மின் நூல்

Wednesday, September 18, 2019

மனம் உயிர் உடல்

8. எண்ணத்தின்  பின்னல்


ரு சின்னக் கணக்கு.

100+25-20x 5/5  =  ?

நூறுடன் இருபத்தைந்தைக் கூட்டி வரும் தொகையிலிருந்து இருபதைக்  கழித்து வரும் தொகையை ஐந்தால் பெருக்கி அதை ஐந்தால் வகுத்தால் என்ன  வரும் எனபது தான் கணக்கு

ஒரு கூட்டல், ஒரு கழித்தல், ஒரு பெருக்கல், ஒரு வகுத்தல்--- இந்த கணக்கின் கணக்கிடும் செயல்பாட்டில் ஏதேனும் ஒரு இடத்தில் தவறு செய்து விட்டோமென்றால் விடை சரியாக வராது.  இது நம் எல்லோருக்குமே தெரிந்த ஒன்று.

வாழ்க்கையில் நாம் செயல்படும் ஒவ்வொரு செயல்பாடுமே இப்படியான கணக்குப் பயிற்சி போலத்தான்.

எண்கள் செயல்கள்.  கணக்கிடும் முறை  செயல்படும் வழிமுறைகள். கணக்கிற்கான் விடைதான் நாம் செயல்பட்டதற்கான பலன்.

விடை (பலன்) சரியாக இருந்தால் நமக்கு சந்தோஷம்.  விடை சரியில்லை என்றால் நமக்கு சந்தோஷம் இல்லை.

கணக்குகள் எப்போதுமே விடை காண்பதற்காகத்தான்.  அதே போல நமது செயல்கள் அதற்கான நல்ல பலன்களை அடைவதற்காகத்தான்.

கணக்கின் செயல்முறையில் தவறு ஏற்படுவது போல, நமது செயல்பாடுகளில் தவறு ஏற்படும் பொழுது அதற்கான பலகளும் நமக்கு வேண்டிய பலனை அளிக்காது போய்விடுகின்றன.

கணக்கின் செய்முறைகளில்  வேறுபாடுகள் இருந்தாலும் சரியான விடைகள் கிடைக்கலாம்.  அதே மாதிரி நமது செயல்படும் முறைகளில் வெவ்வேறான வழிமுறைகளைக் கைக்கொண்டு சரியான  விடையான நமக்குத் தேவையான நல்ல பலனை அடையலாம்.

கணக்கு தான் வாழ்க்கையில் நாம் எதிர்கொள்ளும் பிரச்னைகள்.  கணக்கின் விடைக்கான நம் செய்முறை தான்  அந்தப் பிரச்னைகளின் தீர்வுக்காக நாம் கையாளும் முறைகள்.  கையாளும் முறைகளான  நம் செயல்முறைகளில் கிடைக்கும் வெற்றி  தான் விடையான நமது  செயல்பாடுகளுக்கான பலன்.

பிரச்னைகளின் விடிவில் பலன் இருப்பதால் அவற்றின் தீர்வுக்காக நாம் செயல்பட  வேண்டியிருக்கிறது.  செயல்பட யோசிக்க   வேண்டியிருக்கிறது.  யோசிப்பு என்பது பிரச்னையை பல கோணங்களில் அலசுவதாகிறது.  செஸ் விளையாட்டு மாதிரி.  ராஜா, ராணி, மந்திரி, குதிரை,  படைவீரர் என்று---எதை அல்லது யாரை வீழ்த்தி எப்படி பலனை நோக்கி முன்னேறுவது எனபதற்கான யோசனை.

யோசிக்கும் பொழுது இது தான் வாழ்க்கையின் கோணல் என்று புரிகிறது.   நான், நீங்கள் நமக்கான பிரச்னைகள் என்று.  பூகோள ரீதியில், பொருளாதார ரீதியில் ஒருவொருக்கொருவர்  நெருங்கியிருந்தாலும் அனுபவ ரீதியாக அவரவருக்கான தொலைவு கூடி விட்டது. 

அனுபவம் தான் யோசனைகளை நீளச் செய்கிற ராஜபாட்டை. யோசனைகள் எப்பொழுதுமே பெற்ற அனுபவங்களின் மேல் ஊர்ந்து ஊர்ந்து தான் பயணிக்கும்.   அனுபவங்களின் நீளம் ரொம்ப குறைச்சல் என்றால் யோசனைகளும் நீண்ட பயணிப்பு இல்லாமல்  திகைக்கும்.  அனுபவங்களின் திரட்சி அதிகம் என்றால் யோசிப்பும் கிளை பிரிந்து கிளை பிரிந்து தனக்குள் ஆழ்ந்து அமுங்கி முத்தெடுக்கும் வரை ஓயாது.                      

யோசனைகளின் வலை பின்னலைத் தான் எண்ணம் என்கிறோம்.  எண்ணம் இல்லாமல் எதுவுமில்லை.  உணவுக்கான நேரம் அல்லது பசி வந்தும்  கூட ‘சாப்பிடலாமா?’ என்று எண்ணம் வந்ததும் தான் சாப்பிடுவதற்கான ஆயத்தங்களில் இறங்குகிறோம்.  ‘இப்போ வேண்டாம்.  இன்னும் அரைமணி நேரம் கழித்து’ என்று ஏதோ காரணத்தினால் எண்ணம் முடிவெடுத்தால் செயலும் ஒத்திப்போடப் படுகிறது.   அப்படி நம்மை எந்த செயல்பாட்டுக்கும்  உந்தித் தள்ள எண்ணம் என்கிற தூண்டுதலுக்கு அப்புறம் தான் எதுவும்.

இந்த எண்ணம் என்பது என்னவென்று யோசித்துப்  பார்த்தீர்கள் என்றால் அது  ஒருவிதத்தில் சஜஷன் என்று தெரியும்.. 

எந்த சூழ்நிலையிலும் எந்த இக்கட்டிலும் நம்மில் உறையும் இன்னொருத்தரிடம் கலந்து கொண்டு முடிவெடுக்கிற மாதிரியான ஏற்பாடு  அது.  

எண்ணத்தின் நிலைக்களம் மனம்.

இரண்டு மனம் இருக்கோ இல்லையோ நம்மில் மனமாக இன்னொருவர் நம்முள் வாழ்ந்து வருகிறார் என்பது தெரியும்.   அல்லது நம்மில் வாழும் அவர் தான் நாமா என்பதும் தெரியவில்லை.  அவருக்கு நாமா, நமக்கு அவரா யாருக்கு யார் பிரதிநிதி என்பது இதுவரை கண்டுபிடிக்காத வருஙகாலத்தில் நோபல் பரிசைப் பெற்றுத்தரப்போகிற  உண்மை.

நம்மைப் பற்றி நம் மனதுக்குத் தெரியும்.  மனம் ஆசைப்பட்டதற்காகத் தான் அத்தனையும் என்று நமக்கும் தெரியும்.

மனதை விரோதித்துக் கொண்டால் நிம்மதி தொலைந்து போகும்.  அப்படியல்லாது மனதோடு இசைந்து வாழ்ந்தால் உற்சாகம் கொப்பளிக்கும். அப்படியான வாழ்வில் நம் உற்சாகம் நம் மனசிலும், நம் மனசின் உற்சாகம் நம்மிலும் பரவிப் படியும்.   நமக்கும் நம் மனசுக்கும் வித்தியாசம் இல்லாத அபேத நிலை இது.  நான்--எனது என்ற உணர்வுகள் தலை தூக்காத நிலை இது. பிறவி பெற்ற பெரும் பேறு  இது.

இந்தப் பேற்றை  எப்படிப் பெறலாம் என்று  பார்ப்போம்..


(தொடரும்)


11 comments:

ஸ்ரீராம். said...

தொடர்கிறேன்.  சற்றே கடினமான பகுதி போல...

வல்லிசிம்ஹன் said...

மனமும் அதற்கு ஒரு சாட்சியும்.
ஏதோ கொஞ்சம் புரிகிறது. மனம் விருப்பப்பட்டதை எல்லாம் நடத்த முடிவதில்லை.
அதனால் நடக்க முடிவதை மனதை விரும்ப வைக்கலாமோ

சிலசமய உபன்யாசங்களில் பல சமாச்சாரம் தலைக்கு மேல்
போய்விடும்.
மனம் அடங்காததற்கு அது ஒரு சாட்சி.

நன்றி ஜீவி சார். மீண்டும் படிக்கிறேன்.

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University said...

இப்போது AI வேறு வந்துவிட்டதே?

வே.நடனசபாபதி said...

// மனதை விரோதித்துக் கொண்டால் நிம்மதி தொலைந்து போகும். //

உண்மைதான். மனதோடு மகிழ்ச்சியாய் இருந்தால் தான் வாழ்க்கை இனிக்கும். நான்--எனது என்ற உணர்வுகள் தலை தூக்காத நிலையை எப்படிப் பெறலாம் என அறிய தொடர்கிறேன்.

ஜீவி said...

@ ஸ்ரீராம்

அடுத்த பகுதியில் இன்னும் சுலபமாகப் புரிகிற மாதிரி விரித்துச் சொல்ல முயற்சிக்கிறேன்.
உணர்ந்ததைச் சொன்னமைக்கு நன்றி, ஸ்ரீராம்.

ஜீவி said...

@ வல்லிசிம்ஹன்

//மனம் விருப்பப்பட்டதை எல்லாம் நடத்த முடிவதில்லை.
அதனால் நடக்க முடிவதை மனதை விரும்ப வைக்கலாமோ?.. //

இதற்கு லகுவான ஒரு வழி இருக்கிறது. அடுத்தப் பகுதியில் அந்தக் கச்சேரியை வைத்துக் கொள்ளலாம், வல்லிம்மா.

ஜீவி said...

@ வல்லி சிம்ஹன்

//சிலசமய உபன்யாசங்களில் பல சமாச்சாரம் தலைக்கு மேல்
போய்விடும்.
மனம் அடங்காததற்கு அது ஒரு சாட்சி.//

தலைக்கு மேல் போவதற்கு காதுகள் கேட்டுக் கொண்டே இருக்க, விழித்திருக்கும் நம் அறிவு சில உப கேள்விகளைப் போடுவதால் இருக்கலாமோ?..

மனம், அறிவு, நாம் ஒரே நேர்கோட்டில் பயணிப்பதே, அதாவது பயணிக்கிற மாதிரி வைத்துக் கொள்வதே ஒரு வித்தை தான். அந்த வித்தை சித்திப்பதற்கு அடுத்த பகுதியில் ஒரு உபாயம் சொல்கிறேன்.

ஜீவி said...

@ Dr. B. Jambulingam

//இப்போது AI வேறு வந்துவிட்டதே?//

புரியலையே!.. வேறு பதிவுக்கு இட வேண்டிய பின்னூட்டம் இங்கு பதிவாகி விட்டதோ?

ஜீவி said...

@ வே. நடன சபாபதி

தொடர்ந்து வாசித்து தங்கள் கருத்துக்களையும் பதிவதற்கு நன்றி, சார்.

அடுத்த பகுதியில் முடிந்தவரை பார்க்கலாம். இல்லையென்றால் அதற்கு அடுத்த பதிவில்
நான் - எனது உணர்வுகள் தலை தூக்காத சிந்தனைகளை வளர்த்துக் கொள்வது பற்றிப் பார்க்கலாம்.

நெல்லைத்தமிழன் said...

கணக்குக்கு முதலில் பதில் சொல்லலையே...

ஜீவி said...

@ நெல்லைத் தமிழன்

கணக்கு ஒரு அத்துக்குத் தான் நெல்லை. ஏதாவது ஒன்றில் ஆரம்பித்து அந்த மாதிரி என்று சொல்வதற்காக.

மற்றபடி, தொடர் பதிவுகளில் அத்தியாய ஆரம்பங்கள் ஒன்று போல் இல்லாமல் மாற்றி மாற்றி ஏதாவது புதுமையைப் பண்ண வேண்டும் என்பதற்காகவும்.

குமுதம் ஆசிரியர் எஸ்.ஏ.பியிடம் கற்றுக் கொண்ட கல்விப் பாடம் இது. நெல்லை.

அவர் தொடர்கதைகளில் எழுதுவதில் இந்த மாதிரி நிறைய சோதனை முயற்சிகளைச் செய்து பார்த்திருக்கிறார் அவர்.

Related Posts with Thumbnails