத்து அம்புக் குறி போட்டு ஒரு பேப்பரில் எங்கங்கெங்கோ வக்கீல்கள் கிறுக்கியிருப்பார்கள்.  சில இடங்களில் எல்லாம் அய்யங்காருக்குத் தெரியும் என்று  புள்ளிக் குத்தி விட்டிருப்பார்கள்.  கத்துக் குட்டிகளிடம் போனால்  அவர்கள் டைப் அடித்திருக்கும் லட்சணத்தைப் பார்த்த மாத்திரத்தில் வக்கீல்கள் நோட்டீசுகளைத் தூக்கி எறிவார்கள் என்று கட்சிக்காரர்களுக்குத் தெரியும். அதனால் எவ்வளவு நேரம் ஆனாலும் பரவாயில்லை என்று அய்யங்கார் கடையில் காத்திருந்து டைப் அடித்துக் கொண்டு போவார்கள்.  எல்லா வக்கீல் நோட்டீசுகளிலும் வரும்  'To the best of my knowledge and belief... என்று தொடரும் ஒரு பாராவிற்கான  வரிகள் அந்தக் காலத்தில் மனப்பாடமே ஆன ஒன்று.

வக்கீல் குமாஸ்தாக்கள் கொண்டு வந்து கொடுக்கும்  டைப் அடிக்க வேண்டிய  சமாச்சாரங்கள் வேறே.  ஜெராக்ஸ் மிஷின் இல்லாத காலம்.   எண்பது  பக்கம், நூறு பக்கம் தேறும் கோர்ட் ஆர்டர்களை பிரதி எடுக்கும் வேலைகளும் இருக்கும்.  அப்படியான விஷயங்களை எடுத்துத் தனியே வைத்திருப்பார். ராத்திரி 7 மணிக்கு மேலே  மோகன் என்று இன்னொருத்தர் வருவார். லஷ்மி  நரசிம்மன் என்னும் என் நண்பணின் அண்ணன் தான் மோகன்.  பகல் நேரத்தில் சேலம் கிளாஸ் பாக்டரியில்  (Glass Factory)  ஸ்டெனோ.  அய்யங்கார் கடை பார்ட் டைம் வேலை.  சீனியர் . அதனால் அய்யங்கார் பக்கத்தில் இருந்து டிக்டேட் பண்ண வேண்டும் என்ற அவசியம் இல்லை.   இரவு எட்டு மணிக்கு மேலே அய்யங்கார் பையன்  வெங்கடாச்சாரி வந்து ஒன்பது மணிக்கு மோகன் போனவுடன் கடையை மூடிக்கொண்டு வீட்டுக்கு வந்து  சேருவான்.

அய்யங்கார் ஜாப் டைப் கடையில் வேலை செய்யும் பொழுது  தான் பக்கத்து போஸ் மைதானத்தில் எம்ஜிஆர்  பேச வருகிறார் என்று  பெரிய கடைத் தெருவும்  முதல் அக்ரஹாரமும்  ஜனசந்தடியில் களைகட்டியிருந்தது. பக்கத்து கிராமங்களிலிருந்தெல்லாம் வந்திருந்த ஜனக்கூட்டம்.  காலை பத்து மணிக்கு வருவதாக இருந்த எம்ஜிஆர்  பன்னிரண்டு மணிக்கு கொஞ்சம் முன்னால் வந்தார்.  புஸுபுஸூ என்று காற்றில் அலைபாய்ந்த சுருள் முடியைக் கட்டுப்படுத்த கர்சீப் ஒன்றை  கிரேக்க இளவரசன் தலைப்பட்டை மாதிரி அழகாகக் கட்டியிருந்தார்.  தோள் பட்டையில் சிறிய அளவில் கருப்பு--சிவப்பு  துண்டு.  ரோஸ் நிறம்.  ஜரிகை வேட்டி. கீழ்ப்பக்கத்தில் அகண்ட ஜிப்பா சட்டை.  அய்யங்காரிடம் பர்மிஷன் வாங்கிக் கொண்டு முதலிலேயே போஸ் மைதானத்தில் நான் ஆஜர்.

அதற்குப் பிறகு பல தட வைகள் எம்ஜிஆரை நேரில் பார்க்கும் வாய்ப்புகள்  வாய்த்திருக்கின்றன.  வருடா வருடம் தவறாமல் சேலம் பொருட்காட்சியில் அவர் நாடகம் இருக்கும்.  அவர் சம்பந்தப்பட்டு நிறைய நினைவலைகள்.  வருடக் கணக்கிட்டு வரிசையாக நினைவுபடுத்திப் பின்னால் சொல்கிறேன்.

அய்யங்கார் கடையில் வேலையில் இருக்கும் பொழுதே சேலம் வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்திருந்தேன்.   ஒரு நாள் மதிய சாப்பாட்டிற்காக வீட்டிற்குப் போயிருந்த பொழுது எனக்கு வந்திருந்த தபாலை எடுத்துக் கொடுத்தார்கள்.   வேலை வாய்ப்பு அலுவலகத்திலிருந்து வந்திருந்தது.  பிரித்துப் பார்த்தால்  இரண்டு நாட்கள் கழித்து  சேலம் பொதுப்பணித்துறை அலுவலகத்தில் ஒரு நேர்காணலுக்கு வரச்சொல்லி அந்த அலுவலகத்தின் முகவரியையும் கொடுத்திருந்தார்கள்.

வீட்டில் எல்ளோருக்கும் மகிழ்ச்சி.  அதோடு என் மகிழ்ச்சியையும் சேர்த்து சுமந்து கொண்டு அய்யங்கார் கடைக்குப் போனேன்.  அய்யங்காரிடம் விஷயத்தைச் சொன்னேன்.  "ரொம்ப சந்தோஷம்.. இந்த வேலை உனக்கே கிடைக்கட்டும்.." என்று ஆசிர்வதிக்கிற பாணியில் சொன்னார்.

அடுத்த இரண்டு நாட்கள் நேர்காணல்  நினைவே.   அந்த நாளும் வந்தது.    பொதுப் பணித்துறை அலுவலகத்திற்குப் போனேன்.  அரை மணி நேரம் வெளியே வராண்டாவில் காத்திருந்த பிறகு உள்ளே எல்லோரையும் வரச் சொன்னார்கள்.  கிட்டத்தட்ட இருபது பேர் தேறும்.

எல்லோரையும் வரிசையாக நிற்க வைத்து  ஒவ்வொருவரிடம் தகுதிச் சான்றிதழ்களை சரி பார்த்து குறித்துக் கொண்டார்கள்.  சிறிது  நேரத்தில் அந்த அலுவலகத்து அலுவலர் ஒருவர் வந்து   எல்லோருக்கும் சொல்கிற   அறிவிப்பு பாணியில்  ஆறு பேர்கள்   பெயர்களை மட்டும்  அவர்கள் இன்ஷியலோடு  இரண்டு தடவைகள் நிதானமாகப் படித்தார்.  இந்த ஆறு  பேர்கள் மட்டும் அமர்ந்திருங்கள்.. மன்னிக்கவும்.  மற்றவர்கள் செல்லலாம்.  வேலை வாய்ப்பு அலுவலகத்திற்கு நாங்கள் தகவலைத் தெரிவித்து விடுவோம். உங்கள் ரிஜிஸ்ட்ரேஷன்  எந்தத் தடையும் இல்லாமல் அங்கு தொடரும்.  அதனால்  கவலைப் பட வேண்டாம்.  உங்களுக்கு எங்கள்  வாழ்த்துக்கள்.." என்று அறிவித்து விட்டு  அந்த அறையின் உள்பக்கம் சென்றார்.

உடனே அந்த ஆறு பேரைத் தவிர்த்து மற்றவர்கள் வெளியேறினார்கள்.

அந்த ஆறு பேரில் நானும் ஒருவன்.  அதனால் அடுத்த அறிவிப்பு என்னவாக இருக்கும் என்று ஆவலுடன்  காத்திருந்தேன்.

(வளரும்)


20 comments:

ஸ்ரீராம். said...

அந்தக்காலத்தில் தட்டச்சு பெரிய வேலைவாய்ப்பை வழங்கி வந்தது. என்னுடைய ஒருநேர்காணலில் என்னுடைய வேறு டெக்னிகல் தகுதியை விட என்னுடைய தட்டச்சுத் தகுதி வேலைவாய்ப்பை வழங்காத தயாராய் இருந்தது. நான் மறுத்து விட்டு வந்தேன் அப்போது.

உங்கள் இந்த நினைவலைகள் ரொம்பவே சுவாரஸ்யம்.

ஸ்ரீராம். said...

//புஸுபுஸூ என்று காற்றில் அலைபாய்ந்த சுருள் முடியைக் கட்டுப்படுத்த //

இதுவே ஆச்சர்யம். இந்நிலையில் அவரை பார்த்தவர்கள் மிகும் குறைவாகவே இருப்பார்கள்.

//கர்சீப் ஒன்றை கிரேக்க இளவரசன் தலைப்பட்டை மாதிரி அழகாகக் கட்டியிருந்தார்//

நல்ல வர்ணனை. எம் ஜி ஆர் பொருட்காட்சியில் நாடகம் எல்லாம் நடத்தினார் என்பதுவும் என் போன்றவர்களுக்கு ஆச்சர்யமான தகவல்.

ஸ்ரீராம். said...

பொதுப்பணித்துறை வேலையா? என் கணிப்பு சரியா என்று பார்க்கக் காத்திருக்கிறேன்.

கோமதி அரசு said...

ஒரு வேலைக்கு போனால் முன் அனுபவம் இருக்கா ? என்று கேட்பார்கள் அதற்கு தட்டச்சு வேலையில் கிடைத்த அனுபவம் கைகொடுத்ததா? நிறைய அவரிடம் கற்றுக் கொண்டேன் என்றீர்களே.
எம்.ஜி.ஆர் அவர்களை நேரில் பார்த்த அனுபவத்தை சுவையாக சொல்லி இருக்கிறீர்கள்.

நேர்காணல் வேலை அனுபவம் என்னாச்சு என்று தெரிந்து கொள்ள தொடர்கிறேன்.

வே.நடனசபாபதி said...

//வக்கீல்கள் கையெழுத்துன்னா கேட்கவே வேண்டாம். கோழிக் கிறுக்கல் மாதிரி இருக்கும்.//

மருத்துவர்கள் கையெழுத்துதான் கிறுக்கியதுபோல் இருக்கும் வழக்கறிஞர்கள் கையெழுத்துமா?

//ஜாப் டைப்பிங் லேசுப் பட்ட காரியமல்ல.//

உண்மைதான். அதில் அனுபவம் பெற்றால் எதையும் தட்டச்சும் திறமை வந்துவிடும். அதில் பெற்ற அனுபவம் தான் தங்களுக்கு பொதுப் பணித்துறை அலுவலகத்தில் வேலை கிடைக்க உதவியது என நினைக்கிறேன்.

காத்திருக்கிறேன் அடுத்த அறிவிப்பு என்னவென்று அறிய.

ஜீவி said...
This comment has been removed by the author.
ஜீவி said...

@ ஸ்ரீராம் (1)

வழங்கத் தயாராக இருந்தது-- என்று சொல்லியிருக்கிறீர்கள் என்று எடுத்துக் கொள்கிறேன்.

தட்டச்சுத் தேர்வில் லோயர் கிரேடு தகுதி இருப்பதை வேலை வாய்ப்பு அலுவலக பதிவில் குறிப்பிட்டிருந்தேன். அதனால் அவர்கள் டைப்பிஸ்ட் பணிக்குத் தான் என்னை பொதுப்பணித் துறை அலுவலகத்திற்கு அனுப்பியிருந்தார்கள்.

ஜீவி said...

@ ஸ்ரீராம் (2)

எம்ஜிஆரின் 'இன்பக் கனவு' என்ற நாடகம் பிரசித்திப் பெற்றது.

ஜீவி said...

@ ஸ்ரீராம்

உங்கள் கணிப்பு சரியாகத் தான் இருக்கும். உங்கள் ஞாபகசக்தியை நான் அறிவேன்.

ஜீவி said...

@ கோமதி அரசு

கையெழுத்து என்ற பெயரில் எப்படிப்பட்ட கிறுக்கல்களையும் வாசித்தறியும் திறமையை எனக்குக் கொடுத்தது ஜாப் டைப்பிஸ்ட் பணி தான்.

அந்நாட்களில் தட்டச்சுத் தேர்வில் கூட ஸ்பீட் டெஸ்ட்டைத் தவிர இன்னொரு தாள் உண்டு. அந்தத் தாளில் 'கையெழுத்தைப் பார்த்து தட்டச்சு செய்ய வேண்டும்' என்ற தேர்வுக் கேள்வி ஒன்று உண்டு. உதாரணமாக, அன்று காலையில் எழுந்தவுடன் தோட்டப் பக்கம் வந்தவனுக்கு என்று எழுதி அந்த வரியின் தொடர்ச்சியை வேறு எங்காவது ஒரு இடுக்கில் எழுதியிருப்பார்கள். இந்த விட்ட இடத்தையும் தொடர்ச்சி வரி இருக்கும் இடத்தையும் தெரியப்படுத்துகிற மாதிரி நீள கோணல் மாணலாகக் கோடிழுத்து அந்தத் தொடர்ச்சியில் கொண்டு போய் விட்டிருப்பார்கள். சில இடங்களில் x இப்படிப் போட்டு அதே குறியீடை இன்னொரு இடத்தில் போட்டு தொடர்ச்சி வார்த்தையை எழுதியிருப்பார்கள். இதையெல்லாம் சரி பார்த்து டைப் பண்ன வேண்டும்.

பெரும்பாலும் வக்கீல்கள் இப்படித் தான் எழுதுவார்கள். ஒன்றை எழுதி விட்டு மீண்டும் படித்துப் பார்க்கும் பொழுது நினைவில் வருவதை அல்லது திருத்தங்களை இன்னொரு இடத்தில் எழுதி அதைக் குறியிட்டுக் காண்பித்திருப்பார்கள். அதையெல்லாம் ஒழுங்கு படுத்தி-- அதுவும் முத்திரைத் தாளில் அடிக்க வேண்டியது ஜாப் டைப்பிஸ்டின் வேலையாகிப் போகும். நிச்சயம் இதெல்லாம் நல்ல பயிற்சி தான். அலுவலங்களில் எல்லோர் கையெழுத்தும் ஒரே மாதிரி இருக்காது, இல்லையா?...

ஜீவி said...

@ நடன சபாபதி

மருத்துவரின் கையெழுத்து என்று நீங்கள் சொன்னவுடன் நினைவுக்கு வருகிறது. மருத்துவர்களின் கையெழுத்து தெளிவாக இருக்க வேண்டியது மிக முக்கியம். மருந்துக் கடைகளில் மருத்துவர் கொடுக்கும் சீட்டைப் பார்த்து புரிந்து கொண்டு கொடுக்க வேண்டும், மருந்து மாறி விடக்கூடாது என்பதினால் அந்த முக்கியம் அடிக் கோடிடப் படுகிறது. இந்த முக்கியத்தின் தேவையை தெரிவிக்கிற மாதிரி, 'நல்ல தெளிவான கையெழுத்து கொண்ட மருத்துவரின் பிரிஸ்கிரிப்ஷன் நகல் ஒன்றை அனுப்பி வையுங்கள்' உங்களுக்கும் அந்த மருத்துவருக்கும் பரிசு காத்திருக்கிறது என்று குமுதத்தில் ஒரு போட்டியே வைத்திருக்கிறார்கள்.

சென்னை மாம்பலத்தில் இருந்த எனக்குப் பழக்கப்பட்ட ஒரு மருத்துவரின் மருந்து சீட்டு ஒன்றின் பிரதியை அந்தப் போட்டிக்கு அனுப்பி வைத்தது நினைவுக்கு வருகிறது.

ஸ்ரீராம். said...

//வழங்கத் தயாராக இருந்தது-- என்று சொல்லியிருக்கிறீர்கள் என்று எடுத்துக் கொள்கிறேன்.
//

ஆம். சரிதான். vazhangath என்று டைப் செய்தால் கூகிள் அப்படி வார்த்தைகளை அமைப்பதை பார்க்காமல் எடுத்து ஒட்டி விடுகிறேன்.

ஸ்ரீராம். said...

//அந்நாட்களில் தட்டச்சுத் தேர்வில் கூட ஸ்பீட் டெஸ்ட்டைத் தவிர இன்னொரு தாள் உண்டு. அந்தத் தாளில் 'கையெழுத்தைப் பார்த்து தட்டச்சு செய்ய வேண்டும்' என்ற தேர்வுக் கேள்வி ஒன்று உண்டு. //

அது மட்டுமல்ல... பேலன்ஸ் ஷீட், இன்னும் ஏதோ எல்லாம் இரண்டாம் தாளில் உண்டு. நான் ஆங்கிலம், தமிழ் இரண்டும் ஹையர் முதல் வகுப்பு!!!

ஸ்ரீராம். said...

// சில இடங்களில் x இப்படிப் போட்டு அதே குறியீடை இன்னொரு இடத்தில் போட்டு தொடர்ச்சி வார்த்தையை எழுதியிருப்பார்கள். //

அதேபோல இரண்டு வார்த்தைகளுக்கு நடுவில் ஆங்கில Z எழுத்தை நீட்டியது போல செய்திருப்பார்கள். அப்படி இருந்தால் முதல் வார்த்தை இரண்டாவதாகவும், இரண்டாவது வார்த்தை முதலாவதாகவும் வரவேண்டும் என்று பொருள்.

பேலன்ஸ் ஷீட் சொன்னேன், அதுபோல மெமோரண்டம், செமி மெமோ எல்லாம் உண்டு.

Bhanumathy Venkateswaran said...

மிக சுவாரஸ்யமான அனுபவங்கள். அந்தக் காலத்தில் தட்டச்சு பயின்றவர்கள் நிஜமாகவே நல்ல திறமைசாலிகள்.

G.M Balasubramaniam said...

எம் ஜீ ஆரை நேரில் கண்டதில்லை உங்களெழுத்து நான்வேலைதேடி அலைந்தநினைவலைகளை ஏற்படுத்துகிறது பல பதிவுகளில் பகிர்ந்திருக்கிறேன் தட்டச்சு கற்றதில்லை

ஜீவி said...

@ பானுமதி வெங்கடேஸ்வரன்

இந்நாட்களில் கணினி கையாளல் மாதிரி அந்நாட்களில் தட்டச்சு. கணினி தட்டச்சு மிஷினையும், ஜெராக்ஸ் கார்பன் பேப்பரையும், மொபைல் தொலைபேசியையும் சாப்பிட்டு விட்டன. சாப்பிட்டதுகளுக்கு மாற்றாக வேறு சில வரும். மாற்றங்கள் தாம் வளர்ச்சிக்கு உள்ளங்கை நெல்லிக்கனி.

ஜீவி said...

@ ஜிஎம்பீ

ஒரு காலத்து மனிதர்களான நம் போன்றவர்கள் நினைவுகள் ஒன்றை ஒன்று நினைக்க வைத்துக் கொண்டு தான் இருக்கும். இக்காலத்து இளைஞர்களுக்கு அப்படியெல்லாமா நடந்தது என்று நினைக்க வைப்பதும் அறிய வைப்பதும் இத்தொடரின் இன்னொரு பயன்பாடு.

வல்லிசிம்ஹன் said...

தட்டச்சு செய்யும் மகிழ்ச்சியை நானும் உணர்ந்தவள்.
மாமாக்கள் அனைவரும் கைவிரல்கள் பறப்பது போல
டைப் செய்வார்கள்.
நிமிடத்துக்கு இவ்வளவு சொற்கள் என்று போட்டி நடக்கும். பெரிய மாமா தில்லிக்கு உண்டர் செக்ரட்டரி உதவியாளராகத் தான் சென்றார்.
ஓய்வெடுக்கும்போது
எட்டாயிரம் பென்ஷனில் வந்து பூர்ணமானது.
உங்களுக்கும் இந்த வேலை கிடைத்திருக்கும் என்று நம்புகிறேன்.
எம்ஜி ஆர் வர்ணனை சூப்பர்.

ஜீவி said...

@ வல்லி சிமஹன்

கைவிரல்கள் பறப்பது போல... கற்பனை பண்ணிப் பார்த்தேன்.
நிஜம் தான்! விரல்களுக்கும் பயிற்சி தான்.

சுவாரஸ்யமான போட்டி தான். அது 10 (A) 1 வேலைம்மா. அப்படின்னா என்னன்னு உங்களுக்கும் தெரியும்.

ஆயிரத்தில் ஒருவர். சாண்டில்யனின் கதைக்கான 'லதா' ஓவியம் பார்த்து ஆயிரத்தில் ஒருவன் பட எம்ஜிஆருக்கு ஒப்பனை செய்ததாகச் சொல்வார்கள்.

தொடர்ந்து வாசித்து வருவதற்கு நன்றி.

Related Posts with Thumbnails